வெள்ளி, 12 மே, 2017

பூரி ஜெகன்னாதர் கோவிலின் எட்டு அதிசயங்கள்:



பூரி ஜெகன்னாதர் கோவிலின் எட்டு அதிசயங்கள்:

1.கோவிலின் கொடி காற்றடிக்கும் திசைக்கு எதிர் திசையில் பறக்கும்.

2.கோவில் இருக்கும் பூரி என்ற ஊரில் எந்த இடத்தில் , எந்த பக்கத்தில் இருந்து பார்த்தாலும் , கோவிலின் உச்சியில் இருக்கும் சுதர்சன சக்கரம் நம்மை பார்ப்பது போலவே இருக்கும்.

3.பொதுவாக காலையிலிருந்து மாலை வரையான நேரங்களில் , காற்று கடலில் இருந்து நிலத்தை நோக்கியும்  மாலை முதல் இரவு முழுவதும் நிலத்திலிருந்து கடலை நோக்கியும் வீசும். ஆனால் பூரியில் இதற்கு நேர் எதிராக நடக்கும்.

4.இக்கோயிலின் முக்கிய கோபுரத்தின் நிழல் பகலில் எந்த நேரத் திலும் கண்களுக்கு தெரிவதில்லை.

5.இந்த கோவிலின் மேல்   -   விமானங்களோ அல்லது பறவைகளோ பறப்பதில்லை.

6.இந்த கோவிலின் உள்ளே சமைக்கப்படும் உணவின் அளவு வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஒரே அளவாகவே இருக்கும். ஆனால் வருகின்ற பக்தர்கள் எண்ணிக்கை இரண்டு லட்சமானாலும் சரி , இருபது லட்சமானாலும் சரி சமைக்கப்பட்ட உணவு பத்தாமல் போனதுமில்லை. மீந்து போய் வீணானதுமில்லை.

7.இந்த கோவிலின் சமையலறையில் ஒன்றின் மேல் ஒன்றாக ஏழு பாத்திரங்கள் அடுக்கப்பட்டு , விறகு அடுப்பில் உணவு சமைப்பார்கள். அப்படி சமைக்கும் போது அடியில் உள்ள பானையில் உணவு வேகும் முன் மேலே உச்சியில் உள்ள முதல் பானையில் உணவு வெந்து விடும்.

8.சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் உற்புறமாக காலெடுத்து வைத்து நுழையும் போது , கடலில் இருந்து வரும் எந்த விதமான சப்தமும் நமக்கு கேட்காது. ஆனால் , அதே சிங்கத் துவாராவின் முதல் படியில் கோவிலின் வெளிபுறமாக நுழையும் போது , கடலில் இருந்து வரும் அனைத்து சப்தமும் நமக்கு கேட்கும். இதை மாலை நேரங்களில் தெளிவாக உணர முடியும்.




அருள்மிகு ஜெகந்நாதர் (பூரி) திருக்கோயில் விபரங்கள்.

திருக்கோயில்
மூலவர் : ஜெகந்நாதர்
உற்சவர் : -
அம்மன்/தாயார் : -
தல விருட்சம் : -
தீர்த்தம் : -
ஆகமம்/பூஜை : -
பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் : -
ஊர் : பூரி
மாவட்டம் : பூரி
மாநிலம் : ஒரிசா
பாடியவர்கள்:
-
திருவிழா:
இங்கு நடக்கும் தேரோட்டம் உலகப் பிரசித்தி பெற்றது.
தல சிறப்பு:
இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை திறந்திருக்கும். மூலவர் அருகில் சென்று தரிசனம் செய்ய காலை 9 மணி முதல் 10.00 மணி வரை.
முகவரி:
அருள்மிகு ஜெகந்நாதர் திருக்கோயில் பூரி - 752001, புவனேஸ்வர், ஒடிசா.
போன்:
+91 6752 - 222 002, 220 901, 223 727, 220 901.
பொது தகவல்:
ஒரு அரண்மனை போன்ற தோற்றத்துடன் ஆலயம் அமைந்துள்ளது. கிழக்கில் சிம்ம வாயில், மேற்கில் வைராக்ய வாயில், வடக்கில் யானை வாயில், தெற்கில் குதிரை வாயில் என நான்கு வாயில்கள் உள்ளன.இவ்வாலயத்தில் சிவன், விநாயகர், ஆஞ்சனேயர், லட்சுமி நாராயணர், மகாலட்சுமி, புவனேஸ்வரி, சூரியன் போன்றோருக்கும் சன்னிதிகள் அமைந்துள்ளன. ஜகந்நாதர் ஆலயத்தை சுற்றி 30 கோயில்கள் உள்ளன. ஆஞ்சநேயர், விநாயகர், நவக்கிரங்கள், சூரியநாராயணார், லட்சுமிநாராயணர், கோபிநாதர், ராமச்சந்திரர், பாதாளேசுவரர், நீலமாதர் என்று பல பெயர்களில் சுவாமிக்கு ஆலயங்கள் உண்டு. மீராபாய், ஜயதேவர், சமர்த்த ராமதாஸ், துளசிதாசர், ஹரிதாஸ், ஆகிய பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இங்குள்ள கோபுரம் 713 அடி உயரம் கொண்டது. ஒரிசா மாநிலத்தின் மிகப்பெரிய கோபுரம் இதுதான். இது ராஜகோபுரம் இல்லை. மூலவரின் விமானம் ஆகும்.
பிரார்த்தனை
பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள ஜகநாதரை வழிபட்டுச் செல்கின்றனர்.
நேர்த்திக்கடன்:
இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன.
தலபெருமை:
பூரி கடற்கரை கோயில் என்பதால் கடலில் நீராடிய பிறகே கோயிலுக்கு செல்லவேண்டும். கடற்கரையில் மார்க்கண்டேஸ்வரர் கோயில் உள்ளது. கடலில் நீராடிவிட்டு முதலில் மார்க்கண்டேஸ்வரரை வணங்க வேண்டும். பின்பு இங்குள்ள பாண்டவ தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அனுமன் தீர்த்தம் ஆகியவற்றில் நீராடிய பிறகு ஜெகந்நாதரை தரிசிக்க செல்லலாம். இந்த கோயிலில் இரண்டு பிரகாரங்கள் உண்டு. கோயிலுக்குள் செல்ல சிங்கவாயில், குதிரை வாயில், யானைவாயில், புலிக்கதவு ஆகிய நான்கு வாசல்கள் உள்ளன. இவற்றை சிம்ஹதுவார், ஹஸ்துவார், ஹாஸ்திதுவார், வியாக்ரதுவார் என அழைக்கிறார்கள். ஒவ்வொரு வாசலும் பிரமிடு போன்ற அமைப்பில் உள்ளது. கருவறையில் ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோர் ரத்தின சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பலராமன் ஆறு அடி உயரமும், ஜெகந்நாதர் ஐந்தடி உயரமும், சுபத்ரா நான்கடி உயரமும் இருக்கிறார்கள். இவர்கள் வெள்ளை, கருப்பு, மஞ்சள் ஆகிய நிறங்களில் காட்சி தருவார்கள். இங்கு சுவாமிக்கு 56வகை பிரசாதங்கள் படைக்கப்படுகின்றன. காலை 11 மணியிலிருந்து 1 மணி வரை நடக்கும் நிவேதனம் மிக முக்கியமானது. பல பானைகளில் சாதம், குழம்பு, கூட்டு ஆகியவற்றை நிவேதனம் செய்து வெளியே வந்து கொண்டே இருக்கும். அந்த பானைகளை உடைத்து, அதிலுள்ள பிரசாதங்களை விற்பனை செய்துவிடுவார்கள். இந்த சாதத்தை காயவைத்து கடைத்தெருகளில் விற்பனை செய்வதும் வழக்கம். இதுவே இங்கு முக்கிய பிரசாதமாகும். இதை வாங்க கூட்டம் அலைமோதுகிறது.
இங்கே ஆண்டுதோறும் அக்ஷதா மாதத்தில் (ஆனி) வளர்பிறை இரண்டாம் நாளில் 21 நாட்கள் தேர்த் திருவிழா நடை பெறுகிறது. இவ்விழாவில் பயன்படுத்தப்படும் தேர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளது போன்ற நிரந்தரமான தேர்கள் அல்ல. இவை ஒவ்வொரு ஆண்டும் புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஒருமுறை வலம் வந்த தேரை மறு உலாவுக்குப் பயன்படுத்த மாட்டார்கள். மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மூன்று பெரிய தேர்களை பூரி ஆலயத்தின் சிம்மத்துவார் பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலுள்ள குண்டிச்சா தேவி ஆலயம் வரை இழுத்துச் செல்வார்கள். கிருஷ்ணர் இந்திரத்யும்னனிடம் தான் ஆண்டுக்கு ஒன்பது நாட்கள் தான் பிறந்த இடத்திற்குச் செல்ல வேண்டும் என்று விருப்பம் தெரிவித்ததாகவும்; அதன் அடிப்படையிலேயே இந்த விழா நடப்பதாகவும் கூறுகின்றனர். கோகுலத்திலிருந்து கிருஷ்ணர் மதுரா நோக்கிச் செல்வதை இது குறிப்பிடுகிறது.
காலையில் கருவறையில் இருக்கும் மூர்த்தங்கள் சிங்க வாயிலின் வழியாக எடுத்துவரப்படுகின்றன. அதிக கனம் வாய்ந்த மர மூர்த்தங்கள் என்பதால் பலர் சேர்ந்து தூக்கி வருகின்றனர். சுமார் எட்டடி உயரம் கொண்ட ஜகந்நாதர், பலராமர், சுபத்ரா ஆகியோரின் மூர்த்தங்கள் அவரவர் தேர்களில் வைக்கப்படுகின்றன. கருப்பு நிறமும் பெரிய கண்களும் கொண்ட ஜெகந்நாதர் சாமவேதத்தைக் குறிக்கும் இறைவனாக விஷ்ணு சொரூபமாக விளங்குகிறார். வெண்ணிறமும் தாமரைக் கண்களுடனும் விளங்கும் பலராமர் ரிக் வேதத்தைக் குறிப்பவராக-சிவ சொரூபமாக விளங்குகிறார். மஞ்சள் நிறமும் தாமரைக் கண்களும் கொண்ட சுபத்ரா யஜுர் வேதத்தைக் குறிப்பவளாக சக்தியின் அம்சமாகத் திகழ்கிறாள். தேர்கள் புறப்படத் தயாரானவுடன், ராஜா கஜபதி என்னும் மன்னர் அங்கே வந்து, தங்கத்துடைப்பத்தால் அந்த எல்லையைத் தூய்மைப்படுத்துகிறார். அதன்பின்னர் சவரா வம்சத்தைச் சேர்ந்த தைத்யர்கள். காவலாக வர, ஆயிரக்கணக்கான பக்தர்களால் தேர்கள் இழுக்கப்படுகின்றன. ஊர்வலமாகச் செல்லும் இந்தத் தேர்களுடன் மற்றும் சில கோயில்களின் சிறிய தேர்களும் வந்து சேர்ந்துகொள்கின்றன. வேத மந்திரம் ஓத பக்திப் பாடல்கள் ஒலிக்க மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக நடைபெறுகிறது இவ்விழா.
ஒன்பது நாட்கள் அந்தக் கோயிலில் தங்கி இருக்கும் இந்த தெய்வங்களுக்கு சிறப்பான பூஜைகள் நடத்தப்படுகின்றன. பத்தாம் நாள், பகுதா யாத்ரா எனப்படும் திரும்பி வரும் பயணம் நடக்கிறது. நண்பகல் நேரத்தில் சிங்கத்வார் என்னும் இடத்தை அடையும் தேர்கள் அங்கேயே தங்குகின்றன. இறை வடிவங்களுக்கு ராஜ அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. ஜெகந்நாதருக்கு தங்கக் கைகள் பொருத்தப்படுகின்றன. தங்கத்தாலான சங்கும் சக்கரமும் ஏந்திக் காட்சி தருகிறார் இறைவன். கனாவேஷா எனப்படும் இது ஏகாதசி திருக்காட்சியாகும். மறுநாள் துவாதசியன்று மூவரையும் பூரி ஆலயத்துக்குள் கொண்டு சென்று, நான்கடி உயரமும் 13 அடி அகலமும் 16 அடி நீளமும் கொண்ட ரத்தின சிம்மாசனத்தில் அமர்த்துவார்கள். இவர்களை பக்தர்கள் வலம் வந்து வணங்கலாம். இத்துடன் பூரி ஜெகந்நாதர் ஆலயத்தில் புகழ் வாய்ந்த தேரோட்டம் நிறைவு பெறுகிறது. இவ்விழாவைக் காணும் பக்தர்கள் நூறாண்டுகள் இவ்வாலய இறைவனை வணங்கிய பயனைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. இத்தலத்தில் ஆதிசங்கரர் இராமானுஜர், ஸ்ரீ மாத்வர் போன்றவர்கள் வந்து தங்கியிருக்கிறார்கள். பஜனை சம்பிரதாயத்தை, வட இந்தியாவில் பரப்பும் பூரிஜகந்நாதரின் கோயில் கடைசி காலத்தில், ஸ்ரீசைதன்ய மஹாபிரபு காலத்தில் முக்கியத்துவம் பெற்றது. ஸ்ரீஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட சிருங்கேரி மடம் இங்கு சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது.
ஜெகந்நாதர் தேர்: நந்திகோஷ் அல்லது கருடத்வஜா என்று அழைக்கப்படும் ஜெகந்நாதரின் தேர் 45 அடி உயரம் கொண்டது. 16 கலைகளைக் குறிக்கும் வண்ணம் 16 சக்கரங்களைக் கொண்டது. நான்கு வேதங்களைக் குறிக்கும் வண்ணம் நான்கு குதிரைகள் பூட்டப்பட்டிருக்கும். தேரோட்டி தாருகா எனப்படுகிறார். (மரவடிவம்). தேரை இழுக்க உதவும் வடத்திற்கு சங்கசூடா என்று பெயர். சிவப்பு மற்றும் நீல நிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
பலராமர் தேர்: இது தலத்வஜ் எனப்படுகிறது. 44 அடி உயரம் கொண்டது. 14 மன்வந்திரங்களைக் குறிக்கும் வண்ணம் 14 சக்கரங்களைக் கொண்டது. நான்கு குதிரைகளாக நான்கு வேதங்கள். வாசுதேவரால் காக்கப்படும் இந்தத் தேரின் சாரதியாக இருப்பவர் மாதவி. தேர் வடத்திற்கு வாசுகி என்று பெயர். சிவப்பு மற்றும் நீலநிறத் துணிகளால் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
சுபத்ரா தேர்: தரவதவானா எனப்படும் இந்தத் தேரின் உயரம் 43 அடி. 12 மாதங்களைக் குறிக்கும். 12 சக்கரங்களைக் கொண்டது. ஜெயதுர்க்காவால் காக்கப்படும் இதற்குத் தேரோட்டியாக அர்ஜுனன் விளங்குகிறான். வடத்தின் பெயர் ஸ்வர்ணசூடா. சிவப்பு மற்றும் கறுப்புத் துணிகளால் ரதம் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.
இந்தியாவின் நான்கு புனித புண்ணிய தலங்களுள் பூரியும் ஒன்றாகும். மற்றவை துவாரகை, பத்ரிநாத் மற்றும் இராமேஸ்வரம் ஆகியவை.நீண்ட வெண்மணல் பரப்பு கொண்ட கடற்கரையில் பூரி நகரம் அமைந்துள்ளது. கடற்கரையிலிருந்து சிறிது தொலைவில் அமைந்துள்ளது. ஜகந்நா தர் கோயில். இக்கோயில் கி.பி. 12 நூற்றாண்டில் சோடகங்க வம்சத்து அரசர்களால் கட்டப்பட்டது. இராசேந்திரச் சோழனின் மகன் வயிற்றுப் பேரன்தான் சோடகங்கன் கோயில் சுற்றுச்சுவர் 200 மீட்டர் நீளமுடையது; உயரம் 65 மீட்டர், பூரி ஜகந்நாதரின் ரத உற்சவம் பல நூற்றாண்டுகளாக நடைபெறுகிறது. இதுகுறித்து பாஹியன் என்ற சீனத்து அறிஞர் தமது குறிப்பில் எழுதியிருக்கிறார். ஆண்டு தோறும் ஜூலை மாதத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இந்த உற்சவத்திற்கு ஆண்டுதோறும் மூன்று புதிய பெரிய தேர்களை உருவாக்குகிறார்கள். இரண்டு குறிப்பிட்ட காடுகளில் இருந்து மரங்கள் வெட்டிக்கொண்டு வரப்படுகின்றன. ஜகந்நாதருடைய தேரை தயாரிக்க 836 துண்டு மரங்கள் தயாரிக்கப் படுகின்றன.
நந்திகோஷா என்ற 45 அடி உயரத்தேரில் ஜகந்நாதர் பவனி வருகிறார். தர்பாதவனா என்ற 36 அடி உயரத் தேரில் சுபத்ரா பவனி வருகிறார். தேரில் தெய்வங்களின் உருவங்களும் மரத்தால் உருவாக் கப்பட்டுள்ளது. இவைகள் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக உருவாக்கப்படுகின்றன. ஜகந்நாதர் என்ற பெயருக்கு உலகை ஆளுபவர் என்று பொருள். உற்சவத்திற்கு முந்திய பவுர்ணமி தொடங்கி அமாவாசை வரை ஜகந்நாதர் பக்தர்களின் காட்சிக்கு அப்பாற்பட்டவராக இருப்பார். தாரை தப்பட்டைகள், துந்துபிகள், நகராக்கள் ஆகிய வாத்தியங்கள் முழங்க தேரில் அமரும் விக்ரஹங்கள் கோயிலின் முக்கிய வாசல் வழியாக வெளியே கொண்டு வரப்படுகின்றன. பூரி அரசர் தேரின் கீழ் தரையை துடைப்பத்தால் சத்தம் பண்ணிவிட்டு, பணிவோடு சுவாமியை அழைக்க ரதயாத்திரை தொடங்குகிறது. கோயிலின் தலைமை அர்ச்சகர் தேர்களில் அமர்ந்துள்ள இறை உருவங்களை புறப்படும்படி உரத்தக்குரல் கொண்டு கேட்டுக் கொள்ள பக்தர்களும் சேர்ந்து குரல் கொடுக்க மூன்று ரதங்களும் புறப்படுகின்றன.
பத்துலட்சத்திற்கு மேற்பட்ட பக்தர்கள் திருவிழாவில் கூடி தேர் வடத்தை பிடித்து இழுக்கிறார்கள் வழியில் பல சிறு கோயில்களைச் சேர்ந்த சிறு தேர்கள் வந்து வரிசையில் சேர்ந்து கொள்கின்றன. வண்ணத்திரைச் சீலைகளும், கொடியுமாகத் தேர்கள் அசைந்தாடி வருகின்றன. தெய்வங்கள் மூன்றும் தேர்களில் பவனி சென்று தங்கள் அத்தையைப் பார்த்துவிட்டு, அத்தை வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்து திரும்புவதாக ஐதீகம். சரியாக ஆறு நாட்களுக்குப் பின்னர், மூன்று ரதங்களும் கோயிலிற்கு திரும்பி வருகின்றன. உலகை ஆளுபவருக்கு எடுக்கப்படும் இந்த விழா, இந்தியவிலேயே மிகப்பெரிய விழாக்களில் ஒன்றாகும்.
தல வரலாறு:
இந்திர தையுமா என்னும் அரசன் பூரியை ஆண்டு வந்தான். அவன் சிறந்த பக்தன். ஒருமுறை பெருமாள் அவன் கனவில் தோன்றி தனக்கு ஒரு கோயில் எழுப்புமாறு வேண்டினார். பூரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ளது. கடலில் மிதந்து வரும் ஒரு பொருளைக் கொண்டு சிலையை செதுக்குமாறு பெருமாள் கூறினார். இதையடுத்து இந்திர தையுமா கடல்பகுதியில் தனது காவலர்களை நிறுத்தி வைத்தான். கடலில் ஏதாவது பொருள் மிதந்து வந்தால் அதை எடுத்துவரும்படி கட்டளையிட்டான். காவலர்கள் கடற்கரையில் காத்து நின்றனர். நான்கைந்து நாட்களுக்கு பிறகு ஒரு பெரிய மரக்கட்டை கடலில் மிதந்து வந்தது. அதை காவலர்கள் எடுத்துச் சென்று அரசனிடம் ஒப்படைத்தனர். அரசன் அந்த மரக்கட்டைக்கு பெரிய பூஜைகள் நடத்தி தச்சர்களை அழைத்து பெருமாள் சிலை செய்யும்படி கூறினார். தச்சர்களின் தலைவர் சிலை செய்வதற்காக அந்த மரத்தில் உளியை வைத்தவுடன் உளி உடைந்துவிட்டது. ஆரம்பத்திலேயே அபசகுணமாக இருந்ததால் அரசர் மிகவும் வருத்தமடைந்தார். அப்போது அவர் முன்பு பெருமாள் ஒரு முதிய தச்சனைப் போல வேடமணிந்து தோன்றினார். அரசனிடம் 21 நாட்களில் இந்த வேலையை முடித்து தருவதாகவும், அதுவரை தான் வேலைசெய்யும் அறையை யாரும் திறக்கக் கூடாது என்றும் கூறினார். அதற்கு அரசனும் ஒப்புக்கொண்டார். 15 நாட்கள் அந்த அறையின் உள்ளிருந்து உளிச்சத்தம் கேட்டது. எனவே அரசன் வேலை மும்முரமாக நடக்கிறது என எண்ணி அந்த அறைப்பக்கம் போகவில்லை. அதையடுத்து மூன்று நாட்கள் சத்தமே இல்லை. இதனால் தச்சர் தூங்கிவிட்டாரோ என எண்ணி, அரசன் அவசரப்பட்டு கதவைத் திறந்து விட்டான். உடனே தச்சர் கோபமடைந்தார். அவர் பெருமாளாக பெரு உருவம் எடுத்த மனிதனுக்கு பொறுமை வேண்டும். மூன்று நாட்கள் சத்தம் வரவில்லை என்றதும் எனது அறைக்கதவை திறந்துவிட்டாய். எனவே இந்தக் கோயிலில் நீ ஸ்தாபிக்கும் சிலைகள் அரைகுறையாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் பரவாயில்லை. அப்படியே பிரதிஷ்டை செய்துவிடு. இந்த கோயிலுக்கு வருபவர்கள் சிலையைப் பார்த்துவிட்டு பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செல்வார்கள் என்று அருள்பாலித்தார். அந்த அறையில் வேலை முடியாத நிலையில் ஜெகந்நாதர், பலராமன், சுபத்திரா ஆகியோரின் சிலைகள் இருந்தன. அந்த சிலைகளை அரசர் பிரதிஷ்டை செய்தார்.
இந்திர தையுமாவின் காலத்திற்கு பிறகு அவர் கட்டிய பழைய கோயில் பாழடைந்து விட்டது. அதன்பிறகும் அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. அவற்றையும் கடல் மூழ்கடித்து விட்டது. இக்கோயில் ஏறக்குறைய கி.பி. 1200 ல் அப்போதைய அரசர் அனந்தவர்மன் வாளியால் துவக்கப்பட்டு, 1135ம் ஆண்டில் இவரது பேரன் அனங்காபி மாதேவ் என்ற அரசனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இக்கோயிலை கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள சாம்ராஜ்யத்தின் மக்களின் 12 வருட வரிப்பணம் செலவழித்தார் எனக்கூறப்படுகிறது. இது பஞ்சரத முறைப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். துவாரகைபோல கடற்கரையில் அமைந்துள்ளது. கடல்நீர் ஆழமின்றி இருப்பதால், அதில் நீராடி இறைவனை வழிபடுகிறார்கள் பக்தர்கள். இத்தலம் பார்கவி, சர்வதீர்த்த மஹி என்னும் நதிகளால் சூழப்பட்டு, தட்சிணாவர்த்தி என்னும் வலம்புரிச்சங்கைப்போல் தோற்றம் தருகிறது. இவ்வாலயத்தின் மேற்கில் எட்டு உலோகக் கலவையால் செய்யப்பட்ட நீலச்சக்கரம் உள்ளது. ஆலயக் கொடிமரம் ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் பதீதபவன் பாவனா என்று அழைக்கப்படுகிறது. இவை இரண்டையும் வணங்கினாலே ஜெகந்நாதரின் அருளைப் பூரணமாகப் பெறலாம் என்கிறார்கள். இராமாயணத்தில் இராமபிரானும், மகாபாரத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து வேண்டிக்கொண்டதாக புராணங்கள் கூறுகிறது.
இவ்வாலயக் குளத்தில் மிகப்பெரிய ஆமைகள் உள்ளன. கோயில் கட்ட பணிபுரிந்த சிற்பிகளே இங்கே ஆமைகளாக வசித்து வருகின்றனராம். இங்கே பொதுவாக பூஜைகளைச் செய்பவர்கள் அந்தணர்கள் என்றாலும், தேர்த் திருவிழாவின் போது மூலவர்களைத் தேரில் அமர்த்துவது முதல் மீண்டும் நிலை வந்து சேர்ந்து கருவறையில் அமர்த்துவது வரையிலான எல்லா வேலைகளையும் சவரா என்னும் ஆதிவாசி இனத்தைச் சேர்ந்தவர்களே செய்கிறார்கள். இவர் கதை தைத்யர்கள் என்று அழைப்பார்கள். ஜெகந்நாதரின் உறவினர்கள் என்று தங்களைக் கூறிக் கொள்கின்றனர். இப்படிப் பல புதுமைகளுடன் விண்ணவரும் வந்து கண்டு களிக்கும் பூரி தேரோட்டம் சிறப்பு பெற்றது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள மூலவர்கள் மற்ற ஆலயங்களில் உள்ளதுபோல் கருங்கல்லால் வடிக்கப் பெற்றவை அல்ல. மூலவர் மரச் சிற்பங்களினால் ஆனவர். ஜகந்நாதருக்கு ஒரு புறம் சகோதரி சுபத்ராதேவியும் இன்னொரு புறம் சகோதரர் பலராமரும் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக