நாகதோஷங்களை அடியோடு நீக்கும் நாகர்கோவில் நாகராஜா திருக்கோவில்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகராக விளங்குவது நாகர்கோவில். அங்குள்ள நாகராஜா திருக்கோவில். நாகதோஷங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்ற திருத்தலமாக இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் நாகராஜரின் பெயரிலேயே, இந்த ஊர் ‘நாகர்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. நாகர் வழிபாட்டிற்கு என்று தனியாக அமைந்தக் கோவில் இதுவேயாகும். ஆனால் நாகருக்கென்றே தனிக்கோவில், அதாவது நாகர் மூலவராக வீற்றிருக்கும் ஆலயம் நாகராஜா கோவில் ஆகும்.
நாகருக்கென்றே தனிக்கோவில்
ஆதிகாலத்தில் இந்த பகுதி வயல்கள் சூழ்ந்ததாக இருந்துள்ளது. வயலில் அரிவாளை வைத்து நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்த ஒரு பெண், நெற்கதிரை அறுக்கும்போது, திடீரென ரத்தம் வந்தது. இதைக் கண்டு பயந்து போன அந்தப்பெண் அருகில் இருந்தவர்களிடம் சொல்ல, அவர்கள் ரத்தம் வந்த இடத்தைப் பார்த்தபோது, அங்கே பாறையொன்றில் ஐந்து தலையுடன் கூடிய நாகர் உருவம் இருந்தது.
நாகர் சிலைக்கு பாலாபிஷேகம்
அந்த நாகர் சிலையின் மேற்பகுதியில் இருந்துதான் ரத்தம் வந்து கொண்டிருந்தது. பின்பு அந்த நாகர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்து அந்தப் பகுதி மக்கள் அனைவரும் வழிபட்டனர். இதையடுத்து ரத்தம் வருவது நின்றது. எனவே அந்தப் பகுதி மக்கள், தினமும் அந்த சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடத் தொடங்கினர். இதனால் அந்த மக்களின் வாழ்க்கையில் துன்பங்கள் அகன்று, வசந்தம் வீச ஆரம்பித்தது.
ஆண் நாகமும், பெண் நாகமும்
ஒரு முறை சரும நோயால் பாதிக்கப்பட்ட களக்காடு பகுதியை ஆண்டுவந்த மன்னன் மார்த்தாண்டநாகதோஷம் போக்கும் நாகராஜர் வர்மா, நாகராஜா கோவிலுக்கு வந்தார். அவர் நாகராஜருக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டு நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்த மன்னன், அவ்விடத்திலேயே நாகராஜாவுக்கு ஆலயம் எழுப்பினார். ஆனால் கருவறை மட்டும் நாகங்கள் வசிப்பதற்கேற்ப, ஓலைக் கூரையாலேயே வேயப்பட்டது.
இந்தக் கோவிலை நாகங்களே பாதுகாக்கின்றன. கருவறையில் நாகராஜர் ஐந்து தலைகளுடன் சுயம்புவாக காட்சி தருகிறார். இத்தலத்தில் தர்னேந்திரன் என்ற ஆண் நாகமும், பத்மாவதி என்ற பெண் நாகமும் துவார பாலகர்களாக உள்ளனர்.
மண் பிரசாதம்
இத்தல மூலவர் நாகராஜாவின் எதிரில் உள்ள தூணில் நாகக்கன்னி சிற்பம் இருக்கிறது. கருவறையில் நாகராஜா இருக்கும் இடம் மணல் திட்டாக உள்ளது. மேலும் வயல் இருந்த இடம் என்பதால் எப்போதும் இவ்விடத்தில் நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இது இன்றும் காணக் கூடிய ஒரு அதிசய நிகழ்வாகும். இந்த நீருடன் சேர்ந்த மணலையே, கோவில் பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கு கிறார்கள். இந்த மணலானது ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை கருப்பு நிறத்திலும், தை மாதம் முதல் ஆனி மாதம் வரை வெள்ளை நிறத்திலும் மாறிக் கொண்டே இருப்பது அதிசயிக்கத்தக்க ஒன்றாகும்.
நாகராஜர் சன்னிதிக்கு வலது புறம் காசி விஸ்வநாதர், அனந்த கிருஷ்ணன் மற்றும் கன்னி மூல கணபதி சன்னிதிகள் அமைந்துள்ளன. தினமும் நாகராஜருக்கு பூஜைகள் நடைபெற்று முடிந்த பின்னர்தான், இவர்களுக்கு பூஜைகள் நடைபெறும். அர்த்த ஜாம பூஜையில் மட்டும் அனந்த கிருஷ்ணருக்கு முதல் பூஜை நடைபெறுகிறது.
கோவில் வெளி வளாகத்தில் துர்க்கை சன்னிதி, பாலமுருகன் சன்னிதி, திறந்தவெளியில் குழலூதும் கண்ணன் சன்னிதி முதலியவை உள்ளன. மேலும் காவல் தெய்வங்களான சாஸ்தாவும், நாகமணி பூதத்தான் சன்னிதியும் ஆலய வளாகத்திற்குள்ளேயே இருக்கிறது.
தீர்த்த துர்க்கை
இந்த தலத்தில் உள்ள துர்க்கை சிலை, இங்குள்ள நாக தீர்த்தத்தில் கிடைத்தது. எனவே அன்னையை ‘தீர்த்த துர்க்கை’ என்று அழைக்கிறார்கள். துர்க்கை அம்மன் கிடைத்த நாக தீர்த்தத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ராகு காலத்தில் நீராடி பால் அபிஷேகம் செய்து, நெய் தீபம் மற்றும் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால் நாக தோஷங்கள் உடனே அகலும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
‘ஓடவள்ளி’ என்ற கொடியே இத்தல விருட்சமாகும். ஆலயத்தின் வெளிப்பிரகாரத்தில் நாக உருவம் கொண்ட நாகலிங்க மரம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் இவ்வாலயத்தின் முன்புள்ள அரச மரங்களின் கீழ் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள நாகர் சிலைகளுக்கு பக்தர்கள் தங்கள் கையாலேயே மஞ்சள் பொடி தூவி, பால் அபிஷேகம் செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக