புதன், 10 மே, 2017

புத்த பூர்ணிமா



புத்த பூர்ணிமா

புத்த பூர்ணிமா (இந்தியாவில்) அல்லது வைசாகம் அல்லது விசாகம் (இலங்கையில்) ( Wesak ) மே மாத பௌர்ணமி (முழு நிலா) நாளன்று உலகில் உள்ள அனைத்து பௌத்தர்களாலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் பண்டிகை ஆகும். பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில்
புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள் தோரணங்கள் ஒளிக்கூடுகள் கட்டப்பட்டும் எங்கும் விழாக்கோலமாக இருக்கும்.
இந்த நாள் மூன்று முக்கியத்துவங்களை கொண்ட நாளாக பௌத்தர்களால் கொண்டாடப்படுகின்றது.
1. சித்தார்த்த கௌதமர் லும்பினி (இன்றைய நேபாளம்) என்னுமிடத்தில் பிறந்த நாள்.
2. புத்தகயா எனும் இடத்தில் தவம் புரிந்து புத்த நிலை அடைந்த நாள்.
3. புத்தர் இறந்த நாள்.
இம் மூன்று நிகழ்வுகளும் மே மாத
பூரணை நாட்களிலேயே நிகழ்ந்ததாகக் பௌத்தர்கள் நம்புகின்றனர். கொண்டாட்ட முறைகளில் நாடுகளிற்கு இடையே சில வேறுபாடுகள் இருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இலங்கையில் வெசாக் நாள்
கொழும்பில் வெசாக் பந்தல் ஒன்று
இது இலங்கை பௌத்தர்களினதும் பண்டிகை நாளாகும். "வெசாக்" மே மாத
பௌர்ணமி (முழு நிலா) நாளன்று புத்தரின் பிறப்பு, இறப்பு, விழிப்பு (நிர்வாணம்) ஆகியவற்றை நினைவுறுத்தி இலங்கையில் பெளத்த
சிங்களவர்களால் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. பலவித சமய நிகழ்வுகள் இந்நாளில் புத்தரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி இடம்பெறும். இக்காலப்பகுதியில் பந்தல்கள், தோரணங்கள், ஒளிக்கூடுகள் கட்டப்பட்டு எங்கும் விழாக்கோலமாக இருக்கும். "வெசாக்" என்பது தமிழ் சொல் அல்ல. ஆனால் இலங்கைத் தமிழர்களும் வெசாக் என்றே அழைக்கின்றனர். இலங்கையில் தற்போது காணப்படும் இந்த வெசாக் கூடுகள், தோரணங்கள் அமைத்தல் போன்ற வெசாக் கொண்டாட்ட முறை சீனக் கலாச்சாரத்திலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகின்றது.
வெசாக் கூடு
குறிப்பாக சிங்கள பௌத்தர்களின் வீடுகளில் மூங்கில் மற்றும் ஈக்கிள் குச்சிகளால் கூடுகள் செய்யப்பட்டு மெல்லிய கடதாசிகளினால் வடிவமைக்கப்பட்டு அதற்குள்
மெழுகுவர்த்தியை ஏற்றி வீடுகளின் முன்னே உயரத் தொங்கவிடுவர். இவை இலங்கையில் “வெசாக் கூடு” என்று அழைக்கப்படுகின்றது. இந்த வெசாக் கூடுகள் பல்வேறு வடிவங்களில் இருக்கும். ஒவ்வொருவரும் தத்தமது கலைவண்ணத்தை இங்கே காட்டியிருப்பர்.
இதைத் தவிர வீடுகளில் தொங்கவிடக் கூடிய சிறிய வகை வெசாக் கூடுகள் கடைகளில் விற்பனை செய்யப்படும். இக்காலப்பகுதியில் இவை அதிகம் விற்பனையாகும். இவைகளும் உள்ளே மெழுகுவர்த்தி ஏற்றி தொங்கவிடுபவைகள் தான். மின்சாரம் வழங்கப்படும் பிரதேசங்களில் மெழுகுவர்த்திக்குப் பதிலாக மின்விளக்குகளை கூடுகளின் உள்ளே தொங்கவிடுவர்.
வெசாக் தோரணங்கள்
பிரதான சந்திகளில் மாபெரும் மின்னலங்காரத் தோரணங்கள் பல இலட்சங்கள் செலவில் கட்டப்படும். அத்தோரணங்களில் பௌத்த வரலாற்று கதைகளை ஓவியமாக வரைந்து அதற்கு ஒலிபெருக்கியில் விளக்கங்கள் கவிதை வடிவிலும் பேச்சு வடிவிலும் கொடுக்கப்படும். இதனால் இந்தத் தோரணங்கள் கட்டப்பட்டிருக்கும் இடத்திற்கு பெருந்திரலான மக்கள் கூட்டம் பெருகும் சிலப்பகுதிகள் வாகனங்கள் போகமுடியாத அளவிற்கு சனக்கூட்டம் பெருகுவதால் பாதைகள் மூடப்படும். கொழும்பில் ஒவ்வொரு ஆண்டும் வெசாக் தோரணங்கள் கட்டப்படும் இடங்கள் புறக்கோட்டை அரசமரத்தடிச் சந்தி, கிரான்ட்பாஸ் சந்தி, தெமட்டகொடை சந்தி, பொரல்லை சந்தி, வெள்ளவத்தை, பேலியகொடை சந்தி போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
பௌத்த காலக் கணிப்பீட்டு முறை
புத்தர் பிறந்த நாள் எனக் கருதப்படும் கிமு
563 இல் இருந்து பௌத்த காலக் கணிப்பீட்டு முறை ஒன்றும் நடைமுறையில் உள்ளது.




நாடுமுழுவதும் புத்த பூர்ணிமா நாள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.. பௌத்தமதத்தினர்
வெண்ணிற அணிந்து புத்த விகாரங்களுக்கு மலர்களை தூவி வழிபட்டனர்வைகாசி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு பல்வேறு சிறப்புகள் உண்டு.
அந்த நாளில்தான் விசாக நட்சத்திரத்தில் முருகப்பெருமான் அவதரித்தார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அதே வைகாசி பவுர்ணமியன்றுதான் உலகிற்கே அமைதியை போதித்த கௌதம புத்தர் அவதரித்துள்ளார்.
இதேநாளின்தான் நம்மாழ்வாரும் பிறந்துள்ளார். இந்த கர வருடத்தில் வைகாசி மாதத்திற்கு மொத்தம் 32 நாட்கள் என்பதால் வைகாசி 3-ம் தேதி ஒரு பவுர்ணமிதிதியும் வைகாசி 32 – ம் தேதி ஒரு பவுர்ணமியும் என இரண்டு பவுர்ணமிகள் உண்டு.
இதனால் முதலில் வந்த பவுர்ணமியன்றே புத்தபூர்ணிமா கொண்டாடப்பட்டது. ஆனால் வைகாசி விசாகத்தை மாதத்தின் கடைசியில் கொண்டாட அறுபடை வீடுகளிலும் முடிவு செய்துள்ளனர்.
மகான் அவதரித்த நாள்
மன்னரின் மகனாக அவதரித்து மக்களின் வாழ்விற்காக அனைத்தையும் துறந்த மகான் புத்தர் பிரான். இவர் அவதரித்த நாள் புத்த பூர்ணிமா, புத்த ஜெயந்தி அல்லது விசாக் என்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது.
கபிலவஸ்து என்ற நாட்டில் மன்னனின் மகனான சித்தார்த்தர் பிறந்தது முழு நிலவு நாளான வைசாகா ஆகும். ஒரே மகன் என்பதால் உலகத் துன்பங்கள், கவலைகள் என எதுவும் தெரியாதவராக வளர்க்கப்பட்டார்.
தனது 29 – வது வயதில் வெளி உலகைக் காண கிளம்பியவர் துன்பம் நிறைந்த உலக மக்களின் வாழ்க்கையைக் கண்டு அதிர்ந்து, துன்பங்களுக்கு காரணம் தேடி அலைந்தார்.
கௌதமபுத்தரான சித்தார்த்தன்
கயா என்னும் காட்டுப்பகுதியில் போதி மரத்தடியில் அமர்ந்து ஆறு ஆண்டுகள் தவம் செய்த சித்தார்த்தன், முடிவில் தனது பிறந்த நாளான அதே வைசாகா முழு நிலவு நாளில் ஞான ஒளியைப் பெற்று தனது கேள்விகளுக்கான பதிலைக் கண்டுபிடித்தார்.
அதுமுதல் அவர் கௌதம புத்தர் என அழைக்கப்பட்டார்..
புத்தர் தன் இறுதி காலம்வரை பல இடங்களுக்கு பயணம் சென்று தான் கண்டுகொண்ட உண்மையை பற்றி நீண்ட பிரசங்கங்கள் செய்தார். இறுதியில் கி.மு. 483 ல் தனது 80 – வது வயதில் தனது பிறந்த நாளும், தான் ஞானத்தை அடைந்த நாளுமான அதே வைசாகா அன்று புத்தர் இவ்வுலக வாழ்வைத் துறந்தார்.
புத்தரின் வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இந்த மூன்று சம்பவங்களையும் நினைவு கூறுவதே புத்தபூர்ணிமா எனப்படுகிறது. நேற்றயதினம் புத்த பூர்ணிமா விழா இந்தியாவின் பீகாரில் உள்ள புத்த கயாவிலும், உத்திரபிரதேச மாநிலத்திலுள்ள சாரநாத்திலும் இவ்விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்தியா மட்டுமல்லாது. நேபாளம், இலங்கை, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலும் புத்த பூர்ணிமாக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
வழிநடத்தும் போதனைகள்
"புத்தன்" என்ற சொல்லுக்கு "விழித்தெழுந்தவன்", "ஒளியினைக் கண்டவன்" என்று பொருள். தன் ஆசையையும், அகந்தையையும் வெற்றி கொண்டார். "தான்", "தனது" என்ற நிலையிலிருந்து விலகினார். இதையே "நிர்வாணம்" அல்லது "நிர்வாண நிலை" என்று சொல்லுவார்கள்.
கௌதம புத்தர் பிறந்து 2,500 வருடங்கள் கடந்தும் ஞானோதயம் அடைந்த அவரின் போதனைகள் ஆன்ம சாதகர்களை இன்றும் வழி நடத்துகிறது. புத்த பூர்ணிமா நாளானது கௌதம புத்தரின் பிறப்பு, ஞானோதயம், மற்றும் மஹா சமாதி ஆகிய நாட்களை நமக்கு நினைவு படுத்துவதோடு மட்டுமல்லாமல் நாமும் அந்த மாதிரி நிலையை அடையலாம் என்று நமக்கு உணர்த்துகிறது.
"ஆசையே" துன்பத்திற்கு அடிப்படைக் காரணம் என்னும் தத்துவத்தை உலகிற்கு போதித்தவர் கௌதம புத்தர். உலக மகா ஞானிகளில் தனக்கென தனி இடம் பிடித்தவர்.
இவ்வுலக வாழ்க்கை துன்பகரமானது. ஏழ்மை, நோய், மூப்பு, இறப்பு முதலியவை நிறைந்த உலக வாழ்க்கை, எளிதில் விலக்கிக் கொள்ள முடியாத துன்பம் நிறைந்தது. இவை நம்மை தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
சிற்றின்ப ஆசையே துன்பத்தின் காரணம். தான் இன்பமாக வாழ வேண்டும் என்ற தன்னலம் கலந்த ஆசையே துன்பங்களுக்கு காரணமாகும்.
ஆசை ஒழிக்கப்பட்டாலொழிய துன்பத்தை ஒழிக்க முடியாது.
எண்வகை வழிமுறைகளை கடைபிடித்தால் ஆசைகளை ஒழித்துவிடலாம். புத்தர் கூறிய சமய முறையில் ஆசையை அறவே ஒழித்து, பல்வகையான வாழ்க்கையின் மீது நாட்டம் கொள்ளாமல், வாழ்க்கையில் ஆசையால் விளையும் துன்பங்களை ஒழிப்பதே நிர்வாணமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக