திங்கள், 20 நவம்பர், 2017

பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள் !!!




பன்னிரண்டு லக்னங்களுக்கும் யோகம் தரும் கோயில்கள்  !!!

நாம் நட்சத்திரங்களையும் ராசிகளையும் அறிவோம். ‘‘உங்களின் ராசி என்ன?’’ என்று கேட்டால் எல்லோரும் சட்டென்று சொல்லி விடுவோம்.  ஆனால்,  ‘‘உங்களின் லக்னம் என்ன?’’ என்று கேட்டால் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஒரு ஜோதிடர் ராசிக் கட்டத்தை  நோக்கும்போது லக்னம் என்ன  என்றுதான் பார்ப்பார். ஜாதகக் கட்டத்தில் ‘ல’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும் இடம்தான் அது. உங்களின் மையச்  சக்தி குவிந்திருக்கும் ராசியையே லக்னம் என்று  வரையறுத்திருக்கிறார்கள். இந்த உலகத்தை நீங்கள் எந்த ராசியின் வழியாக, அதன் அதிபதியான எந்த கிரகத்தின் மூலம் சந்திக்கிறீர்கள் என்பதைத்தான் லக்னம்  என்கிறார்கள். ராசி என்பது, சந்திரன் எந்த கிரக வீட்டில் இருந்தபோது  நீங்கள் பிறந்தீர்கள் என்று சொல்வது. ஆனால், லக்னம் என்பது நீங்கள் எந்த  மையத்திலிருந்து வந்திருக்கிறீர்கள் என்றும், உங்கள் வாழ்க்கையை  எந்த மையம் நகர்த்துகிறது என்றும் தீர்மானிக்கிறது.

மரத்தின் ஆணிவேர் போல மனிதனுக்கு லக்னம். உடலுக்கு உயிர்போல என்பதாலேயே,  விதியாகிய லக்னம் மதியாகிய சந்திரன் கதியாகிய சூரியன் என்பார்கள்.  ஏனெனில், ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிப்பதே லக்னம்தான். ஜாதகத் தின் பிராண மையமே லக்னம்தான். ராசியை வைத்து பலன்களை சொல்லுவதை விட  லக்னத்தை வைத்துத்தான் முழுமையான பலன்களை கூற  முடியும். வாழ்க்கைக் கணக்குகளை தொடங்கும் இடமும் இதுதான். ராசிக் கட்டங்களில் ஆங்காங்கு  கிடக்கிற கிரகங்களின் பலம், பலவீனங்களை,  திறனை லக்னம்தான் தீர்மானிக்கிறது. எனவே, எந்தெந்த லக்னக்காரர்கள் எந்தெந்த கோயில்களுக்குச் சென்றால்  பூரண நற்பலன்களை அடைவார்கள்  என்பது கீழே கொடுக்கப் பட்டிருக்கிறது. அந்தந்த கோயில்களுக்குச் சென்று தரிசித்து பயனடையுங்கள்.

மேஷ லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண் டியது திருச்சி  மலைக் கோட்டை யிலுள்ள தாயுமானவசுவாமி ஆலயமாகும். அத்தலத்தில் உறையும் தாயுமானவ சுவாமி யையும் மட்டுவார்குழலி  அம்மையையும் தரிசித்து  வாருங்கள். இத்தலம் திருச்சியின் நகர மையத்திலேயே உள்ளது. தினமும் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் தாயுமானவ  சுவாமியின் பதிகத்தை சொல்லிக்  கொண்டேயிருங்கள்.

அகர உயிர் எழுத்து அனைத்தும் ஆகி, வேறாய்
அமர்ந்தது என அகிலாண்டம் அனைத்தும் ஆகிப்
பகர்வன எல்லாம் ஆகி அல்லது ஆகிப்
பரம்ஆகிச் சொல்லரிய பான்மை ஆகித்
துகள் அறுசங்கற்ப விகற்பங்கள் எல்லாம்
தோயாத அறிவுஆகிச் சுத்தம் ஆகி
நிகர் இல் பசுபதியான பொருளை நாடி
நெட்டுயிர்த்துப் பேரன்பால் நினைதல் செய்வாம்

ரிஷப லக்னம்

உங்களுக்கு நல்ல நேரமோ கெட்ட நேரமோ எது நடந்தாலும் நன்மை விளையச் செய்வது என்பது இறைவன் கைகளில்தான் உள்ளது. அதிலும்  இயல்பாகவே  சுகவாசியான நீங்கள் இன்னும் சுகமான வாழ்க்கையை வாழ வேண்டுமெனில் திட்டக்குடி எனும் தலத்திலுள்ள சுகாசனப் பெரு மாளையும், வேதவல்லித்  தாயாரையும் முடிந்தபோதெல்லாம் தரிசியுங்கள். சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள தொழுதூரிலிருந்து  13 கி.மீ., விருத்தாசலத்திலிருந்து 32  கி.மீ. கீழேயுள்ள ஆண்டாளின் திருப்பாவையை எப்போதும் கூறுங்கள்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள்நம் பாவைக்குச் சாற்றிநீ ராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரிபெய்து
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பத்
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்ககுடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்

மிதுன லக்னம்

எல்லாவற்றையும் தாண்டி கிரகங்களை சரி செய்யும் ஆற்றலும், திறனும் இறைவனிடமே இருப்பதால் இறுதியில் கிரகங்கள் இறைவனிடமே  சரணடைகின்றன.  எனவே, நம்மால் ஆன பரிகாரங்களை செய்து கொண்டிருக்கும்போதே இறைவனின் பாதங்களை நினைத்து சரணடைவோம்.  அப்படிப்பட்ட தலமாக நீங்கள் செல்ல  வேண்டியது திருத்தங்கல் ஆகும். இத்தலத்திலுள்ள நின்ற நாராயணப் பெருமாளையும், செங்கமலத்  தாயாரையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் சிவகாசி -  ஸ்ரீவில்லிபுத்தூர் பாதையில் அமைந்துள்ளது. கீழ்க்காணும் பாடலை முடிந்தபோதெல்லாம்  பாடி வாருங்கள்:

கண்ண ணென்னும் கருந்தெய்வம்
காட்சி பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமா னரையில் பீதக
வண்ண ஆடை கொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே

கடக லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை அமைவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய  ஆலயம்,  அம்மன்குடி ஆகும். இத்தலத்திலுள்ள அஷ்டபுஜ துர்க்கையை தரிசியுங்கள். துர்க்கையே, தான் மகிஷனை சம்ஹாரம் செய்த பாவம் போக்க  இங்கே  சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இத்தலம் கும்பகோணத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் உள்ளது.  கும்பகோணம் -  உப்பிலியப்பன் கோயில் - அய்யாவாடி வழியாக அம்மன்குடிக்கு பேருந்துகள் செல்கின்றன. ஆடுதுறையிலிருந்து தனி வாகனம்  மூலமாகவும் இக்கோயிலை  அடையலாம்.

அபிராமி அந்தாதியிலுள்ள 75வது பதிகத்தை எப்போதும் சொல்லுங்கள்.தங்குவர் கற்பக தாருவின் தாயர் இன்றி
மங்குவர் மண்ணில் வாழாப் பிறவியை மால்வரையும்
பொங்கு உவர் ஆழியும் ஈரேழ் புவனமும் பூத்த உந்திக்
கொங்கு இவர் பூங்குழலாள் திருமேனி குறித்தவரே

சிம்ம லக்னம்

உங்கள் லக்னத்தை இயக்கும் மூன்று கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கையைப்   பெறுவதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய ஆலயம், பழநி முருகன் கோயில். அக்கோயிலுக்குச் சென்று ராஜ அலங்கார முருகனை மறக்காது  தரிசியுங்கள். அல்லது  வீட்டில் ராஜ அலங்கார முருகனின் படத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்தத் திருப்புகழை எப்போதும் சொல்லுங்கள்.

கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் அடிபேணிக்
கற்றிடும் அடியவர் புத்தியில் உறைபவ
கற்பகம் எனவினை கடிதேகும்
மத்தமு மதியமும் வைத்திடும் அரன்மகன்
மற்பொரு திரள்புய மதயானை
மத்தள வயிறனை உத்தமி புதல்வனை
மட்டவிழ் மலர்கொடு பணிவேனே

கன்னி லக்னம்

பெருமாள் பள்ளி கொண்ட கோலத்தில் அருளும் தலத்தை தரிசிக்கும்போது நிச்சயம் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றம் உண்டாகும். அதிலும்  கடற்கரையோரம்  அருளும் பெருமாளாக இருப்பின் நற்பலன்கள் அதிகரிக்கும். புண்டரீக முனிவரின் பக்தியை மெச்சி மாமல்லபுரத்தில் பெருமாள்  பள்ளிகொண்ட கோலத்தில்  சேவை சாதித்தார். புண்டரீக முனிவரும் எம்பெருமானின் பாதத்தின் அருகே அமரும் பாக்கியம் பெற்றார். இவ்வாறு  சயனத் திருக்கோலத்தில் காட்சி  தந்தமையால் பெருமாள், ஸ்தலசயனப் பெருமாள் ஆனார். சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் அமைந் துள்ளது இக்கோயில்.
தொண்டரடிப்பொடியாழ்வார் இயற்றிய திருமாலை பாசுரங்களை தினமும் கூறுங்கள்.

குடதிசை முடியை வைத்துக் குணதிசை பாதம்நீட்டி
வடதிசை பின்பு காட்டித் தென்திசையிலங்கை நோக்கி
கடல்நிறக் கடவு ளெந்தை அரவணைத்துயிலு மாகண்டு
உடலெணக் கருகு மலோ எஞ்செய்கேனுலகத்தீரே!  
     
துலா லக்னம்

எந்த கிரகங்கள் எங்கு இருந்தாலும் சரி, தெய்வ சக்தியை அடிபணியுங்கள். அதிலும் புதனை பலப்படுத்தும் அம்சமாகவே உள்ள பெருமாளை  எப்போதும்  வணங்குங்கள். குறிப்பாக காஞ்சிபுரத்திலுள்ள நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் ஒன்றான பச்சை வண்ணப் பெருமாளை அவ்வப்போது  தரிசித்துவிட்டு  வாருங்கள். பச்சை வண்ணப் பெருமாளின் அருளால் புதன் பிரமாண்டமான வாழ்வைத் தருவார்.
கீழேயுள்ள திருமங்கையாழ்வார் பாசுரத்தை தினமும் கூறுங்கள்.

வங்கத்தால் மாமணி வந்துந்து முந்நீர்
மல்லையாய் மதிள் கச்சியூராய், பேராய்
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன்
குலவரையான் மடப்பாவை யிடப்பால் கொண்டான்
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய்
பணி வரையினுச் சியாய் பவள வண்ணா
எங்குற்றா யெம்பெருமான் உன்னை நாடி
யேழையே னிங்ஙணமே யுழிதருகேனே

விருச்சிக லக்னம்

கிரகங்கள் எப்படியிருந்தாலும் பிராப்தம் எனும் முன்வினைப் பயனை மாற்றியமைக்கும் சக்தி தெய்வத்திற்குத்தான் உண்டு. எனவே, உங்களின்  வாழ்க்கை  யோகமாக மாற நீங்கள் தில்லை ஸ்தானம் என்றழைக்கப்படும் திருநெய்த்தானம் தலத்திற்குச் சென்று வாருங்கள். அத்தலத்தில் அருளும்  நெய்யாடியப்பரையும்,  பாலாம்பிகையையும் தரிசித்து வாருங்கள். இத்தலம் தஞ்சாவூர், திருவையாறுக்கு அருகேயுள்ளது. கீழேயுள்ள திருவருட் பாவையை தினமும் கூறுங்கள்.

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும் ஆருயிர்கட்கு எல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் எப்பாரும் எப்பதமும் எங்கணும்நான் சென்றே எந்தைநினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும் செப்பாத மேல்நிலைமேல் சுத்த சிவமார்க்கம் திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும் தப்போது நான் என் செயினும் நீ பொறுத்தல் வேண்டும் தலைவ நின்னைப் பிரியாத நிலையையும் வேண்டுவனே

தனுசு லக்னம்

கிரகங்களால் ஏற்படக் கூடிய யோகப் பலன்களை முழுமையாக பெறுவதற்கும், அதிர்ஷ்டமான வாழ்க்கை வாழ்வதற்கும் நீங்கள் செல்ல வேண்டிய  தலம்  வில்வாரணி முருகன் கோயிலாகும். சகல நட்சத்திரங்களுக்கும் இவர் அருள்பாலிப்பதாக புராண ஐதீகம் நிலவுகிறது. நட்சத்திரங்கள் பூஜிக்கும்  நாயகனாக இந்த  முருகன் விளங்குகிறார். கருவறையில் நாகாபரணத்துடன் முருகப் பெருமானும், சுயம்பு வடிவமான சிவபெருமானும் ஒரு சேர  காட்சி தருகின்றனர். இத்தலம்  திருவண்ணாமலை வேலூர் சாலையில் கலசப்பாக்கத்திலிருந்து 6 கி.மீ. தொலைவிலும், போளூரிலிருந்து 12 கி.மீ.  தொலைவிலும் அமைந்துள்ளது. கீழேயுள்ள  திருப்புகழை தினமும் கூறுங்கள்.

சீரு லாவிய வோதிம மான மாநடை மாமயில்
சேய சாயல்க லாமதி முகமானார்
தேனு லாவிய மாமொழி மேரு நேரிள மாமுலை
சேலு லாவிய கூர்விழி குமிழ்நாசி
தாரு லாவிய நீள்குழல் வேய ளாவிய தோளியர்
சார்பி லேதிரி வேனைநி னருளாலே
சாம வேதியர் வானவ ரோதி நாண்மலர் தூவிய
தாளில் வீழ வினாமிக அருள்வாயே

மகர லக்னம்

கிரகங்களின் முத்தான நன்மைகள் காலத்தே கிடைத்திட இந்த கிரகங்களை இயக்கும் சக்தியான இறைவனை நாடிச் செல்லுங்கள். அத்தகைய ஒரு  தலம்,  திருநின்றவூர். தாயாரின் பூரண அனுக்கிரகமும், பெருமாளின் பொங்கும் அருளும் நிறைந்த தலம் இது. இத்தலத்தில் கருணையே சொரூபமாக  தாயார், ‘என்னைப்  பெற்ற தாயே’ என்கிற திருநாமத்தோடு அருள்கிறாள். சுதாவல்லி என்கிற திருநாமமும் உண்டு. பெருமாள், பக்தவச்சலன். இத் தலம் திருவள்ளூருக்கு  அருகேயுள்ளது. சென்னையிலிருந்து சென்று வர பேருந்து மற்றும் ரயில் வசதி உண்டு. திருமங்கையாழ்வார் திருநின்றவூரில்  பாடிப் பரவசமான பாசுரத்தை  தினமும் சொல்லுங்கள்

ஏற்றினை யிமயத்து ளெம் மீசனை
இம்மையை மறுமைக்கு மருந்தினை
ஆற்றலை அண்டத் தற்புறத் துய்த்திடும்
ஐயனைக் கையிலாழி யொன்றேந்திய
கூற்றினை குருமாமணிக் குன்றினை
நின்றவூர் நின்ற நித்திலத் தொத்தினை
காற்றினைப் புணலைச் சென்று நாடிக்
கண்ணமங்கயுள் கண்டு கொண்டேன்

கும்ப லக்னம்

உங்களை சுக்கிரன், புதன், சனி போன்ற கிரகங்கள் வழி நடத்துவதால் மறக்காமல் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் உரிய வழிபாட் டை  மேற்கொள்வதும் நல்லதாகும். அதனால் திருப்பதி பெருமாளான வெங்கடாஜல பதியை வருடத்திற்கு ஒருமுறையேனும் தரிசித்து வாருங்கள்.  வீட்டில் பெரிய  அலர்மேல் மங்கைத் தாயார்-திருப்பதி ஸ்ரீநிவாசப் பெருமாள் படத்தை வாங்கி வைத்து வணங்குங்கள். கீழேயுள்ள குலசேகராழ்வார்  பாசுரத்தை தினமும்  கூறுங்கள்

மின்னனைய நுண்ணிடையா ருருபசியும் மேனகையும்
அன்னவர்தம் பாடலொடு மாடலவை யாதரியேன்
தென்னவென வண்டினங்கள் பண்பாடும் வேங்கடத்துள்
அன்னனைய பொற்குவடா மருந்தவத்தனாவேனே
வானாளும் மாமதிபோல் வெண்குடைக்கீழ் மன்னவர்தம்
கோனாகி வீற்றிருந்து கொண்டாடும் செல்வறியேன்
தேனார்பூஞ் சோலைத் திருவேங் கடமலைமேல்
கானாறாய்ப் பாயும் கருத்துடையே னாவேனே

மீன லக்னம்

உங்களின் சொந்த ஜாதகத்தில் எத்தனைதான் கிரகங்கள் பலவீனமாக இருந்தாலும் எல்லாவற்றையும் சரி செய்யும் சக்தி தெய்வத்திற்கு உண்டு.  கிரகங்களுக்கு  பிரமாண்ட பலத்தை அளிப்பவையே தெய்வங்கள்தான். எனவே, உங்களின் யோகாதிபதிகள் பூரண பலன்களை கொடுக்க நீங்கள்  செல்ல வேண்டிய தலம்  குறுக்குத்துறை முருகன் கோயிலாகும். இக்கோயில் தாமிரபரணி ஆற்றங்கரையில் மிகவும் ரம்மியமான சூழ்நிலையில்  அமைந்துள்ளது. திருநெல்வேலி சந்திப்பு  ரயில் நிலையத்தில் இருந்தும், டவுன் ரயில் நிலையத்தில் இருந்தும் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.  பஸ், ஆட்டோ வசதி உண்டு. கீழேயுள்ள கந்தர்  அனுபூதி பாடலை தினமும் கூறுங்கள்.

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியஆ
விரிதாரண விக்ரமவேள் இமையோர்
புரிதாரக நாக புரந்தரனே.
மின்னே நிகர்வாழ்வை விரும்பியயான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ
பொன்னே மணியே பொருளே அருளே
ம.ன்னே மயில் ஏறிய வானவனே.
எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ
சிந்தாகும் ஆனவை தீர்த்தெனைஆள்
கந்தா கதிர் வேலவனே உமையாள்
மைந்தா குமரா மறைநாயகனே.

(சூரியன் பதிப்பக வெளியீடான ‘முனைவர் கே.பி. வித்யாதரன்’ எழுதிய பிரச்னை தீர்க்கும் திருத்தலங்கள் புத்தகத்திலிருந்து ஒரு பகுதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக