வியாழன், 30 நவம்பர், 2017

கார்த்திகை தீபம் - Karthigai Deepam



கார்த்திகை தீபம் - Karthigai Deepam

இந்தியாவில் வடக்கில் தீபவழிபாடு ‘தீபாவளி’ என்றும், தெற்கே தீபவழிபாடு ‘கார்த்திகை தீபம்’ என்றும் கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதனால் கார்த்திகை தீபம் எனப் பெயர் பெற்றது. கார்த்திகை நாளில் வரிசையாகத் திருவிளக்கேற்றி எங்கும் கொண்டாடும் வழக்கம் புராதன காலந்தொட்டு இருந்து வருகிறது. தீபம் என்பது நம் உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளி பரவச் செய்யும். தீபம் ஞானத்தின் அறிகுறி. மங்கலத்தின் சின்னம்.

இறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.

முற்பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தான் அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரி தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.
அதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.

வீட்டின் வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக வைக்க வேண்டும். இந்நாளில் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் பொழுது சாயும் நேரத்துக்கு முன்பாக நடுவாசல், கூடம், வராண்டா, கைப் பிடிச்சுவர்கள், மாடிப்படிகள், துளசி மாடம் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும், வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர் முழுவதும் விளக்குகள் ஒளிர்வதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும்.சந்திர தரிசனத்துக்கு பிறகு கோயில்களில் தீபம் ஏற்றப்படும். எனவே மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் தீபம் ஏற்றலாம். பூஜையின்போது சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வடை, பாயசம் மற்றும் பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு. தினைமாவிலும் விளக்கேற்றி வழிபடலாம்.

குத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் சொல்வார்கள். வீடுகளில் விளக்கேற்றி, கோயிலுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்வதால் தடை, தோஷங்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை. தீப விளக்கு ஏற்றி, அறியாமை இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோம்.

கார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.

பொருள்:

புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.

தீபத் திருநாளின் அருமை பெருமைகளை உணர்ந்து, விளக்கேற்றி வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழ்வோமாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக