செவ்வாய், 21 நவம்பர், 2017

கரு காக்கும் அம்பிகை




கரு காக்கும் அம்பிகை
         

திருமணத்தின் வரப்பிரசாதம் - மழலைச் செல்வம். இறையருளால் கரு தாங்கி, அதற்கு உயிரும் உடலும் கொடுத்து, புதியதோர் பிறவி தரும் அற்புத உறவு.

*‘ஒரு உயிரிலிருந்து தான் இன்னொரு உயிர் ஜனிக்கிறது. அப்புறம் ஏன் சிருஷ்டிக்காக இறைவனுக்கு நன்றி தெரிவிக்கிறோம் ?’* என்று சிலர் கேட்கலாம்.

கருப்பைக்குள் கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய உருவமாக உருவாகும் உயிரை, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து, இயங்கச் செய்யும் அற்புதத்தை இறைவனைத் தவிர வேறு யாரால் செய்ய முடியும் ?

தங்கள் பிள்ளைகளுக்குத் திருமணம் செய்து முடிப்பதையே, தம் கடமையின் முழுமையாகக் கருதுகிறார்கள் பெற்றோர்.

மணமக்களோ, தமக்கு மக்கட்செல்வங்கள் பிறப்பதையே மணவாழ்வின் நிறைவாகக் கருதுகிறார்கள். ஆரோக்யமான வாழ்வு படைத்தோர் அனைவருமே அந்த மழலைச் செல்வத்தைப் பெற்று விடுகிறார்களா ? அந்த நடைமுறையில் தான் எத்தனை சிரமங்கள், இடையூறுகள் !

இன்றைய நாகரிக வாழ்க்கையில் பெண்களும் வேலைக்குச் செல்லும் அவசியம் ஏற்பட்டுள்ளது. பணியின் சுமை அவர்களுக்கு மேலும் மன அழுத்தத்தைத் தருகிறது. இறுக்கமான சூழலும் இனம்புரியாத காரணங்களும் சேர்ந்து கொள்ள, கருவின் வளர்ச்சி முழுமையடையாத சிலருக்கு *‘கருச்சிதைவு’* ஏற்பட்டுவிடுகிறது.

கருவுக்குள் உருவாகும் உயிரைக் காக்கும் அம்பிகை, தஞ்சை மாவட்டம், திருக்கருகாவூர் என்ற திருத்தலத்தில் குடியிருக்கிறாள்.

எத்தனையோ பேரின் ஏக்கப் பெருமூச்சுகளை இன்ப உணர்வலைகளாக மாற்றிய அம்பிகை அவள்.

அந்த நெகிழ்ச்சியான அனுபவங்களின் பிரதிபலிப்பை, இங்கு மக்கள் வெள்ளம் நிரம்பி வழிவதிலிருந்து காணமுடியும்.

விருந்தோம்பல் தமிழர் பண்பாடு. தவிர்க்க முடியாத ஒரு இக்கட்டான சூழலில் விருந்தினரை உபசரிக்க இயலாத போது ஏற்படும் தவிப்பும் வேதனையும் மிகையானது தான்.

இது தான் கர்ப்பரட்சாம்பிகையின் அளவிலாக் கருணையை நமக்கு எடுத்துக் காட்டும் திருக்கருகாவூர் தலத்தின் வரலாறு.

வேதிகை என்ற பெண்ணும், அவளது கணவன் நித்திருவரும், புத்திர பாக்கியம் வேண்டி, திருத்தல யாத்திரை மேற்கொண்டனர். காவிரிக்கு தெற்கே வெட்டாற்றங்கரையில் முல்லை வனத்தை அடைந்த போது, ஓர் இனிய அனுபவம் அவர்களுக்கு காத்திருந்தது. வேதிகை தான் கருவுற்றிருப்பதை உணர்ந்தாள்.

முல்லைவனநாதரின் கருணையால் கருவுற்ற சந்தோஷத்தில், மேலும் சில நாட்கள் அங்கேயே தங்க எண்ணினர்.

ஒருநாள்... கடுமையான வெயில்காலம். கருவுற்றிருந்த வேதிகை, வீட்டில் களைப்பாகப் படுத்திருந்தாள்.

நித்திருவர் வெளியே சென்றிருந்தார். அந்த நேரம் ஊர்த்துவ பாதர் என்ற முனிவர் அவர்கள் இல்லத்தைச் சென்றடைந்தார்.

மயக்கமுற்ற நிலையிலிருந்த அந்தப் பேதை, மாமுனிவர் வருகையை கவனிக்கவில்லை. அவரை உபசரிக்கும் நிலையிலும் அவள் அப்போது இல்லை. சினங்கொண்டார் முனிவர். தன்னை வேதிகை அவமதித்து விட்டதாகவே கருதினார். இறைவன் திருவருளால் உருவான *‘கரு’* சிதைந்து போகுமாறு, கொடிய சாபமிட்டார். அவருடைய கோபம் உடனே பலித்தது.வேதிகையின் கர்ப்பம் சிதைந்தது.

நித்திருவர் திரும்பி வந்ததும், நடந்த சம்பவத்தை அறிந்து மனம் நொந்தார். வெகு நாட்கள் காத்திருந்து, மனைவி கருவுற்ற மகிழ்ச்சியில் இருந்த அவருக்கு, இது அதிர்ச்சி மிகுந்த துயரை அளித்தது.

*‘திக்கற்றவருக்கு தெய்வமே துணை என்பர். உன்னுடைய திருத்தலத்தில் இப்படி ஓர் இக்கட்டான சூழ்நிலை உருவாகிவிட்டதே ! அன்னையே, நீதான் வேதிகை வயிற்றில் சிதைந்துள்ள கருவைக் காத்திட வேண்டும்’* என்று தம்பதிகள் மனமுருக வேண்டினார்கள்.

Ⓜ *குடத்திலிட்டு காத்திட்டாள்:*Ⓜ

வேண்டுதல் வீண்போகவில்லை. வேதிகையின் கருவைக் காத்திட திருவுளம் கொண்டாள் அன்னை. சிதைந்திருந்த கருவை ஒரு குடத்திலிட்டு, ஒன்று சேர்த்து, ஒன்பது மாதங்களும் பாதுகாத்து, நன்கு வளரச் செய்து, ஒரு அழகிய ஆண் குழந்தையாகவே அவர்களிடம் தந்தாள் அன்னை. நித்திருவரும் வேதிகையும் அடைந்த ஆனந்தத்திற்கு எல்லையே இல்லை !

இறையருளால் பிறந்த அந்த சிசுவுக்கு பாலூட்ட, காமதேனுவே அங்கு வந்தது. தன் குளம்புகளால் கீறி, ஒரு பால் குளத்தையே உருவாக்கியது. *‘க்ஷீர குண்டம்’* என்று அழைக்கப்படும் அந்தக் குளம், கோயிலின் எதிரில் உள்ளது.

🅱 *கருணை தொடர்ந்திட...*🅱

*‘எனக்குக் கருணை காட்டியது போல், இனி வருங்காலத்தில், மக்கட்பேறு வேண்டி உன் திருத்தலம் வருவோருக்கும், கருத்தரித்த பெண்கள் நல்லபடியாக குழந்தை பெற்றிடவும் அருள்புரிய வேண்டும். கருகாத்த நாயகியே ! உன்னை நம்பி வருவோர் நலம் காத்திட வேண்டும்’* என்று அன்னையிடம் வரம் கோரினாள் வேதிகை.

அவளது உயர்ந்த பண்பைப் பாராட்டிய அன்னை கர்ப்பரட்சாம்பிகை, பல அற்புதங்களை இன்றும் நிகழ்த்தி வருகிறாள்.

*பிறவிப்பிணி தீர்த்திடும் மருந்தீஸ்வரனாக முல்லைவனநாதரும், புற்று வடிவில் சுயம்புத் திருமேனியாக அருள்பாலிக்கிறார்.*

மருத்துவத்துறையில் *‘கற்பனைக்கு எட்டாத அதிசயம்’* என்று புகழப்படும் *‘சோதனைக்குழாய் குழந்தை’* என்ற அறிவியல் கண்டுபிடிப்பு, ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருக்கருகாவூர் திருத்தலத்தில் இப்படி நிகழ்ந்திருக்கிறது.

Ⓜ *படிகளை மெழுகி !*Ⓜ

திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை வரம் கிட்டாத தம்பதிகள் இங்கு வந்து, அன்னையின் கருவறைப் படிகளை நெய்யினால் மெழுகி, அன்னையின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜிக்கப்பட்ட நெய்யை கணவன் - மனைவி இருவருமே தொடர்ந்து 48 நாட்கள் இரவில் சாப்பிட்டு வர, விரைவில் கருத்தரிக்கும். மாதவிலக்கு சமயத்தில் மட்டும் ஐந்து நாட்கள் இந்தப் புனித நெய்யை உட்கொள்ளக் கூடாது.

{ நேரில் வர இயலாதவர்களுக்கு தபால் மூலமும் இதை அனுப்பி வைக்கிறார்கள்.}

🅱 *சுகப்பிரசவம் ஆக !*🅱

இந்தத் தலத்து அன்னையின் கருணையுடன் வழங்கப்படும் எண்ணெயை பிரசவத்திற்காகக் காத்திருக்கும் பெண்களின் வயிற்றில் தடவி வர, அவர்கள் அறுவை சிகிச்சை ஏதுமின்றி, சுகப் பிரசவமாக குழந்தையைப் பெற்றெடுக்கிறார்கள் ! இங்கு வழங்கப்படும் விளக்கெண்ணெயை அன்னையின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜித்து, அதை அடிவயிற்றில் தடவிக்கொள்ள வேண்டும். அசாதாரண வலி வரும் சமயங்களில் இதைத் தடவினால், வலி நிற்கும். குறிப்பாக, பிரசவ காலம் நெருங்கும் சமயத்தில், அன்னையை வேண்டிக்கொண்டு இப்படித் தடவி வருவது சுகப்பிரசவத்துக்கு வகை செய்யும்.

Ⓜ *முல்லைவனநாதர்:*Ⓜ

*முல்லைக் கொடிகளுக்கிடையே புற்றுமண்ணில் தானே தோன்றிய சிவலிங்கத் திருமேனியாக, முல்லைவனநாதர் அருள்பாலிக்கிறார். மாதவி வனேஸ்வரர், கர்ப்பபுரீஸ்வரர் என்றும் அவருக்குப் பெயர்கள் உண்டு.*

புற்றுமண்ணாகத் தோன்றிய சிவலிங்கத் திருமேனியில், முல்லைக் கொடிகள் சுற்றி வளைத்த தழும்பையும் காணலாம். இவருக்கு அபிஷேகம் செய்வதில்லை. *‘புனுகுச் சட்டம்’* மட்டுமே சாத்தப் படுகிறது.

வளர்பிறை பிரதோஷ நாட்களில் இவருக்கு புனுகு சார்த்தி வணங்கினால், தீராத நோய்களும் தீர்ந்துவிடும் என்று நம்பிக்கை.

🅱 *தங்கத்தொட்டிலில்...*🅱

இந்தத் தலத்தில் வழிபடு வோருக்கு குறைப்பிரசவம் ஏற்படுவதில்லை. பிரசவ கால வேதனையும் மிகுதியாவதில்லை. அன்னையின் அருளால் சுகப்பிரசவம் ஆகி, தாயும் குழந்தையுமாக இங்கு வந்து, அன்னையின் சந்நிதியில் தங்கள் குலக் கொழுந்தை, *‘தங்கத் தொட்டிலில்’* கிடத்தி சீராட்டி, அன்னையை வலம் வரும் ஆனந்தக் காட்சி நெகிழ வைப்பது.

பிற மதத்தினரும்கூட இங்கு கூடுவதைக் காண முடிகிறது ! எந்நாட்டவர்க்கும் எம்மதத் தினருக்கும், ஏன், இந்த மனித குலத்திற்கே சொந்தமானவள் அன்னை.

கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில் (ஆவூர் - மெலட்டூர் வழி) 20 கி.மீ. தொலைவில் உள்ளது, திருக்கருகாவூர்.

தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம், சாலியமங்கலம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் நிறைய உள்ளன.

காலை 5.30 மணி முதல் பகல் 12.30 வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

நேரில் வரமுடியாதோர், அஞ்சல் மூலம் (செயல் அலுவலர், அருள்மிகு முல்லைவனநாத சுவாமி திருக்கோயில், திருக்கருகாவூர் - 614 302. தொலைபேசி: 04374 - 273423) காணிக்கை செலுத்தி அன்னையை வேண்டிக் கொள்கிறார்கள்.

பெற்ற அன்னையை விட பரிவோடு பேறுகால மகளை அணைத்துக் காத்திடும், அம்பிகையின் கருணைக்கு தான் எல்லை ஏது ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக