பங்குனி உத்திரம்
பங்குனி உத்தரம் என்பது சைவக் கடவுளாகிய முருகனுக்குரிய சிறப்பு விரத தினமாகக் கொண்டாடப்படுகிறது. இது பங்குனி மாதத்தில் வரும் உத்தர நட்சத்திர தினமாகும். தமிழ் மாதங்களில் 12ம் மாதம் பங்குனி. நட்சத்திரங்களில் 12ம் நட்சத்திரம் உத்தரம். எனவே 12 கை
வேலவனுக்குச் சிறப்பான தினமாகக் கொண்டாடப்படுகிறது. அநேகமான முருகன் கோயில்களில் இத்தினத்தில் வருடாந்த திருவிழாக்கள் (மஹோற்சவம்) நடைபெறும்.
மீனாட்சி கல்யாணம்
சிவனுக்கும் பார்வதிக்கும் சோமசுந்தரர் என்றும் மீனாட்சி என்றும் நாமம் கொடுத்து மணம் செய்வித்த நாளும் பங்குனி உத்தர நாளாகும். சிவனின் மோன நிலையைக் கலைத்த மன்மதனை எரித்ததால் கலங்கி நின்ற தேவர்களுக்கு ஆறுதல் வார்த்தையாக சிவன் தேவியை இத்தினத்தில் மணந்தார் என்பது ஐதீகம்.
இத்தினத்தில் சிவனுக்கும் பார்வதிக்கும் ஆடை அணிகளால் அழகுசெய்து மணவறையில் அமர்த்தி வாத்தியங்கள் முழங்க, வேதங்கள் ஓதி, ஹோமம் வளர்த்து, தோத்திரங்கள் கூறி, தாலி கட்டி, வாழ்த்துக்கள் கூறி, அலங்கரித்த பல்லக்கில் இருவரையும் ஊர்வலமாகக் கொண்டு சென்று பள்ளியறைக்கு அனுப்பி வைப்பார்கள்.
பங்குனி உத்தரக் கல்யாணத் திருவிழா
பசுவாகிய ஆன்மா பதியாகிய சிவத்துடன் இணைவதாக ஓர் உயர்ந்த நிலையினை எடுத்துக்காட்டுகின்றது. இத்தினத்தில் அம்மையப்பனைக் குறித்து சைவர்கள் விரதமிருப்பர். பகற்பொழுது உணவு உட்கொள்ளாது, இரவில் பால், பழம் போன்ற உணவு வகைகளை உட்கொண்டு, விரதம் அனுஷ்டிப்பர். இதனைக்
கல்யாணசுந்தர விரதம் என்றும் அழைப்பர்.
சிறப்பு
இத்தினத்தில் பார்வதியை, பரமேஸ்வரன் மணந்தார். ராமன், சீதையை கரம் பிடித்தார். மேலும் முருகன், தெய்வானையை கரம் பிடித்தார். திருவரங்கநாதர், ஸ்ரீ ஆண்டாள் முதலிய தெய்வ திருமணங்கள் பலவும் பங்குனி உத்திரத்தன்று தான் நடைபெற்றன. இதனால் பங்குனி உத்திர விரதம் திருமண விரதம் என்றும், கல்யாண விரதம் என்றும் போற்றப்படுகிறது.
இளைஞர்களும், கன்னிகளும் இத்தினத்தில் சிவனையும், முருகனையும் திருமணக் கோலத்தில் வணங்கி வழிபட்டால், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என நம்பப்படுகிறது. [1]
அசுரனை வீழ்த்திய நாள்
பங்குனி மாதத்தில் தான் அசுரர்களின் கொட்டத்தை அடக்க முருகப்பெருமான், தன் தாய், தந்தையரை வணங்கி பயணத்தை ஆரம்பித்தார். அப்போது, வழியில் ஒரு சிறிய மலை முருகனின் படைகளை வழி மறிக்கும் விதமாக பெரிதாக வளர ஆரம்பித்தது. அதற்கு காரணம் இந்த மலையாகவுள்ள கிரவுஞ்சன் ஆகும். அகத்திய முனிவரின் சாபத்தால், அசையாமல் மலையாகி நின்றாலும், இருந்த இடத்தில் இருந்து கொண்டே தன்னை கடந்து செல்பவர்களை ஏமாற்றி தொல்லை தந்து கொண்டிருக்கிறது என்று நாரதர் கூறுகிறார். மேலும் இந்த மலைக்கு அருகில் உள்ள மாயாபுரிப்பட்டினம் என்னும் நகரில், சூரபத்மனின் தம்பியும், யானை முகம் கொண்டவனுமான தாரகாசுரன் ஆட்சி செய்து கொண்டு, தேவர்களை மிகுந்த துன்பங்களுக்கு உள்ளாக்கி வருகின்றான் என்ற தகவலையும் நாரதர் கூறுகிறார்.
அதை கேட்ட முருகப்பெருமான், தன் தளபதி வீரபாகுவிடம் படையில் பாதியை அழைத்து கொண்டுபோய், தாரகாசுரனை அழித்து விட்டு வரும்படி கட்டளையிட்டார். இதை அறிந்த தாரகாசுரனும் பெரும்படையுடன் எதிர்த்து வந்தான். கடும் போர் நடந்தது. இருபக்கத்திலும் வீரர்கள் இறந்து விழுந்தனர். போர்க்களத்தில் நின்று யுத்தம் செய்த தாரகாசுரன், முருகப்படையின் வீரரான, வீரகேசரியை தன் கதாயுதத்தால் மார்பில் அடித்து சாய்த்தான். இதை கண்ட வீரபாகு வெகுண்டெழுந்து, தாரகாசுரனை கடுமையாக தாக்கினான். இதனால் கோபம் கொண்ட தாரகாசுரன் திரிசூலத்தால் வீரபாகுவின் மார்பில் குத்திச் சாய்த்தான். மயக்கம் கலைந்து எழுந்த வீரபாகு, மீண்டும் மூர்க்கத் தனமாக தாக்கினான்.
எதிர் தாக்குதல் நடத்த முடியாமல் தாரகாசுரன் தன் மாய வேலைகள் மூலம் எலியாக மாறி கிரவுஞ்ச மலைக்குள் சென்றான். வீரபாகுவும் அவனை தொடர்ந்த மற்ற வீரர்களும் விடாது மலைக்குள் நுழைய, மலையின் உதவியோடு தாரகாசுரனின் அசுரப்படைகள் முருகப்பெருமானின் படைகளை பெரிய அளவில் தாக்கி அழித்தன. இதை நாரதர் மூலம் அறிந்த முருகப்பெருமான், நேரடியாக போர்க் களத்திற்கு வந்தார். கோபம் கொண்ட முருகப்பெருமான் அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார்.
தாக்குதலை சமாளிக்க முடியாமல் மீண்டும் எலியாக மாறி மலைக்குள் நுழைந்து மாய வேலைகளை காட்ட ஆரம்பித்தான். முருகப்பெருமான், தன் வேலாயு தத்தை கையில் எடுத்து வீசி எறிந்தார். துள்ளி வந்த வேல், மலையை பல கூறுகளாக்கி உடைத்தெறிந்து, தாரகாசுரனை கொன்றது. அதன் பிறகு முருகப்பெருமான், தெய்வானையை மணந்தார். அந்த நாளே பங்குனி உத்திரமாகும்.
பங்குனி உத்தரம்
அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடான திருவாவினன்குடி அமைந்து இருக்கும் பழனியில் பங்குனி
மாதம் உத்தரம் நட்சத்திர திதியில் நடைபெறும் விழா பங்குனி உத்தரம் ஆகும். அனைத்து அறுபடைவீடுகளில்
பங்குனி உத்தரம் வீழா நடைபெற்றாலும், பழனியில் நடைபெறும் பங்குனி உத்தரம்
திருவிழாவும் , தேரோட்டமும் , சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும்.
திண்டுக்கல் மாவட்டமும் , அதைச்சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து, சைவ சமயத்தவர்கள்,
ஈரோடு மாவட்டம், கொடுமுடிக்குச் சென்று காவிரி நதியில் தீர்த்தம் (புனித நீர்) கொண்டுவந்து, பழனியில் போகரால் நிறுவப்பட்ட நவபாசாண முருகனுக்கு செலுத்துவார்கள். பங்குனியில் வெயில் கடுமையாக இருக்கும், நவபாசாணத்தால் ஆன முருகன் சிலை வெப்பத்தால் சிதைந்து போகாமல் இருக்க மூலிகைகள் கலந்த காவிரி நதியின் நீரால் குளிர்விப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திருவிழா பங்குனி உத்தரம் திருவிழா.
பெருமைமிகு பங்குனி உத்திரம்
பங்குனி உத்திரம் இறைவழிபாட்டிற்கு மிகவும் சிறப்பான நாளாகும். திருமணமாகாத இரு பாலாரும் இந்நாளில் விரதமிருந்து வழிபடின் திருமணப்பேறு கிட்டும். புராணங்களிலே பங்குனி உத்திரத்தில் நிகழ்ந்த சிறப்புகள் பற்றி விவரிக்கப்படுகின்றது ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவதும், விரதம் இருப்பதும் வழக்கம். அதில் பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு அதிக மகத்துவம் உண்டு. இந்தத் திருநாளில்தான் மிக அதிகமான தெய்வத் திருமணங்கள் நடைபெற்றுள்ளதாகப் புராணங்கள் கூறுகின்றன.
12வது மாதமான பங்குனியில், 12வது நட்சத்திரமான உத்திரம் இடம்பெறும் புனிதநாள்தான் பங்குனி உத்திரம். வளமான பலன்களைத் தரும் விரதங்களுள் பங்குனி உத்திர விரதமும் ஒன்று. இந்த விரதத்தை கல்யாண விரதம், திருமண விரதம் என்றும் கூறுவார்கள். உத்திர நட்சத்திர நாயகன், அதாவது, அதிபதி சூரியன். அதே நாளில் பௌர்ணமி நிலவும் பொருந்தும்போது சூரியன், சந்திரனால் இரட்டைச் சிறப்புகள் கிடைக்கின்றன. சிவபெருமான் அன்னை பார்வதியோடு மணக்கோலத்தில் சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மதுரையில் காட்சி தந்தருளிய திருநாள் இதுதான்.
அன்னை மீனாட்சியைத் திருமணம் செய்து மீனாட்சி சுந்தரேஸ்வரராகக் காட்சி தந்ததும் இந்நாளில்தான். ஆண்டு தோறும் மதுரையில் இத்திருமண விழாவை பங்குனி உத்திரத்தன்று சிறப்பாக நடத்துகின்றனர். சிவனின் தவத்தைக் கலைத்ததால் இறைவனின் நெற்றிக் கண்ணால் மன்மதன் எரிக்கப்பட்டான். ரதியின் வேண்டுதலால் மீண்டும் மன்மதன் உயிர் பெற்ற நாளும் இதுதான். முருகக் கடவுள் தெய்வானையை இந்த நாளில் தான் மணம் புரிந்துகொண்டார். மீனாட்சி- சுந்தரேஸ்வரர் ; பார்வதி-பரமேஸ்வரர்; சீதாதேவி-ஸ்ரீராமர்; இந்திராணி-தேவேந்திரன்; இருபத்தேழு நட்சத்திரங்கள்-சந்திரன் ஆகிய திருமணங்கள் நடந்தேறியது இந்த பங்கு உத்திரத்தன்றுதான்.
நம்பியின் மகளாக ஸ்ரீவள்ளி அவதரித்தது; மஹாலட்சுமி நாராயணனின் மார்பில் அமர்ந்தது; சரஸ்வதி பிரம்ம தேவனின் வாக்கில் அமர்ந்தது போன்ற நிகழ்வுகள் நடைபெற்றதும் பங்குனி உத்திர தினத்தன்றுதான். துர்வாச முனிவர் வந்து கொண்டிருக்கிறார். கோபத்திற்குப் பெயர் போனவர். ஆனால், இன்றோ மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் போல் இருக்கிறது. அவரது திருக்கரத்தில் ஒளிவீசும் ஒரு அழகிய மலர் மாலை இருக்கிறது. அதனை மிகவும் பெருமையுடனும் பக்தியுடனும் ஏந்திக் கொண்டு வருகிறார். அப்போது அந்த வழியாகத் தேவர்களின் தலைவனான இந்திரன் தன் ஐராவதம் என்னும் யானையில் ஏறிக் கொண்டு பவனி வருகிறான்.
தேவர்களின் தலைவனான தன்னைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுவதைக் கேட்கக் கேட்க மிக்கப் பெருமிதம் அவன் முகத்தில் தெரிகிறது. துர்வாச முனிவர் இந்திரனின் முன்னால் சென்று ‘தேவேந்திரா. உன் புகழ் எல்லா உலகங்களிலும் நிறைந்து இருக்கிறது. இப்போது அன்னை மகாலக்ஷ்மியைத் தரிசித்துவிட்டு அவர் அன்போடு அளித்த இந்த மலர் மாலையுடன் வந்து கொண்டிருக்கிறேன். அன்னை கொடுத்த இந்த பிரசாதத்தை ஏற்றுக் கொள்ள தேவர்களின் தலைவனான உனக்குதான் உரிமை இருக்கிறது. இதோ வாங்கிக் கொள்’ என்று சொன்னார்.
தேவர்களின் தலைவனான தான்கேவலம் இன்னொரு தெய்வம் கொடுத்த மலர் மாலையை பிரசாதம் என்று வணங்கி வாங்கிக் கொள்வதா என்ற எண்ணம் அவனுக்கு. ஆனாலும்? கொடுப்பவர் துர்வாசர் என்பதால் ஒன்றும் பேசாமல் வாங்கிக் கொண்டு அலட்சியமாக தன் கையால் தொடாமல் அங்குசத்தால் ஏந்தி யானையின் தலைமீது போட்டான். யானையோ அவனுக்கும் மேல் அலட்சியமாக இருந்தது. ஆமாம், தன் தலையில் வைக்கப்பட்ட மலர் மாலையை உடனே தும்பிக்கையால் எடுத்துத் தன் கால்களின் கீழே போட்டு மிதித்துத் துவைத்துவிட்டது.
அன்னையின் பிரசாதத்திற்கு ஏற்பட்ட அவமரியாதையைக் கண்டதும் வழக்கம் போல் துர்வாசருக்குக் கோபம் வந்து விட்டது. ‘தேவேந்திரா, தேவர்களின் தலைவன், இத்தனைச் செல்வங்களின் தலைவன் என்ற மமதை, அகில உலகங்களுக்கும் அன்னையான மகாலக்ஷ்மியின் பிரசாதத்தையே அவமதிக்கும் அளவுக்கு உன்னைக் கொண்டுவிட்டிருக்கிறது. எந்த செல்வம் இருப்பதால் இந்த விதமாய் நீ நடந்து கொண்டாயோ அந்த செல்வங்கள் அனைத்தும் அழிந்து போகட்டும்’ என்று சாபம் கொடுத்தார். துர்வாச முனிவரின் சாபத்தின்படி இந்திர லோகத்தில் இருந்த எல்லா செல்வங்களும் பாற்கடலில் வீழ்ந்துவிட்டன.
அன்னை லக்ஷ்மியும் பாற்கடலில் மறைந்தாள். தேவர்கள் பதறிப்போனார்கள். உடனே எல்லோரும் பாற்கடலில் பள்ளி கொண்டவனைப் போய் வணங்கினார்கள். இறைவனின் கட்டளைப்படி அசுரர்களின் உதவியோடு பாற்கடலைக் கடையத் துவங்கினார்கள். மந்தார மலையை மத்தாகவும் வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகவும் கொண்டு அசுரர்கள் ஒரு பக்கமாகவும் தேவர்கள் ஒரு பக்கமாகவும் பாற்கடலைக் கடைந்து கொண்டிருக்கின்றனர். நாட்கள் பல சென்று விட்டன. அழிந்து போன செல்வங்கள் திரும்பி வருவதைப் போல் தெரியவில்லை. ஆனால், திடீரென்று வெப்பம் அதிகமாகிவிட்டது.
பாற்கடலில் இருந்து ஆலமென்னும் விஷம் வெளிவருகிறது. அதே நேரத்தில் வாசுகிப் பாம்பும் உடல்வலி தாங்காமல் விஷத்தைக் கக்குகிறது. இரண்டு விஷமும் சேர்ந்து கொண்டு ஆலகாலமாகி எல்லா உலகையும் அழித்துவிடும் போல் இருக்கிறது. உலகங்களின் துன்பத்தைக் கண்டு பொறுக்காத கருணா மூர்த்தியாகிய மகேசன் உடனே அந்த ஆலகாலத்தை கையினில் ஏந்தி விழுங்கிவிட்டார். காலகாலனாகிய அவரை எந்த விஷம் என்ன செய்ய முடியும்? ஆனாலும் அன்னை பார்வதியால் அதனைப் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடியவில்லை. அண்ணல் உண்ட விஷம் கழுத்திலேயே தங்கிவிடும்படி அவரின் கழுத்தில் கையை வைத்தாள்.
விஷம் அங்கேயே நின்றது. விஷத்தின் வலிமையால் அண்ணலின் கழுத்து நீல நிறம் பெற்றது. அண்ணலும் ‘நீலகண்டன்’ என்ற திருப்பெயரைப் பெற்றார். இன்னும் சில நாட்கள் சென்றன. எல்லா செல்வங்களும் ஒவ்வொன்றாக பாற்கடலில் இருந்து வெளிவரத் தொடங்கின. அன்னை மகாலக்ஷ்மியும் பாற்கடலில் இருந்து தோன்றினாள். அலைமகள் என்ற திருநாமத்தை அடைந்தாள். அப்படி அன்னை பாற்கடலில் இருந்து தோன்றிய பெருமை மிக்க திருநாள் பங்குனி உத்திரத் திருநாள். அன்னை பாற்கடலில் இருந்து தோன்றும் போதே கையில் ஒரு மலர் மாலையை ஏந்திக் கொண்டு தோன்றினாள்.
அதனை நேரே சென்று தன் கணவனாகிய திருமாலின் கழுத்தினில் இட்டாள். அதனால் பங்குனி உத்திரத் திருநாள் அன்னை மகாலக்ஷ்மியின் அவதார நாள் மட்டுமன்றி திருமண நாளாகவும் கொண்டாடப்படுகிறது. கங்கையினும் புனிதமான காவிரியின் நடுவில் உள்ள பூலோக வைகுண்டமாம் திருவரங்க நகரத்தில் பாம்பணையில் பள்ளி கொண்ட பெரிய பெருமாள் திருவரங்க நாதன் திருவரங்கநாயகித் தாயாருடன் சேர்த்தித் திருக்கோலத்தில் அமர்ந்து காட்சி தருவது இந்த உன்னதமான திருநாளில்தான். வருடத்தில் வேறு எந்த நாளிலும் இந்த திவ்ய தரிசனம் கிடைக்காது.
அண்ணலும் தாயாரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் இந்தத் திருக்கோத்தைத் தரிசிப்பவர் நினைப்பதெல்லாம் நடக்கும் என்பது காலம் காலமாய் வரும் நம்பிக்கை. இந்நாளில் மற்ற வைணவ ஆலயங்களிலும் மணக்கோலத்தில் தாயாரும் பெருமாளும் காட்சி தருவார்கள். அன்று காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் பெருந்தேவித் தாயார் சந்நதியில் ஸ்ரீதேவி, பூதேவி, மலையாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவித் தாயார் சகிதமாக வரதராஜர் காட்சி தருவார். காஞ்சியில் காமாட்சி ஏகாம்பரரேஸ்வரர் திருமண விழா நடைபெறும் போது, அதே மண்டபத்தில் ஏராளமானோர் திருமணம் செய்து கொள்வார்கள், மதுரையைப்போலவே.தேவேந்திரன்- இந்திராணி, நான்முகன்-கலைவாணி ஆகியோரின் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் நடைபெற்றன.
ஸ்ரீராமன்-சீதை, லட்சுமணன்-ஊர்மிளை, பரதன்-மாண்டவி, சத்ருக்னன்-ஸ்ருதகீர்த்தி என்று தசரத மைந்தர்கள் திருமணங்களும் பங்குனி உத்திரத்தன்றுதான் ஒரே மேடையில் மிதிலையில் நடைபெற்றன. இதே பங்குனித் திருநாளில்தான் வடநாட்டில் ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். பங்குனி உத்திரத்தன்று சில கோயில்களில் தீர்த்தவாரியும் நடைபெறும். அப்போது அந்த தலங்களில் உள்ள கடல், ஏரி, ஆறு, குளம், கிணறு போன்றவற்றில் புனித நீராடினால் புண்ணியம் கிடைக்கும். பங்குனி உத்திரத்தன்று கன்னிப் பெண்கள் கல்யாண விரதம் கடைப்பிடித்து, அருகே உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களைத் தரிசித்தால் அவர்களுக்கும் கல்யாண வைபோகம்தான்.
அதுபோல திருமழபாடியில் நந்தி கல்யாணம் கண்டால் முந்திக் கல்யாணம்தான். பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம். காரைக்கால் அம்மையார் முக்தியடைந்த தினமும் பங்குனி உத்திரம்தான். அன்று தண்ணீர்ப் பந்தல் வைத்து நீர்மோர் தானம் தருவது மிகவும் புண்ணியம். 48 ஆண்டுகள் பங்குனி உத்திர விரதம் இருந்தவர்களின் மறுபிறவி தெய்வப் பிறவியாக அமையும்.
இந்தத் திருநாளில் லோபாமுத்திரை அகத்திய முனிவரையும்; பூரணா-பூஷ்பாகலா ஐயப்பனையும்; ரதி மன்மதனையும் கல்யாணம் செய்து கொண்டனர் என்று கந்தபுராணம் கூறுகிறது. வைஷ்ணவ சம்ப்ரதாயத்தை நிலைநாட்டிய இளையபெருமாளாகிய ராமானுஜமுனி ஒரு முறை பங்குனி உத்திர மண்டபத்தில் இப்படி பெரிய பிராட்டியும் பெரிய பெருமாளும் சேர்ந்து காட்சி தரும் போதுதான் கத்ய த்ரயம் (சரணாகதி கத்யம், வைகுண்ட கத்யம், ஸ்ரீரங்க கத்யம்) என்னும் மூன்று வடமொழி வசன கவிதைகளைப் பாடிச் சமர்ப்பித்தார். சரணாகதி கத்யத்தைச் சமர்ப்பித்தபோது அரங்கன் அவருடைய சரணாகதியை ஏற்றுக் கொண்டு திருவாய் மலர்ந்தருளினான் என்றும் தாயார் அவரை உபய வீபூதிகளுக்கும் (கீழுலகம், மேலுலகம்) உடையவராய் நியமித்தார் என்றும் ஐதீகம்.
அன்றிலிருந்து ராமானுஜர் ‘உடையவர்’ என்ற திருநாமத்தாலும் அழைக்கப்படுகிறார். கோதை பிறந்த ஊராம் ஸ்ரீவில்லிபுத்தூரில் பங்குனிப் பெருவிழாவின் உச்சகட்டமாக அமைவது பங்குனி உத்திரத் திருநாளில் சுவாமி ரெங்க மன்னார் ஆண்டாளின் திருக்கரங்களைப் பற்றும் திருக்கல்யாண மகோற்சவம். கோதை நாச்சியாரும் ரெங்கமன்னாரும் மகிழ்ந்திருக்கும் வேளையில்,
கோதை பிறந்த ஊர் கோவிந்த வாழும் ஊர்
சோதி மணி மாடம் தோன்றும் ஊர் நீதிசால்
நல்ல பக்தர் வாழும் ஊர் நான்மறைகள் ஓதும் ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோனூர் என்று துதித்து மகிழ்வோம்.
மதுரை வாழ் சௌராஷ்ட்ரப் பெருமக்களால் தங்கள் குலதெய்வமாகப் போற்றி வணங்கப்படும் தெற்கு கிருஷ்ணன் கோயில் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் பத்து நாட்கள் பங்குனி பிரம்மோற்சவம் கண்டு தீர்த்தவாரிக்காக குதிரை வாகனத்தில் ஏறி வைகை ஆற்றில் இறங்கும் புனித நன்னாளும் பங்குனி உத்திரத் திருநாளே. மஹிஷியின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. அவள் வாங்கிய வரத்தின்படி சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த மகனால்தான் தனக்கு அழிவு. ஆனால், ஆணும் ஆணும் சேர்ந்து பிள்ளை எப்படி பிறக்கும்? அது நடக்காத விஷயமாதலால் அவள் தன்னை அழிக்க யாருமில்லை என்று எண்ணிக் கொண்டு அளவில்லாத அட்டூழியங்கள் செய்து கொண்டிருக்கிறாள்.
பாற்கடலில் தோன்றிய அமுதத்தை தேவர்களுக்குக் கொடுப்பதற்காக விஷ்ணு மோகினியாக அவதாரம் எடுத்த போது மஹிஷி பெற்ற வரம் வேலை செய்ய தொடங்கியது. மோகினிதேவியும் சிவபெருமானும் இணைந்ததால் ஹரிஹரசுதனான ஐயன் ஐயப்பன் பிறந்தான். மோகினிசுதன் பிறந்த தினம் பங்குனி உத்திரமாகிய திவ்வியத் திருநாள். சூரபதுமனும் அவன் தம்பியரும் செய்யும் தொல்லைகள் அளவிட முடியாமல் போய்விட்டன. சிவகுமாரனாலேயே தனக்கு அழிவு வரவேண்டும் என்று வரம் பெற்றதாலும் சிவபெருமான் காலகாலமாக அப்போது தவத்தில் மூழ்கி இருந்ததாலும் தனக்கு தற்போதைக்கு அழிவு இல்லை என்றெண்ணி அட்டகாசம் செய்து கொண்டிருக்கிறான் சூரன்.
அன்னை தாக்ஷாயிணி இமயமலைக்கரசன் மகளாய் பர்வத ராஜகுமாரியாய் பார்வதியாய் தோன்றி சிவபெருமானை மணக்க தவம் செய்து கொண்டிருக்கிறாள். சிவபெருமானோ அன்னை தாக்ஷாயிணியைப் பிரிந்ததால் மனம் வருந்தி யோகத்தில் நிலை நின்று விட்டார். சூரனின் அழிவு நேர வேண்டுமாயின் அன்னை பார்வதியை ஐயன் மணக்கவேண்டும். அதற்காக தேவர்களின் தூண்டுதலின் படி காமன் தன் கணைகளை ஐயன் மேல் ஏவி அவரின் நெற்றிக் கண்ணால் சுடப்பட்டு அழிந்தான். ஆனால், காமன் கணைகள் தம் வேலையைச் செய்தன. காமேஸ்வரன் அன்னை பார்வதியை மணக்க சம்மதித்துவிட்டார்.
ரதிதேவியின் வேண்டுகோளுக்கிணங்க மன்மதனும் உயிர் பெற்று எழுந்து ஆனால் உருவம் இல்லாமல் அனங்கன் ஆனான். அன்னையும் அண்ணலும் திருமணம் செய்து கொண்ட நன்னாள் பங்குனி உத்திரத் திருநாள். அதனால் இன்றும் பல சிவாலயங்களில் திருமண வைபவம் பங்குனி உத்திரத்தன்று நடைபெறுகிறது.தைப்பூசம், கந்தர் சஷ்டி, திருக்கார்த்திகை, வைகாசி விசாகம் என்பன போல் பங்குனி உத்திரம் என்றாலே அது முருகன் கோயில் திருவிழா நாள் என்று தான் எல்லோருக்கும் உடனே தோன்றுவது. எங்கெல்லாம் முருகன் கோயில் கொண்டுள்ளானோ அங்கெல்லாம் பங்குனி உத்திரம் தவறாமல் கொண்டாடப்படுவதால் பங்குனி உத்திரம் என்றாலே குமரக்கடவுளின் நினைவுதான் நமக்கு வருகிறது.
பங்குனி உத்திரத்தின் மகிமை
மாதந்தோறும் உத்திர நட்சத்திரம் வந்தாலும், பங்குனி மாதத்தில் வரும் உத்திரத்திற்கு அதிக மகிமைகள் உண்டு.
நாம் எவ்வாறு ஒரு சுப காரியத்தைச் செய்யும் போது நாள் நட்சத்திரம் பார்த்து செய்கிறோமோ அதுபோலத்தான் தெய்வங்களும் அவர்களது திருமணங்களை நல்ல நாட்களில் நடத்தி இருப்பர்.
அதன்படி, உத்திரத்திற்கு தெய்வங்களே சிறந்த நட்சத்திரம் என்று தேர்வு செய்த பெருமை உண்டு. அதாவது பார்வதி - பரமேஸ்வரன், தெய்வயானை- முருகன், ஆண்டாள் - ரங்க மன்னார், மீனாட்சி சுந்தரேஸ்வரர் என் பல தெய்வத் தம்பதிகளின் திருமணங்கள் இந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரத்தில்தான் நடந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன.
இதைவிடச் சிறப்பான மற்றொரு விஷயம், ராமாயணத்தில் வரும் தசரதச் சக்ரவர்த்தியின் நான்கு புதல்வர்களும் பங்குனி உத்திரத்தில்தான் தங்களது திருமண வாழ்க்கையில் நுழைந்துள்ளனர்.
தெய்வங்களின் திருமணம் மட்டுமல்லாது, பல தெய்வ அவதாரங்களும் இந்த பங்குனி உத்திரத்தில் நடந்துள்ளது.
வள்ளியின் அவதாரமும், ஸ்ரீ ஐயப்பனின் அவதாரமும், அர்ஜ்ஜுனன் தோன்றியதும் இந்த நந்நாளில்தான்.
தெய்வங்களெல்லாம் தேர்ந்தெடுத்து சிறப்பித்த இந்த பங்குனி உத்திர நட்சத்திரத்தன்று விரதம் இருப்பதற்கும், அன்னதானம் வழங்குவதற்கும் உகந்த நாள் என்று கருதப்படுகிறது.
இந்த நந்நாளில் கோயில்களில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் :
பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்து மூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம், மதுரையில் மீனாட்சி திருமணம் என அன்று பல முக்கியக் கோயில்களிலும் திருவிழாக்கள் களை கட்டும்.
இவ்வளவு சிறப்பு மிக்க இந்த பங்குனி உத்திரத்திற்கு இந்த ஆண்டு மேலும் ஒரு சிறப்பாக அந்த நாளில் புனித வெள்ளி, ஹோலி, மிலாது நபி என அனைத்து மனத பண்டிகைகளையும் கொண்டுள்ளது. அதோடு அல்லாமல் அன்று பெளர்ணமியும் உள்ளது.
இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திர நாளில் ஆலயம் சென்று வழிபடுவோம். பக்தர்கள், எளியோருக்கு அன்னதானம் செய்து அவர்களது ஆசியைப் பெறுவோம்.
பங்குனி உத்திரம் பங்குனி மாதத்தில் உத்திர பல்குனி நட்சத்திரமும் பௌர்ணமியும் சேர்ந்து இருக்கும் நாளில் வருகிறது. தெய்வங்களின் திருமண நாளாக பங்குனி உத்திரம் அமைத்துள்ளது..
தெய்வத் திருமணங்கள் நிகழ்ந்த நாள்
சிவன் பார்வதி, முருகன் தெய்வானை (கந்த புராணம்), ராமர் சீதா (வால்மீகி ராமாயணம்), ஆண்டாள் ரெங்கமன்னார், நாராயணன் கோமளவல்லி நாச்சியார் ஆகியோரின் திருமணம் நடந்த நாளாகும். ஐயப்பனின் பிறந்த நாளாகும். எனவே ஐயப்ப ஜெயந்தி எனவும் அழைக்கப்படும்.
அன்னை மகாலட்சுமி பாற்கடலில் இருந்து தேவர்களும் அசுரர்களும் அமிருதம் கடையும் போது எழுந்தருளியதாக சொல்லப்பட்ட நாளும் இதே. அன்னை பார்வதி சிவனை காஞ்சிபுரத்தில் மணந்த நாள். ஆகையால் பங்குனி உத்திரத் திருநாளுக்கு கௌரி கல்யாணம் எனவும் பெயர் உண்டு.
இந்த நாளில் புனித தீர்த்தங்கள் எல்லாம் திருப்பதியில் உள்ள ஏழுபுனித தீர்த்தங்களில் ஒன்றான தும்புரு தீர்த்தத்தில் இணைவதாக ஸ்ரீமத் பாகவதம் சொல்லுகிறது.
பங்குனி உத்திரம் - முருக பக்தர்களுக்கு மகிழ்ச்சியான நாள்
பங்குனி உத்திரத்தை ஒரு பெரும் விழாவாக முருக பக்தர்கள் கொண்டாடுகிறார்கள். தத்தம் கோரிக்கைகளை நிறைவேற்ற விரதமிருந்து பாத யாத்திரை மேற்கொண்டு பழனியிலும் மற்ற முருகன் ஸ்தலங்களிலும் பக்தர்கள் குவிகிறார்கள். பக்தர்கள் பால்குடம், காவடி எடுப்பது போன்றவற்றின் மூலம் தங்கள் பக்தியை வெளிப்படுத்துகிறார்கள்.
பழனியின் தண்டாயுதபாணியும் வடபழனி முருகனும் விசேஷக் கோலம் கொண்டு அருட் காட்சி அளிக்கும் அற்புத நாளாகும் இது.
பங்குனி உத்திர நாளின் சிறப்பு
மேற் கூறிய செய்திகளே பங்குனி உத்திர நன்நாளின் சிறப்பை எடுத்து கூறும் விதமாக உள்ளன. தேவ தேவியரின் திருமண வைபவம் மனதை கவருபவை மட்டும் அல்ல. திருமணம் நடந்த நாளுக்கு சிறப்பு சேர்ப்பவை. ஏனெனில் அவை தெய்வத் திருமணங்கள். அன்றைய நாளில் தெய்வங்களை தொழுதால் நம் திருமண வாழ்க்கை இனிக்கும் என்பது நிச்சயமே. திருமணமாகதவர்களுக்கு நல்ல மணவாழ்க்கை அமையும் என்பதில் சந்தேகம் என்ன?
திருமணம் ஆகியும் பல தடைக்கற்களை சந்திப்போருக்கும்,பொறாமை போன்ற கெட்ட சக்திகளால் பாதிக்கப்படுவோர்க்கும் ஒரு விடிவு காலம் பிறக்கும் என்பது நிச்சயம். செவ்வாய் தோஷம், கணவரின் நெடு நாள் நோய் ஆகியவற்றிலிருந்தும் விடுதலை கிடைக்கும். இதனால் பங்குனி உத்திரத்தன்று விரதம் இருப்பது நலம்
கோவில்களில் திருமண வைபவம்
சிவாலயங்களிலும், முருக ஸ்தலங்களிலும்,தெய்வங்களின் திருமணம் நடைபெறும் நாள் பங்குனி உத்திரம். மயிலை கபாலீஸ்வரர், வடபழனிஆண்டவர், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் ,பழனி தண்டாயுதபாணி ஆகிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடக்கும்.
ஸ்ரீரங்கத்தில் அன்னை மகாலக்ஷ்மியின் சந்நிதியில் ரங்கநாதரும் அவருடன் சேர்ந்து எழுந்தருளியுள்ள திருக்கோலம் காணக் கிடைக்காதது. அப்போது ராமானுஜர் இயற்றிய துதிக்களை பாடுவது வழக்கம்.காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நூறு தூண் கொண்ட மண்டபத்தில் எழுந்தருளி உள்ள பெருமான் முன் ஸ்தல புராணத்தை படித்து ஏழு நாட்களுக்கு கொண்டாடுவது வழக்கம். இறுதியில் உத்சவம் சேரகுல (மலையாள) நாச்சியார் விஷ்ணுவை திருமணம் முடிக்கும் காட்சியோடு முடியும்.
பழனியின் ரத ஊர்வலமும் மதுரை கள்ளழகர் கோயில் விழாவும் பிரசித்தி பெற்றவை. மதுரையில் பங்குனி உத்திரத்தை கோடை வசந்த உத்சவமாக கொண்டாடுகிறார்கள். அதே போல் கோயம்பத்தூரின் அருகே இருக்கும் பேரூரில் பங்குனி உத்சவம் விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அறுபத்துமூவர் சேவை
சென்னையில் மயிலையில் எழுந்தருளி உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் அறுபத்து மூவர் சேவை மிகவும் விசேஷமானது.பங்குனி உத்திர விழாவின் எட்டாம் நாள் வீதி உலாவில் அறுபத்து மூன்று நாயன்மார் கபாலீஸ்வரரை எதிர்கொள்ள சிவன் பவனி வரும் காட்சி கண் கொள்ளாதது. கோடையின் தாகம் தணிக்க மக்கள் தண்ணீர் பந்தல் போன்ற அமைப்புகளை ஏற்படுத்தி பக்தர்களுக்கு சேவை செய்கிறார்கள். மற்றும் முண்டக்கண்ணி அம்மன்,கோலவிழி அம்மன், வைரமுடி சுவாமி, திருவள்ளுவர் வாசுகி ஆகியோரின் மூர்த்திகளும் இந்த உத்சவத்தில் இடம் பெறும்.
இந்த எல்லா கோயில்களிலுமே கல்யாணமண்டபத்திற்கு மூர்த்திகளை நீராட்டி எடுத்து சென்று திருமணம் செய்விக்கிறார்கள். இதனை காணும் பக்தர்களுக்கு நற்பலன்கள் கிட்டுகின்றன.
மற்ற மாநிலங்களில் பங்குனி உத்திரம் கங்கா மேளா, வசந்த உத்சவம், வசந்த பஞ்சமி, மஞ்சள் குளி, டோல் பௌர்ணமி என அழைக்கப்படுகிறது
பங்குனி உத்திர விரத முறை
பங்குனி உத்திரம் அன்று காலை குளித்து,கோயில் சென்று இறைவனை தொழுது நாள் முழுக்க விரதமிருந்து சாயந்திரமாக கோயில் சென்று வந்து விரதம்முறிப்பார்கள். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால் பழம் உண்டு இருப்பார்கள். இவர்களுக்கு வாழ்வில் வளமும், செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பதில் ஐயமில்லை. 48 ஆண்டுகள் தொடர்ந்து விரதமிருந்தால் பிறவி பிணி நீங்கும் என்பது கருத்து.
பங்குனி உத்திரம் அன்று தெய்வத் தம்பதிகளைத் தொழுது வாழ்வின் இன்னல்களை களைவோம்.