ஸ்ரீகள்ளவாண்ட பெருமாள் சுவாமி திருக்கோவில்
தீராத்திகுளம் தூத்துக்குடி மாவட்டம்
🌿தண்பொருநையாம் தாமிரபரணி தவழ்ந்தோடும் இன்றைய நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ராமாயண காலத்துச் சம்பவங்கள் பல நடந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு எம் பெருமாளை ஸ்ரீகள்ளவாண்ட பெருமாள் சுவாமி திருக்கோவில்கள்
அமைந்துள்ளது
காக்கும் தெய்வம் பெருமாள் கள்ளவாண்டான் சுவாமி யாக ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் கிராமதெய்வமாய் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்
மாய மானின் உருவம் கொண்டு வந்த மாரீசன் மறைந்த இடம் ‘மாயமான் குறிச்சி’ என்றும், சீதையை ராவணன் கவர்ந்து சென்றபோது, ராவணனுக்கும் ஜடாயுவுக்கும் நடந்த போரில் ஜடாயு வீழ்த்தப்பட்ட இடம் ‘ஜடாயு துறை’ என்றும், சீதையைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அனுமனின் தலைமையில் வானரப் படைகள் அணிவகுத்து நின்ற இடம் ‘குரங்கணி’ என்றும் அழைக்கப்படுகின்றன.
சீதாதேவி, தான் செல்லும் பாதையை அடையாளம் காட்டுவதற்காக தான் அணிந்திருந்த முத்துமாலையை குரங்கணியில் உள்ள அம்மன் கோயிலில் வீசிச் சென்றதால், குரங்கணியில் உள்ள குரங்கணி அம்மனுக்கு முத்துமாலை அம்மன் என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு கதையுண்டு.
இப்படிப் பல ராமாயண நிகழ்வுகள் நடைபெற்ற இந்த இடத்தில்தான் வாலி வதமும் நடைபெற்றது.
🌿கள்ளவாண்ட பெருமாள் சுவாமி 🌿
தன் மனைவியை வாலியிடமிருந்து மீட்க நினைத்த சுக்ரீவன், அத்திரி மலையில் இருந்த ராமரைச் சந்தித்து உதவி கேட்கிறான். சுக்ரீவனுக்கு உதவ நினைத்தார் ராமர். ஆனால், வாலியுடன் நேருக்கு நேர் நின்று போரிட்டால், தன் வலிமையில் பாதி வாலிக்குச் சென்றுவிடும் என்பதால், வாலியை மறைந்திருந்து வதம் செய்கிறார் ராமர். கீழே வீழ்ந்த வாலி, ‘மறைந்திருந்து என்னை வீழ்த்திவிட்டாயே கள்ள ராமா..! கள்ள ஆண்டவனே..!’ என்று கதறியபடியே உயிர் நீத்தான். கிஷ்கிந்தை காண்டத்தில் வரும் இந்த வாலி வதம், தற்போது தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகில் உள்ள மணக்கரையில் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
இதையொட்டி, மணக்கரையில் ராமரின் நினைவாக கள்ளவாண்ட சுவாமி கோயிலை எழுப்பி வழிபட்டு வருகிறார்கள். ‘கள்ள ஆண்டவர்’ என்ற பெயரே மருவி, ‘கள்ளவாண்டவர்’ என்று ஆனதாம்.
மணக்கரையில் உள்ள கள்ளவாண்ட சுவாமி கோயிலிலிருந்து பிடிமண் எடுத்துச் சென்று கட்டப்பட்ட கள்ளவாண்டர் கோயில்கள் முத்தாலங்குறிச்சி, நடுவக்குறிச்சி, ஆறாம்பண்ணை, ஆதிச்சநல்லூர், கருங்குளம், அரசர்குளம், வல்லக்குளம், ஶ்ரீபராசங்குநல்லூர், ஶ்ரீராமகுளம், கிளாக்குளம், பெருமனேரி தீராத்திகுளம் என்று குறிப்பிட்ட சில கிராமங்களில் அமைந்திருக்கின்றன. இந்த ஊர்கள் பெரும்பாலும் தூத்துக்குடி மாவட்டம் ஶ்ரீவைகுண்டத்தைச் சுற்றியே அமைந்திருக்கின்றன. வாலி வதம் திறந்தவெளியில் நடைபெற்றதால், இந்தக் கள்ளவாண்டர் கோயில்கள் அனைத்தும் திறந்தவெளியிலேயே அமைந்திருக்கின்றன.
கம்பீரமாகக் காட்சி தருகிறது கள்ளவாண்ட சுவாமி கோயில். கிருஷ்ணர், கள்ளவாண்டர், சிவன், பார்வதி .பரிவாரதேவதைகள் பீடமும் உள்ளது
வருடம்தோறும் சித்திரை மாதம் நடைபெறும் கொடைத் திருவிழாதான் கோயிலின் முக்கிய நிகழ்ச்சி. முதல்நாள் குடியழைப்புடன் தொடங்குகிறது திருவிழா. கொடையன்று சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெறும். அன்று நள்ளிரவு 12 மணிக்கு சுவாமியாடிகள் தாமிரபரணிக் கரையில் வேட்டைக்குச் சென்று திரும்புவார். இரவு 1 மணிக்கு விழாவின் பிரதான நிகழ்ச்சியான ‘வேட்டைப் பானைத் திருவிழா’ தொடங்கும்.
வரிசையாக 12 கல் அடுப்புகள் வைத்து, அவற்றில் 12 பெரிய மண் பானைகளை வைத்து, பனை ஓலைகளைக் கொண்டு நெருப்பு மூட்டி, கஞ்சி காய்ச்சுவார்கள். கஞ்சி காய்ச்சும் நேரத்திலேயே நையாண்டி மேளம், உருமி மேளம் மற்றும் வில்லிசைப் பாடலாக, கள்ளவாண்ட சுவாமி திருக்கதை சொல்லப்படும். அந்தக் கதையைக் கேட்டு அருள் முற்றும் சுவாமியாடி, பானைகளுக்கு அருகில் சென்று தென்னம்பாளையை பானைக்குள் விட்டு சுடு கஞ்சியை எடுத்துத் தன் தலையில் ஊற்றிக் கொண்டபடி அருளோடு ஆடுவார்கள். காண்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்யும் காட்சி அது. வாலியை மறைந்திருந்து வீழ்த்திய காரணத்துக்காக, கொதிக்கும் கஞ்சியைத் தன் தலையில் கொட்டிக்கொண்டு, தனக்குத் தானே ராமர் தண்டனை கொடுத்துக் கொள்வதாக ஐதீகம்.
திருடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர் வீட்டில் அடுக்கடுக்கான கஷ்டங்களைக் கொடுத்து, மூன்றே நாள்களில் திருடியவரை அடை யாளம் காட்டுவதுடன், திருட்டுப்போன பொருளை உரியவரிடம் சேர்ப்பித்துவிடுவாராம் கள்ளவாண்ட சுவாமி. எனவே, கள்ளவாண்ட சுவாமி கோயில் இருக்கும் ஊர்களில் திருட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என்கிறார்கள்.
கள்ளவாண்ட சுவாமிக்கு வேட்டைப்பானை போடுவதாக வேண்டிக் கொண்டால், விவசாயத்தில் அதிக மகசூல், கல்வியில் முன்னேற்றம், வேலைவாய்ப்பு, திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற வேண்டுதல்கள் நிறைவேறும்
🌿என்று நம்பிக்கையுடன் சொல்கிறார்கள் பக்தர்கள். கோயில் சார்பில் 5 வேட்டைப்பானைகள் மட்டுமே வைத்தாலும், தங்களின் வேண்டுதலுக்காக பக்தர்கள் அடுத்தடுத்து வேட்டைப்பானை வைப்பதால், ஒவ்வொரு வருடமும் வேட்டைப்பானைகளின் எண்ணிக்கை அதிகமாகிறது என்கிறார்கள். மேலும் சாமியாடி எந்தப் பானைக்குள் கையை விட்டு கஞ்சியை எடுக்கிறாரோ அந்தப் பானைக்கு உரியவரின் வீட்டில் செல்வம் பெருகும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
வேட்டைப் பானைத் திருவிழா ! Thanks vikadan.
ராமாயணத்தில் வானரக் கூட்டத்தின் தலைவனான வாலியைப் பெருமாள் வதம் செய்த இடம் தாமிரபரணிக் கரையான மணக்கரை என்னும் கிராமம் என்று நம்பப் படுகிறது. தன்னைத் தாக்கிய ராமனைப் பார்த்த வாலி, 'என்னை நீ மறைந்திருந்து தாக்கிவிட்டாயே’ என்று சொல்ல, ராமன் கள்ளன் (திருடன்) ஆகி விட்டார். எனவே 'கள்ளவாண்டன்’ என்று இந்த இடத்தில் ராமன் அழைக்கப்படுகிறார். தமிழகத்திலேயே ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களில் மட்டுமே இந்தக் கள்ளவாண்டப் பெருமாள் சுவாமி கோயில் உள்ளது.
இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை நடை பெறும் இந்தக் கள்ளவாண்டப் பெருமாள் சுவாமி கோயில்குறித்து வாய்ஸ் ஸ்நாப்பில் தகவல் சொல்லி இருந்தார் என் விகடன் வாசகர் விஜயகுமார். இந்தக் கொடை விழாவின் ஹைலைட்... 'வேட்டைப்பானை போடுதல்’.
வேட்டைப்பானை நிகழ்ச்சியைப் பார்க்க தாதன்குளம், இலங்குளம், கிளார்குளம், அரசர் குளம், உல்லக்குளம், தீராத்திகுளம், ஆதிச்ச நல்லூர், ஆழ்வார் திருநகரி, நத்தம், செய்துங்க நல்லூர், ஸ்ரீவைகுண்டம் எனச் சுமார் நூறு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் முத்தாலங் குறிச்சியில் திரண்டு இருந்தார்கள். நள்ளிரவு சரியாக 12 மணிக்கு கள்ளவாண்ட சாமியாடியின் கையில் உயரமான இரண்டு தீப்பந்தங்கள் ஏந்தி ஊரைச் சுற்றி வந்து கோயிலுக்குள் நுழைந்ததும் நள்ளிரவு பூஜை செய்யப்பட்டது. பூஜை முடிந்ததும், நீளமான அடுப்பின் மேல் 15 பானைகளையும் நீள் வரிசையில்வைத்துப் பனை ஓலையால் தீ மூட்டி, பானைகளில் பச்சரிசி போட்டுக் கஞ்சி காய்ச்சினார்கள். மடமடவெனக் கொதித்துப் பொங்கியது கஞ்சி. கொஞ்ச நேரத்தில் ''வேட்டைப் பானை தயாராகிருச்சு.. கள்ளவாண்ட சாமியாடிகள் எங்கிருந்தாலும் உடனே கோயிலுக்கு வரும்படி கேட்டுக்கொள்கிறோம்'' என்று அறிவித்தார்கள். அதைக் கேட்டதும் வரிசையாகப் பானை முன் வந்து நின்றனர் பத்து சாமியாடிகள். 'ரண்டக்க ரண்டக்க..’ நையாண்டி மேளமும், 'வ்ர்ரூம் வ்ர்ரூம்’ உருமியும், 'டன்டக்கு டன்டக்கு’ செண்டை மேளச் சத்தமும் காதைக் கிழிக்க அத்தனை சாமியாடிகளும் சாமி வந்து ஆடினார்கள். கொதிக்கின்ற கஞ்சிப் பானைக்குள் தென்னை மரத்துப் பாளையை (தென்னம்பாளையை) முக்கி எடுத்து, கஞ்சியை உடம்பின் மேல் ஊற்றுவதுதான் வேட்டைப் பானை நிகழ்ச்சி.
முதலில் சாமியாடி ஒருவர் எல்லாப் பானை களிலும் திருநீறு போட்டு, பாளையைப் பானைக் குள் விட்டுப் பின்பு கஞ்சியைத் தலையில் ஊற்றி சடங்கினை ஆரம்பித்துவைத்ததும் அப்படியே பின் தொடர்ந்தார்கள் மற்ற சாமியாடிகள். மேளச் சத்தத்தை விடவும் விண்ணை முட்டியது சாமியாடிகளின் குலவைச் சத்தம். சில சாமி யாடிகள் அருள் முற்றியதும் தென்னைப் பாளையைக் கீழே போட்டுவிட்டுக் கையை பானைக்குள் விட்டு கை நிறையக் கஞ்சியை அள்ளி முகத்தில் பூசிக்கொள்ள, பரவசமாகப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள் மக்கள்.
''நான் கடந்த 12 வருஷமா கள்ள வாண்ட சாமியாடுறேன். மற்ற கோயில் களில் தீ மிதித்தல், ஆணிச் செருப்பு, காவடி, பால் குடம்னு இருக்கு. ஆனா, இங்க வேட்டைப் பானை ரொம்ப விசேஷம்... கொதிக்கிற பானைக் கஞ்சியை உடம்பு முழுக்க ஊத்து றதுன்னா சாதாரண விஷயம் இல்ல, சரியான விரதம் கடைபிடிக்கலேன்னா உடம்பு வெந்துடும்!'' என்றார் ஊர் பெரியவர் பாலகிருஷ்ணன்.
வேட்டைப் பானை நிகழ்ச்சியைப் பார்க்க புல்லுக்கட்டு மேலும், மண் சுவர்கள் மேலும் அமர்ந்து இருக்கும் இளைஞர்கள், அஞ்சு ரூபாய் அச்சு மரு தாணியை கையில் அப்பிக்கொண்டு இருக்கும் இளம் பெண்கள், பலூன் கேட்டு அழும் சுட்டிகள், வெற்றிலைக்குச் சுண்ணாம்பு தேடும் பெரிசுகள், புது மனைவிகளுக்கு வேட்டைப் பானை பற்றி எடுத்துச் சொல்லும் புதுமாப் பிள்ளைகள், ஆற்று மணலில் அமர்ந்த படி பழையக் கதையைப் பேசுபவர்கள் எனக் களைகட்டியது கோயில் கொடைத் திருவிழா!
கொடை விழா எப்போது நடைபெறும் என்று தெரிவிக்கவும்.
பதிலளிநீக்கு