வெள்ளி, 29 ஜூன், 2018

சங்கரன்கோவில் ஆடித்தபசு திருவிழா முக்கிய நிகழ்ச்சி குறிப்புகள்


சங்கரன்கோவில்  ஆடித்தபசு திருவிழா முக்கிய நிகழ்ச்சி குறிப்புகள்

சங்கரன்கோவில்  ஆடித்தபசு திருவிழா முக்கிய நிகழ்ச்சி குறிப்புகள்...17.7.2018 ஆடி 1ஆம் தேதி செவ்வாய் அன்று காலை 8.15 மணிக்கு மேல் 8.35 மணிக்குள் கொடியேற்றம்...25.7.2018 ஆடி 9 ஆம் தேதி புதன் கிழமை தேரோட்டம்...27.7.2018 ஆடி 11 ஆம் தேதி வெள்ளி மாலை 6 மணிக்கு 1மணி நேரம் முன்பாக 5 மணிக்கு ஸ்ரீ சங்கரநாராயணர் காட்சியும், இரவு காட்சி 12 மணிக்கு சில மணி நேரம் முன்பாக இரவு 9 மணிக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி காட்சி நடைபெற்று சுவாமி அம்பாள் திருக்கோயில் அடைந்து இரவு 11 மணிக்குள் நடை சாத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன...


ஆடித்தபசு அன்று இரவு 12 மணி முதல் அதிகாலை 3.50 மணி வரை சந்திரகிரகணம் நடைபெறுவதால் இந்த வருட தபசு  காட்சிகள் சிறிய நேர மாற்றங்கள்...முறையான அறிவிப்புகள் திருக்கோயில் நிர்வாகம் அறிவிக்கும்...வெளியூர் மற்றும்  உள்ளூர் பக்தர்கள் ஆடித்தபசு திருநாள்கள் மற்றும் நேர நிகழ்வுகள் இதன் மூலம் தெரிந்து தாங்கள் பயண மற்றும் தரிசனத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டுகிறேன்...


செவ்வாய், 26 ஜூன், 2018

திருநெல்வேலித் திருத்தேர் சிறப்புகள்


திருநெல்வேலித் திருத்தேர் சிறப்புகள்

  • திருநெல்வேலித் திருத்தேர் சிறப்புக்கள்* :
"திருநெல்வேலி"யின் நடுநாயகமாக அமைந்திருப்பது சுவாமி நெல்லையப்பர் காந்திமதி திருக்கோவில். *இக்கோவில் சுமார் 1500ஆண்டுகள் பழைமையானது. திருஞானசம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்றதலம்*.
  • இக்கோவிலில் ஆனிப்பெருந்திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும்* முக்கியமான திருவிழாக்களாகும்.
இதில் *ஆனிப் பெருந்திருவிழா 45 நாட்கள் நடக்கும்* மிகப்பெரும் திருவிழாவாகும். இவ்விழா *பிட்டாபுரத்தி அம்மன் கோவிலில்* தொடங்குகிறது. மூத்த பிள்ளையார் திருவிழா, நால்வர் திருவிழா இவை முடிந்தவுடன் நெல்லையப்பருக்குக் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.
இத்திருவிழாவில் மூன்று திருநாட்கள் முக்கியத்துவம் உடையன.
  • 4ஆம் திருநாளில் நெல்லையப்பரும் காந்திமதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு திருவீதிஉலா வருவர்*.
  • 8ஆம் திருநாளில்* இத்தலத்துக்குரிய மூர்த்தியான *கங்காளநாதர்* எழுந்தருளுகின்றார். கங்காள நாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுபவர். தமிழகத்தின் பிற தலங்களில் *பிட்சாடனர்* என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காள மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.
  • 9ஆம் திருநாள் தேரோட்டம். இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித்தேரோட்டம்* என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.
இன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.
திருவாரூர் தேரும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேரும் சென்ற நூற்றாண்டில்தான் செய்யப்பட்டன.
  • நெல்லைத் தேர் கி.பி.1505இல் செய்யப்பட்டு இன்று வரை சுமார் 500 வருடங்களுக்கு மேலாகத் தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது*.
1948 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது. இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
       
*இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்*.
*4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு தமிழகத்திலேயே அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.
*முற்காலத்தில் இதன் மேல்பகுதியில் 9 தட்டுகள் இருந்ததாகவும் இப்போதுதான் அதனை 5 தட்டுகளாக குறைத்துவிட்டதாகவும் கூறுவர்
            *சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.
            *வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் கிழக்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.
                    *  தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.

திக்கெல்லாம் நலம் அருளும் திருநெல்வேலி நெல்லையப்பர்


திக்கெல்லாம் நலம் அருளும்  திருநெல்வேலி நெல்லையப்பர்


நெல்லையப்பர் கோவில் சிறப்பு வாய்ந்த சந்நதிகளை தன்னகத்தே கொண்ட தன்னிகரற்ற கோயிலாகும். இதோ அந்த ஒப்புயர்வற்ற, அற்புதமான சந்நிதிகள்: மூலமகாலிங்க சந்நதி, மார்பில் சிவலிங்கம் தரித்த கோவிந்தர் சந்நதி, குபேரலிங்க சந்நதி, சனகாதி முனிவர்களுடன் அகத்தியர், கபிலர் ஆகியோர் அமர்ந்திருக்க அவர்களுக்கு ஞானம் அருளும் ஞானானந்த தட்சணாமூர்த்தி சந்நதி. 

120 ஆண்டுகள் வாழ்ந்த அமாவாசை பரதேசி என்னும் சித்தரால் வழிபடப்பட்ட, எங்கிருந்து பார்த்தாலும் நேரடி முக தரிசனம் காட்டும் ஆறுமுக நயினார் சந்நதி, குருத்தலமாம் திருச்செந்தூருக்கு இணையாக கால் மாற்றி அமர்ந்து, சின்முத்திரையுடன் வள்ளி, தெய்வானைக்கு ஞானம் வழங்கும் குருமுருகன் சந்நதி, காய்ச்சல் முதலான நோய்களை குணப்படுத்தும் மூன்று முகம், மூன்று கால்கள், மூன்று கரங்கள் கொண்ட சுரதேவர் சந்நதி, குழந்தைப்பேறு அருளும் பிள்ளைத்தொண்டு பாதையுடன் கூடிய பொள்ளாப்பிள்ளையார் சந்நதி, மகிஷாசுரமர்த்தினி, மஞ்சன வடிவம்மன் (பண்டாசுர மர்த்தினி) சந்நதி, பொற்றாமரைக் கரையிலுள்ள சரஸ்வதி அம்மன் சந்நதி,தாருகாவனத்து முனிவர்களின் செருக்கை அடக்கிய கீர்த்தியுடைய கங்காளநாதரின் பிச்சாடன மூர்த்தி கோலம். 


மன்னர்களின் கைங்கர்யங்கள்

இத்திருக்கோயிலில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் பல மிகவும் பழமையானவை. அவை வட்டெழுத்து, கிரந்தம், தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொறித்து வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பழமையானது, சோழன் தலைகொண்ட வீரபாண்டியன் (கி.பி. 946 - 966) என்ற பாண்டிய மன்னனின் இரண்டாம் ஆட்சி ஆண்டு பற்றிய கல்வெட்டு ஆகும்.

முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012 - 1044), முதலாம் குலோத்துங்கன் (கி.பி.1070 - 1120) போன்ற சோழ மன்னர்களும், இரண்டாம் சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1190 - 1267) என்கிற பாண்டிய மன்னரும், சுந்தரபாண்டியன் (கி.பி. 1216 - 1244), விக்கிரம பாண்டியன் (கி.பி. 1250 - 1276) வீரசோமேஸ்வரன் (கி.பி. 1238 - 1258), இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி.1251), இரண்டாம் சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 1258 - 1265), முதலாம் மாறவர்மன் குலசேகரன் (கி.பி. 1258 - 1308) ஆகியோருடைய கல்வெட்டுகள் இக்கோயிலின் பழமையையும் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இக்கோயிலுக்கு திருச்சுற்று மதில் எழுப்பியது முதலாம் மாறவர்மன் குலசேகரன். ‘முந்திகோட்டு வீரம் அழகிய பாண்டிய தேவன்’ என்பவர் இக்கோயிலில் மிகவும் விசேஷமான பொள்ளாப் பிள்ளையார் சந்நதியை உருவாக்கியவர். பராக்கிரம பாண்டியன், வேணுவனநாதர் எனும் பெயர் இடம்பெற்ற முதல் கல்வெட்டை உருவாக்கியவர். வீரசங்கிலி மார்த்தண்டவர்மன் என்பவர்  கி.பி. 1546 ம் ஆண்டு இசைத்தூண் மண்டபத்தினை உருவாக்கினார். இத்தகைய தொன்மை வாய்ந்தது, நெல்லையப்பர் ஆலயம்.

புராணங்கள் சொல்வது என்ன?

திருநெல்வேலி தலம் மிகவும் விசேஷமானது. அம்மை, தான் படைத்த உலகத்தைக் காத்தருளும் பொருட்டு இறைவனை வேண்டித் தவம் இயற்றினாள்.  அதன்படி இறைவன் காட்சி கண்டு, அவரது அருளை உலகமனைத்தும் பெறும்படிச் செய்தது  இந்தத் தலத்தில்தான்.இதற்காக அம்மையார் கயிலாய மலையிலிருந்து நெல்லை மாநகரை அடைந்து, முப்பத்திரண்டு அறங்களை வளர்த்து, கம்பை நதியின் அருகில் தவமிருந்து, நெல்லையப்பரை தரிசித்தாள். 

இத்தலத்தில்தான்அகத்தியர், சிவ-சக்தியின் திருமணக்காட்சியை கண்டு பேருவகை கொண்டார். இத்தகைய புராண சிறப்புகள் கொண்ட இக்கோயில், நெல்லை மாநகரில், மேற்கு திசையிலிருந்து கம்பாநதி உள்ளே நுழையுமிடத்தில் அமைந்த சிவன் கோயில் எனப் போற்றப்படுகிறது. வேதசர்மா எனும் அந்தணர், சிவனுக்குப் படைக்க ஊர் ஊராகச் சென்று சேகரித்த நெல்மணிகளை தம் இல்லத்தருகே தரையில் உலர்த்தியிருந்தார். அப்போது எதிர்பாராதவகையில் பெருமழை பெய்தது. அந்த மழையில் நெல்மணிகள் அடித்து சென்றுவிடுமோ, இறைவனுக்கு நிவேதனம் படைக்க இயலாதோ என வருந்தி, அந்த  இறைவனையே வேண்டி நின்றார் வேதசர்மா. 
அவருடைய பக்திக்கு உளங்கனிந்த ஈசன், மழைநீர் அந்த நெல்லை அடித்துக்கொண்டு போய்விடாதபடி, அந்தப் பகுதியைச் சுற்றிலும் வேலி அமைத்தார். இவ்வாறு வேலியாக நின்று காத்தமையால் ‘நெல்வேலி நாதன்’ எனப்பெயர் பெற்றார். இத்திருவிளையாடல் நடைபெற்ற இத்தலத்திற்கும் திரு+நெல்+வேலி என்னும் பெயர் வந்தது. நான்மறைகளும், சிவபெருமானுக்கு நிழல் தரும் மரங்களாக இருக்க வரம் வேண்டின. அதன்படி அவை, இந்த ஆலயப் பகுதியில் மூங்கிலாய் துளிர்த்து ஓங்கி வளர்ந்தன.

இறைவன் அவற்றினடியில் லிங்கமாய் அமர்ந்திருந்தான். இவ்வாறு பல்லாண்டு காலமாய் அங்கே வீற்றிருந்த பெருமான், தான் வெளிவர, அனைவருக்கும் அற்புதங்கள் அருள ஒரு திருவிளையாடலைப் புரிந்தார்.  இந்த மூங்கில் காட்டினூடே தினமும் அரண்மனைக்கு  பாற்குடம் சுமந்து சென்றான் இராமக்கோன். அவன் இந்த இடத்தினை கடக்கும் மூங்கில் முளையால் அவன் காலை இடறவைத்து, அதனால் அவன் தடுமாற, பாற்குடம் கவிழ்ந்து, பாலைத் தன்மேல் அபிஷேகமாகப் பொழியச் செய்தார். ஒருநாளல்ல, இரண்டு நாளல்ல, தொடர்ந்து பல நாட்கள் இவ்வாறு பாற்குடம் கவிழ்வதைக் கண்டு கோபமுற்ற இராமக்கோன், கோடாரியால் அந்த மூங்கில் முளையை வெட்ட, உடனே அங்கிருந்து ரத்தம் பீறிட்டது. 

அதிர்ந்து போன அவன் அரண்மனைக்குச் சென்று அரசனிடம் தகவல் கூற, மன்னன் ராமபாண்டியன் சம்பவ இடத்திற்கு வர, அங்கே சிவபெருமான் லிங்கமாக தோன்றினார். அதைக் கண்டு பக்தியால் பரவசப்பட்டான் மன்னன். உடனே அவருக்கு அங்கேயே கோவில் உருவாக்க ஆவன செய்தான். வேணு (மூங்கில்)வனத்தில் கிடைத்ததால் இறைவன் வேணுவனநாதர் என அழைக்கப்பட்டார். இவ்வாறு இறைவனை லிங்கரூபமாக முழுமையாக தரிசித்து அவருக்கு உகந்ததோர் ஆலயமும் நிர்மாணித்ததால், மன்னன் ராமபாண்டியன், ‘முழுதும் கண்ட ராமபாண்டியன்’ என பாராட்டப்பெற்றான்.

ஸ்வேதகேது என்ற அரசன் நெல்லையம்பதியை ஆண்டு வந்தான்.  நெல்லையப்பர் மீது ஆழ்ந்த பக்தி கொண்ட அவன், அனுதினமும் நெல்லையப்பரைப் பூஜித்து வந்தான். வாரிசு இல்லாத அவனுக்கு அந்திமக்காலம் நெருங்கியது.  அதை உணர்ந்த மன்னன் ஆலயத்திலே அமர்ந்து சிவபூஜை செய்து கொண்டிருந்தான். அப்போது காலன் அரசனை ஆட்கொள்ள பாசக்கயிறை வீசினான். மன்னன் இறைவனே தஞ்சம் என்பதாக, அந்த சிவலிங்கத்தை அணைத்துக்கொள்ள, பாசக்கயிறு, அரசனோடு இறைவன்  மீதும் விழுந்தது. உடனே வெகுண்டு காலனைக் காலால்  உதைத்தார் இறைவன். அதோடு அரசனிடம், ‘மனம் வருந்தாதே, நீ எப்போது விரும்புகிறாயோ அப்போது இவ்வுலகம் துறந்து கயிலாயத்தில் என்னை அடையலாம்,’ என்று அருள்பாலித்தார். எனவே இந்த இறைவனை வணங்குவோருக்கு முக்தி நிச்சயம்.

எத்தனைப் பெயர்கள்! 

இங்குள்ள இறைவன்,  சுவாமி நெல்லையப்பர்,  இறைவி காந்திமதி அம்மன். பொற்றாமரைக் குளம் (சுவர்ணபுஷ்கரணி), கரிஉருமாறி தீர்த்தம், வெளித் தெப்பக்குளம் (சந்திரபுஷ்கரணி) ஆகியன இக்கோயிலின் தீர்த்தங்களாகும். தலவிருட்சம், மூங்கில். இங்குள்ள இசைக்கருவி, சாரங்கி ஆகும்.
இத்திருத்தலத்திற்கான புராணப் பெயர்கள் அனைத்துமே சிறப்பு பெற்றவை. இவன் அம்மையோடு இங்கு வந்து உகந்து வீற்றிருப்பதால் ‘பேர்அண்டம்’. ஊழிக்கால முடிவில் எல்லாம் அழிந்தாலும் இத்தலம் மட்டும் அழியாது என்பதால், ‘அனவரதம்’. 

ஐந்தெழுத்து ஓசை எங்கும் நிறைந்திருப்பதாலும், மேலான நற்கதி அருள்வதாலும் ‘தென்காஞ்சி.’ அம்பிகை தவம் செய்தும், சிவத்தை பூஜித்தும், இறைவனை மணமுடித்ததாலும், ‘சிவபுரம்’. பிரம்மா, விஷ்ணு, ருத்ரர் மூவரும் இங்கு வந்து வணங்கி மகிழ்வதால் ‘திருமூர்த்திபுரம்’. இந்திரனின் யானையான ஐராவதம் யானை வந்து வணங்குவதால், ‘இபபுரி’.திருமால் ஆமை வடிவத்தில் இங்கு சிவபூஜை செய்ததால் ‘கச்சபாலயம்’.பிரம்மன் தினமும் சிவபூஜை இயற்றுவதால், ‘பிரம்மபுரம்’.மேலான தர்மங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருப்பதால், 
‘தரணிசாரம்’.

பிரம்மனுக்கு விஷ்ணு இங்கு அருள் புரிந்ததால் ‘விண்டுதலம்’.இறைவனை வேண்டி, தவமிருந்த காமாட்சி அருளுவதால், ‘காமகோட்டம்’.
சகல சித்திகளையும் அளிக்கவல்ல தலம் என்பதால் ‘சித்தித் தலம்’. தவிர வேணுவனம், நெல்லூர், சாலிவேலி, சாலிவாடி, சாலிநகர், தாருகாவனம், கீழவெம்பு நாட்டு குலசேகர சதுர்வேதி மங்கலம் என்றெல்லாமும் இத்தலம் சிறப்பிக்கப்படுகிறது. 

மாதாந்திர வழிபாடுகள்

இத்திருக்கோயிலில் பன்னிரண்டு மாதங்களும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. சித்திரை மாதம் வசந்த மகோற்சவம், பதினொறு தினங்கள்; வைகாசி மாதம் விசாகத் திருநாள்; ஆனி மாதம் பிரம்மோற்சவம், ஆனி பெருந்தேர்த் திருவிழா, பத்து   தினங்கள் (இத்தேர்த்திருவிழாவைக் காண பல மாநிலங்களிலிருந்தும், பிற நாடுகளிலிருந்தும் பக்தர்கள் வந்து கூடுவார்கள். நான்கு ரதவீதிகளில் தேர் மெல்ல அசைந்துவரும் காட்சியைக் கண்டு அவர்கள் பரவசமடைவது வழக்கம்); ஆடிமாதம் பூரத்திருநாள் பத்து தினங்கள்; ஆவணி மாதம் மூலத் திருநாள் பதினொரு தினங்கள்; புரட்டாசி மாதம் நவராத்திரி விழா, லட்சார்ச்சனையுடன், பதினைந்து தினங்கள்; ஐப்பசி மாதம் திருக்கல்யாணம் உற்சவம் 15 நாட்கள்;கார்த்திகை மாதம் கார்த்திகை தீப திருவிழாவும்,  சோமவாரத் திருவிழாவும்; மார்கழி மாதம் பத்து தினங்கள் திருவாதிரை விழா; தை மாதம் பத்து தினங்கள் திருவாதிரை திருவிழா; மாசி மாதம் மகாசிவராத்திரி  திருவிழா; பங்குனி மாதம் உத்திரத் திருநாள் 10 தினங்கள்.

நித்திய பூஜை

கோயிலில் அம்மன் சந்நதியில் முதல் பூஜையும், அதன் பிறகு சுவாமி சந்நதியில் மறு பூஜையும் நடைபெறும்.  அம்மன் சந்நதியில் திருவனந்தல் காலை 6 மணிக்கும், விளா பூஜை காலை 7 மணிக்கும், சிறுகாலசந்தி பூஜை காலை 8 மணிக்கும், காலசந்தி பூஜை  காலை 9 மணிக்கும், உச்சிகால பூஜை பகல் 12.30 மணிக்கும்,  சாயரட்சை பூஜை மாலை 5.30 மணிக்கும், அர்த்தசாம பூஜை இரவு 8.15க்கும்  நடைபெறுகின்றன. சுவாமி சந்நதியில் அம்மன் சந்நதியில் பூஜை நடந்து, அரை மணிநேரம் கழித்து 7 கால பூஜைகளும் நடைபெறும்.

  நெல்லையப்பர் ஆலயத்தில் சொர்க்க தீபாராதனை இரவு- 8.40 மணிக்கும், பைரவர் பூஜை இரவு 9.30 மணிக்கும்,  பள்ளியறை பூஜை இரவு 9 மணிக்கும் மிகச்சிறப்பாக நடைபெறுகின்றன.

கலைச்சிறப்பு

தமிழகத்தின் பெருங்கோவில்களில் ஒன்றாக நெல்லையப்பர் கோவில் விளங்குகிறது. இத்திருக்கோவிலை, ‘சிற்பக் கலையின் சிகரம்’ என்றே  போற்றலாம். 5 கோபுரங்களோடு விளங்குகிறது இந்த பிரமாண்டம்.  நெல்லை நகரத்தின் நடுவில் 850 அடி நீளமும் 756 அடி அகலமும் கொண்ட பரந்த பகுதியாகத் திகழ்கிறது கோவில்.  இறைவன் சந்நதி கோபுரத்தை விட இறைவி சந்நதி கோபுரம் அழகு வாய்ந்தது. கோவிலுக்குள் இருக்கும் பொற்றாமரை தீர்த்தக் கரையில் நின்றுகொண்டு இறைவி கோபுரத்தைப் பார்த்தால் அதன் கம்பீரம் நன்றாகப் புரியும். இந்த தீர்த்தத்தில் இறைவன் நீர் வடிவமாகவும், பிரம்மன் பொன்மலராகவும் பூத்துள்ளதாக பக்தர்கள் கருதுகின்றனர்.  

நாயக்கர் கால சிற்பங்கள் மகாமண்டபத்தில் அமைந்துள்ளன. வீரபத்திரன், அர்ஜுனன், பகடை ராஜா முதலியோர் வாயிலை ஒட்டி நெடிதுயர்ந்து பக்தர்களை வரவேற்கிறார்கள். வீரத்திற்கு எடுத்துக்காட்டாக வீரபத்திரன் சிலை அமைந்திருக்கிறது. பெண்மைக்கு எடுத்துக்காட்டாக குழந்தையை ஏந்தியபடி தாயொருத்தி ஒரு தூணை அலங்கரிக்கிறாள். மேலும் சேவல் சண்டை, பிராகார விதானத்தில் செதுக்கப்பட்டுள்ள 12 ராசிகளின் சக்கரம்  என அனைத்துமே பிரமிக்கச் செய்கின்றன.  தூண்களில் செதுக்கப்பட்டுள்ள ரதி, மன்மதன் சிற்பங்கள் நம்மை நெகிழ வைக்கின்றன. தாமிரசபையில் இறைவனின் திருநடனத்தை தேவர்கள் தரிசிக்கும் மரச் சிற்பங்கள் மெய்சிலிர்க்க வைக்கின்றன.

சுவாமி சந்நதியின் மேல் பக்கமுள்ள சந்நதியில் ஆறுமுகப்பெருமான் மயில்மேல் அமர்ந்திருக்கிறார். மொத்தமும் ஒரே கல்லில் ஆன சிலை என்பது பிரமிக்கவைக்கும் தகவல். ஆறுதிருமுகங்களையும் வலம் வந்து ஒவ்வொன்றாக தரிசிக்கலாம். எந்த திசையிலிருந்து பார்த்தாலும் அவர் முகத்தை தரிசிக்க முடிவது நெஞ்சிற்கு நிறைவை அளிப்பதாகும்.  சந்நதி முன்பு, மகாமண்டபத் தரையில் ‘பசுவந்தனை பிச்சாண்டி அண்ணாவி’ என்பவரால் வடிவமைக்கப்பட்ட தாளச்சக்கரம் அமைந்துள்ளது. இதனைத் தொட்டுத், தொழுது இசைக்கலைஞர்கள் தங்கள் திறமைகள் வளர அருளாசி பெறுகிறார்கள். அறுபத்துமூவர் சந்நதியில் ராவணன், கயிலை மலையைப் பெயர்க்கும் காட்சி, யாழ் இசைக்கும் காட்சி எல்லாம் தத்ரூபமாகத் திகழ்கின்றன. சுவாமி சந்நதி மணிமண்டப வடக்குப் படியின் மேல்பக்கச் சுவரில் ராவணன் மலை பெயர்த்தபோது அம்பிகை பயந்து சுவாமியைத் தழுவிக்கொள்வது போன்ற சிற்பம் அதி அற்புதம்.

கோயில் மண்டபங்கள்

ஆயிரங்கால் மண்டபம், பெயருக்கெற்ப 1000 தூண்களைக் கொண்டது. இங்கு தான் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நடைபெறுகிறது. இம்மண்டபம் 520 அடி நீளம் 63 அடி அகலமுடையது. பங்குனி உத்திரத்தன்று செங்கோல் கொடுத்தல் நிகழ்ச்சி இம்மண்டபத்தில்தான் நடைபெறும். இம்மண்டபத்திலுள்ள உச்சிஷ்ட கணபதி சந்நதி குறிப்பிடத்தக்கது. ஐப்பசித் திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபத்தை, கீழே ஆமை ஒன்று தாங்கியிருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூசிப்பதாய் ஐதீகம். 

ஊஞ்சல் மண்டபம், 96 தத்துவங்களைத் தெரிவிக்கும் விதமாக 96 தூண்களைக் கொண்டிருக்கிறது. திருக்கல்யாண வைபவம் முடிந்தபின் சுவாமி-அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும் ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும். இங்குள்ள யாளி சிற்பங்கள் கவினுற செதுக்கப்பட்டுள்ளன. இந்த ஊஞ்சல் மண்டபத்தை சேரகுளம் பிறவிப்பெருமாள் பிள்ளையன் கி.பி.1635ல் கட்டியிருக்கிறார். சோமவார மண்டபம், சுவாமி கோயிலின் வடபக்கம் காணப்படுகிறது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு இங்கே சிறப்பு அபிஷேகம் நடைபெறும். தற்பொழுது நவராத்திரியை ஒட்டியும் இங்கு பூஜை மேற்கொள்ளப்படுகிறது. 78 தூண்களையுடைய பெரிய மண்டபம் இது.

சங்கிலி மண்டபம், பெயருக்கேற்றார்போல சுவாமி கோவிலையும், அம்மன் கோவிலையும் இணைக்கிறது. 1647ல் வடமலையப்ப பிள்ளையன் அவர்களால் கட்டப்பட்டது. இம்மண்டபத் தூண்களில் வாலி, சுக்ரீவன், புருஷாமிருகம், பீமன், அர்ச்சுனன் உள்பட பல சிற்பங்கள் நெஞ்சை கொள்ளைக்கொள்கின்றன. சுவாமி கோவிலுக்கு முன்னால் மணி மண்டபம் காணப்படுகிறது. இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி ஒன்று தொங்குகிறது. நின்றசீர் நெடுமாற மன்னரால் உருவாக்கப்பட்டது. இங்கே ஒரே கல்லில் செதுக்கப்பட்ட, சிறு சிறு தூண்களைக் கொண்ட பெரிய தூண்களைக் காணலாம். ஒவ்வொரு சிறிய தூணையும் தட்டினால் ஒவ்வொரு சங்கீத ஸ்வரம் ஒலிக்கும்!  இவ்வகையில் மொத்தம் 48 சிறிய தூண்கள் உள்ளன. தமிழ்நாட்டில் இசைத்தூண்கள் அமைந்துள்ள திருக்கோவில்களில் காலத்தால் முற்பட்டது இதுவே.

நூறு தூண்களைக் கொண்ட வசந்த மண்டபத்தில் கோடைக் காலத்தில் வசந்தவிழா நடைபெறும். சுற்றிலும் சோலையாய் மரங்கள் உள்ளன. இந்தச் சோலைவனம் 1756ல் திருவேங்கிட கிருஷ்ண முதலியார் அவர்களால் அமைக்கப்பட்டது. சேரகுளம் பிறவிப் பெருமாள் பிள்ளையவர்களால் கட்டப்பட்டது, சிந்துபூந்துறைத் தீர்த்த மண்டபம். இம்மண்டபம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.  முக்கியமான  தீர்த்தவாரிகள் அனைத்தும் இங்கு நடைபெறுகின்றன. இதனைத் ‘தைப்பூச மண்டபம்’ என்பர்.

பெரிய தேர்

திருவிழாக்கள் தோறும் சுவாமியும், அம்பாளும் எழுந்தருள்வதற்காகப் பல வாகனங்களும் வேறெந்த கோவிலிலும் இல்லாதவகையில் இங்கே நிறைந்துள்ளன. தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய தேரைக் கொண்ட கோவில் என்ற சிறப்பும் உண்டு. 1505ம் ஆண்டில் இந்தத் தேர் வெள்ளோட்டம் விடப்பட்டது. இந்தத் தேரோடும் வீதிகள், அரியநாயக முதலியாரால்  உருவாக்கப்பட்டவை.  பெரிய தேர் எடை 450 டன். பஞ்ச மூர்த்திகளுக்கும் தேர் உண்டு. மாதாந்திர திருவிழாக்கள் தோறும் செப்புத்தேர் பவனிவருகிறது. தமிழ்நாட்டிலேயே வேறெந்த திருத்தேரிலும் காண இயலாத ஆயிரக்கணக்கான அற்புத மரச்சிற்பங்கள் கொண்ட அம்மன் தேர் கொண்ட பெருமை இக்கோவிலுக்கு உண்டு. 

தாமிர சபை


அருள்மிகு காந்திமதியம்மை உடனுறை நெல்லையப்பர் திருக்கோவிலில் தாமிர சபை குறிப்பிடத் தகுந்தது. சிதம்பரத்தில் பொற்சபை - ஆனந்தத் தாண்டவம், திருவாலங்காட்டில் ரத்ன சபை - ஊர்த்துவ தாண்டவம், மதுரையில் வெள்ளியம்பலம் - சுந்தரத் தாண்டவம், திருக்குற்றாலத்தில் சித்திர சபை - அசபா தாண்டவம் என நடனம் புரிந்த எம்பெருமான் நடராஜர், திருநெல்வேலி தாமிர சபையில் ‘பிரம்ம தாண்டவம்’ எனப்படும் ‘ஞானமா நடனம்’ ஆடுவதாக புராணங்கள் கூறுகின்றன.

இந்த சபையில், உற்சவ மூர்த்தி தாமிர சபாபதி என்றும் மூலவர் சந்தன சபாபதி என்றும் அழைக்கப்படுகின்றனர். அப்பர் பெருமானின் ‘குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்’ என்கிற பாடலுக்கு இலக்கணமான அக்னி சபாபதி என்கிற மற்றொரு அழகிய உற்சவ நடராஜர் சந்நதியும் இக்கோயிலில் காணவேண்டிய ஒன்றாகும். திருவாதிரைப் பெருவிழாவில் தாமிரசபையில் ஈசன் நடனமாடும் போது சபையின் இரு பக்கங்களிலும் அறுபத்துமூவருடன் காந்திமதி அன்னையும் நின்று அத்திருக்கூத்தை ரசிக்கும் நிகழ்வு நடத்தப்படுகிறது.

தனிச் சிறப்புகள்

இக்கோயிலுக்குப் பல தனிச்சிறப்புகள் உள்ளன.  திருஞானசம்பந்தரால் பாடப்பெற்ற தலம் இது. வேணுவனநாதர், நெல்லை கோவிந்தர் என்ற இரட்டைக் கருவறைகள் கொண்டது. முத்துசாமி தீட்சிதர் இத்திருத்தலத்து இறைவியை  சிறப்பாக பாடியுள்ளார்.  ஹேமாவதி ராகத்தில் அமையப்பெற்ற இந்த பாடல், ‘ஸ்ரீகாந்திமதிம்’ என ஆரம்பிக்கிறது. 

 வருடா வருடம் தை அமாவாசையன்று பத்ரதீபமும் நடைபெறுகிறது. இதில் பத்தாயிரம் விளக்குகள் ஏற்றப்படுகின்றன. ஆறாண்டுகளுக்கு ஒருமுறை தை அமாவாசையன்று, லட்சதீபமும் ஏற்றப்படுகிறது. பத்ரதீபம் மற்றும் லட்சதீப திருவிழாக்களின்போது மணி மண்டபத்தில் தங்கவிளக்கு, 2 வெள்ளி விளக்குகள் மற்றும் அவற்றைச் சுற்றி 8 தீபங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. 

பித்ருகர்மா என்னும்  நீத்தார் கடன்களை சரிவர நிறைவேற்றாதவர்கள் தை அமாவாசை தினத்தன்று நடைபெறும் பத்ரதீபம் அல்லது லட்சதீப விழாவின்போது தீபமேற்றினால் குடும்ப சாபங்கள் விலகும் என்பது ஐதீகம்.   கோடகநல்லூர் சுந்தரசுவாமிகளின் முயற்சியால் இந்த நிகழ்ச்சிகள் கோவிலில் இடம்பெற்றுள்ளன.

ஆறுமுக நயினார் சந்நதியில் ‘வித்யா சக்கரம்’  நிறுவப்பட்டுள்ளது. கல்வியில் சிறந்து விளங்க, ஸ்ரீவித்யா ஹோமம் செய்ய, ஏற்ற தலம் இது.
கணவன் மனைவி இடையே வேற்றுமை உருவாகாமல் இருக்கவும் இக்கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெறுகிறது.காந்திமதிக்கு தினமும் அர்த்தஜாம பூஜையின்போது வெண்ணிற ஆடை அணிவிக்கப்படுகிறது. மறுநாள் காலையில் விளாபூஜை (7 மணி) நடக்கும் வரையில் அம்பிகை வெண்ணிற புடவையிலேயே காட்சி தருகிறாள்.

  இத்திருக்கோயில் இறைவனுக்கான உச்சிகால பூஜை நிவேதனம் இறைவி சந்நதி மடப்பள்ளியில் தயார் செய்யப்பட்டு, அர்ச்சகர்களால் எடுத்துச்செல்லப்பட்டு இறைவனுக்கு படைக்கப்படுகிறது. இறைவியே இறைவனுக்காக உணவு தயார்செய்து எடுத்துச் சென்று அளிப்பதாக ஐதீகம். பங்குனி திருவிழா நாட்களில் தினந்தோறும் மாலையில் நடைபெறும் சாயரட்சை பூஜையில் உடையவர் லிங்கம் எனப்படும் லிங்கத்திற்கு நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் கலந்து கொள்ளும் திருமணமான பெண்கள் தீர்க்க சுமங்கலிகளாய் வாழ்வர் என்பது ஒரு நம்பிக்கை.
 இது, புனர்பூச நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலமாகும்.  நன்றி:தினகரன்.

திங்கள், 25 ஜூன், 2018

ஆதி விநாயகர் இப்பூவுலகில் யானையின்தலையில்லாத விநாயகர்...


ஆதி விநாயகர் இப்பூவுலகில் யானையின்தலையில்லாத விநாயகர்...

 ஆதி விநாயகர் கோவில் உள்ள ஊரின் பெயர்
`திலதர்பணபுரி"  தற்போது `செதலப்பதி
' என்ற ஊரில் உள்ள "ஆதி விநாயகர்"!  இப்பூவுலகில், "யானையின் தலையில்லாத விநாயகர்", இவர் ஒருவர் தான்!

   இந்த ஆதி விநாயகர் கோவில் உள்ள ஊரின் பெயர்
`திலதர்பணபுரி"
 தற்போது `செதலப்பதி' என்று
திரிந்து அழைக்கப்படுகிறது
    ராமபிரான் வனவாசம் செய்யும் தருணம் இவ்வூர் வழியாக செல்லும் போது தசரதனின் மறைவை அறிந்து தில(எள்) தர்பணம் செய்து வழிபாடு செய்ததால் திலதர்பணபுரி என்று பெயர் வந்தது பின்நாளில் செதலப்பதி என்று திரிந்து விட்டது.
  திருக்கோவிலூர் செல்வகணபதி வந்தனம்

ஞாயிறு, 24 ஜூன், 2018

ஆறுமுகநயினார் சன்னிதியை திறந்த அமாவாசை சித்தர்


ஆறுமுகநயினார் சன்னிதியை திறந்த அமாவாசை சித்தர்

#நெல்லை மாநகரில் மிகவும் அற்புதமான தெய்வக் காரியத்தைக் குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் திறம்படச் செய்துள்ளார். இவர் நெல்லைக்கு அழைத்து வந்த சித்தரால் தான் நெல்லையப்பர் கோவிலில் மூடிக்கிடந்த ஆறுமுக நயினார் சன்னிதி திறக்கப்பட்டது என்பது ஆன்மிக வரலாற்றில் மறக்க முடியாத உண்மை.

குளத்தூர் ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் நெல்லை நகரத்தில் வெள்ளந்தாங்கி பிள்ளையார் கோவில் தெருவில் அரண்மனைக் கட்டி வசித்து வந்தவர். தற்போதும் அவர் வழி வந்த வாரிசுகள் அங்கு வசித்து வருகிறார்கள். தில்லைத் தாண்டவராயர், ஆன்மிகத்தில் மிகச்சிறந்தவராக விளங்கினார். இவர் தெய்வங்களை வித்தியாசமாக வணங்குவார்.

தல யாத்திரை செல்லும் போது ஆங்காங்கே தெய்வங்களை வணங்க வேண்டுமே.. அதற்காக வித்தியாசமானக் கைத்தடிகளை உருவாக்கி எடுத்துச்செல்வார். அந்தக் கைத்தடியில் தலைப்பகுதியைத் திறந்தால் அங்கே விநாயகர், லட்சுமி உள்பட பல தெய்வங்கள் காட்சியளிப்பார்கள். இவர் ஸ்நானம் செய்யும் இடத்தில் கைத்தடி தெய்வங்களை வைத்து பூஜை செய்து வணங்கி வந்தார். அடிக்கடி காசிக்கு சென்று காசி விஸ்வநாதரை வணங்கி வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஒரு முறை காசி சென்றபோதுதான் அமாவாசை சித்தரைச் சந்தித்தார். நாகர்கோவிலைச் சேர்ந்த சித்தர் இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு, பிறகு துறவு வாழ்க்கைக்கு வந்தவர். தன் கால் போனப் போக்கில் நடந்து பல தலங்களுக்கு யாத்திரை செய்து இறுதியில் காசியை அடைந்திருந்தார்.

இவரது ஆன்மிக வாழ்க்கைத் தில்லைத் தாண்டவராயரை மிகவும் கவர்ந்து விட்டது. எனவே அவரைக் காசியில் இருந்து நெல்லைக்கு அழைத்து வந்தார். அமாவாசை சித்தர் நெல்லை டவுனில் வெட்ட வெளியில் வெயிலில் சுருண்டுக் கிடப்பாராம். இரவில் நிலா ஒளி விழும் விதத்தில் திறந்த மார்புடன் கட்டாந்தரையில் படுத்துக் கிடப்பாராம். இது ஒரு வகையானத் தியானம் என்பதை அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இவருடைய செய்கை எல்லோருக்கும் வித்தியாசமாகத் தெரிந்துள்ளது.


ஆனாலும் அமாவாசை சித்தரை எல்லோரும் மதித்து வந்துள்ளனர். இவர் பகல் வேளையில் கடை வெளியில் சுற்றி வருவார். வியாபாரிகள் தரும் உணவைச் சாப்பிடுவார். அமாவாசையில் மட்டும் தான் இவர் குளிப்பார். மற்ற நாட்களில் சூரியக் குளியலும், நிலாக் குளியலும் தான். எனவே தான் இவருக்கு ‘அமாவாசை சாமியார்’ எனப் பெயர்.

அமாவாசை சாமியாரும், தில்லைத் தாண்டவராயரும் ஒரு நாள் நெல்லையப்பர் கோவிலுக்குள் சென்றனர். முழுவதும் கண்ட ராம பாண்டியன் பிரதிஷ்டை செய்த நெல்லையப்பரை மனமுருக வேண்டி நின்றனர். பின் பிரகாரம் சுற்றி வந்தனர். அப்போது பிரகாரத்தில் உள்ள ஆறுமுகநயினார் கோவில் பூட்டிக் கிடந்தது. இதைக் கண்டு மனம் நொந்து போனார்கள். ஜமீன்தார் தில்லைத் தாண்டவராயர் வீட்டுக்கு வந்த பின்பும் உணவு உண்ண முடியாமல் தவித்தார். எப்போதும் ஆறுமுகநயினார் கோவில் நினைவாகவே இருந்தார். தில்லைத் தாண்டவராயர் மனமுடைந்து இருப்பதை அறிந்த அமாவாசை சாமியார், இதற்கு ஒரு தீர்வு காண வேண்டும் என நினைத்தார்.

திருநெல்வேலியில் தாமிரபரணி கரையில் உள்ள கருப்பந்துறையில் ஒரு நந்தவனம் இருந்தது. கருப்பந்துறைக்கு பெயர் காரணமே ஆன்மிகம் சார்ந்தது தான். சிவனுக்கு மிகவும் பிடித்த மலர் குவளை. இந்தக் குவளைப் பூக்கள் கருநீல நிறமாகக் காட்சித் தரும். எனவே கருப்பு+பூ+துறை = கருப்பூந்துறை என்றானது. அதுவே காலப்போகில் ‘கருப்பந்துறை’யாக மாறிவிட்டது.

கருப்பந்துறை நந்தவனத்துக்கு அடிக்கடி அமாவாசை சித்தர் வந்து செல்வது வழக்கம். காரணம் அங்குள்ள ஆசிரம நந்த வனத்தில் போகர் மாயாசித்தரும், வல்லநாட்டு சாது சிதம்பர சித்தரும் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் இருவரும் அமாவாசை சித்தரிடம் ஆன்மிகக் கருத்துகளைப் பேசி மகிழ்வார்கள்.

இவர்கள் இருவர் இருக்கும் இடத்தில்தான், அமாவாசை சித்தரும் வந்து அமர்ந்திருப்பார். எனவே தான் ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்கக் குளத்தூர் ஜமீன்தார் நினைத்தவுடன், இவர்களிடம் ஆலோசனை நடத்த வேண்டும் என்று கருப்பந்துறை நந்தவனத்துக்கு ஓடோடி வந்தார் அமாவாசை சித்தர்.

ஆறுமுகநயினார் சக்தி மிக்கவர். அவர் சிலையே அபூர்வமானது. ஆறுமுகம் கொண்ட அவர் முகத்தை எட்டு திசையில் எங்கிருந்து பார்த்தாலும் ஆறு முகத்தையும் தரிசிக்கலாம். அப்படியொரு வடிவமைப்பு, வேறு எந்தக் கோவிலிலும் யாரும் கண்டதில்லை. அண்டிவரும் பக்தர் களைக் காப்பாற்ற வல்லவர். அப்படிப்பட்ட சுவாமி சன்னிதி, சிலரது சதியால் பூட்டப்பட்டு விட்டது. இதுபற்றிதான் மற்ற இரு சித்தர்களுடனும், அமாவாசை சித்தர் ஆலோசித்தார்.

‘இதற்காக எவ்வளவு பெரிய யாகம் வேண்டுமானாலும் செய்யுங்கள். இதற்கு ஆகும் செலவுகளை நான் ஏற்றுக்கொள்கிறேன்’ என குளத்தூர் ஜமீன்தார் உறுதி அளித்தார். சித்தர் பெருமக்கள் கூடினர். போகர் மாயா சித்தர் ஆசிரமத்தில் வைத்து ஸ்ரீசக்கரத்தை உருவாக்கினர். இச் சக்கரம் அன்னையின் அம்சம் கொண்டது. சக்கரம் இருக்கும் இடத்தில் எந்த வித தீயச் சக்தியும் ஒழிந்து போகும். குறிப்பிட்ட நாளில் ஸ்ரீசக்கரத்தை ஆறுமுகநயினார் சன்னிதியில் பிரதிஷ்டை செய்தார் அமாவாசை சித்தர்.

தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. என்ன ஆச்சரியம். நம்பூதிரிகளால் ஏற்படுத்தப்பட்ட தடைகள் உடைத்தெறியப்பட்டது. கோவில் சன்னிதி திறக்கப்பட்டது. அதன்பின் ஆறுமுக நயினாருக்கு அபிஷேகம், ஆராதனை எல்லாமே மிகச்சிறப்பாக நடந்தது. பக்தர்கள் வர ஆரம்பித்தனர். இந்நாள் வரை இங்கு வந்து நன்மை அடைந்தப் பக்தர்கள் எண்ணிக்கை ஏராளம்.

காலங்கள் கடந்தது. தினமும் ஆறுமுகநயினார் சன்னிதியே கதி என கிடந்தார் அமாவாசை சித்தர். அவர் கூறும் வாக்குகள் பலித்தன. எனவே இவரைத் தேடிப் பக்தர்கள் அதிகம் கூட ஆரம்பித்தனர். இது சிலருக்குப் பிடிக்காமல் போனது. இதனால் அமாவாசை சித்தரை வெளியேற்ற முயற்சி செய்தனர்.

‘கோவில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்து விட்டது. இனி நான் எங்கிருந்தால் என்ன?' என்று கோவிலை விட்டு வெளியே வந்து விட்டார் அமாவாசை சித்தர். சித்தன் போக்கே சிவன்போக்கு என்று கடைக் கடையாக அலைந்தார். அவர்கள் தரும் உணவை உண்டார். சில நேரம் ஜமீன்தார் வீட்டுக்கு வருவார். அங்கு அவருக்கு உணவு படைக்கப்படும். ஜமீன்தாரோடு யாத்திரைச் செல்வார். கருப்பந்துறை ஆசிரமத்திலும் வந்து நாள் கணக்கில் தவமேற்றுவார்.

ஒருநாள், நந்தவன ஆசிரமத்துக்கு சென்று போகர் மாயா சித்தரிடம், ‘எனக்கு இந்த இடத்தைத் தாருங்கள்' என ஒரு குறிப்பிட்ட இடத்தில் கோடு போட்டு காண்பித்தார் அமாவாசை சித்தர். முக்காலும் உணர்ந்தப் போகர் மாயா சித்தரும் ‘சரி’ என்று கூறி விட்டார்.

போகர் மாயா சித்தர், மகேந்திரகிரி மலைக்கு சென்று அடர்ந்தக் காட்டுக்குள் தியானம் செய்துக் கொண்டிருந்தார். அவர் மனதுக்குள் செய்தி ஒன்று கிடைத்தது. உடனே அவர் அவசரம் அவசரமாக மலையை விட்டுக் கிளம்பினார். வல்லநாட்டில் தியானம் மேற்கொண்டிருந்த வல்லநாட்டுச் சித்தருக்கும் அந்தச் செய்தி கிடைத்தது. அவரும் நெல்லை நோக்கிக் கிளம்பினார்.

அமாவாசை சித்தர் ஜீவ சமாதி அடையப்போகிறார் என்பதே அவர்களின் மனதில் தோன்றியச் செய்தி.

அவர்களின் மனம் சொன்னது போலவே அமாவாசை சித்தர் சமாதி அடைந்தார். அமாவாசை சித்தர் கேட்டுக்கொண்டபடி, போகர் மாயா சித்தர் தன்னிடம் அவர் காட்டிய இடத்தில் சமாதி அமைத்தார்.

அவரது சமாதி மீது ஆறுமுக நயினார் சன்னிதியைத் திறக்க பயன்படுத்திய ஸ்ரீசக்கரத்தை, வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகளும், ஸ்ரீபோகர் மாயா சித்தரும் பிரதிஷ்டை செய்தனர்.

சித்தர் ஒருவர் அடங்கி இருக்கும் இடமே சிறப்பு. அதிலும் அவருக்கு இரண்டு சித்தர்கள் சமாதி வைத்திருக்கிறார்கள் என்பது அதை விடச் சிறப்பு. சமாதி மேலே ஆறுமுகநயினாரின் ஆலயத்தைத் திறக்க உதவிய சக்கரமும் பொருத்தப்பட்டிருப்பது மேலும் சிறப்பு. அதனால் தான் பக்தர்கள் இங்கு வந்து வணங்குவதைப் பெரும் பாக்கியமாகக் கருதுகிறார்கள்.

இரண்டு சித்தர்கள்

மாயா சித்தர், மிகவும் விசேஷமானவர். இவரது காலடிப் படாத இடமே மகேந்திர கிரி மலையில் இல்லை எனக் கூறலாம். இந்த மலையில் சிவன் பாதம், தாயார் பாதம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் உள்ளது. மனிதர்கள் செல்ல முடியாத, தேவர்கள் மட்டுமே வாழும் தேவபூமியும் இங்குண்டு. அவ்விடங்களில் எல்லாம் அமர்ந்து தியானம் செய்வார், மாயா சித்தர்.

மகேந்திரகிரி மலையில் தியானம் செய்வது சாதாரணமான விஷயம் அல்ல. அங்கு செல்ல வேண்டும் என்றால், 41 நாள் விரதம் இருக்க வேண்டும். இதை மிகச் சுலபமாகக் கையாளுபவர் மாயா சித்தர்.

அதுபோலவே வல்லநாடு சித்தரும். தனது உடலை எட்டு துண்டாகப் பிரித்து நவக் கண்ட யோகம் செய்யக் கூடியவர். ஒரே நேரத்தில் பல இடத்தில் இருப்பவர். இவர் வெண்குஷ்டம் போன்றத் தீராத நோய்களைத் தீர்க்க வல்லவர். பொதிகை மலையில் வெள்ளை யானையை வரவழைத்து பக்தர்களுக்கு காட்டியவர். செண்பகாதேவி அருவி அருகே உள்ள கசாயக் குகையில் அமர்ந்து தவம் புரிபவர். ஒருசமயம் சதுரகிரி மலையில் ஒற்றைக் கொம்பன் என்னும் மதம் பிடித்த யானையைத் தனது கண்ணசைவால் கட்டுக்குள் கொண்டு வந்தவர்.

இவரது சித்தர் பீடம் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள பாறைக்காட்டில் உள்ளது. அங்குள்ளத் தியான மடத்தில் ஒற்றைக் கொம்பன் யானை சிரசு பத்திரமாக வைத்து விளக்கு போட்டு வணங்கப்பட்டு வருகிறது. இவரை வள்ளலாரின் வழித்தோன்றல் எனவும் கூறுவர். இவர் பீடத்துக்கு வந்து சென்றாலே நமது முன்வினை, பாவம் எல்லாம் தொலைந்து விடும் என்பது ஐதீகம்.

அமைவிடம்

நெல்லை டவுணில் இருந்து மேலப்பாளையம் செல்லும் சாலையில், கருப்பந்துறையில் உள்ள நந்த வனத்தில் அமாவாசை சித்தரைத் தரிசனம் செய்யலாம். இங்கு வரும் பக்தர்களுக்கு புற்று நோய் உள்படத் தீராத நோய்கள் தீருகிறது. ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்யப்பட்ட அமாவாசை சித்தரை வணங்குவதால் பில்லி சூனியம் நீங்கும். திருமணத் தடை அகலும். குழந்தைப் பாக்கியம் கிடைக்கும் என்கிறார்கள்.

வியாழன், 21 ஜூன், 2018

திருநெல்வேலி ஆனிப்பெருந்தேர்த்திருவிழா திருத்தேர் சிறப்புக்கள்:


திருநெல்வேலி ஆனிப்பெருந்தேர்த்திருவிழா திருத்தேர் சிறப்புக்கள்:

*கி.பி.1906-1907 ம் ஆண்டில் வெளிவந்த திருநாவுக்கரசு என்ற பத்திரிகை செய்தியின் ஆதாரத்தின் அடிப்படையிலும்;1965-1966.இத்திருக்கோயில் நாட்காட்டியின் தகவலின் அடிப்படையிலும் உள்ள தகவல்கள் அடிப்படையில் கொல்லம் ஆண்டு 730.காளயுக்தி வருஷம்( கி.பி.1555 )வைகாசி மாதம் பெரிய கொடிமரம் பிரதிஷ்டை  செய்யப்பட்டதாகவும்;கொல்லம் 780 ம் (கி.பி.1605 ) ஆண்டு சவுமிய வருஷம் தை மாதம் திருப்பணி பண்டாரம் தருமம் பெரிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.**

1988.ம்வருடம் ஜுன் மாதம் 28.ம் தேதி வெளிவந்த தினமலர் நாளிதழில் "383.ஆண்டுகளாக பவனிவரும் நெல்லையப்பர்  -காந்திமதி திருத்தேர்" என்று தலைப்பு செய்தி வெளியிட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது*

திருநெல்வேலியின் நடுநாயகமாக அமைந்திருப்பது அருள்தரும் அன்னைகாந்திமதிஅம்பாள் உடனுறை அருள்மிகு  சுவாமி நெல்லையப்பர்  திருக்கோயில். இக்கோயில் சுமார் 1500 ஆண்டுகள் பழைமையானது. திருஞான சம்பந்த மூர்த்திகளால் பாடல் பெற்றது.


இக்கோயிலில் ஆனிப் பெருந்திருவிழாவும், ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழாவும் முக்கியமான திருவிழாக்களாகும்.

இதில் ஆனிப் பெருந்தேர்த்திருவிழா 45 நாட்கள் நடக்கும் மிகப்பெரும் திருவிழாவாகும். இவ்விழா அன்னைபிட்டாபுரத்தி அம்மன் கோயிலில் தொடங்குகிறது. அதன்பிறகு பிள்ளையார் திருவிழா,முதலி மூவர்  சந்திரசேகர்-பவாணி அம்பாள் திருவிழா இவை முடிந்தவுடன் சுவாமி நெல்லையப்பருக்குக் கொடியேறுகிறது. இதுவே ஆனிப் பெருந்திருவிழாவின் மையப்பகுதியாகும்.

இத்திருவிழாவில் மூன்று திருநாட்கள் முக்கியத்துவம் உடையன.

4 ஆம் திருநாளில் நெல்லையப்பரும் காந்திமதியும் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி 63 நாயன்மார்களோடு திருவீதி உலா வருவர்.

8 ஆம் திருநாளில் இத்தலத்துக்குரிய மூர்த்தியான கங்காள நாதர் எழுந்தருளுகின்றார். கங்காள நாதர் நெல்லை மாவட்டத்தில் மட்டுமே அறியப்படுபவர். தமிழகத்தின் பிற தலங்களில் பிட்சாடனர் என்று வழிபடப்படும் மூர்த்தியே ஒரு சில மாற்றங்களுடன் இங்கு கங்காள மூர்த்தியாக வழிபடப்படுகிறார்.

9 ஆம் திருநாள் தேரோட்டம். இன்றும் நெல்லை மாவட்ட மக்கள் ஆனித்திருவிழா என்று சொல்ல மாட்டார்கள். ஆனித்தேர்த்திருவிழா தேரோட்டம் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவுக்கு அருள்மிகு சுவாமி நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் மிகப் பிரபலமானது.

இன்று தமிழகத்தில் உள்ள தேர்களில் சுவாமி நெல்லையப்பர் திருத்தேரே மிகப்பழைமையான தேராகும்.

நெல்லைத் தேர் கி.பி.1605இல் செய்யப்பட்டு இன்று வரை தடை எதுவுமின்றி ஓடிவரும் தேர் எனும் பெருமைக்குரியது.

1947 ஆம் ஆண்டு நம் நாடு சுதந்திரம் அடைந்ததன் வெற்றியைக் கொண்டாடுவதற்காக நெல்லை மக்களின் விருப்பப்படி தேரின் உச்சியில் ரிஷபக் கொடியோடு நம் தேசியக் கொடியும் பட்டொளி வீசிப் பறந்தது என்று கூறுகிறார்கள்.இது போல் இந்தியாவில் வேறெங்கும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று வரையிலும் இயந்திரங்களின் உதவியின்றி முழுக்க முழுக்க மனிதச் சக்தி ஒன்றினாலேயே இழுக்கப்படும் மிகப்பெரிய தேர் இது ஒன்றுதான் என்பது இதன் தனிச்சிறப்பாகும்.

4 வெளிச்சக்கரங்களும் 4 உள் சக்கரங்களும் கொண்டு, 450 டன் எடையுள்ள 28 அடி அகலமும்,28 அடி நீளமும்,35 அடி உயரமும்    அலங்காரம் செய்தபின் 80 அடி உயரமும் கொண்டு  தமிழகத்திலேயே 3 வது அளவில் பெரியதாக விளங்கும் இத்தேரின் இரும்பு அச்சு லண்டனில் செய்யப்பட்டதாகும்.
சதுர வடிவிலான இத்தேரின் முன்பகுதியில் நடுநாயகமாக இறைவனும் அம்மையும் ரிஷப வாகனத்தில் இருக்கும் சிற்பம் உள்ளது. இதன் இருபுறமும் கணபதியும் முருகனும் அவரவர் வாகனங்களில் வீற்றிருக்கின்றனர். இடப்பக்கம் இத்தலத்தின் மூர்த்தியான கங்காள நாதர் குண்டோதரன், மான், மோகினி இவர்களுடன் இருக்கின்றார். இவரை அடுத்து இராவணன் கயிலை மலையை அசைக்கும் சிற்பம் உள்ளது.

வலப்பக்கம் நடராஜர் நடனமாடுகிறார். தேரின் பின்பகுதியில் விஷ்ணுவின் தசாவதாரங்கள் காணப்படுகின்றன. தேரின் ஒவ்வொரு மூலையிலும் வீரபத்திரர் உள்ளார். தேரின் கீழ்மட்டத்தில் பூதகணங்கள் வரிசையாக உள்ளன. தேரின் மேற்குப் பகுதியில் பாலியல் சிற்பங்கள் காணப்படுகின்றன. இதற்கும் மேல் விஸ்வகர்மா சிற்பம் வேலைப்பாட்டுடன் திகழ்கிறது.

தேரின் பின்னால் கீழ்ப்பகுதியில் வீரர்கள் போர் செய்யும் சிற்பத் தொகுதி உள்ளது. தேரின் மேல் பகுதியில் அகத்தியர், முனிவர்கள்,யானை உரி போர்க்கும் இறைவன், விரிந்த சடையுடன் தவம் செய்யும் யோகிகள் எனப் பல வகையான சிற்பங்களை நாம் காணலாம். மொத்தத்தில் இத்தேர் ஒரு நடமாடும் கலைக்கூடம் எனலாம்.

சிறப்புமிக்க திருநெல்வேலி ஆனித்தேர் திருவிழா 27.6.2018.அன்று காண அன்புடன் அழைக்கும்:  என்றென்றும் இறைபணியில் ஆன்மிகச் சோலை .

புதன், 20 ஜூன், 2018

கோயம்புத்தூர் அன்னை சிவம்மா தாயீ


#கோயம்புத்தூர் அன்னை சிவம்மா தாயீ

           
 பெங்களூர் நகரத்தின் மையப் பகுதியான மடிவாளா எனும் இடத்தில் உள்ள  ரூபன் அக்ரஹாராவில் சீரடி சாயிபாபாவிற்கு அற்புதமான ஆலயத்தைக் கட்டி உள்ள சீரடி சாயிபாபாவின் நேரடி சிஷ்யையான அன்னை  சிவம்மா தாயீ  என்பவருடைய வாழ்கை வரலாறு அற்புதமானது. அவரைப்  பற்றி பலருக்கும் தெரியவில்லை. அவர் கட்டி உள்ள ஆலயம் பற்றியும் வெளியில் அதிகம் எவருக்கும் தெரியவில்லை என்பதற்குக் காரணம் அந்த  ஆலயம் அக்ராஹாரத்தின் மத்தியில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்து உள்ளது. ஒரே வளாகத்துக்குள்  மூன்று சாயி ஆலயங்களை சிவம்மா தாயீ அமைத்து உள்ளார். அந்த மூன்று ஆலயங்களையுமே எந்த விதமான விளம்பரமும் இன்றி, ஆடம்பரமும் இன்றி விளம்பரம் போட்டு, விழாக்களை நடத்தி  நன்கொடை வசூலிக்காமல், தன்னிடம் வந்த பக்தர்கள் தாமாக முன் வந்து கொடுத்த காணிக்கைகளைக் கொண்டே கட்டி உள்ளார் என்பது மிகவும் அதிசயமான விஷயம். அந்த அன்னை ஆடம்பரமான வாழ்கையை வாழவில்லை. ஒரு தெய்வத்தை எப்படி அடக்கமாக இருக்க வேண்டுமோ அத்தனை அடக்கமாக இருந்துள்ளார்.

                      📌 அந்த அன்னை கட்டி உள்ள அந்த ஆலயங்களில் நுழைந்து விட்டால் நம்மை அறியாமல் நமக்குள்  ஒரு வித அமைதியும், மனதில் இனம் புரியாத படபடப்பும் தோன்றுவதைக் காணலாம். அத்தனை உயிர் உள்ள ஆலயமாக அது உள்ளது என்பது உண்மை. ஒரு முறை அங்கு செல்லும் பாபாவின் பக்தர்கள் அடுத்தடுத்து அங்கு செல்ல விரும்புவர்கள் என்பது மட்டும் நிச்சயம். அந்த ஆலயத்தில் உள்ள மிக முக்கியமான காட்சி என்ன என்றால் சீரடி பாபா தனது கையில் ஒரு பிட்சை பாத்திரத்தை வைத்துக் கொண்டு பகீரைப் போல நிற்கும் சிலைதான். அந்த கோலத்திலான சிலை உலகிலேயே வேறு எங்குமே கிடையாது. அந்த கோலத்தில் உள்ள தம்முடைய சிலையை செய்து அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு பாபாவே சிவம்மா தாயீக்குக் ஆணை பிறப்பித்தாராம். இனி சிவம்மா தாயீயின் வரலாற்றைப் பார்க்கலாம் .

                        📍 இந்த அம்மையார் தமிழ் நாட்டில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக் கிணறு என்ற கிராமத்தில் 1889 ஆம் ஆண்டு வைகாசி மாதம் எனப்படும் மே மாதம் பதினாறாம் தேதியன்று (29-05-1889) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் வேலைப்ப கவுண்டர் மற்றும் தாயார் புஷ்பவதி என்பவர். பிறந்த குழந்தைக்கு ராஜம்மா என்று பெயர் வைத்தார்கள். சிவம்மா தாயீ எனப்பட்ட ராஜம்மாவைத் தவிர அந்த தம்பதியினருக்கு இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் பிறந்தனர். அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது சாதாரண விஷயம்.

                  📌ஆகவே அந்த தம்பதியினர் சிவம்மா தாயீயின் மாமனுடன் கூட்டுக் குடும்பத்தில் இருந்தார்கள்.
1904 ஆம் ஆண்டு ராஜம்மாவிற்கு பதிமூன்று வயதான போது அவருக்கு திரு சுப்ரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சுப்ரமணி கோயம்பத்தூரில் ஒரு மில்லில் சூபர்வைசராக வேலைப் பார்த்து வந்தார். திருமணம் ஆகி ஒரே ஆண்டில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு மணிராஜ் எனப் பெயரிட்டார்கள். அவர்களின் வாழ்கை நல்ல மகிழ்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது.

                     📌 ராஜம்மாவின் தந்தையின் மூத்த சகோதரர் ஸ்ரீ தங்கவேல் என்பவர் ஒரு கட்டத்தில் சந்நியாசி ஆகி  ஊரில் இருந்த ஆலயங்களுக்கு சென்றவாறு பல இடங்களிலும் சுற்றித்  திரிந்து கொண்டு இருந்தார். அப்போது மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் அவர் பிரபலமானவராக இருந்தார். மேலும் அவர் சீரடி சாயிபாபாவுடனும்  நேரடி தொடர்புக் கொண்டு இருந்தார்.  ஷீரடி சாய் பாபா என்ற மகான் பொள்ளாச்சி அருகில் உள்ள சிறிய கிராமத்தில் வந்து இருக்கிறார் என தங்கவேல் , 1906 ஆம் ஆண்டு  ராஜம்மாவை அழைத்து சென்றார் .

            📌 ஆனால் சாய் சத்சரித்திரம் கூறுவது , 1858 முதல் 1918 ஆம் ஆண்டுவரை சீரடி சாயி பாபா சீரடி எல்லையைத்  தாண்டி வெளியில் எங்குமே சென்றது இல்லை என்றக் கூற்று இருந்தாலும் சாயிபாபா கடவுளின் அவதாரம். பாபாவைப் போன்ற மகான்களினால் ஒரே நேரத்தில் பல இடங்களிலும் காட்சி தர முடியும். அப்படிப்பட்ட சக்தியை அவர்கள் பெற்று இருந்திருக்கின்றார்கள். பாபாவும் ஷீரடியை விட்டு வேறு எந்த இடத்திற்கும் சென்றது இல்லை .  எப்போதாவது ஷீரடி  அருகில் 5 கிமீ  உள்ள கிராமத்திற்கு மட்டும் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்று வருவர் . மற்றபடி அவர் வாழ்நாள் முழுவதும் ஷீரடியில் மட்டுமே இருந்தார்  என சாய் சத்சரித்திரம் தெளிவாக கூறுகிறது .

                  📍  இந்த சம்பவத்தை வைத்து பார்த்தால் பாபா எங்கும்நிறைந்து இருக்கிறார் என்பது உறுதியாகிறது . சாய் பாபா அந்த கிராமத்தில் இரண்டு நாட்கள் சூட்சும உடம்பில்  தங்கியிருந்தார் .  அந்த சமயம் பாபாவின் வயது அப்போது 70 அல்லது 71 இருக்கும். சாயி பாபா சிவன் மற்றும் தத்தாத்ரேயர் அவதாரம்.  தத்தாத்ரேயர் பல இடங்களில் ஒரே சமயத்தில் காட்சி தந்திருப்பவர் என்பது தத்தாத்ரேய சரித்திரம். ஆகவே தத்தாத்ரேயர் அவதாரமான சாயி பாபா கோயம்பத்தூருக்கு அருகில் இருந்த பொள்ளாச்சிக்கு வேறு உடலில் வந்திருந்தால் அது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் இல்லைதான். ஆனால் அவர் அங்கு வந்திருந்ததும் உண்மைதான்.

                   📍 அந்த விஜயத்தின்போது பதினைந்து வயதான ராஜம்மாவும் பாபாவை தரிசனம் செய்ய அங்கு சென்றார். ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் ஆணும் பெண்ணும் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். வந்திருந்த அனைவரிடமும் பாபா அன்புடன் பேசினார். பாபா அந்த ஊரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் . பாபாவிடம் தமது சகோதரர்களுடைய அனைத்து குழந்தைகளைளையும் (இளம் வயதானவர்கள்) தங்கவேல் அழைத்துச் சென்றார்.  வரிசையாக நின்று கொண்டு இருந்த அந்த இளம் குழந்தைகள் அனைவரையும் சிறிது நேரம் ஊற்றுப் பார்த்த பாபா அதில்  நின்று இருந்த ராஜம்மாவை தனது அருகில் அழைத்தார். ராஜம்மா பாபாவை தரிசனம் செய்தபோது  அவர்க்கு 15 வயது . அந்த நேரம்  அவருக்கு 1 வயதில் மணிராஜ் என்ற ஆண் குழந்தை இருந்தது . ராஜம்மா காதில் பாபா காயத்திரி மந்திரம் ஓதினார்  மற்றும் அதனுடன் ஒரு காகிதத்தில் காயத்திரி மந்திரத்தை பென்சிலால் தமிழில் எழுதி கொடுத்தார் .

                   📌அனைவருக்கும் ஆச்சர்யம். பாபா ஒரு பெண்ணுக்கு மந்திரோபதேசம் செய்தார்…… அதுவும் காயத்ரி மந்திரம் !! பாபாவிடம் இருந்து காயத்ரி மந்திரோபதேசம் பெற்ற முதலும், முடிவுமான ஒரே பெண்மணி ராஜம்மாவாகத்தான் இருக்க வேண்டும் . அது முதல் பாபாவே ராஜம்மாவின் மானசீக குரு ஆனார்.

                   📍இதில் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். பாபாவின் சரித்திரத்தில் யாருக்குமே அவர் காயத்ரி மந்திரோபதேசம் செய்துள்ளதாக எழுதி வைத்து இருக்கவில்லை. அதற்குக் காரணம் ராஜம்மா சீரடிக்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டு இருந்தாலும் அவருக்கு தமிழ் மொழியைத் தவிர வேறு மொழி பேசத் தெரியாது. அதனால் ராஜம்மா சீரடியில்  எவருடனும் பழகியது இல்லை. வேறு எவரிடமும் பாபாவுடனான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதும்  இல்லை. ஆகவேதான் சிவம்மா தாயீ எனப்பட்ட ராஜம்மாவின் விவரங்கள் சாயி சரித்திரத்திலோ அல்லது பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமி அவர்கள் எழுதிய  சரித்திரங்களிலோ காணப்படவில்லை.  சாயியின் சரித்திரத்தை எழுதி உள்ள ஹேமாட் பந்த் அவர்களின் புத்தகம் மற்றும் பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமி  அவர்களின் புத்தகத்தில் ராஜம்மாவை பற்றி  எந்தக் குறிப்புமே இல்லை .

                   📌அதன்பின் இரண்டாம் நாட்கள் கழித்து பாபா அந்த கிரமத்தை விட்டு  மறைந்தார் . அவர் இருந்ததற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை . பின் ராஜம்மாக்கு பாபா எழுதி கொடுத்த அந்த காகிதம் துளைந்து போனது .

                📍பாபா அன்று கனவில் தோன்றி , அரிசி சேமித்து வைக்கும் டிரமில் உள்ளது என தெரிவித்தார் .  முதல் தரிசனத்தைப் பெற்ற ராஜம்மாவிற்கு மீண்டும் சாயிபாபாவைக் காண வேண்டும் என்ற ஆசை எழுந்தது. முதலில் அவளுக்கு அங்கு செல்ல கணவரின் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் பின்னர் 1908 ஆம் ஆண்டு கணவரின் சம்மதத்துடன் தன் குடும்பத்தினருடன் சீரடிக்கு ராஜம்மா சென்றார்.  துவாரகாமாயியில் பாபாவின் அற்புதமான தரிசனம் கிடைத்தது. பாபா அனைவருக்கும் ”அல்லா பலா கரேகா” என வாழ்த்தினாலும் ராஜம்மாவை மட்டும் தமிழில் ” நல்லா இரு ” என கூறி ஆசிர்வதித்தாராம். மேலும் ராஜம்மாவுடன் பாபா எப்போதுமே தமிழில் பேசுவாராம். இந்த செய்தியும் சற்று ஆச்சர்யமாக உள்ளது. காரணம் பாபா எப்போதும் அராபிக், உருது, இந்தி மற்றும் மராத்திய மொழிகளில்தான் பலருடன் பேசி உள்ளார். ஆனால் பாபாவுக்கு தமிழிலும் பேச முடியும் என்ற ஆதாரபூர்வமான செய்தியை சிவம்மா தாயீ மூலம் மட்டுமே அறிய முடிந்துள்ளது. இந்த சம்பவத்தை ராஜம்மாவே பின்னர் தனது வாழ்கை வரலாற்றை எழுதியவரிடம் கூறினாராம்.

                     📌ராஜம்மா ஷீரடியில் பாபாவை பார்த்தபோது மெய்மறந்தார் .பாபா பற்றி அவர் கூறியது ,

             "" பாபா 6 அடி உயரம் இருப்பார் , அவரது கைகள் மிகவும் நீளமாக இருக்கும்  . விரல்கள் முழங்கால் அப்பால் வரை இருக்கும் ‌. பாபா முகத்தோற்றம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் . அவரது மூக்குகள் நீளமாகவும் மற்றும் கூர்மையாக பரந்து திறப்புடன்  இருக்கும் . பாபாவின் கருவிழி கருப்பாக இருக்காது , நீல நிறத்தில் கூர்மையான பார்வையுடன் பிரகாசமாக ஒளிரும் . அவரது கண்கள் எப்போதும்  ஒளிரும்  , புலி மற்றும் பூனை கண்கள் போன்று . பாபாவின் உடல் முழுவதும் தேஜாஸ் விரிந்து நன்றாக தெரியும் . நான் பாபாவை  பார்க்கும்போதெல்லாம் , கடவுளே நேரடியாக பூமிக்கு வந்து மனிதர்களுடன் இருக்கிறார் என உணர்வேன் . பின்னர் நாங்கள் ஷீரடியை விட்டு திரும்பியபோது , என் கணவர் வழியில் பத்திரிகையில் ஒர் விளம்பரத்தை கண்டார் . அதில் , பெங்களூர் T.R ஆலையில் மேற்பார்வையாளர் பணிக்கு ஆள் தேவை என இருந்தது . உடனே எனது கணவர் அந்த பணிக்கு விண்ணப்பித்தார் . பாபாவின் அருளால் அவர்க்கு அந்த வேலையும் கிடைத்தது" .

                 📍பின்னர் கணவருடன் ராஜம்மா பெங்களூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு சென்ற ராஜம்மா அதுமுதல் கணவருடன் அடிக்கடி  பாபாவைக் காண சீரடிக்குச் செல்லத் துவங்கியதினால் நாளடையில் அவருக்கும் அவள் கணவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது.

      📍அதை பற்றி ராஜம்மா கூறியது ,
               
                " என் கணவர் சில நேரம் என்னிடம் ஷீரடிக்கு செல்வதை பற்றி என்னிடம் கேள்வி கேட்பார் ,
            📎அதற்கு நான் , பாபா என்னுடைய "குரு" . எனக்கு வேறு கடவுள் எல்லாம் முக்கியமில்லை . நான் இயற்கையாகவே பாபாவை சென்று தரிசனம் செய்கிறேன் " என பதில் கூறுவேன் .

            சில நேரம் , நீ எதற்கு பாபாவை தேர்வு செய்தாய் ? என கேட்பார் .

          📌அதற்கு நான் ,
                      "அவர் ஓர் சத்குரு , கடவுளின் அவதாரம் . அதனால் தான் நான் அவரை தேர்வு செய்தேன் . நான் அவரிடம் மட்டுமே பிராத்தனைகளை செய்வேன் , முழு இதயத்துடன் . எப்போதெல்லாம் அவர் என் இதயத்தை விட்டு தூர இருக்கிறார் என உணரும்போது , அப்போதெல்லாம் நான் ஷீரடிக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருவேன் " என்பேன்.

            📍 "" பின்னர் நான் ஷீரடிக்கு 4 முறை சென்று வந்தேன் . அது எனது கணவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது . நான் ஷீரடிக்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன் . பாபாவின் அற்புதமான லீலைகளை கண்டேன் , அவர் ஆசிர்வாதத்துடன் கண்டேன் . நான் தான்  ஒரே ஆதாரம் , பாபா யோக சாதனைகளில்  , கண்ட யோகவை நேரில் பார்த்ததில் . 1915 ஆம் ஆண்டு , ஒர் நாள் இரவு 1.30 மணிக்கு  பாபா தனது கை , கால்களை எல்லாம் தனித்தனியாக கழற்றி துவாரகமாயில் அங்கு அங்கு போட்டு வைத்தார் ( சாய் சத்சரித்திரம் ) . அந்த சம்பவத்தை நேரில் கண்டு நான் பயந்து வியப்பு அடைந்தேன் . அப்பொழுது எனக்கு 24 வயது " .

              📌"  அதுபோல நான் பாபா தவுதி யோக செய்ததையும் பார்த்தேன் . துவாரகமாயின் வெளியே நின்று கொண்டு பாபா தனது , குடலை முழுவதுமாக வெளியே எடுத்து ( சாய் சத்சரித்திரம் ) கழுவி சுத்தம் செய்வார் .  பாம்பு மற்றும் தவளையின் பூர்வஜென்ம  கதைகளை பாபா விவரித்து கூறும்போது நான் அந்த சமயம் அங்கு இருந்தேன் " . இந்த கதை பகுதி சாய் சத்சரித்தில் விளக்கமாக கூறியுள்ளது .

                📍" பின்னர் நாட்களில் நான் தொடர்ந்து பல முறை ஷீரடிக்கு சென்றேன் . பாபா தனது  சொந்த மகளாக என்னை நடத்தினார் . சில நேரம் அவர் அற்புதமான செயலை நான் பார்வையாளராக உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருந்தேன் . பாபா என்னை ஆசிர்வதித்தார் , நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன் . பலநேரங்களில் நான் வீட்டில் இருக்கும்போது , பாபாவின் நாமத்தை இடைவிடாது ஜெபித்து கொண்டு இருந்தேன் . கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு இல்லற வாழ்க்கையின் மேல் வெறுப்பு ஏற்பட்டது " என ராஜம்மா கூறினார் .


                      📌சம்சார வாழ்கை கசந்தது. பிடிப்பு இல்லாமல் வாழத் துவங்கினாள். அடிக்கடி சீரடிக்கு சென்று பாபாவை தரிசித்து வந்ததினால் ஆன்மீக தாக்கம் அதிகமாக அதிகமாக அவளால் அவளுடைய கணவரின் உடல் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதுவே அவர்களிடம் பிளவை ஏற்படுத்த அவளுடைய கணவர் அவளைப் விட்டு பிரிந்து சென்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.

                     📍அதற்கு இடையே ராஜம்மாவின் மகன் மாணிக்கராஜ் பெரியவனாகி காவல் துறையில் போலிஸ்காரராக வேலைக்கு சேர்ந்தார். ஒரு நாள் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். அதுவே ராஜம்மாவின் வாழ்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஆறுதல் தர கணவரும் இல்லை. பாதுகாக்க மகனும் இல்லை. பெற்றோர்கள் இடிந்து போயினர். ஆகவே ராஜம்மா குடும்ப வாழ்கையில் இருந்து முற்றிலுமாக விலகினாள். 

                    📍  ராஜம்மாவின் கணவர் அவரை விட்டு பிரிந்துவிட்டதால் , பிறகு ராஜம்மாவை அவரது தந்தை ஷீரடிக்கு அழைத்து சென்றார் . பாபா ராஜம்மாவை அங்கு ஷீரடியில் உள்ள ஓர் பக்தரின் வீட்டில் தங்கவைத்து , அவரது நாமத்தை இடைவிடாது ஜெபிக்கும் படி கூறினார் .


                  📌வாழ்கையில் சற்று மாறுதல் ஏற்படலாயிற்று. எப்போதுமே பாபாவின் நாமத்தை உச்சரித்தவண்ணம் இருக்கலானாள்.
 பாபா அவளை சில காலம் வாடாவில் தங்கி தன் பெயரை உச்சரித்துக் கொண்டு இருக்குமாறு கூறினார் .

       📍ராஜம்மாவிடம் பாபா கூறியது ,
                 " இன்று முதல் உன் பெயர் சிவம்மா தாயீ ஆகிறது . நீ பெங்களூருக்கு போ , என் பெயரில் ஆஸ்ரமம் தொடங்கு . என்னுடைய ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு ,  அல்லாஹ் மாலிக் ""
என பாபா கூறி அனுப்பினார்  .
         

                   📌  பாபா  பெயரை ராஜம்மா என்பதில் இருந்து சிவம்மா தாயீ எனவும் பாபா மாற்றினார். அது முதல் ராஜம்மாவின் பெயர் சிவம்மா தாயீ என ஆயிற்று. சில நாட்கள் சீரடியில் தங்கி இருந்த சிவம்மா தாயீ பாபாவின் அறிவுரையை ஏற்று ஒரு புத்தகத்தையும்  அவர் பாதுகைகளையும் பாபாவிடம் இருந்து கேட்டு எடுத்துக் கொண்டு பெங்களூருக்கே வந்தார்.

                   📍பெங்களூருக்கு வந்தவள் அங்கிருந்தவாறே பல இடங்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தவாறு இருந்தாள்.  ஆனால் நிலையான இருப்பிடம் இல்லாததினால் பெங்களூரில் மடிவாலாவில் தற்போது அவள் ஆலயம் கட்டி உள்ள இடத்தில் அப்போது காலியாக இருந்த மைதானத்தின் அடியில் இருந்த ஒரு மரத்தடியில்தான் பெரும்பாலும்  தங்கினாள்.  அப்போது அந்த இடம் இறந்தவர்களைப் புதைக்கும் சுடுகாட்டு இடமாக இருந்ததாம். யார் சாப்பாடு கொடுத்தாலோ அந்த சாப்பாட்டை சாப்பிட்டவாறு வாழ்கை ஓடியது.  இருக்க இடம் இன்றி அங்கும் இங்கும் சுற்றி அலைந்து கொண்டு அங்காங்கே தங்கியவளின் நிலையைக் கண்ட  திரு நாராயண ரெட்டி என்பவர் தன்னை அறியாமல் ஒரு நாள் தானாகவே அவரை சந்தித்து அவள் தங்கி இருக்க  தன்னிடம் இருந்த நிலத்தின் ஒரு பகுதியை தானமாக தந்தார்.

                   📍ஊர் பெயர் தெரியாத ஒருவர் சிவம்மா தாயீயிடம்  தானாக வந்து பேசி அவளுக்கு நிலத்தை தானமாக ஏன் தர வேண்டும்? அதுவே பாபாவின் மகிமை. சாயிபாபா அவளை சோதனை செய்து விட்டே அவள் மூலம் தனக்கு ஒரு இடத்தில் ஆலயம் அமைத்துக் கொள்ள விரும்பி இருந்தார். அதை நடத்திக் காட்டினார்!.  அந்த நிலமே இன்று மடிவாடாவில் ரூபன் அக்ராஹாரம் எனப்படும் இடத்தில் சிவம்மா தாயீ தங்கி இருந்த இடமும்  சீரடி சாயிபாபாவின் ஆஸ்ரமம்  அமைத்து உள்ள இடமும் ஆகும்!.  சிவம்மா தாயீ  அந்த நிலத்தை தானமாக பெற்றபோது அந்த நிலம் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தள்ளி தனி இடமாக இருந்தது .

                 📌நிலத்தை தானமாகப் பெற்ற சிவம்மா தாயீ அந்த நிலத்தில் இருந்த ஒரு மரத்தடியில்  அமர்ந்து கொண்டு  தியானத்தில் ஆழ்ந்தாள். தன்னை மறந்தாள், உறக்கம் இல்லை, உணவும் இல்லை, இடத்தை விட்டு அசையவும் இல்லை. அவள் அங்கு தியானத்தில்  அமர்ந்ததை பலரும் பார்த்து இருந்தாலும் அதை தடுக்க முயலவில்லை. அப்படியே விட்டு விட்டார்கள். அவள் சாயிபாபாவின் பக்தை, கடவுள் சக்தி உள்ளவள் என்பதும் அவர்களுக்கு புரிந்து இருந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே அமர்ந்து தியானத்தில் இருந்தவள் . அவள் மீது மறையும் அளவிற்கு கரையான் புற்று எழும்பத் துவங்கியது. அப்போது அதை யாரும் அதைப் பார்க்கவில்லை.

                     📍ஆனால் ஒரு நாள் அவள் தலை முடி மீது ஒரு நாகப்பாம்பு வந்து அமர்ந்தபோது அங்கு எதேற்சையாகச் சென்றவர்கள் அதைப் பார்த்தார்கள். சாயி நாமத்தை உச்சரித்தபடியே அவர்களில் சிலர் அந்தப் பாம்பை விரட்டினார்கள். கரையான் புற்றை கலைத்துவிட்டு அவளிடம் தவத்தைக் கலைத்துக் கொள்ளுமாறு வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவம்மா தாயீயும் தனது தவத்தைக் கலைத்துக் கொண்டாள். அவளை அங்கு சிறு கொட்டகைப் போட்டு குடி இருத்தினார்கள். அதற்குப் பிறகு சிவம்மா அங்கிருந்தபடியே பாபாவின்  புகழைப் பரப்புவதில் தன் காலத்தை கழித்தார். பாபாவின் மூல சில சக்திகளைப் பெற்றார். காலம் நகர்ந்தது.

                  📌அவளிடம் ஆசி கேட்டு வந்தவர்கள் தாமாகவே காணிக்கை தந்தார்கள் . மெல்ல மெல்ல தனக்கு கிடைத்து வந்த  பணத்தைக் கொண்டே அதே நிலத்தின் ஒரு பகுதியில் அவர் சிறு பள்ளியை துவக்கினார். அது இன்று உயர்நிலைப் பள்ளியாக மாறி உள்ளது.  நாளடைவில் அங்கும் இங்குமாக கிடைத்தப் பணத்தைக் கொண்டு அந்த நிலத்தில் பாபாவிற்கு ஒரு சிறு ஆலயம் அமைத்தார். அது ஒரே நாளில் எழுப்பப்படவில்லை. மெல்ல மெல்ல எழுந்தது. பலரும் காணிக்கை கொடுத்தார்கள். அவருக்கு  தூரத்து சொந்தக்காரர் என கூறப்பட்ட தொழில் அதிபர் திரு பொள்ளாச்சி மகாலிங்கமும் உதவி செய்து உள்ளாராம்.

                             📍  பின்னர் சிவம்மா தாயீயின்  வயது 102 ஆயிற்று. அப்போது அவர் கூறியது ,

              "" தன்னை எப்போது தனது குருநாதரான பாபா அழைப்பாரோ அப்போது தான் ஒரு குழிக்குள் அமர்ந்து விடுவேன் , அதன் மீது சமாதி எழுப்பி தன்னை அங்கேயே அடக்கம் செய்துவிடுங்கள் "
என கூறினார்.

        📍 மேலும் அவர் கூறியது ,

                   "என்னுடைய வாழ்க்கையிலும் சரி , நான் சமாதி அடைந்த பின்பும் சரி , பாபா என்னை எப்போதும் பாதுகாத்து என் மேல் இரக்கம் கொள்வார் . நான் உள்ளே வெளியே இழக்கும் மூச்சு காற்று கூட பாபா ஆசீர்வாதம் மற்றும் அவரது விருப்பம் தான் . அவர் 1918 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்த பின்னரும் என்னுடன் எப்போதும் சூட்சம உருவத்தில் ( cosmic body ) தொடர்பில் உள்ளார் . அவர் நன்றாக தமிழில் என்னிடம் பேசுவார் . பாபா என்னுடன் அடிக்கடி சூட்சம உருவத்தில் தொடர்பு கொண்டு , என்னுடன் பேசுவார் , தேவைப்படும் போது சில நேரம் எச்சரித்தார் . அவர் என்னிடம் அனைத்தையும் கூறுவார் மற்றும் என்னை எப்போதும் வழி நடத்திக்கொண்டு இருக்கிறார் "
என்றார் சிவம்மா தாயீ .

                   📌 பின்னர்  அதற்காக அவர் கட்டி  இருந்த பாபாவின் ஆலயத்தில் பாபாவின் சிலை வைக்கப்பட்டு உள்ள பீடத்தின் அடிப் பகுதியில் ஒரு அறையை அமைத்து குழியையும் வெட்டி வைத்து அங்கேயே அமர்ந்து  இருந்தார்.
11-07-1994 அன்று, 105 வது வயதில், சிவம்மா தாயீ சமாதி அடைந்தார். அவர் விருப்பபடியே அவரை  அங்கிருந்த ஆலயத்தில் பாபாவின் பீடத்தின் அடியில் அமைக்கப்பட்டு இருந்த  அறையில் அடக்கம் செய்து கருங்கல்லினால் ஆன சமாதி எழுப்பினார்கள்.

                     📍சிவம்மா தாயீ பாபாவிற்காக அந்த நிலத்திலேயே  இரண்டு ஆலயங்களை எழுப்பினார். முதல் ஆலயத்தில்  கருப்பு நிறக் கல்லில் பாபா அமைந்து உள்ள கோலத்தில் சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து உள்ளார். அதற்குள்தான் அவர் சமாதி ஆலயமும் உள்ளது.  அந்த ஆலயத்தை அவர் அமைத்த சில நாட்களுக்கு பின்னால் பாபா அவர் கனவில் தோன்றி ‘உலகம் முழுவதும் பல இடங்களிலும் தனக்கு சிலைகள் இருந்தாலும் தான் பகீராக காட்சி தரும்   சிலை எங்குமே வைக்கப்படவில்லை என்பதினால் அங்கு தனக்கு பிட்சை எடுக்கும் கோலத்தில் ஒரு சிலை அமைத்து வழிபடுமாறு’ கூறி இருந்தாராம்.

                   📌அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்ட சிவம்மா தாயீ  அதே நிலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த சிற்பியை வரவழைத்து  கையில் பிட்சை பாத்திரத்துடன் பாபா நின்றுள்ள கோலத்தில் பகீரைப் போன்ற பாபாவின் சிலையை வடிவமைக்கச் செய்து அதை பிரதிஷ்டை செய்தார். அந்த இரண்டாம் ஆலயத்தில் உள்ள பெரிய கூடத்தில் துவாரகாமாயி போன்ற அமைப்பும் பிரார்த்தனைக் கூடமும் உள்ளது. அவர் மறைந்தப் பின் அவர் வாழ்ந்து வந்திருந்த அதே கொட்டகையில் அவர் பூஜை செய்து வைத்து இருந்த பாபாவின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்து அவர் நினைவாக அவர் உடமைகளையும் அங்கே வைத்து உள்ளார்கள். ஆக ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் சீரடி சாயிபாபாவின் மூன்று ஆலயங்கள் அற்புதமாக அமைந்து உள்ளன.

                    📍முதலாவது ஆலயத்தில் நுழைந்ததும் கூடத்தில் பாபாவை பார்த்தவாறு நந்தி உள்ளது. வலது புறத்தில் நவகிரகங்கள் உள்ளன. அதே கூடத்தில் சிறுவர்கள் சிறுமிகள் கம்பியூட்டர் பயிற்சி பெரும் வகையில் பாடங்கள் பயில்விக்கப்படுகின்றன. அந்தக் கூடத்தைத் தாண்டிச் சென்றால் பாபாவின் சன்னிதானம் உள்ளது. அதில் உயரமான பீடத்தில் பாபாவின் அமர்ந்த நிலையில் உள்ள சிலைக்கு பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. அந்த கூடத்தின் அடியில் அமைந்து உள்ள சிறிய அறையில்தான் சிவம்மா தாயீயின் சமாதி உள்ளது.

                📍சமாதிக்குச் சென்று அவரை வழிபட  படிக்கட்டு போடப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் இருந்து வெளிவந்தால் அதன் வலதுபுறத்தில் சுமார் பத்து அடி தூரத்தில் சிவம்மா தாயீ தங்கி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள சிறிய சாயி ஆலயம் உள்ளது. அவர் உடமைகளும் அவர் பயன்படுத்தியப் பொருட்களும் கூட அங்கேயே வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து வெளியில் வந்தப்பின் வலதுபுறம் திரும்பிச் சென்றால் சுமார் ஐமபது அடி தூரத்தில் அதே நிலத்தின் எல்லையில் மூன்றாவது ஆலயம் உள்ளது. அங்குதான் பாபா பகீர் போன்ற உருவில் காட்சி தருகிறார். அந்த மூன்று ஆலயங்களும் உள்ள நிலத்தின் நான்கு பக்கங்களிலும் சுவர்களைப் எழுப்பட்டு உள்ளன.

                  📍சிவமா தாயீ உயிருடன் இருந்த காலத்தில் அவரிடம் செல்லும் பக்தர்கள் தமது துயரத்தைக் கூறி  பிரச்சனை தீர வழி கேட்டால், சிவம்மா தாயீ பிராணாயம் செய்வது போல தனது மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு பாபாவிடம் அவர்களின் பிரச்சனை தீர வழி கேட்டு அதை பக்தர்களிடம் கூறுவாராம்.

                  📍 பாபா அவர் முன் நேரிலே தோன்றி அவருக்கு அதற்கான பதில் தருவாராம். அதை பற்றி சிவம்மா தாயீடம் கேட்டால் . அவர் கூறுவது ,

         ” தான் ஒன்றும் அற்றவள்.
 தான் பக்தர்களுக்குத் தரும் அன்பும் ஆசிகளும் தன் மூலம் பாபாவேதான் அவர்களுக்குத் தருகிறார்” என்றே கூறுவாராம்.

              🎉பாபாவின் அன்பையும், ஆசிகளையும், தீட்சையையும் நேரடியாகவே பெற்ற முதலாவதும் முடிவானவருமான ஒரே பெண்மணியும் சிவம்மா தாயீதான்🕉
 
                 🙏கண்டிப்பாக பகிருங்கள்                       பக்தர்களே ❗ அனைவரும் அறியவேண்டும் 🙏

  ஆலயத்தின் முகவரி ::
         Shiridi sai baba temple ,
 E13, 10th Main Rd, Roopena Agrahara, Bommanahalli Roopena Agrahara, Bommanahalli Bengaluru, Karnataka 560068 .

செவ்வாய், 19 ஜூன், 2018

ஆனித் திருமஞ்சனம்


ஆனித் திருமஞ்சனம்

சிதம்பரம்..

ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.
சிதம்பரத்தில் இரண்டு உத்ஸவங்கள் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும்.
1. ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்
2. மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் (விபரம் தெரிய இந்தத் தலைப்பைக் க்ளிக் செய்யவும்)

ஒரு வருடத்திற்கு இரண்டு அயனங்கள் உண்டு. ஒன்று தக்ஷிணாயணம் மற்றொன்று உத்தராயணம்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் இரண்டு அயனங்களிலும் திருவிழா காண்கிறார்.

ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (12.06.2018 - செவ்வாய்க் கிழமை காலை 06.30 மணிக்கு மேல் 07.30 மணிக்குள், மிதுன லக்னத்தில் துவஜாரோஹணம்) அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.

ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.

தங்கத்தினாலான மஞ்சம் (12.06.2018 -  செவ்வாய்க் கிழமை),
வெள்ளி சந்திர பிரபை (13.06.2018 - புதன் கிழமை),
தங்க சூர்ய பிரபை (14.06.2018 - வியாழக் கிழமை),
வெள்ளி பூத வாகனம் (15.06.2018 - வெள்ளிக் கிழமை),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான்என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (16.06.2018 - சனிக் கிழமை),
வெள்ளி யானை வாகனம்(17.06.2018 -  ஞாயிற்றுக்  கிழமை),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (18.06.2018 - திங்கள்) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (19.06.2018 - செவ்வாய்க் கிழமை) பிக்ஷாடனராகவலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (20.06.2018 - புதன் கிழமை) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (21.06.2018 - வியாழக் கிழமை) ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்.
மறுநாள் (22.06.2018 - வெள்ளிக் கிழமை) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.

தேர்த் திருநாளின், 20.06.2018, புதன் கிழமை,  அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள், ரிஷப லக்னத்தில், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.

தேர் - மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திரப்படி சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலிய உறுப்புகளால் ஆனது. தேரிலுள்ள மரசிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது. தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் ஸ்ரீ நடராஜர் அமர்த்தப்படுவார்.

தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.


நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும். நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.

கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, "காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்" என்று திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.

மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும். சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்களால், ஏக கால லக்ஷார்ச்சனைநடைபெறும்.

ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.
அதன் பின், ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆனித் திருமஞ்சன மஹா தரிசனக் காட்சி ஆகும்.

இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.

தில்லையில் திருநடம்புரியும் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.

வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்..