ஆனித் திருமஞ்சனம்
சிதம்பரம்..
ஸ்ரீ நடராஜ ராஜர் என்றும், எப்பொழுதும் திருநடனம் புரிந்துகொண்டிருப்பதால், தினம் தினம் திருநாள் தான், தினம் ஒரு உத்ஸவம் தான்.
சிதம்பரத்தில் இரண்டு உத்ஸவங்கள் மிகவும் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும்.
1. ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்
2. மார்கழி ஆருத்ரா தரிசன மஹோத்ஸவம் (விபரம் தெரிய இந்தத் தலைப்பைக் க்ளிக் செய்யவும்)
ஒரு வருடத்திற்கு இரண்டு அயனங்கள் உண்டு. ஒன்று தக்ஷிணாயணம் மற்றொன்று உத்தராயணம்.
சிதம்பரம் ஸ்ரீ நடராஜ ராஜர் இரண்டு அயனங்களிலும் திருவிழா காண்கிறார்.
ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம் - கொடியேற்ற நிகழ்ச்சியுடன் துவங்கி (12.06.2018 - செவ்வாய்க் கிழமை காலை 06.30 மணிக்கு மேல் 07.30 மணிக்குள், மிதுன லக்னத்தில் துவஜாரோஹணம்) அதை தொடர்ந்து, உத்ஸவ யாகசாலையில் காலை மாலை இரு வேளைகளிலும், மிகச் சிறப்பு வாய்ந்த ஹோமங்கள் செய்து, ஒவ்வொரு நாள் இரவிலும் மற்றும் காலையிலும், உத்ஸவ நாயகர்களாகிய ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி, ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ சுப்ரமண்யர், ஸ்ரீ சண்டிகேஸ்வரர் - நாதஸ்வர இசை முழங்க வீதி வலம் வந்து காட்சி நல்குவார்கள்.
ஒவ்வொரு நாளிலும் ஸ்ரீ ஸோமாஸ்கந்தர், ஸ்ரீ சிவானந்த நாயகி சிறப்பு வாய்ந்த வாகனங்களில் வலம் வருவார்.
தங்கத்தினாலான மஞ்சம் (12.06.2018 - செவ்வாய்க் கிழமை),
வெள்ளி சந்திர பிரபை (13.06.2018 - புதன் கிழமை),
தங்க சூர்ய பிரபை (14.06.2018 - வியாழக் கிழமை),
வெள்ளி பூத வாகனம் (15.06.2018 - வெள்ளிக் கிழமை),
ஸகோபுரம் எனும் தெருவடைச்சான்என்று அழைக்கப்படக்கூடிய ரதம் (கோபுர வடிவத்திலான, தெரு முழுவதும் அடைத்து வரக்கூடிய விதத்தில் அமைந்தது) (16.06.2018 - சனிக் கிழமை),
வெள்ளி யானை வாகனம்(17.06.2018 - ஞாயிற்றுக் கிழமை),
தங்க கைலாய மலையெடுத்த வெள்ளி ராவணன் வாகனம் (மிக அற்புதமான அமைப்பு, ராவணன் உருவம் வேறு எங்கும் இல்லாத வகையில் ஒன்பது தலைகளும், கையில் ஒரு தலையை வீணையின் தலைப்பாகமாக அமைத்து காம்போதி ராகம் மீட்டும் வகையில் அமைந்தது) (18.06.2018 - திங்கள்) என்று முறையே வலம் வந்து அருள்பாலிப்பார்.
எட்டாம் திருநாளில் (19.06.2018 - செவ்வாய்க் கிழமை) பிக்ஷாடனராகவலம் வருவார்.
ஒன்பதாம் திருநாள் (20.06.2018 - புதன் கிழமை) - தேர் உத்ஸவம்.
பத்தாம் திருநாள் (21.06.2018 - வியாழக் கிழமை) ஆனித் திருமஞ்சன மஹோத்ஸவம்.
மறுநாள் (22.06.2018 - வெள்ளிக் கிழமை) - முத்துப்பல்லக்கில் வீதியுலா.
தேர்த் திருநாளின், 20.06.2018, புதன் கிழமை, அதிகாலை 05.00 மணியிலிருந்து 05.30 மணிக்குள், ரிஷப லக்னத்தில், ஸ்ரீ சிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீ நடராஜ ராஜர் அழகுமிகு அரிய அணிமணிகளுடன் அலங்காரம் செய்யப்பட்ட திருக்கோலத்தோடு யாத்ராதான நிகழ்ச்சியாக - சித்ஸபையின் கனகசபையிலிருந்து தேருக்குப் புறப்படும் திருக்காட்சி நடைபெறும்.
தேர் - மிக அழகிய வடிவம் வாய்ந்தது. மிக உயர்ந்த தோற்றம். ரதலக்ஷணம் எனும் சாஸ்திரப்படி சக்கரங்கள், ஆர், தட்டு, பார், கொடிஞ்சி, கூம்பு, கிடுகு முதலிய உறுப்புகளால் ஆனது. தேரிலுள்ள மரசிற்பங்கள் மிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டது. தேரின் நடுவில் உள்ள ஊஞ்சலில் ஸ்ரீ நடராஜர் அமர்த்தப்படுவார்.
தேரில் அமர்த்தியபிறகு, சிறப்பு ஆராதனைகள் நடைபெற்ற பிறகு, சேந்தனாரின் திருப்பல்லாண்டு பாடல்கள் இசைக்க, வேத கோஷங்கள் முழங்க, திருமுறைகள் ஓதப்பட, நாதஸ்வரம் இன்னிசைக்க, உற்சாக கோஷங்கள் நிரம்ப, உலுக்கும் மரம் எனும் நெம்புகோல் வடிவம் தேரை உந்தித் தள்ள, உத்ஸவத்தின் மிக முக்கிய கட்டம் இனிதே தொடங்கும்.
நடராஜரின் ஆட்டத்திற்கு தாளம் இசைப்பது போல தேரில் இருக்கும் மணிகள் ஒலியெழுப்பும். நடராஜரின் முன் தோற்றத்தை ரசிப்பவர்களைப் போல, அழகுமிகு பின் தோற்றத்தை கண்டு ரசிப்போரும் உண்டு. தேர் தரிசன உத்ஸவத்தில் மட்டுமே பின் தோற்றத்தை கண்டு ரசிக்கமுடியும்.
கருநிற இரண்டு (நடராஜர் & சிவகாமசுந்தரி) தேர்களும் ஒன்றன் பின் ஒன்றாக வருவது இரு யானைகள் அழகாக அசைந்து அசைந்து வருவதைப் போன்ற இக்காட்சியை காணும்போது, "காதல் மடப்பிடியோடு களிறு வருவன கண்டேன்" என்று திருநாவுக்கரசர் கூறியதே நினைவுக்கு வருகின்றது.
மதியம் உச்சிகால பூஜை தேரிலேயே நடைபெற்று நிலைபெறும். சற்றே இடைவெளிக்குப் பிறகு, செம்படவர் மண்டகப்படி எனும் மீனவர்கள் எடுத்துவரும் மண்டகப்படி எனும் மரியாதைகளை நடராஜர் ஏற்று பிறகு தேர் மறுபடி கிளம்பி, ஈசான திசை திரும்பி, தேர் கிளம்பிய இடத்திற்கே வந்து நிலைபெறும்.
தேரிலிருக்கும் தெய்வங்கள் கோயிலினுள்ளே ஆயிரங்கால் மண்டபத்தில் வரவழைக்கப்பட்டு, ஒரே நேரத்தில் நூறு தீக்ஷிதர்களால், ஏக கால லக்ஷார்ச்சனைநடைபெறும்.
ஆயிரங்கால் மண்டபம் மிக பிரம்மாண்டமானது. ஆயிரம் தூண்கள் கொண்டது. மண்டபத்தினுள்ளே விதானம் எனும் மேற்கூரையில் உள்ள ஓவியங்கள் சிதம்பர புராணத்தைப் பகிரும் விதத்தில் வரையப்பட்டது. ஆடல்வல்லானின் அழகு மிகு நடனக் காட்சிகள், சித்தர் பீடங்கள் முதலான ஓவியங்களைக் காண கண்கள் கோடி வேண்டும். ஒவ்வொரு படமும் ஒரு கதை சொல்லும்.
அதன் பின், ருத்ராபிஷேக ஹோம பூஜைகளுடன், மஹாபிஷேகம் நடைபெறும். அபிஷேக திரவிங்கள் பெருமளவில் சேகரிக்கப்பட்டு சுமார் இரண்டு மணி நேரம் ஸகல திரவிய அபிஷேகமாக நடத்தப்படும். இறுதியில் புஷ்பாஞ்சலி எனும் பலவித மலர்களால் நடராஜருக்கு அபிஷேகம் செய்யப்படும்.
அரிய அணிமணிகள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட நடராஜருக்கு அர்ச்சனை ஆராதனைகள் நடத்திய பிறகு, பஞ்சமூர்த்திகள் வீதியுலா வந்தபிறகு, மதிய வேளையில், ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து சித்ஸபைக்கு அம்பிகையும், ஈசனும் திருநடனம் புரிந்துகொண்டே செல்லும் அற்புத காட்சிதான் ஆனித் திருமஞ்சன மஹா தரிசனக் காட்சி ஆகும்.
இந்தக் காட்சியை லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள்.
தில்லையில் திருநடம்புரியும் சித்ஸபேசரின் திருநடன திருக்காட்சியைக் கண்டவர்கள் பெரும் பேறு பெற்றவர்களாவார்கள்.
வேண்டிய வரங்களும், நீடித்த ஆயுளும், பெரும் செல்வமும் அருளக்கூடிய தேர் தரிசனக் காட்சியை அனைவரும் கண்டுகளிப்போம்..
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக