#கோயம்புத்தூர் அன்னை சிவம்மா தாயீ
பெங்களூர் நகரத்தின் மையப் பகுதியான மடிவாளா எனும் இடத்தில் உள்ள ரூபன் அக்ரஹாராவில் சீரடி சாயிபாபாவிற்கு அற்புதமான ஆலயத்தைக் கட்டி உள்ள சீரடி சாயிபாபாவின் நேரடி சிஷ்யையான அன்னை சிவம்மா தாயீ என்பவருடைய வாழ்கை வரலாறு அற்புதமானது. அவரைப் பற்றி பலருக்கும் தெரியவில்லை. அவர் கட்டி உள்ள ஆலயம் பற்றியும் வெளியில் அதிகம் எவருக்கும் தெரியவில்லை என்பதற்குக் காரணம் அந்த ஆலயம் அக்ராஹாரத்தின் மத்தியில் ஒரு ஒதுக்குப்புறமான இடத்தில் அமைந்து உள்ளது. ஒரே வளாகத்துக்குள் மூன்று சாயி ஆலயங்களை சிவம்மா தாயீ அமைத்து உள்ளார். அந்த மூன்று ஆலயங்களையுமே எந்த விதமான விளம்பரமும் இன்றி, ஆடம்பரமும் இன்றி விளம்பரம் போட்டு, விழாக்களை நடத்தி நன்கொடை வசூலிக்காமல், தன்னிடம் வந்த பக்தர்கள் தாமாக முன் வந்து கொடுத்த காணிக்கைகளைக் கொண்டே கட்டி உள்ளார் என்பது மிகவும் அதிசயமான விஷயம். அந்த அன்னை ஆடம்பரமான வாழ்கையை வாழவில்லை. ஒரு தெய்வத்தை எப்படி அடக்கமாக இருக்க வேண்டுமோ அத்தனை அடக்கமாக இருந்துள்ளார்.
📌 அந்த அன்னை கட்டி உள்ள அந்த ஆலயங்களில் நுழைந்து விட்டால் நம்மை அறியாமல் நமக்குள் ஒரு வித அமைதியும், மனதில் இனம் புரியாத படபடப்பும் தோன்றுவதைக் காணலாம். அத்தனை உயிர் உள்ள ஆலயமாக அது உள்ளது என்பது உண்மை. ஒரு முறை அங்கு செல்லும் பாபாவின் பக்தர்கள் அடுத்தடுத்து அங்கு செல்ல விரும்புவர்கள் என்பது மட்டும் நிச்சயம். அந்த ஆலயத்தில் உள்ள மிக முக்கியமான காட்சி என்ன என்றால் சீரடி பாபா தனது கையில் ஒரு பிட்சை பாத்திரத்தை வைத்துக் கொண்டு பகீரைப் போல நிற்கும் சிலைதான். அந்த கோலத்திலான சிலை உலகிலேயே வேறு எங்குமே கிடையாது. அந்த கோலத்தில் உள்ள தம்முடைய சிலையை செய்து அங்கு பிரதிஷ்டை செய்யுமாறு பாபாவே சிவம்மா தாயீக்குக் ஆணை பிறப்பித்தாராம். இனி சிவம்மா தாயீயின் வரலாற்றைப் பார்க்கலாம் .
📍 இந்த அம்மையார் தமிழ் நாட்டில் உள்ள கோயம்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிக் கிணறு என்ற கிராமத்தில் 1889 ஆம் ஆண்டு வைகாசி மாதம் எனப்படும் மே மாதம் பதினாறாம் தேதியன்று (29-05-1889) பிறந்தார். அவருடைய தந்தையின் பெயர் வேலைப்ப கவுண்டர் மற்றும் தாயார் புஷ்பவதி என்பவர். பிறந்த குழந்தைக்கு ராஜம்மா என்று பெயர் வைத்தார்கள். சிவம்மா தாயீ எனப்பட்ட ராஜம்மாவைத் தவிர அந்த தம்பதியினருக்கு இரண்டு பெண்களும், இரண்டு ஆண்களும் பிறந்தனர். அந்த காலத்தில் கூட்டுக் குடும்பம் என்பது சாதாரண விஷயம்.
📌ஆகவே அந்த தம்பதியினர் சிவம்மா தாயீயின் மாமனுடன் கூட்டுக் குடும்பத்தில் இருந்தார்கள்.
1904 ஆம் ஆண்டு ராஜம்மாவிற்கு பதிமூன்று வயதான போது அவருக்கு திரு சுப்ரமணி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சுப்ரமணி கோயம்பத்தூரில் ஒரு மில்லில் சூபர்வைசராக வேலைப் பார்த்து வந்தார். திருமணம் ஆகி ஒரே ஆண்டில் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தைப் பிறந்தது. அதற்கு மணிராஜ் எனப் பெயரிட்டார்கள். அவர்களின் வாழ்கை நல்ல மகிழ்ச்சியாகவே சென்று கொண்டு இருந்தது.
📌 ராஜம்மாவின் தந்தையின் மூத்த சகோதரர் ஸ்ரீ தங்கவேல் என்பவர் ஒரு கட்டத்தில் சந்நியாசி ஆகி ஊரில் இருந்த ஆலயங்களுக்கு சென்றவாறு பல இடங்களிலும் சுற்றித் திரிந்து கொண்டு இருந்தார். அப்போது மத்திய மற்றும் தென் தமிழ்நாட்டுப் பகுதிகளில் அவர் பிரபலமானவராக இருந்தார். மேலும் அவர் சீரடி சாயிபாபாவுடனும் நேரடி தொடர்புக் கொண்டு இருந்தார். ஷீரடி சாய் பாபா என்ற மகான் பொள்ளாச்சி அருகில் உள்ள சிறிய கிராமத்தில் வந்து இருக்கிறார் என தங்கவேல் , 1906 ஆம் ஆண்டு ராஜம்மாவை அழைத்து சென்றார் .
📌 ஆனால் சாய் சத்சரித்திரம் கூறுவது , 1858 முதல் 1918 ஆம் ஆண்டுவரை சீரடி சாயி பாபா சீரடி எல்லையைத் தாண்டி வெளியில் எங்குமே சென்றது இல்லை என்றக் கூற்று இருந்தாலும் சாயிபாபா கடவுளின் அவதாரம். பாபாவைப் போன்ற மகான்களினால் ஒரே நேரத்தில் பல இடங்களிலும் காட்சி தர முடியும். அப்படிப்பட்ட சக்தியை அவர்கள் பெற்று இருந்திருக்கின்றார்கள். பாபாவும் ஷீரடியை விட்டு வேறு எந்த இடத்திற்கும் சென்றது இல்லை . எப்போதாவது ஷீரடி அருகில் 5 கிமீ உள்ள கிராமத்திற்கு மட்டும் பக்தர்களுடன் ஊர்வலமாக சென்று வருவர் . மற்றபடி அவர் வாழ்நாள் முழுவதும் ஷீரடியில் மட்டுமே இருந்தார் என சாய் சத்சரித்திரம் தெளிவாக கூறுகிறது .
📍 இந்த சம்பவத்தை வைத்து பார்த்தால் பாபா எங்கும்நிறைந்து இருக்கிறார் என்பது உறுதியாகிறது . சாய் பாபா அந்த கிராமத்தில் இரண்டு நாட்கள் சூட்சும உடம்பில் தங்கியிருந்தார் . அந்த சமயம் பாபாவின் வயது அப்போது 70 அல்லது 71 இருக்கும். சாயி பாபா சிவன் மற்றும் தத்தாத்ரேயர் அவதாரம். தத்தாத்ரேயர் பல இடங்களில் ஒரே சமயத்தில் காட்சி தந்திருப்பவர் என்பது தத்தாத்ரேய சரித்திரம். ஆகவே தத்தாத்ரேயர் அவதாரமான சாயி பாபா கோயம்பத்தூருக்கு அருகில் இருந்த பொள்ளாச்சிக்கு வேறு உடலில் வந்திருந்தால் அது ஆச்சர்யப்பட வேண்டிய விஷயம் இல்லைதான். ஆனால் அவர் அங்கு வந்திருந்ததும் உண்மைதான்.
📍 அந்த விஜயத்தின்போது பதினைந்து வயதான ராஜம்மாவும் பாபாவை தரிசனம் செய்ய அங்கு சென்றார். ஆயிரக்கணக்கானவர்கள் கூடி இருந்த அந்தக் கூட்டத்தில் ஆணும் பெண்ணும் வரிசையாக அமர்ந்து இருந்தார்கள். வந்திருந்த அனைவரிடமும் பாபா அன்புடன் பேசினார். பாபா அந்த ஊரில் இரண்டு நாட்கள் தங்கி இருந்தார் . பாபாவிடம் தமது சகோதரர்களுடைய அனைத்து குழந்தைகளைளையும் (இளம் வயதானவர்கள்) தங்கவேல் அழைத்துச் சென்றார். வரிசையாக நின்று கொண்டு இருந்த அந்த இளம் குழந்தைகள் அனைவரையும் சிறிது நேரம் ஊற்றுப் பார்த்த பாபா அதில் நின்று இருந்த ராஜம்மாவை தனது அருகில் அழைத்தார். ராஜம்மா பாபாவை தரிசனம் செய்தபோது அவர்க்கு 15 வயது . அந்த நேரம் அவருக்கு 1 வயதில் மணிராஜ் என்ற ஆண் குழந்தை இருந்தது . ராஜம்மா காதில் பாபா காயத்திரி மந்திரம் ஓதினார் மற்றும் அதனுடன் ஒரு காகிதத்தில் காயத்திரி மந்திரத்தை பென்சிலால் தமிழில் எழுதி கொடுத்தார் .
📌அனைவருக்கும் ஆச்சர்யம். பாபா ஒரு பெண்ணுக்கு மந்திரோபதேசம் செய்தார்…… அதுவும் காயத்ரி மந்திரம் !! பாபாவிடம் இருந்து காயத்ரி மந்திரோபதேசம் பெற்ற முதலும், முடிவுமான ஒரே பெண்மணி ராஜம்மாவாகத்தான் இருக்க வேண்டும் . அது முதல் பாபாவே ராஜம்மாவின் மானசீக குரு ஆனார்.
📍இதில் ஒரு விஷயத்தைக் கூற வேண்டும். பாபாவின் சரித்திரத்தில் யாருக்குமே அவர் காயத்ரி மந்திரோபதேசம் செய்துள்ளதாக எழுதி வைத்து இருக்கவில்லை. அதற்குக் காரணம் ராஜம்மா சீரடிக்கு வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை போய் வந்து கொண்டு இருந்தாலும் அவருக்கு தமிழ் மொழியைத் தவிர வேறு மொழி பேசத் தெரியாது. அதனால் ராஜம்மா சீரடியில் எவருடனும் பழகியது இல்லை. வேறு எவரிடமும் பாபாவுடனான அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டதும் இல்லை. ஆகவேதான் சிவம்மா தாயீ எனப்பட்ட ராஜம்மாவின் விவரங்கள் சாயி சரித்திரத்திலோ அல்லது பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமி அவர்கள் எழுதிய சரித்திரங்களிலோ காணப்படவில்லை. சாயியின் சரித்திரத்தை எழுதி உள்ள ஹேமாட் பந்த் அவர்களின் புத்தகம் மற்றும் பூஜ்யஸ்ரீ நரசிம்மஸ்வாமி அவர்களின் புத்தகத்தில் ராஜம்மாவை பற்றி எந்தக் குறிப்புமே இல்லை .
📌அதன்பின் இரண்டாம் நாட்கள் கழித்து பாபா அந்த கிரமத்தை விட்டு மறைந்தார் . அவர் இருந்ததற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை . பின் ராஜம்மாக்கு பாபா எழுதி கொடுத்த அந்த காகிதம் துளைந்து போனது .
📍பாபா அன்று கனவில் தோன்றி , அரிசி சேமித்து வைக்கும் டிரமில் உள்ளது என தெரிவித்தார் . முதல் தரிசனத்தைப் பெற்ற ராஜம்மாவிற்கு மீண்டும் சாயிபாபாவைக் காண வேண்டும் என்ற ஆசை எழுந்தது. முதலில் அவளுக்கு அங்கு செல்ல கணவரின் சம்மதம் கிடைக்கவில்லை. ஆனால் பின்னர் 1908 ஆம் ஆண்டு கணவரின் சம்மதத்துடன் தன் குடும்பத்தினருடன் சீரடிக்கு ராஜம்மா சென்றார். துவாரகாமாயியில் பாபாவின் அற்புதமான தரிசனம் கிடைத்தது. பாபா அனைவருக்கும் ”அல்லா பலா கரேகா” என வாழ்த்தினாலும் ராஜம்மாவை மட்டும் தமிழில் ” நல்லா இரு ” என கூறி ஆசிர்வதித்தாராம். மேலும் ராஜம்மாவுடன் பாபா எப்போதுமே தமிழில் பேசுவாராம். இந்த செய்தியும் சற்று ஆச்சர்யமாக உள்ளது. காரணம் பாபா எப்போதும் அராபிக், உருது, இந்தி மற்றும் மராத்திய மொழிகளில்தான் பலருடன் பேசி உள்ளார். ஆனால் பாபாவுக்கு தமிழிலும் பேச முடியும் என்ற ஆதாரபூர்வமான செய்தியை சிவம்மா தாயீ மூலம் மட்டுமே அறிய முடிந்துள்ளது. இந்த சம்பவத்தை ராஜம்மாவே பின்னர் தனது வாழ்கை வரலாற்றை எழுதியவரிடம் கூறினாராம்.
📌ராஜம்மா ஷீரடியில் பாபாவை பார்த்தபோது மெய்மறந்தார் .பாபா பற்றி அவர் கூறியது ,
"" பாபா 6 அடி உயரம் இருப்பார் , அவரது கைகள் மிகவும் நீளமாக இருக்கும் . விரல்கள் முழங்கால் அப்பால் வரை இருக்கும் . பாபா முகத்தோற்றம் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருக்கும் . அவரது மூக்குகள் நீளமாகவும் மற்றும் கூர்மையாக பரந்து திறப்புடன் இருக்கும் . பாபாவின் கருவிழி கருப்பாக இருக்காது , நீல நிறத்தில் கூர்மையான பார்வையுடன் பிரகாசமாக ஒளிரும் . அவரது கண்கள் எப்போதும் ஒளிரும் , புலி மற்றும் பூனை கண்கள் போன்று . பாபாவின் உடல் முழுவதும் தேஜாஸ் விரிந்து நன்றாக தெரியும் . நான் பாபாவை பார்க்கும்போதெல்லாம் , கடவுளே நேரடியாக பூமிக்கு வந்து மனிதர்களுடன் இருக்கிறார் என உணர்வேன் . பின்னர் நாங்கள் ஷீரடியை விட்டு திரும்பியபோது , என் கணவர் வழியில் பத்திரிகையில் ஒர் விளம்பரத்தை கண்டார் . அதில் , பெங்களூர் T.R ஆலையில் மேற்பார்வையாளர் பணிக்கு ஆள் தேவை என இருந்தது . உடனே எனது கணவர் அந்த பணிக்கு விண்ணப்பித்தார் . பாபாவின் அருளால் அவர்க்கு அந்த வேலையும் கிடைத்தது" .
📍பின்னர் கணவருடன் ராஜம்மா பெங்களூருக்கு குடி பெயர்ந்தார். அங்கு சென்ற ராஜம்மா அதுமுதல் கணவருடன் அடிக்கடி பாபாவைக் காண சீரடிக்குச் செல்லத் துவங்கியதினால் நாளடையில் அவருக்கும் அவள் கணவருக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது.
📍அதை பற்றி ராஜம்மா கூறியது ,
" என் கணவர் சில நேரம் என்னிடம் ஷீரடிக்கு செல்வதை பற்றி என்னிடம் கேள்வி கேட்பார் ,
📎அதற்கு நான் , பாபா என்னுடைய "குரு" . எனக்கு வேறு கடவுள் எல்லாம் முக்கியமில்லை . நான் இயற்கையாகவே பாபாவை சென்று தரிசனம் செய்கிறேன் " என பதில் கூறுவேன் .
சில நேரம் , நீ எதற்கு பாபாவை தேர்வு செய்தாய் ? என கேட்பார் .
📌அதற்கு நான் ,
"அவர் ஓர் சத்குரு , கடவுளின் அவதாரம் . அதனால் தான் நான் அவரை தேர்வு செய்தேன் . நான் அவரிடம் மட்டுமே பிராத்தனைகளை செய்வேன் , முழு இதயத்துடன் . எப்போதெல்லாம் அவர் என் இதயத்தை விட்டு தூர இருக்கிறார் என உணரும்போது , அப்போதெல்லாம் நான் ஷீரடிக்கு சென்று அவரை தரிசனம் செய்து வருவேன் " என்பேன்.
📍 "" பின்னர் நான் ஷீரடிக்கு 4 முறை சென்று வந்தேன் . அது எனது கணவருக்கு வெறுப்பை ஏற்படுத்தியது . நான் ஷீரடிக்கு சென்று சில நாட்கள் தங்கியிருந்தேன் . பாபாவின் அற்புதமான லீலைகளை கண்டேன் , அவர் ஆசிர்வாதத்துடன் கண்டேன் . நான் தான் ஒரே ஆதாரம் , பாபா யோக சாதனைகளில் , கண்ட யோகவை நேரில் பார்த்ததில் . 1915 ஆம் ஆண்டு , ஒர் நாள் இரவு 1.30 மணிக்கு பாபா தனது கை , கால்களை எல்லாம் தனித்தனியாக கழற்றி துவாரகமாயில் அங்கு அங்கு போட்டு வைத்தார் ( சாய் சத்சரித்திரம் ) . அந்த சம்பவத்தை நேரில் கண்டு நான் பயந்து வியப்பு அடைந்தேன் . அப்பொழுது எனக்கு 24 வயது " .
📌" அதுபோல நான் பாபா தவுதி யோக செய்ததையும் பார்த்தேன் . துவாரகமாயின் வெளியே நின்று கொண்டு பாபா தனது , குடலை முழுவதுமாக வெளியே எடுத்து ( சாய் சத்சரித்திரம் ) கழுவி சுத்தம் செய்வார் . பாம்பு மற்றும் தவளையின் பூர்வஜென்ம கதைகளை பாபா விவரித்து கூறும்போது நான் அந்த சமயம் அங்கு இருந்தேன் " . இந்த கதை பகுதி சாய் சத்சரித்தில் விளக்கமாக கூறியுள்ளது .
📍" பின்னர் நாட்களில் நான் தொடர்ந்து பல முறை ஷீரடிக்கு சென்றேன் . பாபா தனது சொந்த மகளாக என்னை நடத்தினார் . சில நேரம் அவர் அற்புதமான செயலை நான் பார்வையாளராக உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருந்தேன் . பாபா என்னை ஆசிர்வதித்தார் , நான் என்னை மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணர்ந்தேன் . பலநேரங்களில் நான் வீட்டில் இருக்கும்போது , பாபாவின் நாமத்தை இடைவிடாது ஜெபித்து கொண்டு இருந்தேன் . கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு இல்லற வாழ்க்கையின் மேல் வெறுப்பு ஏற்பட்டது " என ராஜம்மா கூறினார் .
📌சம்சார வாழ்கை கசந்தது. பிடிப்பு இல்லாமல் வாழத் துவங்கினாள். அடிக்கடி சீரடிக்கு சென்று பாபாவை தரிசித்து வந்ததினால் ஆன்மீக தாக்கம் அதிகமாக அதிகமாக அவளால் அவளுடைய கணவரின் உடல் ஆசைகளுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அதுவே அவர்களிடம் பிளவை ஏற்படுத்த அவளுடைய கணவர் அவளைப் விட்டு பிரிந்து சென்று வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டு விட்டார்.
📍அதற்கு இடையே ராஜம்மாவின் மகன் மாணிக்கராஜ் பெரியவனாகி காவல் துறையில் போலிஸ்காரராக வேலைக்கு சேர்ந்தார். ஒரு நாள் அவர் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது விபத்து ஏற்பட்டு மரணம் அடைந்தார். அதுவே ராஜம்மாவின் வாழ்கையில் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. ஆறுதல் தர கணவரும் இல்லை. பாதுகாக்க மகனும் இல்லை. பெற்றோர்கள் இடிந்து போயினர். ஆகவே ராஜம்மா குடும்ப வாழ்கையில் இருந்து முற்றிலுமாக விலகினாள்.
📍 ராஜம்மாவின் கணவர் அவரை விட்டு பிரிந்துவிட்டதால் , பிறகு ராஜம்மாவை அவரது தந்தை ஷீரடிக்கு அழைத்து சென்றார் . பாபா ராஜம்மாவை அங்கு ஷீரடியில் உள்ள ஓர் பக்தரின் வீட்டில் தங்கவைத்து , அவரது நாமத்தை இடைவிடாது ஜெபிக்கும் படி கூறினார் .
📌வாழ்கையில் சற்று மாறுதல் ஏற்படலாயிற்று. எப்போதுமே பாபாவின் நாமத்தை உச்சரித்தவண்ணம் இருக்கலானாள்.
பாபா அவளை சில காலம் வாடாவில் தங்கி தன் பெயரை உச்சரித்துக் கொண்டு இருக்குமாறு கூறினார் .
📍ராஜம்மாவிடம் பாபா கூறியது ,
" இன்று முதல் உன் பெயர் சிவம்மா தாயீ ஆகிறது . நீ பெங்களூருக்கு போ , என் பெயரில் ஆஸ்ரமம் தொடங்கு . என்னுடைய ஆசிர்வாதம் உனக்கு எப்பவும் உண்டு , அல்லாஹ் மாலிக் ""
என பாபா கூறி அனுப்பினார் .
📌 பாபா பெயரை ராஜம்மா என்பதில் இருந்து சிவம்மா தாயீ எனவும் பாபா மாற்றினார். அது முதல் ராஜம்மாவின் பெயர் சிவம்மா தாயீ என ஆயிற்று. சில நாட்கள் சீரடியில் தங்கி இருந்த சிவம்மா தாயீ பாபாவின் அறிவுரையை ஏற்று ஒரு புத்தகத்தையும் அவர் பாதுகைகளையும் பாபாவிடம் இருந்து கேட்டு எடுத்துக் கொண்டு பெங்களூருக்கே வந்தார்.
📍பெங்களூருக்கு வந்தவள் அங்கிருந்தவாறே பல இடங்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தவாறு இருந்தாள். ஆனால் நிலையான இருப்பிடம் இல்லாததினால் பெங்களூரில் மடிவாலாவில் தற்போது அவள் ஆலயம் கட்டி உள்ள இடத்தில் அப்போது காலியாக இருந்த மைதானத்தின் அடியில் இருந்த ஒரு மரத்தடியில்தான் பெரும்பாலும் தங்கினாள். அப்போது அந்த இடம் இறந்தவர்களைப் புதைக்கும் சுடுகாட்டு இடமாக இருந்ததாம். யார் சாப்பாடு கொடுத்தாலோ அந்த சாப்பாட்டை சாப்பிட்டவாறு வாழ்கை ஓடியது. இருக்க இடம் இன்றி அங்கும் இங்கும் சுற்றி அலைந்து கொண்டு அங்காங்கே தங்கியவளின் நிலையைக் கண்ட திரு நாராயண ரெட்டி என்பவர் தன்னை அறியாமல் ஒரு நாள் தானாகவே அவரை சந்தித்து அவள் தங்கி இருக்க தன்னிடம் இருந்த நிலத்தின் ஒரு பகுதியை தானமாக தந்தார்.
📍ஊர் பெயர் தெரியாத ஒருவர் சிவம்மா தாயீயிடம் தானாக வந்து பேசி அவளுக்கு நிலத்தை தானமாக ஏன் தர வேண்டும்? அதுவே பாபாவின் மகிமை. சாயிபாபா அவளை சோதனை செய்து விட்டே அவள் மூலம் தனக்கு ஒரு இடத்தில் ஆலயம் அமைத்துக் கொள்ள விரும்பி இருந்தார். அதை நடத்திக் காட்டினார்!. அந்த நிலமே இன்று மடிவாடாவில் ரூபன் அக்ராஹாரம் எனப்படும் இடத்தில் சிவம்மா தாயீ தங்கி இருந்த இடமும் சீரடி சாயிபாபாவின் ஆஸ்ரமம் அமைத்து உள்ள இடமும் ஆகும்!. சிவம்மா தாயீ அந்த நிலத்தை தானமாக பெற்றபோது அந்த நிலம் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் தள்ளி தனி இடமாக இருந்தது .
📌நிலத்தை தானமாகப் பெற்ற சிவம்மா தாயீ அந்த நிலத்தில் இருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்தாள். தன்னை மறந்தாள், உறக்கம் இல்லை, உணவும் இல்லை, இடத்தை விட்டு அசையவும் இல்லை. அவள் அங்கு தியானத்தில் அமர்ந்ததை பலரும் பார்த்து இருந்தாலும் அதை தடுக்க முயலவில்லை. அப்படியே விட்டு விட்டார்கள். அவள் சாயிபாபாவின் பக்தை, கடவுள் சக்தி உள்ளவள் என்பதும் அவர்களுக்கு புரிந்து இருந்தது. பன்னிரண்டு ஆண்டுகள் அப்படியே அமர்ந்து தியானத்தில் இருந்தவள் . அவள் மீது மறையும் அளவிற்கு கரையான் புற்று எழும்பத் துவங்கியது. அப்போது அதை யாரும் அதைப் பார்க்கவில்லை.
📍ஆனால் ஒரு நாள் அவள் தலை முடி மீது ஒரு நாகப்பாம்பு வந்து அமர்ந்தபோது அங்கு எதேற்சையாகச் சென்றவர்கள் அதைப் பார்த்தார்கள். சாயி நாமத்தை உச்சரித்தபடியே அவர்களில் சிலர் அந்தப் பாம்பை விரட்டினார்கள். கரையான் புற்றை கலைத்துவிட்டு அவளிடம் தவத்தைக் கலைத்துக் கொள்ளுமாறு வேண்டினார்கள். அவர்களின் வேண்டுகோளை ஏற்ற சிவம்மா தாயீயும் தனது தவத்தைக் கலைத்துக் கொண்டாள். அவளை அங்கு சிறு கொட்டகைப் போட்டு குடி இருத்தினார்கள். அதற்குப் பிறகு சிவம்மா அங்கிருந்தபடியே பாபாவின் புகழைப் பரப்புவதில் தன் காலத்தை கழித்தார். பாபாவின் மூல சில சக்திகளைப் பெற்றார். காலம் நகர்ந்தது.
📌அவளிடம் ஆசி கேட்டு வந்தவர்கள் தாமாகவே காணிக்கை தந்தார்கள் . மெல்ல மெல்ல தனக்கு கிடைத்து வந்த பணத்தைக் கொண்டே அதே நிலத்தின் ஒரு பகுதியில் அவர் சிறு பள்ளியை துவக்கினார். அது இன்று உயர்நிலைப் பள்ளியாக மாறி உள்ளது. நாளடைவில் அங்கும் இங்குமாக கிடைத்தப் பணத்தைக் கொண்டு அந்த நிலத்தில் பாபாவிற்கு ஒரு சிறு ஆலயம் அமைத்தார். அது ஒரே நாளில் எழுப்பப்படவில்லை. மெல்ல மெல்ல எழுந்தது. பலரும் காணிக்கை கொடுத்தார்கள். அவருக்கு தூரத்து சொந்தக்காரர் என கூறப்பட்ட தொழில் அதிபர் திரு பொள்ளாச்சி மகாலிங்கமும் உதவி செய்து உள்ளாராம்.
📍 பின்னர் சிவம்மா தாயீயின் வயது 102 ஆயிற்று. அப்போது அவர் கூறியது ,
"" தன்னை எப்போது தனது குருநாதரான பாபா அழைப்பாரோ அப்போது தான் ஒரு குழிக்குள் அமர்ந்து விடுவேன் , அதன் மீது சமாதி எழுப்பி தன்னை அங்கேயே அடக்கம் செய்துவிடுங்கள் "
என கூறினார்.
📍 மேலும் அவர் கூறியது ,
"என்னுடைய வாழ்க்கையிலும் சரி , நான் சமாதி அடைந்த பின்பும் சரி , பாபா என்னை எப்போதும் பாதுகாத்து என் மேல் இரக்கம் கொள்வார் . நான் உள்ளே வெளியே இழக்கும் மூச்சு காற்று கூட பாபா ஆசீர்வாதம் மற்றும் அவரது விருப்பம் தான் . அவர் 1918 ஆம் ஆண்டு மகாசமாதி அடைந்த பின்னரும் என்னுடன் எப்போதும் சூட்சம உருவத்தில் ( cosmic body ) தொடர்பில் உள்ளார் . அவர் நன்றாக தமிழில் என்னிடம் பேசுவார் . பாபா என்னுடன் அடிக்கடி சூட்சம உருவத்தில் தொடர்பு கொண்டு , என்னுடன் பேசுவார் , தேவைப்படும் போது சில நேரம் எச்சரித்தார் . அவர் என்னிடம் அனைத்தையும் கூறுவார் மற்றும் என்னை எப்போதும் வழி நடத்திக்கொண்டு இருக்கிறார் "
என்றார் சிவம்மா தாயீ .
📌 பின்னர் அதற்காக அவர் கட்டி இருந்த பாபாவின் ஆலயத்தில் பாபாவின் சிலை வைக்கப்பட்டு உள்ள பீடத்தின் அடிப் பகுதியில் ஒரு அறையை அமைத்து குழியையும் வெட்டி வைத்து அங்கேயே அமர்ந்து இருந்தார்.
11-07-1994 அன்று, 105 வது வயதில், சிவம்மா தாயீ சமாதி அடைந்தார். அவர் விருப்பபடியே அவரை அங்கிருந்த ஆலயத்தில் பாபாவின் பீடத்தின் அடியில் அமைக்கப்பட்டு இருந்த அறையில் அடக்கம் செய்து கருங்கல்லினால் ஆன சமாதி எழுப்பினார்கள்.
📍சிவம்மா தாயீ பாபாவிற்காக அந்த நிலத்திலேயே இரண்டு ஆலயங்களை எழுப்பினார். முதல் ஆலயத்தில் கருப்பு நிறக் கல்லில் பாபா அமைந்து உள்ள கோலத்தில் சிலையை வடிவமைத்து பிரதிஷ்டை செய்து உள்ளார். அதற்குள்தான் அவர் சமாதி ஆலயமும் உள்ளது. அந்த ஆலயத்தை அவர் அமைத்த சில நாட்களுக்கு பின்னால் பாபா அவர் கனவில் தோன்றி ‘உலகம் முழுவதும் பல இடங்களிலும் தனக்கு சிலைகள் இருந்தாலும் தான் பகீராக காட்சி தரும் சிலை எங்குமே வைக்கப்படவில்லை என்பதினால் அங்கு தனக்கு பிட்சை எடுக்கும் கோலத்தில் ஒரு சிலை அமைத்து வழிபடுமாறு’ கூறி இருந்தாராம்.
📌அந்தக் கட்டளையை ஏற்றுக் கொண்ட சிவம்மா தாயீ அதே நிலத்தில் ராஜஸ்தானை சேர்ந்த சிற்பியை வரவழைத்து கையில் பிட்சை பாத்திரத்துடன் பாபா நின்றுள்ள கோலத்தில் பகீரைப் போன்ற பாபாவின் சிலையை வடிவமைக்கச் செய்து அதை பிரதிஷ்டை செய்தார். அந்த இரண்டாம் ஆலயத்தில் உள்ள பெரிய கூடத்தில் துவாரகாமாயி போன்ற அமைப்பும் பிரார்த்தனைக் கூடமும் உள்ளது. அவர் மறைந்தப் பின் அவர் வாழ்ந்து வந்திருந்த அதே கொட்டகையில் அவர் பூஜை செய்து வைத்து இருந்த பாபாவின் சிலையை பிரதிஷ்டை செய்து வைத்து அவர் நினைவாக அவர் உடமைகளையும் அங்கே வைத்து உள்ளார்கள். ஆக ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் சீரடி சாயிபாபாவின் மூன்று ஆலயங்கள் அற்புதமாக அமைந்து உள்ளன.
📍முதலாவது ஆலயத்தில் நுழைந்ததும் கூடத்தில் பாபாவை பார்த்தவாறு நந்தி உள்ளது. வலது புறத்தில் நவகிரகங்கள் உள்ளன. அதே கூடத்தில் சிறுவர்கள் சிறுமிகள் கம்பியூட்டர் பயிற்சி பெரும் வகையில் பாடங்கள் பயில்விக்கப்படுகின்றன. அந்தக் கூடத்தைத் தாண்டிச் சென்றால் பாபாவின் சன்னிதானம் உள்ளது. அதில் உயரமான பீடத்தில் பாபாவின் அமர்ந்த நிலையில் உள்ள சிலைக்கு பூஜைகள் செய்விக்கப்படுகின்றன. அந்த கூடத்தின் அடியில் அமைந்து உள்ள சிறிய அறையில்தான் சிவம்மா தாயீயின் சமாதி உள்ளது.
📍சமாதிக்குச் சென்று அவரை வழிபட படிக்கட்டு போடப்பட்டு உள்ளது. அந்த ஆலயத்தில் இருந்து வெளிவந்தால் அதன் வலதுபுறத்தில் சுமார் பத்து அடி தூரத்தில் சிவம்மா தாயீ தங்கி இருந்த இடத்தில் அமைக்கப்பட்டு உள்ள சிறிய சாயி ஆலயம் உள்ளது. அவர் உடமைகளும் அவர் பயன்படுத்தியப் பொருட்களும் கூட அங்கேயே வைக்கப்பட்டு உள்ளன. அங்கிருந்து வெளியில் வந்தப்பின் வலதுபுறம் திரும்பிச் சென்றால் சுமார் ஐமபது அடி தூரத்தில் அதே நிலத்தின் எல்லையில் மூன்றாவது ஆலயம் உள்ளது. அங்குதான் பாபா பகீர் போன்ற உருவில் காட்சி தருகிறார். அந்த மூன்று ஆலயங்களும் உள்ள நிலத்தின் நான்கு பக்கங்களிலும் சுவர்களைப் எழுப்பட்டு உள்ளன.
📍சிவமா தாயீ உயிருடன் இருந்த காலத்தில் அவரிடம் செல்லும் பக்தர்கள் தமது துயரத்தைக் கூறி பிரச்சனை தீர வழி கேட்டால், சிவம்மா தாயீ பிராணாயம் செய்வது போல தனது மூச்சை உள்ளே இழுத்துக் கொண்டு பாபாவிடம் அவர்களின் பிரச்சனை தீர வழி கேட்டு அதை பக்தர்களிடம் கூறுவாராம்.
📍 பாபா அவர் முன் நேரிலே தோன்றி அவருக்கு அதற்கான பதில் தருவாராம். அதை பற்றி சிவம்மா தாயீடம் கேட்டால் . அவர் கூறுவது ,
” தான் ஒன்றும் அற்றவள்.
தான் பக்தர்களுக்குத் தரும் அன்பும் ஆசிகளும் தன் மூலம் பாபாவேதான் அவர்களுக்குத் தருகிறார்” என்றே கூறுவாராம்.
🎉பாபாவின் அன்பையும், ஆசிகளையும், தீட்சையையும் நேரடியாகவே பெற்ற முதலாவதும் முடிவானவருமான ஒரே பெண்மணியும் சிவம்மா தாயீதான்🕉
🙏கண்டிப்பாக பகிருங்கள் பக்தர்களே ❗ அனைவரும் அறியவேண்டும் 🙏
ஆலயத்தின் முகவரி ::
Shiridi sai baba temple ,
E13, 10th Main Rd, Roopena Agrahara, Bommanahalli Roopena Agrahara, Bommanahalli Bengaluru, Karnataka 560068 .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக