சனி, 16 ஜூன், 2018

கைலாஷ் குகையில் ஒளிரும் லிங்கம்... மர்மம் என்ன ?

கைலாஷ் குகையில் ஒளிரும் லிங்கம்... மர்மம் என்ன ?

சத்திஸ்ஹர் மாநிலத்தில் உள்ள பஸ்தர் மாவட்டத்தின் தலைநகரமே இந்த ஜக்தல்பூர். ரம்மியமான இயற்கைக்காட்சிகள், பசுமையான மலைப்பகுதிகள், ஆழமான பள்ளத்தாக்குகள், அடர்ந்த காடுகள், ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், குகைகள், இயற்கைப்பூங்காக்கள், கம்பீரமான வரலாற்றுச்சின்னங்கள், கனிம வளம், உல்லாசமான வாழ்க்கை முறை மற்றும் ஆன்மீக அமைதி போன்ற எல்லா சிறப்பம்சங்களையும் இந்த ஜக்தல்பூர் தன்னுள் கொண்டிருக்கிறது.
இத்தகைய ஜக்தல்பூரில் அமைந்துள்ள கைலாஷ் குகையில் மிளிரும் தன்மைகொண்ட லிங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது வியப்பளிக்கவைக்கிறது. பசுமைச் சூழல் நிறைந்த காட்டில், இயற்கையாக உருவான ஓர் குகையில் லிங்கம் இருப்பது அப்பகுதி மக்களால் அதிசயமாக போற்றப்படுகிறது. வாருங்கள், அந்தக் குகையின் ரசசியம், அதனைச் சுற்றுயுள்ளத் தலங்கள் அனைத்தையும் பார்க்கலாம். 
கைலாஷ் குகைகள் கைலாஷ் குகைகள் எனும் இந்த பாறைப்படிம குகை அமைப்புகள் மிகுல்வாடா எனும் இடத்துக்கு அருகே கங்கேர்காட்டி தேசிய இயற்கை பூங்கா வளாகத்தில் அமைந்திருக்கின்றன. 1993ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த குகைகள் தரையிலிருந்து 40 மீட்டர் உயரத்தில் 250 மீட்டர் நீளமுடையதாக காணப்படுகின்றன. ஸ்டாலக்சைட் மற்றும் ஸ்டாலக்மைட் பாறைகளால் உருவாகியிருக்கும் இந்த இயற்கையான குகைக்குடைவு அமைப்புகள் பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் அழகுடன் காட்சியளிக்கின்றன.
இசையெழுப்பும் சுவர்கள்
ஒரு குறுகிய துளை போன்ற வாசல் வழியாக இந்த குகை அமைப்பிற்குள் செல்ல முடியும். வெற்றிடத்தை கொண்டுள்ள ஓடு போல அமைந்திருக்கும் குகைச்சுவர்களை கைகளால் தட்டும்போது வித்தியாசமான இசை ஒலிகள் எழும்புவது ஒரு அதிசயமாகும்.
சிவலிங்கம்
கைலாஷ் குகையின் உள்ளே சிவலிங்கம் போன்ற ஒரு பாறை எழுச்சி காணப்படுகிறது. இந்தியாவில் இது போன்ற பாறைக் குகை அமைப்புகள் வேறெங்கும் காணக்கிடைக்காத ஒன்றாகும. இதனாலேயே இதன் விசித்திர அழகை ரசிக்க சுற்றுலா ஆர்வலர்கள் மற்றும் இயற்கை ரசிகர்கள் இத்தலத்தை தேடி வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
தீரத்கர் நீர்வீழ்ச்சி ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் பிரசித்தமான சுற்றுலாத்தலமாக விளங்கும் கங்கேர் வேலி தேசிய பூங்கா வளாகத்தின் ஒரு அங்கமாக இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சி அமைந்திருக்கிறது. சட்டிஸ்கரில் அமைந்திருக்கும் அற்புதமான நீர்வீழ்ச்சிகளில் இதுவும் ஒன்றாக புகழ் பெற்றுள்ளது. முகாபஹார் ஆற்றின் பாதையில் உருவாகும் இந்த நீர்வீழ்ச்சி 100 அடிக்கும் மேற்பட்ட உயரத்திலிருந்து விழுகிறது. இந்த ஆறு நீர்வீழ்ச்சியிலிருந்து சற்று தொலைவில் உள்ள ஒரு ஏரியில் உருவாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தீரத்கர் நீர்வீழ்ச்சியின் உள்ளே அடுக்கடுக்காக அமைந்திருக்கும் படிகள் மற்றும் பாறைத்தளங்கள் போன்ற அமைப்புகள் வழியாக பாதாளத்தின் உள்ளே செல்வது போன்று ர்வையாளர்கள் நீர்வீழ்ச்சி விழும் அடித்தளத்துக்கே செல்லலாம். நீர்வீழ்ச்சியின் அடித்தளத்துக்கு செல்லும் அடுக்குத்தளங்களின் மத்தியில் மலை விளிம்பில் வீற்றிருக்கும் திபெத்தியக் கோவில் போன்று அமைந்துள்ள ஓர் சிவன் - பார்வதி கோவிலும் உள்ளது.
கொடும்சர் குகைகள்
ஜக்தல்பூர் நகரத்திலிருந்து 28.4 கிலோ மீட்டர் தொலைவில் கொடும்சர் குகைகள் அமைந்துள்ளன. இந்த அதிசய பாறைக்குகை அமைப்புகள் இந்தியாவிலேயே முதன்மையானவையாகவும் உலகிலேயே இரண்டாவது நீளமான பாறைக்குகை அமைப்பாகவும் புகழ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குகைகள் யாவுமே பாதாளத்தில் அமைந்திருப்பதால் உள்ளே வெளிச்சமே கிடையாது என்பதை பயணிகள் மனதில் கொள்வது நல்லது. குறுகலான பாறை இடுக்குகள், படி அமைப்புகள் வழியாக இந்த குகைகளின் உள்ளே செல்ல முடியும்.
சித்ரகொடே நீர்வீழ்ச்சி சித்ரகூட் அல்லது சித்ரகொடே என்று அழைக்கப்படும் இந்த நீர்வீழ்ச்சி இந்தியாவின் நயாகரா என்று பெரும்பாலும் அறியப்படுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்பதை நேரில் பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும். உலகப்பிரசித்தி பெற்ற நயாகராவை போன்றே பிரமாண்டமான நீர்ப்பரப்பானது பரந்து உயர்ந்த பாறை அமைப்புகளிலிருந்து அரை வட்ட வடிவில் காணப்படும் பள்ளத்தாக்கில் செங்குத்தாக சரிந்து புரளும் அற்புதக்காட்சிதான் இந்த சித்ரகொடே. இந்தியாவின் மிக அகலமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இது புகழ் பெற்றுள்ளது. சத்திஸ்ஹர் மாநிலத்தின் மிக முக்கியமான சுற்றுலா அம்சங்களில் ஒன்றாகவும் இது சுற்றுலா பயணிகளால் விரும்பப்படுகிறது.
தல்பத் சாகர் ஏரி
ஜக்தல்பூர் நகரத்திலேயே இந்த தல்பட் சாகர் ஏரி சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள மிகப்பெரிய செயற்கை ஏரியாக புகழ் பெற்றிருக்கிறது. இது ராஜா தல்பத் காகத்தியா எனும் மன்னரால் 400 வருடங்களுக்கு முன்னர் மழை நீரை சேகரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் நடுவே அமைந்திருக்கும் தீவுப்பகுதியில் உள்ளூர் குல தெய்வத்துக்கான ஒரு புராதன கோவிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது. துடுப்புப்படகு அல்லது மீன்பிடி படகுகளில் பயணிகள் இந்த தீவுப்பகுதிக்கு வரலாம். அமைதியுடன் காட்சியளிக்கும் இந்த தீவுப்பகுதி ஏகாந்தமாக தனிமையையும் இயற்கை எழிலையும் ரசிக்க பொருத்தமாக உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக