இன்று (24.08.18) - வரலட்சுமி விரதம்
வரலட்சுமி விரதம் அல்லது மகாலட்சுமி விரதம் என்பது 16 வகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியின் அருள் வேண்டி செய்யப்படும் முக்கியமான விரதம் ஆகும்.
மகாலட்சுமியின் அவதார நாள் துவாதசி வெள்ளிக்கிழமை என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி அல்லது ஆவணி மாத பௌர்ணமிக்கு முன் வரும் வெள்ளிக்கிழமை வரலட்சுமி விரத நாளாகும்.
சுமங்கலிப் பெண்கள் தங்கள் மாங்கல்யம் நிலைக்கவும், தங்களின் குடும்பங்கள் செல்வ, செழிப்போடு இருக்கவும், கன்னிப்பெண்கள் தங்களுக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காகவும் இந்த விரதத்தினை மேற்கொள்வது வழக்கம்.
திருமணம் ஆகாதவர்கள் இதனைக் கடைபிடிக்க விரைவில் திருமணம் கைகூடி வரும்.
இந்த விரதத்தினைக் கடைப்பிடிப்பதால் அன்னை வரலட்சுமியின் அருள் பெற்று மகிழ்ச்சியும், நலமும் ஏற்படும் என்பது ஐதீகம்.
*வரலட்சுமி விரதத்தின் புராண வரலாறு*
1. சிவபெருமானின் உபதேசப்படி, மகாலட்சுமியை வழிபட்டு விரதம் பூண்டாள் உமாதேவி. இதனாலேயே முருகன் அவதாரம் நிகழ்ந்தது என புராணங்கள் கூறுகின்றன.
மலைமகளாம் பார்வதி தேவி, அலைமகளாம் திருமகளைப் போற்றி, விரதம் பூண்ட நன்னாளே வரலட்சுமி விரத நன்னாள் ஆகும்.
2. கயிலாயத்தில் ஒருநாள் சிவபெருமானும், உமாதேவியும் "சொக்கட்டான்' என்ற பகடை விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.
"விளையாட்டில் நான்தான் வெற்றி பெற்றேன்' என்றார் சிவன்.
ஆனால் உமாதேவியோ, ""இல்லையில்லை. சொக்கட்டான் விளையாட்டில் வென்றவள் நானே'' என்றாள்.
அந்த விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சித்ரநேமி என்ற கந்தர்வனிடம், "நீதான் யார் வெற்றி பெற்றது என்று கூற வேண்டும்' என்று சிவபெருமான் சொல்ல, அவனோ, "சிவபெருமான்தான் வெற்றி பெற்றது' என்றான்.
சித்ரநேமி பொய்யான தீர்ப்பு கூறியதாக எண்ணிக் கோபமடைந்த உமாதேவி, "நீ பெருநோய்க்கு ஆளாவாய்' என்று சாபமிட்டாள்.
தன்னை மன்னிக்குமாறு சித்ரநேமி வேண்ட, "கற்புக்கரசிகள் வரலட்சுமி விரத பூஜை செய்வதை நீ பார்க்கும்போது, உன் பெருநோய் நீங்கும்' என்றாள்.
அதன்படி சித்ரநேமியும் அந்த விரதத்தைக் கண்டு நோய் நீங்கப் பெற்றான். எனவே வரலட்சுமி விரதம் மேற்கொள்ள நோய்நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.
3. மகத தேசத்தில் குண்டினபுரம் என்னும் நகரில் பிறந்து வாழ்ந்து வந்தாள் சாருமதி. கற்பில் சிறந்தவள். தன் கணவன், மாமனார், மாமியாருக்கு வேண்டிய நற்பணிகளைச் செய்வதையே வாழ்நாள் பாக்கியமாகக் கொண்டவள்.
தன் கணவன் உஞ்ச விருத்தி மேற்கொண்டு பெற்ற அரிசியை அடிசிலாக்கி வறுமையிலும் பெருமையான வாழ்க்கையை நடத்தி வந்தாள்.
எத்தகைய வறுமையிலும் இறைவனை வணங்கிடத் தவறியதில்லை. அவளுக்கு அருள்புரிய நினைத்த மகாலட்சுமி, சாருமதியின் கனவில் தோன்றினாள்.
""உனது சிறப்பான பக்தி எனது நெஞ்சை நெகிழ வைத்தது. நீ என்னை பூஜித்து வழிபாடு செய்வாய். அதனால் உனக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்'' என்றாள்.
அதன்படி சாருமதி மேற்கொண்ட விரதமே வரலட்சுமி விரதம். அதன் பயனாக பதினாறு செல்வங்களையும் பெற்றாள் சாருமதி.
4. பத்ரச்ரவஸ் என்ற மன்னன் விஷ்ணு பக்தன். அவனுடைய மனைவி சுரசந்திரிகா, மகள் சியாமபாலா. மகளை சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்கு மணமுடித்துக் கொடுத்தார்கள்.
காலங்கள் கடந்தன. ஒருநாள் வயது முதிர்ந்த ஒரு சுமங்கலி மூதாட்டி பத்ரச்ரவசின் அரண்மனைக்கு வந்தாள். மூதாட்டியின் வடிவெடுத்து வந்தது சாட்சாத் மகாலட்சுமி தேவி.
வரலட்சுமி விரதத்தின் அருமை பெருமைகளை சொன்ன மூதாட்டி, அந்த விரதத்தை கடைபிடிக்குமாறு சுரசந்திரிகாவிடம் சொன்னாள்.
வந்திருப்பது லட்சுமி தேவி என்பது அவளுக்கு தெரியவில்லை. பிச்சை கேட்க வந்த கிழவி உளறுவதாக கருதி, அவமானப்படுத்தி விரட்டினாள் சுரசந்திரிகா.
லட்சுமிதேவி ஒரு இடத்துக்கு வருவது சாமானிய காரியம் அல்ல. அரண்மனையை தேடிவந்தவளை விரட்டினால் அங்கு இருப்பாளா? அந்த இடத்தை விட்டு அகன்றாள் லட்சுமி தேவி. விளைவு..
மணிமகுடத்தையும் செல்வச் செழிப்பையும் இழந்தாள் சுரசந்திரிகா.
அந்த இடத்தை காலிசெய்த மகாலட்சுமி நேராக அரசியின் மகள் சியாமபாலாவிடம் சென்றாள். வரலட்சுமி விரதத்தின் பலன்கள் பற்றி அவளிடமும் சொன்னாள்.
சியாமபாலா பக்தி சிரத்தையுடன் அதை
கேட்டாள். பயபக்தியுடன் வரலட்சுமி நோன்பு மேற்கொண்டு பூஜை செய்து வழிபட்டாள். விரத மகிமையால் அவளிடம் மலை போல் செல்வம் குவிய தொடங்கியது.
பெற்றோர் வறுமை நிலையில் இருப்பதை சியாமபாலா அறிந்தாள். ஒரு செப்பு பானை நிறைய தங்கத்தை நிரப்பி அவர்களுக்கு அனுப்பி வைத்தாள்.
அவள் அனுப்பி வைத்தாலும், அதை அனுபவிப்பதற்கு யோகம் இருக்க வேண்டுமே. அவர்களை சூழ்ந்திருந்த தரித்திரம், அவயோகம் அந்த வாய்ப்பை தடுத்துவிட்டது.
அவர்களிடம் வந்ததுமே, ஒரு பானைத் தங்கமும் கரியாக மாறிவிட்டது. இதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தாள் சியாமபாலா.
வீடு தேடி வந்த லட்சுமி தேவியை அவமானப்படுத்தி அனுப்பியதாலேயே அவர்களுக்கு இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டாள். வரலட்சுமி விரதத்தின் மகிமைகளை தாய்க்கு எடுத்து சொன்னாள்.
தாங்கள் செய்த தவறுகளை மன்னித்து அகம்பாவத்தை போக்குமாறு மகாலட்சுமியை மனமுருக வேண்டினாள் சுரசந்திரிகா.
வரலட்சுமி விரதம் மேற்கொண்டு, பூஜை, வழிபாடு செய்து பிரார்த்தனை செய்தாள். இழந்த செல்வங்களை மட்டுமின்றி, ஆட்சி, அதிகாரமும் அவர்களை வந்தடைந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
*வரலட்சுமி விரத பூஜை முறை*
இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் பெண்கள், முதல் நாளன்றே வீட்டை நன்கு கழுவி தூய்மைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பின்னர் வீட்டு மனையை சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் இட்டு மாவிலைத் தோரணம் கட்ட வேண்டும்.
விரத நாளன்று, வீட்டைப் பெருக்கி சுத்தம் செய்து வாசனைப்புகையால் நிரப்பி, ஐந்துமுக விளக்கேற்றி அன்னை மகாலட்சுமியை வணங்கத் தொடங்குவர்.
அதன் பிறகு, வீட்டின் கிழக்கு திசையில் ஈசான்ய மூலையில், பூஜைக்கான இடத்தை அமைத்து, நன்றாக மெழுகி, கோலமிட்டு, மண்டபம் அமைத்து, அலங்கரிக்கவும்.
மண்டபத்தின் கீழ் நுனி வாழை இலையில் நெல்லைப் பரப்பி, அதன் மீது ஒரு தட்டில் அரிசியை வைக்க வேண்டும். அதன் மேல் கலச கும்பத்தை வைக்க வேண்டும்.
அரிசி, தங்கம், ரத்தினம் ஆகியவற்றை கும்பத்தில் நிரப்பவும் (தீர்த்தத்தையும் நிரப்பலாம்). மேலே மாவிலைக் கொத்தும் தேங்காயும் வைத்து அலங்கரித்து, புதிய வஸ்திரம் சாற்றி, தங்கம் அல்லது வெள்ளியால் செய்யப்பட்ட நான்கு கரங்கள் கொண்ட மகாலட்சுமியின் பிரதிமை பிம்பத்தை (முக பிம்பத்தையும் வைக்கலாம்) மேலே வைத்து பூக்கள் சூட்டி அலங்கரிக்கவும்.
(சில இடங்களில் வீட்டின் பூஜை அறை ஒட்டிய சுவரில் வெள்ளை அடித்து அம்மனின் திருவுருவத்தை எழுதி ஆவாஹணம் செய்கிறார்கள். பூஜைக்காக வைக்கப்படும் கலசத்தில் காதோலை, கருமணி, எலுமிச்சம்பழம் முதலியவையும் போடப்படுகிறது.)
மேற்கொள்ளப்படும் விரத பூஜை எந்தவித இடையூறுகளும் இல்லாமல் நன்கு நடைபெற வேண்டும் என்பதற்காக, விக்னங்களைக் களையும் விநாயகரை பூஜித்து, பிறகு வரலட்சுமி பூஜையைத் தொடங்க வேண்டும்.
பூஜையின் முடிவில் மஞ்சள் கயிறை(சரடு) கையில் கட்டிக் கொள்கிறார்கள்.
மஞ்சள் கயிறு மங்கலத்தின் அறிகுறி. அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் என்று சாஸ்திரம் சொல்கிறது.
எனவே, ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை (சரடை) பூஜையில் வைக்க வேண்டும்.
பூஜையின் முடிவில் மூத்த சுமங்கலிகள் மற்ற பெண்களின் வலது கையில் மஞ்சள் கயிறை கட்டி விட வேண்டும். கட்டும் போது,
நவ தந்து ஸமாயுக்தம் நவக்ரந்தி சமந்விதம்
பத்றீயாம் தட்சிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே
என்ற மந்திரத்தை ஜபிக்க வேண்டும்.
இதை சொல்ல முடியாதவர்கள், "ஒ நாராயணனின் மனைவியான மகாலக்ஷ்மியே !! 9 இழைகளும், 9 முடிச்சும், கொண்ட இந்த மஞ்சள் கயிற்றினை பிரசாதமாக ஏற்று வலது கையில் கட்டிக் கொள்கிறேன். எனக்கு நீ அருள்புரிய வேண்டும்" என்று கூற வேண்டும்.
விரதம் மேற்கொள்ளும் வெள்ளிக்கிழமை காலை 10.30க்கு முன் (ராகு காலத்துக்கு முன், சிலர் மாலை வேளையிலும் செய்வர்) ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம் வெற்றிலை பாக்கு நிவேதனம் வைத்து, வாசலின் உள் நிலைப் படி அருகே நின்று கற்பூரம் காட்டி, ஆரத்தி எடுத்து
மகாலட்சுமித் தாயை வீட்டுக்கு அழைத்து வருவதாக பாவனை செய்து, பயபக்தியுடனும் அழைத்து வந்து, அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் உள்ள கலசத்தில் வைத்திருக்கும் மகாலட்சுமி பிரதிமை பிம்பத்தில் இருந்து விரத பூஜையை ஏற்று அருள் புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு, ஆவாஹணம் செய்ய வேண்டும்.
அப்போது, மங்களகரமான தோத்திரங்களைச் சொல்லி, பாடல்களைப் பாட வேண்டும்.
அவரவர் வசதிக்கேற்ப வடை, பாயசம், பொங்கல் என நிவேதனம் செய்யலாம். பழங்கள் எனில், ஆரஞ்சு, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவற்றை நிவேதனம் செய்யலாம்.
மாலையில் அக்கம்பக்கம் இருக்கும் சுமங்கலி பெண்கள், குழந்தைகளை பூஜைக்கு அழைக்கலாம். அனைவரும் சேர்ந்து மகாலக்ஷ்மி அஷ்டகம், லட்சுமி அஷ்டோத்திரம், கனகதாரா ஸ்தோத்திரம், சகலகலாவல்லி மாலை, லலிதா சகஸ்ரநாமம் போன்றவற்றை சொல்லி விரதம் முடிக்கலாம்.
தீபாராதனை முடிந்ததும், வந்திருக்கும் பெண்கள் அனைவருக்கும் நோன்பு கயிறு, முழுத் தேங்காய், பூ, பழம், குங்குமம் கொடுத்து உபசரித்து நைவேத்ய பிரசாதங்களை வழங்க வேண்டும்.
அதன் பிறகு, காலை முதல் உண்ணா நோன்பிருந்ததை சுமங்கலிகளிடம் ஆசிப் பெற்று, அன்னையை வணங்கி, உணவருந்தி விரதத்தினை நிறைவு செய்யலாம்.
*வரலட்சுமி விரதம் – சில துளிகள்*
விரத நாளன்று மாலையோ அல்லது மறுநாள் காலையோ வரலட்சுமி அம்மனுக்கு எளிமையான ஒரு பூஜை செய்துவிட்டு அலங்காரத்தை அகற்றிக் கொள்ளலாம்.
பூஜைக்கு பயன்படுத்திய பச்சரிசி, தேங்காய் போன்றவற்றை கொண்டு அடுத்த வெள்ளிக்கிழமை பாயாசம் செய்து நிவேதனம் செய்யலாம்.
எல்லோராலும் மிக விரிவாகச் செய்ய இயலாவிட்டாலும், ஈடுபாட்டோடு தெரிந்த பாடல்களைப் பாடி, மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, பூக்களால் அர்ச்சனை செய்து, நிவேதனம் செய்து, நோன்பு சரடை கையில் கட்டி நிவேதனத்தை எல்லோருக்கும் கொடுத்து, வயதான சுமங்கலிப் பெண்களை வணங்கி தானங்கள் செய்து இந்த விரத பூஜையை நிறைவு செய்யலாம்.
வரலட்சுமி விரதத்தின் போது வீட்டுக்கு விலக்காக இருந்தால் அடுத்துவரும் வெள்ளிக்கிழமை இந்த பூஜையைச் செய்யலாம்.
இதைச் செய்யும்போது, சிறு பெண்களும் உடனிருந்து சரடைக் கட்டிக் கொள்ளலாம்.
மறுநாள் அம்மனுக்கு ஆரத்தி எடுத்த பின்னர் கலசத்தை அரிசி வைத்திருக்கும் பானையில் வைக்கவேண்டும்.
குழந்தை பாக்கிய தடைகள் நீங்கி சற்புத்திர யோகம் உண்டாகும். ஜாதகத்தில் சுக்கிர தோஷம், களத்திர தோஷம், மாங்கல்ய தோஷம் நீங்கும்.
கணவன் - மனைவி இடையே மன கசப்புகள், கருத்து வேறுபாடுகள் மறைந்து அன்யோன்யம் அதிகரிக்கும். பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.
இந்த நன்னாளில் வீடுகளுக்கு அருகில் இருக்கும் அம்மன், அம்பாள், ஆண்டாள் கோயில்களுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வணங்கி, பக்தர்களுக்கு தயிர்சாதம், சர்க்கரை பொங்கல் பிரசாதம் தரலாம்.
பக்தி, ஸ்லோக புத்தகங்கள் வாங்கி தரலாம். இல்லாதோர், இயலாதோருக்கு ஆடை, போர்வைகள் தானம் செய்ய, புண்ணிய பலன்கள் அதிகரிக்கும்.
வரலட்சுமி விரதமிருந்து மகாலட்சுமியை வழிபட்டு அவள் அருளால் சகல ஐஸ்வர்யங்களும் பெறுவோம்.
*ஸ்ரீ லக்ஷ்மி காயத்ரி*
ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மியை ச வித்மஹே
விஷ்ணு பத்னியை ச தீமஹி |
தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத் ||
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக