புரட்டாசி மாத விரதங்கள்!
புரட்டாசி பௌர்ணமி- புரட்டாசியில்
மரகத லிங்கம் வழிபாடு சிறப்பு ஹோமத்திற்கு ஊபயோகித்த மிஞ்சிய சாதத்தை மட்டும் உண்டு சிவபூஜை செய்ய வேண்டும். சூரியன் கன்னி ராசிக்குள் நுழையும் காலம் புரட்டாசி. கன்னி ராசிக்கு அதிபதி புதன். அதனின் அதி தேவதை பெருமாள், புதன் நட்புக் கிரகம் சனி. அதனால்தான் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை பூஜித்து விரதமிருந்து வணங்குதல் மிகச் சிறப்பு.
த்ரிதியை / திருதியை விரதம்- சிவ பார்வதி திருமணம் நடந்த திதியாதலால் ருத்திரருக்குரிய இந்த நாளில் தம்பதியர் இணை பிரியாமல் இருக்க, குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்க விரத பூஜை. எள்ளு சாதம் சாப்பிடவும். வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் பூஜை செய்வது சிறப்பு. பெண்களுக்கு புரட்டாசி மாசியில் செய்வது உத்தமம். அமாவாசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாள் வளர்பிறையே திருதி எனச் சிறப்பிக்கப்படும். இந்த மூன்றாம் நாள் பிறையைத்தான் இறைவன் தன் தலையில் சூட்டிக்கொண்டான். அதனால்தான் நாம் மூன்றாம் பிறை கண்டு மகிழ்கின்றோம்.
சதுர்த்தி விரதம் - பிள்ளையார் பிறந்த இந்ததிதி விநாயகர் பூஜைக்குரிய நாள். சுக்லபட்ச சதுர்த்தியன்று விரதமிருந்து தொடர்ந்து ஒருவருடம் செய்யவும். பால் ஆகாரம் சாப்பிடவும். எள் தானம் செய்து எள்சாதம் சாப்பிடவும். புரட்டாசி சுக்ல சதுர்த்தியன்று செய்யும் பூஜை சிவா-க்ஷேமம் என்றும், மாசி சுக்ல சதுர்த்தியில் செய்யும் பூஜை சாந்தா என்றும், செவ்வாய்கிழமையுடன் இனைந்துவரும் சுக்ல சதுர்த்தியை சுகா என்றும் சதுர்த்தி விரதம் மூன்று வகைப்படும்.
புரட்டாசி மாத சிறப்புகள்- 1.சூரியன் கன்னி ராசியில் நுழையும் காலத்தில் எமதர்மராஜன் பித்ரு லோக உயிர்களை அவர்தம் சொந்தங்களை காண சூட்சும உருவில் பூமிக்கு அனுப்புகின்றார். பட்சம் என்றால் பதினைந்து நாட்கள். புரட்டாசி வளர்பிறை பிரதமை திதியிலிருந்து அமாவாசை வரை பதினைந்து நாட்கள் மஹாளய பட்சம் எனப்படும். இந்த நாட்களில் உரிய முறையில் நீத்தார் கடன்களை செய்வது நற்பலன்கள் தரும். வறியவர்க்கு அன்னதானம், பசுக்களுக்கு உணவு அளித்தல் சிறப்பு. அன்னதானம் செய்வோர் அன்னதானம் முடிந்தபிறகே உணவருந்த வேண்டும்.
2. மஹாளய அமாவாசை - பித்ருக்கள் காரியம் செய்யாமலிருப்பதே வீட்டில் கவலை நிம்மதியில்லாமை கவனச் சிதறல் போன்றவைகளுக்கு காரணம், மஹாளய அமாவாசையன்று ஒரு நீர் நிலைக்குச் சென்/று நீரில் மூழ்கி எள்ளும் தண்ணீரும் பித்ருக்களுக்கு விடவும். வீட்டில் தயாரித்த பொருளை வறியவர்களுக்கு தானாமாக வழங்கிய பின்னர் குடும்பத்தினர் உண்ண வேண்டும். முன்னோர் பசி தாகம் தீர்ந்து ஆசீர்வதிப்பர்,
3. கேதார விரதம் - புரட்டாசிமாத சுக்ல பட்ச தசமியில் ஆரம்பித்து ஐப்பசி மாத அமாவாசையில் முடியும் 21 நாட்கள் விரதம் மேற்கொண்டு தூய்மையுடன் மண்ணாலான லிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிரசாதங்கள் ஒருவேளை மட்டும் உண்டு விரதம் இருக்கவும். முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள் உப்பில்லாத உணவினை எடுத்துக் கொள்ளலாம். நிவேதனங்கள் 21 என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அப்பம், வடை, புளியோதரை, பாயாசம், பொங்கல் போன்ற பிரசாதங்களும் செய்யலாம். ஒவ்வொரு நாளும் மஞ்சள் தடவிய சரடு ஒன்றில் 21 முடிச்சுகள் போட்டு இறுதி நாளன்று புஜங்களுக்கு கீழ் கைகளில் கட்டிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் கட்டலாம். நினைத்த காரியம் கைகூடும். திருமகள், கலைமகள், மலைமகள் அருள் கிட்டும். ஆனந்தம் பிறக்கும்.
கேதார கௌரி விரதம்.- விகட நாட்டியத்தைக் கண்ட தெய்வீக தம்பதி சிவபார்வதியினரை அங்கிருந்த அனைவரும் மூன்று முறை வலம் வந்து வணங்கினர். பிருங்கி முனிவர் மட்டும் வண்டுருவம் எடுத்து சிவனோடு ஒட்டி அமர்ந்திருந்த பார்வதியை தவிர்த்து சிவனை மட்டும் வலம் வந்தார். கோபம் கொண்ட பார்வதியை, பிருங்கி முனி வீடு பேற்றை மட்டும் விரும்புகின்றார். பூவுலகில் அவர் பெற நினைக்கும் இன்பங்கள் யாவும் இல்லை. ஆகையால் இகவாழ்வில் வெற்றி அருளும் உன்னை அவர் வணங்கவில்லை என்று ஈசன் சமாதானம் கூறியும் அதனை ஏற்காமல் தன் சக்தியை பிருங்கியிடமிருந்து எடுத்துவிட்டார். வலுவிழந்து தள்ளாடிய முனிவருக்கு கோல் ஒன்றைக் கொடுத்து அவர் தடுமாறாமல் நிற்க்கச் செய்ய பிருங்கி சிவனை வணங்கி சென்றார்.
தன் கணவர் தன்னை மதிக்க வில்லை என்று கூறி உமை கோபங்கொண்டு சிவனைப் பிரிந்தார். பூவுலகில் கௌதம முனிவரின் ஆசிரமத்தில் இருந்து ஈசனை மீண்டும் அடைய கௌதம முனிவரின் ஆலோசனைப் படி கேதார கௌரி விரதம் மேற்கொண்டார். 21 நாட்கள் கடுமையான விரதமிருந்து ஈசனுடன் சேர்ந்தார். ஈசன் தன்னில் பாதியை பார்வதிக்கு அளித்து அர்த்தநாரீஸ்வரராக காட்சி.
4. புரட்டாசி சனிக்கிழமை- பெருமாள் கோவிலில் பூஜை செய்யும் அர்ச்சகர் ஏழ்மை நிலையிலிருந்தாலும் நீதியும் நாணயமும் தவறாமல் இருந்து வந்தார். அவருக்கு ஏழரை சனி பீடிக்கும் காலம் வந்தபோது பெருமாள் அவரை ஏழரை ஆண்டுகளுக்குப் பதிலாக ஏழரை நிமிடங்கள் பீடிக்கச் சொன்னார். கன்னி ராசியின் அதிபதி புதனின் நட்புக் கிரகமான சனிபகவானின் ஆதிக்கத்தை குறைக்க பெருமாளை புரட்டாசி சனிக்கிழமை விரதமிருந்து வழிபடுகின்றோம்.
5. வாமன ஏகாதசி- புரட்டாசி வளர்பிறையில் வரும் ஏகாதசி வாமன ஏகாதசி அல்லது பரிவர்த்தினி ஏகாதசி எனப்படும். மற்ற ஏகாதசிகளில் விரதம் இருக்க முடியாதவர்கள் வாமன ஏகாதசியில் விரதமிருந்தால் அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்த புண்ணியம் கிடைக்கும். மற்ற ஏகாதசி விரங்களைப் போலவே புரட்டாசி முழுவதும் சைவ உணவு உண்ண வேண்டும். ஏகாதசிக்கு முந்தைய நாள் இரவில் வெறும் பால் பழங்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை கஞ்சி உண்டு விரதம் இருக்க வேண்டும். மோர் தயிர் சேர்த்தக் கூடாது. காபி, டீ இவைகளையும் தவிர்க்கவும். ஏகாதசி அன்று பெருமாளின் பெருமைகளைப் பாடி பஜனைகளில் ஈடுபடலாம். அடுத்த நாள காலையில் துவாதசியில் துளசி தீர்த்தம் அருந்தி விரதத்தை முடிக்கவும். இன்றைய உணவில் அகத்திக் கீரையும் நெல்லிக்காயும் கட்டாயம் சேர்க்க வேண்டும். லட்சுமி, மலைமகள், கலைமகள் ஆகியோரின் அருள் கிட்டும் விரதம் இது.
5. அஜா ஏகாதசி - புரட்டாசி தேய்பிறையில் வரும் ஏகாதசி அஜா ஏகாதசி. என்ன காரணம் எனத் தெரியாமல் வரும் துன்பங்கள், மனக்கிலேசம், பிரச்சனைகள் ஆகியவைகளுக்கு முன் ஜென்மத்து வினைப் பயன்களே காரணம். அவைகளை அதன் பாதகங்களைக் குறைக்கக்கூடிய சக்தி கொண்டது இந்த அஜா ஏகாதசி விரதம். அரிசந்திரன் நாட்டை இழந்து, மனைவியை விற்று, சுடுகாட்டில் பிணங்களை எரித்து வாழ்ந்ததின் காரணம் அவன் முற்பிறவியில் செய்த பாவங்களே என்பதை அறிந்த கௌதம முனிவர் அரிச்சந்திரனை இந்த அஜா ஏகாதசி விரதம் கடைபிடிக்கச் சொன்னார். அப்படியே 9 வருடங்கள் இந்த விரதத்தை கடைபிடித்த அரிசந்தந்திரன் தன் கஷ்டங்களை எல்லாம் தீர்ந்து தன் நாட்டையும் மனைவி மக்களையும் மீண்டு பெற்று நிம்மதி அடைந்தான். மற்ற ஏகாதசி விரதங்களைப் போலவே இதனையும் கடைபிடிக்க வேண்டும். பெருமாள் தோத்திரங்களைச் சொல்லும்போது ‘என் முன் வினைப்பயனை அறுப்பாய் ஐயனே’ எனவும் வேண்டிக் கொள்ளவும்.
6. நவராத்திரி விரதம்- அன்னை சக்தி கடும் தவமிருந்து சண்ட முண்டர்களையும் ரக்த பீஜனையும், சும்ப நிசும்பர்களையும் தன் மூன்று அம்சங்களால் அழித்தாள். அன்னைக்குச் சக்தி கொடுத்த அனைத்து தேவர்கள், முனிவர்கள், தெய்வங்கள் எல்லாம் சக்தியை கொடுத்துவிட்டு பொம்மைபோல் நின்ற நிகழ்வைச் சித்தரிக்கும் விதமாகவே கொலு வைக்கும் பழக்கம் வந்தது. புரட்டசி சுக்லபட்ச பிரதமையில் ஆரம்பித்து நவமி திதியில் முடியும் ஒன்பது இரவுகளே நவராத்திரி. அசுரர்களை வதம் செய்வதற்காக பகல் நேரத்தில் அவர்களுடன் போரிடும் அம்பிகை ஒய்வெடுக்கும் இரவு நேரத்தில் அம்பிகையை உற்சாகமூட்டும் விதமாகத் துதித்து போற்றிடும் தினங்களே நவராத்திரி. நவம்–புதுமையான, ராத்ரம்-மங்களம். வாழ்வில் பழைய வினைகளைப் போக்கி தற்போதைய செயல்களுக்கு ஏற்ப மங்களமான நன்மைகளைப் பெறுவதற்காக அம்பிகையை வழிபடும் அந்த இரவுகளே நவராத்திரி. தன்னை வணங்கிடும் பக்தர்களின் மனதில் இருந்து தாமஸ குணத்தினால் ஏற்படும் தீவினைகளை நீக்கும்
துர்க்கை வடிவாக முதல் மூன்று நாட்களும், அடுத்த 3 நாட்கள் பொன்னும் பொருளும் ரஜோ குணத்தினள்
மகாலட்சுமி வடிவாகவும், கடைசி 3 நாட்கள் ஞானத்தின் திருவுருவமாக சாத்வீக சரஸ்வதி தேவியாகவும் வழிபடுகின்றோம்.
வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை முதல் நவமிவரையிலான திதிகள் அம்பிகைக்கு உரியது. இதன்படி பன்னிரண்டு நவராத்திரிகள் உண்டு. என்றாலும் அவற்றில் முக்கியமானது நான்கு மட்டுமே கொண்டாடப்படுகிறது.
1.ஆனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
ஆஷாட நவராத்திரி.
2 புரட்டாசி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் சாரதா நவராத்திரி.
3. தை மாத்த்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
சியமளா நவராத்திரி.
4. பங்குனி மாதத்தில் அமாவாசை முதல் ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் வசந்த நவராத்திரி..
ஐம்பூதங்களின் ஒன்றான மண்ணால் ஆன பொம்மைகளை வைத்து என்னை பூஜித்தால் சகல சுகங்களையும் சௌபாக்யங்களையும் அருள்வேன் என்ற அம்பிகையின் வாக்கிற்கிணங்க கொலுவைத்து படையலிட்டு நிவேதனம் செய்த பொருளை கொலுவிற்கு வந்தவர்களுக்கு வழங்குகின்றோம்.
1-ம்படி- ஓரறிவு உயிர்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள்
2-ம்படி- இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு
3-ம்படி- மூவறிவுடைய கரையான், எறும்பு போன்ற பொம்மைகள்
4-ம்படி- நான்கு அறிவு கொண்ட நண்டு, வண்டு பொம்மைகள்
5-ம்படி- ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள்
6-ம்படி- ஆறறிவு கொண்ட உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள்
7-ம்படி- மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள்.
8-ம்படி- நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள்.
9-ம்படி- பிரம்மா, விஷ்ணு, சிவன் மும்மூர்த்திகளின் பொம்மைகள்
கலசம் வைத்து வழிபடலாம். காலையில் சர்க்கரைப் பொங்கல், பருப்புப் பாயாசம், பால் பாயாசம் அகியவற்றில் ஒன்றை நிவேதனம் செய்ய வேண்டும். மாலையில் சுண்டல் நிவேதனம் மிகவும் முக்கியம். கொண்டைக் கடலை, தட்டைப் பயிறு / காராமணி, பச்சைப் பயிறு, பட்டாணி. வேர்க்கடலை, கடலைப் பருப்பு போன்றவைகளை நளுக்கொன்றாக நிவேதனம் செய்து கொலுவிற்கு வரும் சுமங்கலிகளுக்கு வெற்றிலை, பழம், பாக்கு ஆகியவற்றுடன் நிவேதனப் பொருளையும் கொடுக்கவும். பாட்டு, நடனம் தெரிந்தவர்கள் அன்னை முன் நிகழ்த்தலாம். விரதம் இருப்பவர்கள் ஒன்பது நாளும் பிரசாதத்தை மட்டுமே உண்ண வேண்டும். பூஜை முடிந்தபின்னரே வீட்டில் அனைவரும் உணவு அருந்த வேண்டும். சரஸ்வது பூஜையன்று நிவேதனப் பொருள் மட்டுமின்றி இரவு பால் நிவேதனம் செய்ய வேண்டும். மூன்று சக்திகளையும் மனதார நினைத்து பிரார்த்தனை செய்து பூஜை முடித்தால் எல்லா நன்மைகளும் ஏற்பட்டு வீட்டில் மகிழ்ச்சி பெருகும்.
சரஸ்வதி பூஜைக்கு அடுத்த நாள் அம்பிகை மகிசாசூரனை வதம் செய்து வெற்றி பெற்ற நாள் விஜயதசமி . நவராத்திரியில் வரும் தசமியே விஜயதசமி. இந்நாளில் தொடங்கும் எல்லா நல்ல காரியங்களும் வெற்றியுடன் முடியும். குழந்தைகளைப் பள்ளியில் சேர்ப்பது வித்யாப்யாசம் எனும் எழுத்தறிவிக்கும் சடங்கினை செய்யலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக