விநாயகர் சதுர்த்தி வரலாறு :
இந்தியாவின் மிக முக்கியமான விழாக்களில் ஒன்று , விநாயக சதுர்த்தி . ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று இவ்விழா கொண்டாடப்படுகிறது .
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்து இளம்பிறை போல் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து அடி போற்றுதுமே!
ஆனைமுகப் பெருமானை போற்றிப் பூஜிக்கும் திருநாளான விநாயக சதுர்த்தி ஆண்டு தோறும் ஆவணித் திங்கள் அமாவாசையை அடுத்த சதுர்த்தியன்று ( சுக்ல பட்ச சதுர்த்தி ) கோலாகலமாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது . இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை விநாயக சதுர்த்தி தினம் .
இல்லந்தோறும் நடக்கம் இனிய பூஜை !
வீடுதோறும் களி மண்ணால் செய்த பிள்ளையார் சிலைகளை வண்ணக் குடையுடன் வாங்கி வந்து , எருக்கம் பூ அணிவித்து , அருகம்புல் , செவ்வந்தி , மல்லிகை , அரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது வழக்கம் . ஐங்கரனுக்கு விருப்பமான கொழுக்கட்டை , அப்பம் , சுண்டல் , வடை , அவல், பொரி என நிவேதனங்கள் செய்கிறோம். வாழை , திராட்சை , நாவல், விளாம்பழம் , கரும்புத் துண்டுகள், ஆப்பிள் என மிகவும் பிரியமுடன் தும்பிக்கையானுக்கு அளிக்கிறோம் . அறிவு தெளிந்த ஞானம் முதலிவற்றை அளித்து எடுத்த செயல்கள் தடைவரா வண்ணம் காத்தருள வேண்டுகிறோம் .
பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் -கோலம் செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே ! நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா !
என்று ஒளவையார் பாடியது போல் இறைவனை வாழ்வில் நலம் பெற வேண்டி நிற்கின்றோம் . மறுநாள் புனர் பூஜை என்று சொல்லப்படும் , சிறு பூஜை செய்து , நல்ல நேரம் பார்த்து , பிள்ளையார் சிலைகளை எடுத்துச் சென்று கிணற்றிலோ , குளத்திலோ , ஆற்றிலோ விட்டு விடுவது வழக்கம் .
விநாயக சதுர்த்தி வரலாறு !
பரமசிவன் கணேசனை கணங்களின் தலைவனாக ‘கணபதி ' யாக நியமித்தார் . அவருக்கு அனிமா , மகிமா முதலிய அஷ்டசித்திகளையும் மனைவிகளாக பிரம்மதேவன் அளித்து கணபதியைப் பலவாறு துதி செய்தார் . கணபதியும் மகிழ்ந்து ‘பிரம்மனே , வேண்டிய வரம் கேள் ' என்று கூற பிரம்மன் ‘ என் படைப்பெல்லாம் தங்கள் அருளால் இடையூரின்றி நிறைவேற வேண்டும் ' என்று வரம் கேட்க விநாயகரும் பிரம்மனுக்கு வரமளித்தார்.
சந்திரனின் சாபம் !
பூஜையில் பிரம்மன் அளித்த மோதகங்களை ( கொழுக்கட்டை ) கையில் எடுத்துக் கொண்டு , உயரக் கிளம்பி உலகெல்லாம் சுற்றி , சந்திரலோகம் சென்றார் . அங்கு பெருத்த தொந்தியும் , ஒடிந்த தந்தமும் , நீண்ட தும்பிக்கையும் , கையில் கொழுக்கட்டையும் தாங்கி வருகின்ற விநாயகனைக் கண்டு சந்திரன் வாய் விட்டுச் சிரித்துப் பரிகசித்தான் . அதைப் பார்த்த விநாயகர் கோபம் கொண்டு , ‘ ஏ ! சந்திரனே நீ தான் அழகன் என்று கர்வம் கொண்டிருக்கிறாய் . இன்று முதல் உன்னை யாரும் பார்க்கக் கூடாது . அப்படி யாராவது உன்னைப் பார்த்தால் அவர்களுக்கு வீண் அபவாதம் ஏற்படுவதாகுக' என்று சபித்தார். சந்திரனும் ஒலி மழுங்கித் தண்ணீருக்குள் ஆம்பல் மலரில் மறைந்தான்.
சாபம் நீங்கிய விதம் !
சந்திரன் அழிந்ததைக் கண்டுவருந்திய தேவர்களும் முனிவர்களும் இந்திரன் தலைமையில் பிரம்மாவிடம் சென்று முறையிட்டனர் . பிரம்மனோ, தானோ , ருத்திரனோ , விஷ்ணுவோ இதற்கு ஒன்றும் செய்ய முடியாதென்றும் , கணபதியையே சரணடைவது தான் ஒரே வழியென்றும் கூறினார் . எந்த முறையில் வழிபட்டால் சந்திரனின் சாபம் நீங்கும் என்று தேவர்கள் கேட்க ‘ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தியன்றும் ( பௌர்ணமிக்குப் பின் வருவது ) விரதம் ஏற்று,
பலவகையான பழங்கள் , அப்பம் , மோதகம் இவைகளுடன் சித்ரான்னங்கள் முதலியவற்றை கணபதிக்கு அளித்து , அந்தணருக்கு பக்தியோடு தாம்பூல , தக்ஷிணைகளை அளித்தால் எண்ணிய வரங்களை அளிப்பார் ' என்று பிரம்மன் கூறினார்.
பிறகு தேவர்கள் பிருகஸ்பதி(குரு ) யைச் சந்திரனிடம் அனுப்பி விவரம் தெரிவித்தனர் . சந்திரனும் இந்த முறையில் பூஜை செய்ய, கணபதியும் மகிழ்ந்து பாலகணபதியாக , விளையாட்டு விநாயகனாக அங்கே காட்சியளித்தார் . சந்திரனின் மனம் களிப்புற்று , அவரைப் பணிந்து ,
" தவம் காரணம் காரண காரணாநாம்
க்ஷமஸ்வ மே கர்வ க்ருதம் ச ஹாஸ்யம் "
என்று தன் செயலுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டான் .
பிரம்மாதி தேவர்களும் சந்திரனுக்கு கணபதியிட்ட சாபத்தை நீக்கியருள வேண்டினர். கணபதியும் அவ்வாறே சாபவிமோசனம் அளித்தார் . ‘ ஒவ்வொரு கிருஷ்ணபக்ஷ சதுர்த்தி ' யிலும் மோதகம், அப்பம் முதலியவைகளுடன் என்னைப் பூஜித்த பின் , ரோகிணியுடன் கூடிய சந்திரனான உன்னைப் பூசிப்பவர்களுக்கு கஷ்ட நிவாரணம் செய்கிறேன் ' என்று விநாயகரே கூறினார். இது சங்கடஹரண சதுர்த்தி எனப்படுகிறது .
பொதுவாக சதுர்த்தி தினங்களில் சந்திரனைக் கண்டால் ஓர் ஆண்டு வரை தெடர்ந்து வீண் அபவாதங்கள் வந்து சேரும் என்பது சிலரின் நம்பிக்கை .
விநாயக சதுர்த்தி !
எனவே , ஆண்டு தோறும் ‘ ஆவணி மாத சுக்ல சதுர்த்தியன்று மண்ணாலான என் உருவத்தை பொன்னால் செய்த பாவனையுடன் அமைத்து பல பூக்களால் பூஜித்த பின் இரவில் கண் விழித்து முறையாகப் பூஜித்தால் அவ்வாறு செய்பவனுக்கு அவன் தெடங்கிய காரியத்தில் வெற்றியையும், ஸகல காரியங்களில் சித்தியையும் அளிக்கிறேன் ' என்று விநாயகரே சந்திரனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது .
சியமந்தக மணி என்ற ரத்தினத்தின் காரணமாகப் பல அபவாதங்களுக்கு ஆளான கிருஷ்ணனுக்கு நாரதர் இக்கதையைக் கூறி , கிருஷ்ணனே சங்கடஹரண சதுர்த்தி பூஜை செய்து அவப்பெயர் நீங்கப் பெற்றார் என்று அறிகிறோம்.
கணபதியின் 16 வடிவங்கள்
விநாயகரை 16 வடிவங்களில் அலங்கரிக்கலாம் . இந்த அமைப்பில் வணங்குவதால் மாறுபட்ட பலன்கள் நமக்கு கிடைக்கும் .
1. பாலகணபதி : மா , பலா , வாழை ஆகிய மூன்று பழங்களையும் கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி சூரியோதய காலத்துச் சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனைப் போன்ற உருவமுள்ளவர் . இவரை வழிபடுவதால் தோஷங்கள் நீங்கும் .
2. தருண கணபதி: பாசம் , அங்குசம் , அப்பம் , விளாம்பழம், நாவற்பழம் , முறித்த ஒற்றை தந்தம், தெற்கதிர் , கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக்கைகளில் ஏந்தி , சூரியோதய கால
ஆகாயத்தின் செந்நிற மேனியுடைய இளைஞனாகக் காட்சி தருபவர் . இவரை
வழிபடுவதால் முகக்கலை உண்டாகும்.
3. பக்த கணபதி: தேங்காய் , மாங்காய் , வாழைப்பழம் , வெல்லத்தினாலான பாயாசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை தம் நான்கு கைகளில் ஏந்தி நிலா ஒளியை ஒத்த வெண்மை நிற மேனியுடன் காட்சியளிப்பவர் . இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நன்கு அமையும்.
4. வீர கணபதி: தனது பதினாறு கரங்களில் ஒன்றில் வேதாளத்தையும் , மற்ற கரங்களில் ஆயுதங்களும் ஏந்தி , ரவுத்ராகாரமாக வீராவேசத்தில் செந்நிற மேனியுடன் விளங்கும் ரூபத்தை உடையவர் . இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.
5. சக்தி கணபதி: பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர். பாசம் , அங்குசம் ஏந்தியிருப்பவர் . பயத்தை நீக்குபவர் . செந்தூர வண்ணம் கொண்டவர் . இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் ஏற்படும்.
6. துவிஜ கணபதி: இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி , அட்சயமாலையும், தண்டமும் , கமண்டலமும் ஏந்தியவர் . வெண்ணிற மேனி கொண்டவர் . இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும் .
7. சித்தி கணபதி: பழுத்த மாம்பழம் , பூங்கொத்து, கரும்புத்துண்டு , பாசம் , அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தி ஆற்றலைக் குறிக்கும் . சித்தி சமேதராகவும் பசும்பொன் நிறமேனியானவரான இவருக்குப் பிங்கள கணபதி என்ற பெயர் வந்தது . வழிபடுவதால் சகல காரியம் சித்தியாகும் .
8. உச்சிஷ்ட கணபதி : வீணை , அட்சமாலை , குவளை மலர் , மாதுளம் பழம், நெற்கதிர் , பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார் . கருநீல வண்ணமேனியுடைய இவரை வழிபடுவதால் வாழ்க்கை உயர்வு , பதவிகளை பெறலாம் .
9. விக்னராஜ கணபதி: சங்கு , கரும்பு , வில் , மலர் , அம்பு , கோடாரி , பாசம் , அங்குசம் , சக்கரம் , தந்தம் , நெற்கதிர் , சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி ஸ்வர்ண நிற
மேனியுடன் பிரகாசமாக விளங்குபவர் . இவரை வழிபடுவதால் விவசாயம் விருத்தியாகும் .
10. க்ஷிப்ர கணபதி: கற்பகக்கொடி , தந்தம் , பாசம் , அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும் ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்திய செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர் சீக்கிரமாக அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும் .
11. ஹேரம்ப கணபதி: அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள் ), பாசம் , அங்குசம் , தந்தம் , அட்சமாலை , கோடாரி, இரும்பினாலான வலக்கை , மோதகம் , பழம் ஆகியவற்றை ஏந்தி, பத்து கைகளும் , ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார் . நேபாள நாட்டில் காணப்படும் இவர் திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விள
ங்குகிறார் . இவரை வழிபடுவதால் விளையாட்டு , வித்தைகள் இவற்றில் புகழ் பெறுவார்கள் .
12. லட்சுமி கணபதி: பச்சைக்கிளி , மாதுளம் பழம் , பாசம் , அங்குசம் , கற்பகக்கொடி , கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர் . இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும் .
13. மகா கணபதி: பிறை சூடி , மூன்று கண்களுடன் தாமரை மலர் ஏந்தி தன் சக்தி நாயகராகிய வல்லபையை அணைத்த வண்ணம் கைகளில் மாதுளம்பழம் , கதை , கரும்பு , சக்கரம் , பாசம் , நெய்தல் , புஷ்பம் , நெற்கதிர் , தந்தம், கரும்பு , வில் , தாமரை மலர் ஆகியவற்றையும் துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிகப்புநிற மேனியாய் விளங்குபவர் . இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும் .
14. புவனேச கணபதி : விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால் அசுரனது சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான் கஜமுகாசுரன் . அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்ட இவர் செந்நிற மேனியுடன் பாசம் , அங்குசம் , தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார் . இவரால் விவகாரம் , வியாஜ்ஜியம் வெற்றியாகும்.
15. நிருத்த கணபதி: மஞ்சள் மேனியுடன் பாசம் , அங்குசம் , அப்பம் , கோடரி , தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில்நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார் . இவரை வழிபடுவதால் சங்கீதம் , சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள் .
16. ஊர்த்துவ கணபதி : பொன்னிற மேனியுடைய இவர் எட்டு கைகள் கொண்டவர் . தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார் . இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக