ஞாயிறு, 16 பிப்ரவரி, 2020

ஒரு நாள் சிவராத்திரி விரதம்... ஓராண்டு சிவனுக்கு பூஜை செய்த புண்ணியம்!


ஒரு நாள் சிவராத்திரி விரதம்... ஓராண்டு சிவனுக்கு பூஜை செய்த புண்ணியம்! #MahaSivarathiri.

இன்று மகா சிவராத்திரி திருநாள். இரவு முழுக்க கண்விழித்து நான்கு ஜாம பூஜைகளைச் செய்தால் சகல நலன்களும் பெறலாம் என்பது ஐதீகம். கண்விழிப்பது என்றால், உறங்காமல் இருப்பது என்று பொருளல்ல. ஆன்மா விழித்துக்கொண்டிருக்க வேண்டும். ஆன்மா இறைச் சிந்தனையிலேயே லயித்திருக்க வேண்டும். அதுதான் மகாசிவராத்திரி புண்ணிய நாளின் நோக்கம். கருட புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அருணாசல புராணம், சிவராத்திரி புராணம் உள்ளிட்ட பல நூல்கள் சிவராத்திரியின் மகிமைகளைப் பற்றிப் பலவாறாகக் கூறுகின்றன. அதைப்போலவே இந்தத் திருநாளின் மகத்துவத்தைப் பற்றி, 'மகாசிவராத்திரி கற்பம்' என்ற நூல் தெளிவாக விளக்குகிறது. 39 குறட்பாக்களால் உருவான இந்த நூல் ஈசனை வழிபடும் நியமங்கள், வழிபடுவதால் பெறும் பேறுகள், இந்த நாளில் விரதமிருந்து பேறு பெற்றவர்கள் என அனைத்து விவரங்களையும் கூறுகிறது. வேளாக்குறிச்சி ஆதீனத்தைச் சேர்ந்த மறைஞான சம்பந்தரால் எழுதப்பட்டது இந்த நூல். `கற்பம்' என்றால் விரதம் என்ற பொருளைத் தரும். புராணங்களும், இலக்கியங்களும் கூறியபடி இந்த நாளின் மகிமைகள், விரத முறைகள், பலன்கள் ஆகியவற்றை அறிந்துகொள்வோம்.

மகாசிவராத்திரி அன்று நடந்தவை ...

பொங்கி வந்த ஆலகால விஷம் மண்ணுலக மக்களை பாதிக்கக் கூடாது என்று திருவுள்ளம் கொண்ட சிவபெருமான், பாற்கடலிலிருந்து பொங்கி வந்த ஆலகால விஷத்தினைத் தனது கண்டத்தினுள் (கழுத்தில்) தாங்கி நீலகண்டனாக நின்றது இந்த சிவராத்திரி நாளில்தான்.
அன்னை உமாதேவி ஈசனின் கண்ணைப்பொத்திய செயலால் விளைந்த குழப்பத்தை நீக்கிக்கொள்ள விரதமிருந்து பேறுபெற்றதும் இந்த நாளில்தான்.

சிவனாரின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலுக்கும், பிரம்மதேவருக்கும் பாடம் கற்பிக்க நினைத்த சிவபெருமான், லிங்கோத்பவராக பெரும் ஒளிப்பிழம்பாகத் தோன்றி காட்சி அளித்ததும் மகாசிவராத்திரித் திருநாளில்தான். அதுமட்டுமா? அர்ஜுனன் பாசுபதாஸ்திரம் பெற்றதும், கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றதும் இந்த நாளில்தான். பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்ததும், மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்ததும் இந்த நாளில்தான். இப்படிச் சொல்லச் சொல்ல நீண்டுகொண்டே செல்லும் இந்த மகத்தான நாளில் இரவு முழுவதும் சிவத் தியானமாக இருந்து வணங்கினால் சகல சம்பத்துகளையும் பெறலாம் என்று ஞான நூல்கள் தெரிவிக்கின்றன.

மகாசிவராத்திரி விரதத்தின் பலன்கள் :

24 வருடங்கள் மகாசிவராத்திரி விரதமிருந்தால் பிறப்பிலா பெருமை அடைந்து சிவலோகப் பதவியைப் பெறுவார்கள் என்றும், அவர்களின் மூவேழு தலைமுறைகளும் நற்கதியை அடைவார்கள் என்றும்  சிவராத்திரி புராணம் தெரிவிக்கிறது. மேலும், மகாசிவராத்திரி விரதமிருந்த புண்ணிய சீலர்களைக் கண்டு யமன் அஞ்சுவார் என்றும், எல்லா யாகங்களையும் தர்மங்களையும்விட இந்த மகாசிவராத்திரி விரதம் விசேஷமானது என்றும் கூறுகிறது.

மகாசிவராத்திரி விரதம் இருப்பது எப்படி?

சகலத்தையும் அருளும் இந்த சிவராத்திரி விரதத்தினை உரிய நெறிகளோடு கடைப்பிடிக்க வேண்டும். விரதமிருப்போர்  மகாசிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு பொழுது மட்டுமே உணவருந்தி சிவநாமம் ஜபித்துத் தயாராக வேண்டும். மகாசிவராத்திரியன்று அதிகாலையில் குளித்து, திருநீறு தரித்துக்கொண்டு, சிவாலயம் சென்று ஈசனை தரிசிக்க வேண்டும். பின்னர் எந்நேரமும் சிவ சிந்தனையுடன் தேவாரம், திருவாசகம் போன்ற திருமுறைகளைப் பாராயணம் செய்து இரவு முழுக்க  கண்விழித்திருந்து நான்கு ஜாமங்களிலும் சிவ வழிபாடு செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தகுந்த சிவாசாரியார்களை வைத்து வீட்டில் நான்கு கால பூஜைகளை செய்யலாம் அல்லது கோயிலுக்குச் சென்று பூஜைகளில் கலந்துகொள்ளலாம். விரதம் முடித்த மறுநாள் காலையில் நீராடி, சிவனடியார்களோடு சேர்ந்து உணவருந்தி மகாசிவராத்திரி விரதத்தினை நிறைவு செய்துகொள்ள வேண்டும்.

கூட்டம் அதிகமிருக்கிறதே, ஸ்வாமியை தரிசிக்க முடியவில்லையே என்பவர்கள் கவலைப்பட வேண்டாம். சிவனின் சந்நிதிக்கருகே அமர்ந்து ஐந்தெழுத்தை இரவு முழுக்க சொல்லிக்கொண்டிருந்தால்கூட போதும். ஓராண்டு முழுக்க சிவபூஜை செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். கோயிலுக்குச் சென்று கூட்டத்தில் தரிசனம் செய்ய முடியாதவர்கள், வீட்டிலேயே ருத்ராட்ச மாலையை கையில் வைத்து ஐந்தெழுத்தை ஓதலாம். சிவனின் படத்துக்கு வில்வத்தால் அர்ச்சித்து தெரிந்த பாடல்களைப் பாடி வழிபடலாம். நைவேத்தியமாக முடிந்ததை வைத்து வணங்கலாம்.

எளியோர்க்கு எளியோனான ஈசன், உங்கள் பூஜைகளில் இருக்கும் ஆடம்பரங்களை கவனிப்பதே இல்லை. உங்களின் மனத் தூய்மையையும், அர்ப்பணிப்பையும்தான் ஆண்டவர் விரும்புகிறார். ஆண்டவனுக்கு அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறவர்கள் இந்த சிவராத்திரி தினத்தில் கண்களும், உள்ளமும் ஒருசேர விழித்திருந்து ஆன்ம பலத்தினை பெருக்கிக்கொள்ளுங்கள். அது உங்களை ஆண்டவனோடு இணைத்துவிடும்.

 #சிவராத்திரி
நம்முடைய உள்ளமாகிய மலர், இறைவனை அடைய சிவராத்திரி விரதம் என்ற நார் பயன்படலாம். பரமாத்மாவுடன் ஜீவாத்மா இணைய மகாசிவராத்திரி விரதம் பாலமாக அமையட்டும். ஜீவன் சிவனோடு லயித்திருப்பதே சிவராத்திரி நாளின் சிறப்பம்சமாகும்.

'நமச்சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க...'   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக