வியாழன், 20 பிப்ரவரி, 2020

ஜோதிர்லிங்கம்


ஜோதிர்லிங்கம்

ஜோதிர்லிங்கம் என்பது இந்துக் கடவுளான சிவனை வணங்குவதற்குரிய வடிவங்களுள் ஒன்று. இது ஒளிமயமான லிங்கம் என்னும் பொருள் தருவது. இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கத் தலங்கள் உள்ளன. திருவாதிரை நட்சத்திர நாளில் சிவன் தன்னை ஜோதிர்லிங்க வடிவில் வெளிப்படுத்தியதாக இந்துக்கள் நம்புகிறார்கள். இதனால் திருவாதிரை நாள் ஜோதிர்லிங்கத்தை வணங்குவதற்கு உரிய சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. பொதுவாக ஜோதிர்லிங்கத்துக்கும், பிற லிங்கங்களுக்கும் இடையே எவ்வித தோற்ற வேறுபாடுகளும் தெரிவதில்லை. எனினும், உயர்ந்த ஆன்மீக நிலையை அடைந்தவர்கள் புவியைத் துளைத்துக் கிளம்பும் தீப்பிழம்பாக ஜோதிர்லிங்கத்தைக் காண்பார்கள் என்பது இந்துக்களின் நம்பிக்கை.
சோதி இலிங்கங்கள் உள்ள சிவத்தலங்கள்
இந்தியாவில் அமைந்துள்ள பன்னிரெண்டு சோதி இலிங்கங்களும் அது அமைந்துள்ள இடங்களும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன. திருவண்ணாமலை (தமிழ்நாடு) அருணாச்சலமே மூல சிவதலம்.
1. சோமநாதேசுவரர்- சோமநாதம் (குஜராத்)
2. மல்லிகார்ச்சுனர்-ஸ்ரீசைலம் (ஆந்திரா)
3. மகா காளேசுவரர்-உஜ்ஜயினி (மத்தியப்பிரதேசம்)
4. ஓம்காரம் மாமலேசுவரர்- ஓம்காரம் (மத்தியப்பிரதேசம்)
5. வைத்திய நாதேசுவர்-பரளி (மகராட்டிரம்)
6. பீமாநா தேசுவர்- பீமசங்கரம் (மகராட்டிரம்)
7. இராம நாதேசுவரர்-இராமேஸ்வரம் (தமிழ்நாடு)
8. நாக நாதேசுவரர்-நாகநாதம் (மகராட்டிரம்)
9. விசுவ நாதேசுவரர்-காசி (உத்திரப்பிரதேசம்)
10. திரியம்ப கேசுவரர்- திரியம்பகம் (மகாராட்டிரம்)
11. கேதாரேசுவரர்-இமயம் (உத்திரப்பிரதேசம்)
12. குருணேசுவரர்-குண்ருனேசம் (மகாராட்டிரம்)
இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்கத் தலங்கள்
1. சோம்நாத் கோயில், பிரபாஸ் பட்டன், சௌராஷ்டிரா, குஜராத்.
சோம்நாத் கோயில் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் மேற்குக் கரையில் அமைந்துள்ள சௌராஷ்டிராவின் வேராவல் என்னும் இடத்துக்கு அண்மையில் பிரபாஸ் க்ஷேத்திரம் என்னும் இடத்தில் உள்ளது. இது இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இத் தலம் ரிக் வேதத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது. சோம்நாத் கோயில் என்றுமுள்ள கோயில் எனக் குறிப்பிடப்படுவதுண்டு. இது ஆறு தடவை தீயினால் அழிந்தபோதும் ஒவ்வொருமுறையும் அது மீளமைக்கப்பட்டது. சந்திரன் தனது அழகினால் கர்வம் கொண்டதனால், அவனுடைய மனைவியின் தந்தையான தக்சன் அவனைத் தேய்ந்துபோகும்படி சபித்துவிட்டான். சந்திரன் பிரபாஸ் தீர்த்தத்துக்கு வந்து சிவனை வணங்கியதால் அவனது சாபம் ஒரு பகுதி நீங்கியது. அதன்படி சந்திரன் தேய்ந்து தேய்ந்து வளரும் நிலை ஏற்பட்டது. சோம்நாத் கோயில் முதலில் சந்திரனால் பொன்னால் கட்டப்பட்டதாம். பின்னர் இராவணன் அதை வெள்ளியிலும், கிருஷ்ணன் அதனைச் சந்தன மரத்திலும், குஜராத்தின் சோலங்கி அரசனான பீமதேவன் கல்லாலும் கட்டினார்களாம்.
2. மல்லிகார்ஜுனா கோயில், குர்நூல், ஆந்திரப் பிரதேசம்.
மல்லிகார்ஜுனர் கோயில், குர்நூல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. சிறீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமி, பிரமரம்பா ஆகிய கடவுளருக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக் கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. சிறீ சைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக் கோயில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது. அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக் கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
3. மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், மத்தியப் பிரதேசம்
மகாகாலேஸ்வரர் கோயில், உஜ்ஜைன், இந்துக் கடவுளான சிவனைக் குறிக்கும் 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்றான மகாகாலேஸ்வர ஜோதிர்லிங்கத்தைக் கொண்டுள்ள புகழ் பெற்ற இந்துக் கோயில் ஆகும். இது இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைனில் உள்ளது. இது ருத்திர சாகர் என்னும் ஏரிக்கரையில் அமைந்துள்ள மூன்று அடுக்குகள் கொண்ட கோயிலாகும். சடங்குகள் மூலம் சக்தி கொடுக்கப்பட்டு நிறுவப்படும் படிமங்கள் போலன்றி, இங்குள்ள முதன்மைக் கடவுளான, சிவனின் லிங்க வடிவம் தன்னுள்ளேயே சக்தியோட்டத்தை உள்வாங்கித் தானாகத் தோன்றியதாகக் நம்பப்படுகிறது. மகாகாலேஸ்வரருடைய சிலை தெற்குப் பார்த்தபடி இருக்கும் தட்சிணாமூர்த்தி வடிவம் ஆகும். தந்திர மரபுகளில் கூறப்பட்டிருக்கும் இந்தத் தனித்துவமான அம்சம் 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இங்கு மட்டுமே காணப்படுகின்றது. மகாகாலேஸ்வரர் கோயிலுக்கு மேலுள்ள கருவறைக்குள் ஓங்காரேஸ்வரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. கருவறைக்கு மேற்கு, வடக்கு, கிழக்கு ஆகிய திசைகளில் முறையே கணேசர், பார்வதி, கார்த்திகேயன் ஆகிய கடவுளர் உள்ளனர். தென்புறம் நந்தி சிலை உண்டு. மூன்றாவது தளத்தில் உள்ள நாகசந்திரேஸ்வரர் சிலையை வணங்குவதற்கு நாகபஞ்சமியன்று மட்டுமே அடியார்கள் அநுமதிக்கப்படுகிறார்கள். இக் கோயில் உயர்ந்த மதிலால் சூழப்பட்ட பெரிய இடத்தில் அமைந்துள்ளது. கருவறைக்கு மேல் அமைந்துள்ள சிகரம் அல்லது விமானம் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.
4. ஓங்காரேஸ்வரர் கோயில், மத்தியப் பிரதேசம்.
ஓங்காரேஸ்வரர் கோயில், சிவபுரி, இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள காண்ட்வா மாவட்டத்தில் உள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது நர்மதை ஆற்றில் உள்ள சிவபுரி அல்லது மாண்டாத்தா என்னும் தீவொன்றில் அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது மத்தியப் பிரதேசத்திலுள்ள மோர்ட்டக்கா என்னும் இடத்திலிருந்து 12 மைல் (20 கிமீ) தொலைவில் உள்ளது. இத் தீவின் வடிவத்தை இந்துக் குறியீடான ஓம் என்பதுடன் இந்துக்கள் ஒப்பிட்டுக் காண்கிறார்கள். இத் தீவில் அமரேஸ்வரர் கோயில் என இன்னொரு கோயிலும் உள்ளது.
5. கேதார்நாத் கோயில், உத்தரகாண்டம்
கேதார்நாத் கோயில் இந்தியாவிலுள்ள மிகப் புனிதமானதாகக் கருதப்படும் சிவன் கோயில்களுள் ஒன்றாகும். இது உத்தர்காண்ட்டில் உள்ள கேதார்நாத்தில் மந்தாகினி ஆற்றங்கரையில் கர்வால் இமயமலைத் தொடரில் அமைந்துள்ளது. இங்கு நிலவும் தீவிர காலநிலை காரணமாக இக்கோயில் ஏப்ரல் இறுதி முதல் நவம்பர் மாதத் தொடக்கம் வரையே திறந்திருக்கும். இக்கோயிலைச் சாலை வழியாக நேரடியாக அணுக முடியாது. கௌரிகுந்த் என்னுமிடத்திலிருந்து 14 கிமீ தூரம் மலை ஏறியே இக் கோயிலுக்குச் செல்ல முடியும். ஆதிசங்கராச்சாரியாரால் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களில் ஒன்றாகும். இக் கோயில் ஒரு கவர்ச்சியான கல் கட்டடம் ஆகும். இதன் தொடக்கம் பற்றி அறியக்கூடவில்லை. இக் கோயில் முகப்பில் உள்ள முக்கோண வடிவக் கல்லில் மனிதத் தலை ஒன்று செதுக்கப்பட்டிருப்பது ஒரு வழமைக்கு மாறான அம்சம் ஆகும்.
6. பீமாசங்கர் கோயில், சகியாத்திரி, மகாராஷ்டிரா.
பீமாஸ்கந்தர் கோயில், போர்கிரி புனேக்கு அருகில் உள்ள கெட் என்னும் இடத்திலிருந்து வடமேற்கில் 50 கிமீ தொலைவில் உள்ள போர்கிரி என்னும் ஊரில் உள்ளது. இது புனேயில் இருந்து 110 கிமீ தொலைவில் சாஹ்யாத்திரி குன்றுகளில் அமைந்துள்ளது. பீமாஸ்கந்தர் பகுதியிலிருந்தே பீமா ஆறு உருவாகின்றது. இது தென்கிழக்காகச் சென்று ராய்ச்சூருக்கு அருகில் கிருஷ்ணா ஆற்றுடன் கலக்கிறது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இக் கோயில், சிவன் வெல்லமுடியாத பறக்கும் கோட்டைகளான திரிபுரங்களை எரித்த புராணக் கதையுடன் தொடர்புள்ளது. இப் போருக்குப் பின் சிவனின் உடலிலிருந்து சிந்திய வியர்வையாலேயே பீமாராத்தி ஆறு உருவானது என்பது புராணக்கதை. பீமாசங்கரர் கோயில் புதியனவும் பழையனவுமான கட்டிடங்களின் கலவையாக உள்ளது. இக்கட்டிடங்கள் நாகரக் கட்டிடக்கலைப் பாணியில் அமைந்துள்ளன. மிதமான அளவுள்ள இக் கோயில் 18 ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் கட்டப்பட்டது. இக் கோயிலின் சிகரம் நானா பட்னாவிஸ் என்பவனால் கட்டப்பட்டது. புகழ் பெற்ற மராட்டிய மன்னன் சிவாஜியும் இக் கோயிலுக்கு நன்கொடைகள் அளித்துள்ளான். இப் பகுதியில் உள்ள பிற சிவன் கோயில்களைப் போலவே இதன் கருவறையும் கீழ் மட்டத்தில் அமைந்துள்ளது. இக் கோயில் கட்டிடங்கள் ஒப்பீட்டளவில் புதியவையாக இருந்தாலும், பீமாசங்கரம் என்னும் இக் கோயில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
7. வாரணாசி, உத்தரப் பிரதேசம்.
காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரமாகும். கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. காசி என்பது சொர்க்கத்திற்குச் செல்லும் வழியாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் காசி என்ற புகழுடன் சிவத்தலங்கள் அதிகமாக உள்ளன. அவற்றுள் தென்கோடியில் உள்ள தென்காசி மற்றும் மதுரைக்கு அருகில் வைகை ஆற்றின் கரையில் உள்ள திருப்பூவணக்காசி மற்றும் காவேரி ஆற்றின் கரையில் உள்ள பல சிவத்தலங்களும் அடங்கும். காசியின் புகழுக்குக் காரணம்சூரிய வம்சத்தில் தோன்றிய மன்னன் சகரன். அவன் அசுவமேத யாகம் செய்தான். இதனால் இந்திரன் தனது பதவி பறிபோய்விடும் எனப் பயந்து அசுவமேத யாகக் குதிரையைத் திருடி, இமாலயத்தில் கடும் தவமியற்றி வந்த கபிலர் என்ற மகாமுனியின் ஆசிரமத்தில் கட்டிவைத்து விட்டான். குதிரையைத் தேடிவந்த சகரனின் புதல்வர்கள் முனிவரைத் துன்புறுத்தினர். இதனால் கோபம் கொண்ட முனிவர், ராசகுமாரர்களையும் அவர்களுடன் வந்த அனைவரையும் தனது கோபப்பார்வையால் எரித்துச் சாம்பல் ஆக்கிவிட்டார். தனது பிள்ளைகள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இறந்துவிட்டதனால் மனமுடைந்த சகர மன்னன் தனது பேரன் அம்சுமான் என்பவனுக்கு முடிசூட்டிவிட்டு கானகம் சென்று தவம் செய்து முத்தியடைந்தான். ஆனால் முனிவரின் கோபப்பார்வையால் இறந்த இளவரசர்கள் யாரும் முத்தி அடைய வில்லை. அம்சுமானின் அரண்மனைக்கு வந்த மகான்கள் அனைவரும் சகரனின் புத்திரர்கள் நற்கதி அடைய வேண்டுமானால் எரிந்து போன அவர்களின் சாம்பல் மீது தேவர்களின் உலகில் பாய்ந்து செல்லும் கங்கையின் நீரைத் தெளித்தால் மட்டுமே சாபவிமோசனம் பெற்று நற்கதி அடைய முடியும் என்று கருத்துத் தெரிவித்தார்கள். கங்கையை பூமிக்குக் கொண்டுவர அம்சுமானால் முடியவில்லை. அவனது மகன் அசமஞ்சனாலும் முடியவில்லை, ஆனால் அசமஞ்சனின் மைந்தன் பகீரதன்தனது முன்னோர்களின் ஆன்மாக்கள் முத்தியடையக் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவரவேண்டித் கடுந்தவம் செய்தான். அவனது தவத்தை ஏற்று கங்கா தேவியும் பூமிக்கு வரச் சம்மதித்தாள். சிவபெருமான் தனது திருமுடியில் கங்கையை விழச்செய்து பூமியில் நதியாக ஓடச் செய்தார். இவ்வாறு ஓடிய கங்கை நதியில் பகீரதனின் முன்னோர்களின் அஸ்திகள் கரைக்கப்பட்டன, இதனால் அவர்கள் முத்தி பெற்றனர். அன்றிலிருந்து கங்கையில் அஸ்தியைக் கரைத்து முன்னோர்களின் ஆன்மாக்களை முத்தியடையச் செய்து வருகின்றனர். இதுவே காசியின் சிறப்பு ஆகும்.
8. திரிம்பகேஸ்வரர் கோயில், நாசிக், மகாராஷ்டிரா.
திரிம்பகேஸ்வரர் கோயில், திரிம்பாக் திரிம்பாக் என்னும் நகரில் உள்ள தொன்மையான இந்துக் கோயில் ஆகும். இது இந்திய மாநிலமான மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் நாசிக் நகரில் இருந்து 28 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக் கடவுளான சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும். இது குடாநாட்டு இந்தியாவின் மிக நீளமான ஆறான கோதாவரி ஆறு தொடங்கும் இடத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள லிங்கம் பிரம்மா, விஷ்ணு, உருத்திரன் ஆகிய கடவுளரின் முகங்களுடன் அமைந்திருப்பது ஒரு தனித்துவமான அம்சமாகும். பிற ஜோதிர்லிங்கங்கள் அனைத்தும் சிவனையே முக்கிய கடவுளாகக் கொண்டு அமைந்துள்ளன. பிரம்மகிரி எனப்படும் மலையின் அடிவாரத்தில் அமைந்த இக் கோயில் கருங்கற்களினால் கட்டப்பட்டுள்ளது. இது அழகிய சிற்பங்களுடன் கூடிய கவர்ச்சியான கட்டிடமாக உள்ளது.
9. வைத்தியநாதர் கோயில், தேவ்கர், ஜார்க்கண்ட்.
வைத்தியநாதர் கோயில், தேவ்கர் இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று. இராவணன் இத்தலத்தில் சிவனை வணங்கி வரங்கள் பெற்றான் என்பது ஐதீகம். புனிதமான தலமாகக் கருதப்படும் இவ்விடத்துக்கு ஆண்டுதோறும் பத்து இலட்சத்துக்கு மேற்பட்ட யாத்திரீகர்கள் வருவதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இவ்விடம் பாபா தாம் அல்லது பைத்யநாத் தாம் என்றும் அழைக்கப்படுவதுண்டு. இக்கோயிலில், பார்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்கள் உட்படப் பல கடவுளருக்கான கோயில்கள் உள்ளன. ஆனி மாதத்தில் பல நூறாயிரம் யாத்திரீகர்கள் இக்கோயிலுக்கு வருகிறார்கள். இவர்கள் சுல்தான்கஞ்ச் என்னும் இடத்திலிருந்து கங்கை நீரை எடுத்துக் கொண்டு 100 கிலோமீட்டர்கள் வரை கால்நடையாக இக் கோயிலுக்கு வருகிறார்கள். சிலர் இத்தூரத்தை 24 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது. தாக் பாம் என அழைக்கப்படும் இவர்கள் இப் பயணத்தின்போது ஒரு இடத்தில் கூட நிற்பதில்லையாம்.
10. நாகேஸ்வரர் கோயில், துவாரகை, குஜராத்.
நாகேஸ்வரர் கோயில் அல்லது நாகநாதர் கோயில் என்று அழைக்கப்படும் கோயில், இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள துவாரகைக்கு வெளியே அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். சிவனுக்காக அமைக்கப்பட்ட இக் கோயில் இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.சிவபுராணத்தில் இத்தலம் பற்றிய கதை ஒன்று உண்டு. இதன்படி, சுப்பிரியா என்னும் சிவ பத்தை ஒருத்தியைத் தாருகா என்னும் அசுரன் ஒருவன் பிடித்து தாருகாவனம் என்னும் இடத்தில் மேலும் பலருடன் சேர்த்து அடைத்து வைத்திருந்தானாம். பாம்புகளின் நகரமான இதற்கு தாருகாவே மன்னன். சுப்பிரியாவின் வேண்டுகோளின்படி கைதிகள் எல்லோரும் சிவனைக் குறித்த மந்திரங்களைச் சொல்லி வணங்கினர். அங்கே தோன்றிய சிவன் தாருகாவைக் கொன்று கைதிகளை விடுவித்தாராம். அன்று தொட்டுச் சிவன் ஜோதிர்லிங்க வடிவில் இத்தலத்தில் இருக்கிறார் என்பது இந்துக்களின் நம்பிக்கை. தாருகா இறக்குமுன் இவ்விடம் தன்னுடைய பெயரில் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அமைய இவ்விடத்துக்குநாகநாத் என்னும் பெயர் வழங்கி வருவதாக நம்பப்படுகிறது.
11. இராமேஸ்வரம், தமிழ் நாடு
இங்கு உள்ள இராமநாதசுவாமி கோவில் பாண்டிய நாட்டில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். 12 ஜோதிர்லிங்க தலங்களில் இராமேஸ்வரமும் ஒன்றாகும். இராமாயணம் எவ்வளவு பழமையானதோ அவ்வளவு பழமையானது இராமேஸ்வரம் என்ற பாடல் பெற்ற சிவஸ்தலம். இந்தியாவில் மிகவும் தெய்வீகத் தன்மையுடையதாக கருதப்படும் கோவில்களில் இராமேஸ்வரம் ஒன்றாகும். இராமேஸ்வரம் கோவிலுக்கு வந்து மூலவர் ராமநாதரை வழிபடுவதும், அக்னி தீர்த்தம் என்று அழைக்கப்படும் சமுத்திரக் கரையில் நீராடுவதும் ஒவ்வொரு இந்துவும் தன் வாழ்நாளில் செய்ய வேண்டிய கடமையாக கருதப்படுகிறது. இறந்தவர்களுக்காக திதி, தர்ப்பணங்கள் செய்வதற்கு உகந்த திருத்தலங்களில் இராமேஸ்வரம் ஒரு முக்கிய தலம் ஆகும். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றாலும் சிறப்பு பெற்ற ஸ்தலம் இராமேஸ்வரம். இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் இராமேஸ்வரம் தலமும் ஒன்று. இந்தியாவில் உள்ள புண்ணியத் தலங்களுள் நான்கு தலங்களையே வட இந்தியாவில் உள்ளோர் மிகச் சிறப்பாகக் கருதுகின்றனர். அவை முறையே வடக்கே பத்ரிநாதம், கிழக்கே ஜகந்நாதம், மேற்கே துவாரகநாதம், தெற்கே இராமநாதம். இவற்றுள் முதல் மூன்று தலங்களும் வைணவத் தலங்களாகும். நான்காவதான இராமநாதம் ஒன்றே சிவஸ்தலம். இத்தலத்தில் இராமநாதர் ஜோதிர்லிங்க மூர்த்தியாக திகழ்கிறார். இந்த ஜோதிர்லிங்கம் சுவாமி சன்னதியின் முதல் கிழக்கு பிரகாரத்தில் உள்ள சிறிய சன்னதியில் இருக்கிறது. இராமபிரான் சிவலிங்கம் ஸ்தாபித்து அவரை வழிபட்ட காரணத்தினால் இத்தலத்திற்கு இராமேஸ்வரம் என்று பெயர் ஏற்பட்டது. வடக்கே உள்ள காசியும் தெற்கே உள்ள இராமேஸ்வரமும் இந்துக்களின் சிறந்த புண்ணிய தலங்களாகக் கருதப்படுகின்றன. காசிக்கு புனிதப் பயணம் சென்றவர்கள் இராமேஸ்வரம் தலத்திற்கு வந்து தனுஷ்கோடி தீர்த்தத்தில் நீராடி இராமநாதரை வழிபட்டால் தான் காசி தலப் பயணம் முழுமை அடைந்ததாகும் என்பது இந்து சமயத்தினரின் நம்பிக்கையாகும்.
தல வரலாறு:
இராமாயணப் போரில் இராவணனைக் கொன்றபிறகு சீதையை சிறைமீட்டு இராமபிரான் அழைத்து வருகிறார். இராமேஸ்வரம் தலம் வந்தபிறகு, இராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டுவருமாறு காசிக்கு அனுப்புகிறார். சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்திற்குள் அனுமன் திரும்பி வராததால் சீதை கடற்கரையில் உள்ள மணலால் ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள். இராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார். காலங் கடந்து வந்த அனுமன் தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று தனது வாலினால் இராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார். இராமர் அனுமனை சமாதானப்படுத்தி அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்திற்கு அருகில் பிரதிஷ்டை செய்தார். மேலும் அனுமன் கொண்டுவந்த லிங்கத்திற்கே முதற் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார். அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம் இராமலிங்கத்திறகு வடபுறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விசுவநாதர் எனப்படும். இன்றும் இந்த காசி விசுவநாதருக்கே முதல் பூஜை நடைபெறுகிறது. பின்பே இராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கத்திற்கு பூஜை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பாக் ஜலசந்தியில் உள்ள ராமேஸ்வரம் தீவில் ராமநாதசுவாமி ஆலயம் அமைந்துள்ளது. பல ஆண்டுகளாக பாம்பன் ரயில் பாலம் மூலமாகத்தான் இராமேஸ்வரம் செல்ல முடியும் என்று இருந்த நிலை மாறி இப்போது பாம்பன் சாலை பாலமும் இருப்பதால் எளிதாக இராமேஸ்வரம் சென்று வர முடியும்.
கோவில் அமைப்பு:
இராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும். 865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய இராமேஸ்வரம் கோவிலின் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது. இதன் உயரம் சுமார் 126 அடி. மேற்கில் உள்ள கோபுரம் சுமார் 78 அடி உயரம் உடையது. இக்கோவிலின் நான்கு பக்கமும் வாயில்கள் அமைந்திருந்தாலும் வடக்கு, தெற்கு வாயில்கள் உபயோகத்தில் இல்லை. ஆலயத்தினுள் இராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகிய இவருக்கும் தனித்தனியே விமானக்கள் அமைந்திருக்கின்றன. சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு இரமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட இராமலிங்கர் சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார். இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் தழும்பு இன்றும் காணலாம். சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும். மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் இராமர், சீதை, லட்சுமணன் ஆகியோர் திரு உருவங்கள் காணலாம்.இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார். அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார். தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது. ஆலயத்தின் வெளிப் பிரகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது. இராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிரகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது. தினமும் காலை 5 மணிக்கு ராமநாதசுவாமி சன்னதியில், ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கிறது. இந்த அபிஷேகத்தை தரிசிக்க கட்டணம் உண்டு. பர்வதவர்த்தினி அம்பிகை பீடத்திற்கு கீழே ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்ரீசக்ரம் இருக்கிறது. சக்தி பீடங்களில் இது "சேதுபீடம்" ஆகும். இந்த ஆலயத்தின் மற்றொரு சிறப்பு 1212 தூண்களைக் கொண்ட இக்கோவிலின் மூன்றாம் பிரகாரம் ஆகும். உலகிலேயே மிக நீளமான பிரகாரம் என்ற பெருமையைப் பெற்ற இப்பிரகாரம் உலகப்பிரசித்தி பெற்றதாகும். முத்துராமலிங்க சேதுபதி அவர்களால் 1740 - 1770 ஆண்டுகளில் இந்த மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பிரகாரம் வெளிப்புறத்தில் கிழக்கு, மேற்காக 690 அடியும், வடக்கு தெற்காக 435 அடி நீளமும் கொண்டது. உள்புறத்தில் கிழக்கு மேற்காக 649 அடியும், வடக்கு தெற்காக 395 அடி நீளமும் கொண்டது. இந்த பிரகாரத்தில் ராமபிரானுக்கு கடலில் பாலம் (சேது பாலம்) அமைக்க உதவி செய்ய வந்த நளன், நீலன், கவன் ஆகிய மூன்று வானரர்களின் பெயரால் லிங்க சன்னதிகளும், பதஞ்சலி ஐக்கியமான நடராஜர் சன்னதியும் உள்ளன. இந்த நடராஜர் ருத்திராட்ச மண்டபத்தில் அழகுடன் எழுந்தருளியுள்ளார்.
கோவில் தீர்த்தம்:
இராமேஸ்வரம் கோவிலில் சுவாமி தரிசனத்தை விட தீர்த்தமாடுவது தான் மிக சிறப்பாக கருதப்படுகிறது. ஆலயத்தின் உள்ளே 22 தீர்த்தங்களும் வெளியே 22 தீர்த்தங்களும் உள்ளன. ஆலயத்தின் உள்ளே உள்ள தீர்த்தங்கள் எல்லாம் கிணறுகளாகவே அமைந்துள்ளன. அக்னி தீர்த்தம் என்று கூறப்படும் இராமேஸ்வரம் சமுத்திரக் கரையில் முதலில் தீர்த்தமாடுதலைத் தொடங்கி பின்பு ஆலயத்தினுள் மற்ற தீர்த்தங்களில் நீராட வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக