சதுரகிரி - நோய் தீர்க்கும் மலை:
சதுரகிரி மலையில் ஓடுகின்ற தீர்த்தங்களும், மூலிகைகளும் பல நோய்களை தீர்க்க வல்லது.
இந்த மலை ஏறி இறங்கினால் உடலில் உள்ள வியர்வை வெளியேறி, மூலிகை கலந்த காற்றுபட்டு பல நோய்கள் குணமாவதாகச் சொல்கிறார்கள்.
சித்த மருத்துவர்கள் பலர் மூலிகைகளை இங்கிருந்து சேகரித்து செல்கின்றனர்.
திசைக்கு நான்கு கிரிகள் (மலை) வீதம் பதினாறு கிரிகள் சமமாக சதுரமாக அமைந்த காரணத்தால் சதுரகிரி என்ற பெயர் ஏற்பட்டது. மலையின் பரப்பளவு 64 ஆயிரம் ஏக்கர்.
அதிசயங்களை எதிர்பார்த்து செல்லாதே, ஏமாற்றமே மிஞ்சும், கடவுள் நம்பிக்கையுடன் செல், அதிசயங்கள் கிடைக்கும். கடமையை செய், பலனை எதிர்பாரதே. கிடைக்கும் சதுரகிரி அதிசயங்களை கடவுள் நம்பிக்கையுள்ளவர்களிடம் கூறு.
சதுரகிரியின் பெருமை அளப்பதற்கரியது. இதை எழுத்தின் வடிவாகவோ, சொல்லின் வாயிலகவோ கூற முடியாது. சதுரகிரியையும் மகாலிங்கங்களையும் நேரில் கண்டு அனுபவித்து அறிய என்னால் முடிந்த விவரங்களை இங்கு தருகிறேன். இறைவனைக் நேரில் கண்டு அனுபவித்து உய்யவும்.
சதுரகிரிக்கு செல்ல இரண்டு வழிகள் உள்ளது. முதல் வழி தாணிப் பாறை வழியாகவும், மற்றென்று வருச நாட்டு வழியாகவும் செல்லாம். வருச நாட்டு வழியில் காடுகளும் யாணை மற்றும் காட்டு விலங்குகள் நடமாட்டங்கள் அதிகம் உண்டு. ஆகவே மக்கள் தாணிப் பாறை வழியையே அதிகம் பயன் படுத்துகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்தோ மதுரையில் இருந்தோ வத்திராயிருப்பு என்ற சிற்றூருக்கு வந்து அங்கிருந்து ஆட்டோக்களில் தாணிப் பாறை வரலாம். பிறகு மலைப்பகுதிகளில் நடந்தே செல்ல வேண்டும். இது அவரவர் சக்தி, உடல் பலம், மன பலம் மற்றும் நேரங்களைப் பொருத்து உள்ளது. இனி சிறிது சதுரகிரி பெருமைகளும், அமைவிடங்களைப் பற்றியும் பார்க்கலாம்.
நினைத்தால் முக்தி திருவண்ணாமலை, வணங்கினால் முக்தி தில்லை சிதம்பரம், பிறந்தால் முக்தி திருவாரூர், இறந்தால் முக்தி காசி ஆனால் இவை நான்குமே கிடைக்கும் இடம் சதுரகிரி.
தாணிப்பாறையில் இருந்து மேலே மகாலிங்கம் கோவில் 15 கி.மீ. முக்கிய இடங்களும் இடைப்பட்ட தூரங்களை கீழே காணலாம்.
தாணிப்பாறை 2 பிள்ளையார், காளி, கருப்பண்ண சுவாமி கோவில் 1 கி.மீ
கோவில்கள் 2 அத்திச்சோலை 1 கி.மீ
அத்திச்சோலை 2 அத்திரி மகரிஷி ஊற்று 2 கி.மீ
அத்திரி மகரிஷி ஊற்று 2 பசு மிதி பாறை - பசுத்தடம் 2 கி.மீ
பசு மிதி பாறை 2 கோரக்கர் குகை 1. 3 கி.மீ
கோரக்கர் குகை 2 இரட்டை லிங்கம் 2 கி.மீ
இரட்டை லிங்கம் 2 வெண் நாவல் ஊற்று 1. 3 கி.மீ
வெண் நாவல் ஊற்று 2 பச்சரிசி பாறை 1 கி.மீ
பச்சரிசி பாறை 2 வன துர்க்கை அம்மன் 1 கி.மீ
வன துர்க்கை அம்மன் 2 பலாவடிக் கருப்பர் கோவில் 1 கி.மீ
பலாவடிக் கருப்பர் கோவில் 2 சுந்தர. சந்தன மகாலிங்கம் கோவில் 1. 4 கி.மீ
மொத்த தூரம் 15 கி.மீ
தாணிப்பாறை அடிவாரத்திலிருந்து ஆசீர்வாத விநாயகரை வணங்கியபின் சிவசிந்தனையுடன் மலை யாத்திரையைத் தொடங்கவும். செல்லும் வழியில் ராஜயோக காளி, பேச்சியம்மன், கருப்பணசாமி கோயில்கள் தரிசித்து மேலே நடக்கவும். அடுத்து குதிரை ஊற்று, வழுக்குப்பாறைகளில் மழைக்காலங்களில் செல்வது கடினம். பார்த்து செல்லவும். சிறிது தூரம் சென்றதும் அத்திரி மகரிஷி பூஜித்த லிங்கத்தை தரிசிக்கலாம். அடுத்து காராம் பசுத்தடம். இந்த இடத்தில் தான் சிவன் துறவி வேடம் கொண்டு காராம் பசுவின் மடுவில் பால் அருந்தியதாக வரலாறு. இதனையடுத்து கோரக்க சித்தர் தவம் செய்த குகையும், பதஞ்சலி முனிவரின் சீடர்கள் பூஜித்த லிங்கமும் உள்ளது. இந்த லிங்கத்தை தரிசிக்க வேண்டுமானால், ஆகாய கங்கை தீர்த்தத்துக்கு மேல் உள்ள விழுதுகளைப் பிடித்து தொங்கி ஏறித்தான் செல்ல வேண்டும். இது ஆபத்தான இடம். .
இதன் பவித்திரம் உணராமல் இங்கே குளிக்கவோ, தண்ணீர் எடுக்கவோ பக்தர்கள் முயற்சிக்கக் கூடாது. இதை ஒட்டிய குகையில் உள்ளே ஒரு சிறிய லிங்கம் உள்ளது. இதை நீங்கள் காணும்போது , மெய் சிலிர்க்கும் அனுபவம் உங்களுக்கு ஏற்படுவது உறுதி. கோரக்கர் மலைக்கு நேர் மேலே செங்குத்தான மலையில் சற்று மேலே ஏறினால் ஒரு லிங்கம் உள்ளது. கொஞ்சம் இளவட்ட ஆளுங்க போக முடியும். ரொம்பவே செங்குத்தான பாதை. அதனால், அனைவரும் முயற்சிக்க வேண்டாம். இதையடுத்து இரட்டை லிங்கத்தை தரிசிக்கலாம். சற்று தூரத்தில் சின்ன பசுக்கடை என்ற பகுதியை கடந்தால் வெண் நாவல் ஊற்று வருகிறது. இந்த ஊற்று நீருக்கு சர்க்கரை நோயைக் குணமாக்கும் மகிமை இருப்பதாக கூறப்படுவதால், பக்தர்கள் இதைப் பருகுகிறார்கள். பின்னர், பச்சரிசிப்பாறை, வனதுர்க்கை கோயில், பெரிய பசுக்கிடை, பிலாவடி கருப்பு கோயில் அருகில் தைலக் கிணறு உள்ளது. பிலாவடி கருப்பு கோயிலைத் தரிசித்து, மகாலிங்கம் கோயிலை அடையலாம். மலையிலுள்ள 15 கி.மீ. தூரத்தை கடக்க 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகும்.
இங்குள்ள கோவில் மற்றும் குகைகளும் அதன் அமைவிடங்களும்.
சுந்தரமூர்த்தி கோவிலிருந்து சுந்தர மகாலிங்கம் - 0.25 கி மி
சுந்தரமூர்த்தி கோவிலிருந்து சந்தன மகாலிங்கம் / ஆனந்தவல்லி / சித்தர் கோவில்கள் - 0.5 கி மி
மேலே ஏறிய பிறகு சாப்பாடு பற்றிய கவலை வேண்டாம். எந்த நேரமும், உங்கள் வயிறை குளிர வைக்க " கஞ்சி மடம் ' உள்ளது.
உங்களுக்கு குறைந்த பட்சம், கஞ்சியோ , கூழோ , பழைய சோறோ - நிச்சயம் கிடைக்கும்.
24 மணி நேரமும் என்பதுதான் விசேஷம். மிகப் பெரிய குழுவாக சென்றால், முன்கூட்டியே சொல்லி விடுங்கள். சுடச்சுட சாதம் கிடைக்கும்.
மேல் குறிப்பிட்ட இடங்களை தவிர மேலும் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களை கீழே காணலாம். இவ்விடங்களை காண, தகுந்த வழிகாட்டிகளின் துணையுடன் செல்லவும்.
தவசிக்குகை - சுந்தர மகாலிங்கம் கோவிலிருந்து மலைப்பாதையாக 4 கி மி
பாறைப் பிள்ளையார், பெரிய மகாலிங்கம் – தவசிக்குகைக்கு செல்லும் வழியில்
பெரிய மகாலிங்கம்:
நடுக்காட்டு நாகர் சன்னதியை அடுத்து, லிங்க வடிவ பாறை உள்ளது. இதை "பெரிய மகாலிங்கம்' என்கின்றனர். பெரிய மகாலிங்கத்திற்கு அடியில் சிறு லிங்கம் உள்ளது. சாதாரண நாட்களில் இதற்கு மட்டுமே அபிஷேக ஆராதனை நடக்கிறது. சிவராத்திரியன்று மட்டும் பெரிய லிங்கத்திற்கு சிறப்பு பூஜை நடக்கிறது.
தவசிப்பாறை:
மகாலிங்கம் கோயிலிலுள்ள ஆனந்தவல்லி அம்மன் சன்னதிக்கு பின்புறமாக சென்று, மேற்கு பக்கமாக ஏறி, கிழக்கு பக்கமாக இறங்கினால் தவசிப்பாறையை (தபசுப்பாறை) அடையலாம்.
இது கடல்மட்டத்தில் இருந்து 5000 அடி உயரத்தில் உள்ளது. கோயிலில் இருந்து தவசிப்பாறை செல்ல குறைந்தது 2 மணி நேரமாகும். இது மிகவும் சிரமமான பயணம்.
பாறைக்கு செல்லும் வழியில் "மஞ்சள் ஊத்து' தீர்த்தம் உள்ளது. தவசிப்பாறையில் சித்தர்கள் தவம் செய்யும் குகை உள்ளது.
குகைக்குள் ஒரு ஆள் மட்டுமே மிகவும் சிரமப்பட்டு செல்லும்படியான துவாரம் உள்ளது. உள்ளே சென்ற பிறகு, பத்து பேர் அமர்ந்து தியானம் செய்ய வசதியிருக்கிறது. இதனுள் ஒரு லிங்கம் உள்ளது. மன திடம் உள்ளவர்கள் மட்டுமே இந்த குகைக்குள் சென்று லிங்கத்தை தரிசனம் செய்ய முடியும்.
இந்த குகையில் தான் 18 சித்தர்களும் தினமும் சிவபூஜை செய்வதாக கூறப்படுகிறது. குகைக்கு மேலே 9 பெரிய பாறாங்கற்கள் உள்ளன. இவற்றை "நவக் கிரக கல்' என்கிறார்கள்.
இதற்கு அடுத்துள்ள "ஏசி' பாறையின் கீழ் அமர்ந்தால், கடும் வெயிலிலும் மிகக் குளுமையாக இருக்கும்.
தவசிப் பாறையிலிருந்து கிழக்குப்பக்கமாக கீழிறங்கும் வழியில் "வெள்ளைப்பிள்ளையார்' பாறை உள்ளது. பார்ப்பதற்கு விநாயகர் போல் தெரியும். இங்குள்ள ஒரு மரத்தின் இடையில் அரையடி உயர பலகைக்கல் விநாயகர் சிலை உள்ளது.
இங்கு போகும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டியது
போகும் பொழுது தனியாகச் செல்லாதீர்கள். இரண்டு, மூன்று பேர்களாக சேர்ந்து செல்லவும். பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கவும். வழியில் குரங்குகள் எதிர் பட்டால் பயப் படாமலும், அவைகளை சீண்டாமலும் உங்கள் வழியில் நடக்கவும் அல்லது நிற்கவும். குரங்குகள் தன் வழியே செல்லும், உங்களை ஒன்றும் செய்யாது. அதிக பாரங்களை கொண்டு செல்ல வேண்டாம். அப்படி இருந்தால் கொண்டு செல்ல கூலிகள் கிடைப்பார்கள். செல்லும் வழிகளில் உள்ள நதிகளில் நிற்காதீர்கள். தீடீரென்று காட்டு வெள்ளம் வரும்.
மலை மேல் தங்குவதற்கு மடம்களை தவிர வேறு இடம் கிடையாது. மலை மேல் சுகாதார வசதிகள் கிடையாது. ஆகவே டிஷ்யு பேப்பர் கொண்டு செல்வது நல்லது. கைடுகள் துணை இல்லாமல் மலை சுற்றிப் பார்க்க செல்லாதீர்கள். இது ஒரு காடு, மற்றும் மிருகங்கள் எதிர் படும். இது தவிர நம் சிந்தனைக்கு அப்பாற்ப்பட்ட மனமயக்கி வனம் உள்ளது. எக் காரணம் கொண்டும், வன செடி, கொடி, மரங்களுக்கு தீது செய்யாதீர்கள். உங்களுக்கோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்களுக்கோ மூலிகைகள் தேவைப் பட்டால் வேண்டிய மூலிகைகளை மட்டும் பறிக்கவும். தேவைக்கு அதிகமாகவோ, பணத்திற்காகவோ பறிக்காதீர்கள். சில செடி, கொடிகள் மேலே பட்டால் அரிக்கும். மற்றும் சில செடிகளை மிதித்தால் நம் மதி மறந்து வேறு வழிகளில் நடப்போம்.
எல்லாவற்றிக்கும் மேல் நீங்கள் வழி தெரியாமல் வழியில் தவித்தால், உள்ளமுருகி “ஓம் நமட்சிவாய” என்றால் உங்களுக்கு வழி காட்ட சித்தர்கள்/ பைரவர் (நாய்) ரூபத்தில் வருவார்கள். அதைப் பின் தொடரவும்
திருச்சிற்றம்பலம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக