திருச்செந்தூர் ஸ்ரீசெந்திலாண்டவர்
வெண்டலைப் புணரி அலைக்கும் செந்தில், நெடுவேள் நிலை இய காமர் வியன் துறை- என்று புறநானூறும், சீர்கெழு செந்திலும் செங்கோடும் வெண் குன்றும் ஏரகமும் நீங்கா இறைவன்- என்று சிலப்பதிகாரமும் திருச்செந்தூரைப் போற்றுகின்றன.
கடல் அலைகள் வருடுவதால் திருச்சீரலைவாய் என்றும், முருகப்பெருமான் சூரபதுமனை வென்ற தலம் ஆதலால், ஜயந்திபுரம் என்றும் அழைக்கப்படுகிறது. கபாடபுரம், அலை வாய், கந்தமாதன மலை, திருச்செந்தில் என்ற வேறு பெயர்களும் உண்டு.
‘சிக்கலில் வேல் வாங்கி, செந்தூரில் சூர சம்ஹாரம்’ என்பது பழமொழி. தேவர்களின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட ஆறுமுகன், சூரபத்மன் மீது படையெடுத்தார். வழியில் எதிர்ப்பட்ட தாரகாசுரனையும், கிரௌஞ்ச மலையையும் அழித்து விட்டு, வீரபாகுத் தேவர் மற்றும் தன் படைகளுடன் திருச்செந்தூரில் வந்து தங்கினார். அவர் அசுரனை வெற்றி கொண்ட பிறகு ஈசனை வழிபடுவதற்கு தேவ தச்சன் மயனை அழைத்து கோயில் ஒன்றை எழுப்பினார். அதுவே இன்று நாம் காணும் திருச்செந்தூர் கோயில். வியாழ பகவானால் பூஜிவால்மீகி ராமாயணத்தில் ‘கபாடபுரம்’ குறிப்பிடப்பட்டிருப்பதால், ராமாயண காலத்துக்கு முன்பே திருச்செந்தூர் புகழ் பெற்றிருக்கிறது என்பதை அறியலாம்.க்கப்பட்ட காரணத்தால் இது வியாழ க்ஷேத்திரமாகவும் போற்றப்படுகிறது.
ஓரெழுத்தந்தாதி, திரிபு அந்தாதி, பதிற்றுப்பத்து அந்தாதி, யமக அந்தாதி, வெண்பா அந்தாதி, நிரோட்டக யமக அந்தாதி, சுப்பிரமணிய அந்தாதி, முருகன் கலித்துறை அந்தாதி, திருச்செந்தில் உலா, திருச்செந்தூர் மாதாந்தக் கலித்துறை, திருச்செந்தூர் வழிநடைச் சிந்து, திருச்செந்தூர்க்கோவை, திருச்செந்தூர் ஷண்முக சதகம், திருச்செந்தூர் நொண்டி நாடகம், தசாங்க வகுப்பு, திருச்செந்தூர் தல புராணம், வழி நடைப்பதம், திருச்செந்தில் பதிகம், திருச்செந்தில் நவரச மஞ்சரி, திருச்செந்தில் சந்த விருத்தம் என்று திருச்செந்தூர் பற்றிய நூல்கள் ஏராளம்.
1.செந்திலாண்டவன் ஆலயம் (ஓம்) பிரணவத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து லட்சணங்களோடு கட்டமைக்கப்பட்டுள்ளது. கோயில் வடக்கு- தெற்காக 300 அடி நீளமும் கிழக்கு- மேற்காக 214 அடி அகலத்துட னும் அமைந்துள்ளது. இதன் பிரதான வாயில் தெற்கு நோக்கியது.
2.கோபுரம், யாளி மண்டபத்துக்கு மேல் 137 அடி உயரமும், 90 அடி நீளமும், 65 அடி அகலத்துடனும் திகழ்கிறது. இதன் ஒன்பதாவது மாடத்தில் கடிகார மாளிகை இருக்கிறது.
3.மேற்கு ராஜ கோபுரம், தெய்வானை திருமணம் நடைபெறும்போது மட்டும் திறக்கப்படும்.
4.முதல் பிராகாரத்தில் தெற்கில் ஜெயந்திநாதர் எனப்படும் குமாரவிடங்கப் பெருமான் வள்ளி- தெய்வானையுடன் காட்சி தருகிறார். தென்மேற்கில் வள்ளிக்கும், வடமேற்கில் தெய்வயானைக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன.
5.மேற்கில் சங்கரநாராயணர், காசி விசுவநாதர்- விசாலாட்சி, வேதபுரீசுவரர், திருவாதபுரீசுவரர், நாகநாத சோமேசுவரர் ஆகியோரது சந்நிதிகள் உள்ளன. வடக்கில் மாணிக்கவாசகர், காரைக்காலம்மையார், சிவகாமி- நடராஜர், சனீஸ்வரர், பைரவர் சந்நிதிகள் இடம் பெற்றுள்ளன. தவிர இங்கு ஏழுமலையானுக்கும், சந்தான கிருஷ்ணனுக்கும் தனிச் சந்நிதிகள் உள்ளன.
6.இரண்டாம் பிராகாரத்தின் மேற்கில் ஸித்தி விநாயகர், சகஸ்ரலிங்கம், ஆன்மநாதர், மனோன் மணி அம்மை, பானுகேசுவரர், சோமசுந்தரர், மீனாட்சியம்மை, திருமூலநாதர், திருக்காளத்தி நாதர் (வாயு லிங்கம்), உமா மகேஸ்வரி, அருணாசலேசுவரர் (தேயு லிங்கம்), உண்ணாமுலையம்மை, ஜம்புகேசுவரர் (அப்பு லிங்கம்), வன்மீக நாதர் (பிருதிவி லிங்கம்), அருணகிரிநாதர், வல்லப கணபதி ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இதன் தென்பகுதியில், முதல் பிராகாரம் செல்லும் வாசலில் வீரகேசரியும், வீர மார்த்தாண்டரும் காவல் புரிகின்றனர். இங்கு, நவக்கிரகங்கள் கிடையாது. ஆனால், சனி பகவானுக்குத் தனிச் சந்நிதி உண்டு
7.இந்தத் தலத்தை வீரபாகு க்ஷேத்ரம் என்றும் அழைப்பார்கள். அர்த்த மண்டபத்தில் வீரபாகு, வீர மகேந்திரர் காவல் தெய்வங்களாக விளங்குகின்றனர். செந்திலாண்டவனுக்கு பூஜை செய்யும் முன்பு, முதலில் வீரபாகுவுக்கு பூஜை செய்து ‘பிட்டு’ படைத்து வழிபடுகின்றனர்.
8.ஸ்ரீசெந்திலாண்டவர் ஒரு முகம், நான்கு திருக்கரங்களுடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறார். மூலவருக்கு குமார தந்திர முறையிலும், சண்முகருக்கு, சிவாகம முறையிலும் பூஜைகள் நடைபெறுகின்றன. இங்கு மூலவர் தவக் கோலத்தில் இருப்பதாக ஐதீகம். எனவே அவர் கையில் வேலும் அருகில் தேவியரும் இல்லை.
9.கருவறையின் பின்புறத்தில் ஐந்து லிங்கங்களும் கருவறைக்குள் மூன்று லிங்கங்களும் உள்ளன. இவற்றை அஷ்ட லிங்கங்கள் என்பர். அஷ்ட லிங்கங்களும் இங்கு இடம்பெற்றிருக்கக் காரணம், இறைவன் சூரிய- சந்திரராகவும், பஞ்ச பூதங்களாகவும், உயிர்களாகவும் விளங்கு கிறார் என்பதை விளக்குவதற்காகவே!
10.முருகன் சந்நிதியில் முருகனுடன் பஞ்ச லிங்கங்களைக் கண்ணாலும், மற்ற லிங்கங்களை மனதாலும் பூஜிக்க வேண்டும். அப்போதுதான் நமது பிரார்த்தனை முற்றுப் பெறும். அஷ்ட லிங்கங்கங்களில், பஞ்ச லிங்கங்களுக்கு பூஜை நடக்காது. ஏனெனில், முருகப்பெருமானே இந்த லிங்கங்களுக்கு பூஜை செய்வதாக ஐதீகம்.
11.திருச்செந்தூரில் முருகப் பெருமான் ஐம்பெரும் தெய்வமாக வணங்கப்படுகிறார். அவருக்கு மஞ்சள் பட்டாடை- மஞ்சள் மலர் மாலை அணிவித்து நான்முகனாகவும், நீல மலர்கள்- நீல வண்ண ஆடைகளை அணிவித்து திருமாலாகவும், சிவப்பு நிற ஆடைகள்- சிவப்பு மலர்களை அணிவித்து அரனாகவும், வெண்பட்டு- வெண் மலர்களால் அலங்கரித்து மகேசனாகவும், பச்சை சார்த்தி சதாசிவனாகவும் போற்றப் படுகிறார். இங்கு நாள்தோறும் ஒன்பது கால வழிபாடுகள் நடை பெறுகின்றன. மார்கழி மாதம் மட்டும் பத்து கால பூஜை நடைபெறுகிறது.
12.மூலவருக்கான நைவேத் தியத்தில் காரம், புளி ஆகியவற்றைச் சேர்ப்பதில்லை. சண்முகருக்கான நைவேத்தியங்களில் காரம், புளி உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிர சம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை இடம் பெறுகின்றன. உதய மார்த்தாண்ட பூஜையின்போது தோசை, சிறுபருப்புக் கஞ்சி ஆகியவை நைவேத்தியத்தில் இடம் பெறுகின்றன. இரவு நேர பூஜையில் பால், சுக்கு, வெந்நீர் ஆகியன நிவேதிக்கப்படுகிறது.
13.மூலவரின் தலைக்கு மேல் பெரிய வெள்ளிப் பாத்திரம் ஒன்றைக் கட்டித் தொங்க விட்டு, அதில் பால் நிரப்பி, சிறு துவாரத்தின் வழியாக பாலை தாரை தாரையாக மூலவரின் மேல் விழச் செய்து சுமார் மூன்று மணி நேரம் நடைபெறும் தாராபிஷேகம் இந்தக் கோயிலின் சிறப்பு.
14.மூலவரின் உற்சவர்- அலைவாய் உகந்த பெருமான். ஐம்பொன் திருமேனி. நவராத்திரி நாள்களில்- பாரிவேட்டை, சிறுத்தொண்டர் திருநாள், தைப் புனர்பூசம், பூசம் ஆகிய நாட்களில் இவர் எழுந்தருளுகிறார். இவரை தோழன்சாமி என்பர். வள்ளி- தெய்வானை இவருக்கு அருகில் உள்ளனர். திருவிழாக்களின்போது சந்திகளில் உலா வருவதால், இவர் சந்திச்சாமி என்றும் அழைக்கப்படுகிறார்.
15.இரவு சுமார் 9:45 மணிக்கு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பிறகு ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதை ரகசியத் தீபாராதனை என்கிறார்கள்.
16.உலோகத் திருமேனியரான ஆறுமுகப் பெருமானுக்கு ஆண்டுக்கு 36 தடவை மட்டுமே அபிஷேகம் நடை பெறுகிறது. இதில் விபூதி அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
17.திருவிழாவின்போது ஒரு நாள் ‘தங்க ஆடு’ வாகனத்தில் அஜாரூடராகக் காட்சி தருகிறார் செந்திலாண்டவர்.
18.ஆறுமுகப் பெருமானின் உற்சவர்- குமாரவிடங்க பெருமான். திருமணங்களுக்கு இவரே எழுந்தருளுவதால் மாப்பிள்ளைச் சாமி எனப்படுகிறார்.
19.ஆறுமுகப் பெருமானின் ஆறு முகங்களுக்கும் நடை பெறும் ஆறுமுக அர்ச்சனை சிறப்பானது. ஆறு பண்டிதர்கள் முருகனின் ஆறு முகங்களின் முன் நின்று திருநாமங்களைப் பாட, சிவாச்சார்யர்கள் 6 பேர் மலர் தூவி அர்ச்சனை செய்வதுதான் ஆறுமுகார்ச்சனை எனப்படுகிறது. அப்போது ஆறு திருமுகங்களுக்கும், ஆறு வகையான உணவு படைக்கப்படுகிறது. ஆறு தட்டுகளில் கற்பூரம் ஏற்றி தீபாராதனை காட்டப்படும்.
20. முருகனின் ஆறுமுகங்களும் ஆறு விதமான செயல்களைச் செய்வதாக ஐதீகம். உலகுக்கு ஒளி தருவது ஒரு முகம், வேள்விகளைக் காப்பது இன்னொரு முகம், அடியார் குறை தீர்ப்பது மற்றொரு முகம், வேதாகமப் பொருளை விளக்குவது பிறிதொரு முகம், பகைவனையும், தீயோனையும் அழிப்பது வேறொரு முகம். தேவியருக்கு மகிழ்ச்சி தருவது ஆறாவது முகம். இவரது ஆறுமுகங்களும் முறையே சஷ்டி கோலம் கொண்ட முருகன், பிரம்மன், விஷ்ணு, சிவன், கலைமகள், மகாலட்சுமி ஆகியோரைக் குறிக்கும் என்பர்.
21.அசுரனை வதம் செய்ததால், திருத்தணி மற்றும் பழநி தலங்களில் உள்ளது போல் க்ஷத்திரிய வடிவில் முருகன் இங்கு காட்சி தருகிறார். எனவே, மேற்குறிப்பிட்ட தலங்களில் தோஷ பரிகாரமாக நடைபெறும் ‘சேவல் விடும்’ நேர்த்திக் கடன் இங்கும் நடைபெறுகிறது.
22. தலத்தின் சிறப்பம்சம் இலை விபூதி பிரசாதம். செந்தூரில் தேவர்கள் பன்னீர் மரங் களாக உள்ளனர் என்பது ஐதீகம். பன்னிரு நரம்புகள் உள்ள பன்னீர் மர இலைகளில் வைத்துத் தரப்படுவதே இலை விபூதி பிரசாதம். முருகப்பெருமான் தன் 12 கரங்களால் விசுவாமித்திரரின் காசநோய் நீங்க திருநீறு அளித்ததன் தாத்பர்யம் இது. சூரபதுமன் வதம் முடிந்த பின் முருகப்பெருமான் தன் பரிவாரங்களுக்கு, 12 கைகளினால் விபூதிப் பிரசாதம் வழங்கினார் என்றும் கூறுவர்.
23.மீன் பிடிக்கும் பரதவர் குலத்தில் பிறந்த தெய் வானையை முருகப் பெருமான் மணந்ததாக பரதகுல பாண்டிய வம்ச நூலில் உள்ளதால், பரதவர்கள் முருகனை, ‘மச்சான் சாமி’ என்கின்றனர்!
24.காயத்ரி மந்திரத்தின் எழுத்துகளே இங்கு 24 தீர்த்தங் களாக விளங்குகின்றன என்பது ஐதீகம்.
25.முருகன் கோயிலுக்கு அருகே, கடற்கரையையட்டி இருக்கும் வள்ளிக் குகை தரிசிக்க வேண்டிய ஒன்று.
26.முருகப்பெருமான், படை வீரர்களின் தாகம் தணிக்க வேலாயுதத்தால் நீர் ஊற்று ஒன்றை ஏற்படுத்தியதாக ‘கந்த புராணம்’ கூறுகிறது. அதை ‘ஸ்கந்த புஷ்கரணி’ என்பர். ஒரு சதுர அடி பரப்பளவில் திகழ்கிறது. ஒரு படியைக் கொண்டு முகக்கும் அளவே நீர் இருப்பதால், ஒருபோதும் வற்றாத இதற்கு நாழிக் கிணறு எனப் பெயர். இதில் நீராடிய பிறகே கந்தபெருமானை தரிசிக்க வேண்டும்.
27.போர் நடந்த இடம் ஆதலால், செந்தி லாண்டவன் கோயில் அருகில் உள்ள கடல் நீர் சற்றே சிவந்து ரத்த நிறமாயிருக்கிறது.
28.மார்கழித் திருவாதிரை- திருமுழுக்கின் போது அபிஷேகத்துக்குப் பிறகு திருச்செந்தூர் நடராஜருக்கு முருகப் பெருமானின் அணி கலன்கள் அணிவிக்கப்படுகின்றன.
29.உச்சிக் காலம் முடிந்ததும், மேளதாளத்துடன் கடற்கரைக்குச் சென்று கங்கைக்கு சுத்த அன்னம் படைக்கப்படுகிறது.
30.மாமரமாக மாறிய சூரபதுமனை வேலாயுதத்தால் முருகப் பெருமான் இரண்டாகப் பிளந்தார். அதன் ஒரு பகுதி சேவலாகவும், மற்றொன்று மயிலாகவும் மாறியது. அதனால் இங்கு மாமரங்கள் வளர்வதில்லை.
31..இங்குள்ள சண்டிகேஸ்வரருக்கு புதிய மாலைகளை சாத்த மாட்டார்கள். மூலவருக்கு சாத்திக் கழித்த மாலையையே சண்டி கேஸ்வரருக்கு அணிவிக்கிறார்கள்.
32.மூலவர் சந்நிதி இரவில் அடைக்கப்பட்டதும் இங்கு அமைந்துள்ள பைரவர் சந்நிதியில் சாவியை வைக்கிறார்கள். இவரது சந்நிதியில் உள்ள விளக்கில் இருந்து வேறொரு விளக்கில் அக்னியை ஏற்றிச் சென்றுதான் மடைப்பள்ளி அடுப்பைப் பற்ற வைக்கிறார்கள். இரவில் இவருக்கு வடை நைவேத்தியம் செய்யப்படுகிறது.
33.முருகனின் வாகனமான மயிலுக்கு பொரி படைக்கிறார்கள்.
34.ஸ்ரீ செந்தில் ஆண்டவனை தரிசிக்கச் செல்லும் ஆண் பக்தர்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் கோயிலுக்குள் செல்ல வேண்டும் என்பது மரபு. இங்குள்ள அர்ச்சகர்கள் ‘திரிசுதந்திரர்கள்’ எனப்படுவர். இவர்கள் கேரள தேச ஆசாரப்படி பூஜிக்கிறார்கள்.
35.தவத்திரு ஆறுமுக சுவாமிகள், தவத்திரு மௌன சுவாமிகள், தவத்திரு காசி சுவாமிகள் ஆகியோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்துள் ளனர். கோயிலுக்கு தெற்கில் (சஷ்டி மேட்டுத் திடலுக்கு அருகில்) இவர்களது ஜீவ சமாதிகள் உள்ளன. வள்ளி சந்நிதிக்கு வலப்புறம் உள்ள தூண்களில் இவர்களின் சிலைகளைக் காணலாம். இவை மூலஸ்தானத்தை நோக்கியவாறு உள்ளன.
36.செந்தூரில் முருகப்பெருமான் முதலில் தங்கிய இடம் சிங்க கொழுந்தீசர் என்ற சிவன் கோயில். இந்தக் கோயிலில் உற்சவங்கள் கிடையாது. முருகன் தந்தையைப் பார்ப்பதற்காக இங்கு எழுந்தருள்கிறார்.
37.கி.பி. 1670-ஆம் ஆண்டில் காயாமொழி பகுதியை அரசாண்ட பஞ்சாதித்தன் என்ற அரசன் செந்திலாண்டவனுக்கு தேர் செய்து அர்ப்பணித்துள்ளான்.
38.‘இங்கிருந்து நீவிர் அருள்பாலிக்கும் வரை கடலால் கோயிலுக்குத் தீங்கு நேராது!’ என்பது வருண பகவானின் சத்திய வாக்கு. சுனாமி தமிழ்நாட்டைத் தாக்கியபோது திருச்செந்தூருக்கு எந்த அபாயமும் ஏற்படவில்லை என்பதே இதற்குச் சான்று.
39.பிரிட்டிஷ்- கிழக்கிந்தியக் கம்பெனியின் அதி காரி ஒருவர் 59 காசுகளுள்ள தங்கக் காசு மாலையை முருகனுக்கு அளித்துள்ளார். தவிர, 100 அமெரிக்கன் டாலர்களால் செய்யப்பெற்ற காசு மாலையும் இங்கு உள்ளது. சிறப்பு நாட்களில் மட்டுமே இந்த ஆபரணங்களை முருகனுக்கு அணிவிக்கிறார்கள்.
40.ஸ்ரீசண்முகரின் உயரத்துக்கு ஏற்ற வைர வேல் ஒன்று இங்குள்ளது. இது 100 பவுன் தங்கம், 40 காரட் வைரம் ஆகியவற்றால் செய்யப்பட்டது. நடுவில் பெரிய பச்சைக் கல் கொண்டது. கி.பி.1917-ல் கொத்தமங்கல் சி. ராம்ஜி குடும்பத்தாரால் அர்ப்பணிக்கப்பட்டது.
41.திருச்செந்தூர் முருகன் கோயிலில் தங்கத்தால் ஆன அரிய பொருட்கள் உள்ளன. இறைவனுக்கு அமுது படைக்கும்போது கீழே விழும் பருக்கைகளை எடுக்க தங்க ஊசி ஒன்று பயன்படுத்தப் படுகிறது. கும்பாபிஷேகத்தின் போது குடத்துக்குள் இடப்படும் பொருட்களுள் தங்க மீன்களும், தங்கத் தாமரைப் பூக்களும் இடம்பெறுகின்றன. பூஜை முடிந்ததும் தங்கச் சாமரம் கொண்டு கவரி வீசுவர். மாசித் திருவிழாவின் 8-ஆம் நாளன்று ஸ்ரீசண்முகருக்கு அபிஷேகிக்கும்போது தங்கப் பிடியுடன் கூடிய காண்டாமிருகக் கொம்பின் வழியாக நீர் ஊற்றுகிறார்கள். இவை தவிர தங்க ஆமை ஒன்றும், கும்பாபிஷேகத்தின்போது தலைமைப் பட்டர் அணிந்துகொள்ள நவரத்தின மோதிரங்களும் உள்ளன.
42.தீராத வயிற்றுவலி உடையவர்கள் திருச்செந்தூர் முருகன் சந்நிதியில் கந்தசஷ்டி கவசம் பாடினால் குணமாகும் என்று பால தேவராய சுவாமிகள் கூறியிருக்கிறார். சஷ்டி விரதம் ஆறு நாட்கள் அனுஷ்டிக்கப் படுகிறது. சஷ்டி விரத காலத்தில் திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் அமர்ந்து விரதம் இருந்தால் நினைத்த காரியங்கள் நடக்கும்.
43.கடற்கரையில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியின்போது கடல்நீர் உள் வாங்கும் அற்புதம் இன்றும் தொடர்கிறது. சூரசம்ஹாரம் முடிந்ததும் செந்திலாண்டவர் எதிரே கண்ணாடி வைத்து, கண் ணாடிக்கு அபிஷேகம் நடை பெறும். இதை ‘சாயாபிஷேகம்’ (சாயா- நிழல்) என்பர்.
44.திருச்செந்தூர் முருகப்பெருமான் கோயிலில் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சித்திரை, வைகாசி, கார்த்திகை மாதங்களில் பால்குடம் எடுப்பது சிறப்பு.இதனால் குழந்தைகள் மற்றும் பெற்றோரது தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
45.ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாளன்று தங்கப் பல்லக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன் புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சியளிப்பார்.
46.விசாகப் பெருவிழா பத்து நாள் வெகு சிறப்பாக நடைபெறும். அப்போது கோயிலின் எதிரிலுள்ள வசந்த மண்டபத்தைச் சுற்றி நான்கு புறமும் அகழி போல் கட்டி அதில் நீர் நிரப்பி வைத்திருப்பர். விழாவின் முதல் நாள் உச்சிகால பூஜை முடிந்ததும் முருகப் பெருமான் மாலை வரை இந்த வசந்த மண்டபத்தில் எழுந்தருளியிருப்பார். இங்கு ஆராதனைகள் முடிந்ததும், சப்பரத்தில் ஏறி 11 தடவை வலம் வந்து, முருகன் கோயிலுக்குள் போவார்.
47. 137 அடி உயரமும், 9 நிலைகளையும் கொண்ட ராஜ கோபுரத்தைக் கட்டியவர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சேர்ந்த தேசிக மூர்த்தி சுவாமிகள். இவரை ஒடுக்கத்தம்பிரான் என்றும் கூறுவர். கோபுரம் கட்டும்போது பணியாளர்களுக்கு கூலியாக இலை விபூதி தருவார். தூண்டு கை விநாயகர் கோயிலருகில் சென்று இலையைப் பிரித்துப் பார்த்தால், அதில் வேலைக்குரிய கூலி இருக்குமாம்! ஒரு நாள் இந்த அதிசயம் நடப்பது நின்று போனது. தேசிக சுவாமிகள் முருகனிடம் முறையிட்டார். அவரது கனவில் தோன்றிய முருகன், ‘‘காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதியிடம் சென்று உதவி பெற்று கோபுரத்தைக் கட்டி முடி!’’ என்றார். சுவாமிகள் சீதக்காதியைச் சந்தித்தார். அவர் ஒரு மூட்டை உப்பு கொடுத்தார். அதைக் கோயிலுக்குக் கொண்டு வந்து பிரித்துப் பார்த்தபோது தங்கக் காசுகளாக மாறிவிட்டிருந்தன. கோபுர வேலை இனிதே முடிந்தது. பால்குடம் எடுத்து வரும் பக்தர்கள் அடிக்கடி வழுக்கி விழுந்த சம்பவங்களாலும் கிழக்கு முகமாக சுப்பிர மணியர் சந்நிதிக்கு பின்புறம் அமைந்து விட்டதாலும் ராஜ கோபுர வாயில் மூடப்பட்டு விட்டதாம்.
48. ஆதிசங்கரர் வடநாட்டு திக்விஜயத்தை மேற் கொண்டபோது அவருக்கு எதிராக அபிநவகுப்தன் என்பவன் அபிசார யாகம் செய்து, ஆதிசங்கரருக்குக் காச நோயை உண்டாக்கினான். பிறகு ஈசனின் கட்டளைப்படி ஆகாய மார்க்கமாக திருச்செந்தூர் வந்து சேர்ந்தார் ஆதிசங்கரர். இங்கு ஆதிசேஷனான பாம்பு முருகனை பூஜிப்பது கண்டு வியப்படைந்தார். பாம்பொன்று ஊர்ந்து செல்லும் விதமான நடையில் சுப்பிரமணிய புஜங்க ஸ்லோகங்களை இயற்றி முருகன் அருளால் நோய் நீங்கப் பெற்றார். இங்கு மகா மண்டபத்தில் ஆதிசங்கரரது சிலை உள்ளது.
49.இலங்கை மன்னன் கண்டி அரசன் கனவில் திருச்செந்தூர் முருகன் தோன்றி, சந்தன மரம் ஒன்றை வெட்டிக் கடலில் மிதக்க விடச் சொன்னார். மன்னன் வெட்டித் தள்ளிய மரம் திருச்செந்தூர்க் கரையை அடைந்தது. இந்த மரமே கொடிமரமாக உள்ளது. இந்தச் செய்தி திருச்செந்தூர் பிள்ளைத் தமிழிலும் இடம் பெற்றுள்ளது.
50.திருச்செந்தூர் கோயில் மடைப் பள்ளியில் வேலை பார்த்தவன் வென்றிமாலை. முருக பக்தன். ஒரு நாள் பிரசாதம் தயாரிக்காமல் தியானத்தில் ஆழ்ந்தான். உச்சிக்கால பூஜைக்கு பிரசாதம் இல்லை என்றதும் வென்றிமாலை வெளியேற்றப்பட்டான்! அவமானம் தாங்காமல் கடலில் விழப் போனான். அப்போது அவனைத் தடுத்து நிறுத்திய ஓர் அசரீரி, ‘செவலூர் சாஸ்திரிகளை போய்ப் பார்!’ என்றது. அப்படியே செய்தான். அவனிடம், ‘‘சம்ஸ்கிருதத்தில் உள்ள தலபுராணத்தை தமிழில் உனக்குச் சொல்லித் தர முருகன் கட்டளையிட்டிருக்கிறார்!’’ என்றார் சாஸ்திரியார்.
பிறகு சாஸ்திரியார் சொல்லச் சொல்ல, செந்தூர் தல புராணத்தை மொத்தம் 899 தமிழ்ப் பாடல்களாக புனைந்தார் வென்றிமாலை. வென்றிமாலைக்கு கவிராயர் பட்டம் தந்தார் சாஸ்திரியார். திருச்செந்தூ ரில் அவற்றை அரங்கேற்ற வந்தபோது மீண்டும் விரட்டியடிக்கப்பட்டார் வென்றிமாலை. எழுதிய ஏடுகளை கடலில் வீசியெறிந்தார் கவிராயர். ஈழக் கடற்கரையில் கரை ஒதுங்கிய ஏடு ஒரு முருக பக்தரிடம் சிக்கியது. திருச்செந்தூர் தல புராணத்தின் புகழ் பரவியது. எப்படியோ, மூலப் பிரதி திருச்செந்தூருக்கு வந்து சேர்ந்தது. இன்றும் கோயிலில் அது பாதுகாக்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக