வியாழன், 8 ஜூன், 2017

காஞ்சி மகா பெரியவா அவதார தினம்



காஞ்சி மகா பெரியவா அவதார தினம்

மகா பெரியவா என்று பக்த கோடிகளால் அன்புடன் அழைக்கப்படும் காஞ்சி ஸ்ரீகாமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியான ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 124-வது ஜயந்தி தினம் இன்று (8.6.2017). அதாவது, அந்த மகான் அவதரித்த தினம்.
" புஷ்பேசு ஜாதி, புருஷேசு விஷ்ணு
நாரீஷு ரம்பா நகரேஷு காஞ்சி "
என்று சம்ஸ்கிருதத்தில் ஒரு ஸ்லோகம் உண்டு. புஷ்பங்களில் ஜாதி முல்லை/மல்லிகை சிறந்தது, புருஷர்களில் பெரியவர் விஷ்ணு, பெண்களில் சிறந்தவர் ரம்பா, நகரங்களில் சிறந்தது காஞ்சீபுரம். இதை காளிதாசர் செய்ததாகச் சொல்லுவர்
காஞ்சிபுரம் என்றவுடன் நமது சிந்தனைக்கு முதலில் நிற்பது ஸ்ரீ காமாட்சியும் "உம்மாச்சி" தாத்தாவும்தான். அதற்கு பிறகு தான் காஞ்சிபுரம் பட்டு, இட்லி, சிற்பங்கள் இவை அனைத்தும்.
அது யாருங்க "உம்மாச்சி தாத்தா"என நீங்கள் கேட்டாள் நீங்கள் தமிழகத்திற்க்கு புதியவர் என அர்த்தம். காஞ்சிபுரத்திற்கு சென்று "உம்மாச்சி தாத்தா" யாருன்னு ஒரு குழந்தையிடம் கேட்டால் கூட மகா பெரியவாள காமிக்கும்.
தமிழ்நாட்டில் தென்னாற்காடு மாவட்டம் விழுப்புரத்தில் 1894ம் ஆண்டு மே 20 அனுஷ நக்ஷத்திரத்தில் ஸ்மார்த்த பிராமண குடும்பத்தில் பிறந்த மகா ஸ்வாமிகளுக்கு பெற்றோர் இட்ட பெயர் ஸ்வாமி நாதன் என்பதாகும்.
இவரது தந்தை சுப்பிரமணிய சாஸ்திரி மாவட்ட கல்வி அதிகாரியாகப் பணிபுரிந்தவர். ஸ்வாமிகள் தனது துவக்க கல்வியை தின்டிவனத்தில் உள்ள ஆற்காடு மிஷன் பள்ளியில் பயின்றார்
பீடம் ஏறிய வரலாறு
அவர் 1907ஆம் ஆண்டு திண்டிவனத்தில் கிறிஸ்டியன் மிஷன் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது கலவை என்ற இடத்தில் அப்போதைய சங்காராசார்யார் சித்தி அடைந்து விட்டார். ரிக்வேதம் படித்தவரும் மடத்தில் இருந்தவருமான அவரது தாய் வழி உறவினருள் ஒருவர் அடுத்த சங்கராசாரியராக நியமிக்கப்பட்டார். தன் அம்மாவுடன் காஞ்சி புரம் செல்கிறார் பரமாசார்யாள். அவருக்கு அப்போது வயது 13. அந்த சமயத்தில் அவருக்கு மட்டும் தனியே ஒரு வண்டியில் வருமாறு கூறப்பட்டது.
சங்கராசாரியராக நியமிக்கப்பட்ட அவரது உறவினர் ஜுரத்தின் உச்சகட்ட நிலையில் நினைவிழந்து இருப்பதையும் ஆகையால் அவரையே அடுத்த சங்கராசாரியராக நியமிக்க உத்தேசம் என்பதையும் அறிந்து கொண்டார் 13 வயதான பரமாசார்யாள்!
நடமாடும் தெய்வம்
நடமாடும் தெய்வமாகத் திகழ்ந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து, நன்னெறி புகட்டி, அவர்களை நல்வழிப் படுத்திய மகான், காஞ்சி மகா பெரியவர். ‘பெரியவா...' என்று நித்தமும் அவர் நினைவிலேயே வாழ்ந்து, அவருடைய கருணை நிழலில் இளைப்பாறி, துயரங்கள் மறந்து, உள்ளம் தூய்மை அடைந்த பக்தகோடிகள் ஏராளமானோர். காஞ்சிப் பெரியவருடனான தங்கள் அனுபவங்களை விவரிக்கும்போது பக்தர்களுக்கு நா தழுதழுக்கும்; கண்கள் பனிக்கும்; உடல் சிலிர்க்கும்.
ஜென்ம நட்சத்திரம்
இன்று பெரியவாளின் ஜென்ம நக்ஷத்திர தினத்தில் அவருடைய விஷேஷ ஜாதகத்தை நாமும் ஆராயலாமே என்ற எண்ணம் தோன்றியது. (இதற்கு முன் பலர் ஆராய்ந்துவிட்டனர்). ஓருவிதத்தில் இது மகா பாக்கியமானாலும் பெரியவாளின் ஜாதகத்தை ஆராய தூண்டியது ஜோதிடத்தில் நமக்கும் ஏதோ தெரிந்துவிட்டது என்ற மமதையின் வெளிப்பாடு என்பதை பிற்பாடுதான் புரிந்தது.
சரி! இப்போது ஜாதகத்தை பார்ப்போம்!
உம்மாச்சி தாத்தா எனப்படும் நமது பெரியவா சிம்ம லக்னம். லக்னதிபதி பத்தில் புதன் மற்றும் குருவுடன் சேர்க்கை பெற்று நிற்கிறது. சூரியனும் புதனும் மிக நெருங்கிய பாகையில் புத ஆதித்ய யோகம் பெற்று நிறப்பது இவர் ஒரு நடமாடும் பல்கலை கழகமாக திகழ்ந்ததை உறுதி செய்கிறது. கணிதம், விஞ்ஞானம், ஆண்மீகம், கலாச்சாரம் என எந்த விஷயத்தை எடுத்தாலும் அவருக்கு தெரியாத விஷயங்களே இல்லை என்பார்கள்.
குரு சூரியன்
குருவுடன் சேர்ந்து நிற்கும் சூரியன் உயர்ந்த ஆன்மீக வாழ்வை தரும் என்கிறது ஜோதிடம். அதுவும் பத்தாமிடத்தில் நிற்கிறதால் காஞ்சி பீடத்தை இந்த தெய்வம் தனது வாழ்நாள் முழுவதும் அலங்கரித்து வருகிறது என்றால் மிகையில்லை. (அவர் இன்றும் நம்மோடு இருக்கும்போது அவருக்கேது கடைசி நாள் என்பது)
சனி கேது சேர்க்கை
நான் பார்த்த பாமரர்களின் ஜாதகங்களில் கடக சிம்ம லக்ன காரர்களுக்கு ஏழாமதிபதியாகிய சனி இரண்டில் நின்றால் இரண்டு தார யோகம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கேதுவோடு சேர்க்கை பெற்று இரண்டில் நிற்க்கும் சனைஸ்வர பகவான் இவருக்கு மிக உயர்ந்த ஆன்மீகத்தை தந்தது என்றால் மிகையாகாது.
அதேபோல சனியும் கேதுவும் சேர்க்கை பெற்றால் திடீரென தலையில் துண்டை போட்டுக்கொள்ள நேரும் (கடனால்) எற்கிறது ஜோதிட விதி. இதுவும் பாமரர்களுக்குதான். நமது ஸ்வாமிகளுக்கும் சனி கேது சேர்க்கை ஜாதகத்தில் இருக்கிறது. தலையிலும் துண்டு விழுந்தது. ஆனால் கடனால் அல்ல. ஆன்மீக வாழ்கையின் அழைப்பின் காரணமாக காவித்துண்டு தலையில் விழுந்தது.
சுக்கிரன், ராகு சேர்க்கை
பொதுவாக பாமரர் ஒருவர் ஜாதகத்தில் சுக்கிரன் உச்சம் பெற்றுவிட்டால் அவர் செயலில் இல்லை என்றாலும் பேச்சிலாவது காமம் தெரிக்கும். அதிலும் ராகுவோடு சேர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம் அவரின் நடத்தையை பற்றி. ஆனால் நமது தெய்வத்தின் ஜாதகத்திலும் சுக்கிரன் உச்சம் பெற்று ராகுவுடன் இணைந்து நிற்கிறது. ஆனால் இந்த தெய்வத்திற்க்கோ காம சிந்தனை என்பது கிஞ்சித்தும் கிடையாது என்பது அனைவரும் அறிவர். அதுமட்டுமல்லாது அனைத்து பெண்களையும் அன்னை காமாக்ஷியின் ஸ்வரூபமாகத்தான் பார்த்தது நமது தெய்வம்.
தெய்வத்தின் ஜாதகம்
மேலும் சுக்கிரன் உச்சம் பெற்றவர்கள் வாழ்கையின் ஏதேனும் ஒரு கால கட்டத்திலாவது சுகங்களை அனுபவிப்பர். ஆனால் நமது தெய்வம் சுகம் என்பதையே அறியாதவர் என்பதுதான் உண்மை. இதையெல்லாம் பார்த்தபின் ஜோதிடம் ஜாதகமெல்லாம் பாமரர்களுக்குதான். நமது தெய்வம் ஜோதிடத்திற்க்கும் ஜாதகத்திற்க்கும் அப்பார்பட்டது என புரிந்துக்கொள்ள முடிந்தது.
துயரம் விலகும்
ஜாதகத்தில் எவ்வளவு கடுமையான தோஷங்கள் இருந்தாலும் ஜோதிடத்திற்கெல்லாம் அப்பாற்பட்ட பெரியாளிடம் சரணடைந்துவிட்டால் மலைப்போல் வந்த துயரமும் பனிப்போல் விலகிவிடும். இன்று பெரியவாளின் ஜென்ம நஷத்திர நாளில் உம்மாச்சி தாத்தாவின் பாதம் சரணடைவோம். ஹர ஹர சங்கர! ஜெய ஜெய சங்கர!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக