திங்கள், 5 ஜூன், 2017

முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி



முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி

முருகப்பெருமானின் அறுபடை வீடு களுள் மூன்றாவது திருத்தலம்- ‘ஆவினன் குடி’யாகிய பழநி. இந்தத் தலம், உடலின் உயிர்நாடியான மணிபூரகத்தை (இதயம்) குறிப்பது என்பர். குரா மரத்தடியில் முருகன், குரா வடிவேலனாக அகத்தியருக்கு தமிழை உபதேசித்த தலம் இது.
திண்டுக்கல்லில் இருந்து சுமார் 55 கி.மீ. தூரத்திலும், மதுரையில் இருந்து 115 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது பழநி.
வையாபுரி’ என்றும் பழநிக்கு ஒரு பெயர் உண்டு.
பழநியில் மலைக்கோயில் தவிர ஆவினன்குடி கோயில், பெருவுடையார்- பெரியநாயகி கோயில், மாரியம்மன், அங்காளம்மன், படிப்பாறைக் காளியம் மன் ஆகிய அம்மன் கோயில்களுடன், விநாயகர் கோயில்கள் ஐந்து மற்றும் வேணுகோபாலர், லட்சுமி நாராயணர், சங்கிலி பரமேஸ்வரர், அகோபில வரத ராஜ பெருமாள் ஆகிய கோயில்களும் உள்ளன.
கொடைக்கானல் மலைக்கும் மேற்கு மலைத் தொடர்ச்சியில் இடம்பெற்றுள்ள வராக மலைக்கும் நடுவே அமைந்துள்ளது பழநி மலை. இது கடல் மட் டத்தில் இருந்து சுமார் 1,500 அடி உயரம் கொண்டது. பூமி மட்டத்திலிருந்து உயரம் 450 அடி.
‘அதிசயம் அநேகமுற்ற பழநி மலை’ என்று சிறப்பிக்கிறார் அருணகிரியார். இவர், பழநித் திருத்தலம் பற்றி திருப்புகழில் 90 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார். அவற்றில்
பழநியை ‘ஆவினன்குடி’ என்றே குறிப்பிடுகிறார். மேலும் அவர், பழநி முருகனை ஞானமூர்த்தி, ஞானநாதா, ஞானாசிரியன், ஞானசொரூபன் என்றெல்லாம் அழைத்து மகிழ்கிறார். அருணகிரிநாதர் பழநி தண்டாயுதபாணியிடமிருந்து ஜப மாலை பெற்றார். இதை, ‘ஜப மாலை தந்த சற்குருநாதா திரு ஆவினன்குடி பெருமாளே’ என்ற திருப்புகழ் சொற்றொடரில் இருந்து அறியலாம்.
மலையடிவாரத்தில் மலையைச் சுற்றியுள்ள நகர்- ‘ஆவினன்குடி’ என்றும், மலை- பழநி மலை என்றும் அழைக்கப் பட்டன. தற்போது நகரம் மற்றும் மலையையும் சேர்த்தே ‘பழநி’ என்கின்றனர். ஒரு தலத்தில் இரு ஆலயங்கள் கொண்ட படை வீடு பழநி மட்டுமே.
அடிவாரக் கோயிலில் உள்ள முருகப் பெருமானை நக்கீரர் பாடியுள்ளார். இங்கு மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார் முருகன். இதை ‘ஆதிகோயில்’ என்கிறார்கள்.
‘பழனங்கள்’ (வயல்கள்) சூழ்ந்ததால், இந்தத் தலம் ‘பழநி’ எனப்பட்டது. ‘சித்தன் வாழ்வென்று சொல்கிற ஊர் முன் காலத்து ஆவினன்குடி என்று பெயர் பெற்றிருந்தது!’ என்று திருமுருகாற்றுப்படை உரையில், நச்சினார்க்கினியர் குறிப்பிடுவதால், ‘சித்தன் வாழ்வு’ என்ற பெயரிலும் பழநி அழைக்கப்பட்டதாகத் தெரிகிறது.
சேரன் செங்குட்டுவனின் தாத்தா வேளாவிக்கோமான் ஆட்சி செய்த பகுதி பழநி. இவன் வழியில் வந்தவன் வையாவி கோப்பெரும் பேகன். இவன் கடையெழு வள்ளல்களில் ஒருவன். ஆவியர் குல தலைவனான இவனது தலைநகராகத் திகழ்ந்ததால், பழநிக்கு ‘ஆவினன்குடி’ என்ற பெயர் வந்ததாம்.
ஒரு முறை கோபம் கொண்ட திருமால், திருமகளை புறக்கணித்தார். தனது பதியை அடைய திருமகள், இங்கு தவம் இருந்து பலன் பெற்றாள். விஸ்வாமித்திரர்- வசிஷ்டர் ஆகியோருக்கு இடையே நடந்த போரில் விஸ்வாமித்திரரது ஆயுதத்தை வென்றதால் அகம்பாவம் கொண்டது காமதேனு. இதனால் ஏற்பட்ட பாவம் தீர காமதேனு வழிபட்ட தலம் இது. ‘உயிர்கள் வாழ்வது என்னால்தான்!’ என்று கர்வம் கொண்ட சூரிய பகவானை சபித்தார் சிவபெருமான். சாபம் தீர இங்கு வந்து பூஜித்தான் சூரியன்.
சிவபெருமானுக்குத் தெரியாமல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் ஈசனிடம் தண்டனை பெற்ற அக்னியும், வாயு பகவானும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். இப்படி திரு= லட்சுமி, ஆ= காமதேனு, இனன்= சூரியன், கு= பூமி, டி= அக்கினி- வாயுபகவான் ஆகியோர் தவமிருந்து பலன் பெற்றதால் பழநி திருஆவினன்குடி என்று ஆனது.
அகத்தியர், ஒளவையார், நக்கீரர், சிகண்டி முனிவர், அருணகிரிநாதர், கச்சியப்பர், பொய்யாமொழிப் புலவர், முருகம்மை, மாம்பழக் கவிச்சிங்க நாவலர், பகழிக் கூத்தர், சாது சாமிகள், பாம்பன் சாமிகள், வள்ளிமலை சுவாமிகள் உட்பட நூற்றுக்கு மேற்பட்டோர் பாடிய திருத்தலம் இது.
ஒரு முறை நாரதரை வாழ்த்தி அபூர்வ மாங்கனி ஒன்றைக் கொடுத்தார் பிரம்மன். அந்த ஞானப் பழத்துடன் ஈசனை தரிசிக்கச் சென்றார் நாரதர். அதை தம் மைந்தர்களுக்குத் தர விரும்பினார் ஈசன். ஆனால், பழத்தை ஒருவருக்கே வழங்க முடியும். இதற்காக கணபதிக்கும் கந்தனுக்கும் போட்டி வைக்கப்பட்டது. ‘யார் முதலில் உலகை வலம் வருகிறார்களோ அவருக்கே கனி!’’ என்றார் சிவ பெருமான்.
‘பெற்றோரே உலகம்’ என்று தாய்- தந்தையரை வலம் வந்து விநாயகர் பழத்தைப் பெற்றுக் கொண்டார். மயில் வாகனத்தில் பயணித்து தாமதமாக வந்து சேர்ந்த முருகன், பழம் கிடைக்காததால் கோபித்துக் கொண்டு, கோவணத்துடன் தண்டாயுதபாணியாக தென்திசையில் வந்து சேர்ந்த இடம் சிவகிரி. சிவபெருமானும் உமையவளும் அங்கு வந்து, ‘அடியாருக்கு ஞானம் அருளும் ஞானப்பழம் நீ’ என்று முருகனை சமாதானப் படுத்தினர். அதனால் முருகன் வசிக்கும் மலை, ‘பழம் நீ’ என்று ஆகி, பிறகு ‘பழநி’ என்று மருவியது என்பர்.
பழநியின் கிரிவலப் பாதை சுமார் இரண்டேகால் கி.மீ. தூரம் உள்ளது. கான்கிரீட் தளம் அமைக்கப்பட் டுள்ளது. மலையின் நான்கு திசைகளிலும் மயில் மண்டபமும், அவற்றில் கல்லால் ஆன பெரிய மயில் உருவங்களும் உள்ளன.
கிரிவலப் பாதையில் மதுரைவீரன் சுவாமி, ஐம்முக விநாயகர் கோயில், சந்நியாசியப்பன் கோயில், அழகு நாச்சியப்பன் ஆலயம் ஆகியன உள்ளன. தவிர நந்தவனங்கள், திருக்கோயிலின் ஏழை மாணவர் இல்லம், நாகஸ்வர- தவில் இசைப்பள்ளி, சண்முக விலாசம் (அன்னதான சமாஜம்), நந்தனார் விடுதி ஆகியவையும் இடம்பெற்றுள்ளன.
697 படிகள் கொண்டது பழநி மலை. மலைக்கோயிலை அடைய நான்கு தடங்கள் உண்டு. அவை: படிக்கட்டுப் பாதை, யானைப் பாதை, இழுவை ரயில் பாதை மற்றும் ரோப் கார் பாதை.
யானைப் பாதையின் தொடக்கத்தில் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் உள்ளது. முருகனின் காவல் தெய்வமான இவரை வணங்கி விட்டே பக்தர்கள் மலையேறத் தொடங்குவர். வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் இவரை வணங்கிச் சிறப்பித்துள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக பழநி ஆலயத்தில் இழுவை ரயில் அறிமுகமானது. ஆண்டு 1966. இதற்குக் காரணமானவர் காமராஜரது அமைச் சரவையில் அமைச்சராக இருந்த பக்தவச்சலம். இரண்டாம் வழித்தடம் 1981-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் இரு பெட்டிகளில் 32 பேர் பயணிக்கலாம். மலைக்குச் செல்ல சுமார் 8 நிமிடங்கள் ஆகின்றன. இந்த இழுவை ரயில்கள் காலை 5 முதல் இரவு 9 மணி வரை இயங்குகின்றன. விசேஷ காலங்களில் காலை 4 மணி முதல் இயங்கும்.
முருகனுக்கு அபிஷேகம் செய்ய நீர் மற்றும் பூஜைப் பொருட்கள் எடுத்து வருவதற்காக ‘திரு மஞ்சனப் பாதை’ என்பது மலையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை.
பழநி அடிவாரத்தில் உள்ள தீர்த்தங்கள் மூன்று. அவை: வையாபுரிக் குளம், சண்முக நதி, சரவணப் பொய்கை. சரவணப் பொய்கை ஒரு காலத்தில் கல் கிணறாக இருந்ததாம். சட்டிசாமி எனும் துறவி பிச்சை எடுத்த பணத்தால் அதைப் புதுப்பித்தாராம்.
புனித நீராடியபின் பாத விநாயகர், குழந்தை வேலாயுத சுவாமி, பெரிய நாயகி அம்மன்- பெரு வுடையார் கோயில்கள் மற்றும் கிரிவலப் பாதையில் உள்ள கோயில்களை வழிபட்ட பின்னர் மலை ஏறி தண்டாயுதபாணி சுவாமியை வணங்க வேண்டும் என்பது மரபு.
மலையடிவாரத்தில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் மண்டபத்தில் சூரசம்ஹாரம், சுப்ரமண்யர்- தேவசேனை திருமணக் காட்சிகள், காளத்திநாதருக்கு கண்களை அப்பும் கண்ணப்பன் மற்றும் வீரபாகு தேவர் ஆகியோரது சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன.
இதன் அருகே உள்ள மயில் மண்ட பத்திலிருந்து படியேற வேண்டும். வழியில் களைப்பாற மண்டபங்களும், விநாயகர், வள்ளி, இடும்பன் ஆகியோரது சந்நிதிகளும் உள்ளன. யானைப் பாதையில் தல வரலாற்றுச் சிற்பங்களுடன் வள்ளியைச் சோதிக்க வேடனாக வந்த முருகனின் திருவுருவங்களும், வள்ளியம்மன் சுனையும் உள்ளன.
மயில் மண்டபத்தில் கூத்தாடும் பிள்ளையாரை வணங்கி தொட்டியில் சிதறு தேங்காய் அடிக்கலாம். தீப ஸ்தம்பம் மற்றும் வேல் கொடியுடன் ராஜ கோபுரம் தொழுது, தல விநாயகரின் முன் தோப்புக்கரணமிட்டு விட்டுச் செல்ல வேண்டும்.
மலைக் கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. ராஜ கோபுரமும், இரு புறமும் நாயக்கர் மண்டபங்களும், 42 கல் தூண்கள் கொண்ட பாரவேல் மண்டபமும் உள்ளன. கருவறை மீது தங்க விமானம் காட்சியளிக்கிறது.
கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் பிரதான கோயிலை, சேர மன்னன் சேரமான் பெருமாள் கட்டியதுடன், தினசரி பூஜை மற்றும் விழாக்கள் கொண்டாட மானியங்களும் அளித்துள்ளான். முருகன் சந்நிதி தெற்குச் சுவரின் வெளிப் புறம் குதிரை மீது கம்பீரமாகக் காட்சியளிக்கும் சேரமானின் சிற்பம் இடம்பெற்றுள்ளது.
பழநி திருக்கோயிலில் இரண்டு பிராகாரங்கள் உள்ளன. மலைப் பாதை வழியாக வருவோர், 2- வது பிராகாரத்தை அடைவர். இங்கிருந்து கோயிலுக்குச் செல்லும் வழியில் சிற்ப வேலைப்பாடுகளுடன் கூடிய மணிக்கட்டு மண்டபம் உள்ளது. இங்கு வல்லப விநாயகர் சந்நிதி, கொடிமரம், அக்னி குண்டம், தங்க ரத மண்டபம் ஆகியவை உள்ளன.
முதல் பிராகாரம், பாரவேல் மண்டபத்திலிருந்து கோயிலைச் சுற்றிச் செல்கிறது. இதன் வட பாகத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர், நவவீரர் ஆகியோர் சந்நிதி. மலைக்கொழுந்தீஸ்வரர் சந்நிதியின் முன்புறத் தூண் இரண்டும் ரத வடிவில் அமைந்துள்ளன.
இதன் தென்கிழக்கில் போகர் சந்நிதி உள்ளது. இங்கு அவரால் பூஜிக்கப்பட்ட புவனேஸ்வரியம்மன் மற்றும் மரகத லிங்கம் ஆகியவை உள்ளன. இங்குள்ள சுரங்கப் பாதை, ஸ்ரீதண்டாயுதபாணியின் திருவடி வரை செல்கிறது என்றும், போகர் இறுதியாக இதில் நுழைந்து தண்டாயுதபாணியின் திருவடியில் ஐக்கியமானார் என்றும் கூறப்படுகிறது.
நவரங்க மண்டபம் அருகே உலோகத்தாலான சேவற்கொடி உள்ளது. இதன் மீது ஒரு சேவல் அடிக்கடி வந்து அமர்ந்து கூவுவது பழநியின் சிறப்புகளுள் ஒன்று. இதன் நிழலில் அமர்ந்து தியானிப்பது பக்தர்களது வழக்கம். இந்த மண்டபத்தில் சண்முகருக்கும், ஞான தண்டாயுதபாணியின் உற்சவ மூர்த்தியான சின்னக் குமாரருக்கும் தனித் தனிச் சந்நிதிகள் உள்ளன. இதை அடுத்து அர்த்த மண்டபம்; கர்ப்பக்கிரகம். கர்ப்பக் கிரகச் சுவர்களில் கல்வெட்டுகள் உள்ளன.
பழநியாண்டவர் முன்பாக ‘மாக்கல்’ எனப்படும் பெரிய கல் ஒன்று உள்ளது. இது, பள்ளியறைக்கு எழுந்தருளும் முருகனின் திருவடியை (ஸ்ரீபாதம்) தாங்கும் மேடையாகக் கருதப்படுகிறது.
கருவறையின் கிழக்குப் பகுதி மாடத்தில் ஊது வத்தி தூபம் காட்டி, இஸ்லாமியரும் ‘பழநி பாபா’ என ஓதி வழிபடுகின்றனர்.
காலையில் முருகனை ஆண்டிக் கோலத்தில் தரிசிப்போர், மாலையில் ராஜ அலங்காரத்தையும் தரிசிக்க வேண்டும் என்பது ஐதீகம். இதனால் குடும்பத்தில் சுப நிகழ்வு நடக்கும்.
இங்குள்ள மற்றொரு சிறப்பு பிரம்மன் விக்கிரகம். இந்த பிரம்மன் அம்பு- வில்லோடு வேடுவ வடிவத்தில் காணப்படுகிறார்.
ஒரு முறை பிரம்மா, தானே முதன்மையானவர் என ஆணவம் கொண்டார். இதனால் சினம் கொண்ட ஸ்ரீருத்ரன், வேடுவனாக பிறக்கும்படி பிரம் மனுக்கு சாபமிட்டார். தன் தந்தை பிரம்மனுக்கு சாப விமோசனம் தரும்படி முருகனை பிரார்த்தித்துக் கொண்டார் நாரதர். பிரம்மன் தவறை உணர்ந்து இங்கு வந்து முருகனை வழிபட்டு சாப நிவர்த்தி அடைந்தார்.
திருநள்ளாறு சனி பகவானைப் போன்றே இங்குள்ள சனீஸ்வர பகவானும் சிறப்பானவர். திருவாவினன்குடி வந்து தன்னை வழிபட்டால், சனி யால் ஏற்படும் தொல்லைகள் தீரும் என்று நிடத நாட்டு அரசன் நித்தியநாதனுக்கு வரம் தந்தார் முருகப் பெருமான். எனவே, சனி தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது பழநி. அங்காரகனான செவ்வாயும், பழநி முருகனை வழிபட்டு நலம் பெற்றான் என்கிறது ஸ்தல புராணம் .
தண்டாயுதபாணிக்கு கடம்ப மரமும் திரு ஆவினன்குடி முருகனுக்கு நெல்லி மரமும் ஸ்தல விருட்சங்கள்.
மலைக்கோயில் கருவறையில் வலக் கையில் தண்டாயுதம் ஏந்தி இடக் கையை இடையில் அமர்த்தி, ஞான தண்டாயுதபாணியாக மேற்கு நோக்கி கோவணக் கோலத்தில் காட்சி தருகிறார் முருகன். ஸ்கந்த வடிவமான இது, போகர் எனும் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது. பாதரசம், மதார்சிஸ், தானகம், லிங்கம், கந்தகம், வீரம், பூரம், வெள்ளை, மனோசிலை ஆகியவை நவ பாஷாணங்கள்.
திருமுருக பாஷாணம், கார்முகில் பாஷாணம், இந்திர கோப பாஷாணம், குங்கும பாஷாணம், இலவண பாஷாணம், பவளப் புற்று பாஷாணம், கௌரி பாஷாணம், ரத்த பாஷாணம், அஞ்சன பாஷாணம் ஆகியவையே நவபாஷாணங்கள் என்றும் கூறுவதுண்டு.
சாதி லிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரச கற்பூரம், வெள்ளை பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டி பாஷாணம் ஆகியவையும் நவபாஷாணங்கள் எனப்படுகின்றன.
நவபாஷாணக் கலவையைக் கல்லாக்குவது, சித்து வேலை. இதை அறிந்தவர் அகத்தியர். அவரிடம் இருந்து கற்றவர் போகர்
இந்த விக்கிரகம் காற்று, நீர், எண்ணெய், தேன், நெய் ஆகியவற்றால் கரையாது. நெருப்பால் பாதிப் படையாது. தீராத நோய்களையும் தீர்த்து ஆயுளை அதிகரிக்கச் செய்யும் வல்லமை நவபாஷாணத்துக்கு உண்டு.
போகரின் சீடர் புலிப்பாணிச் சித்தரும், அவரது வழிவந்த பண்டாரப் பெருமக்களும் தண்டாயுத பாணியை பராமரித்து வந்தனர்.
போகரின் உபாசனா தெய்வமான புவனேஸ்வரி யின் அறிவுரைப்படி போகர், பழநி மலையில் தவம் இருந்தார். அவரது தவத்துக்கு இரங்கிய பழநி ஆண்டவர், தன்னை பிரதிஷ்டை செய்யும் முறை மற்றும் வழிபாடுகள் குறித்துச் சொல்லி மறைந்தார். அதன்படி தண்டபாணி வடிவை உருவாக்கி ஆகம விதிப்படி கர்ப்பக்கிரகத்துக்குள் பிரதிஷ்டை செய்தார் போகர்.
போகருக்கு பழநி கோயிலில் தனிச் சந்நிதி உள்ளது. போகரின் சீடர் புலிப் பாணி முனிவருக்கு ஒரு மடம் உள்ளது. இவர் சந்ததியினருக்கு கோயில் பூஜை செய்யும் உரிமையும், விஜய தசமி அன்று அம்பு போடும் உரிமையும் உள்ளது.
ஆலயத்தின் தென்மேற்கு மூலையில் போகரது சமாதி உள்ளது. அதில் அவர் வழிபட்டதாகக் கருதப்படும் புவனேஸ்வரியின் திருவுருவமும், மந்திரச் சக்கரங்களும், மரகத லிங்கமும் உள்ளன. இவற்றுக்கு தினசரி வழிபாடுகள் நடைபெறுகின்றன.
நவபாஷாணத்தினாலான மூலவர் விக்கிரகத்தை அபிஷேகிக்கும்போது மேலிருந்து கீழாகவே தேய்ப்பர். ஏனெனில், இந்த விக்கிரகத்தின் மேற்பரப்பு கீழ்நோக்கிய நிலையில் செதில் செதிலாக உள்ளதே காரணம். மேல் நோக்கித் தேய்த்தால் கைகள் ரணமாகும்.
தினமும் இரவில் முருகப்பெருமான் மேனி முழுவதும் சந்தனம் பூசுகின்றனர். மறுநாள் காலையில் இது பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சந்தனத்தைத் தொடர்ந்து 48 நாட்கள் அருந்தி வந்தால், பிணிகள் நீங்கும் என்பது ஐதீகம். இவ்வாறு இரவில் திருக்காப்பிட்ட பின், மறு நாள் காலையில் பார்க்கும்போது இறைவனின் மேனி வியர்த்திருக்கும். அதை துணியால் ஒற்றி எடுத்து தீர்த்தமாக வழங்குகின்றனர்.

தண்டாயுதபாணி, மொட்டை அடித்த ஆண்டி அல்ல. அபிஷேகத்தின்போது கவனித்தால், அவர் சடைமுடியுடன் காட்சி தருவதைக் காணலாம்.
காலை பூஜையின்போது தண்டாயுதபாணி ஈஸ்வரனை வழிபடுவதாக ஐதீகம். அப்போது காவி உடையில் வைதீக கோலத்தில் தண்டாயுதபாணியை அலங்கரிப்பார்கள். காலச் சந்தியில் குழந்தை வடிவ திருக்கோலம். உச்சி காலத்தில் கிரீடத்தோடு கூடிய வைதீக அலங்காரம். சாயரட்சையில் ராஜ அலங்காரம். ராக்காலத்தில் முதிய வடிவம்.
மூல விக்கிரகத்துக்குச் செய்யப்படும் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறு அபிஷேகம் சிறப்பான ஒன்று. ஒவ்வொரு அபிஷேகத்துக்குப் பிறகும் தண்டாயுதபாணி வெவ்வேறு அலங்காரங்களில் காட்சி தருவார். அவை: ராஜ அலங்காரம், வேடன், சந்தனக் காப்பு, பாலசுப்பிரமணியர், விபூதி அதாவது ஆண்டிக் கோலம். ஒரு காலத்தில் செய்து வந்த பெண் அலங்காரம் தற்போது செய்யப்படுவது இல்லை.
மூலவருக்கு அருகில் சிறிய பேழை ஒன்று உள்ளது. அதில் சாளக்கிராம ஸ்படிக லிங்க ரூபத்தில் சிவபெருமானும், உமாதேவியும் இருக்கின்றனர். இவர்களை தண்டாயுத பாணி பூஜிப்பதாக ஐதீகம்.
இங்கு பள்ளியறை உற்சவம் விசேஷம். அப்போது வெள்ளிப் பல்லக்கு ஒன்று சந்நிதிக்கு வருகிறது. ஓதுவார்களும், கட்டியக் காரர்களும் இறைவனின் புகழ் பாட மூலஸ்தானத்திலிருந்து சுவாமி பாதுகைகள் பல்லக்கில் வைக்கப்பட்டு ஊர்வலமாக வருகிறது. (வெள்ளி, திங்கள் மற்றும் கிருத்திகை ஆகிய நாட்களில் தங்கப் பல்லக்கு வரும்) அப்போது, கொப்பரைத் தேங்காய்- ஏலக்காய்- சர்க்கரை கலந்த பிரசாதம் வழங்கப்படுகிறது. பிறகு பல்லக்கு பள்ளியறைக்கு வந்து சேரும். அங்கு பாதுகைகள், பல்லக்கில் இருந்து தொட்டில் போன்ற மஞ்சத்துக்கு மாற்றப்படுகின்றன. கடைசியாக அன்றைய வரவு-செலவு கணக்குகளை படித்துக் காட்டுவர். இறுதியில் நடை சாத்தப்படுகிறது.
மூலவர் சந்நிதி வழக்கமாக காலை 6 முதல் இரவு 8 மணி வரையிலும், கார்த்திகை மற்றும் திரு விழா நாட்களில் காலை 4 முதல் இரவு ராக்கால பூஜை முடியும் வரையில் திறந்திருக்கும். இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன.
பழநியில் பக்தர்களது காவடி பிரார்த்தனை பிரசித் தம். கயிலாயத்தில் இருந்த சிவகிரி, சக்திகிரி ஆகிய மலைகளை அகத்தியருக்குத் தந்தருளினார் இறைவன். அகத்தியரின் கட்டளைப்படி இந்த மலைகளை இடும்பன் என்பவன் பொதிகைக்குத் தூக்கிச் சென் றான். ஓய்வுக்காக ஓரிடத்தில் அவற்றை இறக்கி வைத்து விட்டு மீண்டும் எடுக்க முற்பட்டபோது, முடியவில்லை. காரணம் சிவகிரி மீது ஏறி நின்ற ஒரு சிறுவன். அவனுடன் போரிட்டு மாண்டான் இடும்பன். சிறுவனே முருகப் பெருமான் என்று உணர்ந்த இடும்பனின் மனைவி தன் கணவனை உயிர்ப்பிக்குமாறு முருகனிடம் வேண்டினாள்.
முருகன் அவ்வாறே அருளியதுடன் இடும்பனை தன் காவல் தெய்வமாக்கினார். அவனது விருப்பத்தின் படி பழநிக்குக் காவடி தூக்கி வரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக வரமும் தந்தார். திருவிழா காலங்களில் பக்தர்கள்- தங்கக் காவடி, வெள்ளிக் காவடி, பால் காவடி, சந்தனக் காவடி உட்பட பல்வேறு வகையான காவடிகளை எடுத்து வந்து ஸ்ரீதண்டாயுதபாணி சுவாமிக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.
பழநியின் தனிச்சிறப்பு பஞ்சாமிர்தம். மலை வாழைப்பழம், நெய், தேன், நாட்டுச் சர்க்கரை, கற்கண்டு ஆகியவற்றின் கலவை இது. இதை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்யும்போது பாஷாண சக்தியால் மருத்துவ குணம் பெறுகிறது.
பழநி மலையில் ஆசிமுகத் தீர்த்தம், தேவ தீர்த்தம், அமுத தீர்த்தம், ஞான தீர்த்தம், பிரம்ம தீர்த் தம் ஆகிய புண்ணிய தீர்த்தங்கள் உள்ளன.
கொடைக்கானல்- குறிஞ்சி ஆண்டவர் கோயி லும், பழநி கோயிலும் நேர்க் கோட்டில் அமைந்து உள்ளன. குறிஞ்சி ஆண்டவர் கோயிலில் இருந்து பழநி மலையைக் காண முடியும்!
15- ஆம் நூற்றாண்டில் மதுரையை திருமலை நாயக்கர் ஆட்சி செய்த காலம். அப்போது ராமப்ப ஐயர் என்பவர் தளவாயாக இருந்தார். இவர் பழநி கோயிலுக்கு வந்தபோது, புலிப்பாணியின் வழி வந்த பாத்திரசாமி என்பவர் அர்ச்சகராக இருந்தார். ஐயர் அல்லாத அவரிடம் இருந்து பிரசாதம் வாங்க வேண்டாம் எனக் கருதி, கொடுமுடியிலிருந்து சரசுவதி ஐயரை குருக்களாகவும், அவருக்குத் துணையாக மருதூர் தம்பா ஐயன், நாட்டார் அப்பன் கோயில் அகிலாண்ட ஐயன் ஆகியோரை பரிசாரகர் மற்றும் நம்பிமார்களாகவும் நியமித்தார் தளவாய் ராமப்ப ஐயர். இந்த தகவல்களை செப்பேட்டில் குறித்து, ராமப்ப ஐயர் செப்பேடு கொடுத்த காலம் கி.பி. 1477-ஆம் ஆண்டு (தமிழ் ஸ்ரீமுக வருஷம் தை மாதம் 15-ஆம் தேதி திங்கட்கிழமை, ரோஹிணி நட்சத்திரம்).
1960- ஆம் ஆண்டு கருவறைக்குத் தங்க விமானம் அமைக்கப்பட்டது.
இங்கு வெள்ளி மற்றும் தங்க ரதங்கள் உலா வருவது தனிச் சிறப்பு. கார்த்திகை, விசாகம், சஷ்டி, மாதப் பிறப்பு, அமாவாசை ஆகிய நாட்களிலும், விசேஷ விழாக்களிலும் மலை மீது உற்சவர் சின்னக் குமாரர் பவனி வருகிறார்.
பழநியின் பங்குனி உத்திர விழாவை ‘நாட்டுப் புறத் திருவிழா’ என்பர். வருடம்தோறும் சூலமங்கலம் சகோதரிகளது கச்சேரி அன்று நடை பெறும். ‘பழநி எனும் ஊரிலே, பவனி வந்தான் தேரிலே’ என்ற பாட்டை அவர்கள் பாடுவதற்கும் முருகனின் தங்கத் தேர் அங்கு வருவதற்கும் சரியாக இருக்குமாம்!
தமிழகத்தில் முதன் முதலாக பழநி தண்டாயுத பாணி திருக்கோயிலில்தான் முருகேச முதலியார் என்ற பக்தரின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தங்க ரதம் ஓடத் துவங்கியது.
தங்க ரதம் இழுக்க, மலைக்கோயில் அலு வலகத்தில் பணம் செலுத்தி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கான கட்ட ணம் 2,000 ரூபாய். 8.4.07 தேதியன்று அதிகபட்சமாக 162 பேர் தங்க ரதம் இழுத்துள்ளனர்.
கொடைக்கானல் மலைவாழ் மக்கள் புதிய செருப்பு தைத்து, தலையில் சுமந்தபடி பாத யாத்திரையாகப் பழநி மலைக்கு வந்து முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கின்றனர். அன்றிரவு அவற்றை அணிந்து கொண்டு பழநி முருகன் கொடைக்கானல் மலைப் பகுதிக்கு வேட்டையாட வருவதாக ஐதீகம். மறு நாள் காலையில் காட்டுப் பகுதியில் அந்தச் செருப்புகள் காணப்படுமாம்.
முடி காணிக்கை செலுத்த திருப்பதிக்கு அடுத்தபடியாக பக்தர்கள் அதிகமாக வரும் இடம் பழநி என்கிறார்கள்.
அபிஷேகத்தின்போது மூலவருக்கு அணிவிக்கப் படும் கோவணத்தை ஏலம் விடுகிறார்கள். இதை வீட்டு பூஜையறையில் வைத்து வழிபட்டால் நன்மை கள் சேரும் என்பது நம்பிக்கை.
கேரள பக்தர்கள் பலர், தங்கள் குழந்தைகளின் சோறூட்டு விழாவை இங்கு நிறைவேற்றுகின்றனர்.
இங்கு, நாளன்றுக்கு குறைந்தபட்சம் 100 அபிஷேகங்களும், அதிகபட்சமாக சுமார் 1000 அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.
தைப்பூசம், பங்குனி உத்திரம், அக்னி நட்சத்திர திரு விழா, விசாக விழா, கந்த சஷ்டி விழா ஆகியவை இங்கு நடைபெறும் முக்கியத் திருவிழாக்கள்.
பங்குனி உத்திரத் திருவிழாவின்போது பத்து நாள் உற்சவத்தில் முருகப் பெருமான், வள்ளி- தெய்வானையுடன் பற்பல வாகனங்களில் கிரிவலம் வருவார்.
கந்தசஷ்டியின்போது சூரபத்மனை வதம் செய்வதற்காக மலையிலிருந்து கீழே இறங்கி வருவார் முருகப்பெருமான். அவர், மலையின் நான்கு புறங்களிலும் கஜமுகாசுரன், தாரகன், சிங்கமுகன், சூரபத்மன் ஆகியோரை வதம் செய்து வெற்றி வீரராக கோயிலுக்குத் திரும்புவார்.
பத்து நாள் நடைபெறும் விசாகப் பெருவிழாவின் ஏழாம் நாளன்று திருத்தேர் வடம் பிடிப்பார்கள்.
தைப்பூசத் திருவிழாவின் 10-ஆம் நாள் மண்டகப் படியாக பெரியநாயகி அம்மன் கோயிலுக்கு அருகில் உள்ள தெப்பக்குளத்தில் பழநி முருகன், வள்ளி- தெய்வானையுடன் தெப்பத்தேரில் மும்முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
தைப்பூச விழாவின்போது நடைபெறும், முருகனுக்கு அம்பாள் வெற்றி வேல் வழங்கும் காட்சி குறிப்பிடத் தக்கது. ஏழாம் நாள் பூச நட்சத்திரத்தன்று தேரோட்டம். அன்று இடும்பன் குளம், சண்முக நதி, பழநி அடிவாரம் ஆகிய இடங்களில் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்துகிறார்கள்.
‘போகர் வடித்த தெய்வச் சிலை முருகப் பெருமான் அல்ல; தண்டாயுத பாணிதான். தேவ ஸ்தானத்தின் பெயரும் ரசீதுகள், விடுதிகள் மற்றும் கோயில் சொத்துகள் எல்லாவற்றிலும் உள்ள பெயர் தண்டாயுதபாணியே என்றும் சொல்கிறார்கள்.
போகரால் செய்யப்பட்ட சிலையில் வேல் இல்லை; தண்டமே உள்ளது. உற்சவர் கையில் வேலும் தண்டமும் மயிலும் இல்லை. அடிவாரத்தில் உள்ள குழந்தை வேலாயுதசாமியே மயில் வாகனத்தில் வேலுடன் காட்சி தருகிறார்.
அரோகரா சொல்லி தண்டாயுதபாணியின் அருள் பெறுவோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக