திருப்பரங்குன்றம்
பராசர க்ஷேத்திரம், ஹரிச்சந்திரன் வழிபட்ட சத்யகிரித் திருத்தலம், முருகப்பெருமானுக்கும் தெய்வானைக்கும் திருமணம் நடைபெற்ற புண்ணியம்பதி, பிரம்மன் வழிபட்ட பிரம்மபுரி, நக்கீரர் வாழ்ந்த ஊர், முருகனுக்குப் பரிகாரம் அருளிய மீனாட்சிசுந்தரபுரம், அறுபடைவீடுகளில் ஒன்று, தேவாரப் பாடல் பெற்ற ஊர், திருப்புகழ்த் தலம்,இறைவனே மலைபோல் தோற்றம் தருவதால், 'பரங்கிரி’... இத்தனைப் பெருமைகளும் நிறைந்த அற்புதமான திருத்தலம், திருப்பரங்குன்றம்!
மதுரைக்குத் தென்மேற்கே சுமார் 9 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்பரங்குன்றம்.
பன்னிய பாடல் ஆடலன் மேய பரங்குன்றை
உன்னிய சிந்தை உடையவர்க்கு இல்லை உறுநோயே...
திருப்பரங்குன்றைத் தொழுதவருக்கு நோயே இல்லை என்று பாடுகிறார் திருஞானசம்பந்தர். இவர் மட்டுமா?! சுந்தரரும், கச்சியப்பரும், வள்ளல்பெருமானும், அருணகிரிநாதரும் போற்றிப் பரவிய தலம் இது!
மதுரையிலிருந்து திருப்பரங்குன்றத்தை வெகு எளிதாக அடையலாம். கோயில் முகப்பு வரை வாகனங்கள் செல்கின்றன. சிவ ஸ்தலமாக இருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இது முருகனுடைய அறுபடைவீட்டுத் தலமாக மட்டுமே தெரிகிறது.
மைம்மலை துழனியும் வடிவும் பெற்றுடைக் கைம்மலை பொழிதரு கடாம்கொள் சாரலின் அம்மலை
- என்று போற்றுகிறார் கச்சியப்ப சிவாச்சார்யர். இந்த மலையின் அடிவாரத்தில் நிறைய யானைகள் நிற்கின்றன; அந்த யானைகளைக் கண்டு வானத்து மேகங்களுக்கு மயக்கம்; தம்முடைய இனமோ இந்த யானைகள் என்று மேகங்கள் வியக்கக்கூடிய அளவு நிறமும் ஒலியும் (பிளிறல்) ஒத்திருக்கிற யானைகளின் மதநீர் பாய்ந்து பாய்ந்து செழித்திருக்குமாம் பரங்குன்றம்!
மலையடிவாரத்திலேயே கோயில் முகப்பு கோலாகலமாகக் காட்சியளிக்கிறது. உண்மையில், கோயிலின் கோபுர வாசலுக்கும் முன்பாக உள்ள மண்டபத்தையும், அதன் முகப்பையும்தாம் நாம் முதலில் எதிர்கொள்கிறோம். முகமண்டபமான இதற்குச் சுந்தரபாண்டியன் மண்டபம் என்றும் பெயருண்டு. வரிசைகட்டிப் புறப்படும் குதிரை வீரர்களும் ஏராளமான சிற்பங்களுமாகக் காட்சியளிக்கிறது, இந்த மண்டப வாயில்.
வாயில் பகுதியிலேயே, விநாயகர் மற்றும் துர்கை. மண்டபத்துக்கு உள்ளேயே பிரதட்சணமாக வருவதற்கு வகை செய்திருக்கின்றனர். கருப்பண்ணசுவாமியை வழிபடுவதற்கான ஏற்பாடு. ஆடல் வல்லானான ஸ்ரீநடராஜர், அருகே தாளம் கொட்டும் சிவகாமி, பார்த்துப் பரவசம்கொள்ளும் பதஞ்சலி- வியாக்ரபாதர், உக்ரதாண்டவர், கஜ சம்ஹார மூர்த்தி, சுப்பிரமணியர், பார்வதி- பரமசிவன் மகாலட்சுமி- மகாவிஷ்ணு மற்றும் முருகன், தெய்வானை ஆகியோரின் தெய்வத் திருமணங்கள், குலச்சிறையார், உக்கிர பாண்டியன், ராணி மங்கம்மாள் என ஏராளமான சிற்பங்கள்!
ஏழு நிலை ராஜகோபுரம். திருப்பரங்குன்றப் புகைப்படங்களில், முகமண்டபத்திலிருந்து எழுந்தது போன்ற தோற்றத்துடன், பின்னால் இருக்கும் மலையுடன் போட்டிபோட்டபடி காட்சி தருவது இந்தக் கோபுரம்தான். இந்தக் கோயிலின் நுணுக்கமான சிறப்பு. ஒவ்வொரு மண்டபமும் முந்தையதைவிட சற்றே உயரத்தில் அமைந்திருப்பதுதான். மலையடிவாரக் கோயில் என்றே குறிப்பிட்டாலும், உண்மையில் மலையடிவாரத்திலிருந்து தொடங்கி, மலையின் உள்பகுதிவரை கோயில் வியாபித்திருக்கிறது.
பிரம்ம தீர்த்தம் (அல்லது பிரம்ம கூபம்). இதை சந்நியாசிக் கிணறு என்கிறார்கள். நோய்களைத் தீர்க்கும் குணமுடைய இந்தத் தீர்த்தத்திலிருந்துதான், முருகப்பெருமானுக்கு அபிஷேக நீர் எடுக்கப்படுகிறது.
மண்டபத்தின் இடதுபுறத்தில் தீர்த்தங்களும், தெப்பக் குளமும் அமைந்திருக்க, வலதுபுறமாக வல்லப கணபதி சந்நிதி. இந்த மண்டபத்திலும் ஏராளமான சிற்பங்கள். அங்கயற்கண்ணி அம்மை, ரதி- மன்மதன், வாராஹி, வியாக்ர பாதர், பதஞ்சலியார், சிவபெருமான், ஆலவாய் அண்ணல் என்று பரம்பொருளின் பற்பல வடிவ வெளிப்பாடுகள் கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளன. அழகான கொடிமரம்; அதற்கு முன்பாக மயில், நந்தி, மூஷிகம் என்று வாகனங்கள். இந்தத் தலத்தின் சிறப்புகளில், இவ்வாறு மூன்று தெய்வங்களுக்கான மூன்று வாகனங்களும் வரிசையாக அமைந்திருப்பதும் ஒன்றாகும்.
திருப்பரங்குன்றம், அடிப்படையில் ஒரு சிவ க்ஷேத்திரம். முருகப்பெருமானே இங்கு வந்து பரிகாரம் தேடினார்.
திரு ப் பரம் குன்றம் என்பது என்ன பெயர்? இந்த மலையை வானிலிருந்து பார்த் தால், சிவலிங்க வடிவில் தோற்றம் தரும். எனவே, பரம்பொருளே மலையானார் என்னும் பொருளில், இது பரங்குன்றம் ஆனது. இறைவனார், பரங்கிரிநாதர் என்று திருநாமம் பெறுகிறார்.
ஒருமுறை, வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் தங்களுக்குள் யார் பலசாலி என்று போட்டி. அப்போது, மேரு மலையைத் தங்களுடைய போட்டிக்களன் ஆக்கினார்கள். வாயுதேவன், தனது பலத்தையெல்லாம் உபயோகித்து மலையைப் பிடுங்கியெறியப் பார்த்தான். ஆதிசேஷன், அதை நகரவிடாமல் பிடித்து அமிழ்த்தி, தான்தான் பலசாலி என்று நிரூபிக்க நினைத்தான். இந்தப் போட்டியில், மேருவின் சில சிகரங்கள் தனியாகப் பிரிந்துவந்து நெடுந் தூரத்தில் விழுந்தன. அப்படிப்பட்ட சிகரங்களில் ஒன்று தான் பரங்குன்றம் ஆயிற்றாம். மேருவோடு இருந்தபோது, இதற்கு 'ஸத்பம்’ என்று பெயராம்.
அரிச்சந்திர மகாராஜா, பொய் சொல்லாமல் சத்தியம் காக்கப் படாதபாடுபட்டார். விஸ்வாமித்திரர் அவரைப் பொய் சொல்லும்படி தூண்டினார்; பல்வேறு சங்கடங்களுக்கும் உள்ளாக்கினார். நாடு இழந்து, மனைவி- மக்களை இழந்து வாடியபோதும், சத்தியத்தை மீறமாட்டேன் என்கிற உறுதியோடு இருந்த அரிச்சந்திரன், இந்தப் பகுதிக்கும் வந்தார். இங்கே பகவானே சத்யமாகவும் மலையாகவும் உறைவதை உணர்ந்து வழிபட்டார். சத்யமாக, உண்மையாக
இறைவன் உறையும் தலம் என்பதால், இந்தத் தலத்துக்கு 'சத்யகிரி’ என்றும், கடவுளுக்கு 'சத்யகிரீஸ்வரர்’ என்றும் பெயர்கள். சத்யத்தின் வழியில் தன்னை ஆற்றுப்படுத்திய ஆண்டவனுக்கு நன்றிக்கடனாக, கோயில் கட்டிப் பிராகாரங்களும் எழுப்பினார் அரிச்சந்திரன் என்கிறது சத்யகிரி மஹாத்மியம்.
ஒருமுறை, திருக்கயிலாயத்தில் பார்வதியாளுக்குப் பிரணவப் பொருளை உபதேசித்துக் கொண்டிருந்தார் சிவனார். அப்போது, தாயின் மடியில் சின்னப் பிள்ளை யாக அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார் முருகன். அன்னை, உபதேசத்தை ஆழ்ந்து கவனித்துக் கொண்டிருக்க, குழந்தையும் அப்பா சொன்னதைக் கேட்டுத் தலையாட்டியதாம். என்னதான் சிவகுமாரன் என்றாலும், குரு வழியாகக் கேட்கவேண்டியதை, நேரடியாகக் கேட்பது என்பது குறுக்கு வழியைப் போன்றது.
எதையும் முறைப்படி செய்யவேண்டும் என்பதே சிவனாரின் ஆணையல்லவா! அதனால், முருகப் பெருமானும் பரிகாரம் தேடினார். பூலோகத்தில் தவம் செய்வதற்கு தக்க இடம் தேடிய முருகன், பரங்குன்றமே பாங்கான இடம் என்று அறிந்து, இங்கு வந்து தவமியற்றினார். அப்போது அவருக்கு அம்மையும் அப்பனும் காட்சி தந்தனர். அவர் களே ஸ்ரீஆவுடைநாயகி- ஸ்ரீபரங்கிரிநாதர் என்றும் வழங்கப்பட்டனர்.
இப்போது, மலைச்சாரலில் ஸ்ரீதடாதகைப் பிராட்டியார் (மீனாட்சியம்மையின் பால திருநாமம்)- ஸ்ரீசுந்தரேஸ்வரர் ஆலயம் அமைந்திருக்கும் இடமே, ஆதியில் முருகனுக்கு அம்மையும் அப்பனும் காட்சிகொடுத்த இடமாகக் கருதப்படுகிறது. கம்பத்தடி மண்டபத்திலிருந்து வலதுபுறமாகச் சென்றால், இந்த ஆலயத்தை அடையலாம். மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்கியபின்னரே, முருகனைத் தரிசிக்கச் செல்லவேண்டும் என்பது மரபு. வெகு அமைதியாக இருக்கிறது ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலய மண்டபம்; சிலர், அமைதியாக அமர்ந்து தியானித்துக் கொண்டிருக்கின்றனர். அருகில் மடப்பள்ளி.
கம்பத்தடி மண்டபத்தின் தென்கிழக்குப் பகுதியில், 100 அடி நீள சுரங்கப் பாதையன்றும் காணப்படுகிறது. திருப்பரங்குன்றத்திலிருந்து மதுரை மீனாட்சியம்மை ஆலயத்துக்கும் ஆதிசொக்கேசர் ஆலயத்துக்கும் சுரங்கப் பாதைகள் இருந்ததாகவும், திருமலை நாயக்கர் வருவதற்காக இவை பயன்பட்டன என்றும் செவிவழிச் செய்திகள் நிலவுகின்றன. கம்பத்தடி மண்டபத்தில் இருந்து படிகளில் ஏறி அடுத்த நிலைக்குச் சென்றால், மகா மண்டபம்.
பெரும்பாலான சந்நிதிகள் வடக்குப் பார்த்து உள்ளன. வலமிருந்து இடமாக, முதலில் கற்பக விநாயகர்; அடுத்து விஷ்ணு துர்கை; அதற்கும் அடுத்து தெய்வானை உடனாய முருகன். கற்பக விநாயகர் சந்நிதிக்கு அருகில், கிழக்கு நோக்கிய சந்நிதியில் சத்யகிரீஸ்வரர்; இவருக்கு நேர் எதிரே, முருகன் சந்நிதிக்கு அருகில், மேற்குப் பார்த்தபடி பெருமாள் சந்நிதி. அவருடைய திருநாமம் ஸ்ரீபவளக் கனிவாய்ப் பெருமாள்;
கருவறைச் சந்நிதிகள் யாவுமே, மலைப் பாறையைக் குடைந்து குடைவரைகளாக அமைக்கப்பட்டுள்ளன. ஸ்ரீசத்யகிரீஸ்வரரான பரங்கிரிநாதர் கிழக்குப் பார்த்தபடி, லிங்க வடிவில் அருள்பாலிக்கிறார்.
ஒரு பக்கத்தில் தட்சிணாமூர்த்தி; இன்னொரு பக்கத்தில் ஸ்ரீநடராஜ சபை. திருப்பரங்குன்ற முருகர் மூலஸ்தானம், வடக்கு நோக்கியது; எனவே, மகாமண்டப தட்சிணா மூர்த்தியும் நடராஜரும் மூலஸ்தானத்தைப் பார்த்த படி உள்ளனர். மகா மண்டபத்தின் வடமேற்குப் பகுதியில் உற்ஸவர் கோயில். சற்றே தள்ளி, ஸ்ரீஆவுடை நாயகியின் திருச்சந்நிதி.
மகாமண்டபத்தில், உக்ரதாண்டவரும் அண்டா பரணரும் (இவர்கள் இருவரும் ஆறுமுகக் கடவுளின் சேனைத் தலைவர்கள்) அனுக்ஞை விநாயகரும் காட்சி தருகின்றனர்.
நின்றசீர்நெடுமாறன், அரசி மங்கையர்க்கரசியார், அமைச்சர் குலச்சிறையார் ஆகியோருடன் இங்கு வந்து வழிபட்ட ஞானசம்பந்தர், குறிஞ்சிப் பண்ணில் பதிகம் பாடினார்.
நீடலர்சோதி வெண்பிறையோடு நிரைகொன்றை
சூடலன் அந்திச் சுடர் எரியேந்திச் சுடுகானில்
ஆடலன் அஞ்சொல் அணி இழையானை ஒருபாகம்
பாடலன் மேய நன்னகர் போலும் பரங்குன்றே
- என ஞானசம்பந்தர் வணங்கிய மூர்த்தி, கம்பீரத்துடன் காட்சி தருகிறார்! பரங்கிரிநாதரைச் சுந்தரரும் பாடினார். 'உனக்கு அடிமையாக இருக்க அஞ்சுகிறோம்’ என்று சிவனைப் பழிப்பதுபோல் புகழ்கிறது சுந்தரரின் பதிகம்!
மஞ்சுண்ட மாலை மதி சூடு சென்னி
மலையான் மடந்தை மணவாள நம்பி
பஞ்சுண்ட அல்குல் பணை மென் முலையா
ளொடு நீரும் ஒன்றாயிருத்தல் ஒழியீர்
நஞ்சுண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த
நலம் ஒன்றறியோம் உங்கை நாகம் அதற்கு
அஞ்சுண்டு படம் அது போக விடீர்
அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
- இந்தப் பதிகத்தின் கடைக்காப்புச் செய்யுளான 11-ஆம் பாடலில், 'முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த’ என்று பாடுவதால், மூவேந்தரும் இங்கு வந்து வழிபட்டதாகத் தெரிகிறது. ஸ்ரீபரங்கிரி நாதருக்குப் பின்புறம் சந்நிதிச் சுவரில், சோமாஸ்கந்த மூர்த்தமாக, அம்மையும் அப்பனும் அருள்திரு மகனும் எழுந்தருளியுள்ளனர்.
நக்கீரர், தாம் அருளிய திருமுருகாற்றுப்படையில்தான், ஆறுபடை வீடுகள் என்ற மரபைத் தொடங்கி வைக்கிறார். முதலாவதாக அவர் குறிப்பிடுவது திருப்பரங்குன்றம். ஆகவே, ஆறுபடை வீடுகளில் முதலாவது எனும் பெருமை இந்தத் தலத்தையே சாரும். சூரசம்ஹாரம் முடிந்ததும், திருப்பரங்குன்றம் வந்து தங்குகிறார் கந்தவேள். தம் குலம் காத்த கந்தனுக்கு நன்றிக்கடனாக என்ன செய்வது என்று எண்ணுகிற தேவேந்திரன், தன் செல்வ மகளை அவருக்கு மண முடிக்க நினைக்கிறான். அவ்வாறு முருகனுக்கும் தெய்வானைக்கும் மணம் நடைபெற்ற இடம், திருப்பரங்குன்றம்.
மங்கல நாணை மணிக்களம் ஆர்த்த நங்கை முடிக்கொர் நறுந்தொடை சூழ்ந்தான் - என ஸ்ரீபிரம்மா எடுத்துக் கொடுக்க, தெய்வானைக்கு முருகப்பெருமான் மங்கல நாண் பூட்டிய அழகைக் கச்சியப்பர் விவரிக்கிறார்! சந்நிதியில் வடக்கு நோக்கியவராக, ஒரு திருமுகம் மற்றும் நான்கு திருக்கரங்களுடன் மாப்பிள்ளை அமர்ந்திருக்க, அவரின் இடப் பக்கம் தெய்வானையும் அமர்ந்திருக்கிறாள். முருகனின் வலப்பக்கத்தில் நாரதர். ஆறுபடை வீடுகளில், இங்கு மட்டுமே முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் அருளுகிறார். திருமணத்தில் பங்கேற்க கயிலையில் இருந்து சிவ-பார்வதி, வைகுந்தத்தில் இருந்து மகாவிஷ்ணு- மகாலட்சுமி, சத்தியலோகத்திலிருந்து பிரம்மன்- சரஸ்வதி ஆகியோர் எழுந்தருளினர். தேவர்களும், வானவர் களும், முசுகுந்தன் உள்ளிட்ட ஞானிகளும் வந்திருந்தனர்.
முருகன் சந்நிதிக்கு அருகில், சிவனாரை எதிரெதிராக நோக்கியபடி... ஸ்ரீமகாலட்சுமியுடன் அருள் பாலிக்கிறார் ஸ்ரீபவளக்கனிவாய்ப் பெருமாள். என்ன இருந்தாலும்... மருகன் முருகனுக்கு மாமனாரும் மாமியாரும் இவர்கள்தாமே! அது எப்படி?!
ஆமாம், திருமாலின் ஆனந்தக் கண்ணீர்த் துளிகளிலிருந்து அவதரித்த சௌந்தரவல்லியும் அமிருதவல்லியும், முருகப் பெருமானை மணமுடிக்க வேண்டி, முறையே நம்பிராஜன் மகளான வள்ளியாகவும், தேவேந்திரன் மகளான தெய்வானையாகவும் வளர்ந்தனர்.
தேவேந்திரனும் இந்திராணியும், சூரபத்மனால் பற்பல கொடுமை களுக்கு உள்ளாகி, தேவலோகத்திலிருந்து விரட்டப்பட்டு ஒளிந்து வாழ்ந்த காலத்தில், செல்வமகளைத் தங்களுடைய ஐராவத யானையிடம் விட்டுச் சென்றனர். யானை (அது, தேவ யானை) வளர்த்த பெண் என்பதால், அவள் தெய்வானை (தெய்வ யானை- தேவ சேனா- தேவ குஞ்சரி) ஆனாள். மருமகனையும் மகளையும் புளகாங்கிதத்துடன் கண்ணுறும் திருமால்- திருமகள் சந்நிதியில், அவர்களுடன் மதங்க முனிவரும் காட்சி தருகிறார் (இந்தப் பெருமாள், மீனாட்சியம்மன் திருமணத்தின்போது, மதுரைக்கு எழுந்தருள்வார்).
முருகக் கடவுளின் திருமணத்தில் பங்கு பெற சகலரும் வந்து தங்கியதால் இந்தத் தலத்துக்கு சிறப்புகள் அதிகம். திருமணம், பங்குனி உத்திரத் திருநாளில் நடைபெற்றது. மூலவரான முருகனுக்கு அபிஷேகம் இல்லை. எண்ணெய்க் காப்பும் புனுகும் சார்த்துகின்றனர். திருமண நாளன்று தங்கக் கவசம். அபிஷேகங்கள் யாவும் அவருடைய ஞானவேலுக்கு மட்டுமே நடைபெறும். அருணகிரிநாதர், இந்த முருகனை மனமுருகப் பாடியுள்ளார்.
கோயில் மகாமண்டபத்தில் முருகனின் சகோதரர்களாகப் போற்றப் படும் நவ வீரர்கள் (வீரபாகு உள்ளிட்ட ஒன்பது வீரர்கள்), பைரவர், சந்திரன், உஷா- பிரத்யுஷா உடனாய சூரியன் ஆகியோர் காட்சி தருகின்றனர்.
வசந்த மண்டபத்தில் உற்ஸவ முருகனின் தரிசனம். ஸ்ரீவிநாயகர், சைவ நால்வர், அறுபத்துமூவர் ஆகியோர் காட்சி தர... கிழக்குப் பார்த்த சந்நிதியில் ஸ்ரீசெந்திலாண்டவர். அருகில் ஸ்ரீசனி பகவான் சந்நிதி. இங்கு சனிக்கு மட்டுமே சந்நிதி. பிற நவக்கிரகங்கள் இல்லை.
சூரசம்ஹாரத்துக்கு முன்பே முருகன் திருப்பரங்குன்றத்துக்கு வந்துள்ளாராம். சூரபத்மனின் இளைய சகோதரனான தாரகனையும், அவனுடைய தோழன் கிரௌஞ்சனையும் வதைத்த பிறகு, தென் திசையில் தேவமலையில் முருகன் தங்கினார். அங்கிருந்து புறப்பட்டு, தெற்கிலுள்ள பல தலங்களுக்கும் வந்தவர், திருவிடைமருதூர், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் வழிபட்டார். பிறகு, வெப்பமான பாலைப் பகுதி வழியே வந்தபோது, அவரை பராசரப் புத்திரர்களான தத்தர், அநந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகியோர் அறிந்து உணர்ந்தனர். திருப்பரங்குன்றில் தவம் செய்து கொண்டிருக்கும் அவர்கள், வட திசையில் சென்று முருகனின் கழலடிகளில் பணிந்தனர். அவர்களுக்கு அருள்வதற்காகப் பரங்குன்றம் அடையும் பெருமான், அங்கிருந்து திருச்செங்கோடு சென்று, பின்னர் செந்திலம்பதியை அடைகிறார். பராசரப் புத்திரர்கள் தவம் செய்ததால், இத்தலம் பராசர க்ஷேத்திரம் எனப்படுகிறது.
சரி, இந்த ஆறு பேரும் ஏன் இங்கு வந்தார்கள்?
கார்த்திகைப் பெண்களிடம் வளரும் குழந்தைகளைக் காண, பார்வதியாள் வந்தாள். குழந்தைகளை அவள் வாரி அணைக்க, அறுவரும் இணைந்து ஆறு முகங்கள் கொண்ட கந்தன் ஆயினர். அன்னை, குழந்தைக்குப் பாலூட்டினார். பாலின் சில துளிகள் சரவணப் பொய்கையில் சிந்தின. அந்தப் பாலைப் பருகிய ஆறு மீன்கள், ஆறு முனிவர்களாகி நின்றனர்.
உண்மையில், பராசரரின் புதல்வர்களான ஆறுபேரும், சிறுவர்களாக ஆற்று நீரில் விளையாடுவது வழக்கம். அப்போது மீன்களைப் பிடித்துத் துன்புறுத்தினர். மகன்கள் செய்யும் கொடுமையைக் கண்ட பராசரர், ஆறுபேரும் மீன்களாக வேண்டும் எனச் சபித்தார். அதன்படி மீன்களாயினர். சாப நிவர்த்தியாக, 'எப்போது குமரக் கடவுளுக்கு அன்னை அளிக்கும் ஞானப்பால் பொய்கையில் சிந்தி, அதை இந்த மீன்கள் பருகுகின்றனவோ, அப்போது சாப விமோசனம் கிடைக்கும்’ என முனிவர் மொழிகிறார். பாலைப் பருகி, சாப விமோசனம் பெற்ற அவர்கள் குமரனின் அருளையும் பெறவேண்டும் என்பதற்காகத் திருப்பரங்குன்றில் தவம் செய்யப் பணித்தாராம் சிவனார்!
திருப்பரங்குன்றத் தீர்த்தங்கள் ஏராளம். சித்த தீர்த்தம், மண்டல தீர்த்தம், கல்யாண தீர்த்தம், பாண்டவர் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், குஷிர தீர்த்தம், லட்சுமி தீர்த்தம், புஷ்ப தீர்த்தம், புத்திர தீர்த்தம், சத்ய தீர்த்தம், பாதாள கங்கை (காசி தீர்த்தம்), சரவணப் பொய்கை என தீர்த்தங்களை விவரிக்கின்றன புராணங்கள்.
லட்சுமி தீர்த்தக் கரையில் உள்ள விநாயகரை வணங்கி, உப்பும் மிளகும் சேர்த்து, தீர்த்தத்தில் போட்டால், தோல் நோய்கள் நீங்கும்.
மலையடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் சரவணப் பொய்கை உள்ளது. முருகனுடைய கைவேலால் உருவாக்கப்பட்டதாக ஐதீகம். அருகில் உள்ள பாறை, பஞ்சாட்சரப் பாறை. பரங்குன்ற மலையில், முருகனது வேல் பாறையைப் பிளந்த அடையாளம் உண்டு. மலைக் குகையில் சிறைப்பட்டிருந்த நக்கீரரைக் காப்பாற்ற, பாறையைப் பெருமான் பிளந்ததாகச் சொல்வர்.
என்ன நடந்தது? சிவனாருடன் நக்கீரர் வாதிட்ட கதை நமக்குத் தெரியும். தமிழ்க் கடைச்சங்கத் தலைமைப் புலவரான அவர், சிவனைத் தவிர வேறு யாரையும் பாடமாட்டேன் என்றிருந்தார். தம்மையும் அவர் பாடவேண்டும் என்கிற ஆசை, முருகனுக்கு! அண்டாபரணன் எனும் வீரனை அழைத்து, 'எப்படியேனும் நக்கீரரிடம் குற்றம் கண்டுபிடித்துச் சிறை செய்து வா’ என்று கட்டளையிட்டார்.
நக்கீரரின் அவதாரத் தலம் பரங்குன்றம். மலையடிவாரச் சரவணப் பொய்கைக் கரையில், அவர் பூஜை செய்து கொண்டிருந் தார்; எதேச்சையாக அரசிலை ஒன்றைக் கிள்ளிவிட்டார்; அது, நீரில்
பாதியும் நிலத்தில் பாதியுமாக விழுந்தது; நீர்ப் பாதி மீனானது; நிலப் பாதி பறவையானது! அவை, ஒன்றையன்று பற்றி இழுத்தன. நக்கீரர், அவற்றைப் பிரிப்பதற்காக, நகத்தால் கீறினார். இரண்டும் உயிர் நீத்தன. இதைப் பார்த்த அண்டாபரணன், கொலைக் குற்றம் என்று சொல்லி, அவரைச் சிறையில் இட்டான். ஏற்கெனவே (முருகன் திருவிளையாடலால்) சிறையில் 999 புலவர்கள் இருந்தனர்.
'ஆயிரம் பேர் சேர்ந்துவிட்டால் பலி’ என்ற நிலையில், அத்தனை பேரும் கீரரை ஏசினர். கந்தனைப் பாடாததால் ஏற்பட்ட குறை என்பதை உணர்ந்த கீரர், எல்லோ ரையும் விடுவிப்பதற்காகத் திருமுருகாற்றுப்படை பாடினார். 317 வரிகள் கொண்ட இந்த நூல், 'முருகு’ என்றே கடவுள் பெயரால் அழைக் கப்படுகிறது. சங்க இலக்கியத்தின் ஒரே பக்திப் பனுவல் இது!
நக்கீரருக்காக முருகன் பிளந்த பாறையைக் கடந்து சென்றால், நக்கீரர் ஆலயம். மலைமீது, பஞ்ச பாண்டவர் படுகைகள் காணப் படுகின்றன. இவை சமணப் படுகைகளாக இருக்கலாம். மலை உச்சியில், சிக்கந்தர் பாவா எனும் இஸ்லாமியரின் சமாதியும் உள்ளது.
சர்வ மத சமரசத்துடன் விளங்கும் பரங்குன்றம் முருகனின் அருள் பெற்று இன்புற்று வாழ்வோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக