வெள்ளி, 15 செப்டம்பர், 2017

நவராத்திரியன்று வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் இந்த பூஜையை செய்திடுங்கள்!!


நவராத்திரியன்று வீட்டில் கொலு வைக்க முடியாதவர்கள் இந்த பூஜையை செய்திடுங்கள்!!

நவ என்றால் ஒன்பது. புரட்டாசி மாதப் பிரதமை துவங்கி நவமி வரை ஒன்பது நாட்கள் கொண்டாடப்படுகிற விழா நவராத்திரி ஆகும். அம்மனுக்குரிய பண்டிகைகளில் நவராத்திரி முதன்மையானது. உலகில் அம்மனின் சக்தியே முதன்மையானது என்பதை வலியுறுத்தும் விதமாக கொண்டாடப்படுகிறது ஒன்பது நாட்களை மூன்று மூன்று நாட்களாக பிரித்து துர்கை அம்மன், மகாலட்சுமி,சரஸ்வதியை வணங்குவார்கள்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளிலும் அம்பிகையின் வடிவமே என்பதை காட்டும் விதமாக கொலு வைக்கப்படுகிறது. வீட்டில் அப்படி கொலு வைக்க முடியாதவர்கள் என்ன செய்யலாம் என்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

கலசம் :
நவராத்திரி தொடங்கும் நாளன்று அதிகாலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு, கொலு வைக்கப்போகிற இடத்தில் கிழக்கு நோக்கி அமர்ந்து பூஜையை தொடங்குவது பாரம்பரியமான வழக்கம்.
மனைப் பலகை ஒன்றை எடுத்துக்கொண்டு அதனை நன்கு கழுவி சுத்தம் செய்து, அதில் கோலம் போட்டுக் கொள்ளுங்கள்.
அதன்மேல் நுனி வாழையிலை ஒன்றை வைத்து, கொஞ்சம் நெல் அல்லது அரிசியைப் பரப்பவும். அதன் மேல் தூய நீர் நிரப்பிய வெள்ளி அல்லது செம்பு கலசத்தை வையுங்கள். சிறிதளவு பச்சை கற்பூரம், சந்தனம், ஓரிரு பூவிதழ்களை அந்த நீரில் இடவும். புதிய சில்லறைக் காசுகள் சிலவற்றையும் அதனுள் போடவும்.

தயாரிப்பு :
செம்பின் வாய்ப் பகுதியில் புதிய மாவிலைகளை செருகி, மஞ்சள் பூசப்பட்ட ஒரு தேங்காயை அதன் மீது வையுங்கள். கலசத்தின் கழுத்தை சிவப்பு நிறத் துணியால் சுற்றி வையுங்கள். பூஜையறையில் விளக்கேற்றியபின், கலசத்தின் முன்பும் ஒரு விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும்.


பூஜை :
கலசத்தின் முன் ஒரு வெற்றிலையை வைத்து, அதன்மீது மஞ்சள் பொடியினால் பிள்ளையார் பிடித்து வையுங்கள். இந்தப் பிள்ளையாருக்கு குங்குமப் பொட்டிட்டு பூ வைக்க வேண்டும். பின்னர் கலசத்திற்கும் பொட்டு , பூ வைத்து , தூபம் ஏற்றி வைத்திடுங்கள்.
முதலில் பிள்ளையாரை வேண்டிக்கொண்டு, பிறகு துர்க்கை, லட்சுமி, சரஸ்வதி அம்மன்களை கலசத்தில் எழுந்தருளும்படி மனதால் வேண்டிக் கொள்ளுங்கள். பிறகு அவர்களுக்கு தூப, தீபம் காட்டி வணங்க வேண்டும்.

ஒன்பது நாட்களும் :
இந்தக் கலச அமைப்பினை அப்படியே வைத்திருந்து நவராத்திரியின் ஒன்பது நாட்களும், அடுத்த விஜயதசமியன்றும் முதல் பூஜையை இதற்கே செய்ய வேண்டும். கொலுவுக்கு உரிய நிவேதனமும் முதலில் இந்தக் கலச அமைப்பிற்கே செய்ய வேண்டும். அம்பிகை பற்றிய பாடல்களை படியுங்கள், கேளுங்கள்.
ஒன்பது நாட்களும் அம்பிகை பாடல்களைப் பாடுவதும், கேட்பதும் தொடர வேண்டும். முதல் மூன்று நாட்களில் துர்க்கையையும், அடுத்த மூன்று தினங்களில் லட்சுமியையும், கடைசி மூன்று நாட்களில் சரஸ்வதியையும் வணங்குவது சிறப்பு.
நவராத்திரி விரதம் இருக்க முடியாதவர்கள் :
நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும் பூஜை, விரதம் இவற்றை அனுஷ்டிக்க வேண்டும் என்றும், இயலாதவர்கள் அஷ்டமி திதி வரும் நாளில் மட்டுமாவது அவசியம் விரதம் இருக்க வேண்டும் எனவும் புராணங்கள் தெரிவிக்கின்றன.
விஜயதசமி தினத்தில், அம்பிகை வெற்றி வாகை சூடினாள். ஆணவம், சக்தியாலும் வறுமை, செல்வத்தினாலும் அறியாமை, ஞானத்தாலும் வெற்றி கொள்ளப்பட்ட தினம் அது.
நன்றி தட்ஸ் தமிழ்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக