திங்கள், 25 செப்டம்பர், 2017

குலசேகரன்பட்டணம் அருள் தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா




குலசேகரன்பட்டணம் அருள் தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா 

                          ஒவ்வொரு ஆண்டும் குலசேகரன்பட்டணம் அருள் தரும் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா தொடங்கும் முன் விழா ஆயத்த பணிகளுக்காக ஆலோசனை கூட்டம் கோவில் நிர்வாகம்  ,மாவட்ட நிர்வாகம் சார்பிலும் நடத்தப்படும் . ஆனால் ஆண்டுதோறும் பெயரளவில் மட்டுமே ஆலோசனை கூட்டத்தை நடத்தி விட்டு அதில் எடுக்கப்படும் ,பேசப்படும் முடிவுகளை நடைமுறை படுத்த அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை என்பது தான் எதார்த்த உண்மை .

                       இந்த ஆண்டும் அதே போல பல்வேறு விசயங்கள் ஆலோசனை கூட்டத்தில் வாய் கிழிய பேசினாலும் கோவில் நிர்வாகம் சார்பில் இன்றைய தேதி வரை குடிநீர் , சாலை வசதி , கழிவறை ,பெண்கள் உடைமாற்றும் அறை , கூட்ட நெரிசலை சமாளிக்க ஏற்பாடு ,சுகாதார வசதி போன்றவைகளில் ஒரு பணிகள் கூட உருப்படியாக நடக்க வில்லை . பல லட்சகணக்கான பக்தர்கள் வரும் திருவிழாவில் அவர்களுக்கு குடிநீர் கொடுக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக பைப்புகள் அமைத்து உள்ளனர் ,அதிலும் இப்போதைய நிமிடம் வரை ஒரு சொட்டு குடிநீர் வந்த பாடுஇல்லை .கோவில் நிர்வாகம் சார்பில் நிரந்தர கழிவறைகள் ஏதும் அமைக்காமல் தற்காலிக கழிவறை அமைக்கிறேன் என்னும் பெயரில் ஒவ்வொரு வருடமும் பல லட்சகணக்கான ரூபாய்களை கொள்ளை அடிக்கும் வேலை மட்டும் சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. இந்த தற்காலிக கழிவறையில் பயன்படுத்தப்படும் இரும்பு தகடுகள் ஆகம விதிகளை மீறி கடற்கரை சிவன்கோவிலில் அடுக்கி வைத்து இருப்பதை நம்மால் சகித்து கொள்ள முடிய வில்லை .

அதே போல சாலை வசதி , போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஒரு வழி பாதையாக மாற்ற பட்டுள்ள குலசை –கொட்டன்காடு சாலை , உடன்குடி புதுமனை –குலசை சாலை, குலசை தருவை குளம் அருகில் உள்ள இணைப்பு சாலை போன்றவை மிகவும் மோசமாக உள்ளன .ஆண்டு தோறும் நெடுஞ்சாலை அதிகாரிகள் சரி செய்து விடுவதாக சொன்னாலும் வேலை ஒன்றும் நடக்காது உள்ளது , ஏற்கனவே போக்குவரத்து பிரச்சனை காரணமாக ஏற்பட்ட ஒரு விபத்தில் 3 பேர் இறந்தது குறிப்பிட தக்கது  . இதே நிலை தொடர்வதால்  இந்த ஆண்டு தசரா திருவிழாவில் கண்டிப்பாக போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் அவதிப்பட போவது உறுதி .

                  அடுத்ததாக கடற்கரையில் குளிக்கும் பெண்கள் நிலைமை மிக மோசம் , பெண்கள் ஆடை மாற்றும் அறை உடைந்து கிடப்பதால் நாணி ,குறுகி நம் சகோதரிகள் திறந்த வெளியில் ஆடை மாற்றி கொண்டு உள்ளனர் . இத்தனைக்கும் பக்தர்கள் காணிக்கை பல கோடி ருபாய் கோவில் வருமானம் வங்கியில் உள்ளது , அதை முறையாக செயல்படுத்தி பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்யாமல் கோவில் நிர்வாகம் கள்ள மௌனம் சாதித்து வருகிறது .

10 ம் திருவிழாவான சூரசம்கார விழாவில் பல லட்சம் பக்தர்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது , பல வாகனங்கள் ,நகைகள் திருடப்படுகின்றன ,இதனை சமாளிக்க காவல்துறை சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்ட போதிலும் கண்காணிப்பு காமெரா எத்தனை பொருத்தி உள்ளனர் என்பதும் , ஒரு வழி பாதை வசதியை செயல்படுத்த எந்த மாதிரி முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது ,குறிப்பாக குலசை பேரூராட்சி அலுவலகம் முன் ஏற்படும் கூட்ட நெரிசலை சமாளிக்கவும் தசரா குழுக்கள் சங்கிலி போல கைகளை கோர்த்து கொண்டு வருவதால் பொதுமக்கள் –தசரா குழுக்கள் இடையே வரும் சச்சரவுகளை சமாளிக்க தற்காலிக பால நடை மேடை ஒன்று அமைக்க கோரி இருந்த கோரிக்கையும் அப்படியே கிடப்பில் உள்ளது .


                        கோவிலின் அருகில் உள்ள கடற்கரை செல்லும் பாதையில் உள்ள சாக்கடை குளத்தை சுற்றிக்காட்டி நான் பல முறை மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்காததால் அந்த பகுதியில் செல்வோர் முக்கை பிடித்து கொண்டு பன்றிகளின் வரவேற்பில் செல்லும்  அவல நிலை இன்னும் தொடர்கிறது .குத்தாட்டம் போட்ட குழுக்களை கட்டுபடுத்த ஆபாச நடனம் ஆடக் கூடாது என்று நீதிமன்றம் தீர்ப்பு சொன்னாலும் ஆபாச ஆட்டத்தை நடத்த முயற்சிக்கும்  ஒரு சிலரை காவல்துறை எப்படி கட்டுப்படுத்துவது என குழம்பி போய் இருப்பதும் நம் கண்களுக்கு நன்கு புலப்படுகிறது .

இவை அனைத்துக்கும் மேலாக சிகரம் வைத்தார் போன்று சுமார் பதினைந்து லட்சம் மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா குறித்து இந்த நாள் வரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு செய்ய வில்லை .  வழமை போல  எந்த தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரும் , அரசின் உயர் அதிகாரிகளும் , அமைச்சர் பெருமக்களும் தசரா சூரசம்கார விழாவில் பங்கேற்பது கிடையாது , அப்படி பங்கேற்கும் பட்சத்தில் தான் அம்மன் அருளை நாடி குடும்பம் ,குழந்தைகளுடன் விழாவில் பங்கேற்கும் பக்தனின் உண்மையான அல்லல் நிலை புரிபடும் . அகங் கொண்ட அசுரனை அழித்த முத்தாரம்மன் இனி சினம் கொண்டு இந்த அதிகாரிகளின் மீது பாய்ந்தால்  தான் இவர்கள்  திருந்துவார்கள் .பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பார்கள் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக