நல்லனவெல்லாம் தரும் ‘ஓணம்’ எனும் தியாகத் திருநாள்! 04/09/17
*தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக ஓணம் இருந்ததை அறிவீர்களா?*
தமிழர்களின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றாகவே 'ஓணம் பண்டிகை' இருந்து வந்திருக்கிறது, என்பதை சங்க இலக்கியங்கள் மற்றும் பக்தி இலக்கியங்கள் வாயிலாக நம்மால் அறிய முடிகின்றது.
*இதற்கு பல்வேறு சான்றுகளும் இருக்கின்றன.*
புராண காலத்தில் மஹாபலி என்னும் மன்னர் தென்னிந்தியாவைச் சிறப்பாக ஆட்சி செய்து வந்தார்.
அவரது சிவ வழிபாட்டினாலும் பல்வேறு பூஜைகளாலும் சிவபெருமான் மனம் குளிர்ந்து பல வரங்களையும் வழங்கிட, மூவுலகையும் ஆளும் சக்கரவர்த்தியானார்.
*இதனால்,*
தங்களுக்கு ஏதேனும் துன்பம் வந்துவிடுமோ என்று பயந்த தேவர்கள் திருமாலின் உதவியை நாடிச் சென்றனர்.
திருமாலும் 'வாமன வடிவம்' என்னும் அந்தணராக வேடம் கொண்டு மஹாபலி சக்கரவர்த்தியிடம் மூன்று அடி மண்ணைத் தானமாகக் கேட்டார்.
*'கேட்பவர்களுக்கு இல்லை' என்று சொல்லாமல் தானம் வழங்கும் மஹாபலி அவர் கேட்டதைக் கொடுக்கச் சித்தமானார்.*
தானம் கேட்டு வந்திருப்பவர் திருமால் என்று அறிந்த அசுர குருவான சுக்கிராச்சாரியார், மகாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார்.
குருவின் அறிவுரையை மீறி, மஹாபலி சக்கரவர்த்தி மூன்று அடி மண் கொடுக்க சம்மதித்தார்.
*கேட்பவர் திருமால் என்றும்; கேட்டதைக் கொடுத்தால் தன் உயிரே போகும் என்று அறிந்தும்; கேட்ட வரத்தை அளித்து உயிர்த்தியாகம் செய்தார் மஹாபலி சக்கரவர்த்தி.*
மஹாபலி மன்னரின் விருப்பத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் ஓணத் திருநாளன்று அவர் இந்த பூமிக்கு வருகை புரிகிறார். அவரை வரவேற்கும் பொருட்டே இந்தத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
*உண்மையில்,*
*இது சொன்ன வார்த்தைக்காக தன்னையே தியாகம் செய்ததால் இதை, 'தியாகத் திருநாள்' எனலாம்- இன்று கேரள மாநிலத்தில் மட்டுமே கொண்டாடப்படும் இந்தவிழா அவர்களின் அறுவடை திருநாள் என்றும் போற்றப்படுகிறது!*
இடிப்பட்ட ஓணம் பண்டிகை தமிழகத்திலும் எப்படிக் கொண்டாடப்பட்டது எனப் பார்ப்போம்.
'ஆடிப்பெருக்கு', 'தைப்பூசம்', 'பங்குனி உத்திரம்', 'திருக்கார்த்திகை', 'கனி காணுதல்', 'பொன்னேர் பூட்டல்' என்று தமிழர்களின் பண்டிகைகளை எல்லாம் நாம் மறந்து விட்டு,
'வேலண்டைன்ஸ் டே', 'ஆங்கிலப் புத்தாண்டு' என ஐரோப்பிய மயமாக்களுக்கு திரும்பி விட்ட காலமிது.
இதில்
ஓணம் பண்டிகை இங்கும் கொண்டாடப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்ட திருநாள் இது.
*திருவோண நட்சத்திரம் திருமாலுக்கு உரியது.*
சங்க கால இலக்கியங்களில் திருமாலின் பிறந்த நாளென்றும் வாமன மூர்த்தி அவதரித்த நட்சத்திரமும் திருவோணம்தான் எனவும் குறிப்புகள் உள்ளன.
*சங்க கால*
*இலக்கியமான*
*'மதுரைக் காஞ்சி' நூல்*
*'மாயோன் மேய ஓண நன்னாள்' என்று குறிப்பிட்டுப் பாடுகிறது.*
அதாவது பாண்டிய நாட்டின் புகழ்பெற்ற மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் ஆட்சி காலத்தில் பத்து நாள் விழாவாக 'ஓணம் திருநாள்' இருந்தது என மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனார் குறிப்பிடுகிறார்.
சிறப்பான விருந்துகளும், 'சேரிப்போர்' என்னும் வீர விளையாட்டும் நடைபெற்றதாகவும் குறிப்புகள் உள்ளன.
*பாண்டிய நாட்டு இளைஞர்கள் பலரும் கூடி, நீலக்கச்சையணிந்து வீர விளையாட்டுகள் நிகழ்த்தி, விருந்துண்டு மகிழ்ந்தனர் என்கிறது மதுரைக் காஞ்சி.*
இந்த விழா ஆவணித் திங்களில் கொண்டாடப்பட்டது.
பின்னாளில் ஐப்பசியில் கொண்டாடப்பட்டதாகவும் தெரிய வருகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக