சுசீந்திரம் ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவில்...
கோவில் வரலாற்றில் சில ஞானாரண்யம் என்றுபோற்றப்படும் சுசீந்திரம்
ஸ்ரீதாணுமாலய ஸ்வாமி கோவிலுக்குச் சென்றிருந்தோம்.
குமரிமாவட்டத்தின் பிரம்மாண்டமான கோயில்களில் ஒன்று சுசீந்திரம்.
ஸ்ரீசிவபெருமான், ஸ்ரீமகாவிஷ்ணு, ஸ்ரீபிரம்மா ஆகிய மும்மூர்த்தி களும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம்.
தென்னாட்டின் முக்கியமான நெல்லுற்பத்தி மையமாக இருந்த நாஞ்சில்நாட்டின் நிர்வாகத்தலைமையகமாக நெடுங்காலமாக இருந்துள்ளது.
இந்து மதத்திலுள்ள அனைத்து கடவுள்களுக்கும் இங்கு தனித்தனி சன்னதிகள் உள்ளன.
சுசீந்திரம் கோவில் ஏழு நிலைக் கோபுரத்தை முகப்பில் கொண்டது.
கோபுர உச்சியில் நின்றால் நாஞ்சில் நாட்டின் பெரும் பகுதிகளையும் கன்னியாகுமரிக் கடற்கரையினையும் கண்குளிரக் காணலாம்.
கோயிலின் அகச்சுற்று மண்டபம் பரப்பிலும் அழகிலும் ராமேஸ்வரம் அகச்சுற்று மண்டபத்திற்கு இணையானது.
மிகப்பெரிய நிலச்சொத்துள்ள கோயில் சுசீந்திரம்.
நகரமே கோயிலை ஒட்டி உருவானதுதான்.
*பொன்னார் மேனியன் மிளிர் கொன்றை அணிந்தவனாக
சிவனைப் பூஜிப்போமே அந்தக் கொன்றைமரமே ஸ்தலவிருட்சம்*.
கோயிலுக்குள் உள்ள கொன்றைமரம் புராதனமானது–
இப்போது பாஸில் ஆக உள்ளது.
ஐதீகப்படி மும்மூர்த்திகளின் கோயில்.
மூலவரின் பெயர் ஸ்தாணுமாலயன் .
ஸ்தாணு என்றால் சிவன். மால் விஷ்ணு. அயன் பிரம்மன்.
திருக்கோயில் மூலவர் தங்கக் கவசம் பூண்டு, 27 நட்சத்திரங்கள்
மின்னும் வகையில் ஏற்றப்பட்ட தீப ஒளியில் அருள்காட்சி
தருவது பிறவிப் பிணியைத் தீர்க்க வல்லது.
லிங்கம் மும்மூர்த்தியாக வழிபடப்படுகிறது.
கல்வெட்டுகள் இக்கோயில் மூலவரை மகாதேவர், சடையார், நயினா, உடையார் எம்பெருமான், பரமேஸ்வரன் போன்ற பெயர்களில் குறிப்பிடுகின்றன.
கூரிய இரும்புத் தூண்களுடன் பிரதான வாயில் கதவு 24 அடி உயரத்துக்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
வாயிலை அடுத்து அமைந்துள்ள ஊஞ்சல் மண்டபத்தில் பிரம்மாண்டமாக கரும்பு வில்லுடன் மன்மதன், ரதி, மகாபாரத நாயகர்கள் கர்ணன், அர்ஜுனன் சிலைகள் உயிரோவியமாகக் காட்சியளிக்கின்றன.
கிழக்குப் பிராகாரத்தில், வசந்த மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி எழுந்தருளியுள்ளதால் இத்தலம் குருஸ்தலமாக விளங்குகிறது.
நந்தி வெண்மை நிறத்துடன் வித்தியாசமாய் காட்சிப்பட்டது. சிப்பிகளாலும்,கிளிஞ்சல்களாலும், சுதையாலும் அற்புதமாய் வடிவமைக்கப் பட்டதாம்.
இசைத்தூண்கள் வியப்பூட்டின.
மூலவர் சந்நிதி அருகே பெருமாள் நவபாஷாணத்தால் வடிக்கப்பட்டு வெள்ளிக் கவசம் பூண்டு அருள்காட்சி தருகிறார்.
கல் விதானக் கூரையில் நவக்கிரகங்களுடன் 4 கால் மண்டபம் தூண்களில் நவகிரஹ பரிஹார மூர்த்திகளான அம்பிகை, சிவன், ஸ்ரீநரசிம்மர் மற்றும் அதிதேவதைகளும் வடிக்கப்பட்டுள்ளன.
இதனால் மண்டபத்துக்கு வரும் பக்தர்கள் நவக்கிரக தோஷங்கள் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுகிறார்கள்.
சுப்பிரமணியரின் சந்நிதியில் மேற்கூரையில் மயில் வாகனத்தில் எழுந்தருளியுள்ள முருகன் அஷ்டதிக் பாலகர்களுடன் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளார்.
ஸித்தி தேவியுடன் நீலகண்ட விநாயகர், கங்காளநாதர், கைலாசநாதர், சாஸ்தா, பள்ளி கொண்ட பெருமாள், ஸ்ரீ சீதாராமர், துர்க்கை, ஸ்ரீசக்கரம், கிருஷ்ணன், காலபைரவன் என்று ஒவ்வொருவருக்கும் தனி சந்நிதி இக் கோயிலில் அமைந்துள்ளன.
மலையாள-தமிழ் பண்பாட்டு இணைவின் அடையாளமாக கோவில் திகழ்கிறது...
வழிபாட்டில் ஞானசம்பந்தருக்கும் மாணிக்கவாசகருக்கும் முக்கியமான இடம் உண்டு.
கோயிலின் பொறுப்புக்கு வரும் தந்திரிகளும் நிர்வாகிகளும் பழையமரபுகளை அப்படியே பேணுவதாக உறுதிமொழி எடுத்துக்கொள்ளும் வழக்கம் இருந்ததே இதற்குக் காரணம்.
ஆகம– தாந்த்ரீக முறைகளின் கலவையாக வழிபாட்டு முறை அமைந்திருக்கிறது ..
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மூன்று தெய்வங்களும் இத்தலத்தில் குடிகொண்டிருப்பதால் இத்தலத்தில் எல்லா பிரார்த்தனைகளும் நிறைவேறும்.
திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம் வேண்டி நிறைய பக்தர்கள் இங்கு வேண்டிக்கொள்கின்றனர்.
உடல்பலம், மனபலம் ஆகியவை கிடைக்க இத்தலத்து அனுமனிடம் வேண்டிக் கொள்கிறார்கள்.
தியானம் செய்பவர்கள் இங்குள்ள இறைவனிடம் வந்து மன அமைதியை பெற்று செல்கிறார்கள்.
அகலிகையால் ஏற்பட்ட தேவேந்திரனுடைய சாபம் விமோசனம் பெற்ற இடம். தேவேந்திரன் உடல் சுத்தி(தூய்மை) பெற்றதால் சசீந்திரம் என பெயர் வழங்கலாயிற்று.
சாபத்தில் தவித்த இந்திரன் சிவா, விஷ்ணு, பிரம்மா ஆகிய மூவரையும் ஒரே மூர்த்தமாக வைத்து வழிபட்டு, சாபத்திலிருந்து விமோசனம் பெற்ற தலம் ஆகவே, இங்கு இன்றளவும் அர்த்தஜாம பூஜையை இந்திரனே வந்து நடத்துவதாக ஐதீகம்!
முதல்நாள் அர்த்தஜாமப்பூஜை நிகழ்த்திய அர்ச்சகர் அடுத்தநாள் காலை கருவறை திறக்கமாட்டார்.
வேரொருவர் திறந்தாலும் அகம் கண்டதைப் புறம் கூறமாட்டேன் என்ற சங்கபத்தில் உறுதியாக இருக்கும் அதிசய நிகழ்வு உண்டு.
தேவபூஜை நிகழ்ந்திருப்பதால் பூக்களும், அர்ச்சனைப் பொருள்களும் இடம் மாறியிருக்கும் என்ற நம்பிக்கை உண்டு.
சிற்பக்கலை சிறப்பு: பெரிய அனுமன் சிலையும், இறைவன் ஊர்தியாகிய நந்தியின் உருவமும் நான்கு இன்னிசைத் தூண்களும் மண்டபங்களின் கட்டழகும் சிறப்பாகும்.
எங்கும் காணமுடியாத கணேசினி என்ற பெண்ணுருவில் அமைந்த பிள்ளையார். இது கண்ணுக்கோர் சிறந்த கலைவிருந்தாகும்.
மாமுனிவர் அத்ரியும், கற்புக்கரசியாகிய அனுசூயாவும் ஞானாரண்யம் என்னும் பழம் பெயர் பெற்ற சுசீந்திரத்தில் தவம் செய்தனர்.
அத்ரி முனிவர் இமயமலை சென்ற போது அயன், அரி, அரன் மூவரும் அனுசூயாவின் கற்பை சோதிக்க எண்ணி பிராமணர் வேடம் அணிந்து ஆசிரமம் வந்து உணவு கேட்டனர்.
அனுசூயாவும் உணவு படைக்க ஆரம்பிக்க, ஆடை அணிந்த ஒருவரால் உணவு பரிமாறப்படுமாயின் உணவு உண்ண ஆகாது என்று மூவரும் கூறினர்.
திடுக்கிட்ட அனுசூயாதேவி தன் கணவர் திருவடி கழுவிய நீரை மூவர் மீதும் தெளிக்க பச்சிளங்குழந்தைகளாக மாறினர்.
பின்பு உணவூட்டி தொட்டிலிட்டு தாலாட்டி தூங்க செய்தாள்.
சிறிது நேரங்கழித்து மூவரின் தேவியரும் வர, அனுசூயா மூவர்க்கும் பழைய உருவை கொடுத்தாள்.
அப்போது திரும்பி வந்த அத்ரி முனிவரும் அனுசூயையோடு அகமிக மகிழ்ந்தவராய் மும்மூர்த்திகளின் காட்சி பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை நினைவூட்டவே சுசீந்திரம் கோவில் கட்டப்பட்டு முப்பெரும் கடவுளரும் வழிபடப் பட்டு வருகின்றனர்.
ஸ்ரீஇந்திரம் என்ற பெயரே பழந்தமிழில் சிவிந்திரம் என்று மருவியது ..
கல்வெட்டு இந்த ஊரை ‘ராஜராஜப் பாண்டிநாட்டு உத்தமசோழ வளநாட்டு நாஞ்சில்நாட்டு பிரம்மதேயம் சுசீந்திரமான சுந்தர சதுர்வேதி மங்கலம்‘ என்று சொல்கிறது
திருவிதாங்கூர் அரசை ஓர் நவீன அரசாக மாற்றிய மாமன்னரான மார்த்தாண்ட வர்மா சுசீந்திரம் கோயிலுக்கு வர விரும்பி நாகர்கோயிலில் இருந்துகொண்டு தகவலைச் சொல்லியனுப்பினார்.
கோயில் பொறுப்பில் இருந்த நம்பூதிரிப்பிராமனர்கள் கோயிலை முன்னரே இழுத்துச் சாத்திவிட்டுச் சென்றுவிட்டார்கள்.
கோயிலுக்கு வந்த மார்த்தாண்ட வர்மா மகாராஜா அவமானப்படுத்தப்பட்டார்.
கோபம் கொண்ட அவர் தன் தளபதியான தளவாய் ராமய்யனிடம் அந்த கோபத்தைச் சொல்ல ராமய்யன் சுசீந்திரத்துக்கு வந்து படைபலத்தால் பிராமணர்களை சிறைப்பிடித்து நாடுகடத்தினார். கோயிலை நேரடி அரசாங்கக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்தார்.
அவர் தன் வாளை திருவனந்தபுரம் ஸ்ரீபதமநாப சுவாமி கோயிலுக்குக் கொண்டுசென்று இறைவன் காலடியில் வைத்து நாட்டையே பத்மநாபனுக்குச் சமர்ப்பணம்செய்து பத்மநாபதாசன் என்று தனக்குப் பெயரிட்டுக்கொண்டு இறைவனின் பிரதிநிதியாக ஆட்சி செய்ய ஆரம்பித்தார்.
கோயிலின் உரிமை அரசியலதிகாரமாக, மன்னரே அஞ்சும் அளவுக்கு இருந்திருக்கிறது.
ஆர்வமூட்டும்செய்தி சுசீந்திரம் கைமுக்கு என்னும் வழக்கம் குறித்தது. பாலியல் மீறல் போன்ற பிழைகளைச் செய்த நம்பூதிரிகளை கொண்டுவந்து கொதிக்கும் எண்ணையில் கைவிட்டு சோதனைசெய்யும் தண்டனை முறை இங்கே நெடுங்காலம் இருந்தது.
ஒரு நம்பூதிரி தண்டனைக்கு அஞ்சி கோயில் மீது ஏறி குதித்துவிட தடைசெய்யவேண்டுமென கோரிக்கை எழுந்தது.
மகாராஜா சுவாதித்திருநாள் சுசீந்திரம் கைமுக்கு வழக்கத்தை நிறுத்தம்செய்தார்.
மூலதிருநாள் மகாராஜா காலத்தில்– பேச்சிப்பாறை அணைகட்டப்பட்டபோது- தான் சுசீந்திரம் ராஜகோபுரம் கட்டப்பட்டது.
ஏற்கனவே அஸ்திவாரம் மட்டுமே இருந்தது.
அப்போது மண்ணைத்தோண்டும்போது கிடைத்த மாபெரும் ஒற்றைக்கல் அனுமார் சிலை உள்ளே நிறுவபப்ட்டது.
இன்று சுசீந்திரம் அனுமார் மிகமுக்கியமான வழிபாட்டு மையம். மும்மூர்த்திகள் ஒருங்கே இருந்து அருள்பாலிக்கும் தலம் என்றாலும், சுசீந்திரம் என்றதும் சட்டென்று நினைவுக்கு வருபவர்… ஸ்ரீஆஞ்சநேயர்தான்!
சீதாராமனை இருகரம் குவித்து வணங்கி, புன்னகை மலரும் திருமுகத்துடன் காட்சியளிக்கிறார், ஸ்ரீராமபிரானின் சந்நிதிக்கு அருகில், கூப்பிய கரங்களுடன் சுமார் 18 அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார் ஸ்ரீஆஞ்சநேயர்.
ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர் என்று திருநாமம். கேட்ட வரங்களை அள்ளித் தருகிற வரப்பிரசாதி
காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்கள், ஊர்களிலிருந்தும் சுசீந்திரம் தலத்துக்கு வந்து, ஸ்ரீஆஞ்சநேயருக்கு சந்தனக் காப்பு, வடைமாலை, வெண்ணெய்க் காப்பு மற்றும் மாக்காப்பு ஆகியன செய்து வழிபட்டுள்ளனராம்.
சக்தியும் சாந்நித்தியமும் கொண்ட பிரமாண்ட விஸ்வரூப அனுமனுக்கு, இலங்கையை எரித்தபோது வாலில் தீப்பிடித்ததால் உண்டான உஷ்ணத்தைத் தணிக்க, வெண்ணெய்க் காப்பு செய்கின்றனர்.
அனுமனுக்கு நெய் தீபாராதனை காட்டப்படுவதும் அரிதான ஒரு நிகழ்வு
புராதனமான ஸ்ரீஅனுமன் விக்கிரகம் என்றால், அது சுசீந்திரம் ஸ்ரீவிஸ்வரூப ஆஞ்சநேயர்தான்.....
திருக்கோயிலின் தளம், தூண்கள், விதானங்கள், திருமதில்கள், கோபுரங்கள், மாட மண்டபங்கள், மேற்கூரைகளிலும் எழில்மிகு தெய்வச் சிற்பங்கள் கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளன.
அறம் வளர்த்த நாயகி அம்மனுக்கு தனி சந்நிதி உள்ளது.
வீரபத்ர சிலைகள். குறவன் குறத்தி சிலைகள். கல்லை உலோக வழவழப்புவரை கொண்டுசென்றிருப்பதன் நுட்பம் மிகத்தேர்ச்சியான கலையைக் காட்டுகிறது.
கனிகாணல் நிகழ்ச்சி சித்திரை விஷூக்கனி அன்று தாணுமாலைய சுவாமியின் எதிர்புறம் உள்ள செண்பக ராமன் மண்டபத்தில் அவருடைய திருஉருவ திருக்கோலம் வரைந்த படத்தினை சுற்றி காய்கறிகளும், பலவகை பழவகைகளும், ஆள் உயர கண்ணாடியும் வைக்கப்பட்டு, சுவாமியின் எதிரில் கோடிக்கணக்கான மதிப்புடைய தங்க குடங்கள், விளக்குகள் பக்தர்கள் பார்வைக்காக மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டு= பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின்பு கனிகாணும் நிகழ்ச்சி நடந்து, பக்தர்களுக்கு கை நீட்டம் வழங்கப்படும்.
தவம், யோகம் உள்ளிட்ட அஷ்டமா சித்திகள், கல்வி இயல் முத்திரைகள், நடன மெய்ப்பாடுகள், அக்கால தண்டனை முறைகள், திருப்பணி செய்தோர் புகழ்பாடும் கல்வெட்டுகள் என்று இக் கோயில் கலைப் பெட்டகமாகத் திகழ்கிறது. இக் கோயிலில், ஆண்டுதோறும் நடைபெறும் மார்கழி பெருந்திருவிழா பிரசித்தி பெற்றதாகும்
நமச்சிவாய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக