தியாக பிரம்மம் - சில அரிய தகவல்கள்
-----------------------------------------------------------------------
பலருக்கும் தியாக பிரம்மத்தின் சரித்திரம் தெரிந்திருக்கும். அவ்வளவாக அறியப்படாத செய்திகளை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன்.
வால்மீகியின் மறு அவதாரம் தியாகராஜர் என்று சொல்வதுண்டு. அதற்கான பல கோர்வைகள் வால்மீகியின் ஸ்லோகங்களிலும் தியாகராஜரின் கீர்த்தனைகளிலுமே கிடைக்கின்றன. நாரதரின் மறு அவதாரம் புரந்தரதாசர். அதே போல் வேத வியாசர் வெவ்வேறு கால கட்டங்களில் மூன்று அவதாரம் செய்ததாக நம்பப்படுகிறது.அவர்கள் முறையே ஜெயதேவர், நாராயண தீர்த்தர் மற்றும் க்ஷேத்திரஞர்.. அதுசரி ஆதலால் பிறவி வேண்டாம் என்று ஆழ்வாரே விளிக்கும்போது, ஏன் வால்மீகியிற்கு மற்றொரு பிறவி என்றால், ராமாயணத்தை ' குசலவ கானம்' என்று அழைப்பார்கள். இசையோடு அனுபவிக்க என்று பொருள். முதல் பிறவி வால்மீகியிற்கு ஸ்லோகங்களாக போய் விட்டதால் மீண்டும் ஒரு பிறவி எடுத்து தியாக பிரம்மம் மூலம் இசை வடிவம் கொடுத்ததாக நினைக்க தோன்றுகிறது.
சமஸ்க்ரிதம், தெலுங்கு உள்பட சுமார் 24000 கீர்த்தனைகள் அவரால் இயற்றப்பட்டாலும், ஆயிரம் தான் நமக்கு கிடைத்திருக்கிறது. அதில் சில நூறு தான் வழக்கத்தில் இருக்கிறது.
நிறுத்தப்பட்ட ஆனந்த பைரவி
-------------------------------------------------------
தியாக ராஜர் காலத்தவர் திரிபுவனம் சுவாமிநாத ஐயர்..சிறந்த நாடக நடிகர். தோடி சீதாராமையா, நம் தாத்தா காலத்து தோடி ராஜரத்தினம் பிள்ளை போல , இந்த ஸ்வாமிநாதன் 'ஆனந்த பைரவி' ராகத்தை பாடுவதில் பெயர் போனவர். தியாகராஜர் சீடர்கள் இவரை பற்றி பிரமாதமாக சொல்லவே , ஒரு முறை வேஷம் அணிந்து மறைவாக இவர் நாடகத்தை காண தியாகராஜர் சென்றார். அன்று திரிபுவனம் ஸ்வாமிநாதன் பாடிய ஆனந்த பைரவியில் மெய் மறந்தார். மேடை ஏறி பாராட்டி மகிழ்ந்த போது 'ஸ்வாமிநாதன்' தியாகராஜரிடம் ஒரு வரம் கேட்டாராம்' 'தியாகராஜரே , நீர் எந்த காலத்திலும் ஆனந்த பைரவியை' பாட கூடாது.. அப்போது தான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவும் , தன்னை உலகம் நினைவில் வைத்து கொள்ளும் என்றும் விண்ணப்பித்தாராம்.. ஸத்யஸந்தன் தியாகராஜர் அதற்கு பிறகு ஆனந்தபைரவி ராகத்தில் கீர்த்தனைகள் ஏதும் பாடவில்லை. அவர் அருளியது மொத்தம் மூன்று தான் இருக்கிறது. 'நீகே தெலிய போதே' , ராம ராம நீவாரமு (திவ்ய நாமம்), க்ஷீர சாகர விஹார (உத்சவ சம்பிரதாய)..இவையெல்லாம் இந்த சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு சொல்லி கொடுத்த சீடர்கள் மூலம் வெளி வந்தவை.பின்னால் வந்தவர்களுக்கு இந்த ராகத்தில் அவர் சொல்லி கொடுக்க கூட இல்லை. போக்கிரித்தனம் பெயரில் இருக்கிறது கேட்டவர் ''ஸ்வாமிநாதன்' ஆயிற்றே !!!!'..
96 கோடி முறை ராம நாமாவை ஜெபிக்க ராமகிருஷ்ண யதீந்த்ரர் அருளி கேட்க அதை 21 வருடங்களிலேயே ஜெபித்து முடித்திருக்கிறார் ஸத்குரு தியாகராஜர்.
சராசரி ஒரு நாளைக்கு ஒண்ணே கால் லட்சம் ராம நாமா.இது ஜெபம் அல்ல தபஸ்..!!!
திருவையாற்றில் பாடப்படும் நாட்டை, கௌளை, ஆரபி,வராளி, ஸ்ரீ ராக பஞ்சரத்னம் கனராக பஞ்சரத்னம் என்று அழைக்கப்படுகிறது. இதே போல் லால்குடி, ஸ்ரீரங்கம், திருவொற்றியூர் ,கோவூர் ஆகிய ஊர்களிலும் அந்தந்த ஊர்களின் கடவுள்களின் மேல் அவர் பஞ்சரத்தினங்களை அருளி செய்து இருக்கிறார்.ஒவ்வொரு ஐந்தும் ரத்தினங்கள்.
தியாகராஜர் வர்ணங்கள் பாடியது இல்லை. ஆனால் கொலுவையுன்னாடே (பைரவி) கீர்த்தனை முழுவதும் ஒரு வர்ணத்துக்கு உரிய எல்லா லக்ஷணங்களும் பொருந்தியது.
அதே போல் 'ஜெகதாநந்தகாரகா' வில் ஸ்வரம், தானம், அகாரம் என்று அனைத்தும் நிறைந்து காணப்படும்.
பிரகலாத பக்தி விஜயம் என்ற ஒரு இசை நாடகத்தையும் (opera ) அருளி செய்து இருக்கிறார்.
இதே போல் வங்காளத்தில் இருந்து நௌக விலாசம் என்ற காவியத்தால் ஈர்க்கப்பட்டு நௌக சரித்திரம் என்ற நாடகத்தையும் எழுதி இருக்கிறார்.
தெலுங்கு மொழியில் பாகவதத்தை 'பம்மெர போதனா' என்ற மகானை ராமபிரான் தன் அருளால் எழுத செய்ய, அதை தியாகராஜர் நெக்குருகி தன் கீர்த்தனைகளில் குறிப்பிடுகின்றார். இந்த புத்தகம் இன்றும் மதுரை சௌராஷ்ட்ரா நூலகத்தில் இருக்கிறது.
அவருக்கு முந்தைய அல்லது சமகாலத்தவர்களான நாரதர்,துளசிதாசர்,புரந்தரதாசர், பத்ராசலம் ராமதாஸ், நாராயண தீர்த்தர் , தீக்ஷிதர், சதாசிவ ப்ரமேந்திரர், க்ஷேத்திரஞர், நாமதேவர் போன்ற பலரின் தாக்கங்கள் அவரது கீர்த்தனங்களில் காண முடிகிறது
எந்நேரமும் ராம பிரானுடன் வாழ்ந்த அந்த மகான் திருமஞ்சனம் செய்வதற்கு, போஜனத்திற்கு, தாம்பூலம் ஸ்மரிப்பதற்கு, தாலாட்டுவதற்கு என்று ஒவ்வொன்றிற்கும் கீர்த்தனைகள்..
கடைசி காலங்களில் வெறும் பூஜை மட்டும் தான்.
தவதா சோகம்..தவதா சோகம், தாசரதே என்ற ஒரே பாடல் மட்டும் தான். பத்து நாட்கள் முன்பே தான் குறிப்பிட்ட தேதியில் சித்தி அடைய போவதை தன சிஷ்யர்கள் அனைவருக்கும் தெரிவிக்கிறார். இதை பிரபலமான கிரிபை நெல்கொந்த ராமுனி (சஹானா) வில் தெரிவிக்கவும் செய்கிறார்.
1847 ஆம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி க்கு முதல் நாள். ' நாளை ராமன் வந்து என்னை அழைத்து செல்ல போவதாக எல்லோரிடமும் தெரிவிக்கிறார்''. பக்தர்களை பஜனை பாடல்களை பாட சொல்கிறார்.
அடுத்த நாள் புஷ்ய பகுள பஞ்சமி தினம்.
'பரமாத்முடு வெலிகே' என்று வாகதீஸ்வரியில் ஒரு கீர்த்தனையில் பாடுகிறார் .
அவனை ஹரி என்பர், தேவர் என்பர், மனிதர் என்பர்,அண்டசராசரம் என்பர், வான்வெளியிலும்,காற்றிலும், தீயிலும், மரங்களிலும், மிருகங்களிலும், பக்ஷிகளிலும் , மலைகளிலும் , உயிருள்ளவைகளிலும், உயிரற்றவைகளிலும் , அவனை சரண் அடைந்த தியாகராஜன் போன்றவர்களிடம் உள்ள பரம் பொருள் என்று அறி என்கிறார்.
கொஞ்சம் கொஞ்சமாக பஜனை பாடல்கள் நிறுத்தப்படுகிறது. பிரம்ம ஸ்வரூபமாய் கபாலத்தில் இருந்து ஒரு ஜோதி ஆகாயமார்க்கமாய் சென்று மறைகிறது.
இந்த பிரபஞ்சத்தில் ராம பக்தி சாம்ராஜ்யத்தை நிறுவிய ஒரு ஒப்பற்ற ராம பக்தர் பிரம்மத்துடன் ஐக்கியமான தினம் இன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக