அருள்மிகு ஓதிமலை முருகன் கோவில், இரும்பறை, கோவை மாவட்டம்,
கோவையில் சித்தர்கள் வாழும் ஓதிமலை,
புன்செய் புளியம்பட்டியிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. எழுபது டிகிரி கோணத்தில் செங்குத்தாக மலை அமைந்துள்ளது.இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்.
இந்தப் பகுதியில், மூன்றாவது யாகத்தை முடித்த பிறகு போகருக்கு தரிசனம் தந்தாராம் முருகப் பெருமான். இதையடுத்து, பழநியம்பதிக்கு சென்று அங்கே நவபாஷாண முருகப் பெருமானது சிலையை வடிக்க எண்ணினார் போகர். ஆனால், ஓதிமலையில் இருந்து பழநிக்குச் செல்லும் வழி தெரியாமல் தவித்த போகர், ஓதிமலை முருகனிடமே இதைத் தெரிவித்தார். உடனே, தன் திருமுகத்தில் இருந்து ஒன்றையும் நான்கு திருக்கரங்களும் கொண்டு வடிவமெடுத்து, போகருக்கு உதவுவதற்காக மலையில் இருந்து இறங்கினாராம் (இதனால்தான், எஞ்சிய ஐந்து திருமுகம் மற்றும் எட்டுத் திருக்கரங்களுடன் இங்கு காட்சி தருகிறார் குமார சுப்ரமண்யர்) முருகப் பெருமான். போகரும் பின்தொடர்ந்தார்.
ஓதிமலையில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள கிராமத்தை அடைந்ததும் பழநிக்குச் செல்லும் வழியைப் போகருக்குக் காட்டியருளிய முருகன், அங்கிருந்து மறைந்தார். குமரனது அருளைப் போற்றியபடியே பழநியை நோக்கிப் பயணித்தார் போகர். ஓதிமலையில் இருந்து இறங்கி வந்து, போகருக்குப் பழநி செல்லும் வழியைக் காட்டிய அதே இடத்தில் - அதே கோலத்தில்... கோயில் கொண்டார் முருகப் பெருமான். அந்த இடம்... குமாரபாளையம் என்று வழங்கப்படுகிறது. ஏக முகத்துடனும் நான்கு திருக்கரங்களுடனும் குமாரபாளையத்தில் அருள் பாலித்து வருகிறார்.
சஷ்டி நாட்களில் அதிகாலை கோவில் திறந்து பூஜையும் நடைபெறும். ஆதலால் சஷ்டி நாட்களை தேர்வு செய்துகொள்ளலாம். இளையவர்கள், இன்னும் திறன் மிகுந்தவர்கள் கொஞ்சம் எடையை தூக்கி ஏற முடியும் என நினைப்பவர்கள், கோவில் திருப்பணிக்காக மணல் மற்றும் சிமெண்ட் சிறு மூட்டைகளாக எடுத்துச்செல்லும் அளவில் கட்டி அடிவாரத்தில் வைத்திருக்கிறார்கள். ஒரு செங்கல்லையாவது கொண்டு செல்லலாம். உடல் பயிற்சிக்காக அவற்றையும் மேலே கொண்டு சேர்க்கலாம். கோவிலுக்கு போகின்றவர்கள் தயவு செய்து தனி வாகனங்களில் போக வேண்டாம். இன்னும் இந்த மலை இயற்க்கை சூழலுடன் இருக்கிறது. பேருந்தோ அல்லது சைக்கிள்களிலோ சென்று வாகனப்புகையை தவிர்த்து சூழலை காக்க வேண்டுகிறார்கள்
இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம். இங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் “விபூதிக்காடு – தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..
இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.
பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்பட்டுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில் சிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்படுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..
ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன. இங்கு மொத்தம் 1800க்கும் மேற்பட்ட படிக்கட்டுகள் உள்ளது. இது சித்தர்கள் வாழ்ந்து வரும், தவமிருக்கும் மலையாகும். அமைதியாக முருகனை தியானித்தபடி மலை ஏறினால் சித்தர்கள் கண்ணில் படுவார்கள், அவர்கள் ஆழ்நிலை தியானத்தில் இருப்பார்கள். அவர்களை தொந்தரவு செய்யாமல் மேலே ஏறி முருகனை தரிசியுங்கள்.
எங்கே இருக்கிறது?:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கிறது ஓதிமலை. கோவையில் இருந்து அன்னூருக்கு பேருந்து வசதி உண்டு. கோவை- அன்னூர் சுமார் 35 கி.மீ. தொலைவு. அன்னூர் ஜங்ஷன் சாலையில் இருந்து ஓதிமலை ரோடு துவங்கும். இங்கிருந்து சுமார் 16 கி.மீ. பயணித்தால் ஓதிமலை அடிவாரம் வரும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஓதிமலைக்கு சுமார் 26 கி.மீ. தொலைவு.
எப்படிப் போவது?:
கோவை தவிர மேட்டுப்பாளையம், திருப்பூர், அவினாசி ஆகிய ஊர்களில் இருந்தும் அன்னூருக்குப் பேருந்து வசதிகள் உள்ளன. அன்னூரில் இருந்து ஓதிமலைக்குப் பேருந்து வசதி உண்டு.
நடைதிறப்பு :
நண்பகல் 11:00 மணி - மாலை 4:00 வரை (மதிய பூஜை நண்பகல் 12:00 மணி).
ஆலயம் திறந்திருக்கும் தினங்கள்: திங்கள், வெள்ளி, வளர்பிறை சஷ்டி, பௌர்ணமி மற்றும் அமாவாசை, கிருத்திகை ஆகிய தினங்களில் மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். விசேஷ தினங்கள் விதிவிலக்கு.
ஓம் முருகா, வடிவேல் முருகா, வெற்றிவேல் முருகா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக