சனி, 13 அக்டோபர், 2018

நவராத்திரி_உருவான_கதையும்_கொலுபடிகளின்_தத்துவமும்

தினம் இரு தகவலில் இன்றைய முதல் தகவல் இதோ:-

நவராத்திரி_உருவான_கதையும்_கொலுபடிகளின்_தத்துவமும்

*நவராத்திரி.* பெண்கள் விரும்பி செய்யும் ஓர் தெய்வீக பெருவிழா. நவராத்திரி நாட்களில் வீட்டை அலங்கரித்து, கொலு அமைத்து வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களையும், கன்னி பெண்களையும் அழைத்து அவர்களுக்கு தாம்பூலம் கொடுத்து, நிகழ்ச்சிக்கு வந்த விருந்தினர்களை மரியாதை செய்து அவர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி இதனால் அந்த இல்லத்தில் முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறும் நன்னாள் இது.

இப்படி நன்மை தரும் நவராத்திரியை எப்படி கொண்டாடுவது? அதன் மகிமை என்ன? என்பதை நாம் இப்போது தெரிந்துக் கொள்ள இருக்கிறோம்.

அக்டோபர் மாதம் 8.10.2018 அன்று மகாளய அமாவாசையாக இருப்பதால் அன்றைய தேதியிலேயே நல்ல நேரத்தை பார்த்து கொலு வைக்க வேண்டும்.

*நவராத்திரி_உருவான_கதை*

ரம்பன் என்பவனுக்கும் எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் பிறந்தவன்தான் மகிஷன். அதனால்தான் மனிதஉடலும் எருமை தலையுடன் தோன்றினான். மகிஷன், பிரம்மனை நினைத்து மேருமலையில் பதினாயிரம் ஆண்டுகள் தவம் செய்து, “தனக்கு யாராலும் மரணம் நேரக்கூடாது, அப்படியே நேர்ந்தால் அது பெண்ணால்தான் இருக்கவேண்டும்” என்ற வரத்தை பெற்றான். பெண்கள் பூ போல் இருப்பதால் அவர்களால் இரும்பை விட வலிமையான தன்னை கொன்று விட முடியாது என்று மகிஷன் நினைத்ததால் இப்படி ஒரு வரத்தை பெற்றான்.

நினைப்புதான் பிழப்பை கெடுக்கும் என்ற சொல்வார்களே அது, மகிஷனுக்கு பொருத்தமாகிவிட்டது. தேவலோகத்தையே கைப்பற்ற நினைத்தான். இதனால் தேவர்கள் பயந்து மகாவிஷ்ணுவிடம் உதவி கேட்டார்கள். மகாவிஷ்ணு தேவர்களுக்காக உதவி செய்ய மகிஷனிடம் போருக்கு சென்றார். ஆனால் மகிஷனை விஷ்ணுபகவானால் வீழ்த்த முடியவில்லை. எதனால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்று அறிந்தபோது, பெண்ணால்தான் தமக்கு மரணம் வரவேண்டும் என்ற வரத்தை பிரம்மனிடம் பெற்றால்தான் தன்னால் மகிஷனை அழிக்கமுடியவில்லை என்பதை உணர்ந்து, விஷ்ணுபகவான் சிவனிடம் முறையிட, சிவன் தன் சக்தியால் “சந்தியாதேவி” என்ற சக்தியை உருவாக்கினார்.

அந்த சக்தியின் கண்கள் கறுப்பு. சிகப்பு, வெண்மை என்ற நிறத்தில் இருந்தது.

“போருக்கு வா” என்று மகிஷனை அழைத்தால் நிச்சயம் அவன் வரமாட்டான். உஷாராகிவிடுவான். அதனால் மகிஷனே தன்னிடம் போர் செய்ய வர வேண்டும் என்ற எண்ணத்தில் சந்தியாதேவி மகிஷனின் பார்வையில் விழும்படி நடந்து சென்றாள். சக்தியின் அழகில் மயங்கிய மகிஷன், சக்தியை திருமணம் செய்ய தூது விட்டான். இதை கேட்ட சந்தியாதேவி, “தன்னை யார் போர் செய்து வீழ்த்துகிறார்களோ அவரைதான் நான் திருமணம் செய்வேன்” என்று மகிஷனின் தூதுவனிடம் சொல்லி அனுப்பினாள்.

இதனால் மகிஷன் தன் வீரர்களை தேவியிடம் போருக்கு அனுப்பினார். ஆனால் தேவியிடம் போர் செய்தவர்கள் உயிருடன் திரும்பாததை கண்ட மகிஷன், கடைசியாக அவனே தேவியிடம் யுத்தத்திற்கு வந்தான். தேவி, மகிஷனை பலமாக போராடி அவனுடைய எருமை தலையை தன் சக்கரத்தால் வெட்டி வீழ்த்தினாள். மகிஷன் மாண்டான். இதை கண்ட தேவர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். மகிஷனிடம் போராடி போர் செய்து தேவலோகத்தையும், பூலோகத்தையும் காப்பாற்றியதால் “மகிஷாசுரமர்த்தினி” என்று சக்திதேவியை போற்றினார்கள். ஒன்பது நாள் போர் செய்து பத்தாவது நாள் தேவி வெற்றி பெற்றதால் விஜயதசமி உருவானது.

*கொலுவில்_பொம்மைகள்_வைக்கும்_வழக்கம்_உருவான_சம்பவம்*

தான் உண்டு தன் நாடு உண்டு என்று இருந்த சுரதா என்ற அரசரிடம் எதிரிகள் போர் செய்ய வந்தார்கள். அவர்களிடம் போர் புரிந்து ஜெயிப்பது என்பது ஆகாத காரியம். அத்தனை வலிமை தன்னிடமும், தன் நாட்டிடமும் இல்லை என்பதை உணர்ந்த அரசர், தன் குருவான சுமதாவிடம் ஆலோசனை கேட்டார்.

“நீ காளியை வணங்கினால் எதிரிகள் காலியாகி விடுவார்கள்.” என்றார் குருதேவர்.

தண்ணீரையும், மணலையும் லிங்கமாக செய்து அம்பிகை வழிப்பட்டது போல் தானும் காளிதேவியை மண்ணால் சிலைசெய்து வழிப்படவேண்டும் என்ற விருப்பத்தில் மணலால் அன்னையின் உருவத்தை செய்துவழிப்பட்டார் மன்னர் சுரதா.

காளிதேவி, அரசரின் தவத்தை ஏற்று, மன்னருக்கு எதிரிகளை வெல்லும் சக்தியை அருளினாள். அத்துடன் “பஞ்சபூதங்களில் ஒன்றான மணலால் என்னை பூஜித்ததால், உனக்கு சகல நலங்களும், வளங்களும் கிடைக்கும்.” என்ற ஆசி வழங்கினாள் அன்னை. இதன் பிறகுதான் கொலுவில் மண்ணால் உருவாகும் பொம்மைகள் இடம் பெற்றது.

*கொலுபடிகளின்_தத்துவம்*

காரணம் இல்லாமல் காரியம் இல்லை என்பது போல், எல்லா விஷயத்திற்கும் ஒரு காரணத்தை நம் முன்னோர்கள் வைத்திருப்பார்கள். கொலு படிகளுக்கும் அர்த்தத்தோடு காரணம் இருக்கிறது. புழுவாய் பிறந்து, மரமாகவும் பிறந்து, மனிதராகவும் பிறந்து, கடைசியில் இறைவனை அடைகிறோம் என்ற அர்த்தத்தில்தான் நவராத்திரி அன்று ஒன்பது படிகளில் பொம்மைகளை வைக்கிறோம்.

*முதல்_படி,* அதாவது கீழ் படியில் – ஓரறிவு உயிர் இனமான புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் வைக்க வேண்டும்.

*இரண்டாம்_படியில்* – இரண்டறிவான நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

*மூன்றாம்_படியில்* - மூவறிவான கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

*நான்காவது_படியில்* - நான்கு அறிவான நண்டு, வண்டு பொம்மைகள் வைக்க வேண்டும்.

*ஐந்தாம்_படியில்* - ஐயறிவான நான்குகால் விலங்குகள், பறவைகள், போன்ற பொம்மைகள் வைக்க வேண்டும்.

*ஆறம்_படியில்* - ஆறறிவான மனிதர்களின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

*ஏழாம்_படியில்* – சாதாரண மனிதர்களுக்கு மேலான மகரிஷிகளின் பொம்மைகள் வைக்க வேண்டும்.

*எட்டாம்_படியில்* - தேவர்களின் உருவங்கள், நவக்கிரக பகவான்கள், பஞ்சபூத தெய்வங்களின் பொம்மைகள் வைக்கலாம்.

*ஒன்பதாம்_படியில்*– முதலில் விநாயகரை வைத்த பிறகு பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற மும்மூர்த்திகளையும், சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய பெண் தெய்வங்களையும் வைக்க வேண்டும்.. இதில், சரஸ்வதி-லஷ்மிக்கும் நடுவில் அன்னை சக்திதேவி இருக்க வேண்டும்.
பொதுவாக கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்கும் போது கடைசிப்படியான மேல்படியில் இருந்து வைக்க ஆரம்பிக்க வேண்டும். முதலில் மேலே உள்ள கொலுப்படியில் வைக்க வேண்டியது விநாயகர். விக்னங்கள் தீர்க்கும் விநாயகரை முதலில் கொலுப்படியில் வைத்த பிறகுதான் மற்ற பொம்மைகளை வைக்க வேண்டும் என்று பராசக்தி தேவி சொல்லி இருப்பதாக “தேவி பாகவதம்” சொல்கிறது.

ஒன்பது படிகள் வைக்க முடியாதவர்கள், முப்பெரும் தேவியை குறிப்பதாகும் 3 படிகளும் வைக்கலாம். அல்லது சக்தியின் சக்கரமான 5 படிகளும் வைக்கலாம். சப்தமாதர்களை குறிக்கும் 7 படிகளும் அமைக்கலாம். நவகிரகங்களை குறிக்கும் 9 படியும் வைக்கலாம். ஆக, கொலு படிகள் 3,5,7,9 போன்ற எண் வரும்படி அமைக்கலாம்.

*பூஜை_பாடல்கள்*

துர்க்காஷ்டகமும், லட்சுமி அஷ்டோத்திரமும் சரஸ்வதி அஷ்டோத்திரம், லலிதா சகஸ்ரநாமம், திரிசதிதேவி பாகவதம், சௌந்தர்ய லஹரி, அபிராமி அந்தாதி போன்ற பாடல்களை - ஸ்லோகங்களை படிக்கலாம் அல்லது கேசட்டில் ஒலிக்கவும் செய்யலாம்.

அத்துடன் தினமும் ஒரு சுமங்களி பெண்களுக்காவது விருந்து படைக்க வேண்டும். இயலாதவர்கள் நவதானியங்களால் செய்யும் சுண்டல்களை ஒவ்வொரு நாளும் பெண் குழந்தைகளுக்கு தர வேண்டும்.

ஒன்பது நாளில், உங்களுக்கு வசதிப்படும் ஏதாவது ஒரு நாளில் ஒன்பது பெண்களை அழைத்து அவர்களுக்கு உணவு அல்லது இனிப்பு பண்டங்கள் கொடுத்து, மஞ்சல் குங்குமச்சிமிழ், பூ, ரவிக்கை, கண்ணாடி, சீப்பு, தேங்காய், பழம், வெற்றிலை-பாக்கு போன்றவை தர வேண்டும்.

*விஜயதசமி_என்ற_பெயர்_காரணம்*

பாண்டவர்கள் வன்னிமரத்தில் தங்களுடைய ஆயுதத்தை மறைத்து வைத்துவிட்டு விராட நகரத்தில் அஞ்ஞான வாசம் செய்தார்கள். இதை அறிந்த துரியோதனன் எப்படியாவது பாண்டவர்களை வெளியே கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்தில் விராட நகரத்தில் இருந்த பசுமாட்டை எல்லாம் சிறைபிடித்தான். அவனின் நோக்கம், வீண் சண்டை இழுத்து பாண்டவர்களை வெளிகொண்டு வர வேண்டும் என்பதுதான். அமைதியாக இருந்தாலும் அதை பொருக்காத சிலர் வீண் சண்டைக்கு இழுப்பதுதானே சிலரின் குணம். இதை யாராலும் மாற்ற முடியாது அல்லவா. அதுபோல் துரியோதனனும் பாண்டவர்களை போருக்கு அழைத்தான்.

இதனால் கோபம் கொண்ட விஜயனான அர்ஜுனன், விராடன் மகன் உத்தரனை முன்னிறுத்தி கொண்டு வன்னிமர பொந்தில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை எடுத்து கௌரவப்படையை வென்றார். தசமி அன்று வென்றதால் ஊர்மக்கள், “நம் விஜயன், தசமி அன்று கௌரவப்படையை வீழ்த்தினார். இனி பாண்டவர்களுக்கு வெற்றிதான்” என்று பேச ஆரம்பித்தார்கள். அன்றிலிருந்து“விஜயதசமி” என்ற பெயர் ஏற்பட்டது. மகாநவமி அன்று ஆயுதங்களுக்கு பூஜை செய்ததால் “ஆயுதபூஜை” என்ற பெயரும் ஏற்பட்டது.

*இச்சாசக்தி_ஞானசக்தி_கிரியாசக்தி_உருவான_கதை*

ஒரு சமயம், மிகப்பெரிய பேரழிவு ஏற்பட்டது. திரும்ப உலகத்தை உருவாக்கும் பெரிய கடமை இறைவனுக்கு உண்டானது. அதனால் இச்சா சக்தி-விருப்பம் நிறைவேறுதல், ஞான சக்தி- ஞானம்,அறிவுபெறுதல், கிரியா சக்தி- ஆக்கம், உருவாக்குதல் என்ற பூலோக மக்களுக்கு தேவையானதை முதலில் உருவாக்கினார் என்கிறது புராணம். இதனால் நவராத்திரி அன்று முப்பெரும் தேவிகளின் ஆசியை பரிபூரணமாக பெறுகிறோம்.

*சரஸ்வதி_பூஜைமுறை*

சரஸ்வதி பூஜையன்று பூஜை ஆரம்பிக்கும் முன் மஞ்சளில் விநாயகரை பிடித்து விநாயகருக்கு குங்கும்,அறுகம்புல் மலர்கள் சமர்பிக்க வேண்டும். நாம் பயன்படுத்தும் கல்வி அல்லது கணக்கு புத்தகங்களில் பொட்டு வைத்து சரஸ்வதிதேவி படத்தின் முன் வைக்க வேண்டும்.
வீடுகளிலும், அலுவலகங்களிலும் சரஸ்வதி படத்துக்கு சந்தனம் தெளித்து மஞ்சள்-குங்குமம் பொட்டு வைத்து, மல்லிகை பூ, வெண்தாமரை வைத்து அலங்கரிக்க வேண்டும்.

*நெய்வேதியம்*

சுண்டல், சக்கரைப் பொங்கள், வடை, பொறி, கடலை, அவல், நாட்டுசக்கரை, பழங்களையும் வைத்து பூஜிக்க வேண்டும்.

*ஆயுத_பூஜை*

ஆயுத பூஜையில் அன்று வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி, சமையல் பாத்திரங்களில் ஒரு சில பாத்திரங்கள் மற்றும் வீட்டின் உபயோக பொருட்களுக்கு விபூதி தெளித்து சந்தனம் பொட்டு வைத்து குங்குமம் வைக்க வேண்டும். நம் அலுவலகத்தில் உள்ள பொருட்களுக்கும் வாகனங்களுக்கும் பூஜை செய்ய வேண்டும். காரணம், அந்த பொருட்களை வாங்குவதற்கு பொருளாதர வசதி தந்த முப்பெரும் தேவிகளுக்கு மரியாதையும் நன்றியும் செய்வதாக ஐதீகம்.

*பூஜை_மந்திரம்*

கணபதி மந்திரமும், சரஸ்வதிக்கு உகந்த காயத்திரி மந்திரங்களும் சொல்லலாம். இந்த மந்திரங்களை சொல்வதால் பூஜை செய்த பலன் இன்னும் சிறப்பாக கிடைக்கும்.

*ஓம்கணபதி_காயத்ரி*

ஓம் ஏகதந்தாய வித்மகே!
வக்ர துண்டாய தீமகி!
தன்னோ தந்தி ப்ரசோ தயாத்!

*சரஸ்வதி_மந்திரம்*

ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே
பிரஹ்மபத்ன்யை ச தீமஹி
தன்னோ வாணீஹ் ப்ரசோதயாத்
விஜயதசமி

மறுநாள் விஜயதசமி அன்று நல்ல நேரம் பார்த்து பூஜையில் வைத்த புத்தகத்தையும், பொருட்களையும் உபயோகப்படுத்த வேண்டும். புதிய தொழில் தொடங்கவும் விஜயதசமி சிறந்த தினமாகும். குழந்தைகளை பள்ளியில் சேர்க்க இந்த தினம் சிறப்பானது. இப்படி நல்ல செயல்களை விஜயதசமி அன்று செய்தால் அதற்குரிய பலன் வைரம் போல் ஜொலிக்கும்.

ஏற்றமான வாழ்க்கை அமைய கலைவாணியின் அருளை பெறுவோம். .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக