திங்கள், 1 அக்டோபர், 2018

மண் மணக்கும்கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்!


மண் மணக்கும்கதைகள்... அருள் சுரக்கும் சாமிகள்!

இயற்கை எவ்வளவு பிரமாண்டமோ அவ்வளவு விநோதங்கள் நிறைந்தது. ஒருபுறம் அதன் சீற்றம் மனிதனைப் பயமுறுத்தினால், மற்றொரு புறம் தனது கொடைகளால், அவனது வாழ்க்கையில் இரண்டறக் கலந்தது. மனிதன், ஒளி தரும் ஆதவனுக்கு நன்றி சொன்னான்; மழை தந்த வானத்துக்கு வந்தனம் செய்தான்; நெல் விதைத்தால் பொன் விளைந்த பூமியைத் தாயாகவே கருதி போற்றினான். மலைகளையும் மரங்களையும் ஆராதித்தான்!
இயற்கையை மட்டுமா? தன் முன்னோரை, உயிர் நிகர் தலைவனை, கற்பிலும் தியாகத்திலும் சிறந்த குலப்பெண்களையும் தெய்வங்களாக்கி வணங்கினான்; வழிபாடு ஆரம்பமானது! மர வழிபாடு, புற்று வழிபாடு, நடுகல் வழிபாடு, உருவ வழிபாடு... என வழிபாடுகள் பரிணமித்தது இப்படித்தான்!
'வழிப்படல்’ எனும் வார்த்தையே வழிபாடு என்றானதாகச் சொல்கிறார்கள் ஆய்வாளர்கள். முன்னோர் வழிப்படல்... அதாவது, முன்னோர் வழி நிற்றல் என்பது, இன்றும் கிராமங்களில் உயிர்த் திருக்கும் அறம். அங்கு வாழ்வோருக்கு... வில்லிசை,கணியன் மற்றும் நாட்டுப்புறப் பாடல்களில் வாழும் குலசாமிகளின் கதைகளும், தங்கள் முன்னோரின் வரலாறும், தலைவர்களின் சரித்திரமும்தான் புராணம், இதிகாசம் எல்லாமே!


மண்மணக்கும் அந்தச் சாமிகளின் கதைகள், பல மகிமைகள் நிறைந்தது; நம் பாரம்பரியத்தைச் சொல்வது; நம் மனதைப் பிசைந்து பக்குவப்படுத்துவது. அவற்றுள் சில கதைகளும் தகவல்களும் உங்களுக்காக...
நெ ல்லைச் சீமையில் 'முப்பிடாதி’ என்ற பெயர் பிரசித்தம். எண்ணற்றோருக்கு குலதெய்வமாகத் திகழும் இந்த அம்மன், அசுரர்கள் மூவருக்கு காவல் தெய்வமாக திகழ்ந்தவளாம். ஆச்சரியம்தான் இல்லையா? புராணங்களில் வரும் திரிபுராதியர் கதையை அறிந் திருப்பீர்கள் (இதே இதழில், 'தெரிந்த புராணம் தெரியாத கதை’ பகுதியில் உள்ள அதே கதைதான்).
இரும்பு, பொன், வெள்ளியாலான... அந்த அசுரர்களின் மூன்று கோட்டைகளுக்கும் காவலாக இருந்தவள் இந்த அம்மன் என்கிற ஒரு தகவல் உண்டு. முப்புரங்களையும் காத்ததால், முப்புராரி என்று பெயர். அதுவே பிறகு முப்புடாதி, முப்பிடாரி என்றும் மாறியதாகச் சொல்வர். இது தவிர, நெல்லைச் சீமையில் பல்வேறு பகுதியில் கோயில் கொண்டிருக்கும் இந்த அம்மனுக்கு, அந்தந்த பகுதிகளுக்கே உரிய தனிக்கதைகளும் உண்டு.
நெ ல்லை, செங்கோட்டை, அம்பை, நாகர்கோவில் பகுதிகளில் இசக்கியம்மன் வழிபாடும் பிரசித்தம். சாஸ்தாவின் துணை தெய்வங்களான யக்ஷன், யக்ஷி ஆகியோரையே இயக்கி என்றும் இயக்கன் என்றும் அழைத்தனர். இதில் 'இயக்கி’ என்பதே இசக்கி என்றான தாம். தென்னகத்தின் காவல் தெய்வங்களில் முக்கியமான வரான சுடலைமாடனின் கதையிலும் இசக்கியம்மன் பேசப்படுகிறாள்!
ஞா னப்பழம் கிடைக்காததால் முருகவேளும், அம்மாவைப் போன்ற குணவதியே தனக்கு மனைவியாக வேண்டும் எனும் வீறாப்புடன் பிள்ளையாரும் கயிலையில் இருந்து பிரிந்து சென்றுவிட, பிள்ளை ஏக்கத்தால் தவித்திருந்தாள் பார்வதியாள். அப்போது, பரமேஸ்வரன் வந்தார்.அவள் அருகில் இருந்த தீபத்தைத் தூண்டினார்.அதன் காரணமாக ஏற்பட்ட பொறி, அன்னையின் மடியில் விழுந்து பிள்ளையானது. ஆனால், அது பொல்லாத பிள்ளையாக வளர்ந்தது. 3 வயதிலேயே... இரவில் அன்னை தூங்கியதும், விறுவிறு வென பூலோகத்தில் தில்லை வனத்தின் சுடலைக்கு (சுடுகாடு) வந்து மாமிசம் புசித்துத் திரும்புவானாம். இதையறிந்த ஈஸ்வரன், 'கயிலைக்கு உகந்த பிள்ளை அல்ல; பூமியின் காவலுக்கு உகந்த பிள்ளை இவன்’ எனக் கூறி, அவனை பூலோகம் செல்லப் பணித்தாராம். பார்வதி யாளும் பிரிய மனமின்றி பிள்ளையை அனுப்பி வைத்தாள். கூடவே, வனப் பேச்சியும் துணைக்கு வந்தாளாம்.


பூவுலகில், குமரி பகவதிக்குச் சொந்த மான எட்டு கிடாரப் பொன்னை பாதுகாத்து வந்தார் சுடலை. இவர் வேட்டைக்குச் சென்றிருந்த ஒரு தருணத்தில், மந்திரவாதி ஒருவன் ஒரு கிடாரம் பொன்னை கவர்ந்து சென்றான். இதைத் தொடர்ந்து, மந்திரவாதியின் மகளை சுடலை மாடன் காதலித்ததும், மந்திரவாதியின் நில புலன்களை அவர் நாசப்படுத்தியதும், சமாதானத்துக்கு வந்த மந்திர வாதியிடம் அவன் மகளையே அவர் பலி கேட்டதும், இறுதியில் அவனை அழித்தொழித்ததையும்... (ஊருக்கு ஊர் சிற்சில வேறுபாடுகளுடன்) கதைகதையாய் சொல்கின்றன வில்லிசைப் பாடல்கள்! சுடரிலிருந்து பிறந்ததால் சுடலை என்று பெயர் எனச் சிலரும்; சுடலையை (சுடலை-சுடுகாடு) காத்திருப்பதால், சுடலை மாடன் என்று பெயர் வந்தது என வேறு சிலரும் விவரிப்பர். ஆறுமுகமங்கலம், சீவலப்பேரி, சாத்தான்குளம் ஆகிய ஊர்களில் இவரது கோயில்கள் உண்டு.
ம துரைக்காரர்களுக்கு பரிச்சயமான பெயர் பாண்டி முனீஸ்வரர். மதுரை மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தூரத்திலுள்ள மேலமடை கிராமத்தில், கோயில் கொண்டுள்ளார். பாண்டி ஐயா என உரிமை யோடு அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.
ஒரு காலத்தில் மதுரைக்கு பஞ்சம் பிழைக்க வந்த ஒரு கூட்டம், மானகிரி எனும் கிராமத்தில் தங்கியது. அவர்களில் கிழவி ஒருத்திக்கு கனவு வந்தது. அதில் தோன்றிய ஜடாமுடி தரித்த உருவம், ஓரிடத்தைக் குறிப்பிட்டு, 'அங்கு நான் பூமிக்குள் புதைந்திருக்கிறேன். என்னை வெளியில் எடுத்து, வழிபட்டு வந்தால், உன்னையும் உன் வம்சாவளியினரையும் சிறப்பாக வாழ வைப்பேன்!’ என்று கூறி மறைந்தது. விடிந்ததும் தன் கூட்டத்தாரிடம் அவள் கனவை விவரிக்க... அனைவரும் அந்த இடத்துக்குச் சென்று பூமியைத் தோண்டினர். பூமிக்குள் தவக்கோலத்தில் பத்மாசன கோலத்தில் கற்சிலை இருந்தது. பயபக்தியுடன் அந்தச் சிலையை எடுத்து, சிறிய குடிசையில் பிரதிஷ்டை செய்தனர். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்டு பலரும் வந்து, அந்தச் சிலையைத் தரிசித்துச் சென்றனர். ஒருநாள் சந்நியாசி ஒருவர் வந்தார். சிலையைத்  தரிசித்ததும் அருள் வந்தது அவருக்கு. 'பாண்டியன் நெடுஞ்செழியனின் கோட்டை இருந்த இடம் இது. இதே இடத்தில் வைத்து பாண்டியனை சபித்த கண்ணகி, மதுரையை எரித்தாள். மறுபிறப்பெடுத்த பாண்டியன், முற்பிறவியில் செய்த தவற்றுக்குப் பரிகாரமாக, இங்கு சிவனாரைக் குறித்து தவமிருந்தான். அதனால் மகிழ்ந்த ஈசன், மறுபிறப்பு நீக்கி அவனைத் தன்னிடமே அழைத்துக் கொண்டார். எனவே, தவக்கோலத்திலேயே கல்லாகி மண்ணுக்குள் புதையுண்டு போனான் பாண்டியன். அவனே, இப்போது வெளிவந்திருக்கிறான். இவனால், இனிமேல் இந்த இடம் பிணி போக்கும் ஸ்தலமாகத் திகழும்!'' என்றார். அதை நம்ப மறுத்த ஊரார், அப்போதே அந்த பகுதியைச் சுற்றிப் பல இடங்களில் தோண்டிப் பார்த்தனர்.
தோண்டப்பட்ட இடங்களில், மண்ணுக்குள் கருகிய செங்கற்களும் கருங்கற்களுமாகக் கிடந்தன. அவற்றைப் பார்த்த ஊராருக்கு, பெரியவரது வார்த்தைகளில் நம்பிக்கை வந்தது. அவரைத் தேடியபோது, அவர் அங்கு இல்லை. அவரது வாக்கை தெய்வ வாக்காகவே கருதி, அன்று முதல் அந்தச் சிலையை 'பாண்டி முனீஸ்வரர்’ என்ற பெயரில் வழிபட ஆரம்பித்தார்களாம்!
மே ல்மலையனூரில் இருந்து கர்ப்பிணி மனைவியுடன் பயணப்பட்டார் ஒருவர். இடுப்பில் கூடையை சுமந்தபடி, சூலத்தையே ஊன்றுகோலாக ஊன்றி நடந்துவந்த அந்தப் பெண்ணுக்கு கடும் தாகம். அப்படியே ஒரு மரத்தடியில் அமர்ந்தாள். ''அப்படியே படுத்துக்கொள்; தண்ணீர் எடுத்து வருகிறேன்'' என்று கூறிவிட்டு, தண்ணீரைத் தேடி ஓடினார் கணவர்.
வறண்டு கிடந்த குசஸ்தலை ஆற்றுப் படுகையைக் கடந்து, ஓரிடத்தில் தண்ணீரை சேகரித்துக் கொண்டு திரும்பினார். என்ன அதிசயம்! ஆற்றில் கரைபுரண்டு ஓடியது வெள்ளம். அதைக் கடக்கமுடியாமல் திகைத்து நின்றார். பல நாழிகைகளுக்குப் பிறகு வெள்ளம் குறைந்ததும், ஆற்றைக் கடந்து மனைவி இருக்கும் இடத்தை அடைந்தவருக்கு அதிர்ச்சி; அவரின் மனைவி, புற்றுருவ மாகக் கிடந்தாள்! காலப்போக்கில் அந்த இடம் விளை நிலமானது. ஒருநாள் விவசாயி ஒருவரின் ஏர்க்கலப்பை பட்டு ஓரிடத்தில் ரத்தம் பீறிட்டது. அதிர்ந்து போனவர் மயங்கிச் சரிந்தார். அருகிலிருந்தவர்கள் ஓடி வந்து விசாரிக்க... அவர்களில் ஒரு மூதாட்டிக்கு அருள்வந்தது. ''நான் மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி. இங்கு புற்றுருவமா கிடக்கிறேன். கோயில் கட்டி, என்னைக் கும்பிடுங்க. உங்களை நல்லா பாத்துக்கறேன்’ என்றபடி மயங்கி விழுந்தாள். மெய்சிலிர்த்த மக்கள் அங்கே (திருவள்ளூர் அருகே புட்லூர்) கோயில் கட்டினர். பூக்கள் பூத்துக் குலுங்கிய வயலில் கண்டெடுத்ததால், பூங்காவனத் தம்மன் எனப் பெயரிட்டு வழிபடத் துவங்கினர்.
ச முட்டியான்- மன்னர் தொண்டைமானின் அன்புக்கு உரியவன். அநாதரவாக நின்ற அவனை சிறுவயதிலேயே அரண்மனைக்கு அழைத்துவந்துவிட்டார். சாமர்த்தியசாலி யான அந்தச் சிறுவன், தொண்டைமானின் அடங்காத சண்டிக் குதிரையையும் அடக்கிக் காட்டியவன். அவன் வாலிபனானதும் அவனைத் தளபதியாக்கி, தன் மகளையும் கட்டி வைத்தார் தொண்டைமான். விரைவில் சமுட்டியானின் மனைவி கர்ப்பம் தரித்தாள். இந்த நிலை யில் பெருமழை பெய்து, மதானமேடு அணை உடைந்து வெள்ளம் ஊருக்குள் வந்தது. பலமுறை முயற்சித்தும் அணை உடைப்பை சரிசெய்ய இயலவில்லை. தொண்டைமானின் சிற்றரசு, நவாபு ஒருவனுக்குக் கட்டுப்பட்டது! அவன், அணையைச் செப்பனிட 7 நாட்கள் கெடு விதித் தான். சமுட்டியானும் ஊரில் இல்லை. கலங்கினார் தொண்டைமான். அன்றிரவு ஓர் அசரீரி, 'பெற்றோருக்கு ஒற்றைப் பிள்ளையாய் பிறந்து, இப்போது தலைச்சன் பிள்ளையை வயிற்றில் சுமக்கும் கர்ப்பிணியை பலிகொடுத்தால், அணை உடையாது’ என ஒலித்தது. நாடெங்கும் பறை அறிவித்தனர். அதிர்ந்துபோன மக்கள், தலைச்சன் பிள்ளையை சுமக்கும் தங்கள் பெண்ணுடன், பக்கத்துப் பாளையங்களுக்குச் சென்றுவிட்டனர். தொண்டைமானின் மகளுக்கோ வளைகாப்பு நாள் நெருங்கியது. அவள் தனது வளைகாப்பை அணைப்பகுதியில் வைத்து நடத்த வேண்டினாள். அப்படியே செய்தார் தொண்டைமான்.
விழா நாளன்று யாரும் எதிர்பார்க்காத வகை யில், குறுவாளால் தன்னையே பலி கொடுத்தாள் தொண்டைமானின் மகள். அவளது தியாகத்தை எண்ணி பாளையமே கண்ணீர் வடித்தது. அவள், அவர்களின் தெய்வமாகிப் போனாள். அங்கேயே அழகான கோயில் எழுப்பப்பட்டது. அந்த இடத்துக்கு, 'உருவறுத்தான் கொல்லை’ என்றும், அவளுக்கு உயிர்பலியாயி என்றும் பெயரிட்டனர். அதுவே மருவி, தற்போது 'உருப்பிடி அம்மன்’ என்று வணங்கப்படுகிறாள் அந்தத் தெய்வத்தாய். வடலூர்-சென்னை சாலையில் கஞ்சமநாதபுரம் எனும் இடத்தில் உள்ளது இவளின் ஆலயம்.
செ ன்னையின் சுற்றுவட்டாரங்களில் பச்சை அம்மன் எனும் தெய்வம் குறித்து பல்வேறு தகவல்கள் உண்டு. சூரகோபன் எனும் அசுரனை அழிக்க படை பரிவாரங்களுடன் புறப்பட்டாள் பராசக்தி; அப்போது அவள், பச்சை வண்ணத்தில் ஜொலித்தாள்; அவள் பாதம்பட்ட இடமெல்லாம் வளமானது என்று ஒரு கதை விரியும்!
மன்னன் ஒருவன், சிவனாரிடம் பெற்ற வரத்தால், கங்கையே அவனுக்கு மகளாக, பச்சை அம்மனாக வந்து பிறந்ததாக ஒரு கதை உண்டு! சிவனாரின் திருமேனியில் இடம்பெற வேண்டி தவம் செய்ய வந்த பார்வதி பச்சை நிறத்துடன் திகழ்ந்தாள், அவளே பச்சை அம்மனாக அருள்கிறாள் என்றும் கூறுவர். வேறு சில இடங்களில்... போரில் கணவனை இழந்து, தீயில் புகுந்த பத்தினிப் பெண்களையே பச்சையம்மனாக வழிபடுவதாகக் கூறுகின்றனர்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக