வெள்ளி, 5 அக்டோபர், 2018

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!

தேதி 04.10.2018 வியாழக்கிழமை - குருப்பெயர்ச்சி

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்!

குருபகவான் முழுமையான சுபக்கிரகம் என்று அழைக்கப்படுவர். எந்த விஷயத்தைப் பார்ப்பதாக இருந்தாலும் குருபகவானுடைய அனுக்கிரகம் அந்த ஜாதகருக்கு இருக்கிறதா...

உதாரணமாக ஒவ்வொருவருக்கும் திருமணம் ஆக வேண்டும் என்றால் குருபலன் வந்துவிட்டதா, குரு பார்வை இருக்கிறதா என்பதையே முதலில் பார்ப்போம்.

தற்போது விளம்பி வருடம், புரட்டாசி மாதம் 18 - ம் தேதி வியாழக்கிழமை (4.10.18) குரு பகவான் சர வீடான துலாம் ராசியிலிருந்து ஸ்திர வீடான விருச்சிகம் ராசிக்குள் சென்று அமர்கிறார்.

குருப்பெயர்ச்சி அன்று வழிபட வேண்டிய குரு ஸ்தலங்கள்....

திருச்செந்தூர்

ஆறுபடை வீடுகளில் இரண்டாவதாகக் கருதப்படும் திருச்செந்தூர் குரு பகவானின் பரிகாரத்துக்கு ஏற்ற தலமாகும். கடலோரத்தில் அமைந்த இந்த ஆலயத்தில் உள்ள முருகப்பெருமானையும், குரு பகவானையும் வழிபட்டு பரிகாரம் செய்வது நல்ல பலனை அளிக்கும்.

தென்குடி_திட்டை

இந்த குருஸ்தலம் கும்பகோணத்தில் இருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது இங்குள்ள குரு, ராஜயோக குருவாக தனிச்சந்நதியில் காட்சி அளிக்கிறார்.

பட்டமங்கலம்

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இக்கோவிலில், குரு பகவான் கார்த்திகைப் பெண்களுக்கு உபதேசித்த கோலத்தோடு காட்சி தருகிறார்.

திருவாலிதாயம்

சென்னையை அடுத்த பாடி, முகப்பேறு அருகில் உள்ளது. இங்குள்ள குருபகவான் மிகவும் சிறப்பு வாய்ந்தவராக கருதப்படுகிறார்.

ஆலங்குடி

திருவாரூர் மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் தெற்கு நோக்கி வீற்றிருந்து தனி சன்னிதியில் குரு பகவான் அருள்பாலிக்கிறார்.

குருவித்துறை

மதுரை மாவட்டம், சோழவந்தானுக்கு அருகில் உள்ளது. இங்குள்ள பெருமாள் கோவிலில் சிறப்பாக காட்சி தருகிறார் குருபகவான்.

தக்கோலம்

அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வழியில் உள்ளது ஜலநாதீசுவரர் கோயில். இங்குள்ள தட்சிணாமூர்த்தி கலைநயத்தோடு காணப்படுகிறார்.

மயிலாடுதுறை

இங்கு தட்சிணாமூர்த்தியாக அருள் பொழியும் குரு பகவானையும், உத்திர மாயூரம் என்று அழைக்கப்படும் வள்ளர் கோயிலில் தட்சிணாமூர்த்தியாக ரிஷப தேவருக்கு உபதேசம் செய்யும் மேதா தட்சிணாமூர்த்திப் பெருமாளையும் வழிபட குரு தோஷங்கள் நிர்வத்தியாகும்.

அயப்பாக்கம்

சென்னை, அயப்பாக்கத்தில் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்தி 16 அடி உயர பிரம்மாண்ட மூர்த்தியாகும். குருபகவானின் இயல்புபடியே இவர் கல்விச்செல்வம் வழங்குவதில் தன்னிகரற்றவர் என்பது பக்தர்கள் அனுபவம்.

கும்பகோணம்

கும்பகோணத்தில், ஆதி கும்பேஸ்வரர் ஆலயம் குரு பரிகாரத்திற்கு ஏற்ற ஆலயமாகக் கருதப்படுகிறது. குருபகவான் வழிபட்ட தலங்களில் இதுவும் ஒன்று.

குச்சனூர்

தேனி மாவட்டம் குச்சனூரில் குருபகவான் வடக்கு திசை நோக்கி யானை வாகனத்துடன் ராஜதோரணையில் அருள்கிறார். இவரை வழிபட்டால், பித்ரு தோஷங்களில் இருந்து நிவாரணம் பெறலாம்.

திருவொற்றியூர்

சென்னை திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோயிலுக்கு முன்பு தட்சிணாமூர்த்திக்கு தனிக்கோயில் உள்ளது. சுமார் 10 அடி உயரத்தில் அற்புதமான வடிவழகுடன் வீற்றிருக்கிறார். ஆலமரம் இவருக்கு குடை பிடிப்பதுபோல் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களிலும் குருபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.அனைத்து சிவாலயங்களிலும் நவக்கிரகத்தில் குரு வீற்றிருப்பார்.

 அது மட்டுமில்லாமல் தனி சந்நதியில் தட்சிணாமூர்த்தியாகவும் இடம் பெற்றிருப்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக