அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?
அட்சய திருதியை 2020
அட்சய திருதியை என்பது இந்துகள் மற்றும் சமணர்களின் புனித நாள் ஆகும். சித்திரை மாதத்தின் முதல் அம்மாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் , என்றும் குறையாது என்று பொருள். அட்சய திருதியை அன்று நற்பயன்களை தரக்கூடிய நாளாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி உத்தமமான பலன்களை தருவதாக கூறப்படுகிறது. அதிலும், சித்திரை மாத அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை தினம் மிகவும் உத்தமமான நாளாகவும் வாழ்வில் வளங்கள் குவிக்கும் நாளாகவும் சிறப்பித்து கூறப்படுகிறது. இதுதான் ‘அட்சய திருதியை’.
அட்சய திருதியை நாளில் தொடங்கப்பட்ட எந்தவொரு காரியங்களும் தொடர்ச்சியாக வளர்ந்து நன்மையைக் கொடுக்கும் என்பது நம்பிக்கை. மங்களகரமான நீண்டகால சொத்துக்களான தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது.
அட்சய திருதியை 2020
அட்சய திருதியை 2020 தேதி:
ஏப்ரல் 26, 2020
அட்சய திருதியை பூஜை நேரம்:
காலை 5:45 - பகல் 12:19
அட்சய திருதியை செய்ய வேண்டியது:
அட்சய திருதியை அன்று அதிகாலையிலேயே எழுந்து நீராடிவிட்டு, பூஜை அறையில் கோலமிட வேண்டும். அதன்மேல் வாழையிலை ஒன்றினை வைத்து இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படியில் நெல் நிறைத்து வைக்க வேண்டும். அதன் பின் கலசத்திற்குப் பொட்டு, பூ வைத்து லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதற்கும் பொட்டு, பூ வைத்து குத்துவிளக்கை ஏற்றி வைக்க வேண்டும். அத்துடன் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வைக்க வேண்டும். அந்தப் பொருள் விலை உயர்ந்த பொருளாகத்தான் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இப்படி செய்வதால் அஷ்டலட்சுமி உங்கள் இல்லம் தேடி வருவாள் என்பது நம்பிக்கை.
அட்சயதிரிதியை அன்று என்னவெல்லாம் செய்யலாம்!?
'அட்சய’ என்றால் அழியாது பெருகக் கூடியது எனப் பொருள்.ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதம், அமாவாசையை அடுத்து வரும் வளர்பிறை திரிதியை நாளை , 'அட்சயதிரிதியை’ திருநாளாகக் கொண்டாடுகின்றோம்.
இன்று தங்கம், வெள்ளி போன்ற பொன் பொருள் ஆபரணங்கள் வாங்கினால், செல்வம் பெருகும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், அட்சய திரிதியை அன்று தர்ம சாஸ்திரங்கள் கூறும் வழியைப் பின்பற்றினால் நாம் கனவிலும் நினைத்துப் பார்க்காத பல நல்ல பலன்களை அடையலாம். 'அட்சய திரிதியை’ அன்று நாம் என்ன செய்யவேண்டும் எவ்வாறு இறைவனை வழிபட வேண்டும் என்று கூறுகிறார் 'சொல்லின் செல்வன்' பி.என்.பரசுராமன்.
அட்சய திரிதியை அன்று நாம் செய்யும் நன்மைகள் பன்மடங்காக பெருகி, அழியாத பலன்களைப் பெற்றுத் தரும். அட்சய திரிதியை அன்று நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான காரியங்கள். கோயிலுக்குச் செல்லுதல், புனித நீராடுதல், பித்ரு காரியம், இறைவனை
வழிபடுதல், நாம ஸ்மரணை மற்றும் எளியவர்களுக்கு இயன்ற அளவுக்கு தானம் செய்தல்.
அட்சயதிரிதியை சிறப்புகள் :
பிரம்மன் தனது சிருஷ்டித் தொழிலைத் தொடங்கியது இந்த நாளில்தான்.
பிரளயம் முடிந்து, வெள்ளத்தில் மிதந்து வந்த கும்பத்தை உடைத்து, சிருஷ்டி மீண்டும் துவங்க சிவ பெருமான் அருளிய தினம்.
திருமகள் திருமாலின் இதயத்தில் குடிகொண்ட தினம். அதனால்தான், இன்றைய தினத்தில் லட்சுமி தேவியை மட்டும் வணங்காமல் பெருமாளையும் சேர்த்து வணங்க வேண்டும் என்பர்.
வனவாசம் சென்ற பஞ்ச பாண்டவர்கள் தவம் இருந்து சூரிய பகவானிடம் அட்சய பாத்திரம் பெற்ற தினம்.
பெருமாளுக்கே கடன் கொடுத்த குபேரன், லட்சுமி தேவியை வணங்கி, செல்வத்தைப் பெற்ற தினம். இன்றைய தினத்தில் லட்சுமி பூஜை, குபேர பூஜையை செய்ய ஐஸ்வர்யம் பெருகும். இயலாதவர்கள், "ஓம் ஐஸ்வரேஸ்வராய நம:" என்று கூறினாலே போதும் என்கிறார் திருமூலர்.
பாற்கடலைக் கடைந்தபோது ரத்தினங்கள், ஐராவதம், கல்பதரு, காமதேனு, சந்திரன், மகாலட்சுமி ஆகியோர் தோன்றினர். இப்படி அலைமகள் அவதரித்த தினம் அட்சயதிரிதியை.
பிட்சாடனரான ஈஸ்வரன், ஸ்ரீஅன்னபூரணியிடம் பிட்சை பெற்றது இந்த நாளில்தான்.
கௌரவ சபையில் திரௌபதியின் மானம் காக்க ஸ்ரீகிருஷ்ணர் துகில் தந்து அருளியது போன்ற புராணச் சம்பவங்கள் நிகழ்ந்ததும் இந்தத் தினத்தில்தான்.
பரசுராமர் அவதரித்ததும் அட்சய திரிதியையில்தான். இந்த நாளில் பரசுராமர் வழிபாடு நன்மை தரும்.
அட்சய திரிதியை அன்று நாம் என்ன வாங்கலாம் ?
அன்றைய தினத்தில் லட்சுமி தேவி வசிக்கும் பொருட்களை வாங்கலாம். அது தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்பதல்ல. பச்சரிசி, வெல்லம், உப்பு ஆகியவற்றையும் நாம் வாங்கலாம். ஏனென்றால் இயற்கை தோன்றும்போது, முதலில் வந்தவை இவைதான்.
என்னென்ன பொருட்களைத் தானம் தரலாம்?
ஒரே இடத்தில் செல்வம் குவிந்திருப்பதை இறைவன் விரும்புவதில்லை. இருக்கப்பட்டவர்கள் இல்லாதவர்களுக்குக் கொடுத்து இல்லாமை நீங்கப் படைக்கப்பட்ட நாள். ஒரு கையளவு நெல் பல மூட்டை அரிசியை உருவாக்க முடியும் . அதே போல நாம் கொடுக்கும் சிறு தானமும் பல மடங்காகத் திரும்ப வரும்.
வெப்பத்தைத் தணிக்கும் வகையில் உடுக்க உடை, குடை, பானகம், நீர் மோர், விசிறி போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம்.
குறிப்பாகத் தண்ணீர் நிறைந்த குடம் கொடுத்தால் அழியாத செல்வம் பெறலாம்.
நோயால் அவதிப்படுபவர்களுக்கு மருத்துவ உதவியும், கிழிந்த ஆடை அணிந்தவர்களுக்கு நல்ல ஆடையையும் அளிக்கலாம்.
தயிர்சாதம் தானம் செய்தால், ஆயுள் பெருகும்.
இனிப்புப் பொருட்கள் தானம் தந்தால், திருமணத் தடை அகலும்.
அரிசி, கோதுமை முதலான உணவு தானியங்களை தானம் செய்தால், விபத்துகள்- அகால மரணம் போன்றவை சம்பவிக்காது.
அட்சய திரிதியை அன்று அன்னதானம் செய்வதால், இறைவனுக்கே அன்னமிட்ட பலன் கிட்டும்; குடும்பத்தில் வறுமை நீங்கும்.
கால்நடைகளுக்குத் தீவனம் அளித்தால் வாழ்வு வளம் பெறும்.
அட்சய திரிதியையும் பித்ருக்கள் காரியமும்...
இன்றைய நாளில் பித்ருக்கள் காரியம் மிகுந்த சிறப்பான ஒன்றாகும். தவிர, அன்று பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்த பின், பசுக்களுக்கு வாழைப் பழம் கொடுப்பது சிறப்பு. அட்சய திரிதியை நாளில் இறைவனுக்குப் படைத்து உண்ணும் பிரசாதம் மிகச் சிறந்ததாகும்.
கிராமத்தில் இருந்த வியாபாரி ஒருவன், அட்சய திரிதியை அன்று கங்கையில் நீராடி, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, ஏழை மக்களுக்குத் தானியங்களை தானம் செய்வதை வழக்கமாக வைத்திருந்தார். இதனால் அடுத்தப் பிறவியில் ராஜ யோகம் பெற்றார். அரசனான பிறகும் அட்சய திரிதியையில் முற்பிறவியில் செய்த புண்ணிய காரியங்களைச் செய்ததால், வைகுண்டம் அடைந்தார். எனவே அமாவாசை அன்று திதி கொடுக்காதவர்கள் கூட அன்றைய தினத்தில் தர்ப்பணம் செய்யலாம்.
அட்சய திருதியை நாளில் செய்யக்கூடிய காரியங்கள்.
குழந்தைக்கு அன்னப் பிராசனம்
சங்கீதம், கல்வி, கலைகள் பயில்வது.
சீமந்தம், மாங்கல்யம் செய்ய, விவாகம், தொட்டிலில் குழந்தையை விட, கிரகப்பிரவேசம் செய்ய, காது குத்த உகந்த தினம்.
நிலங்களில் எரு இட, விதை விதைக்க, கதிர் அறுக்க, தானியத்தைக் களஞ்சியத்தில் சேர்க்க, தானியம் உபயோகிக்க, கால்நடைகள் வாங்க போன்ற விவசாயப் பணிகளில் ஈடுபடலாம்.
வாகனம் வாங்க, புதிய ஆடை அணிய, மருந்து உட்கொள்ள, பயணம் மேற்கொள்ளலாம்.
இந்தப் புண்ணிய நாளில் அழியாத செல்வமான பல புண்ணியங்களைச் சேகரியுங்கள். அதே நேரத்தில் அறிஞர்களையும் முன்னோர்களையும் மறந்துவிட வேண்டாம்.
Posted by .
-புவனாமகேந்திரன்.
மதி கல்வியகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக