திங்கள், 6 ஏப்ரல், 2020

சித்திரை… சிறப்புகள்.

சித்திரை… சிறப்புகள் .

சித்திரை மாதப் பிறப்பை ‘சைத்ர விஷூ புண்ணிய காலம்’ என்பார்கள். ராசி மண்டலத்தில் முதல் ராசியான மேஷத்தில் சூரியன் பிரவேசிப்பது, சித்திரை முதல் நாள்; சூரியன் மேஷத்தில் சஞ்சரிக்கும் காலம் சித்திரை. பல்குண-சைத்ர மாதமாகிய சித்திரையை ‘வசந்த ருது’ என்பார்கள்.

சித்திரை முதல் நாளில், திறந்தவெளியில் சூரியக் கடவுளுக்கு பூஜைகள் செய்வர். பிரம்மன் உலகைப் படைத்தது சித்திரை முதல்நாளில் என்கின்றன சில ஞான நூல்கள்.
சித்திரை முதல் நாளன்று பஞ்சாங்கம் படிப்பது சிறப்பு. இந்த தினத்தில் வீடுகளில் மட்டுமல்ல, கோயில்களிலும் பஞ்சாங்கம் படிப்பார்கள். இந்த வைபவத்துக்கு ‘பஞ்சாங்க படனம்’ என்று பெயர். திதி, வாரம், நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களைக் கொண்டது பஞ்சாங்கம்.
ஒவ்வொரு நாளும் பஞ்சாங்கம் பார்த்து அன்றைய நாளின் திதியை அறிவதால் திருமகள் அருள் கிட்டும்; நட்சத்திரத்தை அறிவதால் வினைகள் தீரும்; அனுதினமும் அன்றைய யோகம் என்ன என்பதை அறிவதால் நோயற்ற வாழ்வு கிட்டும்; கரணம் அறிவதால் காரிய ஸித்தி உண்டாகும். அனுதினமும் கடைப்பிடிக்க வேண்டிய இந்தப் பழக்கத்தை, சித்திரை முதல் நாளே துவங்குவது விசேஷம்!
வருடப் பிறப்பன்று புதுப் பஞ்சாங்கத்தை பூஜையில் வைத்து, மாலை நேரத்தில் அதைப் படிக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. வீட்டிலுள்ள அனைவரும் கூடி அதைக் கேட்பார்கள்.
தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் சித்திரை முதல் நாளை புனித தினமாகக் கொண்டாடுகின்ற னர். கேரளத்தில் ‘சித்திரை விஷு’ என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதக் கடைசி நாள் இரவில், தங்க – வெள்ளி நாணயங்கள், ஆபரணங்கள், நவரத்தினங்கள், பழ வகைகள், காய் வகைகள், புத்தாடை, முகம் பார்க்கும் கண்ணாடி, தேங்காய் ஆகியவற்றை பூஜையறையில் அழகாக அலங்கரித்து வைப்பர். மறுநாள் அதிகாலையில் எழுந்ததும், அந்த மங்கலப் பொருட்களைத்தான் முதலில் பார்ப்பார்கள். இது ‘விஷுக்கணி’ (விஷுக் காட்சி) எனப்படுகிறது. பிறகு, கண்ணாடியில் முகம் பார்ப்பார்கள். சிறியவர்கள், பெரியவர் களுக்கு நமஸ்காரம் செய்வார்கள். அவர்களைப் பெரியவர்கள் ஆசீர்வதிப்பார்கள். அன்றைய தினம் வயதில் சிறியவர்களுக்கும் வீட்டுக்கு வருபவர்களுக்கும் பணம் பரிசளிக்கும் வழக்கம் உண்டு. இதை ‘விஷுக் கைநீட்டம்’ என்பர்.
தமிழகத்தில், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில், வேப்பம்பூக்களைச் சேகரித்துப் பச்சடி செய்து சாப் பிடுவார்கள். கசப்பும் இனிமையும் கலந்தது வேப்பம்பூ பச்சடி. கசப்பும் இனிப்பும் சேர்ந்ததுதான் வாழ்க்கை என்பதை இது உணர்த்துகிறது.

Posted by .
 -புவனாமகேந்திரன்.
    மதி கல்வியகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக