ஆடி மாதத்தின் சிறப்புகள் என்ன?
ஆடி மாதத்தை அடிப்படையாக வைத்துதான் பல சுப நிகழ்ச்சிகளை முன்னோர்கள் நடத்தினர். ஆடியை கற்கடக மாதம் என்றும் அழைக்கிறார்கள்.
மாதங்களைப் பொறுத்தவரை உத்ராயணம், தஷ்ணாயணம் என இரு பிரிவுகள் உள்ளது. இதில் தஷ்ணாயணம் புண்ணிய காலம் ஆடி மாதத்தில் துவங்குகிறது. ஆடி முதல் மார்கழி வரை தஷ்ணாயண காலமாகவும், தை முதல் ஆனி வரை உத்ராயணம் என பிரிக்கப்பட்டுள்ளது. சூரியனின் பாவன இயக்கத்தை (வடகிழக்கு, தென்கிழக்கு) வைத்து இது வரையறுக்கப்படுகிறது.
தஷ்ணாயணம் துவக்கும் ஆடி மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் வெளிப்படும். வேத பாராயணங்கள், மந்திரங்கள், ஜெபங்கள், மாந்த்ரீகம் ஆகியவற்றிற்கு ஆடி மாதம் சிறந்ததாக கருதப்படுகிறது. பிரணாய வாயு அதிகமாக கிடைப்பதும் ஆடியில்தான். ஜீவ ஆதார சக்தி அதிகம் உள்ள மாதமாகவும் இது கருதப்படுகிறது.
ஆடி மாதத்தை சக்தி மாதம் என்றும் பண்டைய ஜோதிட நூல்கள் குறிப்பிட்டுள்ளன. எனவே இந்த மாதத்தில் விதை விதைப்பதை முன்னோர்கள் மேற்கொண்டனர். ஆடிப் பட்டம் தேடி விதைஎன்ற பழமொழி உருவானதற்கும் இதுவே காரணம். உத்ராயண காலத்தில் சூரியனில் இருந்து வெளிப்படும் கதிர்களை விட, தஷ்ணாயண காலத்தில் (ஆடி) சூரியனின் ஒளிக் கதிர்கள் விவசாயத்திற்கு உகந்ததாக இருக்கும்.
சுற்றுப்புறத்தை தூய்மையாக்கி, தெய்வங்களை (அம்மன்) வழிபட்டு உள்ளுணர்வை மேம்படுத்திக் கொள்ளவும் ஆடி மாதம் பயன்படுகிறது. வேப்பிலையை அம்மனுக்கு சாத்தி வணங்குவதும், கூழ் ஊற்றும் விழா நடத்துவதும் ஆடி மாதத்தில் நடக்கிறது.
இதற்கு காரணம், ஆடி மாதத்தில் கிடைக்கும் வேப்பிலைக் கொழுந்துகளுக்கு அபார மருத்துவ, தெய்வீக குணம் உண்டு. ஆடி மாதத்தில் பொதுவாகவே காற்று அதிகமாக வீசும். அந்தக் காலத்தில் எளிதில் ஜீரணிக்கக் கூடிய வகையிலான உணவுகள் (கூழ்) சாப்பிடுவது நல்லது. இதனால் ஆரோக்கியம் மேம்படும்.
துர்க்கை, காளி உள்ளிட்ட பெண் தெய்வ வழிபாட்டுக்கு உரியதாகவும் ஆடி மாதம் கருதப்படுகிறது. இதேபோல் 18ஆம் பெருக்கு எனப்படும் ஆடி-18 விழா மிகவும் உன்னதமானது. அன்றைய தினம் எந்த நட்சத்திரம், திதியில் வந்தாலும், புதிய முயற்சிகளை அனைத்து தரப்பினரும் மேற்கொள்ளலாம்.
ஆடிப்பெருக்கு தினத்தில் நதியோரம் உள்ள கோயில்களில் கன்னிப் பெண்கள் வழிபாடு செய்தால் சிறப்பான கணவர் அமைவர். சுமங்கலிப் பெண்கள் இதுபோன்று வழிபாடு நடத்தினால் அவர்களின் துணைவருக்கு நீண்ட ஆயுள் கிடைக்கும். சப்த கன்னிகளை உருவாக்கி ஆடிப் பெருக்கு வழிபாடு மேற்கொள்வதும் நல்ல பலனைத் தரும்.
இதேபோல் ஆடிப் பூரம் விழா கேரளாவில் விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் மிக அருமையாக கொண்டாடப்படும். சுப நிகழ்வுகள் ஏராளமாக நடைபெறுவதால் ஆடி மாதம் பல வகையிலும் சிறந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக