ஸ்ரீ ராமநவமி
அடர்ந்த காடு. பல விதமான மிருகங்கள் வசிக்கும் வனம். இங்குதான் கொள்ளைக்காரன் வாடபாடன், தன் குடும்பத்துடன் வசித்துவந்தான். காட்டின் நடுவே உள்ள ஒற்றையடிப் பாதையைப் பயன்படுத்தித்தான் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு வணிகர்கள் செல்வார்கள்.
அப்படியாக வரும் மக்களிடம் கொள்ளையடிப்பதே வாடபாடனின் தொழில். இவனைத் திருத்தி உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர விரும்பினார் திரிலோக சஞ்சாரி நாரதர். அவரும் வணிகர் வரும் வழியில் வந்தார். வாடபாடனும் கூரிய கத்தியுடன் அவர் மீது பாய்ந்தான்.
“என்னிடம் இருப்பது இந்த வீணை ஒன்றுதான். இதனால் உனக்குப் பயன் ஒன்றும் இல்லை ஆனால் உன்னிடம் கேட்பதற்கு எனக்கொரு கேள்வி இருக்கிறது” என்றார் நாரதர்.
அசிரத்தையாக, “என்ன கேள்வி?” என்றான் வாடபாடன்.
“நீ கொள்ளை அடித்துச் செல்வதெல்லாம் யாருக்கு?” என்றார் அவர்.
“என் பெற்றோர், மனைவி மக்கள் ஆகியோருக்கு” என்றான் வாடபாடன் அலட்சியமாக.
“இதனால் பாவம் ஏற்படும் தெரியுமா?” என்றார் நாரதர்
“அதனால் என்ன?” வாடபாடன் பதில் இது.
“யாருக்காக இந்த பாவங்களைச் செய்கிறாயோ அவர்கள் இதில் பங்கு கொள்வார்களா?” என்று கேட்டார் நாரதர்.
“நிச்சயமாக” என்றான் வாடபாடன்.
“அப்படியென்றால் கவலை ஒன்றும் இல்லை. நீ போய் அவர்களிடமே கேட்டு உறுதி செய்துகொண்டு வா. உயர்ந்த ரத்தினம் தருகிறேன்” என்று நாரதர் சொல்லி முடிப்பதற்குள் பிடரியில் குதிகால் பட, தன் வீட்டை நோக்கி ஓடினான் வாடபாடன். வீட்டுக் கதவைத் தட்டினான். மொத்தக் குடும்பமுமே ஓடிவந்து கதவைத் திறந்தது.
“என்ன கொண்டுவந்தீர்கள்” என ஆவலாகக் கேட்டார்கள். வாடபாடன் நாரதர் கூறியவாறு, “என் பாவத்தில் பங்குகொள்வீர்களா?”
எனக் கேட்க, அவர்கள், எங்களைக் காப்பாற்ற வேண்டியது உன் பொறுப்பு. நாங்கள் பாவத்தில் பங்குகொள்ள முடியாது என்று மறுத்துவிட்டனர். துவண்டுபோனான் வாடபாடன். நாரதரிடம் திரும்பி வந்தான். அவன் மனம் துவண்டிருப்பதை
அவனது நடையிலேயே கண்டுகொண்டார் நாரதர்.
“இந்தப் பாவத்திலிருந்து மீள்வது எப்படி என்று தெரியவில்லையே” என்று நாரதரைக் கேட்க, அதற்குத் தான் வழி சொல்வதாகக் கூறி அவனை நாரதர் தேற்றினார். “ராமா என்று சொல்” என்றார்.
அவனுக்கு ராம நாமத்தை உச்சரிக்கத் தெரியவில்லை. அருகில் இருந்த மரத்தைப் பார்த்தார் நாரதர். இது என்ன என்று கேட்டார் மரம் என்றான் அதில் உள்ள கடைசி எழுத்தை நீக்கி மரா, மரா என்று வேகமாகச் சொல்லிக்கொண்டே இரு என்றார்.
சில மணித் துளிகளிலேயே, மரா, மரா என்பது ராம, ராம என மாறி, ராமபிரானின் திருநாமத்தைக் குறித்தது.
ஆண்டுகள் பல சென்றன. அதே வனத்தில் அமர்ந்த வாடபாடன் மீது கரையான்கள் புற்று கட்டிவிட்டன. அங்கு வந்த சிலர் புற்றை இடிக்க, அதிலிருந்து இறையொளி பொருந்திய நிலையில் வாடபாடன் வெளியே வந்தான். சமஸ்கிருத மொழியில் `வால்மீக்` என்றால் கரையான் புற்று என்று பொருள். அதிலிருந்து வெளியே வந்ததால், வால்மீகி என்று பெயர் பெற்றார் வாடபாடன்.
தவத்தில் பெற்ற தரிசனத்தின் பயனாய் கள்வன், கவிஞர் ஆனார். ராமனின் கதையைக் காவியமாக எழுதினார். அயணம் என்றால் வழி. ராமன் சென்ற வழி என்பதை ராம புராணம் கூறுவதால், இந்த இதிகாசத்திற்கு ராமாயணம் எனப் பெயர் உண்டாயிற்று. கொள்ளையையும் கொலையையும் தொழிலாகக் கொண்டவன், ராம நாமத்தை ஜபித்ததால் அழியாப் புகழ் கொண்ட இதிகாசமான ராமாயணத்தை இயற்றிய பெரும் கவிஞன் ஆனார். இது ஸ்ரீராமநாமத்தின் அருட்பெரும் கருணை என்பது ஐதீகம்.
மதிப்பு மிகுந்த ராமநவமி விரதம்...
மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது.
தெய்வமாக இருந்தாலும், பூமியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.
சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற ராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் மகாவிஷ்ணு. உரிய நேரம் வந்தபோது ராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார்.
அதர்மம் அழித்து, தருமத்தை நிலை நாட்டினார். ராமாவதாரம் என்ற ஒரு அவதாரத்திலேயே ராமபிரான், குருவிற்கு நல்ல மாணவராக, தாய்–தந்தையருக்கு நல்ல மகனாக, உடன் பிறந்தவர்களுக்கு நல்ல சகோதரனாக, மனைவிக்கு நல்ல கணவனாக, மக்களுக்கு நல்ல மன்னனாக, நண்பர்களுக்கு உற்ற தோழனாக, பகைவர்களுக்கு சிம்ம சொப்பனமாக என்று பல அவதாரங்களை எடுத்து அதில் தன்னை நிலைநிறுத்தியவர்.
ராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. சித்திரை மாதம் சுக்ல பட்ச (வளர்பிறை) நவமி திதியில் பிறந்தவர் ராமர். அந்த நாளையே நாம் ராம நவமியாக கொண்டாடுகிறோம்.
ராம நவமி விரதம் இரண்டு விதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. அதாவது சித்திரை மாதம் சுக்ல பட்சம் வரும் பிரதமைத் திதியில் இருந்து நவமி திதி வரை உள்ள ஒன்பது நாட்கள் முதல் வகை கொண்டாட்டமாகும். இதற்கு ‘கர்ப்போஸ்தவம்’ என்று பெயர். நவமி திதியில் தொடங்கி அடுத்து வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிப்பது ‘ஜன்மோதீஸவம்’ எனப்படும்.
இது இரண்டாவது வகையாகும். எந்த காரியத்தையும் அஷ்டமி, நவமி திதிகளில் செய்வதை மக்கள் தவிர்த்து விடுவார்கள். இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன. ‘நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்?. எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர்?’ என்று கேட்டனர்.
அதற்கு மகாவிஷ்ணு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதி அளித்தார். அதன் படியே ராமர், நவமி திதியில் தசரதர்– கோசலை தம்பதியருக்கு மகனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணர், வாசு தேவர்– தேவகி தம்பதியருக்கு மகனாகவும் பிறந்து சிறப்பு செய்தனர்.
ராமநவமி விரதத்துக்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். தொடக்க நாளில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒன்பது நாளும் சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைப்பதோடு, ராமருக்குத் துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வழிபடலாம்.
அது முடியாதவர்கள், ராமநவமி தினத்திலாவது இதனைச் செய்வது நல்லது. நவமி திதிக்கு மறுநாள் ராம பாராயணம் செய்ய வேண்டும். இந்த விரத நாட்களில் மட்டுமல்லாது, எப்பொழுதும் ராம ஜாதகத்தை படமாக காகிதத்தில் வரைந்து வைத்தோ, அல்லது செப்புத் தகட்டில் செய்து வைத்தோ வழிபடுவது சிறந்த பலனைத் தரும்.
காரணம், ராமருடைய ஜாதகத்தின்படி சூரியன்– மேஷத்திலும், செவ்வாய்– மகரத்திலும், குரு– கடகத்திலும், சுக்ரன்– மீனத்திலும், சனி– துலாமிலும் ஆக ஐந்து முக்கிய கிரகங்களும் உச்ச ஸ்தானத்தில் இருக்கின்ற ராமபிரானுடைய ஜாதகத்தைப் பூஜை அறையில் வைத்து வழிபடுவது எத்தகைய சிறப்பைத் தரும் என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன!.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக