13.04.2017 வியாழக்கிழமை பின்இரவு00.48 மணிக்கும் ஹேவிளம்பி எனும் சித்திரப் புத்தாண்டு பிறக்கின்றது.
ஹேவிளம்பி வருட வெண்பா
-------------------------------------------------
ஹேவிளம்பி மாரியற்பமெங்கும் விலைகுறைவாம்
பூவல்விளை வரிதாம் போர் மிகுதி சாவுதிகம்
ஆகுமமே வேந்தரணியாயமே புரிவார்
வேகுமே மேதினி தீ மேல்..........
மேஷ ராசியில் கதிரவன் நுழைகின்ற தொடக்கமே தமிழ்ப் புத்தாண்டாகும். இதன் பிரகாரம் திருவள்ளுவர் ஆண்டு 2049, சித்திரைத் திங்கள் 1ம் நாள் வியாழக்கிழமை; ஆங்கிலமாதம் ஏப்பிரல் 13ம் (13.04.2017) திகதி பின் இரவு 00:48 மணிக்கு அபரபக்ஷ் திருத்தியை திதியில் விசாக நட்சத்திரத்திரம் 3ம் பாதத்தில் மங்களகரமான ”ஹேவிளம்பி வருஷம்” பிறப்பதாக வாக்கிய பஞ்சாங்கமும்; அன்றைய தினம் பின்னிரவு 02:02 மணிக்கு மங்களகரமான ஹேவிளம்பி் வருஷம் பிறப்பதாக திருக்கணித பஞ்சாங்கமும் கணித்துள்ளன.
எந்த மாதத்திலும் இல்லாத சிறப்பு சித்திரைக்கு மட்டும் உண்டு. சித்திரையில் மட்டும் அப்படி என்ன விஷேசம்? சித்திரை முதல் நாளுக்கு உள்ள முக்கியமானதும் முதன்மையானதும் சிறப்பு சித்திரை வருடப் பிறப்பு. தமிழர்களது காலக்கணிப்பு முறையின்படி ஒரு ஆண்டுக்குரிய பன்னிரெண்டு மாதங்களில் சித்திரை முதலாவது மாதமாக கருதப்படுகிறது.
தமிழ் மாதங்கள் சூரிய மாதங்கள் எனப்படுகின்றன. அதற்கான காரணம் இம் மாதங்கள் பூமிக்குச் சார்பாகத் தோற்றுகின்ற சூரியனுடைய இயக்கத்தை அடிப்படையாக வைத்தே கணிக்கப்படுகின்றன. இராசிச் சக்கரத்தில் மேட இராசிக்குள் சூரியன் நுழைவதிலிருந்து அந்த இராசியை விட்டு வெளியேறும் வரையில் உள்ள காலம் சித்திரை மாதமாகும்.
சித்திரை மாதம் 31 நாட்களைக் கொண்டது. ஆங்கில நாட்காட்டியில் ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் முதல் மே மாதம் 14 ஆம் நாள் வரை தமிழ் சித்திரை மாதமாகும். சூரியன் மேட இராசிக்குள் நுழைவது சித்திரை மாதப் பிறப்பு எனப்படும். சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.
ஹேவிளம்பி புத்தாண்டில் புனர்பூசம், சித்திரை-3ம், 4ம் பாதம், சுவாதி, விசாகம், பூரட்டாதி, உத்தரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு இவ் வருடம் ”சந்திர தோஷம்” ஏற்பட்டுவதால்; தவறாது விஷுபுண்ணிய காலத்தில் மருத்துநீர் தரித்து ஸ்ஞானம் செய்ய வேண்டும் என புரோகிதர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இவ்வாறு செய்வதால் சந்திர தோஷம் நீங்கப் பெற்று தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். ஆனால்; எமது முன்னோர்கள் எந்த நட்சத்திரத்தில் பிறந்தாலும் எல்லோருமே தோஷ நிவர்த்திக்காக காலம் காலமாக மருத்து நீர் தரித்து ஸ்நானம் செய்து வந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
பூமி சூரியனை சுற்றும் போது சோதிடம் கூறும் 12 ராசிகளில் முதல் ராசியாகிய மேடராசியில் சூரியன் பிரவேசிக்கும் தினமே வருடப் பிறப்பாக கணிக்கப்பெறுகின்றது.
இப் பூவுலகம் தோன்றியதில் இருந்து பூமியானது தானும் சுற்றிக் கொண்டு சூரியனையும் சுற்ற ஆரம்பித்ததாக ஆராட்சியாளர்கள் கணித்துள்ளனர். சூரியனும், பூமியும் கோள வடிவினதாகவும், ஈர்ப்பு விசையுடன் சுழன்று கொண்டு இருப்பதனால் அவை குறிப்பிட்ட காலத்தின் பின்னர் சுற்றத் தொடங்கிய இடத்திற்கே வந்து சேர வேண்டும் என்பது இயற்கையின் நியதி. அப்படி வந்தும் (திரும்பவும்) தொடர்ந்து சுற்றிக்கொண்டே இருப்பதனால் சுற்று ஆரம்பித்த அந்த நிகழ்வானது பிறப்பாகவும், அச்சுற்றை திரும்பத் திரும்ப ஆரம்பிக்கும் தினமாக இருப்பதனால் ”பிறந்த தினமாகவும்” கொண்டாடபடுவதாகவும் கூறலாம். அதாவது, மீண்டும் ஒருமுறை சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நாளே (பூமியின் பிறந்த நாளே) சித்திரை வருடப்பிறப்பாக கொண்டாடப்படுகின்றது.
இந்து மதத்தினரைப்போல் இத்தினத்தையே சிங்கள பௌத்த மதத்தினரும், தமது புத்தாண்டாக கொண்டாடுகின்றனர்.
சூரியன் மேடராசியில் பிரவேசிக்கும் நிகழ்வானது வருடத்தில் ஒருமுறை நிகழ்கின்ற போதிலும், எல்லா நாடுகளுக்கும் வெவ்வேறு நேரங்களாக அமைந்து விடுகின்றன. எல்லா நாடுகளுக்கும் இடையே அனுசரிக்கப் பெறும் நேர வித்தியாசங்களுக்கு ஏற்ப நிகழ்வின் நேரம் மாற்றமடைகின்றது.
பூமியில் வாழும் எல்லா உயிர்களிடத்தும் சூரிய பகவான் ஆதிக்கம் செலுத்துவதால், இந் நாளில் சூரிய வழிபாடு மிகவும் சிறப்பாக கருதப்படுகின்றது. இந்த புனித நன்னாளில் புத்தாடை அணிந்து பெரியோர்களின் ஆசிர்வாதம் பெற்று, கோயில்களுக்கு சென்று இறைவனை வழிபடுவது சைவ மக்களின் மரபாகும். மேலும் தான, தர்மங்கள் செய்வதுடன், உறவினர்கள் இல்லங்களுக்கு சென்று புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி, பொங்கல், பலகாரங்கள் பரிமாறி அனைவரும் மகிழ்வோடு கொண்டாடுவது வழக்கமாகும்.
புதுவருடத்தில் செய்யப்பெறும் அனைத்துச் செயல்களும் காலமறிந்து சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக அன்றைய தினத்தில் நாம் அனைவரும் பஞ்சாங்கங்கத்தில் குறிப்பிட்டதன் பிரகாரம், குறிப்பிட்ட சுப நேரத்தில்(விஷூ புண்ணிய காலம்) மருத்து நீர் வைத்து, தோய்ந்து புத்தாடை தரித்து ஆலயம் சென்று வழிபடுவதோடு. குறிக்கப்பெற்ற சுபநேரத்தில் பெரியோர்களை வணங்கி அவர்களின் ஆசீர்வாதம் பெறுவதும், கைவிசேஷம் பெறுவதும் தொன்று தொட்டுவரும் வழக்கமாக உள்ளது, வருடப் பிறப்பன்று நாம் செய்யும் செயல்கள் அனைத்தும் அந்த வருடம் முழுவதும் எமது வாழ்க்கையை வளப்படுத்தும் என்பது இந்துக்களின் ஐதீகம்.
தமிழ் மாதக் கணிப்பானது சூரியன் மேட இராசிக்குள் நுழைவது முதல் அவ் இராசியை விட்டு விலகும் நாட்களை சித்திரை மாதம் எனவும்; சித்திரை மாதமே (இந்துக்களின்) தமிழ் மக்களின் வருடத்தின் சித்திரை முதல் மாதம் என்பதால் இதுவே புதிய ஆண்டின் தொடக்கமும் ஆகும்.
மருத்து நீர்
----------------------------------
மருத்து நீர் வைத்தல் என்பது முக்கிய விடயமாக புதுவருட தினத்தில் கருதப்படுகிறது. இம்மருத்து நீர் தாழம்பூ, தாமரைப்பூ, மாதுளம்பூ, துளசி, விஷ்ணுகிராந்தி, சீதேவியார் செங்கழுநீர், வில்வம், அறுகு, பீர்க்கு, பால், கோசலம், கோமயம், கோரோசனை, மஞ்சள், திற்பலி மற்றும் சுக்கு என்பவற்றை நீரிலே கலந்து காய்ச்சி எடுக்கப்பெறும் ஒரு கஷாயமாகும். மருத்து நீர் வைத்து நீராடினால் புத்தாண்டின் நல்ல பலன்களை பெறலாம் என்பது நம்பிக்கை ஆகும். இவற்றுள் பூவகை கிடைக்காவிடின் அவைகளின் இலை, பட்டை, வேர், கிழங்கு ஏதாவது உபயோகிக்கலாம். விஷூ புண்ணிய காலத்தில் சகலரும் சங்கற்பபூர்வமாக மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட மருத்துநீரை பெரியோர்கள், தாய், தந்தையர்களைக் கொண்டு தேய்ப்பித்தல் வேண்டும்.
தலையில் கொன்றை இலையும், காலில் புங்கமிலையும் வைத்து கிழக்கு அல்லது வடக்கு புறமாக பார்த்து நின்று தேய்ப்பித்து அதன் பின்னர் ஸ்ஞானம் செய்தல் சிறப்புத் தரும். (பூசைசெய்து) ஆரம்பிப்பது வழக்கம்.
வருடப்பிறப்புக் கருமங்கள்:
சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால் திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
புத்தாடை தரிசனம்
ஸ்ஞானம் செய்த பின் மஞ்சள் நிறப்பட்டாடையாயினும் அல்லது மஞ்சள் கரை வைத்த வெள்ளை நிற புதிய வஸ்திரங்களை அணிந்து கொள்ளுதல் நன்மை தரும். மஞ்சள் நிற ஆடை அமையா விடில், ஆடையில் ஒரு சிறு பகுதிலாவது மஞ்சள் அரைத்துப் பெற்ற கலவையை பூசி விடுவதும் நன்மை தரும்.
புதுவருட தினத்தில் தான தருமங்கள் செய்வது வழக்கம். ஏழைகளுக்கும், உறவினர்களுக்கும் புதிய விசிறிகளை தானம் செய்ய வேண்டும். சித்திரை பிறப்பதற்கு முந்தைய நாள் இரவு சாப்பாடு முடிந்தபிறகு பூஜை அறையை தூய்மை செய்து கோலமிட்டு வைத்து விட வேண்டும். வீட்டிலுள்ள பொன், வெள்ளி நகைகள், உட்பட அனைத்து ஆபரணங்களையும் பணம், கண்ணாடி, வெற்றிலை, பாக்கு, பழங்கள், தேங்காய், மலர்கள் முதலிய மங்கலப் பொருள்களையும் தயாரித்து, ஒரு தாம்பாளத்தில் வைத்து அழகியகோலமிட்ட பூஜைக்குரிய தெய்வத்தின் முன் வைக்க வேண்டும்.
அரிசி, பருப்பு, வெல்லம், பலா, மாம்பழம், வாழைப்பழம் ஆகியவற்றையும் வைத்து மறுநாள் காலை, சித்திரை மாதப்பிறப்பன்று அதிகாலையில் முதன் முதலாக வீட்டில் மூத்த பெண்மணி எழுந்து குளித்து புத்தாடை உடுத்தி இறைவன் முன்பு குத்துவிளக்குகளையும், ஊதுவத்திகளையும் ஏற்றி வைப்பார். அதற்கு பின்பு, அவர் வீட்டில் தூங்கும் ஒவ்வொருவரையும் எழுப்பி, கண்களை மூடிய நிலையிலேயே சுவாமியின் முன்பு அழைத்துச் சென்று, கண்களை திறக்கச் சொல்வார். பூஜைக்குரிய தெய்வத்தையும், பூஜைக்கு வைத்துள்ள மங்கலப் பொருட்களையும் முதன் முதலாக தரிசிக்கும்படி செய்வார். இவ்வாறு செய்தால் வருடம் முழுவதும் மகிழ்ச்சி பொங்கும் எனவும் மங்கலப் பொருள்கள் செழித்து இருக்கும் என்பது நம்பிக்கை.
பின்னர் பூரண கும்பம், கண்ணாடி, தீபம், இஷ்டகுல தெய்வ படங்களை தரிசித்து, தாய், தந்தையர், பெரியோர்களிடம் நல்லாசிகளைப் பெற்றுக் கொள்ளுதல் உயர்வினை அளிக்கும்.
அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம் நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.
சித்திரை மாதம் பிறந்ததுமே ”இளவேனில்காலம்” என்னும் வசந்த காலம் தொடங்குகிறது.
தெய்வ வழிபாடு
வீடுகளில் இஷ்ட குலதெய்வங்களை வழிபட்ட பின், தமது கிராமத்தில் உள்ள ஆலயங்களுக்கு சென்று பூசை வழிபாடுகளை செய்வதுடன் தான, தருமங்களையும் மேற்கொள்ளுதல் சிறப்பினைத் தரும். சூரியனுக்கு பொங்கலிட்டு வழிபடுதல் சாலச் சிறந்தது.
நாம் பொதுவாகவே சூரியனின் சுழற்சியைக் கொண்டுதான் காலங்களைக் கணிக்கிறோம். சூரியனின் தேர்ச்சக்கரம் சம்வத்திர ரூபம் என்று சொல்லுவார்கள். காலை, நடுப்பகல், பிற்பகல் என்கிற தினப் பிரிவுகளாகிய மூன்றும் இருசுக் கோர்த்திருக்கும் இடமாயிருக்கும் ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள், அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்.
வராஹமிஹிரர் என்னும் வானியல் நிபுணர் “ப்ருஹத் சம்ஹிதையில்“ மேஷ சங்க்ரமண காலத்திலே சூரிய பகவானை நமஸ்காரம் செய்வது மிகவும் விசேஷம் என்று சொல்லுகிறார். சைத்ர விஷு புண்ணியகாலம் என்பது சித்திரை மாதப் பிறப்பைக் குறிக்கும், அதாவது சூரியன் முதல் ராசியான மேஷத்தில் ப்ரவேசிப்பது. சித்திரை முதல் நாள்தான் ராமபிரான் ராவணனை வெல்ல அகஸ்திய முனிவரிடம் உபதேசம் பெற்று, ஆதித்ய ஹ்ருதயம் படித்தார். ஆகவே இந்தப் புனித சித்திரை நன்நாளில் காலையில் எழுந்து நீராடி, சுத்தமான மனதுடன் இறைவனைப் ப்ரார்த்தித்து, ஆதித்ய ஹ்ருதயம் சொல்வது மிகுந்த பலனைத் தரும்.
சித்திரை மாதத்து உதய சூரியனின் கதிர்கள் தொடர்ந்து பனிரெண்டு நாட்கள் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அம்பா சமுத்திரம் பாபநாசம் கோயிலில் உள்ள பாபநாச ஸ்வாமியின் மீது படுவதால், அந்த நேரத்தில் அங்கு வந்து வணங்கும் பக்தர்களின் பாபங்களையெல்லாம் தீர்க்கீறார் என்பது ஐதீகம்.
.
சித்திரை புதுவருடத்தில் நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில் வைத்து பூஜிக்க வேண்டும். பின்னர் குடும்ப சோதிடரையோ, புரோகிதரையோ கொண்டு புத்தாண்டுப் பூஜைகளை செய்யவேண்டும். பூஜை முடிந்த பின்பு அவர் புத்தாண்டுப் பஞ்சாங்கத்தைப் படிப்பார். அதன் மூலம் அந்த ஆண்டில், நவக்கிரக சஞ்சாரத்தினால் உலகத்துக்கும், மக்களுக்கும் நிகழவிருக்கும் பலன்களை அறிந்து கொள்ளலாம். சில தோஷங்களையும் நீக்கி கொள்ளலாம்.
அறுசுவை உணவு
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர், மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்ய வேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மசால்வடை போன்றன இடம்பெறுதல் அவசியம். வேப்பம் பூ கசக்கும் என்றாலும் மனித உடலிலுள்ள ரத்தத்தை தூய்மை செய்வதில் வேப்பம் பூவுக்கு நிகராக வேறு எந்த மூலிகையும் இல்லை. இதற்காகவே இந்த உணவு உண்ணப்படுகிறது. அத்துடன் உணவை விருந்தினருடன் உண்டு மகிழ்ந்தால் அந்த ஆண்டு முழுவதுமே குதூகலமாக இருக்கும் என்பது மக்களின் முக்கிய நம்பிக்கையாகும். இதற்காகவே விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.
கைவிஷேடம்
சித்திரை முதல் நாளன்று அனேகமானோர் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர்.
சித்திரைப் புதுவருடத்தின் மற்றொரு சிறப்பு அம்சம் கைவிசேடமாகும். ஆரம்ப காலத்தில் வீட்டின் தலைவி உரிய சுப நேரத்தில் சிறிய மூலிகைப் பொட்டலம் ஒன்றினை கிணற்றுக்குள் போட்டுவிட்டு பிறக்கும் புத்தாண்டு நிமித்தம் முதல் முறையாக தண்ணீரை கிணற்றிலிருந்து வெளியில் எடுப்பதையே கை விசேடமாக கருதப்பட்டது. ஆயினும் நாளடவில் கைவிசேடம் என்பது சுபமுகூர்த்தத்தில் பணத்தை கொடுப்பதும் வழ்ங்குவதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல நேரத்தில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத் தலைவரிடமிருந்தும், வயதில் மூத்தவர்களிடமிருந்தும், அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், தொழிற்சாலைகள் என்பவைகளில் வேலை செய்வோர் தங்கள் வேலை கொள்வோரிடமிருந்தும் புதுவருடத்தில் முதல் அன்பளிப்பாக வெற்றிலையில் பாக்கு, நெல்லு காசு என்பவற்றை வைத்து குத்து விளக்கின் முன்னாலே வைத்து கொடுப்பர்கள். பணத்தை கைவிசேடமாக பெற்றுக்கொள்வார்கள். கொடுக்க பட்ட எல்லாவற்றையும் எண்ணி (நெல்லு உட்பட) அது ஒற்றை விழுந்தால் நல்ல பலன் என்பது ஐதீகம். கைவிசேடம் பரிமாறிக்கொள்வது என்பது ஒரு பாரம்பரியமான வழக்கமாகும்.
மூத்தோர்களிடமிருந்து கைவிசேடம் பெற்றால் அந்த ஆண்டு முழுவதும் பணவரவும் பல நன்மைகளும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கைவிசேடமாக பெற்ற பணத்தை அந்த ஆண்டு முழுவதும் பத்திரமாக வைத்திருக்க வேண்டும் என்பதும் நம்பிக்கையாக கடைப்பிடிக்கப் பட்டு வருகிறது.
சித்திரைப் புதுவருடம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பெருவிழாவாக இங்கு சிறப்புப் பெறுவதுடன், தமிழ், சிங்கள மக்களுக்கு இடையிலான நெருங்கிய தொடர்புகளை எடுத்துக்காட்டுவதாகவும் அமைந்திருந்தாலும் கொண்டாடுவதில் சில தனித்தனியான பாரம்பரிய கலாசார நடைமுறைகளைப் பின்பற்றி வருகிறார்கள்.
நாட்டின் முக்கிய பகுதிகளிலும் கலை, கலாசார, இசை நிகழ்ச்சிகளுடன் சித்திரைப் புதுவருடம் சிறப்பாகவே கொண்டாடப்படும். இடத்துக்கு இடம் அந்தந்தப் பிரதேச கலாசார மரபுகளுக்கு அமைய வைபவ நடைமுறைகள் வேறுபட்டிருந்தாலும் பாரம்பரியமான நிகழ்ச்சிகளான போர்த்தேங்காய் அடித்தல், சேவல் சண்டை, கிளித்தட்டு, சடுகுடு போன்ற விளையாட்டுகள் எல்லா இடங்களிலும் நடைபெறும் சிறப்பு அம்சங்களாகும்.
இத்துடன் ஊஞ்சலாட்டம், கும்மியடித்தல், கொக்கான் வெட்டுதல், பல்லாங்குழி, ராபான் அடித்தல், சொக்கட்டான் போன்ற பெண்கள் கலந்து கொள்ளும் விளையாட்டுகளும் இடம்பெறுவதுண்டு. அத்துடன் மாட்டு வண்டிச் சவாரி, துவிச்சக்கர வண்டி ஓட்டம், மரதன் ஓட்டம், சைக்கிள் ஓட்டம், தலையணை சண்டை வழுக்கு மரம் ஏறுதல் போன்ற போட்டிகளும் சித்திரைப் புதுவருடத்தையொட்டி நடைபெறுவது வழக்கம்.
புதுவருடத்திற்காக அடுப்பு மூட்டுவதும் ஒரு பழக்கமாகும். பழைய வருடத்தின் முடிவில் அனைத்து அடுப்பு வேலைகளும் முடிவிற்குக் கொண்டுவரும் வீட்டுத் தலைவி அடுப்புச் சாம்பலையும் அப்புறப்படுத்தி அடுப்பை தூத்துவிடுவான். அதன் பின் புத்தாண்டு பிறக்கும் வரை வீட்டில் அடுப்பு பத்த வைப்பதில்லை. உரிய நேரம் காலம் பார்த்து மீண்டும் புதுப்பானை வைத்து பொங்குவதற்காக வீட்டுத் தலைவி சுபமுகூர்த்தத்தில் அடுப்பை பத்த வைப்பதே வழக்கத்தில் இருந்து வருகின்றது.
குடும்பத்தினர், உறவினர்களுடன் ஒன்றிணைந்து பட்டாசு வெடிகளுடன் புதுவருடத்தை வரவேற்று குதூகலமாகக் கொண்டாடும் நிலைமையானது உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரியதாகும். புதுவருடத்தின் சுபநேரம் பார்த்து தங்கள் தொழிற்கருமங்களை ஆரம்பிப்பதும், பொதுமக்கள் ஒவ்வொருவரும் நல்ல நாள் பார்த்து தங்கள் உறவினர்களினதும் நண்பர்களினதும் வீடுகளுக்குச் சென்று வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டு விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதும், பெரியோர்களைச் சந்தித்து நல்லாசிகளைப் பெற்றுக் கொள்வதும் சிறப்பான பாரம்பரிய நிகழ்வுகளாகும்.
சித்திரை வருஷப் பிறப்பைப் பொறுத்தே; நாடு, மக்கள், பிற உயிரினங்கள், விலை வாசி, விவசாயம், செல்வப் பெருக்கு என்று எல்லாவற்றையும் கணிக்க முடியும். முற்காலத்தில் ராஜாக்கள் சித்திரை வருஷப் பிறப்பின் போது பயபக்தியுடன் கடவுளை வழிபட்டு, பஞ்சாங்கப் பலனைக் கேட்டார்கள். அந்தப் பலன்களின் அடிப்படையில், நாடு நலம் பெற என்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்று முடிவெடுப்பார்கள்.
அனைவருக்கும் இனிய ”ஹேவிளம்பி புத்தாண்டு வாழ்த்துக்கள்".
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக