ஸ்ரீஇராம நாம மந்திர மகிமை
1. நமக்கு நன்மை வரவேண்டுமானால் 'ராம நாமத்தை இடைவிடாமல் கூறவேண்டும். நமது ஒவ்வொரு மூச்சும் 'ராம் 'ராம்' என்றே உட்சென்றும் , வெளியேறுதலும் வேண்டும்.
2. நாம் அறியாமல் செய்த தவறுக்கு ராம நாமமே மிகச்சிறந்த பிராயசித்தம். அறிந்தே செய்த தவறானால் அதற்கு வருந்துவதும் , தண்டனையை ஏற்பதுவும், பிராயசித்தமும் ராம நாமமே. காலால் நடக்கும் ஒவ்வொரு அடியும் 'ராம் ' என்றே நடக்கவேண்டும் .
3. எல்லா விதமான கஷ்டங்களுக்கும் நிவாரணம் 'ராம நாம ஜெபமே.' கிழக்கு நோக்கி செல்ல செல்ல மேற்கிலிருந்து விலகிடுவோம். அதுபோல ராம நாமாவில் கரைய கரைய தூக்கத்திலிருந்து விலகிசெல்கிறோம்.
4. ' ராம நாம' ஜெபத்திற்கு குரு கிடைக்கவேண்டும் என்று கால தாமதம் செய்தல் கூடாது. ஏனெனில் 'ராம நாமமே ' தன்னுள் குருவையும் கொண்டுள்ளது . நாமமே பிரம்மம், நாமமே குரு, நாமமே எல்லாம்.
5. காலை படுக்கையில் விழிப்பு வந்தவுடனே சொல்லவேண்டியது 'ராம நாமம்.' எழுந்து கடமைகளை செய்யும்போதும் சொல்லவேண்டியதும் 'ராம நாமம்.' அந்த நாள் நமக்கு 'ராம நாம' நாளாக இருக்கவேண்டும்.
6. ' ராம நாம ' ஜெபத்தில் நாம் இருந்தால் , நமது கர்ம வினையின்படி ஏதேனும் துக்கமோ , அவமானமோ நிகழவேண்டியதாயின் அவைகள் தடுக்கப்படும் அல்லது நமக்கு அது பாதிப்பு இன்றி மாற்றி அமைக்கப்படும். பாதிப்பினை தாங்கும் வலிமையையும், அதுவும் பிரசாதமாக ஏற்கும் பக்குவமும் வரும்,
7. எந்த இடத்திலும், எந்த நிலையிலும் 'ராம நாமா' சொல்லலாம். எங்கும் உணவு உண்ணுமுன் 'ராம நாமா' சொல்லிசாப்பிடலாம். இறைவனும் அவனது நாமாவும் ஒன்றே!
8. 'ராம நாமா' எழுத மனம், உடம்பு, கைகள் ஒருமித்து செயல்படவேண்டும். ஆனால் 'ராம நாமா' சொல்ல மனம் மட்டும் போதும்.
இதைதான் "நா உண்டு, நாமா உண்டு" என்றனர் பெரியோர்கள் .
9. ஒரு வீட்டில் உள்ள பெண் 'ராம நாமா' சொன்னால் அந்த பெண்ணின் குடும்பம், கணவன் குடும்பம், குழந்தைகள், பெற்றோர்கள் அனைவரும் பிறப்பு, இறப்பு சக்கரத்திலிருந்து விடுபடுவார்கள். அந்த வீட்டினில் தெய்வீகம் நிறைந்துவிடும். அதுவே கோவிலாகும் .
10. எல்லாவித சாஸ்திர அறிவும் 'ராம நாமாவில் அடங்கும். எல்லாவித நோய்களுக்கும் 'ராம நாமா' சிறந்த மருந்து, துன்பங்களுக்கும் அதுவே முடிவு .
11. நமது இலட்சியம் அழியா ஆனந்தமே. அது 'ராம நாம ஜெபத்தால் பெற முடியும். 'ராம நாமாவினால் வினைகள் எரிந்து, எரிந்து நோய்கள் குறையும். சஞ்சிதம், ஆகாமியம் கருகி ப்ராரப்தம் சுகமாக அனுபவித்து ஜீரணிக்கபடும்.
12. நமது பயணத்தில் பஸ்சிலோ, காரிலோ , ரயிலிலோ, பைக்கிலோ செல்லும்போதும் 'ராம நாமா' சொல்லலாம். அதனால் விபத்துக்கள் தவிர்க்கப்படும்.
காசி விஸ்வநாதர் கோவிலில் மாலை வழிபாட்டின் போது ( சப்தரிஷி பூஜையின் போது ) ஒவ்வொரு நாளும், வில்வ தளங்களில் சந்தனத்தால் ராம நாமம் எழுதி, அவற்றை விஸ்வநாதருக்கு சமர்ப்பிக்கிறார்கள்.
13. பெண்களின் இயற்கை உபாதை நாட்களிலும் 'ராம நாமா' சொல்லுவதன் மூலம் அந்த பிரபஞ்ச சக்தியிடமே அடைக்கலமாகிறோம்.'ராம நாமா' சொல்ல எந்த ஒரு விதியும் இல்லை. மனமிருந்தால் மார்க்கமுண்டு.
பெண்கள் சமைக்கும்பொழுது ராம நாமம் சொல்லி சமைத்தால், அந்த உணவே ராம பிரசாதமாகி ......அதை உண்பவருக்கு தூய குணங்களையும் , நோயற்ற தன்மையையும் அவர்களது உடல் ஆரோக்கியத்தையும் பெறும். நோய்கள் இருப்பின் குணமாகும்.
14. வேதங்களின் படி ஒருவன் புண்ணிய நதிகளில் நீராடி பின்பு வேதம் கற்று, பூஜைகளை நியதிப்படி செய்தவனாய், யோகியாய் முந்தய ஜன்மங்களில் வாழ்ந்தவனாக இருந்தால், சுமார் 40,00,000 பிறவிகளை கடந்தவனாக இருந்தால் மட்டுமே அவனால் 'ராம நாமா' வை ஒரு முறை சொல்லமுடியும்.
15. 'ராம நாமாவை உரக்க சொல்லுங்கள். காற்றில்
ராம நாம அதிர்வு பரவி, உங்களை சுற்றிலும் காற்றில் ஒரு தூய்மையை ஏற்படுத்தும். கேட்கும் மற்றவருக்குள்ளும் அந்த தூய அதிர்வு ஊடுருவி தூய்மை மற்றும் அமைதியை கேட்பவருக்கும் தரும்.
சுற்றியுள்ள மரம், செடி கொடிகள் , பறவைகள், விலங்குகள் எல்லாம் 'ராம நாமா' கேட்டு கேட்டு ..... அவைகளும் மிக உயர்ந்த பிறவிகளை பெறலாம். இதுவும் சேவையே! ..... யார் அறிவர்? நமது முந்தய பிறவிகளில் நாமும் 'ராம நாமா' கேட்டு கேட்டு இப்போதைய பிறவியினை பெற ஏதேனும் ஒரு பக்தரின் வீட்டருகில் மரமாய், ..செடியாய் ...பறவையாய் ....விலங்காய் இருந்தோமோ ! என்னவோ ........ அப்புண்ணிய பலனை ..... ராமனே அறிவான்.
'ராம நாமா' சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை ,தீயசக்திகளை....... .....நோய்க்கிருமிகளை அழித்துவிடும்.
'ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள DNA மற்றும் gene coding...இல் உள்ள குணங்களுக்கு காரணமான ........கோபம் , வெறுப்பு, பொய், பொறாமை , சூது, போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமான....gene coding யை அழித்து .........ராம நாம அதிர்வு ..........சாந்தம் , பொறுமை , பணிவு , உண்மை........ தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி'--எதை நினைக்கிறாயோ அதுவே ஆகிறாய்!)
'ராம நாமா' சொல்ல சொல்ல .........பரப்ரம்மமே ஆகிவிடுகிறோம் .
அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே " ராம் ".
அதுவே உருவம் கொண்டபோது , தசரத ராமனாக , சீதாராமானாக, ரகுராமனாக , கோதண்ட ராமனாக பெயருடன் ( நாம ரூபமாக ) வந்தது.
உண்மையில் சத்தியமாம் ஒரே உண்மை ராம் ஒருவனே. ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான , பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து .........பிரம்மம் என்பதும் அவனே !
எண்ணம் , மனம் ,செயல் , உள்ளம் , உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும்.
இடைவிடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ராம் அருள்வான் என ஸ்வாமி பப்பா ராமதாஸ் தமது தந்தையிடம் உபதேசமும் பெற்று ராம நாமத்தில் கரைந்து ராம ரசமாய், அதன் மயமாய் தானே ஆனார்.
16. நமது ஒரே அடைக்கலம் 'ராம நாமா'. அதுவே நம்மை சம்சார சாகரத்தில் இருந்து
கரையேற்றும். பிறவித்தளையை அறுக்கும் .
17. மற்ற எல்லா தர்மங்களும் ஒன்று பாவத்தை நீக்கும் . மற்ற ஒன்று புண்ணியத்தை தரும். ஆனால் 'ராம நாமா' ஒன்றே பாவத்தை அறுத்து, புண்ணியமும் அர்ப்பணமாகி பாவ, புண்ணியமற்று ( நிச்சலதத்வம் .......ஜீவன்முக்தி ) முக்தி தரும்.
18. 'ராம நாமா' மட்டுமே நன்மையே கொண்டு வந்து தரும் . மருந்தின் தன்மை தெரியாமல் சாப்பிட்டாலும் அது நோயினை குணப்படுத்திவிடும். அது போல 'ராம நாமா' வும் சொல்ல சொல்ல பிறவி நோயை, துக்க நோயை ,
ஆசை என்ற சம்சார நோயை அழித்துவிடும்.
19. நமது கைகளால் எது கொடுத்தாலும், அது நமது தலைவனாகிய ஸ்ரீ ராமனுக்கே ( எதிரில் உள்ள மனித வடிவில் உள்ள எஜமான் ஸ்ரீ ராமனுக்கே ) கொடுக்கிறோம். எது , எதனை எவரிடம் இருந்து பெற்றாலும் நமது அன்னையாகிய ஸ்ரீ ராமனே ( எதிரில் உள்ள மனித வடிவில் ) கருணையுடனும், அன்புடனும் நமது நன்மைக்காக தருகிறான். இந்த உணர்வு பெருக, பெருக ஸ்ரீ ராமனே தந்து , வாங்குகிறான். ( எதிரில் உள்ள மனிதரை கவனிக்காமல் அவரின் ....அந்தராத்மவுடனே பேசுகிறோம்.......ராம்! அன்னையே இந்த உடலுள் இருந்து நீயே பேசி, இயங்கி, செயல்படுகிறாய் ......என வணங்க, நமஸ்கரிக்க ) .....கொடுப்பவன் ஸ்ரீ ராமன் ..........வாங்குபவன் ஸ்ரீ ராமன்.
20. 'ராம நாமா' சொல்ல , சொல்ல நிகழும் எல்லா செயல்களும் , நிகழ்ச்சிகளுக்கும் ' அந்த ஒன்றே !' காரணமாகிறது என்பதும் ...... எல்லாம் அந்த பிரம்மத்தின் விளையாட்டே !.......என்பதும் உள்ளங்கை நெல்லிக்கனியாய் உணரப்படும் .
21.'ராம நாமா' சொல்லச்சொல்ல ..........சொல்லுவதன் மூலம் ..... பார்ப்பது ராம் , பார்வை ராம், பார்க்கப்படுவது ராம், கேட்பது ராம், கேள்வி ராம், கேட்கபடுவது ராம், புலன்கள் ராம், உணர்வது ராம், உணரபடுவது ராம், உணர்வு ராம், இந்த பிரபஞ்சம் ராம், இந்த மனம் ராம் , புத்தி ராம், உடலும் ராம், ஆன்மா ராம், 24 தத்துவங்கள் ராம் , ..... .........நன்மை, தீமை , இன்பம் துன்பம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம் , எல்லாம் ராம்.
இத்தகைய .'ராம நாமா' வில் பைத்தியமாவதே ....அனைத்தும் .... ராமனாக .........ஆன்மாவாக ........
( ஏகாக்கிரக சித்தமாக ) அனைத்தும் ஒன்றாக அறிவதே உண்மையான அறிவு. அனைத்தும் ஒன்றாக ......ராமனாக ( ஆத்மா ராமனாக ) பார்ப்பதுவே ......... எல்லா எண்ணங்கள் ....... எல்லா செயல்கள் ........எல்லா உணர்ச்சிகளிலும் ...........இறை உணர்வை உணர்வதுவே ............இந்த பிறவியின் பயனாகும்.
: பகவத் கீதை : அத் : 2 - 17
" இந்த வையகம் முழுதும் பரந்து விரிந்து நிற்கும் பொருள் . அழிவே இல்லாதது என்பதை அறிந்து கொள் ; அது தீங்கற்றது ; அதனை அழிக்க யாராலும் முடியாது."
ராம நவமி!... ஸ்பெஷல்
✽ மகாவிஷ்ணு பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும், அவற்றில் பெரிதும் போற்றப்படும் அவதாரமாக இருப்பது ராம அவதாரம் என்றால் அது மிகையாகாது. பு மியில் பிறப்பெடுத்து இறுதி வரை நீதி நெறி வழுவாமல், ஒழுக்கம் மிகுந்த மனிதனாக வாழ்ந்தவர் என்ற வகையில் ராமர் பெரும் சிறப்பை எய்துகிறார்.
✽ சிவபெருமானிடம் பல வரங்களை பெற்ற இராவணன், தேவர்களையும், முனிவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவனை அழிப்பதற்காக, அயோத்தியை ஆண்டு வந்த தசரத மன்னனுக்கு மகனாகப் பிறந்தார் இராமர். உரிய நேரம் வந்தபோது இராவணனையும், அவனது அசுர கூட்டத்தையும் அழித்தார். அதர்மத்தை அழித்து, தருமத்தை நிலை நாட்டினார்.
✽ இராவணனை அழிக்கும் பொருட்டு மண்ணில் தோன்றி, மனித குலத்திற்கு ஒழுக்கம் மற்றும் தர்மத்தை கற்றுக் கொடுத்த ராமபிரான் அவதரித்த தினம் ராம நவமி என்று அழைக்கப்படுகிறது. ஸ்ரீராமன், நவமி திதியில் அவதரிக்கும் போது, புனர்பு ச நட்சத்திரத்தில் நான்காம் பாதத்திலும், ஐந்து கிரகங்கள் உச்சத்திலும் இருந்தன. கடக லக்னத்தில் நண்பகல் வேளையில், ராமவதாரம் நடந்தேறியது.
அஷ்டமி, நவமி திதியின் கவலை :
✽ அஷ்டமி, நவமி தினங்களில் எந்த காரியத்தையும் செய்ய மாட்டார்கள். அந்த இரு திதிகளையும் புறக்கணித்து விடுவார்கள். இதனால் கவலையுற்ற அஷ்டமி, நவமி ஆகிய இரு திதிகளும், மகா விஷ்ணுவிடம் சென்று தங்களுக்கு ஏற்பட்டுள்ள குறையை கூறினர்.
✽ அப்போது விஷ்ணு பகவான், 'உங்களையும் மக்கள் அனைவரும் போற்றி துதிக்கும் நாள் வரும்" என்று உறுதியளித்தார். அதன்படியே வாசுதேவர்-தேவகி ஆகியோருக்கு மகனாக, அஷ்டமி திதியில் கிருஷ்ணர் தோன்றினார். அன்றைய தினம் கிருஷ்ணஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. நவமி திதியில் தசரதர்-கௌசலை தம்பதியருக்கு மகனாக பிறந்தார் ராமபிரான். அன்றைய தினம் ராம நவமி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
விரதமுறை :
✽ ராமநவமியன்று அதிகாலையில் குளித்துவிட்டு, வீட்டை தூய்மைப்படுத்தி விரதம் கடைப்பிடிக்க வேண்டும். பு ஜை அறையில் ராமர் படத்தை நன்றாக சுத்தம் செய்து குங்குமம், சந்தனம் போன்றவற்றால் பொட்டிட்டு, துளசிமாலை அணிவிக்க வேண்டும். பின் பழம், வெற்றிலை, பு இவைகளை வைத்து ஸ்ரீராம நாமத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்.
✽ சாதம், பாயசம், பானகம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு இவற்றை நைவேத்தியமாக படைக்கலாம். அன்று உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். ராமரை பற்றிய நு}ல்களை படித்தும், பாராயணம் செய்வதுமாக இருக்க வேண்டும். அன்று ஸ்ரீராமர் கோவில்களில் நடைபெறும் பட்டாபிஷேகத்தை கண்டு களிக்கலாம். அர்ச்சனை முடிந்தபின் நைவேத்தியமான சர்க்கரை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
பலன்கள் :
✽ காலையில் உணவு எதுவும் சாப்பிடாமல் ஸ்ரீராம நவமி விரதம் இருந்து ஸ்ரீராமபிராணை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும். அதனால் குடும்பத்தை விட்டு பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள்.
✽ ஸ்ரீராமஜெயம் என்ற எழுத்தை 108 முறை, 1008 முறை எழுத தொடங்கலாம். ஸ்ரீராம என்ற நாமத்தை மூன்று முறை அடுத்தடுத்தவாறு உச்சரிக்க வேண்டும். இந்த பேராற்றல் வாய்ந்த மந்திரத்தால் ஆணவம் அழியும். மனதில் அமைதியும், மகிழ்ச்சியும் விளையும்.
✽ ஸ்ரீராம நாமம் ஜெபிப்பதும், ராம நாமத்தை பிறர் சொல்லக்கேட்பதும், ஸ்ரீராமபிரானுடைய திருநாமத்தை எழுவதும் மிகுந்த புண்ணியத்தைக் கொடுக்கும், ராமாயணம் படிக்க இயலாதவர்கள், ஸ்ரீராம.... ஸ்ரீராம என்று சொன்னாலே ராமாயணம் படித்த புண்ணியம் கிடைக்கும்.
ராமர் காலடி தடங்கள் பதிந்த சில இடங்கள்
திருமாலின் அவதாரங்களில் ஒப்பற்றது ராம அவதாரம். அயோத்தி முதல் ராமேஸ்வரம் வரையிலும், அங்கிருந்து கடலில் பாலம் அமைத்து இலங்கை வரையிலும் கால் நடையாகவே யாத்திரை புரிந்தவர் ராமபிரான். அவர் காலடி தடங்கள் பதிந்த சில இடங்களைப் பார்ப்போம்.
அயோத்தி: இது ராமர் பிறந்த புண்ணிய பூமி. துளசிதாஸர், கம்பர், தியாகராஜர் போன்றவர்களுக்கு உத்வேகம் அளித்த ராம நாம ஊற்றின் முக்கிய தலம். வாரணாசி – லக்னோ மார்க்கத்தில் அயோத்தியா ரெயில் நிலைvயம் உள்ளது.
பக்ஸர்: சித்தாசிரமம், வேத சிரா, வேத கர்ப்பா, க்ருஷ் என்று பல பெயர்கள் கொண்ட ‘பக்ஸர்’ என்ற இடமும் பிரசித்தி பெற்றது. விசுவாமித்திரர் ராமருக்கு பலை, அதிபலை ஆகிய முக்கிய மந்திரங்களை உபதேசித்த இடம். பாட்னா – மொகல்சராய் ரெயில் மார்க்கத்தில் முக்கிய நிலையம் இது.
அகல்யாசிரமம்: கல்லாக இருந்த அகல்யா சாப விமோசனம் பெற்ற இடம் இது. சீதாமடி – தர்பங்கா ரெயில் மார்க்கத்தில் கம்தவுல் என்ற ரெயில் நிலையத்தில் இறங்க வேண்டும். அங்கிருந்து மேற்கே 15 மைல் தொலைவில் அஹியாரி என்ற ஊர் உள்ளது. அங்கு கவுதம குண்ட் என்ற இடம் இருக்கிறது. இங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் சென்றால், அஹல்யா குண்ட் எனப்படும் அகல்யாசிரமத்தை அடையலாம்.
ஜனக்பூர்: மிதிலை அரசர் ஜனகர் அரசாட்சி புரிந்த இடம் ஜனக்பூர். இது சீதாமடியில் இருந்து ஜனக்பூர் சாலையை அடைந்து, அங்கிருந்து 36 கிலோமீட்டர் தூரம் சென்றால் ஜனக்பூரை அடையலாம். இங்குள்ள பெரிய மைதானத்திலேயே ராமர் வில்லை முறித்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
ராம்டேக்: இது ராமகிரி என்றும் அழைக்கப்படுகிறது. ராமர், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசத்தின் போது இங்கு சிறிது காலம் தங்கி இருந்தனராம். ஆதலால் இது புண்ணிய தலமாகக் கருதப்படுகிறது. மகாராஷ்டிர மாநிலத்தில் நாக்பூர் – சிவனிஜபல்பூர் மார்க்கத்தில் தும்சர் என்ற ஒரு சிறிய நகரம் உள்ளது. இதன் அருகில் உள்ள இடமே ராம்டேக்.
சபரி ஆசிரமம்: சபரி பக்தியுடன் எச்சில் படுத்தித் தந்த கனியை ராமர் மனமுவந்து ஏற்ற சம்பவம் நடந்த இடம் இது. விஜயநகர சாம்ராஜ்யத்தில் உள்ள பிரசித்தி பெற்ற புராதன நகரம் ‘ஹம்பி’. இங்கே துங்கபத்ரா நதி ஓடுகிறது. இதன் அருகே உள்ள மலை ‘மதங்க பர்வதம்’ என்று அழைக்கப்படுகிறது. இங்கேதான் சபரி வசித்து வந்ததாக வரலாறு தெரிவிக்கிறது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திற்கு மதுரையிலிருந்தும், சென்னையிலிருந்தும் செல்லலாம். ராமேஸ்வரத்தில் இருந்து தனுஷ்கோடி 18 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. ராவணனை வதம் செய்த பாவம் நீங்க, ராமன் சிவலிங்க பூஜை செய்த இடம் இது.
ஸ்ரீ ராம நவமி
____________________
மகா விஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும். மனிதன் உலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை மக்களுள் ஒருவராக வாழ்ந்து உலகத்துக்கு உணர்த்திய அவதாரமே ஸ்ரீ ராமாவதாரம். அறமே வாழ்வின் ஆன்மிக ஜோதி. அறத்தை வளர்ப்பதற்கும், மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன் நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார். ஒரு வில், ஒரு சொல், ஒரு இல் என உலகிற்கு வாழ்ந்து காட்டிய ராமர், பங்குனி மாதம் வளர்பிறை சுக்லபட்சத்தில் நவமி திதியில் புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்தார். அன்றைய தினமே ராம நவமியாக கொண்டாடப்படுகிறது.
ஸ்ரீ ராமர் பிறந்த போது புனர்பூச நட்சத்திரம் 4-ஆம் பாதத்தில் ஐந்து கிரகங்கள் உச்சத்தில் இருந்தனவாம். அசுரர்களின் கொடுமையிலிருந்து உலகைக் காப்பாற்றும் பொருட்டு மகாவிஷ்ணு ஸ்ரீ ராமராக அவதரிக்கப் போகிறார் என்பதை அறிந்த முனிவர்களும் தேவர்களும் ஸ்ரீ ராமனின் கர்ப்ப வாசத்தைக் கொண்டாடினர். அது கர்ப்போற்சவம் எனப்படுகிறது. ஸ்ரீ ராமர் பிறந்ததைக் கொண்டாடுவது ஜன்மோற்சவம் எனப்படுகிறது.
ராம நாமமானது அஷ்டாட்சரமான "ஓம் நமோ நாராயணாய" என்பதில் உள்ள "ரா" என்ற எழுத்தையும், பஞ்சாட்சரமான "நமச்சிவாய" என்ற எழுத்தில் "ம" என்ற எழுத்தையும் சேர்த்து "ராம" என்றானது. ராவணனை அழிப்பதற்காக பூமியில் தோன்றிய ஸ்ரீராமனின் அவதார வரலாறு மகிமை வாய்ந்தது.
அயோத்தியை ஆண்டு வந்த தசரத சக்கரவர்த்திக்கு கோசலை, சுமித்ரா, கைகேயி ஆகிய மூன்று மனைவிகள் உண்டு. தனது புஜ, பல பராக்கிரமத்தால் உலகெங்கும் வெற்றிக்கொடி நாட்டிய தசரதருக்கு, நாட்டை ஆள ஆண் வாரிசு இல்லாதது பெரும் மனக் குறையாக இருந்தது. இதுபற்றி தனது குலகுரு வசிஷ்ட மகரிஷியிடம் அவர் கூறினார்.
வசிஷ்டரின் ஆலோசனைப்படி, மகரிஷி ருஷ்யஷ்ருங்கர் உதவியுடன் புத்திரகாமேஸ்டி யாகம் செய்தார். அந்த யாகத்தின் விளைவாக யக்னேஸ்வரர் தோன்றி பாயசம் நிறைந்த ஒரு கிண்ணத்தை கொடுத்து, அதை மனைவிகளிடம் கொடுக்கும்படி கூறினார். தசரதர் பாயசத்தை தனது மனைவிகளுக்கு கொடுத்தார். சில நாட்களுக்கு பிறகு கோசலை, கைகேயி, சுமித்ரா ஆகிய மூவரும் கர்ப்பமுற்றனர்.
பங்குனி மாதம் நவமியன்று கோசலை ராம பிரானை பெற்றார். கைகேயிக்கு பரதனும், சுமித்ராவுக்கு லட்சுமணன், சத்ருகனன் ஆகியோர் பிறந்தனர். தசரதனுக்கு புத்திரனாக அவதரித்த ராமன், வசிஷ்டரிடம் வித்தைகளை கற்றார். விஸ்வாமித்திரருடன் சென்று தாடகையை வதம் செய்தார். மிதிலையை அடைந்து வில்லை ஒடித்து ஜானகியை மணம் புரிந்தார்.
கூனியின் சூழ்ச்சியால் கைகேயி தசரதனிடம் பெற்ற வரத்தால் கானகம் சென்றார். சீதையை கவர்ந்து சென்ற ராவணனை தேடிச் செல்லும் வழியில், வாலியை வதம் செய்தார். பின்னர் சுக்ரீவன், அனுமன் ஆகியோர் உதவியுடன் கடலுக்கு நடுவில் பாலம் அமைத்து இலங்கைக்கு சென்று போரில் ராவணனை அழித்து விபிஷணனை இலங்கையின் அரசனாக நியமித்தார்.
"குலம் தரும், செல்வம் தந்திடும். அருளோடு பெரும் நிலம் அளிக்கும். பெற்ற தாயினும் ஆயினச் செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன். அது நாராயணா என்னும் நாமம்" என்று திருமங்கை ஆழ்வார் நாராயணநாம மகிமை பற்றி குறிப்பிடுவார்.
அஷ்டமியும் நவமியும் திருமாலிடம் கேட்ட வரம்: "நாளும் கோளும் நலிந்தோருக்கு இல்லை" என்பது பழமொழி. இருப்பினும் பொதுவாக அஷ்டமி, நவமி ஆகிய திதிகளுடன் கூடிய நாட்களில் பக்தர்கள் நல்ல காரியங்களை தொடங்கமாட்டார்கள். இதனால் வருத்தப்பட்ட அஷ்டமியும், நவமியும் திருமாலிடம் சென்று மக்கள் எங்களை புறக்கணிக்கின்றனரே என்று கூறி கண்ணீர் விட்டு முறையிட்டனர்.
இதனால் உங்கள் இரு திதிகளையும் கொண்டாட ஏற்பாடு செய்கிறேன் என்று பகவான் வாக்களித்தாராம். இதனால் ஸ்ரீ ராமர் அவதரித்த நவமி ஸ்ரீ ராம நவமி என்றும், ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி கோகுலாஷ்டமி என்றும் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமனை ஆஞ்சநேயர், தியாகபிரம்மர், ராமதாசன், துளசிதாசன், கம்பன், வால்மீகி ஆகியோர் பூஜித்து பலன்பெற்றனர்.
ஸ்ரீ ராமன் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்கள் முன்பத்து எனப்படும். பிறந்த தினத்தில் இருந்து கொண்டாடப்படும் பின்பத்து நாட்கள் பின்பத்து எனப்படும். பல வைணவ ஆலயங்களில் முன்பத்து, பின்பத்து என சிறப்பாக விழா கொண்டாடுவர். ராமாயணம் படிப்பதும் சொற்பொழிவுகளை செய்வதும் உண்டு. ஆஞ்சநேயர் உற்சவமும் செய்து மகிழ்வார்கள்.
ஸ்ரீ ராம நவமி விழா பல இடங்களில் பத்து நாட்களுக்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சில இடங்களில் ராமர் பிறந்த தினத்தோடு முடியும் பத்து நாட்களை முன் பத்து எனவும்; பிறந்த தினத்திலிருந்து வரும் பத்து நாட்களைப் பின் பத்து எனவும் இருபது நாட்கள் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். இந்த நாட்களில் ஸ்ரீ ராமரை வழிபட்டு விரதம் மேற்கொள்வர். பஜனைகள், இராமாயணச் சொற் பொழிவுகள் நடைபெறும். பக்தர்களுக்கு பானகம், நீர்மோர், சுண்டல், விசிறி முதலியவை வழங்கப்படும்.
ஸ்ரீ ராமர் விசுவாமித்திர முனிவருடன் இருந்த போதும், கானக வாழ்க்கை மேற்கொண்டிருந்த போதும் தாகத்திற்கு நீர் மோரும் பானகமும் பருகினார் என்பதை நினைவுபடுத்தும் விதமாகவே அவை இரண்டும் ஸ்ரீ ராம பிரானுக்கு நிவேதனம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. ஸ்ரீராம நவமி உற்சவத்தின்போது வட இந்தியாவில் அகண்ட ராமாயணம் என்னும் பெயரில் துளசி ராமாயணத்தைத் தொடர்ந்து ராகத்துடன் பாடுவர்.
ராம நவமியன்று வைஷ்ணவ ஆலயங்களில் ஸ்ரீ ராமருக்கு பட்டாபிஷேக விழா சிறப்பாக நடைபெறும். வீடுகளில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப் படத்தை வைத்துப் பூஜை செய்து, வடை, பருப்பு, நீர் மோர், பானகம், பாயசம் நிவேதனம் செய்து வழிபடுவார்கள். ஸ்ரீ ராமர் படம் அல்லது விக்ரகத்துடன் ராமாயணப் புத்தகத்தையும் வைத்துப் பூஜிப்பார்கள். ஸ்ரீ ராம நவமியன்று ராம நாமம் சொல்வதும், ராம நாமம் எழுதுவதும் நற்பலனைத் தரும். பகவான் நாமம் இதயத்தைத் தூய்மைப் படுத்தி உலக ஆசைகள் என்னும் தீயை அணைக்கிறது. இறை ஞானத்தைத் தூண்டுகிறது. அறியாமை, காமம், தீய இயல்புகளைச் சுட்டுப் பொசுக்குகிறது. உணர்ந்தோ உணராமலோ உச்சரித்தாலே பகவான் அருள்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
சீதையைத் தேடிச் செல்லும்போது ராமனால் வானத்தில் பறக்க இயலவில்லை. ஆனால் அனுமன் ராம நாமத்தை ஜபித்தபடியே விண்ணில் பறந்து இலங்கையை அடைந்தான். அனுமனுக்கு இது சாத்தியமானதற்குக் காரணம் ராம நாமத்தின் மகிமையே ஆகும். "பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராம நாமம். நல்லது அனைத்தின் இருப்பிடமும், இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும், தூய்மையைக் காட்டிலும் தூய்மையானதும்- மோட்ச மார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும், சான்றோர் களின் உயிர் நாடியாகவும் விளங்குவது ஸ்ரீ ராம் என்னும் தெய்வீக நாமம் ஆகும். இவ்வாறு முனிவர்கள் சொல்லுகிறார்கள்'' என சிவபெருமான் பார்வதி தேவியிடம் ராம நாமத்தின் மகிமையை எடுத்துரைப்பதாகப் புராண வரலாறு கூறுகிறது.
"நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராமவென்ற யிரண்டெழுத்தினால்"
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திரமாகிய ராம நாமத்தின் மகிமையை விளக்குகிறது. ஸ்ரீ ராம நவமியன்று விரதமிருந்து ஸ்ரீ ராமரை வழிபடுவோர், ஸ்ரீ ராமர் அருளோடு ஸ்ரீ ஆஞ்சனேயர் அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக