ஞாயிறு, 9 ஏப்ரல், 2017

பாஞ்சாலங்குறிச்சியின் ஜக்கம்மா கோவில்




பாஞ்சாலங்குறிச்சியின் ஜக்கம்மா கோவில்

சுதந்திரத்திற்காக பாடுபட்டு ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் ஆட்சி செய்து வந்தார். கட்டபொம்மனும் அவரது தம்பி ஊமைத்துரையும் வாழ்ந்த இந்த இடத்தில் இவர்களின் வீரத்துக்கும் விவேகத்துக்கும் நல்வழி காட்டிய இவர்களது குலதெய்வம் ஜக்கம்மா கோவில் உள்ளது. ஜக்கம்மா காளி தேவியின் அவதாரம் என்றும், இவர் போயசம்மா, எல்லம்மா, ஜக்கும்மா, போலேரம்மா, பொம்மம்மா போன்ற வேறு சில பெயர்களாலும் இச்சாதியினரால் அழைக்கப்படுகிறார். கம்பளத்து நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த மக்கள் இசுலாமியரின் படை எடுப்பால் இருக்குமிடங்களிலிருந்து தெற்கு நோக்கி இடம் பெயர்ந்தார்கள்.
இதற்கு இசுலாமிய மன்னன் ஒருவன் கம்பளத்து சமுதாயப் பெண் ஒருவரை விரும்பி மணமுடித்துத் தரும்படி கேட்டதாகவும், தங்கள் சமுதாயப் பெண்ணின் பாதுகாப்பிற்காக தெற்கு நோக்கி வந்தனர். அப்பொழுது துங்கபத்திரா நதிக்கரையை கடக்க முடியாமல் இருந்தனர் பெரும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது பின்னால் கம்பளத்தார் கூட்டம் வடகரையில் தங்களது குல தெய்வமான எல்லம்மா தேவியை வழிபட்டனர். அப்போது மலை பகுதியில் இருந்து சிறு குழந்தை வந்து நீங்கள் இந்த கரையை கடக்க உங்களுக்கு மரங்கள் பாலமாக அமையும், நீர் வழிவிடும், தெற்கு சீமைக்கு சென்று மேன்மையோடு ஆட்சி செய்து வாழுங்கள், உங்களுக்கு உங்கள் சமுகம் உலகத்தில் உள்ள வரையில் உங்கள் கூடவே இருந்து உங்களை காப்பேன் என்று கூறி மறைந்தது.
அதே போல நீர் வழிவிட்டு, மரங்கள் பாலமாக அமைந்து தெற்கு கம்பள நாட்டுக்கு வந்து ஆட்சியும் செய்தனர். சின்ன குழந்தை வடிவாக வந்த எல்லம்மாவை ஜொக்கம்மா என்று அழைத்தனர் பின்பு அந்த பெயர் தமிழர்கள் மத்தியில் ஜக்கம்மா என்று மருவியது. ஜக்கம்மா மிக சக்தி வாய்ந்த தெய்வம் என்ற நம்பிக்கை சோதிட நம்பிக்கையுடைய பலருக்கும் உண்டு. குடுகுடுப்பை, கைரேகை சோதிடம், மாந்திரிகம், கோடாங்கி பார்த்தல் போன்ற வேலைகள் ஜக்கம்மா பெயரைச் சொல்லித்தான் தொடங்கப்படுகிறது. இந்த சாதியினர் சொல்லும் வாக்கு உண்மையாக நடக்கும் என்கிற நம்பிக்கை முன்பு பலருக்கும் இருந்தது. எட்டயபுர அரசர்களுக்குக் குருவாக இருந்தவர்கள் கோடங்கி நாயக்கர்கள் எனப்படுபவர்கள்.

சோதிடம், மாந்திரிகம் போன்ற கலைகளில் திறமை மிக்கவர்களாக இருந்திருக்கின்றார்கள். இந்தக் கோடங்கி நாயக்கர்கள் முன்னிலையில் தான் திருமண வைபவங்கள், இறப்பு சடங்குகள், கிரியைகள் ஆகியற்றோடு ஒரு குருவின் அனைத்து கடமைகளையும் நிறைவேற்றுபவர்களாக இவர்கள் இருந்திருக்கின்றனர். வீரபாண்டிய கட்டபொம்மனும் ராஜகம்பளம் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால் இவரின் குல தெய்வமாக ஜக்கம்மாவே இருந்துள்ளார். ஆண்டுதோறும் சித்திரை மாதம் வரும் திங்கள் கிழமையில் ஜக்கம்மா உயிர் நீத்தார் என்ற நம்பிக்கையில் சித்திரை மாதத் திங்கள் கிழமைகளில் ஜக்கம்மாவுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன.
பாஞ்சாலங்குறிச்சியிலிருக்கும் ஜக்கம்மா கோவிலில் கம்பளத்து சாதியினர் சிறப்பு வழிபாடுகளுடன் தேவராட்டம், சேர்வைஆட்டம், கும்மி போன்றவைகள் மூலம் ஆடிப்பாடி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடுகின்றனர். இந்த ஜக்கம்மாளுக்கு காவல் தெய்வம் எதுவும் கிடையாது என்பதால் ஆடு, கோழி எனப் பலியிடுதல் வழக்கமோ அதை உணவாக்கிப் படைக்கும் வழக்கமோ இல்லை. தெய்வமாக, பயத்தோடு இன்றும் இந்த ஜக்கம்மா தேவியை வணங்குகின்றனர். குடித்துவிட்டு வணங்குபவர்கள் வாழ்க்கையே ஜக்கம்மா அழிந்துவிடுவாள், அசைவ உணவு படைக்க கூடாது போன்ற பல கடும் கட்டுபாடுகள் இக்கோவிலில் இன்றும் உள்ளது.

எப்படி போகலாம் :
தூத்துக்குடியில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் வந்தால் குறுக்குச்சாலை என்ற இடத்தில் இருந்து பாஞ்சாலங்குறிச்சி ஊரின் நுழைவாயில் வளைவு இருக்கும். ஊருக்குள் 4 கிமீ சென்றால் கட்டபொம்மனின் கோட்டையும் ஜக்கம்மா கோவிலும் உள்ளது.



ஜமீன் கோயில்கள் - பாஞ்சாலங்குறிச்சி
முத்தலங்குறிச்சி காமராசு

கட்டபொம்மன் பரம்பரையினர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பு வடபகுதியிலிருந்து தென்பகுதிக்கு வந்தவர்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் இந்த வம்சாவளியில் 47வது வாரிசு. ஆங்கிலேயர் காலத்தில் ஜமீன்தார்கள் உருவாக்கப்பட்டார்கள். பாளையக்காரர்கள் ஜமீன்தார்களான பிறகும் பாஞ்சாலங்குறிச்சி தன்னிச்சையான சுதந்திரப் பகுதியாகவே இருந்துள்ளது.
ஆங்கிலேயர்களுக்கு கப்பம் கட்டி, அவர்களுக்கு அடிமைசெய்து பல பாளயக்காரர்கள் வாழ்ந்துகொண்டிருந்தனர். ஆனால், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயர்களுக்கு அடிபணியவில்லை, கப்பம் கட்டவும் இல்லை. எனவே பாஞ்சாலங்குறிச்சி கோட்டை ஆங்கிலேயர்களால் தவிடுபொடியாக்கப்பட்டது. பல அழிவுகளுக்கு இடையிலும் பாஞ்சாலங்குறிச்சி தலை நிமிர்ந்து நிற்கக் காரணம், அவர்கள் வணங்கும் குலதெய்வமான வீரஜக்கம்மாதேவி மீதும், திருச்செந்தூர் முருகப் பெருமான் மீதும் அவர்கள் கொண்ட பற்றும் பக்தியும்தான்.
கட்டபொம்மன் முன்னோர்கள் பாஞ்சாலங்குறிச்சிக்கு வந்த வரலாறு சுவையானது. ஒரு சமயம் வேட்டைக்கு சென்ற மன்னர், நாய் ஒன்றை முயல் விரட்டுவதை கண்டார். ஒரு வேட்டை நாயை, சாதுவான ஒரு முயல் விரட்டுகிறதென்றால், இந்த மண்ணில் வீரம் ஊறியிருக்கிறது என்று ஊகித்தார். அதே இடத்தில் தான், தன் குடிமக்களோடு வசிக்க விரும்பினார். அந்த இடத்தைத் தன் பாட்டன் பாஞ்சாலன் பெயரால் ‘பாஞ்சாலங்குறிச்சி’ என்றழைத்தார்.
இங்கே ஒரு கோட்டையை நிர்மாணித்துக்கொண்டு அரசாண்டார் வீரபாண்டிய கட்டபொம்மன். 1799ல் மேஜர் பானர்மேன் பாஞ்சாலங்குறிச்சி மீது படையெடுத்து கோட்டையை வீழ்த்தினார். தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த கட்டபொம்மனை புதுக்கோட்டை பாளையக்காரர் ஆங்கிலேயரிடம் காட்டிக்கொடுத்தார். கயத்தாறு என்ற ஊரில் 1799, அக்டோபர் 16ந்தேதி கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்டார். அந்த இடம் தற்போதும் நினைவிடமாக உள்ளது.
கட்டபொம்மன் தனது குலதெய்வமான வீரஜக்கம்மாளை வணங்கி வரம் கேட்காமல் எந்த காரியத்திலும் ஈடுபடமாட்டார். அவர் காலத்தில் ஜக்கம்மாள்தேவிக்கு சகதேவி என்று பெயர். சக என்றால் வாள். வீரத்தின் வடிவமாகவே அந்த தெய்வம் விளங்கியுள்ளது. பிற்காலத்தில் ஜக்கதேவி என்று மருவி, ஜக்கம்மாதேவி என்றானது. கட்டபொம்மன் காலத்து ஜக்கதேவி குத்துக்கல்லில் அருள்பாலித்துள்ளார். அதன் மீது இரண்டு வாட்களை வைத்து வணங்கியுள்ளார்கள். தேவியின் முகத்தைத் தங்கத்தால் உருவாக்கி வழிப்பட்டுள்ளனர். தேவிக்கு கம்பு, கொழுக்கட்டை, தினைமாவு, பழங்களைப் படைத்திருக்கிறார்கள். அது இன்றளவும் தொடர்கிறது.
அம்மனுக்கு கரும்பு பந்தல் போட்டு தோரணம் கட்டியிருக்கிறார்கள். தற்போதும் திருவிழாக்காலங்களில் கரும்பால் கோயிலில் தோரணம் கட்டுகிறார்கள். பழத்தால் அலங்காரம் செய்யும் வழக்கமும் உண்டு. இதற்கு ‘பழக்கூடை எடுத்தல்’ என்று பெயர். கோயில் திருவிழாவின் முதல்நாள் இரவு கோயிலுக்கு பாத்தியப்பட்டவர்கள் வீட்டிலிருந்து பலவகையான பழங்களை கொண்டு சென்று படைப்பார்கள்.
இந்தப் பழக்கூடை இரவு முழுவதும் மூலஸ்தானத்தில் அன்னையில் காலடியில் வைக்கப்பட்டு காலை பூஜைக்கு பிறகு அவரவருக்குக் கொடுக்கப்படுகிறது. இக்கோயிலில் சிவராத்திரி திருவிழா மிகவும் சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகிறது. பழங்கள், பஞ்சாமிர்தம் படைத்து தேவி ஜக்கம்மாளை வணங்குவார்கள். புட்டு, துள்ளுமாவு படைத்து பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்குவார்கள்.
அன்றிரவு வித்தியாசமான ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோயில் வளாகத்தில் பூசாரி குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு நிற்பார். அவர் முன்பு அண்ணன்-தம்பி முறைகொண்டவர்கள் கீழே விழுந்து கும்பிடுவார்கள். பூசாரி ஒவ்வொரு குச்சியாகக் கீழே போடுவார். இப்படி 18 தடவை கும்பிடுவார்கள். அதன்பின் அவர்களின் மச்சான் முறையினரும் அதே வழிபாட்டைத் தொடர்வார்கள்.
இவர்களை மனைவி, மச்சினிகள் பின்பற்றுவார்கள். இறுதியாக அக்காள்-தங்கை முறை உள்ளவர்கள் வரிசையாக நின்று வணங்கி விழுவார்கள். பூசாரி ஒவ்வொரு தடவை அவர்கள் கீழே விழுந்து வணங்கும் போதும் ஒவ்வொரு குச்சியை போட்டுக்கொண்டே இருப்பார். கட்டபொம்மன் வம்சா வளியினருக்கு ஜக்கம்மாளை போலவே மல்லம்மாள் கோயிலும் பிரபலமானது. குறிப்பாக பேரூரணி, வைப்பாறு போன்ற இடங்களில் மல்லம்மாள் கோயில் காணப்படுகிறது. அங்கும் இதேபோல விழுந்து கும்பிடும் வைபவம் நடைபெறுகிறது.
தங்கள் வாரிசுகளுக்கு மல்லம்மாள், மல்லு சாமி, என பெயர்களை வைத்திருக்கிறார்கள். பாண்டிய மன்னர்கள் காலத்தில் பாஞ்சாலங்குறிச்சியார்கள், அவர்களோடு இணைவாகவே ஆண்டுள்ளார்கள். இவர்கள் சாஸ்தாவை விக்கிரபாண்டி சாஸ்தா என்றழைக்கிறார்கள். செண்பக கூத்து அய்யனார், செம்புகுட்டி அய்யனார் உள்பட பல அய்யனார்கள் இவர்கள் வணங்கும் தெய்வங்களாகும். 1958-ம் ஆண்டுவரை ஜக்கம்மாள் கோயில் பழைய இடத்திலேயே இருந்துள்ளது.
அவர் முகம் மட்டுமே தங்கத்தில் ஜொலித்தது. சிலை கிடையாது. கட்ட பொம்மனின் வீழ்ச்சியால் வழிபாடு குறைந்திருந்தது. ஆனால், அம்மனின் அருளாசி குறையவேயில்லை. ஒட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் ராமலிங்க அய்யர். இவர் மிகவும் கண்டிப்பானவர். தனது பணியில் உறுதியாக இருந்தார். வில் வண்டியில் ஊர் ஊராகச் சென்று மக்கள் பிரச்னைகளைத் தீர்த்து வைப்பார். ஒருநாள் ஒரு கிராமத்துக்குச் சென்றபோது அவருடைய கைத்துப்பாக்கி தொலைந்து விட்டது.
இதற்கு மேலதிகாரிக்கு பதில் கூறவேண்டுமே, இந்தப் ‘பொறுப்பின்’மைக்கு ‘பணி நீக்கம்’ தண்டனைகூட கிடைக்கலாமே என்று கவலையில் ஆழ்ந்தார் அவர். கனத்த மனதுடன் இரவில் சற்று கண்அயர்ந்தார். அப்போது கனவில் சிறு குழந்தையாக ஜக்கம்மாள்தேவி தோன்றினாள். ‘‘நீ தொலைத்தது உனக்கு கிடைக்கும் - காலையில் நான் குறிப்பாகக் காட்டும் இடத்தில்! அங்கே எனக்கு ஒரு கோயில் கட்டு” என்றாள். திடுக்கிட்டு கண்விழித்தார் அய்யர். மறுநாள் காலையில் எழுந்தார். கைத்துப்பாக்கியைத் தேடிச் சென்றார்.
அன்னை குறிப்பிட்ட இடத்தில் அது கிடைத்தது. அந்தப் பகுதியில் நின்றிருந்த சிலர் ஜக்கம்மாள்தேவி கோயில் கட்டுவதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். ஆர்வத்துடன் அவர்களிடம், தான் கனவில் ஜக்கம்மாவைக் கண்டதையும், அவள் கொடுத்த குறிப்பின்படி தன் கைத்துப்பாக்கி கிடைத்ததையும் சொன்னார் அய்யர். கூடவே கோயில் கட்டும் அவர்களுடைய முயற்சிக்குத் தானும் உதவுவதாக உறுதியளித்தார்.
வெகு விரைவிலேயே ஆள் நடமாட்டம் இல்லாத அந்தக் காட்டுப் பகுதியில் அன்னைக்கு ஆலயம் உருவானது. அன்னை பல்நூறு பக்தர்களை தன் அருட்கடாட்சத்தால் ஈர்த்தாள். காடாக இருந்த அவ்விடம் மிகப்பெரிய ஊராக மாறியது. மழை, காற்று போன்ற இயற்கை சீற்றத்தால் பாதிக்கப்படாதவகையில் கோயில் வட்ட அமைப்பில் கட்டப்பட்டது. 1957ம் ஆண்டு இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ‘கோட்டைமேடு’ என்றழைக்கப்பட்ட இந்த இடத்தில் சித்திரை மாதம் கடைசி வெள்ளிக்கிழமைதோறும் கொடை விழா மிகச் சிறப்பாக நடந்து வருகிறது.
1974-ம் ஆண்டு இந்தப் பகுதியில் அரசால் குடியிருப்பு உருவானது. அதை தொடர்ந்து இந்த இடத்தில் கோட்டை சுவர் கட்டப்பட்டது. தற்போது சுற்றுலாத்துறை இப்பகுதியைப் பராமரிக்கிறது. தினமும் 1000க்கும் மேற்பட்டவர்கள் சுற்றுலா வந்து கட்டபொம்மன் கோட்டையை கண்டு மகிழ்கிறார்கள். கட்டபொம்மன் திருவிழாவும் , ஜக்கம்மாள்தேவி கோயில் விசேஷமும் ஒன்று போலவே நடைபெறுகிறது. திருவிழாவின் முதற்கட்டமாக கயத்தாறில் வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்திலிருந்து ஜோதி எடுத்து வரப்படும்.
அதேபோலவே கமுதியிலிருந்தும், திருச்செந்தூரிலிருந்தும் ஜோதியை ஊர்வலமாக கொண்டு வருவார்கள். பாஞ்சாலங்குறிச்சியில் இருந்து சுரங்கப்பாதை அமைத்து தற்போதைய பாளையங்கோட்டை பேருந்து நிலையம் அருகே வீரபாண்டிய கட்டபொம்மன் தப்பித்து சென்ற இடத்தில், அவருக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தச்சிலை அடிவாரத்திலிருந்தும் ஜோதி எடுத்து வருகிறார்கள். மதுரை-தூத்துக்குடி நாலுவழிச்சாலையில் வெக்காலியம்மன் கோயிலிலிருந்தும் ஜோதி புறப்படுகிறது. இந்த ஜோதிகள் அனைத்தும் ஓரிடத்தில் ஒன்றிணைந்து ஜக்கம்மாதேவி கோயிலை வலம் வந்து அன்னையிடம் சமர்ப்பணமாகின்றன.



இதற்கிடையில் தேவி ஆலயத்துக்கு முன்னால் பெண்கள் பொங்கலிடுவார்கள். பக்தர்கள் பாற்குடம் எடுத்து கோயிலை வலம் வந்து, அபிஷேகம், ஆராதனை நடத்துவார்கள். இரவு கலை நிகழ்ச்சிகள் உண்டு. விடிய விடிய தேவராட்டம் ஆடுவார்கள். கட்டபொம்மன் கதையை ஒரு குழுவினர் பாடுவார்கள். கரும்பைத் தனது கையில் வைத்து கொண்டு அனைவருக்கும் இனிப்பான வாழ்க்கை தருகிறாள் ஜக்கம்மாதேவி. கட்டபொம்மனின் வாரிசுகளுக்கு மட்டுமல்ல, இப்பகுதியின் அனைத்து மக்களுக்கும் அருள் தரும் ஆனந்த தேவியாகவே விளங்குகிறார்.
அதனால்தான் சாதிமதபேதமின்றி மகப்பேறு வேண்டி பலரும் அன்னையை நாடி வருகிறார்கள். மலேசியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியரும் குழந்தைவரம் கோரி, பெற்று, பிறகு நன்றிகூற குழந்தையுடன் வந்து செல்வதைக் காணலாம். கட்டபொம்மனின் வம்சாவளியினர் கொண்டாடும் திருவிழாவில் மற்றொன்று, கயத்தாற்றில் நடைபெறுவது.
கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட அக்டோபர் 16 ந்தேதி அவரது நினைவு நாளை முன்னிட்டு மாலை 5 மணிக்கு கட்டபொம்மன் சிலைக்கு மாலை மரியாதை செய்வார்கள். அங்குள்ள ஜக்கம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். பிறகு மக்கள் பொங்கலிட்டு வணங்குவர். கட்டபொம்மன் ஆட்சி திருச்செந்தூரிலிருந்து தென்காசிவரை பரவியிருந்திருக்கவேண்டும்.
அதற்குச் சான்றாக தென்காசி காசிவிஸ்வநாதர் கோயிலிலும், திருச்செந்தூர் முருகன் கோயிலிலும் அவருக்கு மண்டகப்படி இருந்துள்ளது. பசுவந்தணை சிவன் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்த வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு அந்தக் கோயிலிலும் மண்டகப்படி இருந்திருக்கிறது. ஆனால். பிற்காலத்தில் அது தொடர்ந்து நடைபெற வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. தற்போதும் திருச்செந்தூரில் அவரது வம்சாவளியினர் மண்டகப்படியை மிகச்சிறப்பாக நிறைவேற்றுகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக