செவ்வாய், 23 ஜூலை, 2019

திருமண வரம் அருளும் நெல்லை காந்திமதி அம்மன்! #AadiSpecial


திருமண வரம் அருளும் நெல்லை காந்திமதி அம்மன்! #AadiSpecial


மூங்கில் காடுகள் நிறைந்திருந்த பகுதியாக இருந்த வேணுவனம் பகுதியில் சுயம்புவாகத் தோன்றிய வேணுவனநாதரை வழிபடுவதற்காக பிரகாசமான திருவடிவம் கொண்டு பூமியில் தோன்றிய அம்பிகை காந்திமதி அருளாட்சி புரியும் திருத்தலம்தான் திருநெல்வேலி. இந்த அம்மனை தரிசித்து, அவளுடைய அருள்திறம் பற்றியும் அறிந்துகொள்வோம். இந்த அம்மனின் அற்புதங்களும் அருளாசியும் சொல்ல சொல்ல நீள்பவை. கன்றுக்கு இறங்கும் தாய்ப்பசுவாய் என்றுமே பக்தர்களுக்கு அருள்புரியும் இளகிய மனம் கொண்டவள் நெல்லையை ஆளும் காந்திமதியம்மன். நெல்லையப்பரின் மனம் கவர்ந்த இந்த தயாபரி வேண்டுவதை கொடுக்கும் உபகாரி. வாருங்கள் இந்த அன்னையின் அற்புதங்களை காண்போம்.

* நெல்லையில் பிரதானப் பகுதியில் உள்ள காந்திமதி அம்மை, வடிவுடை அம்மை, திருக்காமக்கோட்டமுடைய நாச்சியார், நெல்லை நாயகி என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகிறார்.

* திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல் பெற்ற தலமாகவும், பஞ்ச நாட்டிய சபைகளில் தாமிர சபையாகவும் விளங்கும் இந்த ஆலயத்தில் காந்திமதியம்மை அழகே உருவாக அலங்கார சொரூபிணியாக விளங்குகிறாள்.


*  காந்திமதி அம்மனை இங்குள்ள மக்கள்  தங்கள் வீட்டு பெண் போலவே எண்ணி போற்றி வருகிறார்கள். அம்மனுக்காக அலங்காரப்பொருட்கள் யாவும் பெரும்பாலும் நெல்லை மக்களால் அளிக்கப்பட்டதாகவே இருக்கும்.

* காந்திமதியம்மனுக்கு நடக்கும் ஆடிப்பூரவளைகாப்பு முக்கியமான திருவிழா. அம்மன் சந்நிதியில் கொடி ஏற்றப்பட்டு விழா தொடங்கும். விழா தொடங்கிய நாள் முதல் தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்,  அபிஷேகம், தீபாராதனை நடைபெறும். விழாவின் நான்காம் நாள் நிகழ்ச்சியில் வளைகாப்பு நிகழ்ச்சி  நடைபெறும்.

* ஆடி வெள்ளிகளில் அம்மனை காணவே கண் கூசும், அந்த அளவுக்கு அலங்கரிக்கப்பட்ட தேவியாக காட்சி தருவாள். புதிய பட்டு உடுத்தி, சந்தனம், ஜவ்வாது பூசி, தலையலங்காரம் செய்து, மாலை அணிந்து, தங்கநகைகள் ஜொலிக்க விளங்குவாள். அப்போது அனைத்து பழ வகைகளும், பிரசாதங்களும் நைவேத்தியமாக இவளுக்கு படைக்கப்படும்.

* ஆடி மாத வெள்ளி, செவ்வாய்களில் அளிக்கப்படும் வளையல்களைப் பெண்கள் அணிந்து கொண்டால், பிள்ளைவரம் வேண்டுபவர்களுக்குக்  பிள்ளை வரம் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.


* ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் ஆசியாவிலேயே மிகப்பெரிய ஆலயங்களில் ஒன்றாக உள்ளது. இதன் மூன்றாவது பிராகாரம் பிரமாண்டமானது. இப்பிராகாரத்திலிருந்து அம்மா மண்டபம் வழியாக அம்மன் சந்நிதி செல்வதற்கு வழி அமைக்கப்பட்டுள்ளது. இங்கிருந்தபடியே அருள்வழங்கும் அழகிய அம்பிகை பக்தர்களை காத்து வருகிறாள்.

* 2000 ஆண்டுகால பழைமையைக் கொண்ட இந்த ஆலயத்தில் அம்மனுக்கென ஆடிப்பூர விழா, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஐப்பசி திருக்கல்யாண திருவிழா, ஆனி மாதப் பெருவிழா போன்றவை விசேஷமானது. ஆனிமாத விழாவில்தான்  தமிழ்நாட்டின் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமையைக் கொண்ட நெல்லையப்பர் தேர் பவனி வரும்.

* வேண்டும் வரங்களை மனம் மகிழ்ந்து அளிக்கும் இந்த அன்னை சொக்கநாத பிள்ளையால் 'காந்திமதியம்மை பதிகம்' என்ற அழகிய பாடல்களால் பாடப்பட்டவள்.

நெல்லைப்பகுதிக்கு வருபவர்கள் யாரும்  காந்திமதியம்மையை தரிசிக்காமல் சென்றதே இல்லை. அத்தனை வசீகரமும், வரப்பிரசாதியாகவும் விளங்கக்கூடியவள் இந்த அன்னை. ஆடி மாதத்தில் இந்த அன்னையை வணங்கி அருள் பெறவேண்டும்.
நன்றி விகடன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக