செவ்வாய், 23 ஜூலை, 2019

ஆடி பிறப்பு: கணவனின் பலம் பெருக பெண்கள் விரதம் இருக்கவேண்டிய மாதம்!

ஆடி பிறப்பு: கணவனின் பலம் பெருக பெண்கள் விரதம் இருக்கவேண்டிய மாதம்!

தேவர்களின் பகல் பொழுது நேற்றோடு முடிந்துவிட்டது. இன்று முதல் தேவர்களின் இரவுப்பொழுதான தக்ஷிணாயன புண்ணிய காலம் ஆரம்பிக்கப் போகிறது. கடந்த ஒரு மாதமாக ராகுவின் பிடியில் இருந்துவந்த பித்ருகாரகனான சூரிய பகவான் சந்திர கிரகணத்திற்குப் பின் ஒருவழியாக தப்பித்து மாத்ருகாரகனான சந்திரனின் மடியில் கடக ராசியில் தஞ்சம் அடைந்துவிட்டார். இன்னும் ஒருமாதத்திற்கு அங்கிருந்து ஆடிமாதத்தைச் சிறப்பிக்கப்போகிறார்.

பெண்மையை போற்றும் ஆடிமாதம்

தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடி மாதத்தில்தான் பொறுமையில் சிகரமான பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள். இந்த மாதத்தில் வரும் திதி, நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன. ஆடிப்பிறப்பு, சர்வ நதி ரஜஸ்வலா, ஆடி பதினெட்டில் ஆடி பெருக்கு, நாக தோஷ பூஜை, புதுமணத் தம்பதிக்கு ஆடிப்பால் அளித்தல், இப்படி நாம் அறிந்துகொள்ள வேண்டிய ஆடி மாத விசேஷ வைபவங்கள் பல உண்டு. தெரிந்துகொள்வோமா?

ஆடிப்பட்டம்

ஆடிப்பட்டம் தேடி விதை என்பது பழமொழி. சித்திரை முதல் ஆனி வரை வெய்யிலின் ஆர்ப்பாட்டம். ஆடியில் காற்றுடன். மழையும் பெய்யும். அதனால் ஆடியில் நெல் விதைத்தால் தை மாதத்தில் நல்ல மகசூல் இதனால் வந்தது இந்த பழமொழி. எனவே விவசாய நாடான நமது நாட்டில் பொன்னேரு பூட்டும் வழக்கம் மரபில் இருந்தது. சுதந்திர இந்தியாவின் ஜாதகத்தில் விவசாயத்திற்குக் காரகமான சந்திரன், சுக்கிரன், சனி என அனைத்து கிரகங்களும் கடகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


ஆடிப்பண்டிகை

"ஆடி அழைக்கும். உகாதி ஓட்டும்" என ஒரு சொலவடை உண்டு. அதாவது தமிழ் வருடத்தில் ஆடி மாதத்திலிருந்துதான் அனைத்து பண்டிகைகள் திருவிழாக்கள் தொடங்குகின்றன. யுகாதியோடு பண்டிகைகள் முடிந்துவிடும். அதன்பிறகு சித்திரை வருட பிறப்பை தவிர வேறு பண்டிகைகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதைச் சிறப்பிக்கும் விதமாக ஆடி முதல் நாளில் ஆடிப்பண்டிகை எனக் கொண்டாடப்படுகிறது. வாசலில் கோலம் செம்மண்(காவி) எனக் களை கட்டத்தொடங்கிவிடும். தக்ஷிணாயனத்தின் முதன் நாளான ஆடிப் பண்டிகையின் போதும் கடைசி நாளான போகிப்பண்டிகையின் போதும் "போளி" எனும் இனிப்பு செய்வது பிராமணர் இல்லங்களில் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆடி மாதப் பிறப்பில், ஆடிப்பால் தயாரிப்பார்கள். புதிதாக திருமணம் ஆன மணமகனை (மருமகனை) அழைத்து வெள்ளி கிண்ணத்தில் ஆடியில் ஆடிப்பால் கொடுப்பது வழக்கம். அதனால் ஆண்மை பெருகும் என்பது நம்பிக்கை.

சர்வ நதி ரஜஸ்வலா

ரஜஸ்வலா என்பது பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் தீட்டினை குறிப்பதாகும். நதிகளைப் பெண்களாகப் போற்றுவது நமது நாட்டின் பாரம்பரியம். எனவே ஆடி மாத ஒன்றாம் தேதியிலிருந்து மூன்று நாட்களுக்கு நதிகளுக்கெல்லாம் ரஜஸ்வலா எனும் தீட்டு என்கிறது சாஸ்திரம். ஆடிமாதப் பிறப்பான 17-07-2019முதல் 19-07-2019 முடிய மூன்று நாட்கள் காவேரி, தாமிரபரணி, நர்மதா, யமுனா, முதலிய அனைத்து புண்ணிய நதிகளுக்கும் அதன் கிளை நதிகளுக்கும் ரஜஸ்வலா ஏற்படுவதால் அசுத்தி. ஆகவே இந்த மூன்று நாட்களிலும் அனைத்து புண்ணிய நதிகளிலும் கிளை நதிகளிலும் ஸ்நானம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என சாஸ்திரம் கூறுகிறது.


பெண்கள் மாதவிலக்கு காலத்தில் உடல் தூய்மை மற்றும் மனத்தெளிவு அற்று இருப்பதால் அவர்களை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யாமல் ஓய்வளிக்க சாஸ்திரம் பரிந்துரைக்கிறது. இந்த காரணத்தினால் தான் இன்றளவும் பிராமணர்கள் மற்றும் ஆசாரமான குடும்பங்களில் மாதவிலக்கு காலங்களில் பெண்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்படுகிறது. எனவே முதல் மூன்று நாட்களுக்கு நதிகளையும் புண்ணிய தீர்த்தங்களையும் நீராடுவது அவைகளை தொந்தரவு செய்வதற்குச் சமம் என்பதால் நீராடக் கூடாது என்கிறது சாஸ்திரம்.

ஆடியில் செவ்வாய் விரதம்

ஆடியில், செவ்வாய்க்கிழமைதோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும். அதேபோன்று ஆடி மாதச் செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஒளவையார் விரதம் கடைப்பிடிக்கும் வழக்கமும் உண்டு. கணவனின் ஆயுள் நீடிக்கவும், குழந்தை வரம் வேண்டியும், குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமண வரம் கிடைக்கவும் இந்த விரத வழிபாட்டின் மூலம் பிரார்த்தித்துக் கொள்வார்கள். ஆடி - செவ்வாய்க்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு, மங்கல கெளரி விரதம் கடைப்பிடிப்பதாலும் விசேஷ பலன்கள் கிட்டும் என்பது நம்பிக்கை.

அம்மனுக்கு வளைகாப்பு

திருமணமாகிக் கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஐந்தாம் மாதத்தில் வளைகாப்பு செய்வது வழக்கம். அந்த மரபுப்படி பங்குனி உத்திரத்தில் திருமணம் கண்ட அன்னையர் தெய்வங்களுக்கு ஐந்துமாதமான ஆடியில் வளைகாப்பு செய்யப்படுகிறது.

ஆண்டாளின் அவதாரத் திருநாள் ஆடிப்பூரம். இந்தத் திருநாளில் சுமங்கலிப் பெண்களுக்கு வளையல், மஞ்சள், குங்குமம், தேங்காய் பழம், வெற்றிலை-பாக்கு, ரவிக்கை வைத்துக் கொடுத்தால் ஐஸ்வர்யம் பெருகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். ஸ்ரீவில்லிப்புத்தூர், மன்னார்குடி ஸ்ரீராஜ கோபாலசாமி திருக்கோயில் மற்றும் திருவண்ணாமலை கோயில்களில் பத்து நாட்களும், கும்பகோணம் சாரங்கபாணி கோயிலில் மூன்று நாட்களும் ஆடிப்பூரத் திருவிழா நடைபெறும்.

ஆடிப்பூரத்தன்று அனைத்து ஆலயங்களிலும் அம்பாள் சந்நிதிகளில் வளையல்கள் சாற்றி வழிபாடுகள் சிறப்புற நடைபெறும். இந்த வைபவத்தைத் தரிசிப்பதுடன், பிரசாதமாகத் தரப்படும் வளையலைப் பெற்றுச் சென்று வீட்டில் வைத்தால், அங்கு சர்வ மங்கலங்களும் பொங்கிப்பெருகுகம்; பிள்ளை இல்லாதவர்களுக்கு விரைவில் பிள்ளை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.


குறிப்பாக திருச்சி உறையூர் குங்கும வல்லி ஆலயத்தில் அம்பாளுக்கு வளையல் அணிவித்து பிரார்த்தித்தால் திருமண பாக்கியமும் குழந்தை பாக்கியமும் கிட்டும்.

கருடன் பிறந்த ஆடிச் சுவாதி

பெரிய திருவடியான கருடாழ்வார் பிறந்தது ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்றுதான். இந்தத் திருநாளில் கருட தரிசனம் செய்வதாலும், கருடனை வழிபடுவதாலும் சகல தோஷங்களும் நீங்கும். ஸ்ரீரங்கத்தில் பெரிய கருடன் மற்றும் அமிர்த கலச கருடன், கும்பகோணம் நாச்சியார் கோயில் கல் கருடன் ஆகியவை கருடாழ்வாரின் சிறப்புமிக்க ஸ்தலங்களாகும்.

அழகன் முருகனுக்கு உகந்த ஆடிக்கிருத்திகை

வருடத்தில் மூன்று கார்த்திகை தினங்கள் அதீத முக்கியத்துவம் பெறும். அவை, உத்தராயண துவக்கமான தை மாதம் வரும் தை கிருத்திகை, கார்த்திகை மாதம் வரும் பெரிய கிருத்திகை மற்றும் தட்சிணாயன துவக்கமான ஆடி மாதத்தில் வரும் ஆடிக் கிருத்திகை. இந்த மூன்றும் கார்த்திகேயக் கடவுளுக்கு உகந்த நாட்கள். ஆடிக்கிருத்திகையில் விரதம் இருந்து முருகனை வழிபடுவதால் வேண்டிய வரங்கள் கிடைக்கும்.

ஆடி அமாவாசை

தட்சிணாயண புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை. சிறப்பான இந்த ஆடி அமாவாசை தினத்தில் சமுத்திர ஸ்நானம் செய்வதும், பித்ருக்களான நம் முன்னோர்களுக்கு தில தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமானது. இராமேஸ்வரம் திருப்புல்லாணி, வேதாரண்யம் ஆகிய இடங்களில் சமுத்திர ஸ்நானம் மற்றும் தில தர்ப்பணம் செய்வது சிறப்பு.

ஆடிப்பௌர்ணமி


ஆடி மாதம் பெளர்ணமி தினமும் விசேஷமானதுதான். அன்று அம்மன் ஆலயங்களில் விசேஷ வழிபாடுகள் நடக்கும். ஞானக் கடவுளாம் ஹயக்ரீவர் அவதரித்தது ஆடி பௌர்ணமி என்பதால், அன்று அவரை வழிபடுவதால் அஞ்ஞானம் நீங்கும்; பிள்ளைகள் கல்வியில் ஜொலிப்பார்கள்.

ஆடித்தபசு

சங்கரன்கோவில் ஆடித்தபசு பிரசித்தி பெற்ற திருவிழா. 'ஹரியும் அரனும் ஒன்றே' என உலகுக்கு உணர்த்த விரும்பிய கோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக் காலில் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சியளித்தார். இந்த வைபவமே ஆடித்தபசு திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது.

ஆடிக்கூழ்

சித்திரை வைகாசி காலங்களில் மாரியம்மனுக்கு ஏற்பட்ட உஷ்ண நோய் தனிய கம்பு மற்றும் கேழ்வரகில் கூழ் வார்ப்பது மரபு. ஆடியின் அனைத்து ஞாயிற்றுக் கிழமைகளிலும் செல்லும் இடங்களில் எல்லாம் கூழ் வார்ப்பதைக் காணலாம்.


பசிப்பிணி போக்கி, எளியவர் அடையும் மகிழ்ச்சியில் இறைவனைக் காண்போம் என்ற கோட்பாடே கஞ்சி வார்த்தல் வழிபாட்டின் தாத்பரியம். சமயபுரம், புதுக்கோட்டை - நார்த்தாமலை முதலான அம்மன் தலங்களில் கஞ்சி வார்க்கும் வழிபாடு சிறப்புற நடைபெறும்.

வளம் பெருக்கும் ஆடிப்பெருக்கு

நதியைப் பெண்ணாக வணங்கும் நாள்! காவிரித்தாய் கருவுற்றதைக் கொண்டாடும் திருநாள். மழை பெய்து காவிரி முதலான நதிகளில் வெள்ளம் பெருக்கியோடும் ஆடி மாதத்தின், 18-ம் நாள் ஆடிப் பெருக்காகக் கொண்டாடப்படுகிறது. அன்று புத்தாடை அணிந்து, சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, எலுமிச்சை, தயிர்ச் சாதம், வடகம் முதலான பதார்த்தங்களை எடுத்துச்சென்று, நதிக் கரைகளில் அமர்ந்து நதிகளை தாயாகக் கருதிப் பூஜித்து விருந்துண்டு மகிழ்வார்கள். இந்த தினத்தில் செய்யப்படும் மங்கல காரியங்கள் பன்மடங்கு பலன் தரும் என்பது ஐதீகம்.

ஆடிவெள்ளி


ஆடி மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் அனைத்து சக்தி ஸ்தலங்களிலும் பொங்கல் வைத்து வழிபாடு நடத்துவர். அந்தவருடம் முழுவதும் குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைப்பதைக் காணலாம். திருமயிலை முண்டக கண்ணியம்மன், திருவேற்காடு மாரியம்மன், சமயபுரம், நார்த்தாமலை, மற்றும் பல மாரியம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். கன்னியாகுமரி, திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆகிய ஸ்தலங்களில் ஆடி வெள்ளிக் கிழமைகளில் விடியற்காலை 3 மணி முதல் வரிசையில் நின்று தரிசனம் செய்வர்.

அங்காரக சதுர்த்தி

சங்கடங்கள், இக்கட்டுகள், நெருக்கடிகள் தீருவதற்கு சங்கடஹர கணபதியை வணங்குகின்றோம். சங்கடஹர கணபதியை வணங்கியவர்களில் செவ்வாய் கிரகம் எனப்படும் அங்காரகன் முக்கியமானவர். அவரை வழிபட்டுப் பல மங்களங்களுடன் கிரகப் பதவியையும் 'மங்களன்' என்னும் சிறப்புப் பெயரையும் விநாயகரிடமிருந்து பெற்றார். ஆகையால் சங்கடஹர சதுர்த்திக்கு 'அங்காரகச் சதுர்த்தி’ என்றும் பெயர் ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க் கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தி மிகவும் சிறப்பு வாய்ந்தது. சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து வழிபட்டால் சங்கடங்கள் தீருவதோடு செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் கெடுதல்களும் தோஷங்களும் நீங்கும் மற்றும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும்..


மொத்தத்தில் இந்த ஆடி மாதம் பெண்கள் மற்றும் பெண் தெய்வங்களில் பலம் ஓங்கிநிற்க்கும் மாதமென்றால் மிகையாகாது. ஆலயமோ அலுவலகமோ அல்லது வீடோ எல்லா இடங்களிலும் பெண்கள் ஓங்கி நின்று ஆண்களைக் காக்கும் மாதம் ஆகும். சந்திரனும் சுக்கிரனும் ஆதிக்கம் செலுத்தும் மாதம் ஆடி மாதம். தந்தையைக் குறிக்கும் சூரியன் தாயிடம் சென்று சரணடைகிறார். ஆகவே ஆண்கள் தங்கள் வரட்டுகௌரவத்திற்காக சண்டை போடாமல் "மாத்ரு தேவோ பவ:" என சரணடைந்துவிடுவது நல்லது. பெண்கள் தங்களிடம் தஞ்சமடைந்தவர்களை எப்படியாவது காப்பாற்றிக் கரை சேர்க்கும் அற்புத மாதம் ஆகும். "ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் அதில் நான் எந்த மூலை" என்பதை உணர்ந்து மனைவியரின் கோபத்திற்கு முன் பணிந்து சென்றுவிடுவது நல்லது.
நன்றி தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக