ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்
அரங்கனை மணக்க அழகரிடம் பிரார்த்தனை!
நள வருடம்- ஆடி மாதம், சுக்ல பட்சம் சதுர்த்தி- செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய அந்தத் திருநாள், பெரும் புண்ணியம் கட்டிக்கொண்டது.
இந்த தினத்தில்தான்... ஸ்ரீவில்லிப் புத்தூரில், வடபெருங்கோயிலுடையான் கைங்கரியத்துக்காக பெரியாழ்வார் உருவாக்கிய நந்தவனத்தில், துளசிச் செடியின் கீழ்... செந்தமிழை, பைந்நாகப் பாம்பின் மீது பள்ளிகொண்டானை- அந்தத் திருவரங்கனை ஆள... ஸ்ரீபூமிப் பிராட்டியின் அம்சமாய் அவதரித்தாள் ஸ்ரீஆண்டாள்!
நினைத்த காரியம் நினைத்ததுமே நிறைவேற, ஸ்ரீஆண்டாளை வழிபடும்படி அறிவுறுத்துவார்கள் பெரியோர்கள். காரணம்?!
ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்!
'அரங்கனையே மணப்பேன்’ எனச் சங்கல்பித்ததுடன், தான் நினைத்ததை நிறை வேற்றியும் காட்டியவள் அல்லவா, அந்தச் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியாள்! அவளின் திருப்பாதம் பணிந்து வணங்க, நாம் நினைத்த காரியங்களையும், தடங்கலின்றி நிறைவேற்றித் தருவாளாம் அவள்.
அதே நேரம், நாம் நினைப்பதும் வேண்டு வதும் உசத்தியானதாக இருக்க வேண்டும், ஸ்ரீஆண்டாளின் வேண்டுதலைப் போலவே! அந்த அரங்கனே வேண்டும் என்றாள் அவள்; அதற்காகவே பக்தி செலுத்தினாள்; அந்த இறைவனுக்காகவே வாழ்க்கை நடத்தினாள். இதற்கு, அவளின் பாசுரங்களே சான்று!
ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்!
திருமாலிருஞ்சோலை- அழகர் அருள் பாலிக்கும், பாண்டி நாட்டு திவ்விய தேசம். எம்பெருமான் விண்ணளந்து நின்றபோது, அவரின் திருப்பாதத்தை பிரம்மன் கமண்டல நீரால் அபிஷேகம் செய்ய, ஆகாச கங்கையாய் பிரவாகித்த அந்த நீர், எம்பெருமானின் தண்டைச் சலங்கையில் பட்டுத்தெறித்து பூமியில் விழ, அதுவே நூபுர கங்கை (சிலம்பாறு) தீர்த்தமாய்த் திகழும் புண்ணிய க்ஷேத்திரம் இது.
ஸ்ரீசுந்தரவல்லித் தாயாருடன் அருளும் இந்தத் தலத்தின் நாயகன் அழகரைப் போற்றும் ஸ்ரீஆண்டாள்...
தெள்ளி யார்பலர் கைதொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளு மிடத்தடி கொட்டிட
கொள்ளுமாகில்நீ கூடிடு கூடலே!
- எனப் பாடுகிறாள் (நாச்சியார் திருமொழி: 4-1). அதாவது... 'நித்யசூரிகளால் அனுதினமும் கரம்கூப்பி வணங்கப்பெறும் திருமால், வள்ளல்பிரானாக திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கிறான். உள்ளம் கொள்ளை கொள்ளும் அந்தக் கள்வன் பள்ளி கொண்டிருக்கும் திருவரங் கத்தில், அவனது திருவடிகளை நான் பிடித்துவிடும்படியாக அருள மாட்டானா? அப்படி அவன் அருள்வதற்குத் திருவுளம் பற்றுவானாகில், கூடலே நீ கூடிடுக’ என மேகத்தை வேண்டுகிறாள் கோதை நாச்சியார்.
ஆடிப்பூரம்... ஆண்டாள் தரிசனம்!
இதிலிருந்து, அரங்கனின் மீதான அவளின் பக்தியையும் காதலையும் நன்கு உணரலாம். 'மாலவனையன்றி மனிதர்கள் எவரையும் மணாளனாக ஏற்கமாட்டேன்’ எனச் சூளுரைத்துக் கொண்டவள், வாரணம் ஆயிரம் சூழ வர நாரணன் நம்பியை மணப்பதுபோல் கனவும் கண்டாள். அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும் என்பதே அவளின் பிரார்த்தனையாகவும் அமைந்தது.
திருமாலிருஞ்சோலை இறைவனிடம் ஆண்டாள் பிரார்த் தனை செய்வதைப் பாருங்களேன்...
நாறு நறும்பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு, நான்
நூறு தடாவில் வெண்ணெய் வாய் நேர்ந்து பராவி வைத்தேன்
நூறு தடாநிறைந்த அக்கார வடிசில் சொன்னேன்
ஏறு திருவுடையான் இன்று வந்திவை கொள்ளுங்கொலோ!
- தனது வேண்டுதல் நிறைவேற, அழகருக்கு நூறு தடா (ஓர் அளவு) வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பிப்பதாகப் பிரார்த்திக்கிறாள் ஆண்டாள்.
உன்னதப் பிரார்த்தனை பழுதின்றி நிறைவேறும். ஆண்டாளும் அரங்கனை அடைந்தாள்.
பிற்காலத்தில் உடையவர் ஸ்ரீராமானுஜர் கள்ளழகர் கோயிலுக்கு வந்து, இறைவனுக்கு நூறு தடா வெண்ணெயும், நூறு தடா அக்காரவடிசிலும் சமர்ப்பித்து வழிபட்டு, ஆண்டாளின் பிரார்த்தனையை நிறைவேற்றினாராம்.
பின்னர், அவர் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றபோது, அங்கே ஸ்ரீஆண்டாள் தன் அர்ச்சைக் கலைத்து (விக்கிரகத் திருமேனியை அர்ச்சை- அர்ச்சாவதாரம் என்பர்), 'வாரும் எம் அண்ணாவே’ என ஸ்ரீராமானுஜரை வரவேற்றா ளாம். இதன் அடிப்படையில், ஆண்டாளின் வாழித் திருநாமத்தில், 'பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னாளாள்’ எனப் போற்றப்படுகிறாள் கோதை நாச்சியார்.
இன்றும் ஸ்ரீராமானுஜர் அவதரித்த ஸ்ரீபெரும்புதூர் திருக்கோயிலில் மார்கழி உற்ஸவத்தில் ஒருநாள், 'மாலே மணிவண்ணா...’ பாடலின்போது, ஆண்டாளுக்கு விருந்துபசாரம் நிகழ்த்துகிறார் ஸ்ரீராமானுஜர். மிக அற்புதமான வைபவம் இது!
ஆண்டாளைப் போற்றும் அருளாளர்கள், 'அவள் திருவேங்கடமுடை யானின் பெருமையை கேட்டபோது முக மலர்ச்சியும், திருமாலிருஞ்சோலை இறைவனின் வடிவழகை அறிந்தபோது அக மகிழ்ச்சியும், திருவரங்கனின் பெருமையைக் கேட்டு அளவற்ற இன்பமும் அடைந்தாள்; அரங்கனையே மணாளனாக வரித்துக் கொண்டாள்’ என்று சிலாகிப்பார்கள்.
இன்றைக்கும் திருப்பதி புரட்டாசி பிரம்மோற்ஸவத்தின்போது, ஸ்ரீவில்லிப் புத்தூர் ஆண்டாளின் மாலை திருப்பதிக்குச் செல்லும். ஆண்டாள் மாலையை திருவேங்கடவன் ஏற்றுக்கொள்ள. அவரின் அருட்பிரசாதமாக புடவை ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதை ஆண்டாளின் திருக்கரத்தில் சமர்ப்பித்து ஆராதனைகள் செய்வர். அதேபோல் சித்திரைத் திருவிழாவையட்டி, திருமாலிருஞ்சோலை அழகருக்கும் ஆண்டாள் மாலை கொண்டுசெல்லப்படுகிறது.
ஸ்ரீவில்லிப்புத்தூர் வடபெருங் கோயிலில், அதிகாலை விஸ்வரூப தரிசனம் காண வரும் பக்தர்களுக்கு, ஆண்டாள் மாலையுடன் காட்சி தருவார் ஸ்ரீவடபத்ரசாயி. ஆமாம்... அனுதினமும் இரவு ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை, இந்த இறைவனுக்குச் சார்த்தப்படுமாம். அந்த மாலையைக் களையாமல், மறுநாள் விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருவார் பெருமாள்; தரிசிப்பவருக்குச் சிலிர்ப்பான அனுபவம் அது!
இந்நாளில்... ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் ஸ்ரீஆண்டாள் அகமகிழ்ந்து போற்றிய இன்னும் பிற தலங்களுக்கும் சென்று வழிபட்டு வாருங்கள். ஆண்டாளை உளமார வழிபடுங்கள்; அரங்கனின் துணையோடு உங்கள் பிரார்த்தனை பலிக்க, வாழ்வு இனிக்க வரம் தருவாள் கோதை நாச்சியார்.
நன்றி விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக