செவ்வாய், 23 ஜூலை, 2019

சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி!


சிவபெருமானுக்கு பிடித்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கிய மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி!

மேல்மலையனூரில் கோவில் கொண்டு எழுந்தருளியிருக்கும் அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம் அற்புதங்களும், அதிசயங்களும் நிறைந்தது. இந்த ஆலயத்தில் தன்னை நாடிவரும் பக்தர்களுக்கு நலமும், வளமும் வழங்கி வரும் ஆற்றல் மிக்க சக்தியாக அன்னை அங்காளபரமேஸ்வரி விளங்குகிறாள். மயானத்தில் வீற்றிருந்து பக்தர்களை பிடித்திருக்கும் பேய், பிசாசு மற்றும் பில்லி சூனியம் ஆகியவற்றை முறியடித்து அருளாட்சி புரிந்து வரும் அங்காளபரமேஸ்வரியின் வரலாறு சிவனோடு தொடர்புடையது.

ஆதிகாலத்தில் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷத்தை நீக்கும் பொருட்டு தோன்றியவர் அங்காளம்மன். விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகாசிவராத்திரி அன்று சிவனை பிடித்து இருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகியதாக ஐதீகம்.

இதற்கு ஒருபுராணக்கதை உண்டு. சிவபெருமானுக்கு 5 தலைகள் இருப்பதை போல், தனக்கும் 5–வது தலை வேண்டும் என்று நினைத்தார் பிரம்மதேவர்.

ஆகவே சிவபெருமானை நோக்கி தவம் இருந்து வரம் கேட்டு பெற்றுக்கொண்டார். இதனால் பிரம்மாவுக்கும் 5 தலைகள் இருந்தது. ஒருநாள் பிரம்மா கர்வத்துடன் கயிலாயத்துக்கு சென்றார். பிரம்மதேவனை கண்ட பார்வதி, சிவபெருமான் தான் வந்துவிட்டார் என்று நினைத்து அவர் பாதங்களில் விழுந்து வணங்கி பூஜை பொருட்களை சமர்ப்பித்தார். பின்னர் பிரம்மாவின் முகத்தை பார்த்து உண்மை நிலையை தெரிந்து கொண்ட பார்வதி ஆத்திரம் அடைந்தாள். பிரம்மாவை நோக்கி உன் ஒரு தலை அழியக்கடவது என்று சாபம் இட்டார். மேலும் நடந்ததை சிவனிடமும் கூறினார் பார்வதி. பரமசிவன் தன் சூலாயுதத்தால் பிரம்மாவின் ஒரு தலையை வெட்டினார். ஆனால் வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைத்தது. சிவன் தலையை வெட்டுவதும் அந்த இடத்தில் புதிய தலை முளைப்பதுமாக இருந்தது. இந்த புதிரை சிவபெருமானால் புரிந்துகொள்ள முடியவில்லை. பின்னர் வெட்டப்பட்டு கீழே கிடந்த பிரம்மாவின் தலைகளை ஒரு கயிற்றில் கோர்த்துக்கட்டி அதை தன் கழுத்தில் மாலையாக சிவன் அணிந்து கொண்டார்.

அதன்பிறகு பிரம்மனின் தலையை வெட்டி அதை கீழே போடாமல் தன் கையிலேயே வைத்துக்கொண்டார். இப்போது பிரம்மனின் தலை வெட்டப்பட்ட இடத்தில் புதிய தலை முளைப்பது நின்றுவிட்டது. ஆனால் சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்து விட்டது. பிரம்மாவின் ஒரு தலை அழிந்து விட காரணமாக இருந்த பார்வதியிடம் கோபத்தோடு வந்தாள் பிரம்மாவின் மனைவி சரஸ்வதி. ‘பார்வதி! இனி நீ அழகுமிக்க ஆடைகளை அணியக் கூடாது. அதற்கு பதிலாக கொக்கு, சிறகு, மயில் தோகைகளை அணிந்து பூமியில் புற்றாக இருக்க வேண்டும்’ என்று சாபமிட்டாள்.

அதன்படி பார்வதிதேவி உருவம் மாறி,  திருவண்ணாமலை வழியாக மேல்மலையனூர் வந்து புற்றாக அமர்ந்தாள். இந்த சூழ்நிலையில் பிரம்மஹத்தி தோஷத்தால் பாதிக்கப்பட்டு வடகயிலாயம் நோக்கி சென்ற சிவன், மேல்மலையனூரில் அங்காளம்மன் 4 ஆயிரம் நோய்கள், பில்லி–சூனியம் ஆகியவற்றை தீர்த்து வைப்பதை அறிந்து மேல்மலையனூர் வந்தார். அங்காளம்மன் கோவில் முன்வந்து ‘அரகரா! அன்னதான பிச்சை’ என்று உரக்க சத்தம் போட்டார். இந்த சத்தம் அங்காளம்மன் காதில் விழுந்தது. உடனே அவர் மனம் மகிழ்ந்தார். யாசகம் கேட்கும் கணவருக்கு எதை வழங்குவது என்று யோசித்தார். அப்போது சிவனுக்கு எதை வழங்குவது என்று மகாவிஷ்ணு யோசனை கூறினார். ‘அம்பிகையே! உன் கணவருக்கு எது சாப்பிடக் கொடுத்தாலும் அதை அவரது கையில் உள்ள கபாலம் சாப்பிட்டு விடும். ஆதலால் நீ உலகத்தில் உள்ள பயிர் பட்சணங்களை எல்லாம் வரவழைத்து உணவாக சமைக்க வேண்டும்.

பின்பு அதை 3 கவளமாக தயார் செய்ய வேண்டும். இரண்டு கவளத்தை உன் கணவர் கையில் உள்ள கபாலத்தில் போட வேண்டும். 3–வது கவளத்தை கபாலத்தில் போடுவதை போல் நடித்து அதை கைதவறி கீழே போடுவதை போல் தரையெங்கும் சிதறிவிட வேண்டும். சாதத்தின் ருசி அறிந்த கபாலம் அதை பொறுக்க பரமசிவன் கையில் இருந்து கீழே இறங்கும். அப்போது நீ பெரிய உருவெடுத்து அதை காலால் நசுக்கிவிடு. அந்த நேரத்தில் உன் கணவரை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் விலகி விடும்’ என்றார்.

அன்னையும் மிக மகிழ்ந்து திருமால் கூறிய யோசனைப்படி செயல்பட்டார். சாதம் தயாரானது. உடனே அங்காளி, மூத்த பிள்ளை விநாயகரை அழைத்து விஷயத்தை சொல்லி, ‘உன் தந்தையை அக்னி குளத்தில் குளித்து வரச்சொல்’ என்று கூற, சிவனும் அதன்படி அக்னி குளத்தில் தீர்த்தமாடி கோவிலுக்கு வந்தார். அவருக்கு அங்காளம்மன் பாதபூஜை செய்து பணிவுடன் வரவேற்று உபசரித்தார். பிறகு கவள சாதங்களை எடுத்து வந்து ஒரு கவளத்தை சிவன் கையில் இருக்கும் கபாலத்தில் போட்டார்.

உடனே அதை கபாலம் சாப்பிட்டு விட்டது. 2–வது கவளத்தையும் போட அதையும் கபாலம் சாப்பிட்டது. 3–வது கவளத்தையும் உண்டு விட கபாலம் காத்திருக்க சாதத்தை தரை முழுவதும் வாரி இறைந்தாள் அங்காளம்மன். சாதத்தின் ருசிக்கு அடிமைப்பட்ட கபாலம், பரமசிவனின் கையில் இருந்து விருட்டென்று கீழே இறங்கி தரையில் சிதறிய அன்னத்தை பொறுக்கியது. அப்போது அங்காள பரமேஸ்வரி அகிலமே நடுங்கும் அளவு, மண்ணுக்கும் விண்ணுக்கும் வளர்ந்து நின்று, மிகுந்த சினத்துடன், அகோரவடிவில் கபாலத்தின் மீது ஓங்கி மிதித்தார். கபாலம் பெரும் கூச்சல் போட்டு,

‘நீயார்? என்னை ஏன் மிதித்தாய்?’ என்று ஆக்ரோஷத்துடன் கேட்டது.

அதைக்கேட்ட அன்னை, ‘கபாலமே! நீ இனி சிவனிடம் போக முடியாது. என் கீழ் தான் இருக்க வேண்டும். உனக்கு தேவையானவற்றை என்னிடம் கேட்டு பெற்றுக் கொள்ளலாம்’ என்றாள். அதற்கு கபாலமும் உடன்பட்டது. இந்த நேரத்தில் பரமசிவனை பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது. சுயநிலை வரப்பெற்ற பரமசிவன் ஆனந்த நிலை அடையப்பெற்றார்.

சிதம்பரம் சென்று ஆனந்த தாண்டவம் ஆடினார். அப்போதும் அங்காள பரமேஸ்வரியின் சினம் தணியவில்லை. முப்பத்து முக்கோடி தேவர்களும், 40 ஆயிரம் ரிஷிகளும் ஒன்று கூடி அங்காள பரமேஸ்வரியின் கோபத்தை தணிக்க தேர்த்திருவிழா நடத்தினர். அங்காளபரமேஸ்வரி கோபம் தணிந்து சிறிய உருவாக மாறி அந்த ரதத்தில் ஏறி அமர்ந்தார். உருமி மேளம் முழங்க மங்கள நாதம் இசைக்க வாணவேடிக்கை ஜாலம் காட்ட பிரமாண்டமான முறையில் தேர்த்திருவிழா நடைபெற்றது. சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் நீங்கியது மகா சிவராத்திரியன்று தான் என்பதால் இக்கோவிலில் மகாசிவராத்திரியை தொடர்ந்து 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடத்தப்படுகிறது. அப்போது மயானக்கொள்ளை, தேரோட்டம் நடைபெறும். புத்திசுவாதீனம் இல்லாதவர்கள், பில்லி, சூனியம், செய்வினை கோளாறு, ஏவலால் பாதிக்கப்பட்டவர்கள் கோவிலுக்கு வந்து அக்கினி தீர்த்தத்தில் நீராடி அம்மனை வணங்கி நோய் நீங்கி அவர்கள் நலம் பெறுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவில் மேல்மலையனூர் அமைந்துள்ளது. செஞ்சியில் இருந்து வடதிசையில் 20 கி.மீட்டர் தூரத்திலும், திருவண்ணாமலையில் இருந்து கிழக்கு திசையில் 30 கி.மீட்டர் தூரத்திலும் மேல்மலையனூர் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக