ஆடிப்பூரம் அருளிய ஆண்டாள் அவதாரம்...
ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.
ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் விழாக்களும், கொண்டாட்டங்களும் களை கட்டியிருக்கும். அதே ஆடி மாதம் பெருமாள் ஆலயங்களில் சூடித்தந்த சுடர்க்கொடியான ஆண்டாளுக்கு சிறப்பு வழிபாடுகளும், தேரோட்டமும் நடைபெறுவதும் வழக்கம். மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே’ என அவனுடன் ஐக்கியமானவர். ஆழ்வார்கள் வரிசையை அலங்கரித்து பெண் இனத்தின் பெருமையை உலகுக்கு உணர்த்தியவர் ஆண்டாள். அவர் தோன்றிய நட்சத்திரம் ‘ஆடிப்பூரம்’.
விஷ்ணுவின் பாதம்பற்றி, அவர் புகழ்பாடிய அடியவர்கள் ‘ஆழ்வார்கள்’ என்று போற்றப்படுகின்றனர் அப்படிப்பட்ட பன்னிரண்டு ஆழ்வார்கள், தமிழ் மொழியில் இறைவனை போற்றிப் பாடிய பாடல்களே ‘நாலாயிரத் திவ்யபிரபந்தம்’ என்று அழைக்கப்படுகிறது.
ஏழாம் நூற்றாண்டில், அதாவது கலியுகம் பிறந்து 98-வது நள வருடத்தின் ஆடிமாதம் வளர்பிறையில், செவ்வாய்க்கிழமையும் பூர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் அவதரித்தவர் ஆண்டாள். பெரியாழ்வார் எனும் விஷ்ணு சித்தரால் மகாலட்சுமியின் அம்சமாக நந்தவனபூமியில் கண்டெடுக்கப்பட்ட அற்புத தெய்வீக மங்கை அவர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்று ஸ்ரீவில்லிப்புத்தூர். இங்கு பெருமாள் அடியவரான விஷ்ணு சித்தர் உருவாக்கிய நந்தவனத் தோட்டத்தில், மாசற்ற துளசிசெடியின் கீழ் அழகிய பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை, பின்னாளில் பெரியாழ்வார் என்று அழைக்கப்பட்ட விஷ்ணு சித்தர் எடுத்து, கோதை என்று பெயரிட்டு வளர்த்தார். சிறு வயதிலிருந்தே கண்ணன் மீது அதீத காதல் கொண்டு, எந்நேரமும் அவன் நினைவில் பாக்களைப் பாடியபடி வளர்ந்தாள், கோதை.
பெரியாழ்வார் தான் வழிபடும் அரங்கனுக்கு சூட்ட, நந்தவனத்தில் மலர்ந்திருக்கும் புத்தம் புதிய மலர்களை பறித்து வந்து அதைத் தொடுத்து மாலையாக்கி வைப்பார். அதை அவர் அறியாமல் ‘தான் நேசிக்கும் கண்ணனுக்கு அம்மாலை பொருத்தமானதுதானா?’ என்று அறிய தன் கழுத்தில் சூடி அழகு பார்ப்பாள் ஆண்டாள்.
ஒரு நாள் இதைக் கண்ட பெரியாழ்வார் மனம் வருந்தினார். ‘தன் பெண் சூடிய மாலையையா கண்ணன் அணிந்தான்?’ என்ற கவலையில் வாடினார். அன்றிரவு அவர் கனவில் தோன்றிய கண்ணன், ‘கோதை சூடிய மாலையே தனக்கு விருப்பமானது’ என்றார். அன்று முதல் ஆண்டாள் ‘சூடிக் கொடுத்த சுடர்கொடி’ ஆனாள்.
ஆண்டாளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்ய, அவளோ ‘நான் கண்ணனையே மணப்பேன்’ என்று உறுதி கொண்டாள். பின்னர் பிரம்ம முகூர்த்தத்தில் கண்ணனை மனதில் நினைத்து பாவை நோன்பு ஏற்று விரதம் இருக்கத் தொடங்கினாள்.
பெரியாழ்வார் என்ன செய்வதென்று அறியாமல், அரங்கனிடம் சென்று வேண்டினார். அரங்கனோ, ‘திருமணக்கோலத்தில் மகளுடன் திருவரங்கம் வந்து சேர்’ என்று அருளினார்.
அதன்படி மேளதாளம் முழங்க மகளை திருவரங்கம் அழைத்துச் சென்றார் பெரியாழ்வார். ஸ்ரீரங்க கோவில் கருவறைக்குள் வலது காலை எடுத்து வைத்து நுழைந்த ஆண்டாளை, அரங்கநாதப் பெருமாள் தனக்குள் ஐக்கியமாக்கிக் கொண்டதாக வரலாறு.
ஆடியில் அவதரித்த ஆண்டாள், பெருமாளை கணவனாக அடையும் உறுதியுடன் மார்கழியில் பாவை விரதம் இருந்து பாடிய பாடல்களே ‘திருப்பாவை’.
ஆண்டாள் என்றாலே, முத்துக்கள் பதித்து மிளிரும் அழகுமிகு சாய்ந்த கொண்டையும், அழகிய கரங்களின் மேல் வீற்றிருக்கும் கொஞ்சும் கிளியும் தான் நம் நினைவிற்கு வரும். ஆண்டாள் கையில் உள்ள கிளி, மாதுளம்பூக்கள், மரவள்ளி இலைகள், நந்தியாவட்டை இலை, செவ்வரளி போன்றவைகளுடன் வாழை நார் கொண்டு பிரத்யேகமாக உருவாக்கப்படுகிறது.
ஆண்டாளிடம் இருந்து ரங்கனுக்கு தூது போன வியாச மகரிஷியின் மகனான சுகப்பிரம்ம மகரிஷிதான் கிளி ரூபத்தில் ஆண்டாளின் கைகளில் தவழ்வதாக ஐதீகம். பக்தர்களின் வேண்டுதலை இந்த கிளியே, ஆண்டாளிடம் கூறி நிறைவேற்றி வைப்பதாக நம்பிக்கை நிலவுகிறது. ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாளுக்கு அனுதினமும் சாற்றப்படும் கிளிகளை, முன்னதாகவே சொல்லிவைத்து பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். அப்படிப் பெற்ற கிளியை பூஜையறையில் வைத்து வணங்கி வந்தால், நினைத்த காரியங்கள் நடக்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை.
மனிதர்கள் தூய பக்தியுடன் செய்யும் எந்த ஒரு செயலும், இறைவனின் கவனத்திற்குச் செல்லும் என்பதற்கு ஆண்டாளே சிறந்த சாட்சி. கண்ணனுக்காக தயார் செய்யப்பட்ட மலர் மாலையை, தான் சூடி அழகு பார்த்த ஆண்டாளின் வழியைப் பற்றி, இன்றளவும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிய மாலைதான், பிரம்மோற்சவத்தின் போது திருப்பதி பெருமாளுக்கும், சித்திரைத் திருவிழாவின் போது ஆற்றில் இறங்கும் கள்ளழகருக்கும் சாத்தப்படுகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் பழங்காலமாக நடைபெற்று வரும் ஆடிப்பூரத் தேர்த் திருவிழா, இன்றும் தமிழகத்தின் இரண்டாவது பெரிய தேராக ஆண்டாளையும், ரெங்கமன்னாரையும் சுமந்து வருவது சிறப்பானதாகும். ஆண்டாள் தோன்றிய செவ்வாய்க்கிழமையில் துளசியை பூஜித்து, விளக்கேற்றி வழிபட வாழ்வில் நல்ல துணை அமைவதுடன், சகல சவுபாக்கியங்களும் உண்டாகும்.
வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று தனிச் சன்னிதியில் கிழக்குப் பார்த்து புன்னகை முகத்துடன் அருள் புரியும் ஆண்டாளை தரிசித்து வாருங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக