செவ்வாய், 16 ஜூலை, 2019

ஆடி வெள்ளி விரதத்தின் சிறப்பு


ஆடி வெள்ளி விரதத்தின் சிறப்பு

தமிழ் மதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் தனிச்சிறப்புடன் விளங்கும் வகையில் 4வது மாதமான ஆடி மாதத்தில் எவ்வித சுப காரியங்களும் நடைபெறாது.
ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடி மாதத்தில் அனைத்து அம்மன் கோவில்களிலும் தீமிதி திருவிழா, தேர்திருவிழா, சாக்கை ஊற்றுதல் திருவிழா, செடல் திருவிழா, உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களும் கோலாகலமாக நடைபெறும்.
குறிப்பாக இம்மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகளும், அபிஷேக ஆராதனைகளும் நடைபெறுவது வழக்கம். ஆடி வெள்ளியன்று பெண்கள் விரதம் இருப்பது ஐதீகம். இதனை சுக்கிர வார விரதம் என்று கூறுவர்.
ஜாதகத்தில் சுக்கிரன் நீச்சம் பெற்று இருந்தாலும், பாவக்கிரகம் பார்வையினால் சுக்கிரன் பலம் இழந்து இருந்தாலும் இவ்விரதம் இருந்தால் தொல்லைகள் நீங்கி நலன்கள் கிடைக்கும். முப்பெரும் தேவிகளுக்கும் ஆடி வெள்ளிகளில் முதல் 3 வாரங்கள் பூ அலங்காரமும், 4 வது வாரம் காய் அலங்காரமும் 5 வது வாரம் பழ அலங்காரமும் செய்வார்கள்.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று, சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் நீடிக்க வேண்டி மகாலட்சுமியை பூஜித்து வரலட்சுமி நோன்பு மேற்கொள்வார்கள். தேவியின் பாதங்களில் திருமாங்கல்ய சரடு வைத்துப் பூஜை செய்து வணங்கினால் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம். திருமணமாகாத பெண்களும் நல்ல வரன் வேண்டி அம்மனுக்கு விரதம் இருப்பார்கள்.

ஆடி மாதத்தில் புற்று அம்மனான நாகதேவதையின் வழிபாடும் சிறப்பானது. புற்றுக்கு பால் தெளித்து, வெற்றிலை, பாக்கு, மஞ்சள், பூ, ஆகியவற்றை படைத்து பெண்கள் சிறப்பு பூஜை செய்து வழிபடுவார்கள். கூழ்வார்த்தல், வேப்பிலை ஆடை அணிந்து வலம் வருதல், பால்குடம் எடுத்து ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், மாவிளக்கு ஏற்றி வழிபாடு செய்தல், தீக்குண்டம் இறங்குதல் என மாதம் முழுவதும் அம்மன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக