அம்மனுக்கு உகந்த ஆடி நைவேத்தியங்கள்! ரெசிப்பி ஸ்பெஷல்...
ஆடி வந்தால் பண்டிகைகள் தேடி வரும் என்பார்கள். ஆடி மாதத்தில் வரிசை கட்டி வந்துகொண்டே இருக்கும் பண்டிகைகள் நம் வீட்டையே கோயிலாக்கும். அப்போது செய்யப்படும் நைவேத்தியங்கள், சத்தான பிரசாதங்களாகும்.
சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலக்ஷ்மி மாமி, ஆடி மாதப் பண்டிகையின் நைவேத்தியங்கள் குறித்து விளக்குகிறார்.
சத்தான ஆடிப்பால்
தேங்காய் - ஒன்று, துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன், பச்சரிசி அல்லது வறுத்த பாசிப்பருப்பு - ஒரு டேபிள்ஸ்பூன் ஆகியவை தேவை.
தேங்காயைத் துருவி, வறுத்த பாசிப்பருப்பு அல்லது பச்சரிசி சேர்த்து நீர்விட்டு மிக்ஸியில் அரைத்து வடிகட்டி பால் எடுத்துக் கொள்ளுங்கள். அந்தச் சக்கையைச் சிறிதளவு நீர்விட்டு மீண்டும் அரைத்து வடிகட்டி பால் எடுங்கள். மீண்டும் ஒருமுறை இதேபோல் செய்யுங்கள். இப்படியாக மூன்று முறை எடுத்த பாலை, ஒன்றாகச் சேர்த்துக் கலந்துவைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் வெல்லத்தைப் போட்டு நீர்விட்டு (சிறிதளவு நீர் போதும்) அடுப்பில் ஏற்றிக் கரையவிடவும். வெல்லம் கரைந்ததும் தேங்காய்ப்பாலை ஊற்றி ஏலக்காய்த்தூள் சேர்த்து நுரைத்து வரும்போதே இறக்குங்கள்.
புதிதாகத் திருமணமான தம்பதியை, பெண் வீட்டில் ஆடிக்கு அழைத்து, இந்த ஆடிப்பாலைக் கொடுப்பார்கள்.
குளிரக் குளிர... ஆடிக்கூழ்
அரிசி நொய் - ஒரு கைப்பிடி, கேழ்வரகு மாவு - 2 கைப்பிடி அளவு, சின்ன வெங்காயம் - 10, தயிர் - ஒரு கப், தேவைக்கு ஏற்ப உப்பு.
கைப்பிடி அளவு நொய்யை ஒரு டம்ளர் நீர்விட்டு வேகவிடுங்கள். கேழ்வரகு மாவை 2 டம்ளர் நீர்விட்டு கரைத்து அதில் சேர்த்து வேகவிடுங்கள். பிறகு தேவைக்குத் தக்கபடி உப்பு சேர்க்கவும். வெந்ததும் இறக்கி, ஆறியதும் தயிரைக் கடைந்து அதில் சேருங்கள். அவ்வளவுதான்... அம்மனுக்கு குளிரக் குளிரக் கூழ் ரெடி. வீட்டில் நைவேத்தியம் செய்து, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்மனை வணங்கிச் சாப்பிடலாம்.
சின்ன வெங்காயம் தொட்டு இதைச் சாப்பிடலாம். ஆடி மாதம் முழுவதுமே, அம்மனுக்கு இந்தக் கூழைச் செய்து படைத்து பின்னர் விநியோகிப்பது விசேஷம்.
துள்ளுமா... தெரியுமா?
பச்சரிசி - ஒரு கப், துருவிய வெல்லம் - அரை கப், ஏலக்காய்த்தூள் - ஒரு டீஸ்பூன்.
பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவையுங்கள். நீரை வடிகட்டுங்கள். ஒரு துணியில் உலர்த்துங்கள். ஓரளவு உலர்ந்ததும் மிக்ஸியில் கொரகொரப்பாக அரையுங்கள். அரைத்த மாவுடன் ஏலக்காய்த்தூள், வெல்லம் சேர்த்து நன்றாகக் கலக்குங்கள். கைகளால் பிடித்தால் துள்ளி எழும்பும். அதனால்தான் இதன் பெயர் துள்ளுமா என்று பெயர் வந்ததாக பாட்டிமார்கள் சொல்லியிருக்கிறார்கள். .
இதை காளியம்மன், மாரியம்மன், முப்பிடாதி அம்மன், செல்லியம்மன் முதலான எல்லைத் தெய்வங்களுக்குப் படைத்து பிரசாதமாக எல்லோருக்கும் வழங்கலாம். இந்தப் புண்ணியத்தால், வீட்டில் ஐஸ்வர்யம் குடிகொள்ளும் என்பது ஐதீகம்.
அழகனுக்கு அரிசிப் - பருப்பு பாயசம்
பச்சரிசி - ஒரு கப், கடலைப்பருப்பு - 4 டேபிள் ஸ்பூன், பாசிப்பருப்பு, துருவிய தேங்காய் - தலா கால் கப், துருவிய வெல்லம் - ஒன்றரை கப், நெய் - 4 டேபிள்ஸ்பூன், உடைத்த முந்திரித் துண்டுகள் - 2 டேபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் - கால் டீஸ்பூன்.
முதலில், வெறும் வாணலியில் அரிசி, பருப்புகளை வறுத்து ரவை பதத்துக்கு உடைத்துக் கொள்ளவும். பிறகு உடைத்ததை, குக்கரில் சேர்த்து 3 கப் நீர்விட்டு வேகவைக்கவும். துருவிய வெல்லத்தை வெந்த நிலையில் இருப்பவற்றுடன் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடுங்கள். வாணலியில் 3 டேபிள்ஸ்பூன் நெய்விட்டு, தேங்காய்த் துருவலை வறுத்து இத்துடன் சேர்த்து மேலும் ஒரு கொதிவிடுங்கள். மீதியுள்ள ஒரு டேபிள்ஸ்பூன் நெய்யில் முந்திரியை வறுத்து கொதிக்கும் பாயசத்தில் சேர்த்து, ஏலக்காய்த்தூள் சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலக்குங்கள். அரிசிப் பருப்பு பாயசம் ரெடி.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு உகந்தவை, நினைத்தது நிறைவேறும்..
ஆடி மாதம் அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றுவது ஏன்?
தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.
அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்பமர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார்.
ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார்.
அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
மேலும், ஆடி மாதம் வீசக்கூடிய காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் எங்கும் தூசியாக இருக்கும். இதனால், இருமல் போன்ற நோய்கள் வரலாம். இதைத் தவிர்க்கவே மாரியம்மன் கோவில்களில் ஆடி மாதம் முழுவதும் கூழ் ஊற்றுவார்கள். இதை ஆடிக்கஞ்சி என்பர்.
அதிமதுரம், சீரகம், திப்பிலி, சின்ன வெங்காயம், திரிகடுகம், குன்னிவேர், உழிஞ்சி வேர், சீற்றாமுட்டி, கடலாடி வேர் ஆகியவற்றை லேசாகத் தட்டி எடுத்து, ஒரு வெள்ளைத் துணியில் கட்டி வைத்துக்கொள்ளவேண்டும். அரிசியைக் கஞ்சியாக வேகவைத்து அதில் இந்தத் துணியில் உள்ள மருந்துகளைப் பிழிய வேண்டும்; அல்லது, கஞ்சிக்குள் அந்தத் துணிப் பொட்டலத்தைச் சிறிது நேரம் போட்டு ஊறவைத்து, எடுத்துவிடவேண்டும். அதன்பிறகே ஆடிக் கஞ்சியைப் பரிமாற வேண்டும். இந்த முறையை எல்லாரும் பின்பற்றுவது நல்லது…
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக