திங்கள், 31 ஜூலை, 2017

ஆடிப்பெருக்கு



ஆடிப்பெருக்கு 

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.
வேறு பெயர்கள்
ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.
விழாக் காரணம்
தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால்
ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து
விதை விதைப்பர். இப்பொழுது நெல் ,
கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது.
விழா நிகழ்வுகள்
மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து,
பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.
காவிரிக்கரை
காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
மேட்டூர் அணை,
பவானி கூடுதுறை,
ஈரோடு ,
பரமத்தி-வேலூர் ,
குளித்தலை ,
திருச்சி ,
புகார்
சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.
நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம. ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல் , சேலம் மற்றும்
ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்
பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது
அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.


ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் 

திருமணம் , காதணிவிழா, மஞ்சள்நீர் சடங்கு, என்று எல்லா விதமான சுபநிகழ்ச்சிகளையும் ஆடி மாதத்தில் செய்தால் சரிப்பட்டு வராது என்பது நம்மில் பலரால் பலகாலமாக பின்பற்றப்படும் நம்பிக்கை . அதே சமயம் கோயில் , தெய்வம் சார்ந்த அனைத்து விசேஷங்களுக்கும் ஆடி மாதம் தான் கொண்டாட்ட மாதமாக இருக்கிறது . குறிப்பாக அம்மன் கோயில்களில் தீக்குழி இறங்குவது , பூச்சொரிதல் , காவடி எடுப்பது , கூழ் ஊற்றுவது , கஞ்சி ஊற்றுவது , செடல் உற்சவம் என ஆடி மாத விசேஷங்களே தனி விழா தான் .
ஒருபுறம் ஸ்ரீ துர்க்கை அம்மன், ஸ்ரீ காளியம்மன் , ஸ்ரீ மாரியம்மன் , ஸ்ரீ நாகாத்தம்மன் , ஸ்ரீ வேம்புலியம்மன் , ஸ்ரீ பச்சையம்மன் என அம்மன் கோயில் திருவிழாக்கள் இருக்கும் ஆடி மாதத்தின் இன்னொரு முக்கிய சிறப்பு ஆடி மாதம் 18 ம் நாள் , ஆடிப்பெருக்கு நாள் . ஆடிப் பெருக்கு 03 - 08 -2015
முன்னாட்களில் கிராமப்புற மக்கள் , விவசாயம் செய்யும் மக்கள் தங்களுக்கு ஏற்படும் உடல் உபாதை நீங்க வழிபாடு செய்தது தான் அம்மன் வழிப்பாடு . ஊர் வளம் பெறவேண்டி நதிகளை போற்றுவதுமாக தான் இன்றும் தொடர்கிறது .
முக்கியமாக , சித்திரையில் அறுவடை முடிந்து வைகாசி- ஆனி மாதம் வரை நெல்லோ , தானியங்களோ சேமிப்பில் வைத்திருக்கும் ஏழை மக்கள் , ஆடியில் அது தீர்ந்து உணவுக்கு தடுமாறுவார்கள் . மழை இன்றி பஞ்சத்தில் இருக்கும் அவர்கள் ஆடி மாதத்தில் விதைவிதைத்து, விளைச்சல் அமோகமாக இருக்க வேண்டி விளைச்சலுக்கு முக்கிய காரணமான தண்ணீரை போற்றியும், விளைச்சலுக்கு ஏற்ற மாரி மழை பொழிய வேண்டும் என்பதற்காகவும் வழிப்படுகிற விழா ஆடிப் பெருக்கு.
ஆடிப் பெருக்கு நன்னாளில் , நதிப் பெண்ணான காவிரியை வணங்கினால் விவசாயம் செழிப்பது போல், கன்னிப்பெண்கள் இந்த நாளில் காவிரி நதிக்கரையில் வழிப்பட்டால் மனசுக்கு ஏற்ற மன்னவர் வாய்ப்பர், சுமங்கலிகள் வழிபட்டால் வம்ச விருத்தி, கணவனின் ஆயுள் கூடும் என்பதும் ஐதீகம் .
தமிழகத்தில் காவிரி நதி ஓடுகிற ஊர்களில் ஆடிப் பெருக்கு வைபவம் நடக்கிறது . காவிரித் தாய்க்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சேலை , திருமாங்கல்யம் , பழங்கள் , கருமணி , சீர்வரிசை பொருட்கள் , காப்பரிசி ஆகியவற்றை வைத்து காவிரியை வணங்கி , படைத்த மஞ்சள் சரடை பெரியவர்களிடம் கொடுத்து , பெண்கள் கழுத்திலும் ஆண்கள் வலதுகையிலும் கட்டிக்கொள்வார்கள் .
இதனால் வாழ்வில் தொட்டதெல்லாம் வளமாக அமையும் என்றும் , குறிப்பாக புதுமணத் தம்பதியர்கள் காவிரிக் கரையில் குடும்பத்தோடு வந்து , திருமணத்தின் போது அணிவித்த மாலையை ஆற்றில் விட்டுவிட்டு , தாலிபிரித்து கட்டும் சடங்கு காவிரிக் கரையில் செய்வதால் , காவிரிக் கரையில் தண்ணீரில் புரண்டோடுவதுப் போல் நம் வாழ்விலும் இன்பம் பெருகுமாம் .
ஆனால் இந்த வருடம் காவிரிக் கரை வறண்ட கரையாகவே காட்சியளிப்பதால் , விவசாயிகள் மட்டுமல்லாமல் ஆடிப் பெருக்கு விழாவை காவிரி நதிக்கரையில் கொண்டாடி , நதிதேவதையை வணங்கலாம் என்ற ஆர்வத்தில் இருந்த மக்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சியது . சிலர் வீட்டிலேயே கிணறு , பம்பு என காவிரியை மனதில் வைத்தே வழிப்பட்டனர் . அதேசமயம் கும்பகோணம் காவிரிக் கரையில் ஆடிப் பெருக்கு முதல் நாள் வரை புதுத் தண்ணீர் வரும் என காத்திருந்த மக்கள் வேறு வழியின்றி , கும்பகோணம் மகாமக குளத்தில் தங்கள் ' ஆடிப் பெருக்கு' நாளை ' ஆடித்தேக்க' மாக குளத்தில் கொண்டாடினர் . புதுமணத் தம்பதிகள் பலர் இங்கு தாலி பிரித்து கட்டி கொண்டாடினர். சிலர் காவிரிக் கரையில் தான் கொண்டாடுவோம் என அடம் பிடித்து காவிரிக் கரையில் ஊற்று வெட்டி , பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறு கட்டி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
ஆடிப் பெருக்கு கொண்டாடும் காரணம்:
விவசாயிகளுக்கும் உகந்த மாதம் இந்த ஆடி மாதம் . ஆம் , உழவு பணிகளை துவங்கும் மாதம் . பஞ்சபூதங்களில் ஒன்றான தண்ணீரை நாம் தெய்வமாக மதிக்கிறோம் . தண்ணீரை அதிகம் செலவு செய்தால் பணம் விரையம் ஆகும் என்கிறது சாஸ்திரம் . கங்கை -காவேரி மற்றும் பல நதிகளை புண்ணிய நதிகளாக, தெய்வீக இடமாக கருதி போற்றி , அங்கு பூஜை செய்வார்கள் . எல்லாம மாதங்களிலில் பூஜை செய்வதை விட ஆடிமாதம் பூஜித்தால் விசேஷம் என்று ஏன் கருதுகிறார்கள் என்பதற்கு ஒரு சம்பவத்தை அறிந்துக்கொள்வோம் .
ஆடிபெருக்கு நாளில் புண்ணிய நதியில் நீராடி தன் தோஷத்தை போக்கி கொண்ட ஸ்ரீராமர்
ஸ்ரீ ராமசந்திரருக்கும் இராவணனுக்கும் நடந்த போரில் பல உயிர்களையும் ஸ்ரீஇராமர் கொல்ல நேர்ந்தது . ஸ்ரீராமர் கொன்றது அசுரர்களைதான் என்றாலும் யுத்தத்தில் பலர் கொல்லப்பட்டதால் ஸ்ரீஇராமரை பிரம்ஹத்தி பிடித்துக்கொண்டது. இந்த தோஷத்தில் இருந்து விலக என்ன செய்யவேண்டும என்று வசிஷ்டமுனிவரிடம் கேட்டார் ஸ்ரீராம பிரபு .
“ இந்த பாவத்தில் இருந்தும் தோஷத்திலிருந்தும் நீ விலக கங்கையில் நீராடு . ஆடிபெருக்கு நாளில் நீராடினால் உடனே உன்னை பிடித்து வாட்டும் பிரம்ஹத்தி தோஷம் விலகும். ” என்றார் வசிஷ்டமுனிவர் . முனிவர் கூறியது போல் ஆடிபெருக்கு நாளில் காவேரியில் நீராடி தன் தோஷத்தை போக்கிக்கொண்டார் ஸ்ரீராமர்.
தங்கைக்கு சீர்வரிசை செய்ய காவேரிக்கு வரும் பெருமாள்
ஆடிபெருக்கு நாளில் தன் தங்கையை காண ஆவலோடு இருப்பார் ஸ்ரீமன் நாராயணப் பெருமாள் . அத்துடன் தங்கைக்கு சீராக தந்திட புடவை , திருமாங்கல்யம் , வெற்றிலை பாக்கு , பழங்கள் போன்றவற்றை சீராக எடுத்துக் கொண்டு யானை மேல் ஏறி வருவதாக புராணம் சொல்கிறது . அதனால் இன்று வரை ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து யானை மீது அம்மன் மண்டபம் படித்துறைக்கு சீர் வரிசையை கொண்டு வருவார்கள் . அதை பெருமாள் முன் வைத்து , “ உங்கள் தங்கைக்கு தர வேண்டிய சீர் வரிசையை சரி பாருங்கள் . ” என்று காட்டுவார்கள் . அத்துடன் தீப ஆராதனையும் செய்வார்கள் . இதன் பிறகு காவிரிக்கு சமர்ப்பிப்பார்கள் .
பூஜை செய்யும் முறை
இந்த ஆடி மாதத்தில் புண்ணிய நதியாய் திகழும் காவிரி கர்ப்பவதியாக இருப்பதாகவும் , அதனால் அவளுக்கு பலவகையான உணவுகளை படைத்து மஞ்சல் , காதோலை கருகுமணி மாலை, வளையல் , தேங்காய், பழம் , பூ , அரிசி வெல்லம் மற்றும் சுவையான பழங்களும் , மஞ்சல் சரடுகளையும் வைத்து தீபஆராதனை செய்து காவேரியை மகிழ்விப்பார்கள். பிறகு பூஜித்த மஞ்சல் சரடை பெண்கள் தங்கள் கழுத்திலும் ஆண்கள் கைகளிலும் கட்டிக்கொள்வார்கள் . காவேரியை பூஜித்து சந்தோஷப்படுத்தினால் அந்த குடும்பத்திற்கு எந்த தீங்கும் வராமல் காவேரி, அன்னையாக இருந்து நம்மை காப்பாள். அத்துடன் நாம் நினைப்பது எல்லாம் நல்லபடியாக நடக்கும் . கணவரின் ஆயுள் அதிகமாகும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் புதுமண தம்பதிகள் புது மஞ்சல் கயிற்றை மாற்றிக்கொள்வார்கள் . குழந்தை இல்லாத தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் ஏற்படும் . இத்தகைய பல சிறப்புகளை கொண்டது ஆடி மாதமும் ஆடி பெருக்கு திருநாளும் ஆகும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக