புதன், 26 ஜூலை, 2017

ஆடிப்பூரம்



ஆடிப்பூரம்

ஆடிப்பூரம் அம்மனின் அவதாரத் திருநாளாகும்.  பார்வதி தேவி கருவுற்றிருக்கும் போது அன்னைக்கு வளைகாப்பு நடந்த நாளும் இந்த ஆடிப்பூரம் நன்னாளிலே தான்.  இந்த அகிலத்தை ஆண்ட நாயகிக்கு இன்றைய தினத்தில் எல்லா கோவில்களிலும் வளையல் சாற்றுவார்கள்.

இந்த நல்ல நாளிலே மற்றொரு விசேஷமும் உள்ளது. அப்படி என்ன விசேஷம்????

சூடிக்கொடுத்த சுடர்க்கொடி, கோதை நாச்சியார் என்றெல்லாம் கொண்டாடப்படும் "ஆண்டாள் நாச்சியார்" அவதரித்த திருநாள் இன்று.

ஏன் ஆண்டாள் நாச்சியாரை நாம் அவ்வாறெல்லாம் கொண்டாடுகிறோம்???? ஆண்டாள் நாச்சியாரின் இந்த அவதார நன்னாளிலே அவரைப் பற்றித் தெரிந்து கொள்வோமா????

🌺🌺 ஆண்டாள் நாச்சியார்  :-

இறைவனுக்கே பல்லாண்டு பாடிய விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் 12 ஆழ்வார்களில் ஒருவர்.  பெரியாழ்வார் பிறந்த ஊரும் திருவில்லிபுத்தூர்.

அவர் பெற்றெடுத்த பெண் பிள்ளையாம், 12 ஆழ்வார்களில் நடுவில் ஒரு பெண்ணாக பூஜைக்குரியவராக பெரிய இடம் பெற்று, ஸ்ரீரங்கநாதருக்கு அருகிலேயே இருக்கும் பாக்கியம் பெற்ற பூமிதேவியின் அம்சம் இந்த  "ஆண்டாள் நாச்சியார்" அவதரித்த நன்னாளும் இந்த ஆடிப்புரம் தினத்தில் தான்.

ஆடி மாதம், நள வருடம், சுக்ல பட்சம், சதுர்த்தசி திதி, பூரம் நட்சத்திரம், சிம்ம ராசியில், ஆடிப்பூரம் நன்னாளில், "விஷ்ணு சித்தர்" தோட்டத்தில் பூ பறிக்கச் சென்ற போது, ஒளி பொருந்திய குழந்தை ஒன்றை துளசிச் செடியின் கீழ் இருப்பதைக் கண்டு, அக்குழந்தைக்கு "சுரும்பார் பூங்கோதை" என்று பெயரிட்டு வளர்த்தார்.

இளம் வயதிலேயே இறைவன் கண்ணனின் பெருமைகளை ஆண்டாளுக்கு கூறி, கண்ணன் மீது பக்தி கொண்ட பெண்ணாக வளர்த்தார் பெரியாழ்வார்.

ஆண்டாளும் கண்ணன் மீது பக்தி கொண்டாள்.  நாளடைவில் பக்தி காதலாக மாறியது.  இறைவன் கண்ணனையே மணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக் கொண்டாள்.

இறைவன் மீது கொண்ட காதலால் "திருப்பாவை" பாடினாள்.  இன்றும் வைணவத் திருக்கோவில்களில் மார்கழி மாதம் ஆண்டாளின் திருப்பாவை பாடலைக் கேட்டுத் தான் அந்த பரந்தாமன் துயிலெழுகிறார்.

தன்னை கண்ணனின் மணப்பெண்ணாக நினைத்துப் பாவனை செய்து வந்தாள் ஆண்டாள் நாச்சியார். விஷ்ணுசித்தர் இறைவனுக்கு சூட வைத்திருந்த மாலையைத் தான் சூடிக் கொண்டு தான் கண்ணனுக்கு ஏற்ற மணப்பெண் தானா??? என்று பாவனை செய்து கண்ணாடியில் பார்த்து மகிழ்ந்து வந்தார்.

ஆண்டாள் இந்த கண்ணனை மணாளனாக அடைய வேண்டி தவம் செய்த இடம் "அழகர் கோவில்" .  ஆண்டாள் நாச்சியார் அமர்ந்த கோலத்தில் மட்டுமே நாம் தரிசிக்க கூடிய கோவில் அழகர் கோவிலில் மட்டுமே.

ஆண்டாள் நாச்சியார் தான் கண்ணனை மணாளனாக அடைந்தால் ஆயிரம் அண்டா "அக்காரவடிசில்" செய்வதாக வேண்டிக் கொண்ட இடமும் இந்த அழகர் மலையில் தான்.

அழகர் மலையில் வேண்டுதல் வைத்த சில தினங்களுக்குள் ஆண்டாள் நாச்சியார் அந்த அரங்கனான ஸ்ரீரங்கம் ரங்கநாதருடன் ஐக்கியமாகிவிட்டாள்.

பின்னாளில் அந்த வேண்டுதலை அழகர்மலையில்  "இராமானுஜர்" நிறைவேற்றி வைத்தார்.

ஆண்டாள் நாச்சியார் இறைவனுடன் இரண்டறக் கலப்பதற்கு முன் காதல் வயப்பட்ட நாளில் "நாச்சியார் திருமொழி" என்னும் பதிகங்களைப் பாடினார்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதருடன் ஆண்டாள் இரண்டறக் கலந்ததால் விஷ்ணுசித்தர் தன் மகளின் திருமணக் கோலத்தை காண இயலாமல் போனது.

பெரியாழ்வார் அரங்கனிடம் மாப்பிள்ளைக் கோலத்தில் திருவில்லிபுத்தூரில் இருந்து அருள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கேற்ப இன்றும் திருவில்லிபுத்தூரில் "ஆண்டாள் - ரங்கமன்னார்" நமக்காக அருள் மழை பொழிந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆண்டாள் அவதாரத் தினமான இன்றைய தினத்தில் திருத்தேர் இழுத்தல் நிகழ்வுகள் நடைபெறும். இந்த அவதாரத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் நிகழ்வில் ஆண்டாளைத் தரிசிப்போர் ஆனந்த வாழ்வு பெறுவர் என்பது ஐதீகம்.

"திருவாடிப் பூரத்துச்
      செகத்துதித்தாள் வாழியே!!
திருப்பாவை முப்பதும்
      செப்பினாள் வாழியே!!
பெரியாழ்வார் பெற்றெடுத்தப்
      பெண்பிள்ளாய் வாழியே!!
பெரும்புதூர் மாமுனிக்குப்
      பின்னானாள் வாழியே!!

ஒரு நூற்று நாற்பத்தி
      மூன்றுரைத்தாள் வாழியே!!
உயரங்கற்கே கண்ணி
      உகந்தளித்தாள் வாழியே!!
மருவாரும் திருமல்லி
      வளநாடி வாழியே!!
வண்புதுவை நகர்க் கோதை
      மலர்ப்பதங்கள் வாழியே!!!".

என்று அரங்கனுடன் கலந்த கோதையை நாமும் துதிப்போம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக