ஞாயிறு, 23 ஜூலை, 2017

ஆசிகள் அருளும் ஆடி அமாவாசை



ஆசிகள் அருளும் ஆடி அமாவாசை

முன்னோர்களான பிதிர்களை ஆடி அமாவாசையில்  வழிபட்டால் நல் வாழ்வு பெறலாம் என்பது நம்பிக்கை

ஆடி அமாவாசை தர்ப்பண பூஜை - மண்ணுலகை விட்டு விண்ணுலகெய்தி சிவபதம் அடைந்த சகல ஆத்மாக்களுக்கும் செய்யப்படும் பூஜை

சீரும் சிறப்பும் பெற்று நாம் வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடிஅமாவாசை தினத்தன்று ஆத்மதர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.

 நீத்தார் கடன் செய்யத் தவறியவர்கள், சந்தர்ப்பவசத்தால் செய்ய முடியாதவர்கள், இறந்த காலங்களில் ஒருமாத கால முடிவில்  பிதுர்  கடன் செய்ய முடியாதவர்கள், இந்த ஆடிஅமாவாசை நாளில் ஒவ்வொரு வருடமும் தர்ப்பணம் செய்தல் அவசியமாகும்.

நீத்தார்கடன் எனப்படும் பிதிர்க்கடனை தீர்க்க - கடமையை செய்ய ஏற்ற நாளாக தட்சிணாயன முதல் மாதத்தில் வரும் ஆடி அமாவாசை மிகவும் போற்றப்படுகிறது

சூரியனும் சந்திரனும் சேர்ந்திருக்க கூடிய நாளாகிய  அமாவாசை காலையில் கடலில் நதியில் ஆற்றில் மூழ்கி குளித்து அல்லது வீடுகளில் குளித்து ஆலயம் சென்று சிவ தரிசனம் செய்து ஆலய குருவின்  வழிகாட்டலில் தர்ப்பை கையில் அணிந்து சங்கல்பம் செய்து,  அமரத்துவம் அடைந்தவர்கள் பெயர்நாமங்களை குருவிடம் சொல்லி எள்ளு நீருடன் தர்ப்பைப்புல் நுனியால் இறைத்து விடுவதால் பிதிர்கள் திருப்தி அடைவார்கள்.

தர்ப்பணம் என்பது திருப்திப்படுத்துதல் என்று பொருள் படும்.

.

ஆடி அமாவாசை தினத்தன்று பசுமாட்டிற்கு அகத்தி கீரையை வெல்லத்துடன் கலந்து கொடுத்தால் பிதுர்தோஷம் நீங்கி நலமுடன் வாழலாம்

 ஆடி அமாவாசை அன்று பித்ருக்கள் வானவெளியில் கூடி நிற்பர் என்பதால் அவர்களுக்கு உரிய நீர்க் கடனை செலுத்துவதால் அவர்களது ஆசியால் ஆயுள் நீடிக்கும், செல்வமும் கல்வியும் அபிவிருத்தி அடையும்.

ஆத்மாக்கள் மோட்சகதி அடைந்து இறைவன் அடி சேர்ந்தபின் வாழ்க்கையில் நடக்கும் துன்பங்கள் தொடராமல் இன்பங்கள் பெருகி வளமான வாழ்வு வாழ்வதற்க்கு ஆத்மாக்களின் ஆசிர்வாதம் எப்போதும் வேண்டும்.

சீரும் சிறப்பும் பெற்று வாழ்வதிலும் நோய் நொடி இன்றி சுகத்துடன் இருப்பதற்கும் எத்துறையிலும் முன்னேற்றம் காண்பதற்கும் ஆடிஅமாவாசை தினத்தன்று ஆத்மதர்ப்பணம் செய்து அவர்களை நினைவு கூற வேண்டும்.

பித்ரு காரியங்கள் செய்வதற்கு உரிய ஆடி அமாவாசைக்கு
முந்தைய தினமும் சிறப்பானது

அன்றைய தினம் ஒரு கதையைப் படித்த பிறகு மறுநாளான அமாவாசையன்று விரதம் இருக்கும் பெண்கள் சௌமாங்கல்யத்துடன் வாழ்வார்கள் என்பதும் நம்பிக்கை..!

அழகாபுரி நாட்டு அரசன் அழகேசன்.  வாரிசு இல்லாத வருத்தம் தீர்த்துக்கொள்ள  மனைவியோடு தீர்த்த யாத்திரை மேற்கொண்டதன் பலனாக  மகன் பிறந்தான்.

மன்னன் மகிழ்ச்சியோடு இருந்தபோது  அசரீரி ஒன்று  அவனது மகன், இளமைப்பருவத்தை எட்டும்போது இறந்துபோவான் என்று சொல்லவே விரக்தியில் ஆழ்ந்து மன அமைதிவேண்டி காளி கோயிலில் வழிபட்டபோது, உன் மகன் இறந்ததும் அவனுக்கு மணம் செய்துவை.

அவனது மனைவியின் மாங்கல்ய பலத்தால் அவன் உயிர் பெறுவான் என்ற குரல் கேட்டது.

இளமைப் பருவம் எய்திய இளவரசன் ஒருநாள் இறந்துபோனான்.

 மன்னன் அவனுக்கு மணம் முடிக்க பெண் தேடிய போது, பெற்றோரை இழந்து உறவினர்களின் கொடுமைக்கு ஆளாகி வாழ்ந்த ஓர் இளம் பெண்ணை அவளது உறவினர்கள் ஏமாற்றி, இறந்துபோன இளவரசனுக்குத் திருமணம் செய்துவைத்தனர்.

இருட்டிய பின்னர் இளவரசன் உடலோடு அவளைக் காட்டில் கொண்டு விட்டனர்.

 அப்பாவியான அந்தப் பெண் கணவன் உறங்குவதாக நினைத்தாள்.

விடிந்தபின் உண்மை தெரிய வந்ததும் தனக்குத் தெரிந்த தெய்வங்களின் பெயர்களையெல்லாம் சொல்லி வேண்டினாள்.

உலகத்தின் தாயான ஈஸ்வரி அவளது அழுகுரல் கேட்டு இரங்கி இறந்து கிடந்த இளவரசனை ஈசனின் அனுமதியோடு ஒரு ஆடிமாத அமாவாசை நாளில்.உயிர்பெற்று எழச்செய்தாள்.

இருண்டு போன தன் வாழ்வை ஒளிபெறச் செய்ததுபோலவே இந்த நாளில் அம்மனை வழிபடும் பெண்களுக்கும் அருள்புரிய வேண்டும் என்று வேண்டினாள்.

மகிழ்ந்த அம்பிகை, ஆடிமாத அமாவாசைக்கு முன்தினம் அவளது கதையைப் படித்துவிட்டு மறுநாள் விரதம் இருந்து மஞ்சள், குங்குமம் மங்கலப் பொருட்களை உரியவர்களுக்குத் தந்து தன்னை வழிபடும் பெண்களுக்கு சுமங்கலித்துவம் நிலைக்கும் என்றும், அவர்கள் இல்லத்தில் அஷ்ட லட்சுமி கடாட்சம் நிலவும் எனவும் சொல்லி மறைந்தாள்.

ஆடி அமாவாசையில் அக்னி தேவனே நீராடிய ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் சிறப்பான கடல் நீராடல் நடக்கிறது.

ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டபோது, சீதை அக்னி குண்டத்தில் இறங்கிய  சீதாதேவியின் கற்புக்கனல் அக்னி பகவானை சுட்டெரித்தது.

சூடு தாங்காத அக்னி, ராமேஸ்வரக் கடலில் குதித்து தன் சூட்டைத் தணித்துக் கொண்டான். அதனால் கடல் நீர் சூடேறியது. அதனால் அக்னி தீர்த்தம் எனப்பெயர் வந்தது.

அக்னி நீராடிய கடலில் நீராடுவோர் பாவங்கள் தீரும் என ஆசியளித்தாள் சீதாதேவி.

 ராமேஸ்வரம் ராமநாதர் ஆலயம் முன் உள்ள கடல் நீரில் அலையே இருக்காது.

சீதாதேவி போல அமைதியான இக்கடலில் நீராடுவது சிறப்பு.

அதிலும் ஆடி அமாவாசையன்று இங்கு நீராடுவதும் நீத்தார் கடன்களைச் செய்வதும் விசேஷமானது.

 பன்னிரு ஜோதிர்லிங்கதலங்களில் தமிழகத்தில் உள்ள ஒரே தலம் ராமேஸ்வரம்..

மொத்தமுள்ள 64 தீர்த்தங்களில் 22 கோயிலுக்குள் உள்ளன.

ராமேஸ்வரம் சென்றும் குளிக் காதது போல என்றொரு சொல்வழக்கு ஒன்றுண்டு.

வேறெந்த தீர்த்த தலத்தில் குளிக்காவிட்டாலும்,ராமேஸ்வரம்  புனிதநீராடுவது அவசியம் ...

 ஆடிமாதத்தில் அம்பிகை பர்வதவர்த்தினிக்கும், ராமநாதருக்கும் திருக்கல்யாண வைபவம் சிறப்பாக நடை பெறுகிறது.

தீர்த்த நீராடலுக்கு பெயர் பெற்ற ஆடிமாதம் முழுவதும்  நீராடுவது சிறப்பாகும்.

 பாவநிவர்த்தி மட்டுமல்லாமல், பிதுர்தோஷம் நீக்கும் புனிதத்தலமாக இருப்பதால் ஆடிஅமாவாசையும் இங்கு சிறப்பு.

தட்சிணாயண காலத்தில் வரும் ஆடி அமாவாசை, நம் இதயத்தில் நீங்காத இடம் பெற்று, என்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் முன்னோருக்கு முக்கியமான நாள்.

. குருஷேத்ர யுத்தத்திற்கு முன், வெற்றி வாய்ப்பு குறித்து அறிவதற்காக, சகாதேவனிடம் ஜோதிடம் கேட்க சென்றான் துரியோதனன்.

போரில் வெற்றி பெற வேண்டுமானால், எந்த நேரத்தில் களபலி கொடுக்க வேண்டும்... எனக் கேட்டான். தன் எதிரியாக இருந்தாலும், உண்மையின் இருப்பிடமான சகாதேவன், பூரண அமாவாசை அன்று போரை துவங்கினால் வெற்றி உறுதி என்றார்.

துரியோதனனும், அதே நாளில் களபலி கொடுக்கத் தயாரானான்.

அப்போது, கிருஷ்ணர் ஒரு தந்திரம் செய்தார். திடீரென ஒரு குளக்கரையில் அமர்ந்து, அமாவாசைக்கு முதல் நாளே தர்ப்பணம் செய்தார்.

இதைப்பார்த்த சூரியனும், சந்திரனும் பூலோகத்திற்கு ஒன்றாக வந்தனர்.

 நாங்கள் இருவரும் ஒன்றாக சேரும் நாள்தான் அமாவாசை; ஆனால், நீங்கள் இன்று தர்ப்பணம் செய்கிறீர்களே... இது முறையானதா? என்றனர்.

அதற்கு கிருஷ்ணன், இப்போது, நீங்கள் ஒன்றாகத்தானே வந்திருக்கிறீர்கள்; எனவே, இன்று தான் அமாவாசை... என, சமயோசிதமாக பதில் சொல்லி விட்டார்.

சகாதேவன் சொன்னபடி களபலி கொடுத்தான் துரியோதனன்; ஆனால், அன்று அமாவாசை இல்லாமல் போய் விட்டது.

இதனால், நல்லவர்களான பாண்டவர்களுக்கே வெற்றி கிடைத்தது.

ஆடி அமாவாசையன்று மட்டுமல்ல, தினமும் தர்ப்பணம் செய்ய ஏற்ற தலம் திருவாரூர் மாவட்டம் செதலபதி முக்தீஸ்வரர் கோவில்.

முக்தீஸ்வரரை சூரியன், சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் வணங்கியுள்ளனர்.

எனவே, இவர்கள் இருவரும் அருகருகே இருக்கின்றனர்.

சூரியன், சந்திரன் சந்திக்கும் நாளே அமாவாசை. இங்கே தினமும் இருவரும் இணைந்திருப்பதால், இதை, நித்ய அமாவாசை தலம் என்பர்.

இக்கோவிலில் முன்னோர்களுக்கு பிதுர் தர்ப்பணம் செய்ய அமாவாசை, திதி, நட்சத்திரம் என பார்க்கத் தேவையில்லை. எந்த நாளிலும் சிரார்த்தம், தர்ப்பணம் செய்து கொள்ளலாம்.

ராமபிரான் இத்தலத்துக்கு வந்து, தன் தந்தை தசரதருக்காக பிண்டம் பிடித்து, சிரார்த்தம் செய்துள்ளார். இந்த பிண்டங்கள், பிதுர் லிங்கங்களாக மாறியதாக தல வரலாறு கூறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக