திங்கள், 17 ஜூலை, 2017

வைணவத்தில் நவக்கிரகங்கள் உண்டா? இல்லையா?



வைணவத்தில் நவக்கிரகங்கள் உண்டா? இல்லையா?

ஏன் பெரும்பாலான வைணவ ஆலயங்களில் நவக்கிரக சன்னிதி என்று தனியாக ஒன்று இருக்காது!

சிவன் கோயில்களில் இருப்பது போல் நவக்கிரகங்களைச் சுற்றி வர முடியாது!

ஏன் என்று சிந்தித்து இருக்கீங்களா?

தினமும் நாம் சொல்லும் வேங்கடேச சுப்ரபாதத்தில் நவக்கிரகம் பற்றி வரும்

ஸ்லோகம் :-

சூர்யேந்து பெளம புத வாக்பதி காவ்ய செளரி ச்வர்பானு கேது திவிஷத் பரிஷத் ப்ரதானா!!

த்வத் தாச தாச சரமாவதி தாச தாசா
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ சுப்ரபாதம்!!

நவக்கிரகங்கள் = ஒன்பது கோள்கள் முதலில் பட்டியல் போடுறாங்க

சூர்ய = சூர்யன் (ஞாயிறு)
இந்து = சந்திரன் (திங்கள்)
பெளம = செவ்வாய்
புத = புதன்
வாக்பதி = வாக்குக்கு அதிபதி பிரகஸ்பதி; அதாவது குரு (வியாழன்)
காவ்ய = காவியக் கவிதை வல்லுநர்; அதாவது சுக்கிரன் (வெள்ளி)
செளரி = சனி பகவான்
ச்வர்பானு = ராகு
கேது = கேது

திருமலையில் பெருமாளின் காலடியில் சந்திர கலை உள்ளது

சோதிடத்தில் சந்திர தோஷப் பரிகாரத் தலமாகத் திருப்பதி விளங்குகிறது!

பொதுவாக வைணவ ஆலயங்களில், நவக்கிரகங்களுக்குத் தனியாகச் சன்னிதி கிடையாது! (மதுரை கூடலழகர் ஆலயம், மற்றும் சில ஆலயங்கள் தவிர);

இதனால் பெருமாள் கோவில்களில் நவக்கிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது!

அங்கும் நவக்கிரகங்களைக் குறித்து பூசைகள் - பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு தான்!

சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூசையிலேயே நவக்கிரகங்களும் இடம் பெற்று விடும்!

வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்!

பரிவார தேவதைகள், நித்ய சூரிகள் - இவர்களுக்கு எல்லாம் தனியாகச் சன்னிதி கிடையாது!

இவர்கள் எல்லாம் பெருமாளின் இடத்திலேயே இருந்து கொண்டு, அவரை அரூபியாகச் சேவித்து கொண்டு இருப்பதாக ஐதீகம்!

படைத்தலைவர் விஷ்வக்சேனர் (சேனை முதலியார்) க்குக் கூட நிறைய ஆலயங்களில் தனியாகச் சன்னதி இருக்காது

ஶ்ரீவைணவத்தில் பெருமாளின் அடியார்களுக்கும், அவரை பாடிய ஆழ்வார்கள் ஆசார்யர்களுக்கு மட்டும் சன்னிதி இருக்கும்!

இதுவே அவரது அடியார்கள பெருமை!

பெருமாளின் அதிகாரிகளைக் காட்டிலும் அடியவர்களுக்கே அதிக அதிகாரம் தரப்படுகிறது அதாவது மோட்சம் வழங்கும் அதிகாரம் வரை ஏன்?

அதிகாரிகளை முன்னிறுத்தினால் சக்தியும்வலிமையும்முன்னிறுத்தப்படும்

அடியவரை முன்னிறுத்தினால் அன்பும் பக்தியும் தானே வளரும்!

அதனால் தான் இது போன்றதொரு அமைப்பு!

பெருமாள் ஆலயங்களின் அமைப்பு ஒரு குடும்பம் வாழும் வீட்டைப் போன்றது!

அங்கே தாய் தந்தை குழந்தைகளைத் தான் பிரதானமாகப் பார்க்கலாம்!

நவக்கிரகங்களும் இறைவனின் அதிகாரிகள்; அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள்!

அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூசனையும் உண்டு! ஆனால் வெளிப்படையாக முன்னிறுத்தப்படுவதில்லை! அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் கட்டிகாக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.

அவரின் திருவுருவத்திலேயே நவ கிரஹங்களும் அடங்கி விடுகிறார்கள்!

பகவானின் தசாவதாரத்தில் கூட, நவக்கிரக அம்சங்கள் உண்டு!

சூர்யன் = இராமன்
சந்திரன் = கண்ணன்
செவ்வாய் = நரசிம்மர்
புதன்.        = கல்கி
வியாழன்.  = வாமானர்
வெள்ளி.    = பரசுராமர்
சனி =           கூர்மம்
ராகு.         = வராகம்
கேது.            = மச்சம்

அதே போல், 108 திவ்யதேசங்களில், ஒன்பது திவ்யதேசங்கள், நவக்கிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன

(திருநெல்வேலி-தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

சூர்யன் = திருவைகுண்டம்
சந்திரன் = திருவரகுணமங்கை
செவ்வாய் = திருக்கோளூர்
புதன் = திருப்புளிங்குடி
வியாழன் = திருக்குருகூர் (ஆழ்வார்
                                            திருநகரி)
வெள்ளி = திருப்பேறை
சனி = திருக்குளந்தை
ராகு = திருத்துலைவில்லி மங்கலம்        
             (இரட்டைத் திருப்பதி)
கேது =திருத்துலைவில்லி மங்கலம்
            (இரட்டைத் திருப்பதி)

திவிஷத் பரிஷத் = தேவர்கள் கூட்டத்துக்கே
ப்ரதானா = முக்கியமாய், (அவர்களையே அடக்கும் சக்தி வாய்ந்த நவக்கிரகங்கள்)

தேவர்கள் கூட்டத்தில் ஒரு பகுதியாய் நவக்கிரகங்கள் இருந்தாலும்,

நவகிரஹங்கள்
கர்ம பலன்களைக் கொண்டு சென்று சேர்க்கும் அதிகாரிகளாக இருப்பதால் அவர்களுக்குப் யாரிடமும் பாரபட்சம் கிடையாது.

அவர்கள்

தேவர்களையே அடக்கும் வல்லமை பெற்றவர்கள்.

அதே சமயம், அசுரர்கள் தேவர்களுக்கு எதிரிகளாக இருப்பதால் அசுரர்களிடம் பாரபட்சம் எல்லாம் காட்ட மாட்டார்கள் இந்த ஒன்பது பேரும்!

அப்பேர்பட்ட நவக்கிரகங்கள்,

த்வத் தாச தாச = உன்னுடைய அடியார்க்கு அடியார்களிடம்

சரமாவதி தாச தாசா = அடியார்களாக இருந்து சேவை செய்கிறார்கள்

இங்கு தான் அடியார்களின் பெருமை மின்னுகிறது!

இறைவனுக்குத் தானே அடியார்கள்?

அடியார்களுக்கே எப்படி அடியார் இருப்பார்கள்?

அதாவது பழுத்த தொண்டர்கள், இறைவனைச்சகதொண்டர்களிட
"மும்" காண்பது!

அப்படிக் காண்பதால் அடியார்க்கு அடியார் ஆவது!

தொண்டர் அடிப்பொடி என்பர்
( ஒரு ஆழ்வார் தன் பெயராகவே வைத்துக் கொண்டு உள்ளார்)

பகவத் கைங்கர்யம்என்னும் திருத் தொண்டில் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் மகாபாவம்!

அதாவது ஒருவர் நம்மை விட கொஞ்சம் அதிக செல்வம் வைத்திருந்தால் அவர்மீது நமக்கு கொஞ்சமேனும் பொறாமை வரும்! அதை வெளிக் காட்டிக் கொள்வதும், காட்டாததும்அவரவர்மனோநிலையைப் பொருத்தது!

அதுபோல் தான் ஒருவரின் கல்விச் செல்வம், பொருட் செல்வம் மட்டுமில்லை...சாதாரண பின்னூட்டச் செல்வம் வரை இந்தப் பொறாமை வளரும் சக்தி பெற்றது!

இதை பக்தியில் கூட சிலர் வெளிகாட்டுவர்

அங்கு பொறாமை என்று இல்லாவிட்டாலும் உயர்ந்த பக்தி, தாழ்ந்த பக்தி என்றெல்லாம் தரம் பிரித்துப் பேசுவர்

அடியார் கூட்டங்களில் அனைவரும் ஒன்றாகக் கூடி இறைவனை சேவிக்கும் போது,

மற்றவர்களையும் சேர்க்க வேண்டும் நாம் மட்டும் தனியாகத சேவிக்காமல் கூடியிருந்து குளிர வேண்டுமே - என்ன செய்வது?

அப்போது சக அடியார்களைப் பார்த்து நம் பக்தி சிறந்தது என்ற எண்ணம் துளிர் விட்டால்?

ஏனெனில் அது மனித குணம் தானே!

அதனால் தான் அடியார்க்கு அடியார் ஆக வேண்டும் என்பது!

சக அடியார்களிடமும் ஆண்டவனைக் காண்பது.

அடியார்க்கு அடியவராகி விட்டால் பொறாமை தலை தூக்காது.

அன்பு தான் தலை தூக்கும்!
அன்பு தலை தூக்கினால் தான் உள்ளத்தில் பக்தி வளரும்!

துவேஷம் தலை தூக்கினால் யுக்தி தான் வளருமே ஒழிய பக்தி வளராது!

பெருமாளைப் பார்த்து, அடியார்களாகிய நாம் பொறாமைப் படுகிறோமா?

இல்லையே!

அது போலத் தான் அடியார்களைப் பார்த்து, அடியார்க்கு அடியார்களும்!

இறைவரோ தொண்டர் தம் உள்ளத்து ஒடுக்கம்

தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதே!

இப்படி இறைவனே தொண்டர்களின் உள்ளத்தில் ஒடுங்கி விடுவதால், தொண்டர்களுக்குத் தொண்டர்கள் ஆகின்றன நவக்கிரகங்கள்.

அதாவது

சரமாவதி தாஸ்யம் என்பார்கள்;

அதனால் தான் சரமாவதி தாச தாசா என்கிறது ஸ்லோகம்.

நவக்கிரகங்களும் அடியார்களின் கர்ம பலனைக் கொடுக்கும் போதும், அவர்களின் பற்றற்ற நிலையினைப் பார்த்து, "பரிவுடனே" கொடுக்கின்றன!

எப்படிக் கொடுக்கின்றன?

சரமாவதி தாச தாசா என்று கொடுக்கின்றன.

ஒரு தாசன் எப்படிப் பணிந்து பக்தியுடன் கொடுப்பானோ, அப்படிக் கொடுக்கின்றன!

அடியார்க்கு அடியாராய்,
அவை நல்ல நல்ல நல்ல,
என்று கொடுக்கின்றன!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக