அனுமான் ஜெயந்தி
அனுமனை நினைவு கூர அனுமான் ஜெயந்தியை கொண்டாடுகின்றனர். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் மட்டும் ஹனுமான் ஜெயந்தி மார்கழி மாதம்,
அமாவாசையும் மூலநட்சத்திரமும் கூடிவரும் நாளன்று அனைத்து
ஹனுமார் கோயில்களிலும் வைணவக் கோயில்களிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் வைகாசி மாதம் வளர்பிறையில் வரும், தசமி திதியன்று, அனுமன் ஜெயந்தியை கொண்டாடுகிறார்கள்.
ஆஞ்சனேயர் ஜெயந்தி அன்று பக்தர்கள் விரதமிருந்து, அனுமாருக்கு வடை மாலை, துளசி மாலை, வெற்றிலை மாலை, வெண்ணெய்க்காப்பு அலங்காரம் செய்தும் வழிபடுவர்.
அனுமன் என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் இறைவன் இராமனின் பக்தனும், இந்துகளின் கடவுளும் ஆவார். இராமாயணத்தில்
இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். அனுமனுக்கு மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் வழங்கப்படுகின்றன. அனுமனின் தாய் அஞ்சனாதேவி, தந்தையின் நாமம் கேசரீ (வானரத் தலைவர்). இவர்களின் குல தெய்வம் வாயு (பஞ்சபூதங்களில் ஒன்று) ஆவர், இவரே அனுமனுக்கு தந்தையாகவும், குருவாகவும் இருந்து வழி நடத்தியதால் அனுமன் வாயுபுத்திரர் என்றும் அழைக்கப்படுகிறார். இராமாயணம் தவிர மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் அனுமனைப் பற்றிய குறிப்புகள் உண்டு. அனுமன் இராமன் மீது கொண்ட அளவற்ற பக்தியால் இராமனின் தொண்டனாக விளங்கியவர். அனுமன் வாழ்நாள் முழுவதும் பிரம்மச்சாரியத்தைக் கடைப்பிடித்தவர்.பிற்காலத்தில் வட இந்தியாவில் அனுமனை சிவனின் அவதாரமாகவும் கருதுபவர்கள் உண்டு.
வைணவக் கோயில்களில் அனுமாருக்கு தனி சன்னதி உண்டு. அனுமாரை வைணவர்கள் திருமாலின் சிறிய திருவடி என்று பேற்றுகின்றனர்.
பெயர்க் காரணம்
சமஸ்கிருதத்தில் "ஹனு" என்பதற்கும் "தாடையும்", "மன்" என்பதற்கு "பெரிதானதது" என்பதால், "ஹனுமன்" என்பதற்கு பெரிய தாடையை உடையவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. இன்னொரு வழக்கில் "ஹன்" என்பதற்கு "கொன்றவன்", "மானம்" எனபதற்கு "தற்பெருமை" என்பதல், "ஹன்மான்", என்பதற்கு தற்பெருமையைக் கொன்றவன் என ஒரு பெயர்காரணம் உண்டு. ஆண்மந்தி (ஆண் குரங்கு) என்பதுதான் அனுமன் என்றும் அதிலிருந்து தான் ஹனுமன் என சமஸ்கிருதத்தில் வழங்கப்பட்டதாகவும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.
அஞ்சனை மகன் என்பதால் அனுமன் என்றும் அழைப்பர்.
இராமாயணத்தில் அனுமன்
சுந்தர காண்டம் எனப்படும் இராமாயணப் பகுதியில் அனுமனின் பின்வரும் வீரதீரச் செயல்கள் பேசப்படுகின்றன. அனுமன் இராமனை பிரிந்து தவிக்கும் சீதையைக் காண வான் மார்க்கமாக கடல் கடந்து இலங்கைக்கு சென்றதாக இராமாயணம் கூறுகிறது. சீதையை அசோக வனத்தில் சந்தித்து, இராமன் சீதையைத் தேடி வந்து கொண்டிருக்கிறார் என்ற செய்தியையும், இராமனின் அடையாளமாக அவரது கணையாழியையும் அனுமன் தருகிறார்.
பின்னர் சீதையைச் சிறைப் பிடித்து வைத்திருக்கும் இலங்கை வேந்தன்
இராவணனை அவனது அரசவையில் சந்தித்து, சீதையை விடுவிக்குமாறும் இல்லாவிட்டால் இராமன் போர் தொடுக்க வேண்டி இருக்கும் என்பதனையும் தூதுவனாகத் தெரிவிக்கிறார். தூதுவனை மதியாத இராவணன், அனுமனின் வாலில் தீ வைக்க, அங்கிருந்து தப்பிய அனுமன் இலங்கைத் தலைநகரத்தையே தன் வாலில் இருந்த தீயால் எரிந்து சாம்பலாகும்படி செய்து விட்டுத் திரும்புகிறார். இலங்கையில் இருந்து திரும்பியவுடன் இராமனைச் சந்தித்து, "கண்டேன் சீதையை" என்கிற நற்செய்தியையும், இராவணன் சமாதானத்திற்கு உடன்படாததையும் தெரிவிக்கிறார்.அனுமன் "சொல்லின் செல்வன்" எனவும் அழைக்கப்படுகிறார். பின்னர் போர் மூள்கிறது. போரில், சஞ்சீவினி மலையையே தனது கரத்தால் தூக்கி வந்து போரிலே மயக்கமுற்றவர்கள் நினைவு திரும்பிட வழி வகுத்ததாகவும் இராமாயணம் சொல்கிறது.
அனுமன்-இராமன் முதற் சந்திப்பு
இராமனும் இலக்குவனும் சுக்ரீவனின் இருப்பிடத்திற்கு அருகாமையில் வந்து கொண்டு இருக்கையில், அவர்கள் உண்மையில் யாரெனக் கண்டுகொள்ள, சுக்ரீவன் அனுமனை அனுப்புகிறான். அனுமன் அந்தண வேடத்தில் இராம இலக்குவனை அடைந்து அவர்கள் யாரென வினவுகிறான். இராமன் தாங்கள் யாரெனக் கூறத் தொடங்கியதுமே, அனுமன் இராமன் காலில் வீழ்ந்து தன்னை அனுமன் என அறிவிக்க, இராமன் அனுமனைக் கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது தொடங்கும் இராமன் - அனுமன் நட்பு எப்போதும் என்றென்றும் நிலைத்து திகழ்கிறது. அனுமனின் இதயத்தில் இராமன் எப்போதும் ஒளி வீசித் திகழ்கிறார்.
அனுமனது உருமாறும் திறன்
இராமயணத்தில் பல இடங்களில் அனுமன் தனது உருவினை மாற்றிக் கொள்ளும் திறன் படைத்தவராக சொல்லப்படுகிறது. இராவணனின் மாளிகையில் சீதையைத் தேடும்கால் பூனை வடிவினில் தனது உருவினை மாற்றிக் கொள்கிறார். பின்னர், சீதையைக் கண்ட பின், ஒரு பெரிய மலை போல் தன் உருவினை மாற்றித் தனது திறனை சீதைக்கு காட்டுகிறார். இது போன்று உருவினை மாற்றிக் கொள்ளும் சித்திகளை அனுமன் தனது இளமைப் பிராயத்தில் சூரியக் கடவுளிடம் இருந்து பெற்றதாகச் சொல்லப்படுகிறது.
அனுமன் சஞ்சீவினி மலையைக் கொணர்ந்தது
அஹி மற்றும் மஹியை வதைத்த கையுடன் சஞ்சீவனி மலையை கொண்டு வரும் அனுமார்
போரில் இராமனது தம்பி இலக்குவன் காயங்களுடன் மூர்ச்சை அடைய, இலக்குவனைக் காப்பாற்ற சஞ்சீவினி மலையில் இருந்து மூலிகை மருந்தினைக் கொண்டு வருவதற்காக அனுப்பப் படுகிறார். இதை அறிந்த இராவணன் அனுமனுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்துகிறான். அனுமன் அவற்றைக் கடந்து சஞ்சீவினி மலையை அடைந்தார். ஆனால் அங்கு குறிப்பிட்ட மூலிகையினை அவரால் அடையாளம் கண்டு கொள்ள இயலவில்லை. அன்றைய தினம் முடிவடையும் முன் மூலிகையினைக் கொணர்ந்தால் தான் இலக்குவனைக் காப்பாற்ற இயலும் என்கிற தறுவாயில், அனுமன் பெரியதோர் உருக்கொண்டு, சஞ்சீவினி மலையினை அப்படியே அடியோடு பெயர்த்தெடுத்து, வானத்தில் பறந்து போர்க்களத்தினை வந்தடைகிறார். பின்னர் மலையில் இருந்து மூலிகை மருந்து இலக்குவனுக்குத் தரப்பட, இலக்குவன் உயிர் பிழைக்க, இராமன் பெருமகிழ்ச்சி கொண்டு, அனுமனை கட்டித் தழுவுகிறார். அனுமனைத் தனது தம்பிகளில் ஒருவராக அன்பொடு அறிவிக்கிறார்.
அனுமன் சஞ்சீவினி மலையைத் தூக்கிக் கொண்டு அயோத்தி வழியே வானத்தில் பறந்து வருகையில் இராமனது தம்பி
பரதன் யாரோ அரக்கன் ஒருவன் அயோத்தியைத் தாக்க வருகிறான் என்று நினைத்துக் கொண்டு அனுமனை நோக்கி அம்பினைத் தொடுகிறார். அம்பினில் இராமன் பெயர் இருப்பதைக் கண்டு, அனுமனைச் சும்மா இருக்க, அவ்வம்பு அனுமனது காலைத் துளைக்கிறது. உடனே வானத்தில் இருந்து கீழிறங்கி, பரதனிடம் அவன் தமையன் இலக்குவனைக் காக்கவே மலையைத் தூக்கிச் செல்வதாகச் சொன்னதைக் கேட்டதும் பரதன் தன் தவற்றை நினைத்து வருந்துகிறார். பதிலுக்குப் பரதன் தான் ஒரு அம்பினை இலங்கையை நோக்கி செலுத்தினால் அதில் அனுமன் அமர்ந்து எளிதாக இலங்கையை அடையலாமே என்கிறார். அனுமனோ அதை மறுத்துவிட்டு, அடிபட்ட காலுடனே இலங்கையை நோக்கி விரைகிறார்.
அனுமன் தனது இதயத்தைத் திறந்து காட்டுதல்
இராவண வதம் முடித்து இராமன் முதலானோர் அயோத்தி திரும்பி இராமன் முடி சூட்டிய பின், தனக்கு உதவி செய்தவர்களுக்கு தக்க பரிசுகளை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது இராமன் அருகே யாதொரு பரிசினையும் எதிர்பாராத அனுமன் வர, இராமன் அனுமனை ஆரத் தழுவிக்கொண்டு, அனுமன் செய்த உதவிகளுக்கெல்லாம் எப்பரிசினாலும் ஈடுகட்ட முடியாது எனப் புகழ்கிறார். அக்கணம் சீதையோ ஏதாவது ஒரு பரிசினை தங்கள் நினைவாக அனுமனுக்கு தர வேண்டுமன விழைந்து, தன் கழுத்தில் அணிந்திருந்த இரத்திங்கள் பதித்த விலை உயர்ந்த மாலையைப் பரிசளிக்கிறார். அதை பெற்றுக்கொண்ட அனுமன், அந்த மாலையில் பதித்திருந்த இரத்தினங்களை வெளியே எடுத்து அதில் இராமர்-சீதை தெரிகிறார்களா எனப் பார்க்கிறார். ஏனெனில் இராமர் சீதையை விட அவருக்கு உயர்வானது வேறொன்றுமில்லை. இதை அறியாத ஒரு சிலர் அனுமனைப் பார்த்து நகைக்க, அனுமனோ அனைவரும் அறியும் வண்ணம் தனது மார்பினைத் திறந்து அதில், தன் இதயத்தில் இராமர் சீதை வீற்றிருப்பதைக் காட்டுகிறார்.
மகாபாரதத்தில் அனுமன்
இராமயணத்தைப்போல மகாபாரதத்தில் அனுமன் முக்கிய கதைப்பாத்திரம் இல்லை. ஆனால் பாண்டவர்களில் ஒருவனான
பீமனுக்கு ஒரு வகையில் அண்ணன் உறவு வருகிறது. பாண்டவர்கள் வனவாசத்தில் இருக்கும்போது, காட்டு வழியே பீமன் பயணிக்கும்போது, அங்கே வயோதிக குரங்கு ஒன்று படுத்துக் கொண்டிருக்க, அதன் வாலோ நீண்டு பீமன் நடந்து செல்லும் பாதையை அடைத்துக் கொண்டிருந்தது. பீமன் அதன் வாலை தள்ளி வைத்து விட்டு செல்லலாம் என எண்ணி, வாலைத் தூக்க யத்தனித்தான். ஆனால் சிறந்த பலசாலி எனப்பெயர் பெற்ற பீமனாலேயே அக்குரங்கின் வாலினை அப்புறப்படுத்த இயலவில்லை. பின்னர் பீமன், அது சாதரணக் குரங்கில்லை என உணர்ந்து, அக்குரங்கிடம் மிகுந்த மரியாதையுடன் யாரென வினவிட, அனுமன் தான் யாரென்பதை பீமன் அறியச் செய்கிறார்.
குருக்ஷேத்திரப் போரில், அர்ஜூனனின் தேரில் பறக்கவிடப்பட்டிருந்த கொடியில் அனுமனின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இது மானசீகமாக தேரின் பலத்தினைக் கூட்டியதாகச் சொல்வார்கள். கண்ணன் போர்க்களத்தில்
பகவத் கீதையினை அர்ஜூனனுக்கு உபதேசித்தபோது, அனுமனும் கொடி வழியாக கேட்டதாகச் சொல்லப்படுகிறது. போர் நிறைவடைந்தபின், அர்ஜூனனும், கண்ணனும் தேரில் இருந்து கீழே இறங்கியபின், கண்ணன் அனுமனிடம் இதுவரை தேரின் கொடியாக இருந்தமைக்கு நன்றி சொல்லிட, உடனே அனுமன் தன் உருவினைக் காட்டி, கண்ணனை வணங்கி விட்டு, கொடியில் இருந்து மறைந்து விடுகிறார். அனுமன் மறைந்தவுடனேயே, தேர் எரிந்து சாம்பலாகி விடுகிறது. இதைக்கண்டு அதிர்ச்சியுற்ற அர்ஜூனனைப் பார்த்து கண்ணன், "அர்ஜூனா, இதுவரை போரினில், இத்தேரின் மேல் வீசப்பட்ட அனைத்து கொடிய பாணங்களையும் தாங்கி நின்றது என்றால், அதற்கு நானும் அனுமனும் இத்தேரினில் இருந்ததுவே காரணம். இல்லாவிட்டால், இத்தேர் எப்போதோ அப்பாணங்களின் சக்தியினால் எரிந்து போயிருக்கும்" என்றார்.
அனுமர் உருவங்கள்
அனுமர் உருவச் சிலைகள் பல்வேறு உருவங்களில் வணங்கப்படுகிறார். வீரகோலம், நின்றக் கோலம், யோகக் கோலம் போன்ற உருவங்களில் அனுமர் சிலைகள் வைக்கப்படுகின்றன.
அனுமனுக்கான கோயில்கள்
மட்டக்களப்பு ,மயிலம்பாவெளி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள அனுமன் சிலை
அனுமன் சுடுமட்சிலை
இந்து சமயக் கோயில்களில் அனுமருக்கு தனிச்சன்னதிகளும், சிற்பங்களும் அமைந்துள்ளன. வைணவக் கோயில்களில் இராமர் சன்னதி முன்பு வணங்கியபடி இவரது உருவச்சிலைகள் அமைக்கப்படுகின்றன.
தனிக்கோயில்கள் பெருமளவு அனுமருக்காக உருவாக்கப்பட்டுள்ளன. இவர் இராமாயணத்தில் விஸ்வரூபம் எடுத்தமையால், பல கோயில்கள் பெரிய சிலைகள் வைக்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் நாமக்கல்லில் இருக்கும் 18 அடி உயர அனுமன் சிலை மிகவும் புகழ் பெற்றது. காசியிலும் அனுமனுக்குத் தனியான கோயில் உண்டு.உலகிலேயே மிக உயரமான அனுமன் சிலை, ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ளது .இது 135 அடி ஆகும்.
அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
வெஞ்சினைக்கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !
அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
அஞ்ச லென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே
எந்தத் துன்பம் வந்தாலும் நினைத்த மாத்திரத்திலேயே வாயுவேகமாக வந்து நமக்கு உறுதுணையாக நிற்பவர் வாயுபுத்ரன் அனுமன்.
ராமாயணத்தில் அனுமனுடைய பராக்கிரமங்களை விளக்க மட்டுமே 'சுந்தர காண்டம்' என்று ஒரு தனிப்பகுதி உண்டு.
சூரியனுடைய சக்தியையும், சந்திரனுடைய குணத்தையும், வருணனின் கருணையையும், வாயு பகவானின் வேகத்தையும், பூமியின் பொறுமையையும் ஒருங்கே பெற்றவர் ஆஞ்சநேயர்.
அவதாரங்கள் - தசாவதாரம். சிவபெருமானும், விஷ்ணுவும் பல்வேறு காரணங்களுக்காக பல அவதார வடிவங்களை எடுத்து இருக்கிறார்கள்.
அதன்படி தூய்மையான பக்தி, ஞானம், வீரம், விவேகம், போன்றவற்றை எடுத்துக்காட்ட சாட்சாத் சிவபெருமான் எடுத்த அவதாரமே ஆஞ்சநேயர் என்பது சாஸ்திரங்கள் .
மார்கழி மாதம் மூல நட்சத்திரம், தனுசு ராசி, மேஷ லக்னம், அமாவாசை திதியில் அனுமன் அவதாரம் நிகழ்ந்த தினம் அனுமன் ஜெயந்தி விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
விஷ்ணு தலங்களில் அஞ்சனை புதல்வனாகிய அனுமனுக்கு தனி சந்நதி இருக்கும். ஆஞ்சநேயருக்கு பிரசித்தி பெற்ற தனிக்கோயில்களும் உள்ளன.
வடஇந்தியாவில் அனுமனுக்கு அதிக ஆலயங்கள் உள்ளன. அனுமன் சர்வ தேவதா சக்திகளின் அம்சம். புத்தி, பலம், கீர்த்தி, தைரியம், மனோபலம் போன்றவற்றை அருளுபவர். தடைகளை உடைக்கும் வடை மாலை ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது விசேஷமானதாகும்.
கிரக தோஷத்தை நீக்குவதற்காக வடை மாலை சாற்றுவது என்பது காலம் காலமாக இருந்து வரும் வழிபாடாகும். அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய், வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
சனிப் பெயர்ச்சி நடப்பவர்கள் அனுமனை வணங்கி வருவது பல சங்கடங்களைப் போக்கும்.
108 வெற்றிலை மாலை-மலர் அலங்காரம்
ஸ்ரீ ராமபக்த பால ஹனுமான் தரிசனம்.
ஸ்ரீ லக்ஷ்மி நரஸிம்ஹ ஸ்வாமி திருக்கோயில்
இந்திராநகர், நியூ ஹாரிசான் ஸ்கூல் பின்புறம்
பெங்களூர், கர்நாடகா
ஸ்ரீஸ்ரீ வியாஸராய மஹான் பிரதிஷ்டை செய்த ஆஞ்சநேய சிலைகளுள் சென்னை, கிண்டியிலுள்ள எம்.கே.என். சாலையில் அமைந்துள்ள வீர ஆஞ்சநேயர் திருக்கோயில் உள்ளது.
. ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மேற்கு திசை நோக்கி திருமுக மண்டலம் தந்தருள்வது தனிச்சிறப்பு.
திருமுக மண்டல தரிசனம் செய்தால் தீராத நோய்கள் தீரும். பாத கமலங்கள் தென்திசை நோக்கி அமைந்துள்ளன. இவரது வாலில் மணி அமைந்துள்ளது விசேஷம். சந்தான பாக்கியம் தந்தருளும் ஸ்ரீவேணுகோபாலன் தனித்து சன்னிதி கொண்டு அருள் பாலிக்கிறார்.
இராகு-கேது தனித்து அருள்புரியும் பரிகார ஸ்தலம்.
திருமணத் தடைகள் நீங்க செய்ய வேண்டிய திருக்கல்யாண பிரார்த்தனை ஸ்தலமாக விளங்குகிறது.
அருள்மிகு வீர ஆஞ்சநேயரை தொடர்ந்து ஒன்பது வாரங்கள், வாரத்துக்கு ஒருநாள், வெற்றிலை மாலை சாற்றி, அணையாவிளக்கில் நெய் செலுத்தி, அர்ச்சனை செய்து, ஒன்பது முறை வலம் வந்து வழிபடவேண்டும்
ஒன்பதாவது வாரம் ஞாயிற்றுக் கிழமை வடைமாலை, வஸ்திரம், வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கி திருமண யோகம் கைகூடும்.
வியாழக்கிழமைதோறும் ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு வெண்ணெய்க் காப்பு சாற்றப்படும் சமயத்தில் செய்யப்படும் எந்தப் பிரார்த்தனைக்கும் வெண்ணெயைப் போலவே மனமுருகி செவி சாய்ப்பார் இந்த அழகிய ஹனுமான்.
அனுமன் விரதம் இருக்கும் முறை
அனுமன் ஜெயந்தி அன்று விரதம் இருந்தால் சகல மங்களங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கை கூடும். துன்பம் விலகும். அனுமன் ஜெயந்தி விரதம் இருப்பவர்கள் அதிகாலை குளித்து உணவருந்தாமல், ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று துளசியால் அர்ச்சனை செய்ய வேண்டும்.ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி வழிபட வேண்டும். வாலில் குங்கும பொட்டு வைத்து வழிபடுவது விசேஷமானது. அவல், சர்க்கரை, தேன், பானகம், கடலை, இளநீர் முதலிய பொருட்கள் அனுமானுக்கு மிகவும் பிடிக்கும். அதை நைவேத்தியம் செய்து வழிபடலாம்.
அனுமானுக்கு வாலில் தான் சக்தி அதிகம். அதனால் தான் ஆஞ்சநேயர் வாலில் குங்குமம் வைத்து வழிபடுகிறோம். பக்தி சிரத்தையுடன் ராம நாமத்தை உச்சரித்துக் கொண்டு வால் தோன்றும் இடத்தில் இருந்து தினமும் சந்தனம் பூசி, குங்கும திலகம் வைத்துக் கொண்டு வர வேண்டும். வாலின் நுனியை அடைந்ததும் கலைத்து விட்டு மறுபடியும் பொட்டு வைக்க வேண்டும்.
வால்முனையில் பொட்டு பூர்த்தி பெறுகின்ற சுப தினத்தில் வடை மாலை சாத்தி வழிபட வேண்டும். மார்கழி மாதம் வளர்பிறை திரயோதசிஅன்று 13 முடிச்சுகளோடு கூடிய மஞ்சள் கயிற்றை கலசத்திற்குள் வைத்து ஓம் நமோ பகவதே வாயு நந்தனாய என்ற மந்திரம் சொல்லி ஆவாஹனம் செய்து மஞ்சள், தனம், பூ மேலும் மற்ற பூஜை பொருட்களால் பூஜை செய்ய வேண்டும்.
கோதுமை மாவினால் தயார் செய்யப்பட்ட 13 பூரி, வெற்றிலை பாக்கு, தட்சணையோடு ஒரு தட்டில் வைத்து அந்தணருக்கு கொடுக்கலாம். மேலும் அந்த அந்தணருக்கு சாப்பாடும் போடலாம். அனுமான் விரத தொடக்கத்தில் இவ்வாறு செய்வதால் சகல காரியங்களும் வெற்றி அடையும்.
காலை உணவாக பொரியும், பழமும் சாப்பிட வேண்டும். இதை பிறருக்கும் வழங்கலாம். பகல் உணவாக கிழங்கு, காய்கறிகளை சாப்பிடலாம். இரவில் ஆஞ்சநேயர் ஸ்தோத்திரம், ராமநாமம், ஆஞ்சநேயர் அஷ்டோத்திரங்கள், சுலோகங்கள் கூறி சேவிக்க வேண்டும்.
அனுமனின் அவதாரக் கதை !
புகழ்பெற்ற இதிகாசங்களுள் ஒன்று , ராமாயணம் . அந்த மகாகாவியத்தை அறிந்த பலருக்கும் ராம பக்தியில் மூழ்கித் திளைத்த அனுமன் இஷ்ட தெய்வமாக விளங்குகிறார் . காற்றின் மைந்தன் என்றும் அஞ்சனையின் புத்திரன் என்றும் போற்றப்படும் இவரின் பிறப்பு , பால லீலைகள் என எல்லாமே நாம் அறிந்ததுதான் . அனுமனை சிவனின் ருத்ர அவதாரம் என்பர் . அதன் பின்னணியில் ஒரு சுவையான கதை உள்ளது.
அவதாரக் கதை : ஒரு நாள் கயிலையில் பரமேஸ்வரர் ராம நாமத்தை ஜபித்தபடி இருந்தார் . அதைக் கேட்ட பார்வதி, தங்களுடைய நாமத்தை விட சிறப்பு வாய்ந்ததா இந்த நாமம்? என்று கேட்டார் . அதற்கு சிவன் , உமா ! இனி வரப்போகும் காலத்தில் உலகம் தர்ம வழிப்படி நடக்கவும் , ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும் என்பதைக் காட்டவும் உன் அண்ணனாகிய மகாவிஷ்ணு ராமன் என்ற பெயரில் பூமியில் தசரதச் சக்கரவர்த்தியின் மகனாகப் பிறந்து , செயற்கரிய செயல்கள் செய்யப் போகிறார் . அந்த அவதாரத்தில் ராம என்ற பெயர் மிகவும் புகழ் பெறும். அது மட்டுமல்லாமல் நானே என்னுடைய பதினோராவது ருத்ர ரூபத்தை ராமரின் உதவிக்காக பூமியில் பிறக்கச் செய்யப்போகிறேன் என்றார் .
அதைக் கேட்ட சக்திக்கு அந்த அவதாரத்தின் போது தானும் உடனிருக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது . ஈசனிடம் அதைச் சொல்ல , அவரும் சம்மதித்தார் . அந்த அவதாரம் எப்படி இருக்க வேண்டும் என விவாதித்தனர் அம்மையும் அப்பனும் . மனித வடிவு எடுப்பது இயலாது . ஏனெனில் ராமனுக்கு தாசனாக , பணியாளனாக இருக்க வேண்டும். எப்போதுமே எஜமானனை விட பணியாளன் ஒரு படி குறைந்தவனாகவே இருப்பது நல்லது என்பது ஆன்றோர் வாக்கு . அது மட்டுமல்ல , முன்னொரு காலத்தில் ராவணன் நந்தியை மதிக்காமல் குரங்கு முகம் என பழித்தான் . அதனால் நந்தி ஒரு குரங்கால் உன் ராஜ்ஜியம் முழுவதும் அழியும் என்று சாபம் கொடுத்தார் . அந்த சாபம் பலிக்கவும் , ராமனுக்கு தாசனாக இருக்கவும் தோதாக வானர ரூபம் எடுக்க முடிவானது. உலகன்னை வானரத்தின் வாலாக நான் இருப்பேன் என வேண்ட, எம்பெருமான் அதற்கு ஒப்புக் கொண்டார். அதனால்தான் அனுமனின் வால் சக்தி மிகுந்ததாகவும் , அழகானதாகவும் விளங்குகிறது .
தசரதச் சக்கரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்ததும், அதன் பிரசாதமான பாயசத்தை ஈசன் அருளால் ஒரு கருடன் கொத்திக் கொண்டு போய் காற்று அதை மிகச் சரியாக அஞ்சனையில் கையில் சேர்க்க கேசரி , அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது . அதற்கு சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்தாள் தாய் . ஒரு நாள் பசிக்கிறது என்று வானத்தில் அப்போது தான் உதிக்கும் சூரியனை பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானில் தாவினார் மாருதி . அவரைத் தடுத்த இந்திரன் தன் ஆயுதத்தால் மிக மெதுவாக அவரது தாடையில் அடிக்க, அது நீண்டு உருமாறியது . அன்று முதல் சுந்தரனுக்கு அனுமன் என்ற பெயர் ஏற்பட்டது . ( அனுமன் என்றால் வளைந்த தாடையை உடையவன் என்று பொருள் )
மிக மிக குறும்புக்காரராக இருந்தார் பால அனுமன் . முனிவர்களின் யாகத்தைக் கலைப்பதும், மரத்தின் மீது ஏறிக் கொண்டு அவர்கள் மீது கல்லை வீசுவதும் என அவரது தொல்லை சகிக்க முடியாமல் போனது . அந்த வனத்தில் இருந்த முனிவர்களுக்கு மாருதியின் அவதார நோக்கம் தெரியும் என்பதால் சிறு சாபம் ஒன்று கொடுத்தனர் . அதன்படி பவன குமாரருக்கு தனது பலம் என்ன என்பது தெரியாமல் மறந்து போனது .
மாருதியின் கல்விக்கான நேரம் வந்த போது, சூரியனே கல்வியில் மிகச் சிறந்தவர் என்று எல்லாரும் சொல்லக் கேட்டு , அவரையே தனது குருவாக வரித்தார் அனுமன் . சூரியனின் சுழற்சி வேகத்துக்கு ஈடு கொடுத்து நடந்தபடியே நால்வகை வேதங்கள் , தர்மசாஸ்திரங்கள் , புராணங்கள் என எல்லாம் கற்றுத் தேர்ந்தார் . அதோடு மட்டுமல்லாமல் வியாகர்ணம் எனப்படும் சமஸ்கிருத இலக்கணத்தை மிக நன்றாகக் கற்று பண்டிதர் எனப் பெயர் பெற்றார்.
கல்விக்காலம் முடிந்ததும் தனது அவதார நோக்கத்தை அறிந்து கொண்டார் அவர் . ராமபிரான் வரும் வரையில் காத்திருப்பதுதான் தன் கடமை என உணர்ந்து கொண்டார். அந்த நேரத்தில் சுக்ரீவன் மனைவியையும், நாட்டையும் இழந்து காட்டில் சுற்றிக் கொண்டிருந்தான். அவனது அமைச்சனாக , வழிகாட்டியாக பணியில் அமர்ந்தார் அனுமன் . ராமபிரானை முதல் முதலில் கண்டு , தான் இன்னார் என்று வெளிப்படுத்திக் கொண்டு ராமனுக்கு அளப்பரிய பணிகள் அனுமன் செய்தது நாம் அறிந்தது . ஜாம்பவான் மாருதியின் பலத்தை நினைவுபடுத்த அதன் பிறகு அவர் கடலைத் தாண்டியதும், சீதையை கண்டதும் , இலங்கையை தீக்கிரையாக்கியதும் நாடறிந்த ஒன்று .
அனுமன் செய்த தியாகம்!
இறைவனிடம் செலுத்தும் பக்தியின் பரிமாணத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். கடவுள் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ வியாபித்திருக்கிறார். அவர் என்னைக் காத்து ரட்சிக்கிறார். அவருக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று கருதி, அவரைச் சரணடைந்து பக்தி செலுத்துவது முதல் வகை. கடவுள், உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளிலும் ஒவ்வொரு அணுவிலும் வியாபித்திருக்கிறார்; உயிர்களிடம் காட்டும் அன்பின் மூலம் இறைவனுக்குச் சேவை செய்யலாம் என்று கருதி, கடவுளை வழிபடுவது இரண்டாவது வகை. கடவுள் என்னுள்ளேயே இருக்கிறார். அவரை வேறெங்கும் தேடத் தேவையில்லை. என்னுள்ளே இருந்து என்னை இயக்கும் இறைவனே என்னை வழிநடத்துகிறான் என்று கருதி, தன்னைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை.
அனுமனின் பக்தி, இந்த மூன்றாவது வகையைச் சேரும். ராமாயண காவியத்தில் ராமனுக்கு அடுத்தபடியாகப் பேசப்படுபவன் அனுமன். நம் தேசத்தில் பல வகையான ராமாயணங்கள், பல்வேறு காலகட்டத்தில், பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டுக் காலம் காலமாகப் பேசப்பட்டு வருகின்றன. சம்ஸ்கிருத மொழியில் வால்மீகி எழுதிய மூல ராமாயணம், இந்தியில் துளசிதாசர் எழுதிய ராமசரிதமானஸ், தமிழில் கம்பர் எழுதிய கம்பராமாயணம், தெலுங்கில் பக்த போத்தன்னா எழுதிய போத்தன்னா ராமாயணம் ஆகியவை மட்டுமின்றி, அத்யாத்ம ராமாயணம், ஆனந்த ராமாயணம், ஹனுமத் ராமாயணம் எனப் பல்வேறு ராமாயண காவியங்கள் உலகெங்கும் பன்னெடுங்காலமாகப் போற்றிப் பூஜிக்கப்பட்டு வருகின்றன.
இவற்றில் ஹனுமத் ராமாயணம் என்பதை ஹனுமானே அருளியதாகச் சொல்லப்படுகிறது. ஸ்ரீராமனின் பட்டாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர், ஒருநாள் இமயமலைச் சாரலில் ஒரு சிகரத்தின் மீது ஏறி நடந்துகொண்டிருந்தார் வால்மீகி. சிகரத்தின் சரிவுகளில் இருந்த பாறைகளின் மீதும், கற்களின் மீதும் கல்வெட்டுக்களாகச் சில வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. அவற்றைப் படிக்க ஆரம்பித்தார் வால்மீகி. அவருக்கு மெய்சிலிர்த்தது. அந்த வாசகங்கள் எல்லாம் ஸ்ரீராமனின் வாழ்க்கைச் சம்பவங்களைச் சித்திரிப்பதாக அமைந்திருந்தன. அவை, தான் எழுதிய ராமாயண வரிகளைவிட, கவிதை நயமும் கருத்து நயமும் மிக்கவையாக இருப்பதை உணர்ந்து பிரமித்தார் வால்மீகி. இந்தக் கல்வெட்டுகளில் ஸ்ரீராமனின் கதையை யார் உருவாக்கியிருப்பார்கள் என்று எண்ணியபடியே, இமயத்தின் சிகரத்தை அவர் அடைந்தபோது, அங்கே மற்றோர் ஆச்சரியம் காத்திருந்தது.
அங்கே, அனுமன் யோகநிஷ்டையில் இருந்தபடி ஸ்ரீராம நாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். அவரது யோக நிஷ்டையைக் கலைக்க விரும்பாத வால்மீகி மஹரிஷி, தானும் ராம நாமம் ஜெபிக்க ஆரம்பித்தார். அந்த நாம ஜெபத்தைக் கேட்ட அனுமன் நிஷ்டையிலிருந்து விழித்தெழுந்து, வால்மீகியை வணங்கி நின்றார். அவரிடம், ராம காவியம் கல்வெட்டுக்களாக அமைந்த வரலாற்றைப் பற்றிக் கேட்டார் மஹரிஷி.
அதற்கு அனுமன் மிகுந்த விநயத்துடன், ஸ்ரீராமனின் கல்யாண குணங்களையும் அவரது பெருமைகளையும் இங்கே காணும் கற்களில் நான்தான் எனது நகத்தால் செதுக்கி வைத்தேன். யுகம் யுகமாக ஸ்ரீராமனின் கதை பேசப்படவேண்டும் என்பதற்காக இந்தக் காரியத்தைச் செய்தேன். ஸ்ரீராமனை ரிஷ்யமுக பர்வதத்தில் நான் சந்தித்தது முதல், பட்டாபிஷேகம் வரை எனக்குத் தெரிந்த ராம கதையை உருவாக்கினேன். ஆனாலும், தங்களின் ராமாயணத்துக்கு இது ஈடாகாது! என்றார்.
அப்போது வால்மீகி மஹரிஷியின் கண்களில் நீர் கசிந்ததை அனுமன் கவனித்தார். அதற்கான காரணத்தை மஹரிஷியிடம் பணிவோடு கேட்டார். மேலும், தான் கல்லில் செதுக்கிய ராமாயண காவிய வரிகளில் தவறேதும் இருந்தால், எடுத்துச் சொல்லும்படியும் வேண்டினார். வால்மீகியின் கண்களில் மேலும் நீர் பெருகியது. எத்தகைய சிறப்பான காரியத்தைச் செய்து விட்டு, எவ்வளவு தன்னடக்கத்துடன் அனுமன் இருக்கிறார் என்பதை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.
ஹனுமான்! நீ ஸ்ரீராமனின் சிரேஷ்டமான பக்தன். உன்னால் கல்லில் பொறிக்கப்பட்ட ராமாயணத்தில் தவறு இருக்க முடியுமா? நீ எழுதிய காவிய வரிகளில் காணும் பக்திப் பரவசம் என்னை நெகிழ வைத்துவிட்டது. இது, என் ஆனந்தக் கண்ணீர்தான். நான் எழுதிய ராமாயணம் இதற்கு ஈடு இணையாகாது. உன்னுடைய ராமாயணத்தை உலகோர் படிக்கும்போது, என் ராமாயணம் காலப்போக்கில் மறைந்துவிடும் என்றார்.
அதைக் கேட்ட மாத்திரத்தில், அனுமனின் கண்களில் தாரை தாரையாக நீர் சுரந்தது. உணர்ச்சிவசப்பட்ட அனுமன், பாறைகளில் தான் செதுக்கியிருந்த ராமாயண காவிய வரிகளை எல்லாம் தனது வாலால் துப்புரவாக அழித்துவிட்டார். பின்னர் வால்மீகியை வணங்கி, தாங்கள் எழுதிய ஸ்ரீராம காவியமே மிகச் சிறப்பானது! காலத்தால் அழியாதது! நான் செதுக்கியது வெறுமே என் உணர்ச்சிகளின் பிரதிபலிப்புதான். தாங்கள் உருவாக்கியதுதான் ஸ்ரீராமனே பாராட்டிய காவியம். அதற்கு ஈடு இணை எதுவும் இருக்காது என்று அமைதியுடன் கூறினார்.
அனுமனின் பக்தியைப் பற்றி வால்மீகி ஏற்கெனவே தெரிந்துகொண்டிருந்தார். அவரது தியாகத்தை இப்போது புரிந்துகொண்டார். அனுமனை மனதார வாழ்த்தினார். ஹனுமான்! நீ எழுதிய ராமாயண எழுத்துக்களை அழித்து விட்டாய். ஆனால், அந்தக் கருத்துக்கள் என் மனதில் ஆழப் பதிந்துவிட்டன. எனது ராம காவியத்தில் நீ செதுக்கிய ராம கதையும் இடம் பெறும் என்றுகூறி, வாழ்த்திச் சென்றார்.
அதன்படி, வால்மீகி ராமாயணத்தின் ஒரு பகுதியாக அமைந்தது ஹனுமத் ராமாயணம். அனுமன் கண்ட ராமனை இந்தக் காவியவரிகளில் இன்றும் நாம் தரிசிக்கிறோம். அனுமன் வாயுபுத்திரன். சிவபெருமானின் அம்ஸாவதாரம். சூரியனைக் குருவாகக் கொண்டு நான்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும் கற்றவர். எளிமையே உருவானவர். அடக்கமானவர். அவரது திறமையும் வலிமையும் அவருக்கே தெரியாது. ராமாயண காவியத்தில் எங்கேயும் எப்போதும் கோபப்படாதவர், அனுமன்தான். இலங்கையை எரித்ததுகூட கோபத்தினால் அல்ல; ராவணனுக்கு புத்தி கற்பிக்கவேதான்.
சீதாபிராட்டியால் சிரஞ்சீவி என்று ஆசிர்வதிக்கப்பட்ட அனுமன், இன்றைக்கும் சிரஞ்சீவியாக நம்மிடையேதான் உலவிக் கொண்டிருக்கிறார். அனுமன் இருப்பது, 60 அடி உயர சிலையிலோ, அல்லது அற்புதமாகக் கட்டப்பட்ட கோயிலிலோ மட்டுமல்ல; ஸ்ரீராம நாமம் ஒலிக்கும் இடமெல்லாம் அனுமன் இருக்கிறார்.
யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்
தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்
பாஷ்பவாரி பரிபூரண லோசனம்
மாருதிம் நமத ராக்ஷஸாந்தகம்
என்று அனுமனைப் பற்றிய சுலோகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கெல்லாம் ஸ்ரீராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்கக் காட்சி தந்துகொண்டிருப்பவர் எவரோ, அவரே அனுமன் என்று தெரிந்துகொள் என்பது இதன் பொருள்.
கடைசி வரியில் உள்ள ராக்ஷஸாந்தகம் என்பது, அவர் உன் உள்ளத்தில் தேங்கி நிற்கும் ஆணவம், அஹங்காரம், கோபம், திவேஷம் போன்ற ராக்ஷஸ குணங்களை அழிப்பவர் என்பதைக் குறிக்கும். அனுமனை உபாசித்து அருள் பெற, ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராம என்று ராம நாமத்தின் பெருமையைச் சொன்னாலே போதும்; அனுமன் அந்த பக்தர்களுக்கும் சேவனாகி அருள்புரிவார். அஞ்சனை மைந்தனாம் அனுமனை வழிபடுவதால் நமது உள்ளத்தில் நேர்மை, தூய்மை, தியாகம், பக்தி, எளிமை, அடக்கம் போன்ற உயர்ந்த குணங்கள் உருவாகி, நம்மை உயர்த்துகின்றன என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
நினைத்த காரியம் கைகூட அனுமன் ஜெயந்தி விரதம்
மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி. கடவுளர்களுக்கும் தேவர்களுக்கும் பகல் வேளை தொடங்கும் முன்பாக வரும் பிரம்ம முகூர்த்த காலம் என்று கருதப்படும் புண்ணிய மாதம். இதுபோல, திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை. அறிவு, ஞானத்தின் அடையாளமாக திகழ்வது மூலநட்சத்திரம். சிறப்பான மாதமான மார்கழியில் அமாவாசை திதியும் மூல நட்சத்திரமும் இணைந்திருக்கும் நாளில் அஞ்சனையின் மகனாக அவதரித்தவனே ஆஞ்சநேயன். அந்த தினம் அனுமன் ஜெயந்தியாக நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். ஆஞ்சநேயனின் ஜெயந்தி, ஜெயந்திக்கெல்லாம் ஜெயந்தி அந்த ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும். நினைத்த காரியம் கைகூடும். துன்பம் விலகும். குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராம நாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சாத்தி, ஆராதிக்க வேண்டும்.
வெற்றிலை மாலை வழிபாடு
அசோகவனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டிருந்த போது சீதையை தேடிப்போன அனுமன் சிம்சுகா மரத்தடியில் வீற்றிருந்த சீதையை கண்டதும் ஸ்ரீ ராமனை பற்றி சொல்லி சீதையின் நம்பிக்கைக்கு பாத்திரமானார். பொதுவாக யாரேனும் பெரியவர்களை நமஸ்கரித்தால் அவர்களை அட்சதை தூவி ஆசீர்வதிப்பது வழக்கம். அனுமன் சேவித்த போது சீதைக்கு அட்சதையோ புஷ்பமோ கிடைக்கவில்லை. ஆனால் அருகில் தடவிய போது வெற்றிலை இலைகள் கிடைக்க அதனையே அனுமன் தலை மீது தூவ அனுமனும் அந்த வெற்றிலைகளை ஒரு நூலில் கோர்த்து சீதையிடம் கொடுத்து தனக்கு மாலையாக அணிவிக்குமாறு கேட்டு அதை கழுத்தில் அணிந்ததாகவும் அதன் காரணமே அனுமனுக்கு வெற்றிலை மாலை சாத்தப்படுவதாகவும் சொல்கிறார்கள்.
வெண்ணெய் சாத்துதல்
ராம ராவண யுத்தம் நடந்தபோது ராமரையும் லட்சுமணரையும் தன் தோளில் சுமந்து கொண்டு சென்றார் அனுமான். அப்போது ராவணன் சரமாரியாய் அம்பு தொடுக்க சக்திமிக்க அம்பால் அவர் தாக்கப்பட்டார். அந்த காயத்திற்கு மருந்தாக தன் உடம்பில் வெண்ணெய் பூசிக்கொண்டாராம். வெண்ணெய் சீக்கிரமாக உருகும் தன்மை உடையது. அந்த வெண்ணை உருகுவதற்கு முன்பாகவே நாம் நினைத்த காரியம் நடந்து விடும் என்ற நம்பிக்கை. அதனால் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சார்த்தும் பழக்கம் உள்ளது.
வடை மாலை
நமது உடல் தசையால் ஆனது. தசை வளர்ச்சிக்கு உளுந்து முக்கிய காரணமாகிறது. ஒல்லியாக இருப்பவர்கள் இட்லி, தோசை, உளுந்து வடை சாப்பிட்டால் தசைப்பிடிப்பு ஏற்படும். ஆனால், சதையாலான இந்த உடம்பு எதற்காவது பயன்படுமாப எனவே, பயனற்ற இந்த உடலை உனக்கே அர்ப்பணிக்கிறேன் ஆஞ்சநேயா என்ற தத்துவார்த்தத்தின் அடிப்படையிலேயே உளுந்துவடை மாலை அணிவிக்கிறோம். அனுமானுடைய தாய் அஞ்சனாதேவி தன் மகன் திடமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க உளுந்து வடை செய்து கொடுத்ததாக ஐதீகம்.
செந்தூரம் ஏன்?
ராம ராவண யுத்தம் முடிந்த பிறகு சீதையை பார்த்து செய்தியை கூற அனுமன் சென்ற போது சீதை நெற்றி வகிட்டில் செந்தூரம் அணிந்து இருந்ததை பார்த்து இது குறித்து சீதையை வினவ ராமன் ராவணனுடன் யுத்தம் செய்ய செல்லும் போது அவருக்கு வெற்றி கிடைக்க வேண்டி செந்தூரம் அணிந்ததாக கூறினார். நெற்றியில் சிறியதளவு இட்டதற்கே இத்தனை பெரிய வெற்றி ராமனுக்கு என்ற போது உடல் முழுவதும், பூசினால் ராமன் எவ்வளவு வெற்றி வாகை கூட முடியும் என எண்ணி உடல் முழுதும் ஆஞ்சநேயர் செந்தூர் அணிந்து கொண்டதாகவும், இதுவே அனுமனுக்கு செந்தூரம் சாத்தும் வழக்கம் வர காரணம் என்பதாகவும் வரலாறு.
ஆறு பலங்களை அள்ளித்தரும் ஆஞ்சநேயர்
நேயருக்கு மிகவும் பிடித்தது ராம நாமம். அனுமன் ஜெயந்தியன்று `ராம ராம ராம' நாமம் சொல்வது விசேஷம்.
`ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே,
வாயுபுத்ராய தீமஹி, தந்தோ
ஹனுமன் ப்ரசோதயாத்'
என்பது அனுமனுக்கான காயத்ரி மந்திரமாகும். இதையும் சொல்லி வழிபடலாம். அனுமன் ஜெயந்தியன்று ஆஞ்சநேயருக்கு துளசி மாலை அணிவித்து, துளசி அர்ச்சனை செய்யலாம். வெற்றிலை அல்லது வடை மாலை சாத்தலாம். வெண்ணெய் சாத்தி வழிபட்டு பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம். ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், பிராண பலம், சம்பத் பலம் எனப்படும் செல்வச் செழிப்பு என்ற 6 பலங்களையும் அருள்பவர் அனுமன். அவரை பக்தியுடன் வழிபட்டால் மனதில் இருக்கும் தீய எண்ணங்கள் அழியும். சிறந்த அறிவுத்திறன், புத்திக்கூர்மை, வீரம், விவேகம் உண்டாகும்.
சனி பகவான் பாதிப்பு நீங்க
இலங்கைக்கு பாலம் அமைக்கும் திருப்பணியில் அனுமன் தீவிரமாக இருந்தபோது வந்தார் சனி பகவான் `ஆஞ்சநேயா! உன்னை இரண்டரை மணி நேரம் பிடிக்க வேண்டும். உன் உடலில் ஏதாவது ஒரு பகுதியை சொல். அங்கு இரண்டரை மணி நேரம் இருந்துவிட்டு போய்விடுகிறேன்'' என்றார். ``கடமையை செய்து கொண்டிருப்பவர்களை தொந்தரவு செய்தல் தவறு. அதனால், தலையில் உட்கார்ந்து கொள்'' என்றார். சனி பகவானும் ஏறி அமர்ந்தார். கற்களையும் மலைகளையும் மாறி மாறி தலையில் ஏற்றினார் அனுமன். பாரம் தாங்கமல் சனிபகவான் அலறினார். ``சொன்ன சொல் தவறக்கூடாது. இரண்டரை மணி நேரம் கழித்து தான் இறங்க வேண்டும்'' என்றார் அனுமன். அதன் பிறகே இறக்கிவிட்டார். `ராம பக்தர்களையும் ஆஞ்சநேய பக்தர்களையும் இனி தொடுவதில்லை' என்று கூறிவிட்டு அகன்றார் சனீஸ்வரன். அனுமனுக்கு துளசி சாத்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக